
முக நூல்வாசிகளின் உலகம் (2)
< உளவியல் பக்கங்கள்>
____சாதாரணம்,படு சாதாரணம் !___
ஜெர்மானிய தத்துவஞானி நியட்சே மனித சமுதாயத்தைப் பார்த்து
"மனிதத்தனம்,படு மனிதத்தனம்" என்று இகழ்ந்து கூறினார். அதே
போல், அவர் இன்றைய முக நூல்வாசிகளைப் பார்த்தால், "சாதாரணம்,
படுசாதாரணம் !"என்று சொல்லக்கூடும்! முக நூலில் பரவலாக பகிர்ந்து
கொள்ளப்படும் எல்லோருக்கும் பிடித்தமான விஷயங்கள் எவையெனில்
* சொந்த பந்தங்கள், குடும்ப நிகழ்வுகள்,சடங்குகள் பற்றிய
செய்திகள்,புகைப்படங்கள், . .
* நண்பர்களுக்கிடையேயான பலவகைப்பட்ட பரிமாற்றங்கள்
* உடல் ஆரோக்கியம் குறித்த குறிப்புகள்
* நகைச்சுவைத் துணுக்குகள், புகைப்படங்கள், காணொளிகள், . .
* புதிய புதிய விஷயங்கள், செய்திகள், விபரங்கள்
* சுவாரசியமான விஷயங்கள்
* கட்சி சார்புடைய அரசியல் விவகாரங்கள்,கருத்துக்கள்,பார்வைகளை
முன் வைத்தல்,பரப்புதல்
போன்ற வைகளையே திரும்பத்திரும்ப அஞ்சலிடுதல், பகிர்ந்து கொள்ளுதல்
என்பது ஒரு 'பெரிய' ஆனால் மூடிய வட்டத்தினுள் வலம் வந்து கொண்டிருக்கிறோம்
என்பது தெரியாமலேயே சுற்றிக்கொண்டிருக்கிறோம் என்பது தான் நமது
மட்டுப்பாடு. இதன் அர்த்தம் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்கிறோம்
என்பது தான்.
முடிவேயில்லாமல் பல்வேறு கோணங்களில் ஒரே தளத்து விஷயங்களையே
அனுபவங்களையே நாம் பரிமாறிக்கொள்கிறோம். எவ்வொரு விஷயத்திலும்
ஆழமாகச் செல்லாமல் நுனிப்புல் மேய்ந்தவாறு வெறும் செய்திகளை,
தகவல் துணுக்குகளை, புகைப்படங்களை, . . பரிமாறிக்கொண்டு செல்கிறோம்.
"சாதாரணம், படுசாதாரணம்" என்பதையே வேறு சொற்களில் சொன்னால்,
"மேலோட்டம்,படு மேலோட்டம்" என்றும் சொல்லலாம்.
ஒரே விஷயத்தை பல்வேறு மாற்றங்களுடன் திரும்பத்திரும்ப செய்து
கொண்டிருக்கும் வழிமுறையில், ஒரு கட்டத்தில் அலுப்பும் சலிப்பும்
ஏற்பட்டுவிடுவது தவிர்க்கவியலாததால், பலர் முக நூலிலிருந்து வெளியேறுவதும்;
விஷயம் அறியாத புதியவர்கள் முக நூலில் இணைவதும் நிகழ்கின்றன.
____சமூக வலைத்தளமா? தன்முனைப்புகளின் வலைத்தளமா?____
முக நூலானது சமூக வலைத்தளம் என்கிற பெயரைக் கொண்டிருந்தாலும்
அதன் பரவலான உலகம் தழுவிய வெற்றிக்குக் காரணம் அது பரந்த சமுகத்துடன்
தொடர்பு கொள்வதற்கு உதவியாக இருக்கிறது என்பதல்ல. மாறாக, அது
ஒவ்வொருவரின் அகந்தைக்கும், தன்முனைப்புக்கும் அங்கீகாரமும், இடமும்,
வெளியும் அளிப்பதே ஆகும். ஆம், நமது அகந்தையை வெளிக்காட்டுவதற்கு
இடமளிக்காத எவ்வொரு நபரையும், இடத்தையும் நாம் விரும்ப மாட்டோம் !
