Saturday, 30 December 2017

2018 புத்தாண்டுச் செய்தி!




அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இவை போன்ற இன்சொற்கள் , பாராட்டுக்கள், புகழுரைகள், உணர் ச்சிப் பெருக்கின் உதட்டளவு வாழ்த்துக்கள் .... இவை மட்டுமே இந்த ஆண்டு முழுவதையும் இனிமை நிறைந்ததாகவும், சந்தோஷம் பொங்கச்செய்வதாகவும், வளம் பெருகவும், சகமனிதர்களுக்கு இடையேயான துவேஷங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் களைந்துவிடுவதாகவும்  செய்துவிடுமா என்ன?

நாம் சற்று தொலைநோக்கோடு சிந்தித்துச் செயல்படுவது மட்டுமே இந்த ஆண்டு மட்டுமல்லாமல், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் இனிமையையும், சந்தோஷத்தையும், வளங்களையும் பெற்றுத்தருவதாக அமையும்!

குறிப்பாக, அடுத்த ஆண்டு, 2019 என்பது, அதைத் தொடர்ந்து வரப்போகும் ஐந்து ஆண்டுகளின் நம்முடைய வாழ்-நிலையை யும், சந்தோஷத்தையும் தீர்மானிக்கும்  'சோதனை-ஆண்டு'
ஆகும்!  ஆகவே, அதற்குள் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய அரசியல்  விழிப்புணர்வின் முக்கியத்துவம் மகத்தானதாகும்!

இதுவரை தத்துவ ஆன்மீக விஷயங்களைப் பேசிக்கொண்டு இருந்தவன் தற்போது திடீரென அரசியல் பேசுவதாக நம் நண்பர்கள் சிலர் அதிர்ச்சியடையக்கூடும் ! ஆனால், விஷயம் என்னவெனில், கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது! இப்போது தத்துவம் பேசிக்கொண்டிருப்பது தவறல்ல; மாறாக,  கப்பல் மூழ்கிக் கொண்டிருப்பதற்கான காரணிகளை அறிந்து அவற்றைக் களைந்து கப்பலைக் காப்பாற்றுவதற்குரிய  தத்துவத்தைப் பேசுவதே இப்போதைய அவசர அவசியமாகும்!

உண்மையில், நாம் 'அரசியல் ' பேசிக்கொண்டிருக்கவில்லை; மாறாக, நம்முடைய வாழ்வின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிப்பேசிக் கொண்டிருக்கிறோம்! நம்முடைய வாழ்வுரிமைகளையும், வாழ்வாதரங்களையும் காப்பாற்றிக்கொள்வது பற்றிப்பேசிக்கொண்டிருக்கிறோம்! நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்; நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ளவேண்டுமானால் நாம் பயணித்துக் கொண்டிருக்கும் கப்பலைக்  காப்பாற்றிட வேண்டும்; ஆம், "ஜன நாயகம்" என்பதுதான் அந்தக்கப்பல்! நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் நம்மைக் காப்பாற்றப்போவதில்லை; அவர்களுக்குத் தம் சொந்த நலன்களைப் பெருக்கிக்கொள்ளவும், தம் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ளவுமே நேரம் போதவில்லை!

உலகில் மொத்தம் 195 நாடுகள் உள்ளன, அதில், மொத்தம் 167 நாடுகளில் ஜனநாயக ஆட்சிமுறை நடைமுறையில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது! ஆனால், வெறும் 20 நாடுகளில் மட்டுமே முழு ஜனநாயகம் நடைமுறையில் உள்ளதாகவும், கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைபாடுடைய ஜனநாயகம் (flawed democracy) நிலவுவதாகவும் சொல்லப்படுகிறது.  குறைபாடுடைய ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறுவதாகச் சொல்லப்படுகிறது!

குறைபாடுடைய ஜனநாயகம் என்பது வளர்ச்சி குன்றிய அரசியல் கலாச்சாரம் கொண்டதாகவும், குறைந்த அளவிலான அரசியல் பங்கேற்பு  கொண்டதாகவும், ஆட்சிமுறையில் கோளாறுகள் நிறைந்ததாகவும் இருப்பதைக் குறிக்கிறது! பெரும்பாலான ஜனநாயக நாடுகளின் பிரச்சினை என்பது அவற்றின் பிரதிநிதித்துவக் குறைபாடுகளிலேயே அடங்கியுள்ளது. ஆனால், பெரும்பாலான அரசியல் ஆய்வறி ஞர்களும், தத்துவச் சிந்தனையாளர்களும் 'பிரதிநிதித்துவ ஜனநாயக' முறையை விட்டால்,  ஜனநாயகத்திற்கு  வேறு வழியே இல்லை  என்கிறார்கள்! 

மக்களால், மக்களுக்காக, மக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் பிரதிநிதிகள் உண்மையில் மக்களை, மக்களின் நலன்களை, ஆர்வங்களை, அடிப்படை வாழ்வாதாரங்களை பிரதிபலிப்பதில்லை, பிரதிநிதித்துவம் செய்வதில்லை எனும் போது, 'பிரதிநிதித்துவ ஜனநாயக' முறையில் இருந்துகொண்டு அரசியலில் எவ்வாறு, எத்தகைய மாற்றத்தை மக்களால் செய்விக்க  முடியும் என்பது தான் இன்றைய முக்கியத்துவம் வாய்ந்த பிரதான அரசியல் கேள்வியாகும்! தேர்தல் மூலம் ஒரு 'நல்ல' அரசியல் தலைவரை தேர்ந்தெடுப்பது சாத்தியமில்லை! தேர்தல் என்பதே ஒரு "சூதாட்டம்" போலுள்ளது! அதில் எப்போதும் மக்களே தோற்பவர்களாக இருக்கிறார்கள்!
வேறு என்ன செய்வது? வாக்களிக்காமல் இருக்கலாமா? ஒரு வகையில் வாக்களிப்பதும், வாக்களிக்காமல் இருப்பதும் ஒன்றாக -பயனற்றதாக- த்தான் இருக்கிறது! ஆனால், வாக்களிக்காமலிருப்பதன் வழியாக நாம் நம்முடைய ஒரே அரசியல் செயல்பாட்டிலிருந்தும் ஒதுங்கிவிடுவதாக உள்ளது!

அப்படியானால்,  புரட்சி செய்யலாமா?  செய்யலாம், ஆனால், அது முற்றிலும் புதுவகையான புரட்சியாக இருக்கவேண்டும்!
 அதாவது, புறத்தே சாலையில் நம்முடைய எழுச்சியையும், கிளர்ச்சியையும், கோபத்தையும் காட்டுவதற்குப்பதிலாக, நம்முடைய அகத்தே செய்யப்படும் புரட்சியாக இருக்க  வேண்டும்! அப்புரட்சி  'அரசியல் ' பற்றிய தெளிவான, தீர்க்கமான பார்வையாக, அறிவாக நம்முள் உருவாகி நம்மைச்  செலுத்துவதாக இருக்கவேண்டும்! இத்தகைய புதுமையான ஆயுதத்தைக்கொண்டு நாம் நம்முடைய அரசியல் பிரதிநிதி களைச் செலுத்தவேண்டும்! ஆம், நாம் அனைவரும் தவறாமல் வாக்களிக்கவேண்டும்! ஆனால், வாக்களித்து விட்டு வழக்கம் போல வெறுங்கையோடு வீடு திரும்பி விதியே என்று வாளாதிருக்கலாகாது!

மாறாக,  நம்முடைய பிரதிநிதிகளை நமக்காகப் பணியாற்றும் படிச் செய்யவேண்டும்! அதை எவ்வாறு செய்வது, எவ்வெவ்வாறெல்லாம் செய்யலாம் என்பதை ஆராய்ந்து கண்டு பிடிப்பதில் தான் நம் ஒவ்வொருவருடைய அரசியல் பங்களிப்பும், உண்மையான அரசியல் ஞானமும் (தந்திரமும்) அடங்கியுள்ளது!

இதுதான் உண்மையான அரசியல், மக்களின் அரசியல்! ஆனால், இதுவரை  'அரசியல் ' என  அரசியல்வாதிகளால் பொதுமக்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டதும், பொதுவாக மக்கள் பேசிவந்ததும் அரசியல்வாதிகளின், அரசியல் கட்சிகளின் பயனற்ற அரசியலாகும்! "இந்த தேர்தலில் எந்தக்கட்சி வெற்றி பெறும்; எந்தக்கட்சி தோல்வியடையும்?" என்பது போன்ற பேச்சுகளும், கூட்டணி பேரம் பற்றியும், உள்கட்சி விவகாரங்கள் பற்றியுமான பேச்சுகளும் மக்களுக்குப் பயன்படாதவை, ஆகவே தேவை யில்லாதவையாகும்!

இவ்வாறு நம்முடைய பிரதிநிதிகளை நமக்காகப் பணியாற்றும் படிச் செய்வதற்கான அடிப்படைகள், நியாயங்கள், முகாந்தரங்கள் உள்ளனவா? உள்ளன! உள்ளன! உள்ளன! நிச்சயமாக உள்ளன!  முதலிடத்தில், ஜனநாயக ஆட்சிமுறையில் 'பிரதிநிதிகள்' என்போர் மக்களின், மக்களுக்கான பிரதிநிதிகள் என்பதாயில்லாமல் வேறு யாருக்கான பிரதிநிதிகள் அவர்கள்?வேறு யாருக்கு அவர்கள் கடமைப்பட்டவர்கள்? நாம் அளிக்கும் நம் ஒவ்வொருவருடைய 'வாக்கு' எனும் அதிகாரத்தின் ஒட்டுமொத்தம் தானே அரசியல்வாதிகளை அமைச்சர்களாக, முதலமைச்சராக ஆட்சியதிகாரத்தில் அமர்த்துகிறது? ஆகவே, அவர்களை நமக்காகப் பணியாற்றும் படிச் செய்வதற்கான அதிகாரமும் நம்முடைய உரிமைகளில் ஒன்றாக அடங்கியுள்ளது! ஆக, வாக்களிப்பதுடன் நம்முடைய ஜனநாயகக் கடமை முடிந்து போவதில்லை; மாறாக, அதனுடன் தான் தொடங்குகிறது!
  ✦
மா.கணேசன்/31.12.2017
-------------------------------------------------------------------------------------------------------------------------

Wednesday, 27 December 2017

இங்கேயும் எங்கேயும் இனி அரசியல் பேசுங்கள்!





