
பொதுமக்களுக்கு, 'அரசியல்' என்பது ஒரு அசுத்தமான சொல்லாகும்.
எனினும், 'ஜனநாயகம்' என்பது ஒரு நேர்மறையான கருத்தியலாக
உள்ளது. சமகாலத்திய பிரச்சினை என்னவாகத் தெரிகின்றதென்றால்,
பெருமளவிலான பொதுமக்கள் அரசியல் இல்லாத ஜனநாயகத்தையே
விரும்புகிறார்கள். - மேத்யூ ஃப்ளிண்டெர்ஸ்
(Matthew Flinders, director of the
Bernard Crick Centre)
• • •
பொதுவாக மக்களும், இன்னும் இளைஞர்களும் ஏன் அரசியலை விரும்புவ
தில்லை; அரசியலில் ஈடுபடுவதில்லை? ஏனெனில், தமது தலைவிதியை,
வாழ்-நிலையைத் தீர்மானிக்கும் இடம் "அரசியல் களம்" தான் என்பதை அவர்
கள் இன்னும் அறியாதிருப்பது தான் காரணமாகும்! மேலும், அரசியல் என்பது
விசேடமான சிலருக்கு மட்டுமே உரிய துறை என்பதான ஒரு பிம்பத்தை
தொடக்கத்திலிருந்தே அரசியல்வாதிகள் உருவாக்கிவிட்டுள்ளனர். முக்கியமாக,
அரசு, அரசாங்கம் என்பது அதிகார மையமாகத் திகழ்வதால், மிகத் தந்திரமாக
மக்களை அரசியல் பக்கம் அண்டவிடாமல் பார்த்துக்கொண்டனர்! மேலும், நய
வஞ்சகமாக, "அரசியல் என்பது ஒரு சாக்கடை!" என்று சொல்லி அரசியலை
அருவருக்கத்தக்க ஒரு விஷயமென அச்சுறுத்தி மக்களை அருகே நெருங்கவி
டாமல் செய்த அரசியல்வாதிகள் அரசியலை தங்களுக்கான ஏகபோக சரணா
லயமாகக் கொண்டுவிட்டனர்!
"அரசியல்" என்றாலே தந்திரம், நயவஞ்சகம், சூழ்ச்சி, சதி, மோசடி, ஏமாற்று,
துரோகம், பொய்ம்மை, சூது . . .ஆகிய அர்த்தங்கள் தொனிக்கின்ற வகையில்
ஒருவகை ஒவ்வாமை தோன்றும்படி செய்துள்ளனர்!
மேலும், தேர்தல் எனும் ஒற்றைச் சடங்கைத் தவிர, அரசியல் நிகழ்வுகள்,
செயல்பாடுகள் ஆகிய எதிலும் மக்கள் பங்கெடுக்கும் வகையில் அரசியல்
அமைந்திருக்கவில்லை! சட்டமன்றம், நாடாளுமன்றம் என இரு அவைகளுக்
கும் தங்களுக்கான உறுப்பினர்களை, அதாவது, பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்
பதுடன் மக்களின் அரசியல் செயல்பாடும், பங்கெடுப்பும் முடிந்து விடுகிறது!
இவ்வுறுப்பினர்கள் பெயரளவிற்குத்தான் மக்களின் பிரதிநிதிகள்; மற்றபடி
எதார்த்தத்தில் அவர்கள் மக்களை ஏய்த்து மேய்த்து சர்வாதிகாரம் செய்யும்
எசமானர்களைப் போலவே நடந்து கொள்கின்றனர்!
அடுத்து, தேர்தலில் அதிக வாக்குகளைப்பெற்று ஆட்சியதிகாரத்திற்கு தேர்வான
ஒரு கட்சியானது ஆட்சியமைத்ததிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை
அக்கட்சியின் ஒரே செயல்பாடு என்பது உள்-கட்சி விவகாரங்களை, பூசல்களை
அலசிக்கொண்டிருப்பதும், பஞ்சாயத்து பண்ணுவதும் மட்டுமே யாகும்! ஆக,
உள்-கட்சிப்பூசல்களிலும், விவகாரங்களிலும் - பத்திரிகைகள் மற்றும் ஊடகங்
களைத்தவிர - மக்களுக்கும், இளைஞர்களுக்கும் என்ன பங்கு, பணி, பாத்திரம்
இருக்க முடியும்?