முக நூல் வழியாக நாம் எதை, யாரைத் தேடுகிறோம் என்றால், நமக்குப்
பிடித்தமான விஷயங்களையும், நபர்களையும் தான் தேடுகிறோம். அதாவது,
ஒத்த மனத்தைக் கொண்டவர்களையே (Like-minded people),ஒத்த
கருத்துடையவர்களையே தேடுகிறோம்! இதில் என்ன தவறு இருக்கமுடியும்
என்பதாக நாம் எண்ணலாம். ஆனால், ஒத்த மனம் கொண்ட இரண்டு நபர்கள்
கூட அதிக தூரம் சேர்ந்து பயணிக்க முடியாது! ஏனெனில், ஒத்த, ஒருமித்த
மனம் கொண்ட,கருத்துடைய . . . என்பதெல்லாம் மிகத் தற்காலிகமானவை !
ஒரு வங்கியை நான்கு பேர் சேர்ந்து கொள்ளையடிக்கத் திட்டமிடுவதும் ஒத்த
மனம் கொண்ட விஷயம் தான் !
ஆகவே, எது வேண்டுமெனில், "ஒத்த மனம் கொண்ட தன்மை" (Like-minded
ness) அல்ல! மாறாக, "சரியான-மனம் கொண்ட தன்மை" (Right-mindedness)
தான் அகும்.
ஒத்த மனம் அல்லது ஒத்த கருத்துடைய ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் பிற
குழுவிற்கு எதிரான, பாரபட்சமான நிலைபாடுகளையே எடுப்பர். மேலும்,
தங்களது செயல்களை எப்போதும் நியாயப்படுத்தியே பேசுவர்.
ஆக, முக நூல் வழியாக நாம் நண்பர்களை, பிறரை, ஒத்த கருத்துடையவர்களைத்
தேடினாலும் அவர்களின் வழியே நாம் உண்மையில் தேடுவது நம்மையே.
ஏனெனில், நமக்குப்பிடித்தமான விஷயங்களை,நபர்களைத் தேடிக்கண்டடைந்தாலும்
பரஸ்பரம் பிடித்தமான அத்துனை விஷயங்களையும் பரிமாறிக்கொண்டாலும்
எவரும்,எவருடனும் எல்லாவிஷயங்களிலும் பொருந்தி வருவது இயலாத காரியமாகும்.
ஆகவே, ஒருவர் அங்கே, இங்கே ; அவர் ,இவர் எனச்சுற்றி முடிவில் தம்மிடமே
வந்தடைகிறார் ! ஏனெனில், எல்லா விஷயங்களிலும்,அம்சங்களிலும் தனக்குப்
பொருத்தமாயிருப்பது , ஒத்துப்போவது தனக்குத் தான் மட்டுமே! இதுவும் ஒரு
மாயையே! மட்டுப்பாடே. ஏனெனில், எவரும் தனக்குத் தானே அவ்வளவு எளிதாக
பொருத்தமாகவும், சமமாகவும் வளர்வதில்லை.
ஏனெனில், எவரும் தம்முடைய அகந்தை நிலையில் தனக்குத் தானே உரைகல்லாக
இருக்க முடியாது. உண்மை மட்டுமே யாவருக்கும் பொதுவான உரைகல் ஆகும்.
"என் வழி", "தனி வழி", "நான் நானாக இருக்கிறேன்" என்றெல்லாம் ஒருவர்
சொல்லிக்கொண்டு திரியலாம். ஆனால், உண்மையிலேயே தன்னையறிந்தவனின்
வழியை பிறரால் அறிந்து கொள்ள இயலாது. ஆக, ஒருவர் தன்னையறியும் வரை
அவரது வழிகள் அனைத்தும் தவறானவையே, மட்டுப்பாடானவையே ! மேலும்,
ஒரு அகந்தை தனக்கும்,அல்லது இன்னொரு அகந்தைக்கும் முன் மாதிரியாகவோ,
வழிகாட்டியாகவோ விளங்க முடியாது.
மேலும், நமக்குப் பிடித்தவிஷயங்களைத் தாண்டி 'நாம்' என்பது இல்லை.' நான்'
அல்லது 'நாம்' என்பது முறையே 'எனக்கு' அல்லது 'நமக்கு'ப் பிடித்த விஷயங்களால்
கட்டுப்படுத்தப்பட்ட அல்லது கட்டிப்போடப்பட்ட விலங்கு போன்றதே!
முக நூல், ட்விட்டர் போன்ற சமுக வலைத்தளங்களின் வழியே நாம் சமுகத்தை,
பிறரை, நண்பர்களைச் சந்திக்கிறோமோ, தொடர்புகொள்கிறோமோ இல்லையோ
நம்மைத்தான் அவர்களில் தேடுகிறோம், காண்கிறோம்! சமுகத்தை நோக்கிய
சாளரமாக (சன்னலாக) திறக்கப்பட்ட ஒரு ஒளிஊடுருவும் ஊடகமான முக நூலானது
நம் கைகளில் நம் முகத்தைக் காட்டும் மாயக் கண்ணாடியாக மாறிவிடுவதில்
ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஆனால், 'கடவுள்' உள்பட எல்லாவற்றையும் நாம் நம்
சாயலில் மாற்றிவிடுகிறோம் என்பது தான் நம் அகந்தையின் அயோக்கியத்தனம்.
முக நூலின் மீது நாம் காட்டும் ஆர்வம் அலாதியானது. ஏனெனில், அது நம் மீது
நாம் காட்டும் ஆர்வமேதவிர வேறென்ன? கிரேக்க புராணத்தில் வருகிற நார்சிஸஸ்
(Narcissus) எனும் அழகிய இளைஞன் ஒருவன் நீரோடையில் தனது பிம்பத்தைக்
கண்டுஅதன் மீது காதல் கொண்டு நீரோடையில் பாய்ந்து மாண்டு போனதாக ஒரு
கதை உள்ளது. அந்த 'நார்சிஸஸ்' போலத்தான் நாமும் நம் பிம்பத்தை முக நூலில்
கண்டு நம் மீதே காதல் கொண்டு முக நூலுக்குள் மூழ்கிக் கிடக்கிறோம்.
முக நூலானது நம் ஒவ்வொருவரின் அகந்தைக்கும் சமமான வெளிப்பாட்டு வெளியை
அளிப்பதனால் அது தன்னை ஸ்திரமாகவும், வெற்றிகரமாகவும் நிறுவிக்கொண்டு
விட்டது எனலாம் ! அதாவது நம்முடைய பலவீனம் தான் முக நூலின் பலமும்,
வெற்றியும் ஆகும்.
முக நூலானது பல வெளிப்படையான சாதகங்களையும், அனுகூலங்களையும்
நமக்கு அளிப்பதாயுள்ளது :
* மிகச் சுலபமாக, சிரமப்படாமல் நாம் நம் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும்
தொடர்பு கொள்ள முடியும்.
* செய்திகளை, தகவல்களை ஒரே நொடியில் பலருக்கும் அஞ்சலிட்டுப் பகிர்ந்து
கொள்ள முடியும்.
* முக நூலின் வழியே நாம் அனுப்புகின்றதும், பெறுகின்றதுமான அஞ்சல்கள்
(posts) வழக்கமாக மிகச் சுருக்கமானவை - தட்டச்சு செய்யவும் சரி,
வாசிக்கவும் சரி.
* நம்முள் இருக்கும் தகவல்/தரவு வேட்டைக்காரனுக்கு முக நூல் பொருத்தமான
மிட்டாய்க்கடையாக விளங்குகிறது எனலாம்.
முக நூல் நம்மை ஈர்ப்பதற்கான பல காரணங்களில் ஒன்று அது நாம் நமது சலிப்பு
தரும் சாதாரண அன்றாட வாழ்க்கைக்கோளத்திலிருந்து தற்காலிகமாக தப்பிப்பதற்கு
உதவுகிறது என்பதுடன் மிகப்பெரிய பரந்த உலகின் ஒரு பகுதியாக நாம் இணைந்திருப்ப
தான ஒரு பிரமையைத் தோற்றுவிக்கிறது.
இவ்வாறு முக நூலானது பலவித பயன்களையும் அனுகூலங்களையும்
கொண்டிருப்பினும் இந்த அனுகூலங்களின் மறுபக்கங்கள் குறித்தும் நாம்
அறிவது அவசியம்.
முக நூலானது பரந்த சமுகத்தை நோக்கியதாக பல சன்னல்களை திறந்து
விட்டதன் உடன்-விளைவாக, நாம் வெளியே செல்லவேண்டிய தேவையை நீக்கி
நம் அறை அல்லது வீட்டுக்கதவுகளை இழுத்து மூடிவிட்டது எனலாம்.
உண்மையான சமுக அக்கறையும், உறவும், சகமனிதர்களுடனான நேரடியான
பழகுதலும் இல்லாமலேயே நடத்தப்படும் பாசாங்குத்தனமான கருத்து மற்றும்
தகவல் பரிவர்த்தனை தான் சமுக வலைத்தளங்கள் மூலம் நிகழ்ந்தேறி வருகின்றன.
முக்கியமாக, முக நூலானது எவ்வொரு விஷயத்திற்குள்ளும் ஆழமாகச் செல்லவிடாமல்
நுனிப்புல் மேய்ந்தவாறு செல்லவும்; பல்வேறு செய்திகளையும், தகவல்களையும்.
புகைப்படங்களையும்; புதுமை என்கிற பெயரில் துண்டு துண்டாக பல தரப்பட்ட
விஷயங்களையும் கண்டுகொள்ளுமாறும் செய்து நம் கவனத்தை சிதறடித்து
விடுகிறது. நாமும், அதே போன்ற ஆழமற்ற விஷயங்களையும் செய்திகளையுமே
அஞ்ச லிடவும், பகிரவும் செய்கிறோம். இது மானிட உளவியல் வளர்ச்சியில் பெரும்
பின்னடைவை ஏற்படுத்தும் கேடாகும்.
அதாவது, தினம் தினம் முக நூலில் நாம் புதிது புதிதாக பல்வேறு விஷயங்களை
செய்திகளை தகவல்களை, புகைப்படங்களை,,காணொளிகளை, . .காண்கிறோம்,
நுகர்கிறோம்,; பிறருடன் பகிரவும் செய்கிறோம்; எல்லாமே ஒரு கலவையாக,
அடியோட்டமான ஒருங்கிணைப்பு ஏதுமில்லாத நிலையில் நமது சிந்தனை
சிதறடிக்கப்படுகிறது! எதை எடுத்துக்கொள்வது, எதை விடுவது எனும் குழப்பத்தில்
நமது விருப்பத்திற்கேற்ப சிலவற்றை தேர்வு செய்கிறோம். இவ்வழியே நாம் நமது
பழைய சுயத்தில், அதே நிலையில், தன்மையில் நீடிக்கிறோம் வலுப்பெறுகிறோமே
தவிர நமது சிந்தனையில், உணர்வில், யாதொரு வளர்ச்சியும், மாற்றமும்
ஏற்படுவதில்லை !
மேலும், உண்மையிலேயே கனமாகவும், ஆழமாகவும் சிந்திப்பவர்கள் கூட
முக நூலுக்குள் பிரவேசித்த பிறகு 'முக நூல்-தேசத்திற்கு' ப் பொருந்தும் வகையில்
தங்களை சுருக்கிக் கொள்வதாகத் தெரிகிறது! மொத்தத்தில், முக நூல் நமக்கு
அனுமதித்திடும், வழங்கிடும் போலியான அங்கீகாரமும், சுதந்திரமும், சமத்துவமும்,
இயங்கு-வெளியும், . . . நம்மை வளரவிடாது என்பதாகவே தெரிகிறது ! ஏனெனில்,
முக நூலானது நம் ஒவ்வொருவரையும் நாம் எப்படி உள்ளோமோ அப்படியே
அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதால், அதற்குமேல் நாம் நமது உள்ளத்தில், உணர்வில்,
சிந்தனையில், பார்வையில், புரிதலில் வளர வேண்டும் எனும் தேவையை அது
தேவையற்றதாக ஆக்கிவிடுகிறது!
