
ஞானமடைதல் என்பது வாழ்க்கையில் நாம் ஆசைப்பட்டு பிறகு
எவ்வாறோ தேடி அடைந்திடக்கூடிய பலவித பொருட்கள், விஷயங்கள்,
நிலைகள் ஆகியவற்றைப் போன்ற ஒன்றல்ல. ஞானமடைதல் என்பது
நமது வாழ்க்கையில் எதிர்பாராமல் நிகழ்ந்திடக்கூடிய ஒரு விபத்தோ
அல்லது கிரமப்படி நிகழ்ந்தேறிடக்கூடிய சம்பவங்களில் ஒன்றோ அல்ல!
மாறாக, ஞானமடைதலும், வாழ்தலும் பிரிக்கமுடியாதவை - அது
வாழ்தலின் மலர்ச்சியாகும். மேலும், வாழ்தலைத் தவிர்த்து நேரே
ஞானமடைதல் என்பதில்லை!
ஆகவே, வாழ்தலை முதலில் நாம் தொடங்குவோம் - முதன்மையான
விஷயங்களை முதலில் கவனிப்போம்.
* எவனொருவன் வாழ்க்கை மீது தீராத-நிரந்தர-நேசம்
கொண்டுள்ளானோ, வாழ்வின் மேற்புற நிகழ்வுகளால்
சிறிதும் திசை திருப்பப்படாமல் (கவனம் சிதறாமல்)
வாழ்க்கையைக்காண்கிறானோ அவனுக்கு ஞானமடைதல்
இயல்பாய் நிகழ்வதாகிறது. இத்தகைய ஒருவன் வாழ்க்கையை
அடிப்படையில் ஒரு புதிராகக் காண்பவனாக உள்ளான்.
* எவனொருவன் தொடக்கத்திலிருந்தே தனது சுயத்தின்
அடியாழத்திலிருந்து தோன்றும் கேள்விகளுக்கான பதில்களை
கண்டுபிடிப்பதற்காக தனது வாழ்க்கையை முழுமையாக
அர்ப்பணிக்கிறானோ அவனுக்கு ஞானமடைதல் என்பது
அவனது விருப்பமின்றியே நிகழ்ந்தேறிவிடுகிறது.
* எவனொருவனுக்கு, "அர்த்தம்-தேடல்" என்பது தனது மதுவும்
மாமிசமுமாக உள்ளதோ, அவனுக்கு ஞானமடைதல் என்பது
அன்றாட சூரியோதயம் போல் நிகழ்வதாகிறது.
* எவனொருவன் தனது இருப்பின் ('தான் இருக்கிறேன்!' எனும்)
அற்புதத்தை தரிசித்தவனோ, அதைவிட்டு (சில சமயங்களில்
மட்டும், சிறிது தொலைவு மட்டும் உலாவுதல் தவிர அதற்கு மேல்)
அகலாமல் விடாப்பிடியாக இருக்கிறானோ, அவனுக்கு
ஞானமடைதல் என்பது தனியே பிரத்யேகமாய்த்
தேவைப்படுவதில்லை!
ஞானமடைதலுக்கு குறுக்கு வழிகள் ஏதுமில்லை. ஞானமடைதலை
உங்களது மனவுறுதியைக்கொண்டோ, அல்லது உங்கள் மனதின் உதவி
யின்றியோ அடையமுடியாது.
உங்களது அனைத்து முயற்சிகளும் - கடின முயற்சி, விடா முயற்சி, எதுவும்
அதைக்கொண்டு வர உதவாது. அதே வேளையில், அது இயற்கையாக
தானேயும் வராது.
ஞானமடைதல் என்பது நேரடியாக விரும்பி ஆசைப்பட்டு அடையக்கூடிய
விஷயம் அல்ல. குறிப்பாக முதலில் கவனிக்க வேண்டிய விஷயங்களை,
அம்சங்களை முதலில் கவனிக்காமல் வெறுமனே விரும்புவதன் மூலமும்
குறுக்கு வழியில் எதையேனும் பயிற்சி செய்வதன் மூலமும் ஒரு போதும்
அடையமுடியாது.
*
"ஞானமடைதலின் புதிய சகாப்தம்" எனும் தொகுப்பிலிருந்து
ஒரு சிறு பகுதி.
மா.கணேசன்/5.08.2016
No comments:
Post a Comment