அடுத்து, ஆளுகின்ற கட்சியின் ஆட்சிக்காலம் முடிவுறும் கட்டத்தில், அடுத்த
தேர்தலுக்குத் தயாராவதற்குரிய பிரச்சாரம், பொதுக்கூட்டம், மாநாடு, கூட்ட
ணிப் பேரங்கள், போன்ற சடங்குகள் மட்டுமே பிரதான அரசியல் விஷயங்கள்
ஆகும்! இத்தகைய சடங்குகளில் கட்சி உறுப்பினர்கள், தொண்டர்கள் மட்டுமே
பங்குபெறுகிறார்கள்; ஏனெனில், கட்சித் தொண்டர்கள் தங்களுக்கு ஏதேனும்
ஆதாயம் கசியக்கூடும் என்ற நம்பிக்கையில், கட்சி எனும் படிமுறை அமைப்
பில் கீழ்ப்படியாயிருந்தாலும் கட்சியில் தங்களுக்கு ஒரு இடமும், உரிமையும்
உள்ளதாக, கட்சியில் உறுப்பினரல்லாத பொதுமக்களைவிட முன்னுரிமை
பெற்றவர்களாகத் தங்களை எண்ணிக்கொள்கிறார்கள்!
அதாவது, "அரசியல்", குறிப்பாக "ஜனநாயக அரசியல்" என்பது மக்களையும்,
மக்களின் நலன்களையும் மையமாக, (முதலீடாகக்) கொண்டு எழுப்பப்பட்ட
ஸ்தாபனம் ஆகும். ஆனால், அரசியல்வாதிகளோ முதலுக்கே மோசம் விளை
யும்படியாக அனைத்து அரசு வருமானத்தையும் தாங்களே சுருட்டிக்கொண்டு
போய்விடுகின்றனர்! அதாவது, மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப்பணத்தி
லிருந்துகூட மக்களுக்கு கட்டடங்கள், சாலைகள், பாலங்கள், மின்சார
இணைப்புகள் போன்ற அடிப்படைக்கட்டமைப்பு வசதிகளைக்கூட நிறைவேற்று
வதில்லை!
மிக முக்கியமாக, பொதுமக்களும், இளைஞர்களும், சமூக நோக்கும், அக்கறை
யும் கொண்ட அறிவு-ஜீவிகளும் அரசியலில் ஈடுபடவேமுடியாத அளவிற்கான
இரும்புக்கோட்டையாக அரசியல் களமானது, ஏற்கனவே கட்சி-அரசியலில்
தங்களை ஸ்தாபித்துக்கொண்ட தனிநபர்களாலும், கும்பல்களாலும்; பணபலம்,
ஆள்பலம், மற்றும் செல்வாக்கு கொண்டவர்களாலும்; குறிப்பாக, அதிகார
மோகம்கொண்ட சில விபரீத புத்திக்காரர்களாலும் மேலாதிக்கம் செய்யப்பட்டு
வருகிறது! இத்தகைய மேலாதிக்கம், மேலாண்மை, ஜனநாயக விரோதமானது
என்பதில் சந்தேகமில்லை!
நம்முடைய பிரதிநிதித்துவ ஜனநாயக அமைப்பில், மக்களாகிய நாம், நமக்கான
பிரதிநிதிகளை தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுத்து ஆட்சியதிகாரத்தை அவர்கள்
கைகளில் கொடுத்துவிட்டாலே போதும், மற்றவைகளை அவர்கள் பார்த்துக்
கொள்வார்கள்! அதாவது, அரசியல் செய்வது அரசியல்வாதிகளின் வேலை;
அதைப்பற்றி மக்கள் கண்டுகொள்ள வேண்டாம்; மக்களுக்கு அரசியல் என்பது
வேண்டாத வேலை என்பதாக நாம் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம், அதாவது,
ஓரம் கட்டப்பட்டுள்ளோம்!
