
C = E = mc2 = L = c`= C
இச்சமன்பாடு பிரபஞ்சத்தையும், அதிலுள்ள (மனிதன் உள்பட) அனைத்தையும், இன்னும் பிரபஞ்சத்திற்கு அப்பாலும் உள்ள மெய்ம்மையையும் ஒருங்கிணைத்த ஒன்றாகும்.
பிரபஞ்சம் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது பூமிக்கிரகம், சந்திரன், சூரியன், சூரியனைச் சுற்றிவரும் பிற கிரகங்கள், நமது சூரியன் இடம்பெறும் கோடாணுகோடி சூரியன்களை, அதாவது நட்சத்திரங்களைக் கொண்ட பால்வீதி மண்டலம் (The MilkyWay Galaxy),நம் பால்வீதி மண்டலம் இடம்பெறும் கோடாணு கோடி உடுமண்டலங்கள், இன்னும் பலவித அண்டவெளி நிகழ்வுகளை உள்ளடக்கிய, எல்லையில்லா பெருவெளி யாகத் திகழும் ஒரு மாபெரும் அமைப்பு என்பதாக இருந்தால், நிச்சயம் நாம் நம் புரிதலில் வழிதவறித்தான் போவோம்!
மேற்குறிப்பிட்ட சித்திரம் ஒரு வெறும் முகப்புத்தோற்றம் மட்டுமே தவிர, அது
மட்டுமே ஒட்டுமொத்த பிரபஞ்சமும் அல்ல! நிச்சயமாக, பிரபஞ்சத்திற்கு பொருண்மையினாலான ஒரு முகம் (Material-Facet)உள்ளது; ஆனால், அதுவே
முடிவானதும் முழுமையானதும் அல்ல!
ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் -உடைய, E=mc2 எனும் சமன்பாடு முற்றிலும் பிரபஞ்சத்தை பொருண்மை மயமானதாகச் சித்தரிக்கிறது. அது, பிரபஞ்சத்தை சக்திமயமானதாகவும், அச்சக்தியின் இன்னொரு வடிவமாக அது பொருண்மையைச் சுட்டுகிறது. E=mc2 எனும் இந்தச் சமன்பாடு, சக்தியானது பொருன்மையாகவும், பொருண்மையானது சக்தியாகவும் மாற்றமடையைக்கூடியது என்பதைக்குறிப்பது மட்டுமே. ஐன்ஸ்டீன்-ன் இச்சமன்பாடு உள்ள பிரபஞ்சத்தின் ஒரு அடிப்படையான பண்பைப்
பற்றியது மட்டுமே. அதற்கு மேல், அது அந்த சக்தி (அல்லது பொருள்) எங்கிருந்து, எப்படித் தோன்றியது என்பதுபற்றியும், அதன் எதிர்கால
நிலைகளைப் பற்றியெல்லாம் எதையும் விளக்குவதில்லை!
ஆனால், நமது பிரபஞ்சத்தைப்பற்றிய ஒரு வெளிப்படையான உண்மை என்னவென்றால், நமக்குத் தெரிகிற வகையில், 'பொருள்' (அல்லது பொருன்மை) என்கிற பண்பை அடுத்து, 'உயிர்' மற்றும் 'உணர்வு' என்கிற பண்புகளையும் பிரபஞ்சம் கொண்டுள்ளது.
ஆக, நாம் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், வெறும் பொருளின் சொற்களில் (in terms of matter)மட்டுமே புரிந்து கொள்ளமுடியாது என்பது மிகவும் மையமானதொரு புதிய புரிதல் ஆகும். மாறாக, நாம் நம் பிரபஞ்சத்தை 'பொருள்', 'உயிர்', மற்றும் 'உணர்வு' என்கிற இம்மூன்று பண்புகளின் சொற்கள் வழியாகப் புரிந்து கொள்வதுமட்டுமே தான் முழுமையான புரிதலைத்தரும்.
கிட்டத்தட்ட 1500 கோடி ஆண்டுகளுக்கு முன் நம் பிரபஞ்சம் ஒரு "பெரு-வெடிப்பு" (Big-Bang) எனும் நிகழ்வில் தோன்றியது என்கிறவிஞ்ஞானப்புராணிகத்தை
இங்கு நாம் பயன்படுத்திக்கொள்வோம். அப்பெரு-வெடிப்பின் போது தான் காலம், வெளி, பொருள் (சக்திப்பொழிவாக) தோன்றியது. பிறகு அந்தச் சக்திப்பொழிவிலிருந்து மிக நுண்ணிய அணுக்கருத்துகள்கள் திடப்பட்டு அணுக்களின் வாயுத்திரள் மேகமாகி (நெபுலா-நிலை) சுழன்று அதிலிருந்து கேலக்ஸி எனும் உடு-மண்டலங்கள் திரண்டன. அவற்றிலிருந்து நட்சத்திரங்கள் அல்லது சூரியன்கள் வெளிப்பட்டன. சூரியன்களிலிருந்து பிரிந்த தூசுத்துண்டங்கள் அவற்றைச் சுற்றிச் சுழன்று கிரகங்களாக இறுகின. இன்று நாம் காணும் பிரபஞ்சம் உருவாவதற்கு கிட்டத்தட்ட 1000 கோடி ஆண்டுகள் பிடித்தன. ஆனால், இந்தப்பிரபஞ்சம் வெறும் சடப் பொருளாலான பௌதீகப்பிரபஞ்சம் மாத்திரமே!
