Thursday, 22 December 2016

பழைய முகமூடிகளுக்கு புதிய முகமூடிகள் !





இக்கவிதைகளின்   ஒருவித   அதீதக்  கற்பனைக்காட்சியமைவும்,
எளிமையான   தோற்றமும்,     திடீர்த்தன்மையும் (Abruptness),
சுருக்கமான,      அவசரமான   நடையும்   படிப்பவர்களை   எளிதில்
ஏமாற்றிவிடக்கூடும்  -   மூல விஷயத்திலிருந்து  கவனத்தை வேறு
பக்கம்    திருப்பிடக்கூடும்.    இக்கவிதைகளில்    திரும்பத் திரும்ப
வருவது  "முகமூடி"  எனும் ஒரு விஷயம் தான்.   ஆனால், அது பற்றி
இக்கவிதைகளுக்கு  வெளியே  நான்  விளக்கம்   ஏதும்    கொடுக்க
இயலாது; நம்முள்ளும், நம்மைச்சுற்றியுள்ளவர்களுள்ளும் மண்டிக்
கிடக்கும்   பொய்மையின்,    போலித்தனங்களின்    ஒரு  மொத்தக்
குறியீடு     என்பதைத்தவிர.     இக்கவிதைகளைப்   படிக்கும்போது
வெளிப்படும்    நகைச்சுவைக்கும்   கீழே,  ஆழத்தில் 'முகமூடி'யின்
பலவித பரிமாணங்கள் படிந்துகள்ளன.

19.02.1989                                                               மா.கணேசன்/ நெய்வேலி
                       <•>

அவர்கள் ஏன் என்னை அப்படிப்பார்த்தார்கள்
என்பது முதலில் எனக்குப்புரியவில்லை
ஒருவேளை நிர்வாணமாய் வெளியே
வந்திட்டேனோவென்று
குனிந்து பார்த்தேன் - இன்னொரு முறை
எனது ஆடை மடிப்புகளைச்
சரி செய்துகொண்டேன்.
அவர்கள் எனது முகத்தைப்பார்த்துச்
சிரிப்பதாகத் தோன்ற
எனது முகத்தைத் தடவிப்பார்த்தேன்
ஒன்றும் இல்லை.
ஆனால், அவர்களது முகங்களை
உற்றுப்பார்த்தபிறகே தெரிந்தது
என்னிடம் முகமூடி இல்லையென்பது.



தெருவில் வியாபாரி
எதையோ கூவிச்சென்றான்
வெளியே
எட்டிப்பார்த்தேன்
"பழைய முகமூடிகளுக்கு
புதிய முகமூடிகள்"
என்று
கூவிச்சென்றான்.



சட்டையிலுள்ள
சிறு ஓட்டையைக் கண்டு
முகம் சுளிக்கும்
சமுதாயம்
மனிதரகளின்
முகமூடிகளை
அவை
எவ்வளவு தான்
கிழிந்து
தொங்கினாலும்
கண்டுகொள்வதில்லை.



எவ்வளவு தான்
பழசாகிப்போனாலும்
கிழிந்து போனாலும்
சமுதாயத்தில்
எப்போதும்
பயன்பாட்டில் இருப்பது
முகமூடிகள்
மட்டுமே.



இங்கே நான்
தேடிக்கொண்டிருக்கையில்
சற்று தள்ளி
ஒரே கூச்சலும்
குழப்பமுமாய் இருந்தது
அருகே சென்றேன்
அங்கே ஒரு கூட்டம்
சண்டையிட்டுக்
கொண்டிருந்தது
"உன்னுடையது
என்னுடையது"
என்று ஒரு முகமூடியை
வைத்துக்கொண்டு.



என் காதலி
என்னை மறுத்து விட்டாள்
எனது இம்முகம்
பிடிக்கவில்லையாம்
அவளுக்கு.



