
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இவை போன்ற இன்சொற்கள் , பாராட்டுக்கள், புகழுரைகள், உணர் ச்சிப் பெருக்கின் உதட்டளவு வாழ்த்துக்கள் .... இவை மட்டுமே இந்த ஆண்டு முழுவதையும் இனிமை நிறைந்ததாகவும், சந்தோஷம் பொங்கச்செய்வதாகவும், வளம் பெருகவும், சகமனிதர்களுக்கு இடையேயான துவேஷங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் களைந்துவிடுவதாகவும் செய்துவிடுமா என்ன?
நாம் சற்று தொலைநோக்கோடு சிந்தித்துச் செயல்படுவது மட்டுமே இந்த ஆண்டு மட்டுமல்லாமல், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் இனிமையையும், சந்தோஷத்தையும், வளங்களையும் பெற்றுத்தருவதாக அமையும்!
குறிப்பாக, அடுத்த ஆண்டு, 2019 என்பது, அதைத் தொடர்ந்து வரப்போகும் ஐந்து ஆண்டுகளின் நம்முடைய வாழ்-நிலையை யும், சந்தோஷத்தையும் தீர்மானிக்கும் 'சோதனை-ஆண்டு'
ஆகும்! ஆகவே, அதற்குள் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய அரசியல் விழிப்புணர்வின் முக்கியத்துவம் மகத்தானதாகும்!
இதுவரை தத்துவ ஆன்மீக விஷயங்களைப் பேசிக்கொண்டு இருந்தவன் தற்போது திடீரென அரசியல் பேசுவதாக நம் நண்பர்கள் சிலர் அதிர்ச்சியடையக்கூடும் ! ஆனால், விஷயம் என்னவெனில், கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கிறது! இப்போது தத்துவம் பேசிக்கொண்டிருப்பது தவறல்ல; மாறாக, கப்பல் மூழ்கிக் கொண்டிருப்பதற்கான காரணிகளை அறிந்து அவற்றைக் களைந்து கப்பலைக் காப்பாற்றுவதற்குரிய தத்துவத்தைப் பேசுவதே இப்போதைய அவசர அவசியமாகும்!
உண்மையில், நாம் 'அரசியல் ' பேசிக்கொண்டிருக்கவில்லை; மாறாக, நம்முடைய வாழ்வின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிப்பேசிக் கொண்டிருக்கிறோம்! நம்முடைய வாழ்வுரிமைகளையும், வாழ்வாதரங்களையும் காப்பாற்றிக்கொள்வது பற்றிப்பேசிக்கொண்டிருக்கிறோம்! நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்; நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ளவேண்டுமானால் நாம் பயணித்துக் கொண்டிருக்கும் கப்பலைக் காப்பாற்றிட வேண்டும்; ஆம், "ஜன நாயகம்" என்பதுதான் அந்தக்கப்பல்! நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் நம்மைக் காப்பாற்றப்போவதில்லை; அவர்களுக்குத் தம் சொந்த நலன்களைப் பெருக்கிக்கொள்ளவும், தம் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ளவுமே நேரம் போதவில்லை!
உலகில் மொத்தம் 195 நாடுகள் உள்ளன, அதில், மொத்தம் 167 நாடுகளில் ஜனநாயக ஆட்சிமுறை நடைமுறையில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது! ஆனால், வெறும் 20 நாடுகளில் மட்டுமே முழு ஜனநாயகம் நடைமுறையில் உள்ளதாகவும், கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைபாடுடைய ஜனநாயகம் (flawed democracy) நிலவுவதாகவும் சொல்லப்படுகிறது. குறைபாடுடைய ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறுவதாகச் சொல்லப்படுகிறது!
குறைபாடுடைய ஜனநாயகம் என்பது வளர்ச்சி குன்றிய அரசியல் கலாச்சாரம் கொண்டதாகவும், குறைந்த அளவிலான அரசியல் பங்கேற்பு கொண்டதாகவும், ஆட்சிமுறையில் கோளாறுகள் நிறைந்ததாகவும் இருப்பதைக் குறிக்கிறது! பெரும்பாலான ஜனநாயக நாடுகளின் பிரச்சினை என்பது அவற்றின் பிரதிநிதித்துவக் குறைபாடுகளிலேயே அடங்கியுள்ளது. ஆனால், பெரும்பாலான அரசியல் ஆய்வறி ஞர்களும், தத்துவச் சிந்தனையாளர்களும் 'பிரதிநிதித்துவ ஜனநாயக' முறையை விட்டால், ஜனநாயகத்திற்கு வேறு வழியே இல்லை என்கிறார்கள்!
மக்களால், மக்களுக்காக, மக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் பிரதிநிதிகள் உண்மையில் மக்களை, மக்களின் நலன்களை, ஆர்வங்களை, அடிப்படை வாழ்வாதாரங்களை பிரதிபலிப்பதில்லை, பிரதிநிதித்துவம் செய்வதில்லை எனும் போது, 'பிரதிநிதித்துவ ஜனநாயக' முறையில் இருந்துகொண்டு அரசியலில் எவ்வாறு, எத்தகைய மாற்றத்தை மக்களால் செய்விக்க முடியும் என்பது தான் இன்றைய முக்கியத்துவம் வாய்ந்த பிரதான அரசியல் கேள்வியாகும்! தேர்தல் மூலம் ஒரு 'நல்ல' அரசியல் தலைவரை தேர்ந்தெடுப்பது சாத்தியமில்லை! தேர்தல் என்பதே ஒரு "சூதாட்டம்" போலுள்ளது! அதில் எப்போதும் மக்களே தோற்பவர்களாக இருக்கிறார்கள்!