பெரு-வெடிப்பு நிகழ்ந்ததிலிருந்து கிட்டத்தட்ட 1100 கோடி ஆண்டுகள் கழித்து
(இன்றிலிருந்து 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்), கோடாணு கோடி உடுமண்டலங்களில் ஒன்றான "பால்-வீதி மண்டலத்தில்" உள்ள கோடாணு கோடி நட்சத்திரங்களில் ஒன்றான சூரியனைச் சுற்றி வரும் ஒன்பது கிரகங்களில், மூன்றாவது கிரகமான பூமியின் மீது பிரபஞ்சத்தின் இரண்டாவது வளர்ச்சிக்கட்டம் தொடங்கியது, அதாவது 'உயிர்' எனும் இரண்டாவது பண்பு வெளிப்பட்டது. 'அமீபா' எனும் ஒரு ஸெல் ஜீவி தான் பூமியின் மீது தோன்றிய முதல் உயிரி ஆகும். ஆக இந்த ஒரு ஸெல் ஜீவியானது தொடர்ந்து பரிணமித்து பலஸெல் ஜீவிகளாக பல இனங்களாகக் கிளை பிரிந்து; ஊர்வன, பறப்பன, பாலூட்டி எனப்பரிணாமம் பெற்றது. 'உயிர்' எனும் இந்த இரண்டாவது பண்பை மையமாகக் கொண்ட இந்த
இரண்டாவது கட்டத்து பிரபஞ்சத்தை நாம் "உயிரியல் பிரபஞ்சம்" என அழைப்பது மிகப் பொருத்தமாக அமையும்.
உயிரியல் பரிணாமத்தின் கடைசியாக, கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ஆண்டுளுக்கு முன்னர் குரங்கு எனும் பாலூட்டி இனத்திலிருந்து மாற்றம் பெற்று மனித இனம் தோன்றியது. ஆம், மனிதனுடன், பிரபஞ்சத்தின் மிக முக்கியமான மூன்றாவது வளர்ச்சிக்கட்டம் தொடங்கியது, அதாவது பிரபஞ்சத்தின் 'உணர்வு' எனும் மூன்றாவது பண்பு மனிதனுள் வெளிப்பட்டது. 'உணர்வு' எனும் இந்த மூன்றாவது பண்பை மையமாகக் கொண்ட பிரபஞ்சத்தின் இந்த மூன்றாவது கட்டத்தை நாம்
"உணர்வியல் பிரபஞ்சம்" என அழைப்போமாக!
முதன் முதலாக பிரபஞ்சமானது பெரு-வெடிப்பில் சக்திப்பொழிவாகத்தான்
தோன்றியது, இந்த நிலையைத்தான் ஐன்ஸ்டீன்-ன் சமன்பாட்டில் இடம்பெறும் "E" என்பது குறிக்கிறது. சக்தியானது அணுத்துகள்களாக, அதாவது திடப்பொருளாக மாறிய நிலையை ஐன்ஸ்டீன்-ன் சமன்பாட்டில் இடம்பெறும் "mc2" என்பது குறிக்கிறது. இத்துடன் ஐன்ஸ்டீன்-ன் சமன்பாடு நின்று விடுகிறது, அல்லது விடைபெற்றுக்கொள்கிறது.
ஒரு வகையில், சக்தி அல்லது பொருள் என்பது தான் இப்பிரபஞ்சத்தின்
அடிப்படை வஸ்து என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், சக்தி நிலையாக
வெளிப்பட்ட பிரபஞ்சம்,சக்தியாகவோ,அல்லதுபௌதீகச்சடப்பொருளாகவோ
நிலை பெற்றுவிட வில்லயே?
அதாவது, சக்தி பொருளாக மாறக்கூடும் என்பதன் தொடர் வளர்ச்சியாக
(சடப்) பொருளானது உயிராகவும் ("L"= life), உயிரானது மனிதனுள்
உணர்வாகவும் ( "c`"= human consciousness) மாறக்கூடும், ஆம்,உண்மையில், இந்தக்கிரமத்தில் தான் பிரபஞ்சமானது மாற்றம் பெற்றது என்பதைத்தான் இக்கட்டுரையின் "இறுதிச் சமன்பாடு" எடுத்துக் கூறுகிறது.
E = mc2 = L = c`
இதையே பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சிக் கட்டங்களின் படிமுறையில்
அமைத்துக் காண்போம்: (கீழிலிருந்து மேல் நோக்கிக் காண்க)
உணர்வியல் கட்டம்
-------------------
உயிரியல் கட்டம்
----------------------
பௌதீகக் கட்டம்
---------------------------
அதாவது, பெரு-வெடிப்பு ---> சக்தி ---> பொருள் ---> உயிர் ---> (மனித) உணர்வு
என்கிற இந்த மேலெழுந்து செல்கிற வளர்ச்சிப்போக்கில், மனித உணர்வை
அடுத்து எது வெளிப்படவிருக்கிறது என்பதும்; பெரு-வெடிப்புக்கு முந்தைய
நிலை, பிரபஞ்சத்தின் மூலம் எது என்பதும் விடுபட்டுள்ளது!