அடுத்து,முக நூலிலும் சரி, பிற சமுக வலைத்தளங்களிலும் சரி, வலம் வருகின்ற
பெரும்பான்மையான அஞ்சல்கள் -- தகவல்கள், செய்திகள், கருத்துகள், சொந்த
விஷயங்கள்,புகைப்படங்கள், காணொளிகள்,.... யாவும் செயற்கையாக ஒப்பனை
செய்யப்பட்டு, தங்களது அவலட்சணமான முகங்களை, பக்கங்களை திரையிட்டு
மூடிவிட்டு நாசூக்காகத் தெரிகின்ற பக்கங்களை வெளிப்படுத்துவதுதான்
நிகழ்ந்து வருகிறது!
முக நூலைப்பொறுத்த வரை அதற்கு தனி நபர்களை மட்டுமே கணக்கில்
கொள்ளத்தெரியும்; "மனிதனை" அதற்குத் தெரியாது. ஒருவகையில் அதற்கு
எவ்வித பாரபட்சமும் கிடையாது; எவ்வித மதிப்பிடலையும் அது செய்யாது. ஆகவே
அது ஒவ்வொருவரையும்,எல்லோரையும் ஒன்று போலவே பாவிக்கும் வழிமுறையில்
நம்மை அது அப்படியேஅங்கீகரித்து ஏற்றுக்கொள்கிறது. அது ஒவ்வொருவருக்கும்
எல்லோருக்கும் பேச்சுரிமையை, வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை வழங்குகிறது.
ஆகவே, நாம் ஒவ்வொருவரும் 'பூரணத்துவம்' அடைந்த அற்புத ஜீவியாக நம்மை
எண்ணிக்கொள்கிறோம் ! விளைவு : சிறு பிள்ளைத்தனமான வெளிப்பாடுகளையே
நாம் அஞ்சலிடுகிறோம், பரஸ்பரம் பகிர்ந்து கொள்கிறோம்!
முக நூல் நமக்கு வழங்கியுள்ள பேச்சுரிமை அல்லது வெளிப்பாட்டு சுதந்திரம்
போலியானது என்பதை நாம் புரிந்து கொள்வது அவசரமான அவசியமாகும். ஏனெனில்,
முக நூல் நிறுவனத்தை உருவாக்கியவர்களின் நோக்கம் வெறுமனே வியாபாரம்,
இலாபம் மட்டுமே என்பதாக நாம் முடிவு கட்டிவிடமுடியாது.
"உங்கள் வாழ்க்கையில் இடம்பெறுபவர்களுடன் நீங்கள் தொடர்பு
கொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் முக நூல் உதவுகிறது "
எனும் இந்த முக நூல் நிறுவனத்தாரின் ஊக்கமொழி வெறும் முகப்புத் தோற்றமாகக்
கூட இருக்கலாம்.
____முக நூல்-தேசம்_____
இந்திய தேசத்தின் தற்போதைய மக்கள் தொகை 131 கோடிகள்; சீன தேசத்தின்
மக்கள் தொகை 138 கோடிகள். சமீபத்திய ஒரு ஆய்வுக்கணக்கின் படி(zephoria.com)
முக நூல் தேசத்தின் மக்கள் தொகை 149 கோடிகள் ஆகும். மேலும், ஒவ்வொரு
வினாடிக்கும் 5 பேர்கள் முக நூல் கணக்கை தொடங்கி இணைந்த வண்ணம்
உள்ளனர் எனப்படுகிறது. இப்படியே தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில்
உலக மக்கள் தொகை மொத்தமும் 'முக நூல்-தேசத்தில்' இணைந்து விடக்கூடும்.
ஒரு வேளை வருங்காலத்தில் முக நூல் நிறுவனத்தினர் "வலைவெளி" (cyber-space)
வழியாக உலகைக் கட்டுப்படுத்தக்கூடும்! முதலில் உளவியல் ரீதியாகவும்; அடுத்த
கட்டமாக பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாகவும் (ஏற்கனவே சமுக ரீதியாக
நம்மை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர்) நேரடியாகவே நம்மை, உலகை
ஆளத்தொடங்கிடலாம்! ஆகவே, அனைத்துசமுக வலைத்தளங்கள் குறித்தும், பிற
செயலிகள் குறித்தும் நாம் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.
___அர்த்தமறியத்தவறிய வாழ்வின் வடிகால்____
பொதுவாகவும் பரவலாகவும் முக நூலை நாம் மிகக் குறுகிய, மேலோட்டமான
நோக்கங்களுக்காகவே பயன் படுத்துகிறோம்.
* சுமையாகக் கனக்கும் நம் மட்டுப்பாடான சுயத்தை மறந்திருக்க முக நூல்
மிகச் சௌகரியமான வடிகாலாய் உதவுகிறது- மது அல்லது போதைப்பழக்கம்
போல
* நம்மில் பலர் தமது மேதாவிலாசத்தை பிறருக்குக் காட்ட பொருத்தமான
ஊடகமாக முக நூல் உள்ளது.
* ஏதாவதொரு அஞ்சலுக்கு பதிலுரைக்கும் அல்லது கருத்து சொல்லும் புனிதப்
பணியை மேற்கொள்ளும் போது நாம் திடீரென கவிஞர்களாகவும் , சீரிய
சிந்தனையாளர்களாகவும் அவதாரம் எடுத்து விடுகிறோம் ! ஒரு போதும் நின்று
நிதானித்து சிந்தித்துக் காணாத விஷயங்களை, குறிப்பாக 'வாழ்க்கை' பற்றி
பேசும் போது திடீரென நாம் அனைவருமே தத்துவ ஞானிகளாக மாறி விடுகிறோம்!
* முக நூல் வாசிகளின் ஒரு பொதுவான திருப்பணி என்னவென்றால், இங்கு
ஒவ்வொருவருமே, எல்லோருமே அறவியலாளராக, நன்னெறி போதனையாளராகத்
திகழ்கிறோம் என்பதே. நன்னெறிகளைக் கடைபிடிப்பதைப் பற்றியும், அன்பைப்
பற்றியும், நேர்மை பற்றியும், ஒழுக்கம் பற்றியும் நிறையப் பேசுகிறோம், பகிர்ந்து
கொள்கிறோம் ! நாம் ஒவ்வொருவரும் பிறரையும்,சமுகத்தையும், உலகையும்
மாற்றிவிட விரும்புகிறோம்- நம்மைத்தவிர !
* முக்கியமாக, நாம் நமது அபிலாஷைகளை,ஆதங்கங்களை; சமுக, பொருளாதார
அரசியல் ரீதியாக நாம் ஏமாற்றப்படுவதும், வஞ்சிக்கப்படுவதும், ஏய்த்து மேய்க்கப்படு
வதும், சுரண்டப்படுவதும்; அவை குறித்து நம்மால் பெரிதாக எதுவும் செய்ய இயலாத
நிலையில் அவை பற்றி நமக்குள் பேசிப்பேசி பகிர்ந்து கொள்ளவும்; நமது ஆதங்கத்தை
பொருமல்களை, வெறுப்பை, எதிர்ப்பை, கோபத்தை இயலாமையை வெளிப்படுத்திக்
கொண்டு ஆசுவாசப் படுவதற்கும் "வடிகாலாக" உதவுகின்றதொரு ஊடகம் முக நூல்
போல் வேறு எதுவும் இல்லை! வாழ்க முக நூல்! வளர்க அதன் புகழ்!
___விழித்துக்கொள்வோமாக!____
முக நூல் நமக்கு வழங்கிடும் 'குடியுரிமை' மாயையானது ! ஏனெனில், முக நூல்
தேசத்திலேயே நாம் நிரந்தரமாகத் தங்கி வாழ்ந்திட முடியாது! அதை ஒரு நிஜ உலகமெனக்
கருதி அதிலேயே மூழ்கிக் கிடப்பதனால் தான் 'முக நூல் போதைப்பழக்கம்' என்கிற
பிரச்சினை எழுகிறது. முக நூல் நமக்கு வழங்கிடும் சுதந்திரம், கருத்துரிமை, சமத்துவம்,
அங்கீகாரம், யாவும் மாயையானவை ! எவ்வாறெனில், இவை யாவும் முக நூலில்
உங்களுக்குரிய பக்கங்களுக்குள் மட்டுமே செல்லுபடியாகும். முக நூலில் இணைவதும்,
அதனுள் நீங்கள் என்னென்ன செய்கிறீர்கள், எவ்வாறெல்லாம் அதை பயன் படுத்து
கிறீர்கள் என்பவை யாவும் உங்களுடைய பொறுப்பு ஆகும் ! உங்களைப் பற்றி யாதொரு
பொறுப்பும் முக நூலுக்குக் கிடையாது. உங்கள் சொந்த விபரங்களை, தகவல்களை
வெளியேயிருந்து வேறு எவரும் பயன் படுத்த இடம்தராமல் பாதுகாப்பது மட்டுமே
தங்களுடைய பொறுப்பு என்று முக நூல் நிறுவனத்தார் சொன்னாலும் நம்மைப் பற்றிய
சொந்த விபரங்களை அவர்கள் பயன் படுத்துவதை நாம் தடுக்க இயலாது !
முக நூலை நாம் ஒவ்வொருவரும் பயன் படுத்தும் வழிகளில்,நமது நோக்கங்களில்,
நாம் அதற்கு அடிமையாகிப் போவதும், முக நூலின் வழியாக நம்மை ஈர்க்கும் ஏதாவதொரு
விஷயம், அல்லது கோட்பாட்டிற்கு அடிமையாகிப் போவதும்,அல்லது முக நூல் எனும்
கண்ணாடியில் நம்மை நாமே கண்டு , நம் மீதே காதல் கொண்டு (Narcissism),
நமக்கு நாமே அடிமையாகிப்போவதும், எது வேண்டுமானாலும் நிகழலாம்.
மேலும், அதிக நேரம் முக நூலுக்குள் மூழ்கிக் கிடப்பது மட்டுமே பிரச்சினை
என்பதில்லை. மிகக் குறைந்த நேரம் மட்டுமே அல்லது அவ்வப்போது ஒருவர்
முக நூலுக்குள் சென்று வந்தாலும் அவரவரது நோக்கங்களைப் பொருத்தே பிரச்சினையின்
தன்மையும்,ஆழமும் அமைவதாயிருக்கும். ஆனால், பாதிப்பும்,சேதமும் ஏற்கனவே
ஏற்பட்டாகிவிட்டது. ஏனெனில், முக நூலானாது அதனடிப்படையிலேயே
தனி நபர்களிடம் நோய்க் கூறான சுயக் காதலை ஊக்குவிக்கும், வளர்க்கும் கூறுகளைக்
கொண்டதாயுள்ளது !
முக நூலைப் பயன்படுத்துகிற நாம், நிஜ உலகில், பூமியில் வேர் கொண்டவர்களாகவும்;
மானுட வாழ்க்கையின் அசலான நோக்கம், குறிக்கோள், அர்த்தம், உண்மை மற்றும் இலக்கு
ஆகியவற்றையெல்லாம் ஆழமாக அறிகிற விசாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களாகவும்;
முக நூல் உள்பட பிறவனைத்தையும் அசலான வாழ்க்கைக்குச் சேவை செய்யும்
வகையில் அமைத்துக்கொண்டு அவற்றைப்பயன் கொள்பவராகவும் இருத்தல் நல்லது.
"வாழ்க்கை" எனும் புதிர் நூலை வாசிக்கவும், வாசித்ததைச் சிந்திக்கவும்,புரிந்து கொள்ளவும்
போதிய நேரத்தை ஒதுக்குங்கள். வாழ்க்கை-நூலில் 'முக நூல்' என்பது ஒரு பக்கம் மட்டுமே!