வேறு என்ன செய்வது? வாக்களிக்காமல் இருக்கலாமா? ஒரு வகையில் வாக்களிப்பதும், வாக்களிக்காமல் இருப்பதும் ஒன்றாக -பயனற்றதாக- த்தான் இருக்கிறது! ஆனால், வாக்களிக்காமலிருப்பதன் வழியாக நாம் நம்முடைய ஒரே அரசியல் செயல்பாட்டிலிருந்தும் ஒதுங்கிவிடுவதாக உள்ளது!
அப்படியானால், புரட்சி செய்யலாமா? செய்யலாம், ஆனால், அது முற்றிலும் புதுவகையான புரட்சியாக இருக்கவேண்டும்!
அதாவது, புறத்தே சாலையில் நம்முடைய எழுச்சியையும், கிளர்ச்சியையும், கோபத்தையும் காட்டுவதற்குப்பதிலாக, நம்முடைய அகத்தே செய்யப்படும் புரட்சியாக இருக்க வேண்டும்! அப்புரட்சி 'அரசியல் ' பற்றிய தெளிவான, தீர்க்கமான பார்வையாக, அறிவாக நம்முள் உருவாகி நம்மைச் செலுத்துவதாக இருக்கவேண்டும்! இத்தகைய புதுமையான ஆயுதத்தைக்கொண்டு நாம் நம்முடைய அரசியல் பிரதிநிதி களைச் செலுத்தவேண்டும்! ஆம், நாம் அனைவரும் தவறாமல் வாக்களிக்கவேண்டும்! ஆனால், வாக்களித்து விட்டு வழக்கம் போல வெறுங்கையோடு வீடு திரும்பி விதியே என்று வாளாதிருக்கலாகாது!
மாறாக, நம்முடைய பிரதிநிதிகளை நமக்காகப் பணியாற்றும் படிச் செய்யவேண்டும்! அதை எவ்வாறு செய்வது, எவ்வெவ்வாறெல்லாம் செய்யலாம் என்பதை ஆராய்ந்து கண்டு பிடிப்பதில் தான் நம் ஒவ்வொருவருடைய அரசியல் பங்களிப்பும், உண்மையான அரசியல் ஞானமும் (தந்திரமும்) அடங்கியுள்ளது!
இதுதான் உண்மையான அரசியல், மக்களின் அரசியல்! ஆனால், இதுவரை 'அரசியல் ' என அரசியல்வாதிகளால் பொதுமக்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டதும், பொதுவாக மக்கள் பேசிவந்ததும் அரசியல்வாதிகளின், அரசியல் கட்சிகளின் பயனற்ற அரசியலாகும்! "இந்த தேர்தலில் எந்தக்கட்சி வெற்றி பெறும்; எந்தக்கட்சி தோல்வியடையும்?" என்பது போன்ற பேச்சுகளும், கூட்டணி பேரம் பற்றியும், உள்கட்சி விவகாரங்கள் பற்றியுமான பேச்சுகளும் மக்களுக்குப் பயன்படாதவை, ஆகவே தேவை யில்லாதவையாகும்!
இவ்வாறு நம்முடைய பிரதிநிதிகளை நமக்காகப் பணியாற்றும் படிச் செய்வதற்கான அடிப்படைகள், நியாயங்கள், முகாந்தரங்கள் உள்ளனவா? உள்ளன! உள்ளன! உள்ளன! நிச்சயமாக உள்ளன! முதலிடத்தில், ஜனநாயக ஆட்சிமுறையில் 'பிரதிநிதிகள்' என்போர் மக்களின், மக்களுக்கான பிரதிநிதிகள் என்பதாயில்லாமல் வேறு யாருக்கான பிரதிநிதிகள் அவர்கள்?வேறு யாருக்கு அவர்கள் கடமைப்பட்டவர்கள்? நாம் அளிக்கும் நம் ஒவ்வொருவருடைய 'வாக்கு' எனும் அதிகாரத்தின் ஒட்டுமொத்தம் தானே அரசியல்வாதிகளை அமைச்சர்களாக, முதலமைச்சராக ஆட்சியதிகாரத்தில் அமர்த்துகிறது? ஆகவே, அவர்களை நமக்காகப் பணியாற்றும் படிச் செய்வதற்கான அதிகாரமும் நம்முடைய உரிமைகளில் ஒன்றாக அடங்கியுள்ளது! ஆக, வாக்களிப்பதுடன் நம்முடைய ஜனநாயகக் கடமை முடிந்து போவதில்லை; மாறாக, அதனுடன் தான் தொடங்குகிறது!
✦
மா.கணேசன்/31.12.2017
-------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment