
"ஏன் இங்கே ஏதுமில்லாமலிருப்பதற்குப்பதிலாக
ஏதோவொன்று (உலகம்) இருக்கிறது?"
முதலிடத்தில் இக்கேள்வி அடிப்படையிலேயே தவறானது! உலகம் என்று
ஒன்று இருப்பதாலும், நாம் அதன் பகுதியாக இருப்பதாலும் தான் அதற்கு
எதிர்நிலையாக, 'ஒன்றுமில்லாத நிலை'(Nothing)என ஒன்றைக் கற்பனை
செய்துகொண்டு, தத்துவவாதிகள் தாங்களும் குழம்பியதோடு நம்மையும்
குழப்பிவருகிறார்கள்! சிலவேளைகளில் தத்துவவாதிகள் இருக்கிற பிரச்சி
னைகளை விட்டுவிட்டு, இல்லாத பொல்லாத பிரச்சினைகளையெல்லாம் கற்பனைசெய்துகொண்டு மண்டையை உடைத்துக்கொண்டிருப்பதும் ஒரு
வழக்கமாக இருந்துவந்துள்ளது!
முதலிடத்தில், "ஒன்றுமின்மை" அல்லது "சூன்யம்" என்றெதுவும் இல்லை
என்று முடிவு செய்வதற்கு முன், "ஒன்றுமின்மை" என்பது இருக்கிறது என்றே
வைத்துக்கொள்வோம்! அதாவது, காட்டில் விஷ-ஜந்துக்கள் இருக்கின்றன
என்றால், இருக்கட்டுமே; நாம் காட்டிற்குச் செல்லாமல் இருப்போம். அல்லது
அப்படியே காட்டிற்குச் செல்லவேண்டிய அவசியம் எழுந்தால், எச்சரிக்கை
உணர்வுடன், கவனத்துடன் சென்றுவரலாமே! அவ்வாறே, கற்பனைரீதியாக
அல்லது,தர்க்கரீதியாக "ஒன்றுமின்மை" அல்லது "சூன்யம்" என்பது சாத்திய
மாயினும், அதனால் என்ன பிரச்சினை? அதாவது, மெய்ம்மையை அறியும்
நம்வழியில் எவ்வகையிலேனும் "ஒன்றுமின்மை" அல்லது "சூன்யம்" என்பது
குறுக்கிடுகிறதா அல்லது தடையாக நிற்கிறதா? இல்லாத பூதத்தை நாமே
கற்பனை செய்துகொண்டு, அது குறித்து அஞ்சி நடுங்குவது எதற்கு?
ஆனால், உலகம் இருக்கிறது, அதில் பிற விஷயங்களோடு நாமும் இருக்கின்
றோம். இந்நிலைமையில், எது சரியான கேள்வியென்றால், உலகம் ஏன்
இருக்கிறது, அதாவது எந்த நோக்கத்திற்காக, குறிக்கோளுக்காக இருக்
கிறது? அதில் நாம் ஏன், எதற்காக இருக்கிறோம், நம் வாழ்க்கையின் குறிக்
கோள் மற்றும் அர்த்தம் என்ன? என்பன போன்ற கேள்விகள் மட்டும் தான்!
இவ்விடத்தில், " உலகம் ஏன் இருக்கிறது?" என்ற கேள்வியானது உலகின்
இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலானதல்ல! மாறாக, உலக இருப்
பின் நோக்கம், குறிக்கோள் ஆகியவற்றை அறிந்துகொள்ளும் பொருட்டு
எழும் கேள்வியாகும்! ஏனெனில், நாம் இங்கே இருப்பு (வாழ்க்கை) எனும்
ஆடுகளத்தின் நடுவே இருந்து கொண்டு, முறையாக ஆட்டத்தை ஆடாமல்,
அதாவது வாழாமல் ஆட்டத்தையும், அதன் விதிகளையும் பழித்துக்கூறுவது,
அல்லது கேள்விக்குள்ளாக்குவது முறையாகாது! மாறாக, ஆடுகளம் மற்றும்
ஆட்டத்தின் விதிகளை உய்த்துணர்ந்து கண்டுபிடித்து அவைகளை நிறை
வேற்றி இருப்பை முழுமைப்படுத்தும் வகையில் நாம் முழுமையாக வாழ்ந்
திட வேண்டும்!
பிரெஞ்சு தத்துவ சிந்தனையாளர் ஹென்றி பெர்க்ஸன்(Henri Bergson),
தனது "படைப்புப்பூர்வ பரிணாமம்" (Creative Evolution,1907)எனும்
நூலில், "பிரபஞ்சம் ஏன் இருக்கிறது என்பதை நான் அறியவிரும்புகிறேன்"
என்பதாக அறிவித்தார். அவரைப்பொறுத்தவரை, இருப்புக்கு எதிராக
இன்மையை நிறுத்தி எழுப்பப்படும் கேள்வி ஒரு பொய்த்தோற்றத்தை
அடிப்படையாகக் கொண்டது என்றார். அதாவது "ஒன்றுமின்மை" என்பது
சாத்தியம் என்கிற பொய்த்தோற்றம். மேலும் "முற்றான ஒன்றுமின்மை"
என்பது வட்டவடிவ சதுரம் என்பதைப்போல சுய-முரண்பாடானது என்றார்.
ஆக, "ஒன்றுமின்மை" என்பது ஒரு பொய்க்கருத்தாகையால், "ஏன் இங்கே ஒன்றுமில்லாமலிருப்பதற்குப் பதிலாக ஏதோவொன்று இருக்கிறது?"எனும்
கேள்வியும் போலியான கேள்வியாகும் என பெர்க்ஸன் கூறினார்.
இருப்பு எனும் புதிரின் சாரம் "ஏன் ஒன்றுமில்லாமலிருப்பதற்குப் பதிலாக
ஏதோவொன்று இருக்கிறது?" எனும் கேள்வியில் ஒன்று திரட்டப்பட்டிருப்ப
தாக, தத்துவ சிந்தனையாளர் ஜிம் ஹோல்ட் (Jim Holt) கூறுகிறார்.
ஆனால், இவரது இக்கூற்று தலைகீழானது! ஏனெனில், இருப்பின் மகத்துவம்
ஒன்றுமின்மையைச் சார்ந்திருக்கவில்லை! அதாவது இன்மைக்கு எதிராக,
அல்லது இன்மையின் தயவில், இருப்பு தன்னை நிறுவ வேண்டிய அவசியம்
எதுவும் இல்லை! இருப்பு, இவ்வுலகம், பிரபஞ்சம் இருக்கிறது! என்பதிலேயே
அதனுடைய புதிரின் சாரம் அடங்கியுள்ளது!
மேலும், மனிதஜீவிகளாகிய நாம், இருப்பின், இம்மாபெரும் பிரபஞ்சத்தின்
பிள்ளைகளே தவிர, (ஒன்றும்)இன்மையின் பிள்ளைகள் அல்ல! ஆகவே நாம்
இருப்பைக் கொண்டாடுவோமாக! இருப்பின் புதிரைத் தரிசித்தவர்கள் ஒரு
போதும் தம் வாழ்வில் - என்ன நேர்ந்தாலும் - சலிப்படைவதோ, மனக்குறை
கொள்வதோ, ஆர்வக்குறைவு அடைவதோ கிடையாது!
அதே வேளையில், இருப்பின் புதிரை தரிசிக்காதவர்களும், இருப்பின் இரக
சியத்தைப் புரிந்து கொள்ளாதவர்களும் தான் ஒன்றுமின்மை, வெறுமை
சூன்யம், என்றெல்லாம் 'வெற்றுத் தத்துவம்' பேசிக்கொண்டிருக்கிறார்கள்!
அசலான வாழ்க்கையின் அர்த்தம், நோக்கம் மற்றும் இலக்குடன் தொடர்
பில்லாத வகையில்அமைந்த சொந்த விவகாரங்கள் மற்றும் ஈடுபாடுகளில்
தம் விருப்பத்திற்கேற்ப வாழ்க்கை செல்லவில்லை என்பதாலும்;சமூக நடை
முறைகள், மதிப்புகள், பொருளாதார நிலைகள் ஆகியவற்றில் முன்னேற்ற
மடையாததாலும்; தாழ்வு மற்றும்,தோல்வி மனப்பான்மையாலும்,வாழ்க்கை
சாரமற்றதாக, அர்த்தமற்றதாக, வெறுமையாக இருப்பதாக பாமரர்கள்
மட்டுமின்றி, பல தத்துவவாதிகளும், குறிப்பாக, இருத்தலியல்வாதிகள்
(Existentialists) வெறுமையை, சூன்யத்தை சிலாகித்துப் பேசிவரு
கின்றனர்!
மேலும், பாராமுகம் கொண்ட பிரமாண்டமான இப்பிரபஞ்சத்தில் மனிதன்
என்பவன் தூசியிலும் தூசியாக பூமிக்கிரகத்தின் மீது ஒட்டிக்கொண்டிருக்
கிறான்! அவனது வாழ்காலமோ மிகக்குறுகியது; முடிவில் மரணம் அவனை
சூன்யத்தில் கரைத்துவிடுகிறது! அதாவது, " ஏன் இப்பிரபஞ்சம் நம்மைக்
கண்டுகொள்ளாமல் பாராமுகமாக உள்ளது? ஏன் நாம் அதனுடைய இத்
தகைய முக்கியத்துவமற்ற ஒரு பகுதியாக இருக்கிறோம்? ஏன் இங்கே ஒரு
உலகம் என்பது இருக்கிறது?" என, 1969-க்கான இலக்கியத்துக்கான நோபல்
பரிசுபெற்ற சாமுவல் பெக்கட்(Samuel Beckett)அறிய விரும்பினார். ஒரு
வகையில், "சாவு, நிலையாமை ஆகிய பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு
ஒப்பாரி வைக்கிறவர்கள்தான் இருத்தலியலாளர்கள்" என்ற குற்றச்சாட்டு
பொருத்தமானதே!
பிரபஞ்ச இருப்பை அணுகுவதில் மூன்று வழிகள் உள்ளன; ஒன்று: நேர்மறை
யான வழி, இது பெரிதும் நம்பிக்கை சார்ந்த வழியாகும்; அந்த நம்பிக்கை
'கடவுள்' எனும் மகா தீர்வாளரை, எல்லாம் அறிந்தவரை மையமாகக்கொண்
டதாகவும் இருக்கலாம்; அல்லது, கடவுளை நம்புவதைவிட இயற்கையை,
அதாவது பிரபஞ்சத்தையே நம்புதல், குறிப்பாக பிரபஞ்சமானது புரிந்து
கொள்ள ஏதுவாக (Comprehensible) உள்ளதாகக்கொண்டு நம்முடைய
சொந்த பகுத்தறிவை நம்புதல் என்பதாகவும் இருக்கலாம்! உண்மையில்,
இவை, இரண்டுவித வழிகளோ, பார்வைகளோ அல்ல; மாறாக,ஒரே அணுகு
முறையின் இரண்டு பக்கங்களைப் போன்றவையாகும்
இரண்டாவது வழி : நம்பிக்கையின்மையைச் சார்ந்த வழியாகும். அதாவது
கடவுள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரை அறியமுடியாது; இன்னும்
உலகம் அல்லது பிரபஞ்சத்தையும் முழுமையாக அறிந்துகொள்ளமுடியாது
எனும் எதிர்மறைவழி! பெரும்பாலான இருத்தலியலாளர்களின் வழி இதுவே!
இருத்தலியலாளர்கள் சிறுபிள்ளைத்தனமானவர்கள், அவர்கள், இருப்பை, இயற்கையை, பிரபஞ்சத்தை அப்படியே கொடுக்கப்பட்ட ஒன்றாகக் கருது
வதால், இயற்கையே யாவற்றையும் முன்வந்து நமக்கு வழங்கிட வேண்டும்
என அவர்கள் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்து போனவர்கள்! இவர்கள்
எத்தகையவர்கள் என்றால், தன் பெற்றோரிடம், "என்னை ஏன் பெற்றீர்கள்"?
"ஏன் என்னைப்பெரிய படிப்பு படிக்கவைக்கவில்லை?" "ஏன் அதிக சம்பளம்
தரும் உத்தியோகத்தில் அமர்த்தவில்லை?" "ஏன் எனக்கு திருமணம் செய்து
வைக்கவில்லை?" என்றெல்லாம் கேட்கிற தன் சொந்தக்காலில் நிற்கக்
கற்றுக்கொள்ளாது பெற்றோரைச் சார்ந்தே வாழ நினைக்கும் சுய-முயற்சி
யற்ற தறுதலைப்பிள்ளையைப் போன்றவர்கள் ஆவர்! இவர்களைப்பற்றி
மிக விரிவாக பிறகு பார்ப்போம்.
மூன்றாவது வழி : முன்-முடிவுகள், எதிர்பார்ப்புகள், சிறுபிள்ளைத்தனமான
கோரிக்கைகள் எதுவுமில்லாமல், பிரபஞ்சத்தை, இருப்பைச் சந்திக்கும், தரி
சிக்கும், அதாவது உணர்வுகொள்ளும் வழியாகும்! இம்மூன்றாவது வழியின்
விளக்கமாகத்தான் இக்கட்டுரை முழுவதும் எழுதப்பட்டிருக்கிறது!
இம்மூன்று வழிகளையும் தவிர, ஒரு நான்காம் வழி அல்லது அணுகுமுறை
யைப்பற்றியும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்! அது என்ன
வென்றால்,கண்கள் இருந்தும் குருடான,உணர்வு இருந்தும் உணர்வற்றதான
ஒரு நிலைப்பாட்டை எடுப்பது என்பதே! அதாவது இருப்பு குறித்து யாதொரு
வியப்பும், உணர்வும், கேள்வியும் இல்லாமலேயே வாழ்ந்துசெல்லுகிற இப்
போக்கு மனிதத்தரத்துக்கு உரியதல்ல! இருப்பு குறித்தகேள்வியைப் புறக்
கணிப்பது என்பது மனநலம் குன்றிய நிலையின் அறிகுறி எனலாம்!
"அறிவு (Intellectual) வளர்ச்சியில், கீழான நிலையிலுள்ளவர்களைப்
பொறுத்தவரை, அவர்களுக்கு உலகம், இருப்பு என்பது பெரிதாக வியப்பு
அளிப்பதாகவோ, அல்லது புதிராகவோ தெரிவதில்லை!" என தத்துவவாதி
ஆர்தர் ஷோப்பன்ஹீர் (1788-1860) கூறியுள்ளார்! ஆனால், இதன் மறு துருவம்
போல, மன-நோய்க்கூறுடைய சிலரைப்பொறுத்தவரை, இருப்பு குறித்த
வியப்பும், அதனுடைய புதிர்த்தன்மையும் மிக அதீதமான பற்றுவெறியாக
(Obsession)அமைந்துவிடுகிறது என்று சொல்லப்படுகிறது! ஒருவகையில்,
வியப்புணர்வும், புதிர் குறித்த உணர்வுமற்ற மனிதர்கள் விலங்கையொத்த
வர்கள் எனலாம்; இவர்களைவிட புதிர் குறித்து அதீத உணர்வு பீடித்த மன
நோயாளிகள் மேல் எனலாம்!
ஆனால், எது மனிதனை பிற பிராணிகளுக்கு மேலாக உயர்த்துகிறது
என்றால் தனது சாசுவதமற்ற நிலையைப்பற்றிய அவனது உணர்வுதான்
என்பதும்,அதாவது மரணத்தின் சாத்தியம் அவனுள் 'ஒன்றுமின்மை' குறித்த
கருத்தாக்கத்தை கொண்டுவருகிறது என்பதும் தவறான புரிதல் ஆகும்!
உண்மையில், மரணம் என்பது நிச்சயம், ஒரு நாள் நாம் மரணத்தில் முடிந்து
போவோம் என்பதை அறியும் ஒருவன் அதிர்ச்சியடைவதில் தவறில்லை!
ஆனால், அந்த அதிர்ச்சி ஒருவனை இருளடர்ந்த சூன்யம் பற்றிய கருத்தாக்
கத்தில் தள்ளிவிடக்கூடும் என்று சொல்வதற்கில்லை! மாறாக, தனது
சாசுவதமற்ற நிலையை உணரும் ஒருவன் அந்த அதிர்ச்சியில் உடனே
தனது உணர்வற்ற தன்மையிலிருந்து விழித்துக்கொள்ளவும், மரணத்தைக்
கடந்த நித்தியவாழ்வை அடைவதற்கான உணர்வார்ந்த வழியைத்தேடவும்,
உணர்வில் பெரும் மாற்றம் அடைந்து ஒரு புது மனிதனாகவும் எழலாம்!
ஏனெனில், இன்மை (சூன்யம்) யிலிருந்து தோன்றியதல்ல இருப்பு; அவ்வாறு
இருந்தால், இன்மை தான் நம்முடைய தாய்வீடாகும், ஆக, தாய்வீடு பற்றிய
ஞாபகமும், அங்கு திரும்பிச் செல்லவேண்டும் என்ற ஏக்கமும் நம்மிடம்
இருக்கவேண்டும்! ஆனால், விஷயங்கள் அவ்வாறில்லை! சூன்யம் நம்முள்
பீதியையும், மரணபயத்தையும் தான் ஏற்படுத்துவதாயுள்ளது! ஏனெனில்,
நாம் ஒன்றுமின்மையிலிருந்து தோன்றியவர்களல்ல!ஆம், நாம் சூன்யத்தின்
குழந்தைகள் அல்ல! நாம் இருப்பின் குழந்தைகள்! உலகம், பிரபஞ்சம்,
இயற்கை, இருப்பு என எப்படி அதை அழைத்தாலும், அது முழுமையான ஒரு
இருப்பு, அதாவது "பேரிருப்பு", அல்லது "பேரியற்கை"யின் ஒரு வெளிப்பாடே
ஆகும்! எந்த நதியும் சூன்யத்திலிருந்து பிறப்பதில்லை! நேரடியாகத் தெரி
யாவிட்டாலும், சமுத்திரமே நதியின் மூலம் ஆகும்! ஆனால், சமுத்திரத்தி
லிருந்து மழையாக நீரைப்பெற்று நதியாக மாற்றித் தருவதற்கு மலை ஒரு
ஏற்ற இடமாக அமைந்துவிடுகிறது! ஆனால், நதியானது முடிவில் மீண்டும்
சமுத்திரத்தையே சென்றடைகிறது! ஒருவகையில், பிரபஞ்சம் என்பது
உண்மையில், உணர்வைத் தோற்றுவிப்பதற்கான ஒரு ஏற்பாடே எனலாம்!
ஆக, இன்மை பற்றிய (தேவையற்ற)குறிப்பு இல்லாமல், "ஏன் உலகம் இருக்
கிறது?" என அதிசயிக்கும் உணர்வுடன் இக்கேள்வி எழுப்பப்படுமானால்,
உண்மையில், அக்கேள்வியானது, "நான் ஏன் இருக்கிறேன்?" எனும் கேள்வி
யின் ஒரு மாறிய வடிவமே எனலாம்! ஏனெனில், இவ்விரு கேள்விகளும் ஒரே
புதிரின் இரு பக்கங்களைப்பற்றியதேயாகும்!
ஆனால், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது, இருப்பை அணுகும்
மூன்று வழிகளில், முதல் இரு வழிகளான, நம்பிக்கையின் வழி, மற்றும்,
நம்பிக்கையின்மையின் வழிகளில் செல்வோர்களின் கூற்றுகள் குறித்துத்
தான்! குறிப்பாக, இருப்பைப் புறக்கணித்து இன்மையைப் பெரிதாகப்பிரஸ்
தாபிக்கும் இருண்ட சிந்தனைகள் தவிர்க்கப்பட வேண்டியவையாகும்!
ஆர்தர் ஷோப்பன்ஹீர் ( Arthur Schopenhauer), பைரன் (Byron),
ஆல்பெர் காம்யூ ( Alpert Camus),ஸியோரன் ( E.M.Cioran),பெர்ட்ரண்ட்
ரஸ்ஸல் ( Bertrand Russell),உட்டி ஆல்லன் (Woody Allen)ஆகியோர்
"இருப்பைவிட இன்மை (சூன்யம்) மேல்!" என்று சொல்லிச்சென்றவர்கள்!
"ஏன் ஒன்றுமின்மைக்குப்பதிலாக இப்பிரபஞ்சம் இருக்கிறது?"எனும் கேள்வி
அர்த்தமற்றது. இங்கே இம்மாபெரும் பிரபஞ்சம் இருக்கையில், ஒன்று
மின்மை பற்றிய வீண்பேச்சு எதற்கு? பிரபஞ்சம் என்பது 1500 கோடியாண்டு
களுக்கு முன் தோன்றியதாயினும், அல்லது, என்றென்றும் நித்தியமாக
இருந்து வரும் ஒன்று என்றாலும் எவ்வகையிலும் அதன் புதிர் மட்டும் சிறி
தும் குறையப்போவது இல்லை!பிரபஞ்சம் இருக்கிறது!அதற்குரிய காரணம்,
நோக்கம், குறிக்கோள் என்னவென்று புரிந்துகொள்வதுதான் நம்முடைய
பிரதான வாழ்க்கைக் கடமையாகும்! இதைவிடுத்து, நாம் விரும்புகிற
வகையில், அதாவது நமது விஞ்ஞான, தர்க்க அளவுகோல்கள்,மற்றும், விளக்
கங்களைத் திருப்திபடுத்தும் விதத்தில் பிரபஞ்சம் அமைய வேண்டும் என
எதிர்பார்ப்பது மடமையே ஆகும்!
பிரபஞ்சமாயினும், எதுவாயினும், அதற்கு ஆரம்பம் என்றொன்று இருக்குமா
னால், முடிவு, ஒரு இலக்கு, முழுமையடைதல் என்பதும் இருக்கவேண்டும்!
பிரபஞ்சம் இருக்கிறது என்பது ஒரு வெளிப்படையான உண்மை! நாம் அதன்
ஒரு பகுதியாக, மிக விசேட பகுதியாக இருக்கிறோம்; அதாவது நாம் கூழாங்
கற்களைப்போன்ற சடமோ, அல்லது மண்புழுக்களைப்போன்ற சிந்தனை
யற்ற ஜந்துக்களோ அல்ல! அதே வேளையில், பிரபஞ்சம் என்பது மாறாத,
வளராத, தேக்கமுற்ற இருப்பு அல்ல! அது ஒரு நிகழ்வுமுறை (process)
ஆகும். ஒரு இருப்புநிலையிலிருந்து இன்னொரு இருப்புநிலை நோக்கி மேன்
மேலும் வளர்ந்து செல்லுகிற வழிமுறையாகும். அது இறுதியாக எத்தகைய
இருப்பு நிலையை எட்டுகிறது என்பதைக் கண்டு பிடிக்கும்போது, அது
தோன்றியதற்கான காரணத்தையும், நியாயத்தையும் அறிந்துகொண்டு
விடுவோம்!
பிரபஞ்சம் என்பது ஒரு மாபெரும் விருட்சமெனில், அதனுடைய மூலம் எது
என்பதை, அதனுடைய வேர்களிலோ, அடித்தண்டிலோ, கிளைகளிலோ,
இலைக்கொத்துகளிலோ தேடுவதில் பயனில்லை! மாறாக, அதனுடைய
கனிகளில் மட்டும் தான் கண்டடைய முடியும், கனிகள் மட்டுமே விருட்சத்
தின் மூலத்தையும், அனைத்தையும் விளக்குவதாயிருக்கும்! கனிகள்தான்
விருட்சத்தை முழுமைப்படுத்துபவை! ஒவ்வொரு மனிதனும்தான் பிரபஞ்
சத்தின் கனியாக மாறவேண்டும். அதற்கு ஒவ்வொரு மனிதனும் உணர்வில்
முற்றிக்கனிந்து முழு-உணர்வாக ஆகவேண்டும்! ஏனெனில், முழு-உணர்வு
(Consciousness)மட்டுமே இப்பிரபஞ்சத்திற்கு ஈடாக, மாற்றாக, சமமாக,
நிகராக விளங்கமுடியுமேதவிர, ஒருபோதும் ஒன்றுமின்மை(Nothingness)
ஈடாக முடியாது! ஏனெனில், ஒன்றுமின்மையிலிருந்து இப்பிரபஞ்சம் தோன்
றிடவில்லை! மாறாக, முழு-உணர்விலிருந்து தான் பிரபஞ்சம் தோன்றியது!
முழு-உணர்வு தான் பிரபஞ்சத்தின் மூலவித்து ஆகும்!
நிறைவான இருப்போ, அல்லது ஒன்றுமில்லா இன்மையோ, எதுவும் உணர்
வைச் சார்ந்தே இருக்கமுடியும்! உணர்விருந்தால் எதுவும் சாத்தியமே!
உணர்வாகிய நாம் அர்த்தமுள்ள வகையிலும், அர்த்தமற்ற வகையிலும்
எதையும்பேசலாம். உடல்ஜீவிகள் என்றவகையில்,நாம் ஒருநாள் மரணத்தில்
முடிந்து போவோம்! ஆனால், "உணர்வு" என்கிற வகையில் முடிவாக என்ன
நேரிடும் என்பது நமக்குத் தெரியாது! ஒவ்வொரு இரவும் உறங்கும்போது
நாம் காணாமல் போகிறோம்! ஒவ்வொரு காலையும் நாம் மீண்டும் உணர்வு
பெற்று எழுந்திடுகிறோம்! நாம் பிறப்பதற்கு முன் எங்கிருந்தோமோ அங்கே
தான் மீண்டும் நாம் இறந்தபிறகு செல்கிறோம்! மிகஅசலான உண்மையான
புதிர் என்பது உலகம் அல்லது பிரபஞ்சம் இருக்கிறது என்பதல்ல! இன்னும்,
நிஜத்தில் இல்லாத 'ஒன்றுமின்மை'யும் அல்ல!மாறாக, ஒரு உணர்வாக நான்
இருக்கிறேன், ஒவ்வொரு மனித ஜீவியும் இருக்கிறான் என்பதே ஆகும்!
உடலுடனோ (Embodied), அல்லது உடலின்றியோ (Dis-embodied),
உணர்வு என்பது உணர்வு தான்!
உண்மையில், பிரபஞ்சத்தில், மனித-உணர்வு மிகவும் மையமானதொரு
பாத்திரத்தை வகிக்கிறது என்பதில் சந்தேகமில்லை! மிகப்பிரமாண்டமான
இப்பிரபஞ்ச அமைப்பில், மனிதன் மிக மிகச் சிறியதொரு பகுதியாகத்
தெரிந்தாலும், மனித உணர்வுதான் ஒட்டுமொத்த அளவில் பிரபஞ்சத்திற்கு
மெய்ம்மைத் தன்மையை வழங்குகிறது எனலாம்! பிரபஞ்சம் நம்மை
உருவாக்கியது, நாம் அதை உருவாக்குகிறோம், அதாவது, அதை முழுமைப்
படுத்துகிறோம்! பிரபஞ்சம் தனது இருப்பிற்கான சாவியை தன்னகத்தே
கொண்டிருக்கிறது எனும் கருத்து உண்மையே! மனிதஉணர்வே அந்த சாவி
(திறவுகோல்) ஆகும். ஆனால், மனித உணர்வு முழு-உணர்வு நிலையை
அடையும்போதுதான் அந்த சாவி முழுமையாக உருப்பெறும்! அதுவரையில்
மனிதனால் பிரபஞ்சத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளவியலாது!
