
புல் தரையில் இருக்கிறது,தரை புல்லைச் சார்ந்திருக்கிறது! பூமியும்,சூரிய மண்டலமும்,
பிரபஞ்சமும் அப்புல்லைச் சார்ந்தே இருக்கிறது! புல்லைப் பிடுங்கினால் பிரபஞ்சம்
நெடுகிலும் அதிர்வுகள் அலையெனப் பரவும். புல் புழுவைச் சார்ந்திருக்கிறது,புழு
பறவையைச் சார்ந்திருக்கிறது, பறவை வேட்டைக்காரனைச் சார்ந்தும்,வேட்டைக்காரன்
மனிதனைச் சார்ந்தும் இருக்கிறான். எல்லாம் மனிதனைச்சார்ந்தே இருக்கின்றன!
மனிதன் தன் உணர்வைச் சார்ந்திருக்கிறான், மனித உணர்வு இறுதிப் பேருணர்வைச்
சார்ந்திருக்கிறது. ஆகவே, மனிதா, நீ பேருணர்வைச் சேர்ந்திடு!
புல் எங்கு முளைத்ததோ அங்கேயே வாழும் உரிமையை எவரும் அதற்கு வழங்கத்
தேவையில்லை! அவ்வுரிமையை மறுக்க எம்மன்னனுக்கும் அதிகாரம் இல்லை !
புற்களை கால் நடைகள் மேய்ந்திடலாம். மேய, மேய மீண்டும் மீண்டும் புற்கள்
துளிர்த்திடும். மனிதன் புல்லை வேரோடு பிடுங்கி எறிந்திடலாம். ஆனால், புல்லிடம்
எதிர்ப்புணர்வு சிறிதும் இல்லை. ஏனெனில் அதனிடம் அச்சவுணர்வு சிறிதும் இல்லை!
புல்லின் மேன்மை, அது தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பற்று
இருப்பதிலேயே அடங்கியுள்ளது !
எதிர்ப்புணர்வு காட்டாத புல்லைப் பிடுங்கவும் அதிகாரமற்ற நவ நாகரிக அறிவீனர்களே
இயற்கையோடியைந்த பழங்குடிகள்,வனவாசிகள், ஆதிவாசிகளை புலம்பெயர்த்தழிப்பதற்கு
உமக்கேது அதிகாரம் ? உமது அக்கிரமங்களால் சூடேறும் புவிக்கோளம் உங்களை
உக்கிரத்துடன் பொசுக்கிச் சாம்பலாக்கிடும் காலம் வெகு தொலைவிலில்லை!
* * *
மீன் கடலில் உள்ளது. மீனை கடலிலிருந்து எடுக்கலாம், ஆனால் மீனும் கடலும் பிரிக்க
முடியாதது கடலும் பூமியும் பிரிக்கமுடியாதது. அவ்வாறே, பூமியும் விசும்பும் சூரிய
மண்டலமும் நட்சத்திரங்களும் பால்வீதியும் மொத்தப்பிரபஞ்சமும் - எதையும்
எதனிடமிருந்தும் பிரிக்க முடியாது.
தனித்தனியே தெரியும் தோற்றம் ஒருமையை மறைக்கும் கவனச்சிதறலே!
யாவும் ஒன்றை நோக்கியே சுட்டுகின்றன! யாவும் அந்த ஒருமையை எட்டும்
ஏணியின் படிகளாயின!
ஒவ்வொரு படியும் மேலுயரும் தொடர்- இருப்பில் ஒரு தனியிருப்பு. ஓர் துகள்,புழு,
பூச்சி,பறவை,எலி, புலி, வானரம்,மனிதன் எதுவும் தனித்து இல்லை; தனக்காகவும்
இல்லை! அவை ஒவ்வொன்றும் முழு இருப்பை எட்டிட முயற்ச்சிக்கும் தொடர்-இருப்பின்
ஒரு கண்ணி! (( 3.02.2016 ))
* * * * *
No comments:
Post a Comment