உண்மையில், அரசியல் என்பது அல்ஜீப்ரா, அல்லது, உயர்-கணிதம் போலக்
கடினமானதல்ல! உண்மையான, மக்களுக்கான, அர்த்தமுள்ள அரசியல்
என்பது எளிய மக்களைப்போலவே எளிமையானது! அரசியலில் ஈடுபட
யாதொரு ராஜ-தந்திரமும், விசேட அரசியல் ஞானமும், தருக்க சாஸ்திரமும்,
எதுவும் வேண்டியதில்லை! சாதாரண மக்களுக்கு அரசியலில் ஆர்வம்
இல்லை என்பதாக, பலமுறை பலராலும், சொல்லப்பட்டு வந்துள்ளது;
ஆனால், போலியான அரசியலில்தான் மக்களுக்கு ஆர்வம் இல்லை என்பது
தான் உண்மையாகும்!
மேலும், தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் அரசியலில், கோணல் புத்திக்
காரர்களும், அதிகாரமோகம் கொண்ட சோம்பேறிகளும், ஒரு மனிதஜீவியாக
வாழ்வது என்றால் என்னவென்பதை சிறிதும் அறியாத மனிதத்தன்மையற்ற
சிலர் மட்டுமே தீவிரமாக அரசியலில் ஈடுபடவிரும்புவர்!
பொதுமக்கள் அரசியலில் பங்குபெறுவது குறித்து பல ஆட்சேபங்கள் தெரிவிக்
கப்படுகின்றன; ஆனால், அந்த ஆட்சேபங்கள் அனைத்தும் அடிப்படையற்ற
வையும், அபத்தமானவையுமாகும்! சாதாரண மக்கள் பொதுவாக புத்திசாலித்
தனத்தில் குறைந்தவர்கள், திறம் குறைந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது;
அதனால், அவர்களால் அரசியலில் திறம்படச் செயல்படமுடியாது என்று சிலர்
ஆட்சேபம் தெரிவிக்கிறார்கள். ஆனால், இந்த ஆட்சேபம் அடிப்படையற்றது.
ஏனெனில், அரசியலாகட்டும், பொருளாதாரமாகட்டும், வேறு எவ்வொரு அம்ச
மாகட்டும், யாவும் எதற்காக இருக்கின்றன? யாவும் வாழ்க்கைக்குச் சேவை
செய்வதற்காகத்தானே? மனிதர்கள் தம் வாழ்க்கையை முழுமையாக வாழ்வ
தற்கு உதவி புரிவதற்கான கருவிகள் தானே அவை? இவ்வுலகின் அதிமேதா
விகள், அறிவுஜீவிகள், தத்துவவாதிகள், சிந்தனையாளர்கள் எனப்படுபவர்களில்
எத்தனை பேர், அடிப்படை உயிர்-வாழ்க்கையைக் கடந்த உயர்-வாழ்க்கையின்
அசலான அர்த்தத்தையும், குறிக்கோளையும், இலக்கையும் புரிந்துகொண்டவர்
களாக இருக்கின்றனர்?
அதி புத்திசாலிகள் என்று தங்களைக் கருதிக்கொள்பவர்களும், பெரும் பணக்
காரர்களும், 'சாதாரண' மனிதர்கள் வாழும் அதே வாழ்க்கையை, மிகவும்
பிறழ்ச்சியான வகையில் அலங்காரமாகவும், ஆடம்பரமாகவும் வாழ்கிறார்கள்,
அவ்வளவு தானே? அதிகப் பணத்தையும், பொருட்களையும் கொண்டு எவரும்
எவரைவிடவும் அதிகமாகவோ, மேலான வகையிலோ வாழ்ந்துவிடமுடியாது!
அதாவது, கோடி கோடியாக பணம் சம்பாதிப்பதும், தேவைக்கு மேலாக பெரும்
செல்வம் சேர்ப்பதும் வாழ்க்கையின் குறிக்கோளாகவோ, இலக்காகவோ
இருக்கமுடியாது!
மக்கள், சாதாரண மக்கள் கௌரவமான வகையில் உயிர்-வாழ்வதற்கு எல்லா
உரிமையும் உள்ளது! யாவற்றுக்கும் மேல் அவர்களிடம் "உழைப்பு" உள்ளது!
ஆம், 'சாதாரண' மக்கள் உண்மையில் சாதாரண மக்கள் அல்ல; அவர்கள்
உழைப்பாளிகள், அவர்கள் பிச்சைக்காரர்களோ, அல்லது அடுத்தவர்களின்
உழைப்பில் வாழும் சோம்பேறிகளோ அல்ல! உண்மையான அறிவும், புத்தி
சாலித்தனமும் பணத்தையும், செல்வத்தையும் சம்பாதிப்பதை உயரிய மதிப்
பீடாக ஒரு போதும் கொள்ளாது! மாறாக, "எல்லோரும் இன்புற்று வாழ
வேண்டும்!" என விரும்புவதுதான் உண்மையான புத்திசாலித்தனமும்,மேலான
அறிவும் ஆகும்!
ஆகவே, அன்றாடம் தங்கள் உழைப்பில் ஆழ்ந்து சமூகத்தின் அனைத்துப்
பொருட்களையும் வளங்களையும் உருவாக்கித் தந்திடும் உழைக்கும் மக்களை
புத்திசாலித்தனத்தில் குறைந்தவர்கள், திறம் குறைந்தவர்கள் என்று சொல்வது
அபத்தமானதாகும். மேலும், அவர்கள் நேரடியாக அரசியலில் பங்குபெற்றுத்
தான் அவர்களுக்குரிய நியாயமான அடிப்படைக் கட்டமைப்புகளை, வசதிகளை
அடைந்தாகவேண்டும் என்பது தேவையற்றது! ஏனெனில் மக்களின் பெயரால்
அமைக்கப்பட்ட ஜனநாயக அரசியல் அமைப்பில், 'சாதாரண' மக்களால் தேர்ந்
தெடுக்கப்படும் அரசியல் பிரதிநிதிகளுக்கு மக்களின் தேவைகளையும், நலன்
களையும் குறிப்பால் அறிந்து தங்களது அரசியல் பணியை முறையாக நிறை
வேற்றுவதை விட வேறு வேலை என்ன இருக்கமுடியும்?
இன்னொரு பொதுவான ஆட்சேபம் என்னவென்றால், பெரும்பாலான மக்கள்
அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை! இன்னும் அவர்கள் வாக்களிப்பதுபற்றிக்
கூட பொருட்படுத்துவதில்லை எனப்படுகிறது! உண்மைதான், ஏனெனில், அம்
மக்களின் நலன்களையும், ஆர்வங்களையும் எவரும் கண்டு கொள்வதில்லை;
அவை பிரதிநிதித்துவம் செய்யப்படுவதில்லை எனும் பட்சத்தில், வாக்குச்
சாவடிக்குச் செல்வது என்பது கூட நேர-வீணடிப்பு என்பதாக அவர்கள் கருது
கின்றனர்! அதேநேரத்தில், ஸ்விட்சர்லாந்து போன்ற பல ஜனநாயக நாடுகளில்
பொதுமக்களின் அரசியல் ஆர்வமும், ஈடுபாடும் அதிக அளவில் உள்ளது!
ஆனால், உண்மையான பிரச்சினை பொதுமக்கள் அரசியலில் ஆர்வம் காட்டு
வதில்லை என்பது அல்ல! மாறாக, மக்களின் நலன்களை, ஆர்வங்களை,
மக்கள் பிரதிநிதிகள் கவனியாமல் இருப்பதுதான்! அதற்குக்காரணம், அரசியல்
பிரதிநிதிகளின் சொந்த நலன்களும், அரசியல்வாதிகளைப் பின்னால் இருந்து
இயக்குகின்ற பிற ஆதிக்கசக்திகளின் நலன்களும், ஆர்வங்களும் முதன்மை
பெறுவதே யாகும்!
இன்று பெரும்பாலான வாக்காளர்கள், தேர்தலில் போட்டியிடும் அரசியல்
கட்சிகளில் இந்தக்கட்சியா, அல்லது அந்தக்கட்சியா என ஒன்றைத் தேர்ந்
தெடுப்பது தான் ஜனநாயகம் என்பதாக கருதிக்கொண்டிருக்கிறார்கள்! ஆனால்,
இப்பிரமை கடந்த பல நூற்றாண்டுகளாக முடியாட்சி, மற்றும் பிரபுத்துவ
ஆட்சிமுறைகளிலிருந்து மாறி வருவதற்கு வழியமைத்துக்கொடுத்தது. ஆனால்,
இன்று அது புதிய ஆதிக்க எந்திரத்தையும், ஒரு புதிய மேட்டுக்குடியையும்
உருவாக்கியுள்ளது; அது எவ்வகையைச் சேர்ந்ததோ, ஆனால், அது ஜனநாயக
பூர்வமானதல்ல! அரசியல்வாதிகள் பெயரளவிற்கு மட்டுமே மக்களின் பிரதி
நிதிகள்; உண்மையில் அவர்கள் ரகசிய ஆதிக்க அமைப்புக்களின் சார்பாக
மக்களிடம் பேரம் பேசும் முகவர்களே யாவர்! ஏனெனில், அந்த ஆதிக்கச்
சக்திகள்தான் அரசியல்வாதிகளை பின்புலத்திலிருந்து ஆதரிப்பவையும், அவர்
களது பதவிகளைப் பாதுகாப்பவையும் ஆகும்!
மேலும், பொதுமக்கள் அதிக அளவில் அரசியலில் ஆர்வம் கொள்வதையும்,
ஈடுபடுவதையும் பதவி வெறியும், அதிகார வெறியும் கொண்ட அரசியல்வாதி
கள் விரும்பவோ, ஊக்குவிக்கவோ செய்வார்கள் என்று நாம் எதிர்பார்ப்பது
அர்த்தமற்றது; அது ஒருபோதும் நிகழாது! ஏனெனில், பொதுமக்களின் தீவிர
அரசியல் பங்கேற்பு என்பது கடைசியில் அரசியல் வாதிகளின் போலியான
முக்கியத்துவத்தை வெகுவாகக் குறைத்துவிடும்!
உண்மையில் இன்று நாம் இருக்கும் ஜனநாயக அமைப்புமுறை எவ்வாறு
நம்மை வந்தடைந்தது என்பதை மக்களாகிய நாம் அறிந்தோமில்லை!
ஜனநாயக அமைப்பை ஸ்தாபிப்பது என்பது ஒரு விஷயம் என்றால், அதைப்
பாதுகாப்பது என்பது இன்னொரு விஷயம் ஆகும்! குறிப்பிட்ட ஒரு இடத்தில்,
காலத்தில், அதிக ஜனநாயகம் இருக்கலாம்; ஆனால், எக்காலத்திலும் சிலர்
அல்லது சில ஸ்தாபன சக்திகள் ஜனநாயகத்தை மட்டுப்படுத்தி தமக்கு அதிக
அதிகாரத்தைப் பெற முயல்வது நிகழும். வேறு சொற்களில் சொன்னால்,
சுதந்திரத்தைப்போலவே ஜனநாயகமும் தொடர்ந்து பாதுகாக்கப்படவும்,
பராமரிக்கப்படவும் வேண்டும்! தொடர்ந்து பராமரிக்கப்படாது விடப்படும்
வீடானது நாளடைவில் சிறிது சிறிதாக வலுவிழந்து, ஒரு நாள் இடிந்து விழக்
கூடும்! அந்த ஒரு நாள் எந்த நாள் என்பது இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொள்ளும்
போது நிச்சயம் தெரியவரும்!
"ஜனநாயக அமைப்பின் பிரஜைகளாகிய மக்கள் அரசியலில் பங்கெடுப்பதன்
மூலம் மட்டுமே அரசியல் பூர்வமாக 'உயிர்ப்புடன்' இருக்கமுடியும். பலருக்கு
(எல்லோருக்கும் அல்ல) அரசியல் பூர்வமாக 'உயிர்ப்புடன்' இருப்பது என்பது
சுவாசிக்க முடிவதற்குச் சமமானது." என்பதாக நூலாசிரியர் இவோ மோஸ்லே
குறிப்பிடுகிறார்! ஆனால், அரசியல் பூர்வமாக 'உயிர்ப்புடன்' இருப்பதைவிட
முதலில் மனிதர்கள் உயிர்-பிழைத்திருக்க வேண்டுமல்லவா? மேலும் மனிதர்
கள் உருவாக்கிய கருவிகளே மனிதர்களை அடிமைப்படுத்துவதாக, அழிப்பதாக
மாறுவதற்கு இடம் தரலாமா? ஆம், எத்தகைய சமூகத்தை நமக்கு நாமே உரு
வாக்கிக்கொள்ள விரும்புகிறோம் என்பதே இப்போதைய அதிமுக்கியத்துவம்
வாய்ந்த கேள்வியாகும்! உண்மையான ஜனநாயக சமூகங்களில், அரசியல்
பங்கெடுப்பு என்பது ஒரு உத்தியோகம் அல்ல; மாறாக, அது ஒரு உரிமையும்,
கடமையும் ஆகும்!
மா.கணேசன்/ நெய்வேலி/ 04-12-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment