"ஏன் இங்கே ஏதுமில்லாமலிருப்பதற்குப்பதிலாக ஏதோவொன்று (உலகம்)
இருக்கிறது?"
ஆம், இக்கேள்வி அடிப்படையிலேயே தவறானது! உலகம் என்று ஒன்று
இருப்பதனாலும், நாம் அதன் பகுதியாக இருப்பதனாலும்தான் அதற்கு எதிர்
நிலையாக ஒன்றுமில்லாத நிலை பற்றிய கேள்வியை எழுப்புகிறோம்!
இதற்கு மாறாக, நாம் ஒன்றுமில்லாததின் பகுதியாக இருக்கும் பட்சத்தில்
ஏதோவொன்று இருக்கவேண்டுமே? என்று கேட்போமா என்ற கேள்வியைப்
போன்றே அக்கேள்வி அபத்தமானது. ஆனால், உலகம் இருக்கிறது, அதில்
பிற விஷயங்களோடு நாமும் இருக்கின்றோம். இந்நிலைமையில், எது
சரியான கேள்வியென்றால், உலகம் ஏன் இருக்கிறது, அதாவது எந்த நோக்
கத்திற்காக, குறிக்கோளுக்காக இருக்கிறது? அதில் நாம் ஏன், எதற்காக
இருக்கிறோம், நம் வாழ்க்கையின் குறிக்கோள் மற்றும் அர்த்தம் என்ன?
என்பன போன்ற கேள்விகள் தான். அவற்றிலும், நம் வாழ்க்கை பற்றியும்,
நம்மைப்பற்றியும், நமது தோற்றம் அல்லது தொடக்கம் பற்றியுமான கேள்
விகளே உலகை, பிரபஞ்சத்தைப் பற்றியதாய் எழுப்பப்படுகின்றன. அதே
வேளையில், பிரபஞ்சம் ஏன், எதற்காகத் தோன்றியது என்கிற கேள்விக்கும்,
பிற பல கேள்விகளுக்குமான பதில்கள், பிரபஞ்சம் என்றால் என்ன என்ப
தைப்புரிந்து கொள்வதிலேயே அடங்கியுள்ளன!
கேள்விகள், அவை, "ஏன் இங்கே ஏதுமில்லாமலிருப்பதற்குப்பதிலாக ஏதோ
வொன்று (உலகம்) இருக்கிறது?" என்பதைப்போன்று தவறானதாக, அர்த்த
மற்றதாக இருந்தாலும்; அல்லது உலகம் ஏன் இருக்கிறது, அதாவது எந்த
நோக்கத்திற்காக,குறிக்கோளுக்காக இருக்கிறது?அதில் நாம் ஏன்,எதற்காக
இருக்கிறோம், நம் வாழ்க்கையின் குறிக்கோள் மற்றும் அர்த்தம் என்ன?
என்பன போன்று அர்த்தமுள்ளவையாக இருந்தாலும்; எல்லாக்கேள்விகளும்
மனிதன் தன்னையும், தனது வாழ்க்கையையும், தான் வாழும் இவ்வுலகை
யும் அர்த்தப்படுத்திக்கொள்வதற்கான தத்துவார்த்தக்கேள்விகளேயாகும்!
தத்துவம் என்பது மனிதன் முதன்முறையாக சிந்திக்கத் தொடங்கியதிலி
ருந்தே, கேள்விகளைக் கேட்கத்தொடங்கியதிலிருந்தே தொடங்கிவிட்டது!
தத்துவம் என்பது பல்கலைக்கழகத் துறை சார்ந்ததல்ல; அது ஒவ்வொரு
சிந்திக்கும் மனிதனின் அடிப்படை குணாதிசயம் ஆகும். ஆனால், பெரும்
பாலான மனிதர்கள் சிந்திப்பதேயில்லை என்பதால், தத்துவம் என்பது அரி
திலும்அரிதான சில தனிமனிதர்களின் "அதிசய" குணம் என்பதாகிவிட்டது!
நான் இங்கு குறிப்பிடவிரும்புவது என்னவென்றால், தத்துவச்சிந்தனைதான்
முதலில் தோன்றிய அறிதல் முறையாகும். கலை, இலக்கியம், இசை, சமயம்,
விஞ்ஞானம் போன்ற யாவும் தத்துவச்சிந்தனையைப் பின்பற்றி உருவான
வையேயாகும்! முதன்முதலில், எவரும் சோதனைக்குழாயை கையிலெடுத்
துக்கொண்டு சிந்திக்கத்தொடங்கவில்லை!
சிந்தனை என்பது மனிதனின் அடிப்படைக்குணாம்சம் என்று சொன்னேன்;
ஆனால், சிந்தனைக்கான அடிப்படை பற்றியும் சிந்திக்கவேண்டாமா? ஆம்,
தேவைதான் அறிவுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும், அனைத்திற்கும் அடிப்
படையாகும். அதே வேளையில், எத்தகைய தேவைகள் தத்துவ அறிவுக்கும்,
தொழில் நுட்பக்கண்டுபிடிப்புக்கும் தாயாக அமைந்தன என்பதைப்பிரித்து
அறிவதும் மிகவும் அவசியமாகும். ஏனெனில், தேவைகளுக்கிடையேயான
வித்தியாசம் தான் தத்துவத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் உள்ள வித்தியா
சத்தை உருவாக்குகிறது.
உடனடியானதும், அன்றாட, நடைமுறைத் தேவைகளும் தான் விஞ்ஞானத்
திற்கும், தொழில் நுட்பத்திற்கும் அடிப்படையாகும். இத்தேவைகளை நான்
"லௌகீகத் தேவைகள்" என்று குறிப்பிடுகிறேன். இந்த லௌகீகத் தேவைக
ளைக்கடந்த மனிதஜீவிக்கேயுரிய இன்னொரு அதிமுக்கியமானதேவையும்
உள்ளது, அதை நான் "ஆன்மீகத் தேவை" என்கிறேன். "ஆன்மீகம்" என்ற
சொல்லை நான் ஆழமானதொரு தனி அர்த்தத்தில் பயன்படுத்துகிறேன்.
அதாவது, ஒவ்வொரு மனிதனும் தான் அடைந்தாக வேண்டிய உணர்வுப்
பரிணாமத்தின் உச்சம் குறித்த விழைவை நான் "ஆன்மீகத் தேவை" எனக்
குறிப்பிடுகிறேன்! மிகத் துல்லியமாகச் சொன்னால், லௌகீகத்தேவைகள்
உயிர்-வாழ்தலுக்குரிய பல்வேறு பொருட்களை இலக்காகக் கொண்டது.
ஆன்மீகத் தேவை என்பது, உயிர்-வாழ்தலின் அர்த்தத்தை, ஞானத்தை
இலக்காகக்கொண்டது.
தத்துவமாகட்டும், விஞ்ஞானமாகட்டும், அல்லது வேறு எவ்வொரு அறிதல்
முறையாகட்டும், எல்லாவித அறிதல் முறைகளுக்கும் சிந்தனைதான் அடிப்
படையாகும். இன்னும், மிகவும் நடைமுறைரீதியான தொழில்நுட்பத்திற்கும்
சிந்தனை, அல்லது அறிவு தான் அடிப்படையாகும்.
கற்கால மனிதன் கல்லைத் தேய்த்துத் தீட்டிக் கூர்மையாக்கி, அதை ஒரு
நீண்ட குச்சியின் ஒர்முனையில் கட்டி ஈட்டி போன்றதொரு ஆயுதமாக,
அல்லது கருவியாக உருவாக்கும்படிச்செய்தது ஒரு குறிப்பிட்ட தேவையே
ஆகும்! ஆனால், அத்தேவையை நிறைவேற்றத் தேவையான ஒப்பற்ற கருவி
யாக அமைந்தது மனிதனின் சிந்தனையும், அதன் வழி பெறப்பட்ட அறிவும்
தானாகும்! தொழில் நுட்பத்தின் முன்னோடி கற்கால மனிதனே எனலாம்!
