
ஏற்றப்படாத மெழுகு வர்த்தி
இன்னும் தனது அர்த்தத்தை அடையாத
வெறும் மெழுகுத் துண்டு!
தான் உருவானதன் நோக்கத்தை
நிறைவேற்றாத வரை அதன்
இருப்பு அர்த்தமற்றது!
இன்னும் அது தனக்குத்தானேயும்
பயனற்றது!
ஒரு மெழுகுத்தண்டும், திரியும்
மட்டுமல்ல மெழுகு வர்த்தி!
தன் தலையில் தீபத்தை ஏற்று
தன் உடலை முழுவதுமாக உருக்கி
எரித்து ஒளிப்பிழம்பாக மாறிவிடுவது
மகா ஆனந்தம்!
*
ஒரு மெழுகுத்தண்டும், திரியும்
மட்டுமா மெழுகு வர்த்தி?
துருத்தி நிற்கும் திரி தீபத்தை
ஏற்கத் தயங்குவது தகுமோ?
மெழுகுத்தண்டு ஒளிக்கு
எரி பொருளாவதற்குத்தானே?
தன்னை முழுவதுமாக உருக்கி
எரித்து ஒளிர்ந்து ஒளியுலகம்
சேர்வது தான் விடுதலை!
*
இருட்டில் அமர்ந்து கொண்டு ஒளியைப்பற்றி
நிகழ்த்தப்படும் நெடிய பேச்சும், கலந்துரையாடலும்
விவாதமும் ஒளிக்கு மாற்று ஆகுமா?
ஒளியைக்கொண்டு வருபவன் எங்கிருக்கிறான் ?
எவ்வாறு அவன் தன் விளக்கை ஏற்றிக்கொண்டான்?
அந்த முதலாமவன் எவரிடமிருந்து ஒளியைப்பெற்றான்?
அவன் தன்னில் தானே பற்றி எரியும் உபாயம் அறிந்த
ஒருவனாகத்தான் இருந்திருக்க வேண்டும்!
ஒன்று, தீபமாய்த் திகழுங்கள் இல்லையென்றால்,
தீபமாய்த் திகழும் ஒருவனைத்தேடிக்கண்டுபிடியுங்கள்!
இந்த இரண்டுக்கும் இடையே இருட்டில்
வாழ்ந்து கொண்டிருப்பது வீணே!
தீபமாய்த் திகழும் ஒருவனை நீங்கள் சந்திக்க நேர்ந்தால்
அந்த உபாயத்தைக் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள்!
அல்லது உங்களால் முடிந்தால் இடறலடையாமல்
அவனுடன் ஒன்றி உங்கள் விளக்கை ஏற்றிக்கொள்ள
முயற்சி செய்யுங்கள்!
இதைத் தவிர நீங்கள் ஈடுபடும் வேறு செயல்பாடுகள்
யாவும் அர்த்தமற்றதே!
*
விளக்கு, எண்ணெய், திரி யாவும்
ஒளியை எட்டுவதற்கான அமைப்பின்
கூறுகளே தவிர இவ்வெதையும்
ஒளி சார்ந்திருப்பதில்லை!
இவ்வெதுவும் ஒளியை
உருவாக்குவதில்லை!
ஒளி மட்டுமே ஒளியை ஏற்றும்!
விளக்கு, எண்ணெய், திரி, யாவும்
ஒளியின் வெவ்வேறு நிலைகளே!
ஒளி இல்லாமல் உலகில் எதுவுமில்லை
உலகமும் இல்லை!
*
சுயமாக உங்களால் எழுந்து நிற்க
முடியா விட்டாலும்
பிறரைச் சார்ந்து நிற்க உங்கள் அகந்தை
இடம் தருவதில்லை!
உங்கள் அகந்தையின் தலையில் தீயை
வைக்க ஒருவன் வேண்டும்!
அப்போதுதான் நீங்கள் தீபமாய் ஒளிர
முடியும்!
நீங்கள் பார்வையற்றவர்களாக நீடிக்கும்
வரை பார்வையுள்ள வழிகாட்டி
ஒருவன் வேண்டும்!
தீயை விதைக்கும் வழிகாட்டியின்
தேவையை மறுக்கும் தீரன் எவனுமிருந்தால்
அவன் தன் தலையில் தானே தீயை
வைத்துக்கொள்ளட்டும்!
*
மா.கணேசன்/ 5.08.2016
--------------------------------------
No comments:
Post a Comment