Tuesday, 24 February 2026

முகமூடிகளே முகங்களாய்...

 
 




 








என்னைச்சுற்றிலும் நிறைய பரிச்சயமானவர்கள் 
இருக்கிறார்கள் - ஆனால், நண்பர்கள் இல்லை!
பத்து வருடங்கள், ஏன் நாற்பது வருடங்கள் கூட பரிச்சயம்!
உள்ளே ஒன்றைப் பூட்டி, புறத்தே வேறொன்றைக் காட்டி  
பழகுகிறார்கள், செயற்கையும் போலியுமாக!
ஆனால், அவர்களைப் போன்றவர்களுக்கிடையே 
முரண்களின்றி எவ்வாறு பழகுகின்றனர் என்பது 
ஆச்சரியமளிக்கிறது!
*
பரஸ்பரம் ஒருவருடைய முகமூடியை இன்னொருவர் 
அங்கீகரிப்பதும், ஏற்றுக்கொள்வதும், பாராட்டுவதும்
இது என்ன வகை நட்பு என்று புரியவில்லை!
எனக்கு மட்டும் இவர்கள் எல்லோருடனும் முரண்படுவது
எளிதாக எப்படிச் சாத்தியமாகிறது?
*
பொய்மையோ, நேர்மையின்மையோ அல்ல
அவர்களிடம் எனக்கு பிடிக்காதது!
மாறாக, அவர்களுடைய சுய மட்டுப்பாடும், 
மேலோட்டமான தன்மையும் தான்!
அவர்களின் ஆன்மாவின் ஆழத்திலிருந்து வரும் 
ஒரு சொல்லுக்காக நான் காத்திருந்து 
காத்திருந்து சோர்ந்து போனதுதான் மிச்சம்!
அவர்களுக்கு 30, 40, 50, 60, 70, வயதானாலும் 
எவ்வாறு தம்முள்ளே ஆழாமல் தங்கள் சுயத்தின் 
மேலோட்டிலேயே தங்கி வாழ்கிறார்களோ!
தம்முள் ஒரு பொக்கிஷப் பெட்டகம் உள்ளதென்பதை 
அறியாத அவர்கள் "தாங்களும் மனிதர்கள்தான்!" 
என்று கூசாமல் சொல்கிறார்கள்!
தங்களது சிந்தனையற்ற மட்டுப்பாட்டில் சந்தோஷமாக 
வாழ்வதாக எண்ணுகிறார்கள்!
*
எல்லோரும் ஏதாவதொரு வாதத்தினால் 
பீடிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்!
கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம், நாத்திக வாதம், 
ஆத்திகவாதம், மதவாதம், சாதிய வாதம், 
விஞ்ஞானவாதம், சோம்பல்வாதம், சந்தர்ப்பவாதம், 
பிழைப்புவாதம்....போன்ற பலவகை
வாதங்களால் பீடிக்கப்பட்டவர்களை, 
தமக்காகத் தாமே சிந்திக்காதவர்களை, 
எப்படி மனிதர்கள் எனச் சொல்லமுடியும்?

