Wednesday, 27 December 2017

இங்கேயும் எங்கேயும் இனி அரசியல் பேசுங்கள்!





"இங்கே அரசியல் பேசாதீர்கள்!" என்று பல உணவு விடுதிகளிலும், முடிதிருத்
தகங்களிலும் எழுதிப்போடப்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால்,
இந்த அறிவிப்பின் அர்த்தம் என்ன என்று நாம் எப்போதாவது யோசித்துப்
பார்த்ததுண்டா? அதாவது அரசியல் பேசினால், வீண் விவாதங்களும், சண்டை
களும், கைகலப்புகளும், சில வேளைகளில், வெட்டு, குத்தும் நிகழலாம் என்ப
தாலேயே அவ்வாறு எழுதிப்போடப்பட்டுள்ளது என நாம் மிகச் சுலபமாகப்
புரிந்துகொள்கிறோம்! இதன் காரணமாகவே, நம்மில் பெரும்பாலானோர் பொது
இடங்களில் எவ்வகை அரசியலையும் பேசுவதில்லை! ஆனால், அரசியல்
பேசினாலேயே ஏன் வீண்வாதங்களும், சண்டை சச்சரவுகளும், அடி தடிகளும்
ஏற்படவேண்டும்?

ஆனால், உண்மையில், அரசியல் பேசுவதால், அதாவது, உண்மையான அர்த்த
முள்ள அரசியலைப் பேசுவதால் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பில்லை!
மாறாக, "கட்சி அரசியல்" பேசுவதால் தான் ஏற்படுகின்றன! மேலும், அரசியல்
பேசவேண்டுமென்றாலேயே மக்கள் பரஸ்பரம் ஒன்றையொன்று எதிர்க்கும்
வகையிலான அணிகளாகவும், கட்சிகளாகவும் தான் பிரிந்து நிற்கவேண்டுமா
என்ன?

அப்படியானால், இது எத்தகைய அரசியல்? பெரும்பாலான மக்கள் ஏன் அரசி
யல் பேசுவதில்லை, அரசியல் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டுவ
தில்லை, தீவிரமாக ஈடுபடுவதில்லை? பெரும்பாலான மக்கள் அரசியலில்
ஆர்வம் கொள்ளாதிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், அரசியல் என்பது
மக்களின் வாழ்க்கையிலிருந்து வெகு தொலைவு விலகியிருக்கிறது; அதாவது,
மக்களின் உண்மையான வாழ்க்கையுடன் (மக்களின் நலன்களுடன்) அரசியல்
தொடர்பற்றதாக உள்ளது என்பதுதானாகும்!

இதுவரை 'அரசியல்' என்று மக்களுக்குக் கற்பிக்கப்பட்டிருப்பது, மக்களுக்கான
அரசியல் அல்ல; மாறாக, அரசியல்வாதிகளின் அரசியலே ஆகும்! அதாவது,
அரசியல் என்றாலே அது கட்சி கட்டுவது, தேர்தலில் நிற்பது, ஆட்சியதிகாரத்
தைப் பிடிப்பது; ஆட்சியைப் பிடித்தபிறகு அதைத் தக்கவைத்துக் கொள்வதற்
கான விவகாரங்களில் ஈடுபடுவது; எதிர்க்கட்சிகளைச் சமாளிப்பது; அல்லது
இருக்கவே இருக்கிறது, உள்கட்சி விவகாரங்கள் அவற்றைச் சமாளிப்பது ....
போன்ற இவை யாவும் அரசியல்வாதிகளின் அதிகார மோகத்தின் அரசியல்
ஆகும்!