ஆனால், கடுமையான சூழ்-நிலைமைகளில், உயிர்-பிழைத்தலே பெரும்
பாடாக இருந்த காலங்களில் கற்கால மனிதன், தன்னைப்பற்றியும், உலகம்
மற்றும் தனக்கும் உள்ள தொடர்பு பற்றியும், தனது வாழ்க்கையின் அர்த்தம்
பற்றியும் சிந்தித்திருப்பானா என்பது சந்தேகமே! ஏனெனில், இன்று, சகல
சௌகரிய (சாதன) ங்களுக்கு மத்தியில், இந்த 21-ம் நூற்றாண்டிலும் கூட
அடிப்படையான இவ்விஷயங்கள் குறித்து நம்மில் பெரும்பாலான மனிதர்
கள் சிந்திப்பதாகத்தெரியவில்லை!
"தத்துவம்" என்று நான் குறிப்பிடுவது, உயிர்-வாழ்தலின் தேவைகளைக்
கடந்து, "வாழ்க்கை" என்றால் என்ன என்று புரிந்து கொள்ளும் மிக ஆழமான
சிந்தனைச் செயல்பாட்டையே ஆகும். ஆனால், தத்துவமானது, தர்க்கம்
(Logic), அறிவுத் தோற்றவியல்(Epistemology),மெய்யியல் (Metaphy
sics),அறவியல் (Ethics),அரசியல் (Politics) என்பதான உட்பிரிவு
களைக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படும் பிரிவினையில் எனக்குச் சிறி
தும் உடன்பாடில்லை! ஏனெனில், வாழ்க்கையை நாம் துண்டுகளாக்கி வாழ
முடியாது; உடைந்த கண்ணாடித்துண்டுகளை ஒட்டுப்போட்டதுபோல ஒன்று
சேர்த்து அதில் நம் முகத்தை சிதைவின்றி முழுமையாகக் காண முடியுமா?
மேலும், தத்துவத்தை தர்க்கம், அறிவுத் தோற்றவியல், மெய்யியல், அறவி
யல், அரசியல் என ஐந்து பாகங்களாக மட்டும்தான் பிரிக்க இயலும் என்ப
தில்லை; மாறாக, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒரு தத்துவப்
பிரிவாக, அல்லது துறையாக எண்ணற்ற வகையில் துண்டாட முடியும்!
விஷயம் என்னவெனில், ஒரு சௌகரியத்திற்காக உட்பிரிவுகளைக்கொண்
டதாக தத்துவத்தைக் காணலாம்; எனினும், நம்முடைய தத்துவப்பார்வை
துண்டுபடாத முழுமையாய் அமையவேண்டும்!
முதலில் தோன்றியது தத்துவம் தான், அதுவே விஞ்ஞானத்திற்கான அடிப்
படையாகவும் அமைந்தது.ஆரம்பக்காலக்கட்டங்களில் விஞ்ஞானம் என்பது
இயற்கைத்தத்துவம் என்றே அழைக்கப்பட்டது. விஞ்ஞானம் என்பது, தத்து
வச் சிந்தனையிலிருந்து பிரிந்து போனதொரு சிந்தனைப்போக்கு அல்லது
அறிதல்முறை ஆகும்! குறிப்பாக, சாக்ரடீஸ்க்கு முந்தைய கிரேக்க தத்துவ
ஞானிகளில், குறிப்பாக,கி.மு. 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேலீஸ் (Thales,
624-546 BCE) -ன் சிந்தனைகளுடன் தத்துவம் திரிந்து விஞ்ஞானச்
சிந்தனைக்கு வித்திட்டது எனலாம்! இதே காலக்கட்டத்தில், கி.மு. 600 ம்
ஆண்டில், இந்தியாவிலும் சார்வாகர் தத்துவப்பள்ளியும் பொருண்மை
வாதக் கோட்பாட்டை உருவாக்கியது!
அதாவது, சாக்ரடீஸ்க்கு முந்தைய கிரேக்க தத்துவஞானிகள் இயற்கை
நிகழ்வுகள் குறித்த மரபான புராணிக விளக்கங்களைப் புறந்தள்ளி காரண
காரிய அடிப்படைகளைத்தேடினர். அவர்கள் "பொருட்களின் சாரம்" பற்றிய
கேள்விகளைக்கேட்டனர்.
• எல்லாம் எங்கிருந்து வந்தன?
• எதிலிருந்து எல்லாம் உருவாயின?
எனும் இந்த இரு விதிவசமான கேள்விகள் தான் விஞ்ஞானச் சிந்தனையின்
தொடக்கத்திற்கான அடிப்படையை அமைத்தது எனலாம்.கிரேக்க தத்துவத்
தின் தந்தை என்றழைக்கப்படும் தேலீஸ், "தண்ணீர்" தான் அனைத்துக்கு
மான அடிப்படை ஆதிப்பொருள் என்று அ றிவித்தார். அவரையடுத்து வந்த
அனாக்ஸிமேண்டர் (Anaximander, 610-546 BCE), பண்புகளேதுமற்ற
"எல்லையில்லாத்தன்மை"யே அனைத்திற்கும் மூலம் என்றார். அவருக்கு
இளையவரும், சமகாலத்தவருமான அனாக்ஸிமெனெஸ் (Anaximenes,
585-525 BCE), "காற்று" தான் அனைத்திற்கும் அடிப்படை மூலமுதல்
பொருள் என்றார். பிறகுவந்த பித்தாகோரஸ் (Pythagoras,582-496 BCE)
எல்லாம் எண்களே என்றார். பிறகு, கி.மு. 5-ம் நூற்றாண்டில், லுசிப்பஸ் மற்
றும் அவரது மாணவரான டெமாக்ரிட்டஸ் (Democritus,460-370 BCE)-ம்
முதல் பருப்பொருள் மையக் கோட்பாடான அணுக்கொள்கையை உருவாக்
கினர். அதன்படி, சிறிய பகுக்கமுடியாத எண்ணற்ற எண்ணிக்கையிலான
அணுக்களின் சேர்க்கையினால் பலவித பொருட்கள் உருவாயின என்றனர்.
இந்த ஆதி அணுக்கொள்கையே பின் வந்த அணுக்கொள்கைகளுக்கும், இன்
றைய நவீன-அணுத்துகள் பௌதீகத்திற்கும் முன்னோடி எனலாம்.
விஞ்ஞானச்சிந்தனைக்கு வித்திட்டவர்கள் சாக்ரடீஸ்க்கு முந்தைய கிரேக்க
தத்துவஞானிகள் மட்டுமல்ல; சாக்ரடீஸ்க்கு பிறகு வந்தவர்களில் பிரதான
மாக, தத்துவஞானி பிளேட்டோவின் மாணவரான அரிஸ்ட்டாட்டில்-ன் தத்து
வச் சிந்தனைகளிலேயே விஞ்ஞானம் நோக்கிய தடம்-மாறுதல் மிகத்தெளி
வாகத் தொடங்கிவிட்டது என்பதைக்காணலாம்!
நாம் ஒன்றும் இக்கட்டுரையில் விஞ்ஞானத்தின் வரலாற்றைப்பற்றி விலா
வாரியாக அலசிக்கொண்டிருக்கவில்லை! நாம் கவனிக்கவேண்டிய அதி
முக்கியவிஷயம், எவ்வாறு பொதுவானதும், அடிப்படையானதுமான தத்து
வார்த்தக்கேள்விகள் விஞ்ஞானத்திற்குரியதாகக்களவாடப்பட்டது என்பதே!
அதாவது, மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு கேள்விகளில் முதல் கேள்வியான
"எல்லாம் எங்கிருந்து வந்தன?" என்ற அசலான தத்துவக்கேள்விக்கு இன்று
வரை விஞ்ஞானத்தினால் பதில் கண்டுபிடிக்கமுடியவில்லை! அதே வேளை
யில், இரண்டாவது கேள்வியான "எதிலிருந்து எல்லாம் உருவாயின?" என்ற
கேள்வியை விஞ்ஞானம் இறுகப்பிடித்துக்கொண்டுவிட்டது எனலாம். ஏனெ
னில், "எல்லாம் பொருளிலிருந்து உருவானது!" எனும் எளிய பதிலைக்
கொண்டு விஞ்ஞானம் தன்னை வலுவான அறிதல்முறையாக நிறுவிக்
கொண்டுவிட்டது! இந்த இரண்டாவது கேள்விக்கான பதிலைக்கொண்டே
அது முதல் கேள்வியை சமாளித்துக்கொண்டுவருகிறது!
அதாவது, "எதிலிருந்து எல்லாம் உருவாயின?" என்பதற்கு விஞ்ஞானம் தந்த
பதில் "எல்லாம் பொருளிலிருந்து உருவானது!" என்பதே. முதல் கேள்வியான
"எல்லாம் எங்கிருந்து வந்தன?" என்பதற்கு விஞ்ஞானம் தந்த பதில் மிகவும்
அலாதியானது: "எல்லாம் எங்கிருந்தும் வரவில்லை, ஏனெனில் உலகமானது
என்றென்றுமாய் இங்கேதான் இருக்கிறது! அதற்கு ஆரம்பமும் இல்லை,முடி
வும் இல்லை! அது, இயற்கையாக, யாதொரு படைப்பாளி அல்லது கடவுள்
எதுவும் தேவைப்படாது தானேதோன்றியதாய் இருக்கிறது!" என்று சொல்லி
வருகிறது. மிகவும் சமீபத்தில், 2012-ல் வெளியான பௌதீக விஞ்ஞானி
லாரன்ஸ் க்ராஸ் (Lawrence Krauss)தனது "ஒன்றுமில்லாததிலிருந்து ஒரு
பிரபஞ்சம்" (A UNIVERSE FROM NOTHING) எனும் நூலில், பிரபஞ்சமானது
ஒன்றுமில்லாத நிலையிலிருந்து தோன்றியது என்று அறிவித்த கையோடு,
ஒன்றுமில்லாதது என்பது உண்மையில் ஒன்றுமில்லாததல்ல, மாறாக, அது
சக்தியும் பொருண்மையானதுமாகும் என்று சொல்லி தானும் ஒரு பொருள்
முதல்வாதி தான் என்பதை இனம் காட்டியுள்ளார்!
அடிப்படையான தத்துவச்சிந்தனையிலிருந்து தடம் மாறிப்போன சிந்தனை
தான் விஞ்ஞானச்சிந்தனை என்று சொன்னோம். அதாவது வாழ்க்கை எனும்
முழுமையின் ஒரு பகுதியான உலகின் மீது தனது கவனிப்பு, சிந்தனை
மொத்தத்தையும் தாரைவார்த்துத்தந்துவிட்ட ஒரு அறிதல்முறைதான் விஞ்
ஞானம்! அதாவது, மிகத்துல்லியமாக, விஞ்ஞானம் என்பது பருப்பொருளா
லான உலகைப்பற்றிய ஆய்வு என்பதற்கு மேல் வேறில்லை! ஆனால், பருப்
பொருளாலான உலகைப் பற்றிய ஆய்வுமுடிவுகளின் வழியாக பெறப்படும்
பௌதீக உலகைப்பற்றிய புரிதலைக்கொண்டு மனித வாழ்க்கை மொத்தத்
தையும் அளவிடுவதும்,மதிப்பிடுவதும்,கணிப்பதும் முறையாகாது என்பதை
நாம் கவனத்திற்கொள்வது அவசியமாகும்
ஏனெனில், மெய்ம்மை (Reality)என்பது, விஞ்ஞானிகள் கருதுவது போல
பருப்பொருளாலான உலகமோ,அதன் விசேடமானதொரு பண்போ, அல்லது
அதன் சாரமான பண்போ, அல்லது எவ்வகையிலேனும் உலகைச் சார்ந்த
ஒன்றோ அல்ல! மாறாக, மெய்ம்மை என்பது பருப்பொருளாலான உலகை
உள்ளடக்கியதும், அதனைக்கடந்ததும் ஆகும்!
ஒருவகையில், அடிப்படையான தத்துவச்சிந்தனையிலிருந்து தடம் மாறிப்
போனது தான் விஞ்ஞானம் என்றாலும், இவ்வாறு தடம் மாறிப்போவது என்
பதும் தவிர்க்கவியலாத ஒன்றே ஆகும்! ஏனெனில், பருப்பொருளாலான
உலகையும், அதற்கும் மனித ஜீவிகளாகிய நமக்கும் உள்ள தொடர்புறவை
யும் புரிந்துகொள்வதும் அவசியமே! அதே நேரத்தில், வாழ்க்கையில், நமது
புரிதலில், விஞ்ஞானத்தின் முறையான இடம், பங்கு, பணி, பாத்திரம் ஆகிய
வற்றை மிகத்துல்லியமாக வரையறுத்து, அதற்கேற்ப அதைப் பயன்கொள்
வது என்பது மிகமிக அவசியமாகும். இல்லாவிடில், விஞ்ஞானம் விளைவித்த
கனிகளைக்காட்டி தத்துவத்தைப் பின்தள்ளி தன்னை முன்னிறுத்திக்
கொண்டுவிடும் அபாயம் நேர்ந்துவிடக்கூடும்! அதற்கான அறிகுறிகள் ஏற்க
னவே பல விஞ்ஞானிகளின் பேச்சிலும், எழுத்திலும் வெளிப்பட்டுள்ளன.
குறிப்பாக,
• விஞ்ஞானி ரிச்சர்ட் ஃபெயின்மேன் (Richard Feynman) 'தத்து
வம் ஒரு போதை' என்று குறிப்பிட்டுள்ளார்.
• விஞ்ஞானி ஸ்டீவென் வெயின்பெர்க் (Steven Weinberg) தனது
இறுதிக்கோட்பாடு பற்றிய கனவுகள் (“Dreams of a Final Theory”
1993) எனும் நூலில் "தத்துவத்திற்கு எதிராக" என்ற தலைப்பில் ஒரு அத்தியா
யத்தையே எழுதியுள்ளார்.
• விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்க் (Stephen Hawking)"தத்துவம் செத்து
விட்டது" என, 2010-ல் வெளியான, தனது "மகத்தான வடிவமைப்பு" எனும்
நூலில் அறிவித்தார்.
• விஞ்ஞானி நீல் டெகிராஸி டைஸன் (Neil deGrasse Tyson)
"தத்துவம் ஒரு நேர வீணடிப்பு, இயற்கையுலகைப் புரிந்துகொள்வதற்கு அது
யாதொரு உருப்படியான பங்களிப்பையும் செய்திட வில்லை" என்றார்.
• விஞ்ஞானி லாரன்ஸ் க்ராஸ் (Lawrence Krauss),2012-ல் வெளியான
தனது "ஒன்றுமில்லாததிலிருந்து ஒரு பிரபஞ்சம்" எனும் நூலில், "விஞ்ஞானம்
முன்னேறிச்செல்லுகிறது ஆனால் தத்துவம் இரண்டாயிரம் வருடங்களில்
எவ்வித முன்னேற்றமும் காணவில்லை" என்கிறார்.
இவ்விஞ்ஞானிகளின் கூற்றுக்களிலிருந்து தெரியவருவது என்னவெனில்,
இவர்களுக்கு உண்மையில் விஞ்ஞானத்தின் தத்துவமும் தெரியவில்லை,
தத்துவத்தின் விஞ்ஞானமும் புரியவில்லை! ஏற்கனவே குறிப்பிட்டபடி,
விஞ்ஞானச் சிந்தனைக்கான வித்துக்களை, 2,500 ஆண்டுகளுக்கு முன்னர்
தூவியவர்கள் தத்துவவாதிகளே!இன்று பெருமிதத்துடன் அனுசரிக்கப்படும்
நவீனவிஞ்ஞானம் மிஞ்சிப்போனால், வெறும் 400 வருடங்களுக்கு முன்னர்
17-ம் நூற்றாண்டில் தொடங்கிய ''விஞ்ஞானப்புரட்சி" யின் தொடர்ச்சி தான்
என்பதை விஞ்ஞானிகள் மறந்துவிடக்கூடாது! மேலும், ''விஞ்ஞானப்புரட்சி"
என்பது திடீரென 17-ம் நூற்றாண்டில், ஓரிரவில் ஏற்பட்டதல்ல! மாறாக,
அதற்கு முன்னர் பல நூற்றாண்டுகளாக அடைகாக்கப்பட்டு வெளிப்பட்ட
தாகும். 2,000 ஆண்டுகளாக தத்துவம் முன்னேறவேயில்லை, என்பதாகக்
குறை கூறும் விஞ்ஞானிகள்; 17-ம் நூற்றாண்டிற்கு முன்புவரை விஞ்ஞானம்
ஏன் பெரிய அளவில் துளிர்க்கக்கூட இல்லை என்பதை உணரவேண்டும்!
தத்துவச்சிந்தனைக்கும் விஞ்ஞானச்சிந்தனைக்கும், வித்தியாசம் தெரியாத
விஞ்ஞானிகளுக்கு விஞ்ஞானத்தின் அடிப்படைகள் கூடத்தெரியாது என்று
சொல்லலாம். இதற்குக்காரணம், இன்று ஒருவர் ஒரு குறிப்பிட்ட விஞ்ஞானப்
பிரிவு, அல்லது துறையின் பாடங்களை (சிறிது சிறிதாக சேர்த்து தொகுத்து
வைக்கப்பட்ட அறிவை) சிலவருடங்களில் பயின்று, பிறகு அவ்வறிவை
நடைமுறைப்படுத்தும் வழிகளில், விஞ்ஞானியாகிவிட முடியும்! இவ்வகை
யில் விஞ்ஞானிகளாக ஆனவர்கள்தான் தத்துவத்தின் மகத்துவமறியாமல்
தத்துவத்தை இகழ்ந்து பேசி மலினப்புகழ் தேடிக்கொள்கின்றனர்! இவர்க
ளுக்கு நிச்சயம் விஞ்ஞானத்தின் தத்துவம் தெரியவாய்ப்பில்லை! இவ்வாறு
ஒரு குறிப்பிட்டவிஞ்ஞானத்துறையில் தேர்ந்த ஒருவரை ஒரு முழுவிஞ்ஞானி
எனக்குறிப்பிடவியலாது; வேண்டுமானால், அவரை அத்துறையின் நிபுணர்,
அல்லது வல்லுனர் என்றழைக்கலாம்! விஞ்ஞானி என்ற பெயரில், பட்டத்தில்
பலர் இருக்கலாம்; ஆனால், எல்லோரும் நியூட்டன்களோ,அல்லது ஐன்ஸ்டீன்
களோ அல்ல!இவ்வாறே,ஒருவர் பல தத்துவப்பாடங்களைப்பயின்று உடனே தத்துவஞானியாகிவிட முடியாது! தத்துவம் பயிலும் அனைவரும், சாக்ரடீஸ்
ஆகவோ, பிளேட்டோவாகவோ, அரிஸ்ட்டாட்டில்-ஆகவோ, இம்மானுவல்
காண்ட் ஆகவோ ஆகிவிடுவது கிடையாது!
ஆகவே, "தத்துவம் இரண்டாயிரம் வருடங்களில் எவ்வித முன்னேற்றமும்
காணவில்லை" எனும் 'விஞ்ஞானி' லாரன்ஸ் க்ராஸ் -ன் குற்றச்சாட்டு அர்த்த
மற்றதாகும். அவருக்குத் தத்துவம் பற்றி எதுவும் தெரியாது என்பதைவிட
அவருக்கு விஞ்ஞானம் பற்றிய அடிப்படையும் தெரியவில்லை என்பதுதான்
அவருடைய மட்டுப்பாடு! அவருடைய துறையில் அவர் விற்பன்னராக இருக்
கலாம் அவ்வளவுதான்!
அடுத்து, 17-ம் நூற்றாண்டில் தொடங்கிய ''விஞ்ஞானப்புரட்சி" தொடர்ந்து
அவ்வாறே வரலாறு படைத்துச்செல்லும், அதாவது தொடர்ந்து இன்னும் பல
நூற்றாண்டுகளுக்கு, அதே பாய்ச்சலுடன் முடிவேயில்லாமல் முன்னேறிக்
கொண்டேசெல்லும் என்று சொல்வதற்கு இடமில்லை! ஏனெனில்,ஏற்கனவே
"விஞ்ஞானத்தின் முடிவு" (THE END OF SCIENCE)பற்றிய முன்னறிவிப்பும்,
அதன்மீதான விவாதங்களும், 1996-லேயே தொடங்கிவிட்டன! இதுபற்றி பிறி
தொரு கட்டுரையில் காண்போம். எனினும், எல்லைகாணமுடியாத அளவில்
உலகம் பரந்ததாக இருப்பினும் பருப்பொருளின் பண்புகளும், விதிகளும்
அளவிற்குட்பட்டவையே, ஆகவே, பருப்பொருளாலான உலகைப்பற்றிய
ஆய்வான விஞ்ஞானம் ஒரு கட்டத்தில் (முழுமைபெற்று) முடிவடைந்து தான்
ஆகவேண்டும்!ஆக, எவரும், ஐயோ! விஞ்ஞானம் முடிந்துவிட்டதே என அஞ்ச
வேண்டாம்; ஏனெனில், 'விஞ்ஞானத்தின் முடிவு' என்பது உலகின் முடிவோ,
அல்லது, வாழ்வின் முடிவோ அல்ல!
விஞ்ஞானம் என்பது, நம்மைச்சுற்றியுள்ள உலகையும், பரந்த பிரபஞ்சத்தை
யும் புரிந்துகொள்வதற்கான ஒரு கருவி மாத்திரமே! உலகைப்புரிந்துகொள்
வதென்பது அதன்விதிகளைப்புரிந்துகொள்வதே;அவ்விதிகளைக்கொண்டு
நாம் நம் நடைமுறைவாழ்க்கைக்கான கருவிகளை, உபகரணங்களை, சாத
னங்களை, உருவாக்கிப்பயன்கொண்டு சௌகரியமாக உயிர்வாழ்கிறோம்!
ஆம், விஞ்ஞானம் மனிதவாழ்க்கையின் ஒரு பாதி தேவையை மட்டுமே
நிறைவு செய்யக்கூடியதாகும் என்பதை நாம் மனதிற்கொள்வது அவசியம்
ஆகும்!வாழ்க்கையின் இன்னொருபாதி தேவையை தத்துவத்தால் மட்டுமே
நிறைவு செய்ய இயலும்!