"இங்கே அரசியல் பேசாதீர்கள்!" என்று பல உணவு விடுதிகளிலும், முடிதிருத்
தகங்களிலும் எழுதிப்போடப்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால்,
இந்த அறிவிப்பின் அர்த்தம் என்ன என்று நாம் எப்போதாவது யோசித்துப்
பார்த்ததுண்டா? அதாவது அரசியல் பேசினால், வீண் விவாதங்களும், சண்டை
களும், கைகலப்புகளும், சில வேளைகளில், வெட்டு, குத்தும் நிகழலாம் என்ப
தாலேயே அவ்வாறு எழுதிப்போடப்பட்டுள்ளது என நாம் மிகச் சுலபமாகப்
புரிந்துகொள்கிறோம்! இதன் காரணமாகவே, நம்மில் பெரும்பாலானோர் பொது
இடங்களில் எவ்வகை அரசியலையும் பேசுவதில்லை! ஆனால், அரசியல்
பேசினாலேயே ஏன் வீண்வாதங்களும், சண்டை சச்சரவுகளும், அடி தடிகளும்
ஏற்படவேண்டும்?

ஆனால், உண்மையில், அரசியல் பேசுவதால், அதாவது, உண்மையான அர்த்த
முள்ள அரசியலைப் பேசுவதால் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பில்லை!
மாறாக, "கட்சி அரசியல்" பேசுவதால் தான் ஏற்படுகின்றன! மேலும், அரசியல்
பேசவேண்டுமென்றாலேயே மக்கள் பரஸ்பரம் ஒன்றையொன்று எதிர்க்கும்
வகையிலான அணிகளாகவும், கட்சிகளாகவும் தான் பிரிந்து நிற்கவேண்டுமா
என்ன?

அப்படியானால், இது எத்தகைய அரசியல்? பெரும்பாலான மக்கள் ஏன் அரசி
யல் பேசுவதில்லை, அரசியல் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டுவ
தில்லை, தீவிரமாக ஈடுபடுவதில்லை? பெரும்பாலான மக்கள் அரசியலில்
ஆர்வம் கொள்ளாதிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், அரசியல் என்பது
மக்களின் வாழ்க்கையிலிருந்து வெகு தொலைவு விலகியிருக்கிறது; அதாவது,
மக்களின் உண்மையான வாழ்க்கையுடன் (மக்களின் நலன்களுடன்) அரசியல்
தொடர்பற்றதாக உள்ளது என்பதுதானாகும்!

இதுவரை 'அரசியல்' என்று மக்களுக்குக் கற்பிக்கப்பட்டிருப்பது, மக்களுக்கான
அரசியல் அல்ல; மாறாக, அரசியல்வாதிகளின் அரசியலே ஆகும்! அதாவது,
அரசியல் என்றாலே அது கட்சி கட்டுவது, தேர்தலில் நிற்பது, ஆட்சியதிகாரத்
தைப் பிடிப்பது; ஆட்சியைப் பிடித்தபிறகு அதைத் தக்கவைத்துக் கொள்வதற்
கான விவகாரங்களில் ஈடுபடுவது; எதிர்க்கட்சிகளைச் சமாளிப்பது; அல்லது
இருக்கவே இருக்கிறது, உள்கட்சி விவகாரங்கள் அவற்றைச் சமாளிப்பது ....
போன்ற இவை யாவும் அரசியல்வாதிகளின் அதிகார மோகத்தின் அரசியல்
ஆகும்!

ஆண்டு முழுவதும் ஆளும் கட்சியின் உள்கட்சிப் பிரச்சினைகளை, அல்லது
எதிர்க்கட்சியின் விமர்சனங்களை பரபரப்புச் செய்திகளாக்கி ஊடகங்கள்
தம்முடைய வியாபாரத்தை நடத்திச்செல்கின்றன! அவ்விவகாரங்களில் மக்கள்
ஈடுபாடு கொள்வதற்கு எதுவுமில்லை! அரசியல் கட்சிகளின் விசுவாசத்
தொண்டர்களுக்கு வேண்டுமானால் அவை முக்கியத்துவம் வாய்ந்த அரசியல்
நிகழ்வுகளாகத் தெரியலாம்! ஏனெனில், கட்சித்தொண்டர்கள் தங்களுக்கு
எப்போதாவது ஏதேனும் ஆதாயம் கிடைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்
முதலீடுசெய்துவிட்டு, தம் கடன் கட்சிப்பணியாற்றிக்கிடப்பதே என்று

தங்களதுசுய-முக்கியத்துவத்தைத் தொலைத்துவிட்டவர்களாவர்!

ஜனநாயகத்தின் சாபக்கேடு என்னவென்றால், அரசியல் கட்சிகள், அதாவது,
கட்சிகளின் பிரதானத் தலைவர்கள் அரசியலை, குறிப்பாக, தேர்தலில் வெற்றி
பெறுவதைத் தங்களது சொந்த விவகாரமாகக் கொண்டுவிடுவதேயாகும்!
இதன்விளைவாக, ஒரு கட்சியானது, தனது ஒட்டுமொத்த சக்தியையும் இன்
னொருகட்சி ஆட்சிபுரிவதற்கு தகுதியற்றது என நிரூபிப்பதிலேயே அர்ப்பணம்
செய்கிறது! பரஸ்பரம் ஒவ்வொரு கட்சியும் இதையே செய்வதன் மூலம்
எந்தக் கட்சியும் ஆட்சிபுரிவதற்கு தகுதியற்றது என்பதை மெய்ப்பித்துவிடுகின்
றன! ஆட்சியதிகாரத்தை மட்டுமே இலக்காகக்கொண்ட இந்த அர்த்தமற்ற
போட்டா போட்டியில், அரசியல் கட்சிகள் மக்களை, மக்களின் நலன்களை
மறந்து விடுகின்றன! மக்களும் தங்களது மையமான பிரச்சினைகளை மறந்து
கட்சி அரசியல் விவகாரங்களில் ஆழ்ந்துவிடுகின்றனர்! பெரும்பாலான மக்கள்

கட்சிகளுக்கிடையேயான போட்டியை, இரு அணிகளுக்கிடையேயான கால்
பந்தாட்டப் போட்டியை ரசிப்பதுபோல வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்
றனர்! இவ்வழியே மக்களும் அரசியல்வாதிகளின் கட்சி அரசியல் எனும் கால்
பந்தாட்டத்தில் சேர்ந்துகொண்டு தங்களுக்கு எதிராக "கோல்" போட்டு ஒவ்
வொரு முறையும் தோற்றுப் போகின்றனர்!

மக்கள் தம் விருப்பத்தேர்வின்படி இந்தக்கட்சி அல்லது அந்தக்கட்சியுடன்
இணைந்துகொள்வதன் மூலம் பிளவுண்டு போவதை அரசானது தனக்குச்
சாதகமாகக் கொண்டுவிடுகிறது

ஆனால், உண்மையான, அர்த்தமுள்ள அரசியல் என்பது, குறிப்பாக ஜனநாயக
அமைப்பைப்பொறுத்தவரை, மக்கள் தங்கள் ஆர்வங்கள், அடிப்படை நலன்கள்,
ஆகியவை தங்களால் தேர்வுசெய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகளால் முறை
யாக நிறைவேற்றப்படுகின்றனவா, இல்லையா என்பதை கண்ணும் கருத்து
மாகக் கவனிப்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்கமுடியாது! பிரதிநிதித்
துவ ஜனநாயக அமைப்புமுறையில், அரசியல் கட்சிகள் தவிர்க்கமுடியாதவை
எனக் கொண்டாலும், கட்சிகளுக்கிடையேயான பூசல்கள், பிரச்சினைகள்;
மற்றும், ஒரு கட்சியின் உள்-கட்சி விவகாரங்கள் போன்ற எதுவும் மக்களின்
கவனிப்பிற்கும், அக்கறைக்கும் உரியவை அல்ல!

நாடகக் கலைஞர்கள் மேடையேறிய பிறகு, தங்களுக்கிடையே, "நான்தான்
தலைமை வேடத்தில் நடிப்பேன்!" " இல்லை, நான்தான் அந்த வேடத்தில்
நடிப்பேன்!" என்று தங்களுக்குள் அணி பிரிந்து சண்டையிட்டுக் கொண்டு
நேரத்தைக் கடத்திக்கொண்டிருப்பதையே நாடகம் என நிகழ்த்துவார்களேயா
னால், பார்வையாளர்கள் எவ்வாறு அதைச் சகித்துக் கொள்வார்கள்? ஆனால்,
நிஜ வாழ்வில் இத்தகைய அபத்தம் தான் அரசியல் மேடையில், 'உள்கட்சிப்
பூசல்', 'கூட்டணி பேரம்' என்றெல்லாம் நிகழ்த்தப்பட்டுவருகிறது, அதையும்
மக்களாகிய நாம் அரசியல் என எடுத்துக்கொண்டு சகித்துக்கொண்டுதான்
செல்கிறோம்! இத்தகைய அவலத்தில் இனியும் நாம் பங்குகொள்ளாமல்
இருப்போமாக! ஏனெனில், கிஞ்சித்தும் இவை எதுவும் நேர்முகமாகவோ,
அல்லது மறைமுகமாகவோ மக்களாகிய நம்முடைய அடிப்படை நலன்களைப்
பற்றியவையோ, தொடர்புடையவையோ அல்ல! இதன் அர்த்தம், அரசியல்
வாதிகள் எப்போதும் மக்கள் நலன்களைப்பற்றியே சிந்தித்துக்கொண்டும்,
பேசிக்கொண்டும், செயல்பட்டுக்கொண்டும்தான் இருக்கவேண்டும் என்பதல்ல!
மாறாக, முதலிடத்தில் இருக்க வேண்டிய மையமான இவ்வம்சம் ( மக்கள்
நலன்கள்) அரசியல்வாதிகளின் அரசியல் நிகழ்ச்சிநிரலில் கடைசி இடத்தில்கூட
இல்லை என்பதையே நாம் இவ்வாறு இங்கு சுட்டிக்காட்டுகிறோம்!