ஆண்டு முழுவதும் ஆளும் கட்சியின் உள்கட்சிப் பிரச்சினைகளை, அல்லது
எதிர்க்கட்சியின் விமர்சனங்களை பரபரப்புச் செய்திகளாக்கி ஊடகங்கள்
தம்முடைய வியாபாரத்தை நடத்திச்செல்கின்றன! அவ்விவகாரங்களில் மக்கள்
ஈடுபாடு கொள்வதற்கு எதுவுமில்லை! அரசியல் கட்சிகளின் விசுவாசத்
தொண்டர்களுக்கு வேண்டுமானால் அவை முக்கியத்துவம் வாய்ந்த அரசியல்
நிகழ்வுகளாகத் தெரியலாம்! ஏனெனில், கட்சித்தொண்டர்கள் தங்களுக்கு
எப்போதாவது ஏதேனும் ஆதாயம் கிடைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்
முதலீடுசெய்துவிட்டு, தம் கடன் கட்சிப்பணியாற்றிக்கிடப்பதே என்று

தங்களதுசுய-முக்கியத்துவத்தைத் தொலைத்துவிட்டவர்களாவர்!

ஜனநாயகத்தின் சாபக்கேடு என்னவென்றால், அரசியல் கட்சிகள், அதாவது,
கட்சிகளின் பிரதானத் தலைவர்கள் அரசியலை, குறிப்பாக, தேர்தலில் வெற்றி
பெறுவதைத் தங்களது சொந்த விவகாரமாகக் கொண்டுவிடுவதேயாகும்!
இதன்விளைவாக, ஒரு கட்சியானது, தனது ஒட்டுமொத்த சக்தியையும் இன்
னொருகட்சி ஆட்சிபுரிவதற்கு தகுதியற்றது என நிரூபிப்பதிலேயே அர்ப்பணம்
செய்கிறது! பரஸ்பரம் ஒவ்வொரு கட்சியும் இதையே செய்வதன் மூலம்
எந்தக் கட்சியும் ஆட்சிபுரிவதற்கு தகுதியற்றது என்பதை மெய்ப்பித்துவிடுகின்
றன! ஆட்சியதிகாரத்தை மட்டுமே இலக்காகக்கொண்ட இந்த அர்த்தமற்ற
போட்டா போட்டியில், அரசியல் கட்சிகள் மக்களை, மக்களின் நலன்களை
மறந்து விடுகின்றன! மக்களும் தங்களது மையமான பிரச்சினைகளை மறந்து
கட்சி அரசியல் விவகாரங்களில் ஆழ்ந்துவிடுகின்றனர்! பெரும்பாலான மக்கள்

கட்சிகளுக்கிடையேயான போட்டியை, இரு அணிகளுக்கிடையேயான கால்
பந்தாட்டப் போட்டியை ரசிப்பதுபோல வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்
றனர்! இவ்வழியே மக்களும் அரசியல்வாதிகளின் கட்சி அரசியல் எனும் கால்
பந்தாட்டத்தில் சேர்ந்துகொண்டு தங்களுக்கு எதிராக "கோல்" போட்டு ஒவ்
வொரு முறையும் தோற்றுப் போகின்றனர்!

மக்கள் தம் விருப்பத்தேர்வின்படி இந்தக்கட்சி அல்லது அந்தக்கட்சியுடன்
இணைந்துகொள்வதன் மூலம் பிளவுண்டு போவதை அரசானது தனக்குச்
சாதகமாகக் கொண்டுவிடுகிறது

ஆனால், உண்மையான, அர்த்தமுள்ள அரசியல் என்பது, குறிப்பாக ஜனநாயக
அமைப்பைப்பொறுத்தவரை, மக்கள் தங்கள் ஆர்வங்கள், அடிப்படை நலன்கள்,
ஆகியவை தங்களால் தேர்வுசெய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகளால் முறை
யாக நிறைவேற்றப்படுகின்றனவா, இல்லையா என்பதை கண்ணும் கருத்து
மாகக் கவனிப்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்கமுடியாது! பிரதிநிதித்
துவ ஜனநாயக அமைப்புமுறையில், அரசியல் கட்சிகள் தவிர்க்கமுடியாதவை
எனக் கொண்டாலும், கட்சிகளுக்கிடையேயான பூசல்கள், பிரச்சினைகள்;
மற்றும், ஒரு கட்சியின் உள்-கட்சி விவகாரங்கள் போன்ற எதுவும் மக்களின்
கவனிப்பிற்கும், அக்கறைக்கும் உரியவை அல்ல!