விஞ்ஞானத்தின் வளர்ச்ச்சி, முன்னேற்றம் என்பது அறிவுச்சேகரத்தின் மூல
மாக நிகழ்வதாகும்! ஒரு குறிப்பிட்ட துறையில் அறிவுச்சேகரமானது ஒரு
குறிப்பிட்ட திரும்புகட்ட-மதிப்பை(Critical-Value)எட்டியதும் அத்துறை
யில் பாய்ச்சல்-மிகுந்த திடீர் வளர்ச்சி சம்பவிப்பதாகிறது.மேலும்,விஞ்ஞான
அறிவு என்பது, குறிப்பாக, உலகைப்பற்றிய மிக ஆழமானதொரு விதியைக்
கண்டுபிடிப்பது எவ்வாறு நிகழ்கிறது என்பது, இன்னும் "விஞ்ஞானம்-மீறிய"
நிகழ்வாகவேயுள்ளது! ஆகவே, சர்வசாதாரணமாக எதற்கெடுத்தாலும்
'விஞ்ஞானம்', 'விஞ்ஞான-ரீதியான', 'விஞ்ஞான-பூர்வமான' என்று அளப்பது
அறிவீனமாகும்! ஏனெனில், விஞ்ஞான-அறிவின் உதயம் விஞ்ஞானபூர்வ
மானது அல்ல!! ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எவ்வாறு சார்பியல் கோட்பாட்டை உரு
வாக்கினார் அல்லது கண்டுபிடித்தார் என்பது எவருக்கும் தெரியாது! நாம்
சொல்லலாம், சார்பியல் கோட்பாட்டிற்கான அடிப்படைகள் ஏற்கனவே கண்
டறியப்பட்ட பிற கோட்பாடுகளில் அடங்கியிருந்தன எனலாம். ஆனால், ஏன்
அதே சார்பியல்கோட்பாட்டை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்-ன் அண்டைவீட்டுக்கார
ரான ராபர்ட் ஹாரிஸன் கண்டுபிடிக்கவில்லை?
ஆம்,விஞ்ஞானவகைப்பட்ட அறிவு, தத்துவவகைப்பட்ட அறிவு, இன்னும் எவ்
வகைப்பட்ட அறிவாயினும், "அறிவு" என்பது உள்ளதிலிருந்து உண்மையை
உய்த்துணரும் தனிமனிதனின் உணர்வார்ந்த ஈடுபாட்டின் வெளிப்பாடே!
வெறும் கண்-கவனிப்பு(Observation),பரிசோதனைகள்(Experiments),
தரவுகள்(Data)இவை மட்டுமே விஞ்ஞானக்கோட்பாடுகளாகவும், அறிவாக
வும் ஆகிவிடுவதில்லை! மாறாக, காரணகாரிய ஆராய்ச்சிகளையும் கடந்து
மனத்தின் அடித்தளத்திலிருந்து பீரிடும், உள்ளுணர்வு(Intuition) மற்றும்
உட்பார்வை(Insight)யின் வெளிப்பாடுகளே அறிவாகும்!
மேலும், விஞ்ஞானம் என்பது தொடர்ந்து சேகரித்துத்தொகுக்கப்படும் அறி
வைக்கொண்டு எழுப்பப்படும் மாளிகையாகும்! விஞ்ஞானம் முழுமையைத்
துண்டுபடுத்தி, அத்தனித்தனித்துண்டுகளைப்பற்றிய அறிவை இணைத்து
ஒரு ஒட்டுப்போட்டச் சித்திரத்தை(புரிதலை) உருவாக்கி அதையே உண்மை
என்று அறிவிக்கிறது! மேலும், விஞ்ஞானம் பௌதீக உலகையே முழுமை
எனக் கருதுகிறது! இதுவே விஞ்ஞானத்தின் அடிப்படைக்கோளாறும், முதல்
கோணலும் ஆகும். ஆனால், தத்துவம், உலகை முழுமையின் ஒரு பகுதியாக
மட்டுமே காண்கிறது. அதாவது, மனிதன் தன் உணர்வை மையமாகக்
கொண்டு உலகையும் பிற அம்சங்களையும் புரிந்துகொள்ளும் வழிமுறை
தான் தத்துவம் என்பதாகும்! ஏனெனில், மனிதன் தான் உலகின் மையம்!
மையத்தை (அதாவது தன்னை)அறிந்துகொள்ளும் விழைவின் ஒரு தொடக்
கம் தான் உலகையும் , பிற அம்சங்களையும் அறிந்து கொள்ளும் முயற்சி
யாகும்!
உண்மையில், முறையே விஞ்ஞானம் காண்கிற உலகமும், தத்துவம், சமயம்,
மற்றும் சாமானியமக்கள் காண்கிற உலகமும் ஒன்றல்ல! இவை ஒவ்வொன்
றும் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மையமாகக் கொண்டே அல்லது சார்ந்தே
உலகைக்காண்கின்றன. சாமானிய மக்கள் பொருளாதாரத்தை (அன்றாட
வாழ்க்கை,விலைவாசி)மையமாகக்கொண்டே உலகையும் அனைத்தையும்
காண்கின்றனர். சமயப்பார்வை, படைப்பாளியான கடவுளை மையமாகக்
கொண்டதாகும். தத்துவம் மட்டுமே புறத்தே எதையும் மையப்படுத்தாமல்,
மனிதன் எனும் மையத்திலிருந்து, உலகையும், பிறவனைத்தையும், குறிப்
பாக எதையும் விலக்கி ஒதுக்காமல் கணக்கில் கொண்டு காண்கிறது.
இத்தகைய தத்துவத்தை நான் "முறையான தத்துவம்" (Pure or Proper
Philosophy)என்று குறிப்பிடுகிறேன். ஏனெனில், தத்துவங்கள் பலவகைப்
பட்டவையாக உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு அம்சத்தை அல்லது ஒரு குறிப்
பிட்ட சித்தாந்தத்தை (Ideology) மையமாகக்கொண்டுள்ளது, அல்லது
சார்ந்ததாக உள்ளது. இவ்வகைப்பட்டவை முறையான தத்துவங்கள் அல்ல!
குறிப்பாக, பொருண்மைவாதம் அல்லது பொருள்முதல்வாதம் என்பதை
முறையான தத்துவமாகக் கொள்ளமுடியாது. ஏனெனில், முன்-முடிவுகளை
வைத்துக்கொண்டு தத்துவ விசாரத்தில் இறங்கமுடியாது. "பொருள் தான்
முதன்மையான நிஜம்" என பொருளை மையமாகக் கொள்ளும்பட்சத்தில்,
யாவற்றையும் அப்பொருளின் சொற்களிலேயே காண்பதும், விளக்கமளிப்
பதும் தவிர்க்கவியலாத தவறான அணுகுமுறையாக ஆகிவிடும்! ஏனெனில்,
"பொருள் தான் முதன்மையான நிஜம்" என முடிவு செய்துவிடும்போது,
எல்லாம் பருப்பொருளின் வெவ்வேறு வடிவங்கள், நிலைகள், பண்புகளே
என உயிர், மனம், உணர்வு, மனிதன் யாவற்றையும், பருப்பொருளின்
ஆகச்சிறிய கூறான அடிப்படை அணுத்துகள்களுக்குச் சுருக்கிக்காண்பது
என்பது மிக எளிதான விஷயமாகிவிடும்!
இவ்வாறே, விஞ்ஞானம் காண்கிற உலகம், பிரபஞ்சம், இயற்கை என்பதும்
நிஜமான உலகமோ, இயற்கையோ அல்ல! அவை முழுமையிலிருந்து
தனியே பிரித்தெடுக்கப்பட்ட (Abstracted) வையே ஆகும்! விஞ்ஞானம்
விளக்கிக்காட்டுகிற உலகம் என்பது ஒரு கருத்துச்சித்திரம் என்பதற்குமேல்
வேறெதுவுமல்ல!அதைஒரு கருத்துச்சித்திரம் என்பதைவிட கேலிச்சித்திரம்
என்று குறிப்பிடுவது இன்னும் பொருத்தமாக இருக்கும்! அதாவது, ஒருவரது
அல்லது ஒன்றினுடைய தனி இயல்புகளை மிகைப்படுத்திக்காட்டும் படம்
அல்லது வருணனைதான் கேலிச்சித்திரம் என்பதாகும். இவ்விடத்தில், விஞ்
ஞானமானது, உலகம் பொருளாலானது என்கிற அதன் தனி இயல்பை
மிகைப்படுத்தி, அதையே, அப்பௌதீகச்சடப்பண்பையே "மெய்ம்மை" என
அறிவிக்கிறது!
