Saturday, 13 February 2016

சமத்துவம்


நானும் நீயும் சமம் என்று சொல்வது,நாயும் பூனையும் சமம் என்று சொல்வதைப் போல    
அபத்தமானது. நாயும்  நாயும் சமம் என்று சொல்வதும் பொருத்தமற்றதே. ஏனெனில்,
இரண்டும் சமம் எனும் போது இரண்டு எதற்கு - ஒன்று போதுமே ? உங்களைப் பார்த்த
வுடன் வாலை ஆட்டும் பழகிய நாயும், உங்களைப் பார்த்தவுடன் குரைக்கும் தெரு நாயும்
சமமாக முடியுமா ? உண்மையுணர்ந்தவனையும்,  "அப்படியென்றால் ?"எனக் கேட்பவனையும்
சமமாக "மனிதன்" என்றழைக்க முடியுமா ?

நானும், நீயும் சமமில்லை; நாயும் பூனையும் சமமில்லை; இன்னும் நாயும் நாயும் சமமில்லை. நாய்-
ஒவ்வொரு நாயும் தனித்துவமானது;ஒன்றுக்கொன்று மாற்றாகாது !மனிதனும் அப்படித்தான்,
ஆனால்,ஒவ்வொரு மனிதனும் தன் தனித்தன்மையை தன்னுள்ளிருந்து கன்டு வெளிக்கொணர
வேன்டும்.

நாயோ, பூனையோ , எதுவும் எதற்கும் சமமாக இருக்கவேண்டிய தேவை என்ன இருக்கிறது?
மனிதனும், எவரும் எவருக்கும் சமமாக இருக்கவேண்டியதில்லை.

நாய், பூனை, நான் , நீ , . . . . அது அது, அது அதற்கும், நான் எனக்கும், நீ உனக்கும் சமமாக இருத்தலே
நலம் -இதுவே உண்மையான சமத்துவம்.

"எல்லா மனிதர்களும் எல்லா நிலைகளிலும் சமமானவர்கள்" என்பது சமத்துவமாகாது.ஏனெனில்,
அது உண்மைக்கு மாறானது. எல்லா மனிதர்களையும் ஒரே மட்டத்திற்கு கத்தரிப்பதுஅல்லது நீட்டு
வது செயற்கையானது.

ஒரு கூழாங்கல், அது எப்போதும் அதற்குச் சமமாகவே விளங்குகிறது. அதனருகில் உள்ள
இன்னொரு கூழாங்கல்லும் அப்படியே. இவ்வாறே இயற்கையில் ஒவ்வொன்றும் தமக்குத்தாமே சமமாகவே
விளங்குகிறது, மனிதனைத்தவிர! ஏனெனில், மனிதன் மட்டும் தனக்குத்தானே சமமாக உயர்ந்தாக
வேண்டும். தனது இயற்கையான நிலையில் தொடரும் வரையில் மனிதன் மனிதனாவதில்லை -
அவன் இன்னுமொரு விலங்காகவே தொடர்வான் !

ஒவ்வொருவரும் தனக்குத்தானே சமமாக விளங்குவது தான் உண்மையான சமத்துவம் ஆகும்.
தனக்குத்தானே சமமாக விளங்கும் மனிதனால் மட்டுமே தனது சக மனிதர்களுடனும் பிற எல்லா
வற்றுடனும் இசைவுடன் வாழ முடியும். இத்தகைய மனிதனின் வழியே தான் "சமத்துவம்" என்பது
சமுகத்துள் தோன்றவும் நிலைபெறவும் முடியும்.

தனக்குத்தானே சமமாக இல்லாததனால் தான் மனிதன் பிறருடன் தன்னை ஒப்பிட்டுப்பார்க்கவும் பிறர்
மீதுபொறாமை கொள்ளவும் ,பொய் சொல்லவும்,பிறர் பொருளை களவாடவும்,பிறரை ஏமாற்றவும்,
வஞ்சிக்கவும், கொல்லவும் செய்கிறான்.

மனிதன் துன்புறுவதும் விரக்தியில் வெந்து மாய்வதும் எதனால் ?
தனக்குத்தானே சமமாக விளங்கும் நேர்வழியை தெரிந்தெடுக்காமல் எது எதற்கோ சமமாக
ஆக வேண்டுமென பொய்யும் போலியுமான செயற்கையான மதிப்புக்களை, இலட்சிய நிலைகளை
அடையத்துடிப்பதும், அடையாவிடில் தோல்வியில் தவிப்பதும் தானே!

வளர்ச்சியின் விதியைப்பற்றிச்செல்லும் பிரபஞ்ச-இயக்கத்தில் சமத்துவத்திற்கு இடமில்லை ! எல்லாம்
சமம் எனும் போது அது தேக்கத்தைக் குறிக்கும்; அது வளர்ச்சியின் உள்ளார்ந்த விதியான
உள்-முரண்பாட்டை மரிக்கச்செய்து வளர்ச்சியைத் தடுத்துவிடும்.மேலும் இத்தகைய பிரபஞ்சத்தில்
'சமமின்மை' ( வித்தியாசம் பாராட்டுதல் ) என்பதற்கும் இடமில்லை. ஏனெனில், அது ஏற்றத்தாழ்விற்கு
இடமளித்துவிடும் ! ஆகவே, அதையதை அதனதன் இடத்தில் , நிலையில், அங்கீகரிப்பதொன்றே
இசைவானது, ஆகவே சரியானது .

சிசு தாய்க்கு சமமாகுமா?
மகன் தந்தைக்கும்,
மனைவி கணவனுக்கும்,
நண்பன் நண்பனுக்கும்,
மாணவன் ஆசிரிருக்கும்,
சீடன் குருவுக்கும், சமமாக முடியுமா?
சமுக உறவுகள் உட்பட, எந்த உறவுக்கும் தேவை
'சமத்துவம்' அல்ல, இதயங்களின் "சங்கமம்" மட்டுமே !

  13.2.2016         [மீண்டும் தொடருவோம்]


No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...