நாடகக் கலைஞர்கள் மேடையேறிய பிறகு, தங்களுக்கிடையே, "நான்தான்
தலைமை வேடத்தில் நடிப்பேன்!" " இல்லை, நான்தான் அந்த வேடத்தில்
நடிப்பேன்!" என்று தங்களுக்குள் அணி பிரிந்து சண்டையிட்டுக் கொண்டு
நேரத்தைக் கடத்திக்கொண்டிருப்பதையே நாடகம் என நிகழ்த்துவார்களேயா
னால், பார்வையாளர்கள் எவ்வாறு அதைச் சகித்துக் கொள்வார்கள்? ஆனால்,
நிஜ வாழ்வில் இத்தகைய அபத்தம் தான் அரசியல் மேடையில், 'உள்கட்சிப்
பூசல்', 'கூட்டணி பேரம்' என்றெல்லாம் நிகழ்த்தப்பட்டுவருகிறது, அதையும்
மக்களாகிய நாம் அரசியல் என எடுத்துக்கொண்டு சகித்துக்கொண்டுதான்
செல்கிறோம்! இத்தகைய அவலத்தில் இனியும் நாம் பங்குகொள்ளாமல்
இருப்போமாக! ஏனெனில், கிஞ்சித்தும் இவை எதுவும் நேர்முகமாகவோ,
அல்லது மறைமுகமாகவோ மக்களாகிய நம்முடைய அடிப்படை நலன்களைப்
பற்றியவையோ, தொடர்புடையவையோ அல்ல! இதன் அர்த்தம், அரசியல்
வாதிகள் எப்போதும் மக்கள் நலன்களைப்பற்றியே சிந்தித்துக்கொண்டும்,
பேசிக்கொண்டும், செயல்பட்டுக்கொண்டும்தான் இருக்கவேண்டும் என்பதல்ல!
மாறாக, முதலிடத்தில் இருக்க வேண்டிய மையமான இவ்வம்சம் ( மக்கள்
நலன்கள்) அரசியல்வாதிகளின் அரசியல் நிகழ்ச்சிநிரலில் கடைசி இடத்தில்கூட
இல்லை என்பதையே நாம் இவ்வாறு இங்கு சுட்டிக்காட்டுகிறோம்!

முதலிடத்தில், 'அரசியல்' என்பது எதற்காக? 'அரசியல்வாதிகள்' எதற்காக?
தேர்தல்கள் எதற்காக? மக்கள் எதற்காக வாக்களிக்க வேண்டும்? 'அரசாங்கம்'
'அரசு' எதற்காக? இவையெல்லாம், மனிதவாழ்வில் எந்த இடத்தில் எவ்வகை
யில் பொருந்துகின்றன? மனித வாழ்வில் இவற்றின் பங்கு, பணி, பாத்திரம்
என்ன? இந்த ஒவ்வொன்றையும் நாம் மறு பரிசீலனை செய்தாக வேண்டும்!
இனி மக்களாகிய நாம் கூடுகின்ற எல்லாஇடங்களிலும், எப்போதும் நமக்கான
அரசியலைப் பேசியாக வேண்டும்! நமக்கான அரசியல் எது என்பதை முதலில்
நாம் ஒவ்வொருவரும் இனம்கண்டாக வேண்டும். இதற்காகவே நாம் அரசியல்
பேசியாக வேண்டும்! இதுவரை, அர்த்தமற்ற 'கட்சி அரசியலின்' வெறும்
பார்வையாளர்களாக நாம் இருந்தது போதும்; இனி அர்த்தமுள்ள மக்களின்
அரசியலில் ஆர்வத்துடன் பங்கு கொள்வோமாக!

மா.கணேசன்/  22-12-2017
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...