இவ்விடத்தில், தத்துவத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் உள்ள அடிப்படை வித்
தியா சத்தைப்புரிந்துகொள்வது அவசியமாகும், இல்லாவிடில், இரண்டிற்கும்
இடையே முரண்பாட்டைக் கற்பித்துக்கொண்டு தடுமாறிக் கொண்டிருப்
போம்! தத்துவம் என்பது மனிதவாழ்க்கையின் பிரதானத்தேவையை நிறை
வேற்றுகின்ற, மனிதவாழ்க்கையைப் பற்றிய முழுமையான, சாரமான பார்
வையை, புரிதலைக்குறிக்கிறது! மனிதவாழ்க்கை என்பது, மனிதனையும்,
பொதுவாக 'வாழ்க்கை' என்று தவறாகக் குறிப்பிடப்படும் அவனது குறுகிய
அன்றாட உயிர்-பிழைப்பு விவகாரத்தையும், உலகையும், அதாவது ஒட்டு
மொத்தப் பிரபஞ்சத்தையும் உள்ளடக்கியதாகும்.
தத்துவம் உலகை வாழ்க்கை எனும் முழுமையின் ஒரு பகுதியாகக் காண்கி
றது; விஞ்ஞானம் உலகம் எனும் பகுதியை முழுமையாக்க முயல்கிறது!
அதோடு அது மனிதனையும், அவனது வாழ்க்கையையும், உலகம் எனும்
பகுதியின் முக்கியத்துவம் ஏதுமற்ற ஒரு ஓரப்பகுதியாக மாற்றிவிட முயல்
கிறது! சாக்ரடீஸ்க்கு முந்தைய கிரேக்க தத்துவஞானிகள் இயற்கை நிகழ்வு
கள் குறித்த மரபான புராணிக விளக்கங்களைப் புறந்தள்ளி காரணகாரிய
அடிப்படைகளைத்தேடினர் எனக்கண்டோம். ஆனால், நவீன விஞ்ஞானமோ
உலகையே மெய்ம்மை(Reality)யாகவும், பொருண்மை(Materiality)ப்
பண்பை மெய்ம்மையின் சாரமாகவும் காண்கிறது. இவ்வாறு, சட-உலகை
முதன்மைப்படுத்தும் பான்மையை நான் விஞ்ஞானவகை புராணிகம் என்று
குறிப்பிடுகிறேன்.
அதாவது, பழம்புராணிக காலங்களில், உலகம் பலவகைப்பட்ட கடவுளர்க
ளாலும்,ஆவிகளாலும் நிறைந்திருப்பதாகவும்,வழக்கத்திற்கு மாறான நிகழ்
வுகள் சம்பவங்கள் கோபங்கொண்ட கடவுளர்களின் செயல்களென நம்பப்
பட்டன! இன்றைய நவீன விஞ்ஞானக் காலத்தில், "எல்லாம் பன்னிரண்டு
அணுக்கருத்துகள்கள் மற்றும் நான்கு அடிப்படைவிசைகளின்" ஜாலங்கள்
என நம்பப்படுகிறது! எல்லாம் ஆவிகளின் (Spirits)ஜாலங்கள் என்பதற்
கும், எல்லாம் அணுக்கருத்துகள்களின் ஜாலங்கள் என்பதற்கும் என்ன
பெரிய வித்தியாசம் உள்ளது? உள்ளது! ஆவிகளின் ஜாலங்கள் என்பது அப்
பாவித்தனமான நம்பிக்கையாகும். அணுத்துகள்களின் ஜாலங்கள் என்பது
நெடிய ஆராய்ச்சிகளின் விளைவாகப்பெறப்பட்ட புரியாத(அல்லது ஒரு சில
ருக்கு மட்டுமே புரியக்கூடிய ) கணிதக் குறியீடுகளாலான சமன்பாடுகள்
மற்றும் சூத்திரங்களைக் கொண்டு நிறுவப்படும் விஞ்ஞான - நம்பிக்கை
(Educated Belief)யாகும்!
விஞ்ஞானத்தின் தகிடுதத்தத்தை, இன்னும் சற்று ஆழமாகச்சென்று பார்ப்
போம்! அதாவது 17-ம் நூற்றாண்டில், கலிலியோ(Galileo)வும், நியூட்டனும்
(Newton) பொருட்களின் இயக்கம்பற்றிய விதிகளை அறிமுகப்படுத்திய
தற்குப்பிறகு, (இயற்கை) தத்துவமும், (விஞ்ஞான)பௌதீகமும் தனித்தனி
துறைகளாகப் பிரிந்து சென்றன. கெப்ளர் (Kepler)கண்டுபிடித்த கோள்
களின் இயக்கம் தொடர்பான சில ஆரம்ப விதிகளிலிருந்து நியூட்டன் தனது
இயக்க விதிகளைத் தருவித்துக்கொண்டார். அவ்விதிகளைக் கொண்டு,
ஹேலிஸ் வால் நட்சத்திரத்தின் மறுவருகை 1759-ல் நிகழும் என்ற கணிப்பு
நிறைவேறியது புதியவிஞ்ஞானத்தின் மகத்தான ஆற்றலை, நாமனைவரும்
காணும் வண்ணம் நிகழ்த்திக்காட்டியது! ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இத்
தகைய விஷயங்கள், கண்டுபிடிப்புகள் பிரமாதமானவையே. ஆனால், அந்த
எல்லைக்கு வெளியே இவை ஒன்றுக்கும் பயன்படாது!
ஏனெனில், பொருள்களின் இயக்கமும் அவைபற்றிய விதிகளும், அவற்றை
ஒட்டிய கண்டுபிடிப்புகளும் பலவித நடைமுறைப் பயன்களைத் தந்தாலும்
பொருட்களின் பௌதீக இயக்கத்திற்கும் மெய்ம்மைக்கும் உள்ள தொடர்பு
என்ன? பொருள், பொருளின் பௌதீக இயக்கம் இவைகள் மெய்ம்மையின்
(Reality) வெறும் பகுதிகள் தானே! இவை எவ்வகையிலும் இறுதியான
வையல்ல! (There is nothing ultimate about physical motion!)
அதாவது பௌதீக இயக்கத்தை நாம் முழுமையாகப் புரிந்து கொள்வதில்
தவறில்லை; ஆனால்,அப்புரிதல் எவ்வகையிலும் மெய்ம்மை என்றாலென்ன
என்று ஒருபோதும் விளக்கப்போவதில்லை! ஆக, பௌதீக உலகம் பற்றிய
முழுமையான புரிதல் பௌதீக உலகின் உண்மையை மட்டுமே விளக்குவ
தாயிருக்குமே தவிர, மனிதனைப் பற்றிய உண்மையை, அனைத்தையும்
உள்ளடக்கிய "வாழ்க்கை" எனும் முழுமையின் உண்மையை ஒருபோதும்
அது வெளிப்படுத்திடாது!!
நியூட்டனின் பௌதீகம் ஒரு குறிப்பிட்ட தளத்தில் மட்டுமே வெற்றிகரமாகச்
செயல்படக்கூடியது என்பதை சௌகரியமாக மறந்துவிடுபவர்கள் தான்
விஞ்ஞானத்தை உயர்த்தியும் தத்துவத்தைத் தாழ்த்தியும் பேசிவருகிறார்
கள். அதாவது, "பொருளின் இயக்கவிதிகளே பௌதீக உலகில் நிகழும்
எல்லா விஷயங்களையும், சம்பவங்களையும் தீர்மானிக்கின்றன; அதில்,
கடவுளுக்கு யாதொரு செயலூக்கமிக்க பாத்திரமும் கிடையாது!" என்று
சொல்லுகிற விஞ்ஞான-மூளைகளுக்கு, "அனைத்தையும் தீர்மானிக்கிற
இயக்கவிதிகளை தீர்மானித்தது எந்தவிதிகள்?" எனும் கேள்வி மட்டும் ஏன்
உதிக்காமல் போகிறது என்பது வினோதமே!