இதோ முழுமையான சமன்பாடு:
C = E = mc2 = L = c`= C
பிரபஞ்சத்தின் பரிணாம வரலாற்றில், தொடக்கக் கட்டமான பௌதீகச் சடப்
பொருளின் கட்டம் தான் மிக நெடியதாகும், கிட்டத்தட்ட 1100 கோடி ஆண்டுகள்.
அடுத்தது உயிரியல் கட்டம் , அது கிட்டத்தட்ட 400 கோடி ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. கடைசியாக, உணர்வியல் கட்டம் வெகு சமீபத்தில், உணர்வுள்ளமனிதஜீவியுடன், ஒன்று அல்லது இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான் தொடங்கியது. பிரபஞ்சப் பரிணாம இயக்கமானது தற்போது உணர்வியல்கட்டத்தில், அல்லது தளத்தில் மையம் கொண்டுள்ளது.
மனித உணர்வைப் பற்றிய ஒரு உண்மை என்னவெனில், அது உணர்வுநிலையின்உதயம், அதாவது, உணர்வின் தொடக்க நிலை தானேதவிர, அதுவே உணர்வின் முழுமையோ அல்லது இறுதி நிலையோ அல்ல. ஆகவேதான், மேலேயுள்ள சமன்பாட்டில் அதை, c`எனக்குறித்துள்ளோம். இனி மனித உணர்வு நிலையை அடுத்து வெளிப்பட
வேண்டிய மெய்ம்மை , அதுவே இறுதி மெய்ம்மை, அது C எனக்குறிக்கப்பட்ட
பிரபஞ்சப்பேருணர்வு ( Cosmic Consciousness)என்பதுதான்.
மீண்டும் நாம் நம் புரிதலை தொகுத்துப் பார்த்துக்கொள்வோம். அதாவது பெரு-வெடிப்பில் சக்தியாக, பொருளாக (சக்தியும், பொருளும் ஒன்றுதான்) வெளிப்பட்ட பிரபஞ்சம் ஒரு கட்டத்தில் உயிராக எழுந்தது. உயிராக எழுந்த பிரபஞ்சம், தற்போது மனிதனுள் சிற்றுணர்வாக உதித்துள்ளது. இவ்விடத்தில் நாம் தெளிவாக ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வது அவசியம்.
அதாவது, பிரபஞ்சத்தில் உயிர் தோன்றியது, உணர்வு தோன்றியது எனக்காண்பது பழைய மட்டுப்பாடான பார்வையாகும். மாறாக, பிரபஞ்சமே உயிராகவும், மனிதனாகவும், மனிதனுள் உணர்வாகவும் மாறியுள்ளது எனக்காண்பதே புதிய பார்வையும், புரிதலும் ஆகும்.
பிரபஞ்சத்தின் வரலாற்றில் உயிரும், உணர்வும் வெளிப்படாத காலக்கட்டங்கள்இருந்தன. அப்போது பிரபஞ்சமானது வெறும் பௌதீகச்சடப்பொருளாக மட்டுமே விளங்கியது. அதாவது, சடத்தன்னமை தான் பிரபஞ்சத்தின் அப்போதைய ஒரே பண்பு ஆகும். ஆனால், சடப்பொருள் தனது சடத்தன்மையிலேயே நீடித்திருக்கவில்லை. மாறாக, ஒரு கட்டத்தில் அது உயிராக மாற்றமடைந்தது, அதாவது,பிரபஞ்சமே உயிர் பெற்று எழுந்தது என்று தான் சொல்லவேண்டும். அக்கட்டத்தில்பிரபஞ்சம் என்பது பிரதானமாக உயிர்ப்பண்பு தான்.பிறகு உயிரானது மனிதனாகப்
பரிணமித்து அவனுள் உணர்வு உதயமாகியதும் பிரபஞ்சமே உணர்வு பெற்ற
தாயிற்று! தற்போது பிரபஞ்சம் என்பது பிரதானமாக உணர்வு என்கிற பண்புதான்.
ஆனால், பிரபஞ்சத்தின் இறுதியான பண்பு என்ன என்பதே அதி முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாகும்! ஏனெனில், அந்த இறுதியான பண்பு என்ன என்பதைக்கண்டு பிடித்தால்தான் பிரபஞ்சப்புதிர் முழுமையாக விடுபடும்!