முதலிடத்தில், 'அரசியல்' என்பது எதற்காக? 'அரசியல்வாதிகள்' எதற்காக?
தேர்தல்கள் எதற்காக? மக்கள் எதற்காக வாக்களிக்க வேண்டும்? 'அரசாங்கம்'
'அரசு' எதற்காக? இவையெல்லாம், மனிதவாழ்வில் எந்த இடத்தில் எவ்வகை
யில் பொருந்துகின்றன? மனித வாழ்வில் இவற்றின் பங்கு, பணி, பாத்திரம்
என்ன? இந்த ஒவ்வொன்றையும் நாம் மறு பரிசீலனை செய்தாக வேண்டும்!
இனி மக்களாகிய நாம் கூடுகின்ற எல்லாஇடங்களிலும், எப்போதும் நமக்கான
அரசியலைப் பேசியாக வேண்டும்! நமக்கான அரசியல் எது என்பதை முதலில்
நாம் ஒவ்வொருவரும் இனம்கண்டாக வேண்டும். இதற்காகவே நாம் அரசியல்
பேசியாக வேண்டும்! இதுவரை, அர்த்தமற்ற 'கட்சி அரசியலின்' வெறும்
பார்வையாளர்களாக நாம் இருந்தது போதும்; இனி அர்த்தமுள்ள மக்களின்
அரசியலில் ஆர்வத்துடன் பங்கு கொள்வோமாக!

மா.கணேசன்/  22-12-2017
----------------------------------------------------------------------------

Sunday, 10 December 2017

பொதுவாக மக்கள் ஏன் அரசியலில் ஈடுபாடு கொள்வதில்லை?




   பொதுமக்களுக்கு, 'அரசியல்' என்பது ஒரு அசுத்தமான சொல்லாகும்.
   எனினும், 'ஜனநாயகம்' என்பது ஒரு நேர்மறையான கருத்தியலாக
   உள்ளது. சமகாலத்திய பிரச்சினை என்னவாகத் தெரிகின்றதென்றால்,
   பெருமளவிலான பொதுமக்கள் அரசியல் இல்லாத ஜனநாயகத்தையே
   விரும்புகிறார்கள்.     - மேத்யூ ஃப்ளிண்டெர்ஸ் 
                                                (Matthew Flinders, director of the
                                                          Bernard Crick Centre)
                                                                      • • •

பொதுவாக மக்களும், இன்னும் இளைஞர்களும் ஏன் அரசியலை விரும்புவ
தில்லை; அரசியலில் ஈடுபடுவதில்லை? ஏனெனில், தமது தலைவிதியை,
வாழ்-நிலையைத் தீர்மானிக்கும் இடம் "அரசியல் களம்" தான் என்பதை அவர்
கள் இன்னும் அறியாதிருப்பது தான் காரணமாகும்! மேலும், அரசியல் என்பது
விசேடமான சிலருக்கு மட்டுமே உரிய துறை என்பதான ஒரு பிம்பத்தை
தொடக்கத்திலிருந்தே அரசியல்வாதிகள் உருவாக்கிவிட்டுள்ளனர். முக்கியமாக,
அரசு, அரசாங்கம் என்பது அதிகார மையமாகத் திகழ்வதால், மிகத் தந்திரமாக
மக்களை அரசியல் பக்கம் அண்டவிடாமல் பார்த்துக்கொண்டனர்! மேலும், நய
வஞ்சகமாக, "அரசியல் என்பது ஒரு சாக்கடை!" என்று சொல்லி அரசியலை
அருவருக்கத்தக்க ஒரு விஷயமென அச்சுறுத்தி மக்களை அருகே நெருங்கவி
டாமல் செய்த அரசியல்வாதிகள் அரசியலை தங்களுக்கான ஏகபோக சரணா
லயமாகக் கொண்டுவிட்டனர்!

"அரசியல்" என்றாலே தந்திரம், நயவஞ்சகம், சூழ்ச்சி, சதி, மோசடி, ஏமாற்று,
துரோகம், பொய்ம்மை, சூது . . .ஆகிய அர்த்தங்கள் தொனிக்கின்ற வகையில்
ஒருவகை ஒவ்வாமை தோன்றும்படி செய்துள்ளனர்!

மேலும், தேர்தல் எனும் ஒற்றைச் சடங்கைத் தவிர, அரசியல் நிகழ்வுகள்,
செயல்பாடுகள் ஆகிய எதிலும் மக்கள் பங்கெடுக்கும் வகையில் அரசியல்
அமைந்திருக்கவில்லை! சட்டமன்றம், நாடாளுமன்றம் என இரு அவைகளுக்
கும் தங்களுக்கான உறுப்பினர்களை, அதாவது, பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்
பதுடன் மக்களின் அரசியல் செயல்பாடும், பங்கெடுப்பும் முடிந்து விடுகிறது!
இவ்வுறுப்பினர்கள் பெயரளவிற்குத்தான் மக்களின் பிரதிநிதிகள்; மற்றபடி
எதார்த்தத்தில் அவர்கள் மக்களை ஏய்த்து மேய்த்து சர்வாதிகாரம் செய்யும்
எசமானர்களைப் போலவே நடந்து கொள்கின்றனர்!

அடுத்து, தேர்தலில் அதிக வாக்குகளைப்பெற்று ஆட்சியதிகாரத்திற்கு தேர்வான
ஒரு கட்சியானது ஆட்சியமைத்ததிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை
அக்கட்சியின் ஒரே செயல்பாடு என்பது உள்-கட்சி விவகாரங்களை, பூசல்களை

அலசிக்கொண்டிருப்பதும், பஞ்சாயத்து பண்ணுவதும் மட்டுமே யாகும்! ஆக,
உள்-கட்சிப்பூசல்களிலும், விவகாரங்களிலும் - பத்திரிகைகள் மற்றும் ஊடகங்
களைத்தவிர - மக்களுக்கும், இளைஞர்களுக்கும் என்ன பங்கு, பணி, பாத்திரம்
இருக்க முடியும்?

அடுத்து, ஆளுகின்ற கட்சியின் ஆட்சிக்காலம் முடிவுறும் கட்டத்தில், அடுத்த
தேர்தலுக்குத் தயாராவதற்குரிய பிரச்சாரம், பொதுக்கூட்டம், மாநாடு, கூட்ட
ணிப் பேரங்கள், போன்ற சடங்குகள் மட்டுமே பிரதான அரசியல் விஷயங்கள்
ஆகும்! இத்தகைய சடங்குகளில் கட்சி உறுப்பினர்கள், தொண்டர்கள் மட்டுமே
பங்குபெறுகிறார்கள்; ஏனெனில், கட்சித் தொண்டர்கள் தங்களுக்கு ஏதேனும்
ஆதாயம் கசியக்கூடும் என்ற நம்பிக்கையில், கட்சி எனும் படிமுறை அமைப்
பில் கீழ்ப்படியாயிருந்தாலும் கட்சியில் தங்களுக்கு ஒரு இடமும், உரிமையும்
உள்ளதாக, கட்சியில் உறுப்பினரல்லாத பொதுமக்களைவிட முன்னுரிமை
பெற்றவர்களாகத் தங்களை எண்ணிக்கொள்கிறார்கள்!

அதாவது, "அரசியல்", குறிப்பாக "ஜனநாயக அரசியல்" என்பது மக்களையும்,
மக்களின் நலன்களையும் மையமாக, (முதலீடாகக்) கொண்டு எழுப்பப்பட்ட
ஸ்தாபனம் ஆகும். ஆனால், அரசியல்வாதிகளோ முதலுக்கே மோசம் விளை
யும்படியாக அனைத்து அரசு வருமானத்தையும் தாங்களே சுருட்டிக்கொண்டு
போய்விடுகின்றனர்! அதாவது, மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப்பணத்தி
லிருந்துகூட மக்களுக்கு கட்டடங்கள், சாலைகள், பாலங்கள், மின்சார
இணைப்புகள் போன்ற அடிப்படைக்கட்டமைப்பு வசதிகளைக்கூட நிறைவேற்று
வதில்லை!

மிக முக்கியமாக, பொதுமக்களும், இளைஞர்களும், சமூக நோக்கும், அக்கறை
யும் கொண்ட அறிவு-ஜீவிகளும் அரசியலில் ஈடுபடவேமுடியாத அளவிற்கான
இரும்புக்கோட்டையாக அரசியல் களமானது, ஏற்கனவே கட்சி-அரசியலில்
தங்களை ஸ்தாபித்துக்கொண்ட தனிநபர்களாலும், கும்பல்களாலும்; பணபலம்,
ஆள்பலம், மற்றும் செல்வாக்கு கொண்டவர்களாலும்; குறிப்பாக, அதிகார
மோகம்கொண்ட சில விபரீத புத்திக்காரர்களாலும் மேலாதிக்கம் செய்யப்பட்டு
வருகிறது! இத்தகைய மேலாதிக்கம், மேலாண்மை, ஜனநாயக விரோதமானது
என்பதில் சந்தேகமில்லை!

நம்முடைய பிரதிநிதித்துவ ஜனநாயக அமைப்பில், மக்களாகிய நாம், நமக்கான
பிரதிநிதிகளை தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுத்து ஆட்சியதிகாரத்தை அவர்கள்
கைகளில் கொடுத்துவிட்டாலே போதும், மற்றவைகளை அவர்கள் பார்த்துக்
கொள்வார்கள்! அதாவது, அரசியல் செய்வது அரசியல்வாதிகளின் வேலை;
அதைப்பற்றி மக்கள் கண்டுகொள்ள வேண்டாம்; மக்களுக்கு அரசியல் என்பது
வேண்டாத வேலை என்பதாக நாம் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம், அதாவது,
ஓரம் கட்டப்பட்டுள்ளோம்!