மேலும் , "எல்லா விஷயங்களையும், சம்பவங்களையும் பொருளின் இயக்க
விதிகளே தீர்மானிக்கின்றன;அதில்,கடவுளுக்கு யாதொரு செயலூக்கமிக்க
பாத்திரமும் கிடையாது!" என்றால், கடவுளின் இடத்தை 'இயக்க- விதிகள்'
எடுத்துக்கொண்டனவா?அடுத்து, அனைத்தயும் தீர்மானிக்கும் இயக்கவிதி
களைத் தீர்மானிக்க 'கடவுள்' தான் வேண்டுமா? இயக்கவிதிகளை இயக்கு
கின்ற (இன்னும் விஞ்ஞானம் அறியாத) உயர்-விதிகள் இருக்கக்கூடாதா?
அவ்விதிகள் ஏன் பொருண்மையல்லாத (Non-Material) ஒருஅம்சத்தின்
கருவிகளாக இருக்கக்கூடாது?
விஞ்ஞானி ஹாக்கிங்க், மற்றும் நீல் டெகிராஸி டைஸன், லாரன்ஸ் க்ராஸ்
ஆகியோரால் விஞ்ஞானத்திற்கும், தத்துவத்திற்கும் இடையே தொடங்கி
வைக்கப்பட்ட சர்ச்சை தற்போது கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருக்
கிறது. அது ஒரு சர்ச்சைதான் என்றாலும், அதில் எவ்வொரு பக்கம் வென்றா
லும் அது நம் அனைவருக்கும் தோல்விதான் என்று சிலர் கவலை தெரிவித்
துள்ளனர். அவர்களது கவலை அக்கறைக்குரியதுதான்; ஆனால், அவர்களது
புரிதல்தான்,பாவம்,மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது!அதாவது
மேற்குறிப்பிட்ட சர்ச்சையில், விஞ்ஞானம் வெல்லக்கூடுமெனில், அதுதான்
நம் அனைவருக்கும் மிகவும் அழிவுகரமான தோல்வியாக அமையும்! ஏற்க
னவே மனித இனம் அழிவின் பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது!
தற்போது முன்னனியில் இருப்பது விஞ்ஞானமே, விஞ்ஞான-உலகப்பார்வை
தான் மனித இனத்தை வழி நடத்திச்செல்கிறது.
ஒருபுறம், அன்றாடத்தைக்கடந்து வேறுஎதைப்பற்றியும் சிந்திக்காத பெரும்
மக்கள் திரள்; இன்னொருபுறம், தவறாகச் சிந்திப்பதையே தொழிலாகக்
கொண்ட கனிசமான எண்ணிக்கையிலான அடிப்படைவாத, பொருண்மை
வாத, சுருக்கல்வாத, நாத்திக 'விஞ்ஞானிகள்"! இவ்விரண்டுக்கும் இடையே
உருப்படியாகச் சிந்திக்கும் சில விஞ்ஞானிகள், மற்றும் தத்துவச்சிந்தனை
யாளர்களின் குரல் எடுபடுவதற்குரிய வாய்ப்புகள் மிக மிகக் குறைவே!
விஞ்ஞானத்தின் (பெரிதும் தொழில் நுட்பரீதியான) ஆரவாரமான கண்டு
பிடிப்புகள் மற்றும் முன்னேற்றங்கள் தத்துவம் உள்ளிட்ட , மானுடவியல்,
கலாச்சாரம், வரலாறு, கலை, இலக்கியம் ஆகிய பிறதுறைகளையும் ஓரங்
கட்டி பின்னுக்குத்தள்ளிவிட்டன! நம்மில் பெரும்பாலானவர்களுக்கு விஞ்
ஞானம் கண்டறிந்து சொல்லும் "உண்மைகள்" வேறு; விஞ்ஞானம் நமக்குக்
கொடுக்கும் பொருட்கள்(கருவிகள்,சாதனங்கள், உபகரணங்கள்) வேறு என்
பது தெரிவதில்லை!இவ்விரண்டு அம்சங்களிலும் அனுகூலங்களும் உள்ளன;
ஆபத்துகளும் அடங்கியுள்ளன!
விஞ்ஞான உண்மைகள் ('இயற்கை விதிகள்' எனும் வடிவத்தில் ) இல்லாமல்,
யாதொரு தொழில்நுட்பச் சாதனமும் இல்லை. ஆம், விஞ்ஞானம் இல்லாமல்
அணுகுண்டுகளும் இல்லை, ஹைட்ரஜன்குண்டுகளும் இல்லை! ஆக, விஞ்
ஞான உண்மைகள் சமன்பாடுகள் வடிவில் கரும்பலகையில் எழுதப்படும்
போது அவை சாதுவாக தோற்றம் தருகின்றன! ஆனால், அவைகளை நாம்
ஆய்வுக்கூடங்களில் செயல்படவைக்கும்போது அபாயகரமான அணுகுண்டு
களாக மாறிவிடுகின்றன! 1905-ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது பிரத்யேக சார்
பியல் கோட்பாட்டின் ஒருபகுதியாக, மிகக்குறைந்த அளவு பொருளிலிருந்து
பெருமளவு சக்தியை வெளிக்கொணரமுடியும் என்கிற, மறைந்துகிடந்தஒரு
பௌதீகஉண்மையை E=mc2 எனும் சமன்பாட்டின் மூலம் வெளிப்படுத்திட,
அது 40 வருடங்களில், @0530 ஜூலை,1945-ல், அணுகுண்டாக வளர்ந்து முதல்
பரிசோதனையிலேயே வெற்றிகரமாக வெடித்து தன் ஆற்றலை நிரூபித்துக்
காட்டியது!
நம்மைப் பொறுத்தவரை, இக்கட்டுரையில், இப்போதைக்கு, விஞ்ஞானம்
கண்டறிந்து சொல்லும் உண்மைகளில் மறைந்திருக்கும் ஆபத்துக்களை
மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறோம்; தொழில் நுட்பத்தின் வழியாக
விஞ்ஞானம் கொடுக்கின்ற பொருட்களில் அடங்கியுள்ள சம்பத்துக்களை
யும், ஆபத்துக்களையும் பிறிதொருசமயத்தில் காண்போம்! சரி,விஞ்ஞானம்
கடந்த 400 ஆண்டுகளின் ஆராய்ச்சி முடிவுகளாக அப்படி எத்தகைய அரிய
"பேருண்மைகளை" எடுத்துச் சொல்லிவிட்டன?
பேருண்மை : 1
• உலகம், பிரபஞ்சம் என்பது என்றென்றுமாய் இருக்கிறது! அது மட்டுமே
நிஜம், அடுத்து பௌதீகச்சடப்பொருளே அனைத்திற்கும் அடித்தளம்,
அதுவே மூல-மெய்ம்மை!
பேருண்மை : 2
• உலகம், பிரபஞ்சம் அர்த்தமற்றது, குறிக்கோளற்றது!
பேருண்மை : 3
• பரிணாமம் குறிக்கோளற்றது, மற்றும் அது ஒரு குருட்டு நிகழ்வுமுறை!
பேருண்மை : 4
• மனிதன் என்பவன் பல விலங்கினங்களில் ஒரு விலங்கினம்!
பேருண்மை :5
• (மனித)வாழ்க்கை குறிக்கோளற்றது, மற்றும் அர்த்தமற்றது!
இவைதான், 400 ஆண்டுகளின், விஞ்ஞான-ஆராய்ச்சி முடிவுகளாக, உலகப்
புகழ்பெற்ற, நோபல் பரிசுபெற்ற பெரிய,பெரிய விஞ்ஞானிகள் கண்டறிந்து
விளம்பிய அரிய விஞ்ஞானப் பேருண்மைகள்! எவ்வளவு அற்புதமான அரும்
பெரும் வெளிப்பாடுகள்!
முதலிடத்தில், உலகம், பிரபஞ்சம் என்பது இருக்கிறது! அதை நாம் மறுக்க
வில்லை! ஆனால், அது மட்டுமே நிஜம், அதாவது பௌதீகச்சடப்பொருளே
மூல-மெய்ம்மை! என்பது 'விஞ்ஞானிகள்' என்று சொல்லிக்கொள்கிறவர்
களின் ஒரு அக-வயமான கருத்தே, விஞ்ஞானவகை மூட-நம்பிக்கையே!
இந்தத் தவறான தொடங்கு-புள்ளியில் ஆரம்பிக்கப்பட்ட இவர்களது ஆய்வு
கள் அபத்தமான முடிவுகளுக்குத்தான் இட்டுச்செல்லும்!
உலகம்,பிரபஞ்சம் மட்டுமே நிஜம்!பௌதீகச்சடப்பொருளே அனைத்திற்கும்
அடித்தளம், அதுவே மூல-மெய்ம்மை! உலகம், பிரபஞ்சம் அர்த்தமற்றது,
குறிக்கோளற்றது! பரிணாமம் குறிக்கோளற்றது, மற்றும் அது ஒரு குருட்டு
நிகழ்வுமுறை! மனிதன் என்பவன் பல விலங்கினங்களில் ஒரு விலங்கினம்!
(மனித)வாழ்க்கை குறிக்கோளற்றது,மற்றும் அர்த்தமற்றது! இத்தகைய படு
அபத்தமான உண்மைகளைக் கண்டுபிடித்துச் சொல்வதற்கு விஞ்ஞானிகள்
எதற்கு? விஞ்ஞானம் எதற்கு? இருத்தலியல்வாதிகளே (Existentialists)
போதுமே?ஆய்வுக்கூடங்கள்,நெடும் ஆராய்ச்சிகள், பரிசோதனைகள், அதற்
கான ஒதுக்கு நிதிகள் (Funds) ஆகியவையெல்லாம் எதற்கு?
மேலே பட்டியலிடப்பட்டுள்ள இந்த ஐந்து அபத்தமான கூற்றுக்கள்,உண்மை
யில் விஞ்ஞானத்தின் வெளிப்பாடுகளாக இருக்க வாய்ப்பில்லை! மாறாக,
ஆராய்ச்சிகளின் வழியாக திரட்டப்பட்ட தரவுகளிலிருந்து, சித்தாந்தச்சார்பு
கொண்ட விஞ்ஞானிகளால் தவறாகத் திரித்துக்கூறப்பட்ட முடிவுகளாகத்
தான் இருக்கமுடியும்! இந்தலட்சணத்தில் இவ்விஞ்ஞானிகள் தத்துவத்தைக்
குறைகூறிக்கிளம்பிவிட்டார்கள்! 2,000 வருடங்களில் தத்துவம் முன்னேறவே
இல்லை; விஞ்ஞானம் மட்டும்தான் வளர்ந்துள்ளது, முன்னேறியுள்ளது என்று
சிறுபிள்ளைத்தனமாக புகார்சொல்லுகிறார்கள்!
ஒருவகையில், தத்துவச் சிந்தனையானது தொய்வடைந்து காணப்படுவது
உண்மையே! அதே நேரத்தில், "தத்துவம் செத்துவிட்டது!" எனும் ஸ்டீபென்
ஹாக்கிங்க்-ன் கூற்று அடிப்படையற்றது, அபத்தமானது. ஏனெனில்,விஞ்ஞா
னத்தைப்போல வழிவழியாகச் சேகரித்துத் திரட்டப்பட்ட அறிவுத்தொகுப்பி
லிருந்து கடன்வாங்கிய அறிவைக்கொண்டு தத்துவச்சிந்தனை வளர்வதோ
முன்னேறுவதோ இல்லை! ஏனெனில், தத்துவம் தொடர்ச்சியற்றது, அதற்கு
வாரிசுகள் கிடையாது! அது சுயமாக சிந்திக்கும் தனிமனிதர்களின் அர்ப்ப
ணிக்கப்பட்ட உணர்வில் மட்டுமே உயிர்வாழவும், வளரவும், வளர்ந்து, கனி
கொடுக்கவும் கூடியது! அது பல்கலைக்கழகங்களில் பயிலக்கூடிய பாடத்
துறையன்று!
இறுதி உண்மை (The Ultimate Truth) யைக்கண்டறிவதே தத்துவம்
மற்றும் விஞ்ஞானம் இவ்விரண்டின் பொதுவான இலக்காக இருப்பதாக பல
காலமாக பலராலும் நம்பப்பட்டுவந்தது; நானும் அவ்வாறே எண்ணிக்
கொண்டிருந்தேன்! ஆனால், அது ஒரு தவறான புரிதல் என்பதை இப்போது
நான் மிகத்தெளிவாகப்புரிந்துகொண்டேன்! உண்மையில் இவ்விரண்டின்
குறிக்கோளும், இலக்கும் வேறு வேறானவை யாகும்! இரண்டும் மனிதனின்
இரண்டு வெவ்வேறு தேவைகளை நிறைவுசெய்யும் பொருட்டு, தோன்றிய
வையாகும்!
தத்துவம் மனிதனின் அகத்தேவையான ஆன்மீகத்தேவையை நிறைவேற்
றும் பொருட்டு அறியாமையின் கரையிலிருந்து "ஞானம்" எனும் இறுதிக்
கரைக்கு இட்டுச்செல்லும் வழிகாட்டியாகும்! பிரபஞ்சம் எனும் புறவுலகம்,
மனிதன் எனும் அகவுலகம் இவ்விரண்டையும் உள்ளடக்கிய "வாழ்க்கை"
எனும் முழுமையின் உண்மையை அறிவதே தத்துவத்தின் இலக்காகும்!
ஆனால், முழுமையின் பகுதியான புறவுலகின் உண்மையை அறிவது
மட்டுமே விஞ்ஞானத்தின் இலக்காகும்! எவ்வொரு விஞ்ஞானமும் அடிப்
படைக்கேள்விகளை எழுப்பி, அதாவது தத்துவமாகத்தொடங்கி, விபர-
உண்மைகளைத் (Facts)திரட்டி, அவற்றைக்கொண்டு கோட்பாடுகளைப்
பின்னி, முடிவில் தொழில் நுட்பத்தில் (Technology) முடிந்துவிடுகிறது!
விஞ்ஞானம் மனிதனின் புறத்தேவைகளான நடைமுறைத்தேவைகளை,
அதாவது லௌகீகத்தேவைகளை நிறைவேற்றும் விசுவாசமிக்க சேவகன்
ஆகும்!
தத்துவம் புறவுலகையும், லௌகீக வாழ்க்கையையும் மறுப்பதில்லை.
மாறாக, அவற்றைக்கடந்து செல்கிறது. விஞ்ஞானம் அறிந்த, கண்ணுக்குத்
தெரிகிற உலக-விருட்சத்தின் வேர்களில் உண்மையைத்தேடிக்கொண்டு
இருக்கிறது! தத்துவமோ உலக-விருட்சத்தின் உச்சியில் அதன் கனியில்
உண்மையைக் கண்டடைகிறது!
உண்மை என்பது உள்ளதை, உலகை, உய்த்துணர்ந்து அறியப்படுவதாகும்!
அவ்வாறு உய்த்துணரப்பட்ட உண்மை, உய்த்துணரும் (மனித) உணர்வின்
(மையமான) பகுதியாக உருப்பெறுகிறதே தவிர, அவ்வுண்மை ஒருபோதும்
பரு-உலகின் பகுதியாக இருப்பதில்லை! ஆம், உலகைப்பற்றிய உண்மை
உலகைச்சேர்ந்தது அல்ல!
•இக்கட்டுரைக்குத் தொடர்பான பிற கட்டுரைகளுக்கு காண்க எனது
வலைத்தளம் vicharamarg.blogspot.in
மா.கணேசன்/ நெய்வேலி/ 23.11.2016
----------------------------------------------------------------------------