தமது உண்மை அடையாளம் அறியாததால் அவர்கள்
எதையெதையோ பற்றிக்கொண்டு கற்பனையான 
பிரச்சினைகளால் அல்லலுறுகிறார்கள்!
அவர்களிடம் எனக்கு அறவே பிடிக்காதது
கடன் வாங்கிய அறிவைக் கொண்டு தம்மை 
அலங்கரித்துக் கொள்ளும் பா[சா]ங்கு தான்!
அவர்களுடைய கொள்கைகள், கோட்பாடுகள்.. என 
எல்லாமே
ஏன், அவர்களுடைய கனவுகள் கூட 
கடனாக வாங்கியவைதான்!
எங்கும் எப்போதும் எல்லாவிடத்தும் பாசாங்குத்தனம்!
காயம்பட்ட மனம் தமக்கு மட்டுமே தம் வலி தெரியும் என 
வாடி வதங்குகிறது! மேலும்
மற்றவர்கள் தமக்கு எதிராக சதி செய்வதாகக் 
கருதும் ஐயப்பிரமை நோயினால் பிறரை 
பகையாகக் காண்கிறது!
*
நான் முகமூடி என்று குறிப்பிடுவது
வலிந்து, தெரிவு செய்த, போலியாக 
அவர்கள் அணிந்து கொள்ளும்  
ஏதோவொன்றல்ல - மாறாக, 
அவர்களுடைய மட்டுப்பாடான 
தேடல், மற்றும், அனுபவங்கள், கேள்வியற்று
சேகரிக்கப்பட்ட அறிவு ஆகியவற்றினால் 
அமைந்த ஒரு பிம்பத்தையே முகமூடி என்கிறேன்! 
மனிதர்களின் மட்டுப்பாடுகள் யாவும் 
சுய மட்டுப்பாடுகளே!
அவை பிறரால், சமூகச் சூழலால், வரலாற்று ரீதியாக 
அவர்கள் மீது சுமத்தப்படுபவை அல்ல!
வரலாறு, சமூகச் சூழல், சமகாலப் போக்குகள் 
ஆகிய அனைத்தையும் மீறிச் செல்பவர்களே, 
சிந்திப்பவர்களே அசலான மனிதர்களாக எழுகிறார்கள் - 
வள்ளுவர், புத்தர், இயேசு, வள்ளலார், ரமணர்.... 
போன்றோர் இத்தகையோரே!
சமூகம், மற்றும் சமகாலப் போக்குகளுக்கு தகவமைந்து 
வாழ்பவர்கள் தனித்தன்மையற்ற மந்தை-மனிதர்கள்! 
*
என்னைச் சுற்றியுள்ள எல்லோருடனும் பழகுகிறேன் -ஆனால்
சிலரை மட்டுமே நெருங்கிச் செல்கிறேன் - அவர்களில் 
வெகு சிலரே என்னை நெருங்கி வருகிறார்கள்! 
'நட்பு' பற்றிய எனது கோட்பாடு வித்தியாசமானது, 
ஆழமானது! - அது,
வெறும் 'கொடுக்கல்-வாங்கல்' என்பதை 
அடிப்படையாகக் கொண்டதல்ல!
நான் அரட்டைக்கும், மேலோட்டமான 
உரையாடலுக்கும் ஆனவன் அல்ல!
ஆழமான நட்பு உங்களுக்கு கசக்குமெனில், 
மேலோட்டமான நட்பு எனக்கு  உவப்பானதல்ல!
*
மெய்ம்மை-நாட்டம் இல்லாதவர்கள், 
அர்த்தம் பற்றிய கேள்வியற்றவர்கள்,
எனது நட்புக்கு பாத்திரர் அல்ல! 
என்னுடன் முரண்படுவது எளிது! 
ஏனெனில், நீங்கள் உங்களை நெருங்கிக் காண்பதைவிட
நான் உங்களை அதிகம் நெருங்கிக் காண்கிறேன்!
நீங்கள் உங்கள் அகச் சுயத்தை தழுவாத வரை
நீங்கள் அரை-மனிதர்களே!
*
உங்கள் உள்ளுறையும் மனிதத்திற்கு நீங்கள் 
விழிக்காதது கண்டு நான் உங்களை இடித்து எழுப்புகிறேன்!
ஆனால், நீங்களோ மிகவும் சரியாக, முழுமையாக,
குறையற்று இருப்பதாகவும் -காரணமின்றி
நான் உங்களைச் சாடுவதாகவும் எண்ணி என்மீது 
கோபம் கொண்டு முரண்படுகிறீர்கள்! -ஆனால், 
உங்களுக்கும், உண்மையான உங்களுக்கும் உள்ள 
இடைவெளியைக் கண்டுதான் 
உண்மையில் நான் வருந்துகிறேன்!
***
குறிப்பு:
அகச் சுயம் = ஆன்மா, முழுமை, மனிதம்
ஆம், மனிதம், அன்பு, அறம் ஆகியவை மேற்புறச் சுயத்தின்
கூறுகள் அல்ல!  
******
மா.கணேசன்/03.01.2026/ நெய்வேலி
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>

No comments:

Post a Comment

நடுவிலே நடனமாடும் அர்த்தம்!

      பிரபஞ்சத்தின் தொடக்கம் ஒரு புரியாத புதிர்,  அதன் முடிவும் ஒரு புரியாத புதிரே!  இரண்டுக்கும் நடுவே நடனமாடுகிறது அர்த்தம்! ✨            ...