உண்மையில், அரசியல் என்பது அல்ஜீப்ரா, அல்லது, உயர்-கணிதம் போலக்
கடினமானதல்ல! உண்மையான, மக்களுக்கான, அர்த்தமுள்ள அரசியல்
என்பது எளிய மக்களைப்போலவே எளிமையானது! அரசியலில் ஈடுபட
யாதொரு ராஜ-தந்திரமும், விசேட அரசியல் ஞானமும், தருக்க சாஸ்திரமும்,
எதுவும் வேண்டியதில்லை! சாதாரண மக்களுக்கு அரசியலில் ஆர்வம்
இல்லை என்பதாக, பலமுறை பலராலும், சொல்லப்பட்டு வந்துள்ளது;
ஆனால், போலியான அரசியலில்தான் மக்களுக்கு ஆர்வம் இல்லை என்பது
தான் உண்மையாகும்!

மேலும், தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் அரசியலில், கோணல் புத்திக்
காரர்களும், அதிகாரமோகம் கொண்ட சோம்பேறிகளும், ஒரு மனிதஜீவியாக
வாழ்வது என்றால் என்னவென்பதை சிறிதும் அறியாத மனிதத்தன்மையற்ற
சிலர் மட்டுமே தீவிரமாக அரசியலில் ஈடுபடவிரும்புவர்!

பொதுமக்கள் அரசியலில் பங்குபெறுவது குறித்து பல ஆட்சேபங்கள் தெரிவிக்
கப்படுகின்றன; ஆனால், அந்த ஆட்சேபங்கள் அனைத்தும் அடிப்படையற்ற
வையும், அபத்தமானவையுமாகும்! சாதாரண மக்கள் பொதுவாக புத்திசாலித்
தனத்தில் குறைந்தவர்கள், திறம் குறைந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது;
அதனால், அவர்களால் அரசியலில் திறம்படச் செயல்படமுடியாது என்று சிலர்
ஆட்சேபம் தெரிவிக்கிறார்கள். ஆனால், இந்த ஆட்சேபம் அடிப்படையற்றது.
ஏனெனில், அரசியலாகட்டும், பொருளாதாரமாகட்டும், வேறு எவ்வொரு அம்ச
மாகட்டும், யாவும் எதற்காக இருக்கின்றன? யாவும் வாழ்க்கைக்குச் சேவை
செய்வதற்காகத்தானே? மனிதர்கள் தம் வாழ்க்கையை முழுமையாக வாழ்வ
தற்கு உதவி புரிவதற்கான கருவிகள் தானே அவை? இவ்வுலகின் அதிமேதா
விகள், அறிவுஜீவிகள், தத்துவவாதிகள், சிந்தனையாளர்கள் எனப்படுபவர்களில்
எத்தனை பேர், அடிப்படை உயிர்-வாழ்க்கையைக் கடந்த உயர்-வாழ்க்கையின்
அசலான அர்த்தத்தையும், குறிக்கோளையும், இலக்கையும் புரிந்துகொண்டவர்
களாக இருக்கின்றனர்?

அதி புத்திசாலிகள் என்று தங்களைக் கருதிக்கொள்பவர்களும், பெரும் பணக்
காரர்களும், 'சாதாரண' மனிதர்கள் வாழும் அதே வாழ்க்கையை, மிகவும்
பிறழ்ச்சியான வகையில் அலங்காரமாகவும், ஆடம்பரமாகவும் வாழ்கிறார்கள்,
அவ்வளவு தானே? அதிகப் பணத்தையும், பொருட்களையும் கொண்டு எவரும்
எவரைவிடவும் அதிகமாகவோ, மேலான வகையிலோ வாழ்ந்துவிடமுடியாது!
அதாவது, கோடி கோடியாக பணம் சம்பாதிப்பதும், தேவைக்கு மேலாக பெரும்
செல்வம் சேர்ப்பதும் வாழ்க்கையின் குறிக்கோளாகவோ, இலக்காகவோ
இருக்கமுடியாது!

மக்கள், சாதாரண மக்கள் கௌரவமான வகையில் உயிர்-வாழ்வதற்கு எல்லா
உரிமையும் உள்ளது! யாவற்றுக்கும் மேல் அவர்களிடம் "உழைப்பு" உள்ளது!
ஆம், 'சாதாரண' மக்கள் உண்மையில் சாதாரண மக்கள் அல்ல; அவர்கள்
உழைப்பாளிகள், அவர்கள் பிச்சைக்காரர்களோ, அல்லது அடுத்தவர்களின்
உழைப்பில் வாழும் சோம்பேறிகளோ அல்ல! உண்மையான அறிவும், புத்தி
சாலித்தனமும் பணத்தையும், செல்வத்தையும் சம்பாதிப்பதை உயரிய மதிப்
பீடாக ஒரு போதும் கொள்ளாது! மாறாக, "எல்லோரும் இன்புற்று வாழ
வேண்டும்!" என விரும்புவதுதான் உண்மையான புத்திசாலித்தனமும்,மேலான
அறிவும் ஆகும்!

ஆகவே, அன்றாடம் தங்கள் உழைப்பில் ஆழ்ந்து சமூகத்தின் அனைத்துப்
பொருட்களையும் வளங்களையும் உருவாக்கித் தந்திடும் உழைக்கும் மக்களை
புத்திசாலித்தனத்தில் குறைந்தவர்கள், திறம் குறைந்தவர்கள் என்று சொல்வது
அபத்தமானதாகும். மேலும், அவர்கள் நேரடியாக அரசியலில் பங்குபெற்றுத்
தான் அவர்களுக்குரிய நியாயமான அடிப்படைக் கட்டமைப்புகளை, வசதிகளை
அடைந்தாகவேண்டும் என்பது தேவையற்றது! ஏனெனில் மக்களின் பெயரால்
அமைக்கப்பட்ட ஜனநாயக அரசியல் அமைப்பில், 'சாதாரண' மக்களால் தேர்ந்
தெடுக்கப்படும் அரசியல் பிரதிநிதிகளுக்கு மக்களின் தேவைகளையும், நலன்
களையும் குறிப்பால் அறிந்து தங்களது அரசியல் பணியை முறையாக நிறை
வேற்றுவதை விட வேறு வேலை என்ன இருக்கமுடியும்?

இன்னொரு பொதுவான ஆட்சேபம் என்னவென்றால், பெரும்பாலான மக்கள்
அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை! இன்னும் அவர்கள் வாக்களிப்பதுபற்றிக்
கூட பொருட்படுத்துவதில்லை எனப்படுகிறது! உண்மைதான், ஏனெனில், அம்
மக்களின் நலன்களையும், ஆர்வங்களையும் எவரும் கண்டு கொள்வதில்லை;
அவை பிரதிநிதித்துவம் செய்யப்படுவதில்லை எனும் பட்சத்தில், வாக்குச்
சாவடிக்குச் செல்வது என்பது கூட நேர-வீணடிப்பு என்பதாக அவர்கள் கருது
கின்றனர்! அதேநேரத்தில், ஸ்விட்சர்லாந்து போன்ற பல ஜனநாயக நாடுகளில்
பொதுமக்களின் அரசியல் ஆர்வமும், ஈடுபாடும் அதிக அளவில் உள்ளது!

ஆனால், உண்மையான பிரச்சினை பொதுமக்கள் அரசியலில் ஆர்வம் காட்டு
வதில்லை என்பது அல்ல! மாறாக, மக்களின் நலன்களை, ஆர்வங்களை,
மக்கள் பிரதிநிதிகள் கவனியாமல் இருப்பதுதான்! அதற்குக்காரணம், அரசியல்
பிரதிநிதிகளின் சொந்த நலன்களும், அரசியல்வாதிகளைப் பின்னால் இருந்து
இயக்குகின்ற பிற ஆதிக்கசக்திகளின் நலன்களும், ஆர்வங்களும் முதன்மை
பெறுவதே யாகும்!

இன்று பெரும்பாலான வாக்காளர்கள், தேர்தலில் போட்டியிடும் அரசியல்
கட்சிகளில் இந்தக்கட்சியா, அல்லது அந்தக்கட்சியா என ஒன்றைத் தேர்ந்
தெடுப்பது தான் ஜனநாயகம் என்பதாக கருதிக்கொண்டிருக்கிறார்கள்! ஆனால்,
இப்பிரமை கடந்த பல நூற்றாண்டுகளாக முடியாட்சி, மற்றும் பிரபுத்துவ
ஆட்சிமுறைகளிலிருந்து மாறி வருவதற்கு வழியமைத்துக்கொடுத்தது. ஆனால்,
இன்று அது புதிய ஆதிக்க எந்திரத்தையும், ஒரு புதிய மேட்டுக்குடியையும்
உருவாக்கியுள்ளது; அது எவ்வகையைச் சேர்ந்ததோ, ஆனால், அது ஜனநாயக
பூர்வமானதல்ல! அரசியல்வாதிகள் பெயரளவிற்கு மட்டுமே மக்களின் பிரதி
நிதிகள்; உண்மையில் அவர்கள் ரகசிய ஆதிக்க அமைப்புக்களின் சார்பாக
மக்களிடம் பேரம் பேசும் முகவர்களே யாவர்! ஏனெனில், அந்த ஆதிக்கச்
சக்திகள்தான் அரசியல்வாதிகளை பின்புலத்திலிருந்து ஆதரிப்பவையும், அவர்
களது பதவிகளைப் பாதுகாப்பவையும் ஆகும்!

மேலும், பொதுமக்கள் அதிக அளவில் அரசியலில் ஆர்வம் கொள்வதையும்,
ஈடுபடுவதையும் பதவி வெறியும், அதிகார வெறியும் கொண்ட அரசியல்வாதி
கள் விரும்பவோ, ஊக்குவிக்கவோ  செய்வார்கள் என்று நாம் எதிர்பார்ப்பது
அர்த்தமற்றது; அது ஒருபோதும் நிகழாது! ஏனெனில், பொதுமக்களின் தீவிர
அரசியல் பங்கேற்பு என்பது கடைசியில் அரசியல் வாதிகளின் போலியான
முக்கியத்துவத்தை வெகுவாகக் குறைத்துவிடும்!

உண்மையில் இன்று நாம் இருக்கும் ஜனநாயக அமைப்புமுறை எவ்வாறு
நம்மை வந்தடைந்தது என்பதை மக்களாகிய நாம் அறிந்தோமில்லை!
ஜனநாயக அமைப்பை ஸ்தாபிப்பது என்பது ஒரு விஷயம் என்றால், அதைப்
பாதுகாப்பது என்பது இன்னொரு விஷயம் ஆகும்! குறிப்பிட்ட ஒரு இடத்தில்,
காலத்தில், அதிக ஜனநாயகம் இருக்கலாம்; ஆனால், எக்காலத்திலும் சிலர்
அல்லது சில ஸ்தாபன சக்திகள் ஜனநாயகத்தை மட்டுப்படுத்தி தமக்கு அதிக
அதிகாரத்தைப் பெற முயல்வது நிகழும். வேறு சொற்களில் சொன்னால்,
சுதந்திரத்தைப்போலவே ஜனநாயகமும் தொடர்ந்து பாதுகாக்கப்படவும்,
பராமரிக்கப்படவும் வேண்டும்! தொடர்ந்து பராமரிக்கப்படாது விடப்படும்
வீடானது நாளடைவில் சிறிது சிறிதாக வலுவிழந்து, ஒரு நாள் இடிந்து விழக்
கூடும்! அந்த ஒரு நாள் எந்த நாள் என்பது இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொள்ளும்
போது நிச்சயம் தெரியவரும்!

"ஜனநாயக அமைப்பின் பிரஜைகளாகிய மக்கள் அரசியலில் பங்கெடுப்பதன்
மூலம் மட்டுமே அரசியல் பூர்வமாக 'உயிர்ப்புடன்' இருக்கமுடியும். பலருக்கு
(எல்லோருக்கும் அல்ல) அரசியல் பூர்வமாக 'உயிர்ப்புடன்' இருப்பது என்பது
சுவாசிக்க முடிவதற்குச் சமமானது." என்பதாக நூலாசிரியர் இவோ மோஸ்லே
குறிப்பிடுகிறார்! ஆனால், அரசியல் பூர்வமாக 'உயிர்ப்புடன்' இருப்பதைவிட
முதலில் மனிதர்கள் உயிர்-பிழைத்திருக்க வேண்டுமல்லவா? மேலும் மனிதர்
கள் உருவாக்கிய கருவிகளே மனிதர்களை அடிமைப்படுத்துவதாக, அழிப்பதாக
மாறுவதற்கு இடம் தரலாமா? ஆம், எத்தகைய சமூகத்தை நமக்கு நாமே உரு
வாக்கிக்கொள்ள விரும்புகிறோம் என்பதே இப்போதைய அதிமுக்கியத்துவம்
வாய்ந்த கேள்வியாகும்! உண்மையான ஜனநாயக சமூகங்களில், அரசியல்
பங்கெடுப்பு என்பது ஒரு உத்தியோகம் அல்ல; மாறாக, அது ஒரு உரிமையும்,
கடமையும் ஆகும்!


மா.கணேசன்/ நெய்வேலி/ 04-12-2017
----------------------------------------------------------------------------

Monday, 4 December 2017

அரசியல் கட்சிகள் - அவசியத் தீமையா, அல்லது தீமையா ?



   அவசியத்தீமை என்பது அவ்வளவாக சாதகமல்லாத ஆனால்
   அப்போதைக்குத் தேவைப்படும் ஒரு விஷயம், அல்லது அம்சத்தைக்
   குறிப்பதாகும். அவ்விஷயம் இல்லாவிடில் அதிக பாதகம் விளைவதா
   யிருக்கும்! மேலும், அவ்விஷயத்திற்கு மாற்றாக வேறு எதுவும்
   தற்போதைக்கு இல்லாததினால் அவ்விஷயம் அவசியமான தீமை
   எனப்படுகிறது!


பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அடித்தளம் என்று கருதப்படும் அரசியல் கட்சி
களின் மீதான பொது மக்களின் நம்பிக்கையின்மை சமீபகாலமாக பரவலாக
எல்லா நாடுகளிலும் நிலவுகிறது! இன்று மிகக் குறைவான பிரஜைகள் தான்
அரசியல் கட்சிகளை நம்புகிறார்கள்! இந்நிலைமையானது ஜனநாயக அரசிய
லின் தன்மையையே மறுவடிவாக்கம் செய்துகொண்டிருக்கிறது என்பதாக
அரசியல் ஆய்வறிஞர்கள், ரஸ்ஸல் ஜெ. டால்டன் (RUSSELL J. DALTON),
மற்றும் ஸ்டீவென் எ. வெல்டான் (STEVEN A. WELDON)ஆகியோரது ஆய்வு
முடிவுகள் தெரிவிக்கின்றன!

அரசியல் கட்சிகளைப்போல வேறு எந்நிறுவனமும் பிரதிநிதித்துவ ஜனநாயக
வழிமுறையுடன் மிக நெருக்கமாக அடையாளப்படுத்தப்படவில்லை! மிகவும்
புகழ் வாய்ந்த அரசியல் விஞ்ஞானி  E.E. Schattschneider அவர்களின்
அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் முடிவு என்னவெனில், "அரசியல் கட்சிகள்
இன்றி வேறு எதைக்கொண்டும் நவீன ஜனநாயகத்தை எண்ணிப்பார்க்க இய
லாது!" அடுத்து, James Bryce அவர்களின் கூற்று என்னவெனில், "அரசியல்
கட்சிகள் தவிர்க்கவியலாதவை. ஏனெனில், அவையின்றி எவ்வாறு பிரதிநிதித்
துவ அரசாங்கத்தை நடத்துவது என்பது பற்றி எவரும் எடுத்துச் சொல்ல
வில்லை"

மேலும் பல அரசியல் விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும், மேற்குறிப்பிட்ட
பார்வைகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். குறிப்பாக அமெரிக்க அரசியல் விஞ்
ஞானக் கழகமானது, "அதிக பொறுப்புகொண்ட அரசியல் கட்சியின் அரசாங்கம்
வேண்டும்" என 1999,Economist இதழின் ஒரு கட்டுரையில் அழைப்பு
விடுத்தது! அக்கட்டுரையானது, ஜனநாயகத்தின் அடித்தளமாகக் கருதப்படும்
அரசியல் கட்சிகளின் பணி, பாத்திரம் குறித்து பரிசீலித்தது.

ஜனநாயகத்திற்கு அரசியல் கட்சிகள் மிகவும் அடிப்படையானவை என்று
பொதுவாகப் பார்க்கப்பட்டாலும், அரசியல் கட்சிகளின் பங்களிப்பு குறித்து
கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒருபுறம், கட்சி அரசாங்க ஏடுகள்,
கட்சிகள் ஆற்றுகின்ற நேர்மறையான பாத்திரம் குறித்து வலியுறுத்திக் கூறு
கின்றன! மறுபுறம், அரசியல் கட்சிக்கு எதிரான நெடிய வரலாற்றைக் கொண்ட
அபிப்பிராயம், ரூஸோ (Rousseau) முதல் மேடிஸன் (Madison) வரை,
இருக்கிறது. அவ்வபிப்பிராயம், அரசியல் கட்சிகள் புரியும் தீங்கு குறித்தும்,
எவ்வெவ்வழிகளில் அவை ஜனநாயக வழிமுறைகளைத் தடுக்கின்றன என்பது
குறித்தும் விமர்சிப்பதாயுள்ளன! பிரெஞ்சு நாட்டு சமூகவியலாளரும், அரசியல்
கோட்பாட்டாளருமான அலெக்ஸி டி டாக்குவில் (Alexis de Tocqueville)
என்பவர், "அரசியல் கட்சிகள் சுதந்திர அரசாங்கங்களின் உள்ளார்ந்த தீமையாக
விளங்குகின்றன!" என்றார்.

இவ்வபிப்பிராயங்களே, பேல் (Bale), மற்றும் ராபர்ட்ஸ் (Roberts) அவர்
களின், நியூஸிலாந்து நாட்டின் சமீபத்திய தேர்தல்முறை சீர்திருத்தம் குறித்த
சர்ச்சைகள் மீதான மதிப்பாய்வுரையில் எதிரொலித்தன: "வாக்காளர்களைப்
பொறுத்தவரை அரசியல் கட்சிகள் குறித்த விஷயம் குறிப்பிடத்தக்க வகையில்

போற்றுதலுக்குரியதாயில்லை; மாறாக, அவர்கள் தயக்கத்துடன் இனம் கண்டு
ணர்வது என்னவெனில், அரசியல் கட்சிகள் என்பவை அவசியமான தீமை
என்பதே"

அரசியல் கட்சிகளின் அரசியல் பாத்திரம் குறித்த கோட்பாட்டுரீதியான விவாத
மானது நெடுங்காலமாக இருந்து வரும் ஒன்றாகும். ஆனால், சமீப காலத்தில்
இவ்விவாதங்கள் மேலதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன;
அதாவது, அரசியல் கட்சிகள் மீதான பொதுமக்களின் அதிகரிக்கும் ஆர்வமிழந்த
நிலை மேற்கத்திய ஜனநாயகங்கள் இடையே பரவியுள்ளது இதற்கு சான்றாக
வுள்ளது (Dalton and Wattenberg 2000). பெரும்பாலான ஸ்தாபிதமான
கட்சிகளில் உறுப்பினர்களின் பதிவுகள் குறைந்துள்ளன (Scarrow 2000;
Mair and van Biezen 2001). தேர்தல்களில் வாக்குகள் பதிவும் சரிவு
கண்டுள்ளன. அரசியல் கட்சிகளின் மீதான உளவியல் ரீதியான பிடிப்புகளும்,
கட்சியுடன்  அடையாளப்படுத்திக்கொள்வதும் கூட தளர்வு கண்டுள்ளன. முடி
வாக, இடது, மற்றும் வலது சாய்ந்த ஸ்தாபன-விரோத எதிர்ப்புக் கட்சிகளின்
எழுச்சியும் இவ்விடர்பாட்டின் மேலுமொரு அடையாளமாக உள்ளது!

கூடுதலாக, அரசியல்கட்சிகள் குறித்த இவ்வபிப்பிராயங்கள் நிறுவன ரீதியான
மாற்றத்திற்கான கோரிக்கைகளைத் தூண்டுகின்றன. அரசியல் கட்சிகள்மீதான
பொதுமக்களின் பரவிப்பெருகும் அதிருப்தியின் காரணமாக இத்தாலி, ஜப்பான்,
மற்றும், நியூஸிலாந்து ஆகிய நாடுகள் சமீபத்தில் தேர்தல் அமைப்புமுறை
களை மாற்றியமைத்தன (Shugart and Wattenberg 2001). மேலும்,
தற்போது  இங்கிலாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், கனடா ஆகிய நாடுகளிலும்
தேர்தல் அமைப்புமுறையில் சீர்திருத்தம்வேண்டும் என கோரிக்கைகள் எழுந்
துள்ளன (Norris 1995).

தற்போது, புதிய மதிப்பாய்வு முறைகள், பொது மக்கள் எவ்வாறு அரசியல்
கட்சிகளைப் பார்க்கிறார்கள் என்பது குறித்து  நேரடியாகவும், மிக ஆழமாகவும்
பரிசீலிக்க உதவுகின்றன. முதலில், Comparative Study of Electoral
Systems (CSES, module I) மேற்கொண்ட மதிப்பாய்வின் படி, இரண்டு
அடிப்படையான கேள்விகள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன: ஒன்று, ஜன
நாயகத்திற்கு அரசியல் கட்சிகள் அவசியமா? இரண்டு, உண்மையிலேயே
மக்களின் எண்ணங்கள் ( நலன்கள்) குறித்து அரசியல் கட்சிகள் அக்கறைப்படு
கின்றனவா?

இக்கேள்விகள், நடப்பு அபிப்பிராயங்களின் புதிரான தன்மையை பிரதிபலிப்பதா
யுள்ளன! அதாவது, 'அரசியல் கட்சிகள் அவசியமா?' என்ற கேள்விக்கு, 13 ஜன
நாயக நாடுகளின் நான்கில் மூன்று பங்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகள்
அவசியமே என்று பதிலளித்துள்ளனர்! இக்கருத்தானது, அமெரிக்க அரசியல்
விஞ்ஞானி, ஷாட்ஸ்னெய்டர் (Schattschneider)அவர்களின் பார்வையான,
"பெரும்பாலான பிரஜைகளைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகள் இல்லாத
ஜனநாயகம் என்பது எண்ணிப்பார்க்க முடியாதது!" என்பதை ஆதரிப்பதாக
உள்ளது. ஆயினும், அதேநேரத்தில், 'அரசியல் கட்சிகள் பொதுமக்களின் நலன்
கள் குறித்து அக்கறைப் படுகின்றனவா?' என்பது குறித்து சமகாலப் பொது
மக்கள் பெரும் ஐயப்பாடு கொண்டுள்ளனர்.

இக்கேள்வியைப் பொறுத்தவரை, சராசரியாக மூன்றில் ஒரு பங்குக்கும் குறை
வான பொதுமக்கள் மட்டுமே நேர்மறையாகக் காண்கின்றனர்! இத்தகைய
வேறுபாடுகள் கவனத்தைக் கோருவதாகும். 80% ஸ்வீடன் மக்கள், அரசியல்
அமைப்பு செயல்படுவதற்கு கட்சிகள் அவசியமானவை என்கின்றனர்; ஆனால்,
வெறும் 23% பேர்கள் மட்டுமே  கட்சிகள் சாதாரண மக்கள் குறித்து அக்கறைப்
படுகின்றன என நம்புகின்றனர்.

அதே போல், 80% ஜெர்மனியர்கள், அரசியல் கட்சிகள் அவசியமே என எண்ணு
கின்றனர், ஆனால், 18% பொதுமக்கள் மட்டுமே கட்சிகள் மக்கள் நலன் மீது
அக்கறை கொண்டுள்ளன என்கின்றனர்.

ஆயினும், நெடிய காலப்பகுதியை உள்ளடக்கிய ஆய்வின் புள்ளிவிவரங்கள்
அரசியல் கட்சிகள் மீதான நம்புக்கையிழப்பையே சுட்டுகின்றன! கனடாவில்,
1979-ல் 30% இருந்த நம்பிக்கை, 1999-ல் 11% மாகக் குறைந்து போனது! ஜெர்ம
னியில், 1979-ல் 43% இருந்தது, 1993-ல் வெறும் 26% மாகக் குறைந்து போனது!
சுவீடனில், 1968-ல், 'ஓட்டுக்களுக்காக மட்டுமே கட்சிகள் மக்கள் மீது அக்கறை
காட்டுகின்றன' என்ற கருத்தை மறுத்துச் சொன்ன  முழு 68% மக்கள், 1998-ல் 
வெறும் 23% மாகக் குறைந்து போயினர்! அதேபோல், பிரிட்டிஷ் பொதுமக்க
ளும் கடந்த இருபதாண்டுகளில், அரசியல் கட்சிகளை மிகக் குறைவாகவே
நம்புகின்றனர்! 1960-ல் 40% அமெரிக்கர்கள், அரசியல்கட்சிகள் பொதுமக்களின்
ஆர்வங்களுக்குச் செவி சாய்ப்பதாக எண்ணினர். ஆனால், 1970 களில், 30%
மாகக் குறைந்து போயினர்; 1980 களில், 20% மாக மேலும் குறைந்துபோயினர்.
இதற்கிணையாக, நார்வேஜிய நாட்டிலும் அரசியல் கட்சிகள் மீது பொதுமக்கள்
விரிவான அதிருப்தி கொண்டுள்ளதற்கான சான்று உள்ளது.

இவ்வாறே புள்ளிவிவரங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். ஆக,
சுருக்கமாகச் சொன்னால், சமகாலத்திய பொதுமக்கள் அரசியல் கட்சிகளை
ஜனநாயகத்தின் அவசியத்தீமை எனக் காண்பதாகவே தெரிகிறது -- அதாவது,
தேர்தல்களை நடத்துவதற்கும், அரசாங்கம் அமைப்பதற்கும் அரசியல் கட்சிகள்
தேவைப்படுகின்றன, ஆனால், இவ்வழிமுறைக்குள் எவ்வாறு அரசியல் கட்சி
கள் பொதுமக்களின் ஆர்வங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன என்பது
குறித்து சந்தேகத்துடன் பார்க்கின்றனர். மேலும், அரசியல் கட்சிகள் குறித்த
எதிர்மறை உணர்வுகள் சென்ற தலைமுறைக்கும் பரவியுள்ளது. ஒரு காலத்
தில், கல்வியாளர்களும், பிரஜைகளும், ஒரே மாதிரியாக, அரசியல் கட்சிகள்
ஜனநாயகத்தின் தூண்கள் எனக்கண்டனர். ஆனால், இப்போது, சமகாலத்திய
பொதுமக்கள், அரசியல் கட்சிகளை அசட்டைமிக்கவையாக, நம்பிக்கைக்குப்
பாத்திரமில்லாதவையாக, பிரதிநிதித்துவம் பாராட்டாதவையாகக் காண்கின்ற
னர்! அரசியல் கட்சிகள் இல்லாத ஜனநாயகம் எண்ணிப்பார்க்கவியலாதது
என்றால், பல பிரஜைகள், கட்சிகள் எவ்வளவு சிறப்பாக தமது பாத்திரத்தைச்
செயல் படுத்துகின்றன என்பது குறித்து சந்தேகிக்கின்றனர்!

அரசியல் கட்சிகள் மீதான பரவிப்பெருகும் அவநம்பிக்கையின் ஓர் உள்ளார்ந்த
விளைவு என்னவெனில், தேர்தல்களிலும், கட்சி அரசியலின் பிற அம்சங்களி
லும் மக்களின் ஈடுபாடு வெகுவாகக் குறைந்து போகிறது என்பதேயாகும்!

மேலும், வாக்களிப்பு குறைந்து போதலும், கட்சிப்பிரச்சார நடவடிக்கை, கட்சிப்
பணியாற்றுதல், ஊர்வலம் போன்றவற்றில் பங்கெடுத்தல் ஆகியவைகளும்
குறைந்து போயின!

அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையிழப்பு தனிநபர்களை வேறு வகைகளில்
அரசியலில் ஈடுபடுவதற்கான வழிகளை, அதாவது மரபல்லாத, மற்றும் கட்சி-
சாராத வழிகளை, அதாவது நேரடியாக அரசியல்வாதிகளைத் தொடர்பு கொள்
வது, மற்றும், வேறு வடிவங்களில் நேரடிச்செயல்பாட்டில் ஈடுபடுவது போன்ற
வழிகளைத் தேடும்படித் தூண்டுகிறது! இவ்வாறு, கட்சிகளின் மீதான சந்தேகம்
அரசியல் பங்கெடுப்பின் வடிவங்களை மறுவடிவமைப்பு செய்வதுடன், பிரஜை
களின் தாக்கம், மற்றும், ஜனநாயக வழிமுறையின் செயல்படும் தன்மையில்
மாற்றம் ஏற்படுத்தும் முகமாக புதிய வழி வகைகளைக் கண்டுபிடிக்கும்படி
கொண்டு செல்கிறது!

பிரஜைகள் ஓட்டுப்போடுகிறார்கள் எனும் பட்சத்தில், எவ்வாறு கட்சியின்
பிம்பமானது வாக்காளர் தெரிவுகளை பாதிக்கும்? இது முக்கியமானது, ஏனெ
னில், பலருக்கு, தேர்தல்கள் தான் நவீன ஜனநாயக நிகழ்வுமுறையை வரை
யறை செய்வதாயுள்ளது. தேர்தல்கள்தான் மிகவும் முக்கியமான தருணங்கள்,
அப்போது  தனி நபர்கள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டையும், மனச்சார்பை
யும் ஒரு ஒற்றை ஓட்டுத் தேர்வாக ஒருங்கிணைத்து முடிவெடுக்கிறார்கள்.
இவ்வாறான ஓட்டுக்களின் மொத்தம்தான் அரசாங்கம் அமைப்பதை தீர்மானிப்
பதாகிறது!

அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையிழப்பானது வாக்காளர்களின் தெரிவை
பெரிதும் பாதிக்கிறது! அதாவது, கட்சிகளின்மீது அவநம்பிக்கை கொண்டவர்கள்
ஓட்டுப்போடுவதை தவிர்க்குமாறு செய்கிறது! எனினும், ஓட்டுப்போடாதிருப்பது
மட்டுமே ஒரே தெரிவு என்பதில்லை! அவர்கள் தங்கள் ஓட்டுக்களை, புது
மாதிரியாக அரசியல் நடத்தப்போவதாகச் சொல்லுகிற ஒரு கட்சிக்குப் போடக்
கூடும்! அல்லது, அவர்கள் தங்கள் ஓட்டுக்களை பிரதான எதிர்க்கட்சிக்கும் --
அக்கட்சி தனது நடத்தையை மாற்றிக்கொள்ளுமென்ற நம்பிக்கையில்-- போடக்
கூடும்!

சமீபத்திய பத்தாண்டுகள், முன்னேறிய தொழில்துறை ஜனநாயக நாடுகளில்
"கட்சிக்கு-எதிரான கட்சி"களின் எழுச்சியைக் கண்டுள்ளன. கட்சிக்கு-எதிரான
இந்தக் கட்சிகள் மாறுபட்ட சித்தாந்தங்களையும், கொள்கை இலக்குகளையும்
கொண்டுள்ள அதேநேரத்தில், அவை ஒரு பொதுவான செய்தியை எதிரொலித்
தன : "ஸ்தாபிதமான கட்சிகள் யாவும் சுய-சேவை நோக்கம் கொண்டவை,
ஊழல் நிறைந்தவை, மக்கள் நலன்களைக் கண்டு கொள்ளாதவை!" என்பதே
அந்தச்செய்தி!

ஆம், அரசியல் கட்சிகளின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்ட பிரஜைகள்,
பொதுமக்களின் முன்னே மூன்று தெரிவுகள் உள்ளன; ஒன்'று, ஓட்டுப்போடு
வதைத் தவிர்த்தல், இரண்டாவது, கட்சிக்கு-எதிரான கட்சிக்கு ஓட்டுக்களைப்
போடுதல், இறுதியாக, ஏற்கனவே தாபிதமான ஒரு கட்சிக்கு ஓட்டுக்களைப்
போடுதல் ஆகியன! ஜனநாயக அமைப்பு முறையில், தேர்தலை விட்டால்
பொதுமக்களுக்கு வேறு ஒரு வழியும் இருப்பதாகத் தெரியவில்லை! ஆனால்,
தேர்தலின்போது ஓட்டுக்களைச் செலுத்தாமல் இருப்பதால் எவ்வித பயனும்,
மாற்றமும், விளையப் போவதில்லை! அதேபோல, ஓட்டுக்களைச் செலுத்து
வதாலும், பொதுமக்களின் வாழ்வில் பெரிதாக யாதொரு மாற்றமும், பயனும்
விளையப் போவதில்லை! இதுதான் பிரதிநிதித்துவ ஜனநாயக அமைப்புமுறை
யின் சாபக்கேடான நிலையாகும்!

பொதுமக்கள் அரசியல் கட்சிகள் மீது அவநம்பிக்கை கொள்வதற்கும், அரசியல்
கட்சிகளை வெறுப்பதற்கும், அவை ஊழல், அவதூறான நடத்தைகள், முறை
கேடுகள் போன்ற பல காரணங்களையும் புகார்களையும் கொண்டிருக்கின்றன
என்பதையும் தாண்டி, பிரதானமாக மக்கள் நலன்களை அவை கண்டுகொள்வ
தில்லை! ஆனால், வெறுமனே அரசியல் கட்சிகளை வெறுப்பதாலும், விமர்சிப்
பதாலும் எதுவும் நிகழாது!

அதேநேரத்தில், பொதுமக்களாகிய நாம், அவ்வளவு சீக்கிரமாக அரசியல் கட்சி
களின் மரண-அறிவிப்பை எழுதிவிடமுடியாது! ஏனெனில், அரசியல்வாதிகளுக்
கும், பெருமுதலாளிகளுக்கும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தைப் போன்ற பொன்
முட்டை இடும் வாத்து வேறெங்கு கிடைக்கும்! ஆகவே,அவர்கள் தங்களுக்குச்
சாதகமான ஒன்றை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுத்திடுவார்களா என்ன? 
ஜனநாயக நிகழ்வுமுறையில் மாற்றம், சீர்திருத்தம், புதுமை, என்கிற பெயர்
களில் சில மேலோட்டமான திருத்தங்களைச் செய்துவிட்டு ஜனநாயகத்தை
நாங்கள் தழைத்தோங்கச் செய்துவிட்டோம் என அரசியல்வாதிகள் சொல்லக்
கூடும்!

மேலும், அரசியல் கட்சிகள் ஜனநாயக முறையின் மிகவும் அவசியமான,
முக்கியமான அம்சம் என்பதாக அரசியல் கோட்பாடும், பரவலாக பொதுமக்க
ளும் ஏற்றுக்கொள்கின்ற நிலைமை தொடர்கிறது என்பதால், அரசியல் கட்சி
களை விட்டால் வேறுவழியே இல்லை என்று அர்த்தமில்லை; மாறாக, வேறு
வழிமுறைகள் இன்னும் நம்மால் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறது எனவும்
அர்த்தம் கொள்ளப்படவேண்டும்! சிலர், அரசியல் கட்சிகளின் நேர்மறையான
பங்களிப்புகளை மறுக்கமுடியாது என்று சொல்வதன்வழியே அரசியல் கட்சி
கள் இன்றி ஜனநாயகத்தை எண்ணிப்பார்க்கவும் இயலாது என்ற முடிவிற்கு
வருகிறார்கள். இக்கூற்று  பார்வைக்கோளாறு கொண்டதாகும்! ஏனென்றால்,
நேர்மறையான பங்களிப்புகளைச் செய்வதற்காகத்தானே அரசியல் கட்சிகளை
தேர்தல் மூலம் நாம் தேர்வுசெய்கிறோம்? அரசியல் கட்சிகளாகட்டும், அரசியல்
வாதிகளாகட்டும் அவர்கள் எங்கிருந்து, எதற்காக, யாருக்காக வருகிறார்கள்?
அவர்கள் என்ன வானத்திலிருந்து இறங்கி வந்த தேவர்களா? அவர்களும்
மக்களைச் சேர்ந்தவர்கள் தானே? ஆக, அரசியல்வாதிகளும், அரசியல் கட்சி
களும் இல்லாமல் பொதுமக்களாகிய நாம் வாழவே இயலாது என்று சொல்வ
தன் அர்த்தம் என்ன?

ஆனால், முதலிடத்தில், அரசியல் கட்சிகள் எதற்காக நமக்குத் தேவைப்படு
கின்றன என்பது பற்றி நாம் தெளிவுபடச் சிந்திக்க வேண்டாமா? ஆம், பொது
மக்களாகிய நம்மை, நமது நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்காக
அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் தேவைப்படுகின்றன! அதாவது,
கட்சிகள் இல்லாமல் அரசியல்வாதிகள் இல்லை! அரசியல்வாதிகள் இல்லை
யேல், நம்மைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கு எவரும் இருக்கமாட்டார்கள்!
என்பதுதானே நம் தலைவிதியை நிர்ணயிக்கும் மரணகரமான (Fatal)அந்த
எளிய சமன்பாடு? ஆனால், மக்களின் நலன்கள் அரசியல் கட்சிகளாலும், அரசி
யல்வாதிகளாலும் காற்றில் பறக்க விட்டுவிடும்போதும் ஜனநாயகம் என்பதை
நாம் எண்ணிப்பார்க்கவியலாது என்பதையும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டாமா?

தொடக்கத்தில், கட்சி அரசியல் எனும் தீங்கானது ஒவ்வொரு நாட்டின் தனிப்
பட்ட வரலாற்றுடன் தொடர்பு கொண்டுள்ளதாகக் கருதப்பட்டது! அமெரிக்க
மக்கள் அரசியல் கட்சிகளின் மீதான நம்பிக்கையை இழந்து போனதற்கு
அரசியல்வாதிகளின் இழி-நடத்தைகளும், அரசாங்கத்தின் கொள்கைத் தோல்வி
களும் காரணங்களாக அமைந்தன! இத்தாலிய மக்கள் அந்நியப்பட்டுப்போன
தற்கு, அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புக்களில் மலிந்திருந்த ஊழல்
கள் பகிரங்கப்படுத்தப்பட்டதே காரணம் எனப்படுகிறது! கனடா நாட்டு மக்களின்
நம்பிக்கையிழப்பிற்கு பிராந்திய பூசல்கள் கட்சி அமைப்பில் பிரதிபலித்தது
தான் எனப்படுகிறது! ஜெர்மானிய மக்களின் விரக்திக்கு ஒருங்கிணைப்பு தான்
காரணம் எனக் கருதப்பட்டது! சந்தேகமில்லாமல் அந்தந்த நாட்டிற்குரிய தனிப்
பட்ட இத்தகைய நிலைமைகளும் உள்ளன. ஆனால், அரசியல் கட்சிகள்,
மற்றும் பிற பிரதிநிதித்துவ ஜனநாயக அமைப்புகளின் மீது பொதுமக்களின்
பரவிப்பெருகும் அதிருப்திக்கு மேற்கத்திய ஜன நாயகங்கள் அனைத்துக்கும்
பொதுவான வடிவமைப்பு  உள்ளதென ஆய்வு முடிவுகளும், புள்ளிவிவரங்க
ளும் காட்டுகின்றன என்று அரசியல் ஆய்வறிஞர்கள் காண்கின்றனர்.

இத்தகைய எதார்த்தங்கள் உணர்த்துவது என்னவென்றால், அரசியல் கட்சிகள்
மீதான மக்களின் நம்பிக்கையிழப்பானது தொடர்ந்து அதிகரிக்கும் என்பதே!
இதன் விளைவாக வாக்களிப்பு குறைந்து போதலும், கட்சிச் செயல்பாடுகளில்
மக்களின் பங்கெடுப்பு குறைந்து போதலும் நிகழ்ந்துள்ளன! அதாவது, மக்கள்
நலன்களில் அரசியல் கட்சிகள் அக்கறை காட்டாதபோது, மக்கள் ஏன் வாக்க
ளிப்பது பற்றி கவலைப்படவேண்டும் என்பதே பிரதிவினையாக உள்ளது!
கட்சிகள் மீதான அவநம்பிக்கை, கட்சி-சாராத அரசியல் செயல்பாடுகளை
தோன்றச் செய்கின்றன -- அதாவது, நேரடியாக அரசியல்வாதிகளைத் தொடர்பு
கொள்வது, மரபல்லாத வழிகளில் பங்கேற்றல், பிரஜை நலக்குழுக்கள், ஆகிய
பிற வடிவங்களில் நேரடிச் செயல்பாடுகளில் ஈடுபடுதல் தோன்றியுள்ளன!

அடுத்து, அதிருப்தியடைந்த பொதுமக்கள், முற்றிலுமாக அரசியல் கட்சிகளை
புறக்கணிக்காத நிலையில் வாக்களிக்க முன் வருகிறார்கள் எனும் பட்சத்தில்,
அவர்கள் இருவகை கட்சிகளைத் தேர்வு செய்வதாகத் தெரிகிறது! அதாவது,
தாபிதமான கட்சிகளில் எதிக்கட்சியையும், இல்லாவிடில், தீவிர வலதுசாரிக்
கட்சியையும் தேர்வு செய்கிறார்கள்! இவ்விரண்டில், முதல் வகைத் தேர்வு,
தாபிதமான பெருங்கட்சிகளை மக்கள்நலன்களில் அதிக அக்கறை கொள்ளும்
படித் தூண்டும் வகையில் அமைகிறது! இரண்டாவது வகைத் தேர்வு, மரபான
கட்சி-அரசியலை முற்றாகப் புறம்தள்ளி, புறத்தேயிருந்து பிரதிநிதித்துவ ஜன
நாயக முறையை மாற்றியமைத்து பெருமாற்றம் கொணர விரும்பும் கட்சி
களை வரவேற்பதாய் அமைகிறது!

தாபிதமான, ஊழல் பாரம்பரியத்தில் துறைபோன, அரசியல் கட்சிகளை
நிராகரிப்பதையும், தாபிதமான எதிர்க்கட்சிக்கு வாக்களித்து, ஆளும் கட்சி,
எதிர்க்கட்சி ஆகிய இரு துறைபோன கட்சிகளுக்கும் புத்தி புகட்டுவதையும்
கடந்து, கட்சி-சாராத அம்சங்களை விரிவுபடுத்துவது இன்னொரு வகை
சீர்திருத்த முயற்சியாகும். அதாவது, அரசின் கொள்கை முடிவுகள் மீதான
பொதுமக்களின் கருத்தை நேரடியாக அறிவதற்கான  பொதுவாக்கெடுப்புகள்
(Referendums),பிரஜைகள் தங்கள் பிரச்சினைகளை தெரியப்படுத்துவதற்கு
வாய்ப்பளிப்பது, மற்றும் பிற நேரடிச்செயல்பாடுகளை அதிகரிப்பது! இவ்வழி
கள், வாக்காளர்கள் ஓரளவிற்கு கட்சி அரசியலை தவிர்த்துக் கடந்து செல்ல
உதவக்கூடும்! மேலும், கொள்கை நிர்வாகத்திலும் மாற்றங்களைச் செய்தல்
என்பதும் இவற்றைப் பின்தொடர்ந்து நிகழக்கூடும்! ஏனெனில், பொதுமக்கள்
அரசியல் கட்சிகள் மீது மிகுந்த அவநம்பிக்கை அடைந்துள்ளபடியால், அரசிய
லில் நேரடியாகத் தங்கள் குரல் இடம்பெற வேண்டும் எனக் கோருகிறார்கள்!

முடிவாக, அரசியல் கட்சிகளின் மீதான அவநம்பிக்கை என்பது, உலகில்
மேற்கு, கிழக்கு என வித்தியாசமின்றி, பிரதிநிதித்துவ ஜனநாயக ஆட்சிமுறை
யைக்கொண்ட அனைத்து நாடுகளிலும் உள்ள பொதுமக்களின் பொதுவான
அம்சமாக விளங்குகிறது! அதே நேரத்தில், அரசியல் கட்சிகள் தொடர்ந்து தமது
மையமான பாத்திரத்தை தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு அனைத்து வழி
களிலும் முனைப்பாகச் செயல்படும் என்பதில் சந்தேகமில்லை! ஆனால், ஜன
நாயக அரசியல் அமைப்புமுறையில், கட்சிகளின் பரந்த பாத்திரம் என்பது

சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது!

ஆக, எவ்வாறு பார்த்தாலும், அரசியல் கட்சிகள் என்பவை அவசியத் தீமை
என்ற நிலையிலிருந்து கீழிறங்கி பெரும் தீமையாக மாறி ஜனநாயகத்தை
உள்ளேயிருந்து அரித்து அழித்துவருகிறது என்பது மட்டும் நிச்சயமாகும்!
"பிரதிநிதித்துவ ஜனநாயக அமைப்புமுறை"யில் உள்ள ஒரே பிரச்சினை "பிரதி
நிதித்துவம்" என்பது தான்! அதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி
களாகிய அரசியல்வாதிகள்தான்! அவர்கள் புரிகின்ற மக்களுக்கெதிரான, மக்கள்
நலன்களுக்குப் புறம்பான அரசியல்தான்! அதாவது,அரசியல்வாதிகள் நமக்கான,
நம்முடைய பிரதிநிதிகளாகச் செயல்படுவதில்லை என்பதுதான்! ஆனால்,
அரசியல் வாதிகள் இவ்வாறு தங்களுடைய ஜனநாயகக் கடமைகளிலிருந்தும்,
பொறுப்புகளிலிருந்தும் வழுவிப்போவதற்கான காரணம், மக்களாகிய நாம்
அவர்களை நம்முடைய பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்து அவர்களின் கைகளில்
நாம் வழங்கிய "ஆட்சியதிகாரம்" தான்! இந்த ஆட்சியதிகாரம் தான் அரசியல்
வாதிகளை மிகவும் பிறழ்வான வழிகளில் செல்லுமாறு செய்கிறது!

இப்போது நாம், அரசியல்வாதிகளின் மீதும், அரசியல் கட்சிகளின் மீதும்
நம்பிக்கையிழந்து அரசியல்வாதிகளையும், அரசியல் கட்சிகளையும் முற்றாகப்
புறக்கணிப்பு செய்கிறோம் எனும்பட்சத்தில், நம்மைப் பிரதிநிதித்துவம் செய்வ
தற்கு எதுவும், எவரும் இல்லை என்றாகிவிடும்! பிறகு பொதுவான அராஜக
நிலை, அதாவது, அரசு இல்லாத குழப்பமான நிலையும், அமைதிக்கேடும்,
சட்ட விதிமுறைகளுக்கு மாறான செய்கையும் ஏற்பட ஏதுவாகிடும் வாய்ப்பு
உள்ளது என்பதை நாம் மறுக்கமுடியாது தான்! ஆனால், அரசு என்பது இங்கே
இருக்கும்போதே அரசியல் கட்சிகளாலும், அரசியல்வாதிகளாலும் ஏற்படுத்தப்
படும் குழப்ப நிலையையும், அமைதிக்கேட்டையும், சட்ட விதிமுறைகளை
மீறிய செய்கைகளையும் எங்கே, எவரிடம் போய் முறையிடுவது?

ஆனால், "அரசு". "அரசாங்கம்" என்பது என்ன? மக்களாகிய நம்மால், தேர்தல்
மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அமைப்பல்லாமல் வேறென்ன?
அதாவது, நம்முடைய பிரதிநிதிகளும் அரசியல்வாதிகள் தான்; அரசு, அரசாங்
கம் என்பதும் அரசியல்வாதிகளே தான்! உண்மையில், மக்களாகிய நாம் நமக்
கான பிரதிநிதிகள் என்ற பெயரில்,  நம்மை ஏய்த்து மேய்க்கும் ஆட்சியாளர்
களைத்தான் தேர்ந்தெடுக்கிறோம்! நம்முடைய பிரதிநிதிகளும், நம்மை ஆள்ப
வர்களும் ஒன்றாக, அதே அரசியல்வாதிகளாக இருப்பது தான் அனைத்துத்
தீமைகளுக்கும் அடிப்படைக் காரணம் ஆகும்! அரசியல் கட்சிகள் எனும்
தீமையை மக்களாகிய நம்மால் அவசியமற்றதாக ஆக்கிடவும், அகற்றிடவும்
முடியும்! அதற்கு மக்களாகிய நாம் பிளவுகள் இன்றி, பிரிவினை இன்றி ஒரே
கட்சியாக இருக்கவேண்டும்! அதாவது, நமக்கிடையேயுள்ள அனைத்து வேறு
பாடுகளையும், வித்தியாசங்களையும் விட முக்கியமானது, மேன்மையானது
நம்முடைய "மனிதம்" தான்!

நாம் நமக்குள் பிளவுண்டு, பிரிந்து கிடக்கும்வரை, அரசியல்வாதிகளுக்குத்
தான் சாதகமாயிருக்கும்! ஆகவே, நமக்கிடையேயுள்ள அனைத்து வேறுபாடு
களையும், வித்தியாசங்களையும் கடந்து, அனைத்து மக்களின் பொதுவான
அடிப்படையான நலன் களையும், வாழ்வையும் காப்பாற்றிக் கொள்ளவேண்டு
மெனில், ஜனநாயத்தை நாம் அரசியல் கட்சிகளிடமிருந்தும், அரசியல்வாதி
களிடமிருந்தும் காப்பாற்றியாக வேண்டும்!

   •( இக்கட்டுரை, அரசியல் ஆய்வறிஞர்கள் RUSSELL J. DALTON and
   STEVEN A. WELDON ஆகியோரது "Public Images of Political
   Parties: A Necessary Evil?" எனும் தலைப்பிலான அறிக்கையின்
    புள்ளிவிவரங்களையும், சில தரவுகளையும் ஆதாரமாகக் கொண்டு எழுதப்
    பட்டதாகும் )•

மா.கணேசன்/ நெய்வேலி/ 29-11-2017
----------------------------------------------------------------------------


ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...