என்னிடம்
ஏராளமான
முகமூடிகள் உள்ளன
ஒவ்வொரு வேளைக்கும்
ஒவ்வொரு நபருக்கும்
என்று
கணக்கில்லாது.
இமைக்கும் நேரத்தில்
முகமூடிகளை
மாற்றிக்கொள்ளமுடியும்
என்னால்.
இருந்தும்
சில வேளைகளில் நான்
மிகவும் குழம்பிவிடுகிறேன்
இந்த வேளைக்கு எந்த
முகமூடியை
அணிவதென்று?



எனது பெரும்சோகம் :
எந்த முகமூடியும்  என்னை
எடுத்துக்காட்டுவதில்லை
என்பதுதான்!



அதிருப்தியில்
என் முகத்தை நானே
பிய்த்துக் கொள்கிறேன்
வெறும் முகமூடிகளாகக்
கழன்று விழுகின்றன
ஒன்று,
இரண்டு,
மூன்று,
. . . . .
. . . . . . .
. . . . . . . . .
முகமே இல்லாமல்
போய்விட்டால்
என்ன செய்வதென்று
அதிர்ச்சியில்
நிறுத்திக் கொண்டேன்.



நிலவெரிக்கும்
ஓரு முன்னிரவில்
எவருக்கும் தெரியாமல்
முகமூடியில்லாமல்
தெருவில்
இறங்கி நடந்தேன். . . . .
நேரம் போனது தெரியாமல்
இரவெல்லாம் சுதந்திரமாகச்
சுற்றித் திரிந்திட்டேன் -
என்பதை உணர்ந்ததும்
விடிவதற்குள்
எனது அறையை அடைந்திட
முகம் தெறிக்க
எடுத்தென்
ஓட்டம்.



ஓய்வாக
எனது
முகமூடிகளை
எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
கடந்த காலங்களில்
அவைகளால் கிடைக்கப்
பெற்ற
அனுபவங்களையும்
அனுகூலங்களையும்
அனைத்தையும்
ஒவ்வொன்றாக
அசைபோட்டவாறே -
ஆனால் எதுவும்
நிறைவளிப்பதாய் இல்லை.
இப்போது
எனது
உண்மையான முகத்தைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்.



நகருக்குள்
முகமூடிக்கொள்ளையர்கள்
அலைகிறார்கள்
என்று தெரிந்ததும்
சிறிது சந்தோஷப்பட்டேன்
ஆனால்
அவர்கள்
முகமூடிகளுக்காக
வரவில்லை
என்பது தெரிந்ததும்
முகம் வாடினேன் -
முகமூடிகளை
பத்திரப்படுத்திக்
கொண்டேன்.



உலகம் அழியப் போகிறது
எனும் கூற்றை என்றும் நான்
நம்பியது கிடையாது.
இன்று காலையில்
நண்பனின் மனைவிக்கு
புதிதாய்ப் பிறந்த குழந்தையைப்
பார்க்கச் சென்றிருந்தேன்
மருத்துவமனைக்கு -
குழந்தை அழகாகவே இருந்தது
ஆனால், முகமூடியுடன்!
திகைத்துப்போனேன் நான்.
நம்பமுடியாமல்
பக்கத்துக் கட்டில்களிலிருந்த
மற்ற குழந்தைகளைப் பார்த்தேன்
எல்லா குழந்தைகளுமே
முகமூடிகளுடன் இருப்பதைக்
கண்டவுடன்
பயம் என்னைப் பிடித்துக்
கொண்டது!



இப்போது
எனது
பெரும் பிரச்சினை :
"முகமூடியுடன் இருப்பதா?
அல்லது முகமூடியில்லாமல்
இருப்பதா?



முகமூடிகள் கிழிக்குமிடம் :
மா.கணேசன்
222, அசோக் நகர்-II
காந்தி நகர் அஞ்சல் -607308
குறிஞ்சிப்பாடி வட்டம்
கடலூர் மாவட்டம்
கைப்பேசி : 94881 94381

----------------------------------------------------------------------------





No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...