விஞ்ஞானம் சொல்கிறது, இம்மாபெரும் விரிவடையும் பிரபஞ்சமானது ஒரு பெரு-வெடிப்பில் தோன்றியது என்கிறது. ஆனால், பெரு-வெடிப்பிற்கு முன் என்ன, எத்தகைய மெய்ம்மை இருந்தது? காலம், வெளி, பொருண்மை யாவும் அந்த வெடிப்பில்தான் தோன்றியது என்றால், வெளி தோன்றுவதற்கு முன்னர், அந்த மூல-முதல் மெய்ம்மை எங்கே, எத்தகைய 'வெளி' யில் இருந்தது? அது ஏன் வெடித்தது?அதாவது, விஞ்ஞானம் விளக்கும் சித்திரத்தில், பிரபஞ்சத்தின் மூலமும், முடிவும்கேள்விக்குறிகளாக தொக்கி நிற்கின்றன.
? ---> பெரு-வெடிப்பு ---> சக்தி ---> பொருள் ---> உயிர் ---> (மனித) உணர்வு--->?
பெரு-வெடிப்பின் போது தோன்றியது சக்தியும், பொருளும் தான் என்பதால்
பெரு-வெடிப்பிற்கு முன் இருந்த மூலமெய்ம்மை, சக்தியும், பொருளும் தான் என்பதாக முடிவிற்கு வந்துவிடலாமா? அதாவது பிரபஞ்சத்தின் அடிப்படை மெய்ம்மை, சக்தி அல்லது பொருள் தான்என்றுமுடிவாகஅறிவித்துவிடலாமா? அப்படியானால், பெரு-வெடிப்பின் போது முதலில் தோன்றியது சக்தியும், பொருளும் தான் என்றாலும்பொருளையடுத்து, உயிரும், உணர்வும் தோன்றியுள்ளதைக் கொண்டு பார்த்தால்,
பெரு-வெடிப்பிற்கு முன் இருந்த மூலமெய்ம்மை உண்மையில் சக்தியோ, பொருளோ மட்டுமல்ல, மாறாக, உயிர்ப்பண்பும்,உணர்வுப்பண்பும் மூலமெய்ம்மையுள் உள்ளடங்கியுள்ள பண்புகளே எனக்காண இடமுண்டல்லவா?
அல்லது, பொருள்முதல்வாதிகள் கூறி வருவது போல, சக்தியும், பொருளும் தான்மூலமெய்ம்மையின் பிரதானப்பண்புகள்; உயிரும், உணர்வும் பொருண்மையிலிருந்து பெறப்பட்ட உப-பண்புகளே என்று முடிவு செய்துவிடலாமா? இவ்வாறு முடிவு செய்தால், 'பொருள்' தான்
மூலமெய்ம்மை ; மற்றும் பொருளானது சுயம்புவாக தன்னில் தானே
தோன்றிய நித்திய வஸ்து எனும் பெருந்தவறான முடிவுக்கு நம்மைத் தள்ளிவிடும்!
பூமிக்கிரகத்தில் கிட்டத்தட்ட 80,000,000 க்கும் மேற்பட்ட பல்வேறு உயிரினங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் மனித இனம். ஆனால், அவற்றுள் மனிதன் மட்டுமே முற்றிலும்வித்தியாசமான பண்பான உணர்வைப் பெற்றவனாயுள்ளான். மற்ற ஜீவிகளைப்போல மனிதனுக்கும் உடல் உள்ளது, அந்த உடலும் பல்வேறு வகைப்பட்ட இரசாயணப்பொருட்களாலும், அடிப்படை(அணு)த் துகள்களாலும் கட்டமைக்கப்பட்டதே. எனினும், மனிதனை, அந்த பௌதீக அடிப்படை(அணு)த் துகள்களைப் பற்றிய ஒட்டுமொத்த அறிவைக் கொண்டும், அல்லது அவனது உடலைப்பற்றிய ஒட்டுமொத்த உயிரியல், மற்றும் உடலியல்அறிவைக் கொண்டும் புரிந்து கொள்ளமுடியாத கையறு நிலையில் தான் நாம் உள்ளோம்!
ஏனெனில், மனிதனை அவனது உடலுக்கோ, அல்லது உடலுக்கு அடிப்படையாக அமைந்திருக்கும் அடிப்படை(அணு)த் துகள்களுக்கோ குறைத்துச் சுருக்கிவிட முடியாது. ஏனெனில், மிகத் துல்லியமாக மனிதன் என்பவன் ஒரு உணர்வு தான்; உணர்வை, அதற்கு அடியோட்டமாக அமைந்திருப்பதான யாதொரு கீழ்த்தளத்திற்கும் ,காரணிக்கும்
குறைத்துச் சுருக்கிவிட முடியாது. உணர்வு என்பது உணர்வு தான், அதை விளக்குவது கடினத்திலும் கடினமானது! ஏனெனில், அதைக்கொண்டுதான் பிற யாவற்றையும், ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் விளக்குகிறோம், விளங்கிக்கொள்கிறோம்!
