Saturday, 6 August 2016

முற்றிலும் புதியது!





நம்மைச்சுற்றி ஒரு உலகம் உள்ளது!
ஆனால், அதை நாம் கண்டு கொள்வதே
இல்லை!
நாம் நம் விருப்பப்படி  நம் சொந்த
விவகாரங்களில் மூழ்கித் திளைக்கிறோம்,
அல்லது விரக்தியுறுகிறோம்!
இயற்கையை  அழகு  எனப் பார்க்கும்படி
பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம்;
அதனால், அதன் உண்மையை நாம்
பார்ப்பதில்லை!

*
நான் வலியில் இருக்கும் போது
உலகம் அந்நியமாய்த்தெரிகிறது!

நான் சுகத்தில் மிதக்கும் போது
உலகம் மறைந்து போகிறது!

வலியும் சுகமும் நம் இரு கண்களாக
இருக்கும் வரை உலகை உள்ளபடி
பார்க்கமுடியாது!

உலகம் அது இப்போது உள்ளபடியே
எப்போதும் இருந்ததில்லை!
இனி எப்போதும் இப்போது உள்ளபடியே
இருக்கப்போவதுமில்லை!

காரணம் உலகம் மாறிக்கொண்டே
இருப்பதால் அல்ல!
மாறாக, அது பரிணமித்துக் கொண்டே
இருப்பதால்!

மாற்றம், பரிணாமம் இரண்டும் ஒன்றல்ல!
மாற்றம் சாசுவதமானதல்ல;  வெறுமனே
வரையறை அற்றது, அவ்வளவே!
ஆனால், பரிணாமம் இலக்கை உடைய ஒரு
அர்த்தமுள்ள இயக்கம்!

"ஒன்றுமில்லாத நிலை என்றில்லாமல்
ஏன் ஏதோவொன்று இருக்கிறது?"
என்ற கேள்வி அபத்தமானது!
ஏதோவொன்று இருப்பதால் தான்
அதன் பகுதியாக இருந்துகொண்டு
ஒன்றுமில்லாத நிலை பற்றிய கற்பனையும்
கேள்வியும் எழுகின்றன!

அதே வேளையில், இருப்புக்கும்
இன்மைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை
என்பதை உணர்ந்திருப்பதே ஞானம்!

*

உலகம், அல்லது பிரபஞ்சம் இருக்கிறது
என்பது அல்ல பிரச்சினை;
அது ஏன் இருக்கிறது என்பதுதான்!

நாம் இருக்கிறோம் என்பதும்
பிரச்சினை  அல்ல;
நாம் ஏன் இருக்கிறோம் என்பதுதான்!

'ஏன்'களுக்குக்கான பதில்களைக் கண்டு
பிடிக்காதவரை எல்லாம் சிக்கல்களே!

*
எல்லாவற்றையும் புதிதாய்ப் பார்ப்பது
என்றால் எப்படி?
எதற்கும் பழகிப்போய்விடாத
எப்போதும் புதிதாய் விளங்கும் மனத்தைக்
கொண்டு பார்ப்பதன் மூலம்!
எப்போதும் புதிதாய் விளங்கும் மனத்தைப்
பெற என்ன செய்ய வேண்டும்?
எதையும் பார்த்தாக வேண்டும் எனும் தேவையைக்
கடந்த இறுதியான மனமாக மாற வேண்டும்!

எல்லாவற்றையும் புதிராய்ப் பார்ப்பது
என்றால் எப்படி?
எதையும் குறைத்துச் சுருக்கிக் கொச்சைப்
படுத்தாமல் பார்ப்பதன்  மூலம்!
அவ்வாறு பார்ப்பதற்கு ஒருவன் என்ன
செய்யவேண்டும்?
எதுவும் புரியவில்லை என தன்னுள்
சுருங்கிவிடாமல் பரந்து விரிந்து எல்லாவற்றையும்
தழுவிக்கொள்ளும் பேரார்வம் வேண்டும்!

*

மனிதா, உன்னைத்தவிர்த்து விட்டு
உலகை நீ புரிந்து கொள்ள முடியாது!
உலகைப் புரிந்து கொள்ளும் உணர்வாளன்
உலகிடமிருந்து வேறானவனாக
இருக்க முடியுமா?
உலகைத்தவிர்த்து விட்டும் உன்னை நீ
புரிந்து கொள்ள முடியாது!
உலகின் நீட்சியும் உயர் வளர்ச்சி நிலையும்
தானே நீ !
மனிதா நீ உலகைச் சார்ந்திருப்பதை விட
பெரிதும் உலகம் தான் உன்னைச்
சார்ந்திருக்கிறது!
உன் வழியாக உலகம் அடைய வேண்டிய
உய்விற்காக!
உலகின்   உயர்  வளர்ச்சி நிலையே நீ எனில்
உன்னுடைய உயர்  வளர்ச்சி நிலையே
உலகையும் உன்னையும் கடவுளையும்
ஒன்றிணைக்கும் ஒப்பற்ற
உண்மை!

*

மா.கணேசன்/ 6.08.2016
------------------------------------



No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...