இப்போது நம்முடைய அதிமுக்கியமான கேள்வி என்னவெனில், ஒரு பெரு-வெடிப்பில், அடிப்படை(அணு)த் துகள்களாகத் தொடங்கிய பிரபஞ்சம், தமது 1500 கோடி ஆண்டுகள்நெடிய பரிணாம நிகழ்வு முறையின் முடிவாக தற்போது எத்தகைய பண்பு நிலையை வந்தடைந்துள்ளது என்பதுதான். ஏற்கனவே நாம் விளக்கிவந்துள்ள படி அது மனித உணர்வாக ஆகியுள்ளது. இனி மனித உணர்வையடுத்து வெளிப்படவிருக்கும் அம்சம்அல்லது மெய்ம்மை எது அன்பதுதான் அடுத்த அதிமுக்கியமான கேள்வியாகும்.
மனித உணர்வையடுத்து வெளிப்படவிருக்கும் அந்த அம்சம், அதுவே இறுதியான அம்சமும் ஆகும்; அதுவும் உணர்வுதான், ஆனால் அது மனித உணர்வைப்போல சிற்றுணர்வு அல்ல, அதுவே உணர்வின் (தர்க்க ரீதியான) இறுதியும் முழுமையுமான நிலை. அதுதான் "முழு-உணர்வு" அல்லது "பேருணர்வு"! அந்தப் பேருணர்வு நிலைதான்உணர்வின் உதயமாக எழுந்த ஒவ்வொரு மனிதஜீவியும் அடைந்தாக வேண்டிய பரிணாம இலக்கும் முழுமையும் ஆகும். அதுவே பிரபஞ்சத்தின் இலக்கும் முழுமையும்ஆகும்.
ஆனால், பிரபஞ்சத்தின் முடிவும் முழுமையும், அதன் தொடக்கத்தைப்போல ஒரேபுள்ளியில் அடையப்படுவதில்லை! மாறாக, ஒரு மரமானது தனது ஒவ்வொரு கனியின்வழியாகவும் தனது இலக்கையும், முழுமையையும் எட்டுவதைப்போல பிரபஞ்சமானது ஒவ்வொரு தனிமனித ஜீவியின் வழியாகவும் தனது ஒப்பற்ற இலக்கையும் முழுமையையும் எட்டுகிறது!
பிரபஞ்சமானது பெரு-வெடிப்பு எனும் ஒரு ஒற்றைப் புள்ளியில் தொடங்கினாலும், அது தொடங்கிதும் பல்வேறு வகைப்பட்ட அணுத்துகள்களாகச் சிதறிப்போனது. இந்த பன்மை நிலையிலிருந்து அது படிப்படியாக நெடிய பரிணாம வழிமுறையின் மூலமாக தன்னை
ஒருங்கிணைத்து ஒருமை நிலையை எட்டும் முகமாக மனித உணர்வாகப் பரிணமித்தது. பிரபஞ்சமானது ஒரு கட்டத்தில், உணர்வு பெற்று எழாவிடில், நாம் இன்று பிரபஞ்சம் குறித்து இவ்வளவு விரிவாகவும், ஆழமாகவும் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது.
அதே நேரத்தில், பிரபஞ்சமானது மனிதனாக (மனிதனுள் உணர்வாக) மாறியதன் நோக்கம் பிரதானமாக தனது கடந்த கால நிலைகளை ஆராய்ந்து கொண்டிருப்பதற்காக அல்ல. மாறாக, உணர்வுப்பூர்வமாக முன்னேறிச்சென்று தனது ஒப்பற்ற இலக்கை விரைந்து அடைவதற்காகத்தான். ஆனால், உணர்வுள்ள மனிதர்களோ (குறிப்பாக
விஞ்ஞானிகள்) இன்னும் தனக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்புறவைப் புரிந்து கொள்ளாமல்,உயிரும்,உணர்வும் அற்ற சடப்பிரபஞ்சத்தையே ஒட்டுமொத்தப்பிரபஞ்சம் என்பது போல ஆராய்ந்துகொண்டுள்ளனர். இவர்கள் எப்போது பிரஞ்சத்தின்நீட்சியான மனிதனான தன்னை ஆராயப்போகிறார்கள்?
எப்போது மனிதன், பிரபஞ்சத்தின் நீட்சியாகவும், அதன் உயர்வளர்ச்சி நிலையாகவும் தோன்றியவனே தான் எனும் உண்மையைப் புரிந்து கொள்கிறானோ, அப்புரிதலின் தொடர்ச்சியாக, பிரபஞ்சத்தின் அடியோட்டமான பரிணாம நிகழ்வுமுறையையும்; அதில்துல்லியமாக, பரிணாமம் என்றால் என்ன? பரிணாமத்தில் பரிணமிப்பது எது? என்பதை
யும்; அதில் இன்னும் அதி முக்கியமாக, பரிணாம நிகழ்வு முறையில் தனது இட அமைவு, பணி, பங்கு, பாத்திரம் என்ன என்பதையும் புரிந்து கொள்கிறானோ, அப்போதுதான் அவனால் பிரபஞ்சத்தையும், தன்னையும் உருப்படியாகப் புரிந்து கொள்ளஇயலும்.
ஆம், பிரபஞ்சத்தின் அடியோட்டமான பரிணாம நிகழ்வுமுறையைப் புரிந்து கொள்ளாமல்ஒருபோதும் பிரபஞ்சத்தை நாம் முறையாகவும், முழுமையாகவும் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில், உண்மையில் பிரபஞ்சம் என்பது ஒரு பரிணாம ஊடகம், அல்லது பரிணாமக்
களம் என்பதற்கு மேல் வேறெதுவுமல்ல! ஆனால், இந்த உண்மை மிக எளிமையாக இருப்பதால், விஞ்ஞானிகளுக்கு இது அதிர்ச்சியாகவும், திருப்தியளிக்காததாகவும் தெரியலாம்.இந்த உண்மைக்கு மாறாக, வெறுமனே காலம், வெளி, நிறை, அடிப்படைத்துகள்கள், ஒளி,
பொருள், நட்சத்திரங்கள், சூரிய மண்டலங்கள், கிரகங்கள், வேற்று கிரகங்கள், வேற்று கிரகஜீவிகள், கேலக்ஸிகள், . . . . . என ஆராய்ந்து கொண்டிருப்பது சிறுபிள்ளைத்தனமானதாகும்.
முதலிடத்தில், பிரபஞ்சத்தை எதற்காக நாம் புரிந்து கொள்ள வேண்டும்? அதற்கான அடிப்படை, நோக்கம், பயன்பாடு என்ன என்பவற்றையெல்லாம் நாம் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியமாகும். மிகவும் வெளிப்படையாக நாம் ஒரு மாபெரும் புதிரான அமைப்புக்குள் அமைந்திருக்கிறோம்; அதை நாம் 'பிரபஞ்சம்' என அழைக்கிறோம். அந்த
மாபெரும் அமைப்புக்குள் நம்முடைய இடம், பணி, பாத்திரம் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்காகத்தான் பிரபஞ்சத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் என்பது வரை நமது நோக்கத்தில் பிழையேதும் இல்லை! பிரபஞ்சத்தில் நமது இட-அமைவைப் பொறுத்தவரையில், ஓரளவிற்கு துல்லியமாகவே அறிந்துகொண்டிருக்கிறோம்.
ஒரு நடுத்தரமான அளவுடைய நட்சத்திரத்தை (சூரியனை)ச் சுற்றிவருகின்ற ஒன்பது கிரகங்களில், சூரியனிலிருந்து மூன்றாவதாக அமைந்துள்ள பூமிக்கிரகத்தில் நாம் வசித்துவருகிறோம். நமது சூரியமண்டலமானது, கோடாணுகோடி நட்சத்திரங்களைக்கொண்ட "பால்வீதி" மண்டலம் என்றழைக்கப்படும் ஒரு சுருள் வடிவ கேலக்ஸியின் ஒரு விளிம்புப் பகுதியில் அமைந்திருக்கிறது. நமது கேலக்ஸியானது தொடர்ந்து விரிவடைந்து
செல்லும் எல்லைகாணமுடியாத பெரு வெளியில் இடம்பெறும் கோடாணுகோடி கேலக்ஸிகளில் ஒன்று மட்டுமே.... ஆனால், கால-வெளியில் நமது இடத்தை அறிந்து கொள்வதனால்பெரிதாக ஒன்றும் நிகழப்போவதில்லை. மாறாக, பிரபஞ்சத்தின் பரிணாம நிகழ்வு முறை
யில் நமது இட-அமைவு எத்தகையது என்பதைப் புரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே நமது இருப்பு மற்றும் வாழ்க்கையின் நோக்கம், இலக்கு ஆகியவற்றைப் புரிந்து கொண்டு அர்த்தமுள்ளதொரு வாழ்க்கையை நாம் வாழ முடியும்.
பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் விஞ்ஞானிகள் இருவித அணுகுமுறைகளைக் கடைபிடிக்கிறார்கள். முதல் அணுகுமுறையில், ஏதோ பிரபஞ்சத்தின் சூட்சுமம்,அல்லது இரகசியம் , தொலைதூர நட்சத்திரத்தில், அல்லது கேலக்ஸியில் மறைந்திருப்பதுபோல, தொல நோக்கி மற்றும் பிற கருவிகளைக்கொண்டு பேரண்டவெளியைத் துழாவிக்
கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது அணுகுமுறையில், ஏதோ பிரபஞ்சத்தின் சூட்சுமம்பொருளின் ஆகச்சிறிய கூறான அணுத்துகளின் உள்ளே சிற்றண்டத்தில் மறைந்திருப்பது போல, அணுவை உடைத்துப் பகுத்துப் பகுத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இவ்வகையில், அணுவை உடைத்துப் பகுத்துப்பார்ப்பதன் மூலம், 'அணு' அல்லது 'பொருள்' என்றால் என்ன என்பதை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. மாறாக, அணுவைப் பரிணமிக்க விட்டு அது இறுதியாக என்னவாக, எத்தகைய மெய்ம்மையாகமாற்றமடைகிறது என்பதைக்கொண்டே பொருளின் அசலான பண்பை அறிந்து கொள்ள
முடியும். அதாவது பரிணாமத்தில் எப்பண்பு இறுதியாக வெளிப்படுகிறதோ அப்பன்புதான்பிரபஞ்சத்தின் மூலப்பண்பு ஆகும். அதே நேரத்தில் அணுவையோ, பொருளையோ நாம்புதிதாக பரிணாம வழிமுறையில் செலுத்தத் தேவையில்லை. வெறும் சடமாகத்தோன்றிய
பொருளானது ஏற்கனவே நெடிய பரிணாமத்தின் மூலமாக ஒரு கட்டத்தில் உயிராகி, பிறகொரு கட்டத்தில் (மனிதனுள்) உணர்வுமாகியுள்ளது. இன்னும் ஒரேஒரு படிதான் உள்ளது, அது தன் இறுதியான நிலையை , பேருணர்வை அடைவதற்கு!
உண்மையில், பிரபஞ்சம் என்பது,பேருணர்வுதன்னைமறைத்துக்கொள்ளவும், பிறகு வெளிப்படுத்தவும் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு ஊடகம் அல்லது கருவி மாத்திரமே! ஆம், பேருணர்வின் வெவ்வேறு நிலைகள் தான் பொருளும், உயிரும், மனித உணர்வாகிய சிற்றுணர்வும் ஆகும். பேருணர்வு தான் ஒரு பெரு-வெடிப்பில் தன்னைச்சுருக்கிக்கொண்டு
உணர்வற்ற அணுத்துகள்களாக மாற்றிக்கொண்டது. அணுத்துகள்களாக மாறிய பேருணர்வு தன்னை மீள்கண்டுபிடிப்பு செய்யும் வழிமுறைதான் பரிமாணம் என்பது. உணர்வற்ற அணுத்துகள்கள் உணர்வை எட்டும் முயற்சியில், முதல் கட்டமாக ஒன்றிணைந்து உயிருள்ள ஜீவியாக (அமீபா நிலை) எழுந்தது. அமீபாவினுள் மெலிய உறுத்தல்- உணர்வைப் பெற்றது, பிறகு பல்வேறு உயிரினங்களின் வழியாக நன்கு வளர்ச்சியடைந்த புலன்கள் மூலமாக புலன்வழி-உணர்வைப் பெற்றது. பிறகு மனிதனுள் தனது
இருப்பை தெளிவாக உணரும் "சுய-உணர்வை"ப் பெற்றது.
இனி பிரபஞ்சத்தின் பரிணாம வருங்காலமும், முழுமையும் ஒவ்வொரு மனிதஜீவியையும்பொறுத்த விஷயமாகும். ஏனெனில், இனி பரிணாமம் என்பது கடந்த காலங்களில் நிகழ்ந்துவந்தது போல உணர்வற்ற ரீதியில்,தானியங்கித்தனமாக, அல்லது எந்திரத்தனமாக நிகழ
இயலாது! இனி பரிணாமம் என்பது உணர்வுப்பூர்வமாக மட்டுமே நிகழமுடியும். ஒவ்வொரு மனிதனும் தன் உணர்வில் வளர்ந்துயர்ந்து முழு-உணர்வை அல்லது பேருணர்வை எட்டுவதில் தான் ஒவ்வொரு மனிதனுடைய முழுமையும், இன்னும் பிரபஞ்சத்தின் முழுமையும் அடங்கியுள்ளது.
ஆனால், இங்கு தான் சிக்கல் நிலவுகிறது. அதாவது உணர்வு இருந்தும் மனிதர்கள் உணர்வின் ஜீவிகளாக எழாமல், இன்னும் உடலின் ஜீவிகளாகவே நீடிக்கின்றனர். இதன் விளைவாக பிரபஞ்சப் பரிணாமம் பெரிதும் தேக்கமுற்று நிற்கிறது. இந்தப்பிரச்சினையை எவ்வாறு
தீர்ப்பது என்பது குறித்து பிறிதொரு கட்டுரையில் காண்போம்.
இப்போது நாம் மீண்டும் நமது சமன்பாட்டிற்கு வருவோம். பிரபஞ்சத்தின் அடியோட்டமான பரிணாம நிகழ்முறையில், முதலில் சடப்பொருளும், அதையடுத்து உயிரும், அதையடுத்து மனித-உணர்வும் வெளிப்பட்டுள்ளன. இனி, மனித-உணர்வைக்கடந்து அடுத்ததாகவும், இறுதியாகவும் வெளிப்படவேண்டிய அம்சம் அல்லது மெய்ம்மை "பேருணர்வு" தான் என
நாம் நமது ஆய்வில் விஞ்ஞானப்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் எட்டியுள்ளோம். அதேநேரத்தில், இக்கட்டுரை ஆசிரியரைப்பொறுத்தவரை, இம்முடிவு, வெறுமனே விஞ்ஞானப்பூர்வமானதும், அல்லது தர்க்கரீதியானதும் மட்டுமல்ல; மாறாக, அவரது நேரடியானதும், உணர்வுப்பூர்வமானதுமான 'பேருணர்வு' அனுபவத்தின் வெளிப்பாடும் ஆகும். இதை ஒவ்வொரு மனிதனும் நேரடியாக அனுபவம் கொள்ள முடியும்; அவ்வாறு அனுபவம்
கொள்வதொன்றே மிகச் சரியானதும் இறுதியானதுமான நிரூபணமும் ஆகும்.அதுவரைஇச்சமன்பாட்டைஎவர்வேண்டுமானாலும்விஞ்ஞானப்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும்தவறு என மெய்ப்பிக்க ( Falsify)முயலலாம்!
பேருணர்வு-->பெரு-வெடிப்பு -->சக்தி-->பொருள்-->உயிர்-->(மனித)உணர்வு-- -->பேருணர்வு
C = (E = mc2) = L = c`= C
இச்சமன்பாட்டில் சிறிய அடைப்புக்குறிகளுக்குள் E=mc2 எனக்காணப்படுவது
ஐன்ஸ்டீன் அவர்களுடய புகழ்பெற்ற சமன்பாடு ஆகும்.
மேலும், C = E = mc2 = L = c`= C எனும் இச்சமன்பாடு நேர்கோட்டு வடிவத்தில்
கொடுக்கப்பட்டுள்ளது. இச்சமன்பாட்டையே வளைத்து வட்ட வடிவத்தில் அமைக்கும் பட்சத்தில், இரண்டு பெரிய C தேவைப்படாது. மாறாக, வட்ட வடிவ அமைப்பில் ஒரு C மாத்திரமே இடம்பெறும். ஏனெனில், ஆரம்பமும் முடிவும் ஒரே மெய்ம்மை நிலை தான்! அதை பேருணர்வு என்று அழைக்கலாம், அல்லது அன்பு, கடவுள், மூலமும் முடிவுமான
மெய்ம்மை, மகத்தான ஒருமை, உண்மை, நித்தியம், காலாதீதம் எனவும் அழைக்கலாம்.
மேலும், இதே சமன்பாட்டை இவ்வாறு C = [E = mc2 = L = c`]= C என எழுதும்
போது வேறு ஒரு உண்மையையும் நாம் புரிந்து கொள்ளலாம். அதாவது, இரண்டு பெரிய C-க்களும் பெரிய அடைப்புக்குறிகளுக்கு வெளியே இருப்பதன் அர்த்தம் கால-வெளி கடந்த காலாதீத மெய்ம்மை நிலையை அது குறிக்கிறது. பெரிய அடைப்புக்குறிகளுக்கு உள்ளேயுள்ள அம்சங்கள் கால-வெளிக்குள் அடைபட்ட மட்டுப்பாடான நிலையைக் குறிக்கிறது.
பரவலாக இச்சமன்பாடு(அனுபவப்பூர்வமாக உணர்ந்து) புரிந்து கொள்ளப்படும் போது:
* பொருள்முதல்வாதம் (Materialism) என்பது வரலாற்றின்
குப்பைக்குழிக்குள் போய்ச் சேர்ந்துவிடும்.
* விஞ்ஞானமானது தனது பொருள்முதல்வாதச் சார்பையும், சுருக்கல்வாதத்தையும்விட்டொழித்து, அளவிட முடியாதவை அனைத்தையும், உதாரணத்திற்கு உணர்வுபோன்றவற்றையும் கணக்கில் கொள்ளும் ஆரோக்கியமான அணுகுமுறையைக்கைக்கொண்டு முழுமையான அறிதல் முறையாக மாற்றம்பெறும்.
* மதங்கள், 'கடவுள்' எனும் மூலமும் முடிவுமானதும், அனுபூதிபூர்வமாக உணர்ந்து அடையக்கூடியதுமான உணர்வுமயமான மெய்ம்மையை, வெறும் குறியீடாகவும், ஒரு மந்திரச் சொல்லாகவும் கொண்டு, பூசை,சடங்கு, வழிபாடு என உதட்டளவு உபசாரத்தில் ஈடுபட்டு வரும் நடைமுறையைக் கைவிட்டு அசலான ஆன்மீக வழிக்குத் திரும்பிடும்.
* விஞ்ஞானத்தின் பொருள்முதல்வாதச் சார்பும், சுருக்கல்வாதமும், எந்திரவாதமும் அடி பட்டுப் போவதுடன், எல்லாக்கேள்விகளுக்கும் விஞ்ஞானத்திடம் பதில் இருக்கிறது எனும் விஞ்ஞானவகை மூட நம்பிக்கையும் அடிபட்டுப்போகும்; அதனுடன்சேர்ந்து, பிரபஞ்சம் விபத்துபோன்றது, அர்த்தமற்றது; பரிணாமம் குறிக்கோளற்றது;மனிதன் ஒரு உயர்வளர்ச்சியடைந்த விலங்கு, உயிர்-பிழைத்திருத்தலைக்கடந்து
மனித வாழ்க்கைக்கு வேறு இலக்கு ஏதுமில்லை . . . .என்பன போன்ற விஞ்ஞானப்பொய்ம்மைகளும் அடிபட்டுவிட மக்கள் அசலான அர்த்தமுள்ள வாழ்க்கைக்குத்திரும்பிடுவர்.
மா.கணேசன்/ 7.08.2016
---------------------------------------------------------------
No comments:
Post a Comment