சில அதி புத்திசாலிகள் உணர்வு என்பது இன்றியே பௌதீகப் பிரபஞ்சம்
சாத்தியமாகும் என்று சொல்கிறார்கள். ஒருவகையில், அவர்களது கூற்று
சரியே! அதாவது இவ்வாறு தங்களது ஓட்டையான கருத்துக்களைச் சொல்
லும் அவர்கள் தோன்றிடும் வரை மட்டும்! இப் பிரபஞ்சத்தின் 1,500 கோடி
ஆண்டுகள் நெடிய பரிணாம வரலாற்றில், முதல் 1,100 கோடி ஆண்டுகள்
வரை ஒரு சிறு அமீபாவும், புழு பூச்சியும் தோன்றிடவில்லை தான்! முதல்
உயிர், இன்றிலிருந்து 400 கோடி ஆண்டுகளுக்கு முன் தான் தோன்றியது!
அடுத்து, தெளிவற்ற அளவிலான உணர்வுடன் ஆதிமனிதன் வெகுசமீபத்
தில், ஒரு 2,00,000 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தான் தோன்றினான்!
மிகத் தெளிவான சுய-உணர்வுடன் கூடிய மனிதன் வெறும் 5,000 ஆண்டு
களுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம்! மிகத்தெளிவாகச் சிந்திக்கக்கூடிய
தத்துவச் சிந்தனையாளன் ஒரு 3,500 ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்
கலாம்! நவீன விஞ்ஞானி என்பவன் வெறும் 500 ஆண்டுகளுக்கு முன்னர்
தான் தோன்றினான்! பலசமயங்களில்,உரியகாலத்தில் பூக்காத,காய்க்காத
மரங்கள் இருப்பதுண்டு! ஆனால், நமது பிரபஞ்சம் பூத்துக் காய்த்து, பல
அரிய கனிகளை (ஞானிகளை)க் கண்ட அதிசய மரமாகும்!
தற்போது வாழ்ந்துவரும் பெரிய விஞ்ஞானத்தத்துவவாதி (philosopher
of science)எனக்குறிப்பிடப்படும்,அடால்ஃப் க்ரன்பாம்(Adolf Grünbaum)
அவர்களைப்பொறுத்தவரையில்,"ஏன் ஒன்றுமில்லாததற்குப்பதிலாக ஏதோ
வொன்று உள்ளது?" எனும் கேள்வி, கடவுளையோ அல்லது வேறெதுவொன்
றையும் நோக்கிய பாதையல்ல, ஏனெனில், இது ஒரு போலியான பிரச்சினை
யாகும் என்கிறார். ஆனால், அவர் ஒரு கடவுள் நம்பிக்கைக்கு எதிரான
இயற்கைவாதியாவார்.பிரபஞ்சத்தை என்றென்றும் இருந்துவரும் ஒரு நிஜம்
என நம்புபவர்களில் அவரும் ஒருவர்!கடவுளை மட்டுமல்லாது,இன்மையுடன்
சேர்த்து இருப்பையும் ஒதுக்கித்தள்ளிடும் அவருக்கு பிரபஞ்சமோ,இருப்போ
வியப்பூட்டும் புதிராகத் தெரியவில்லை! அப்படியானால், அவர் ஒரு எந்திர
வாதியாகத்தான் இருக்க முடியும்! அதாவது,அவருக்குத் தனது இருப்பும் கூட புதிராகத்தெரியவில்லை, "நான் எவ்வாறு இருக்கிறேனோ அவ்வாறு ஒன்று
சேர்க்கப்பட்டுள்ளேன் எனும் போது, அது குறித்து நான் ஏன் வியப்படைய
வேண்டும்?" என வினவுகிறார்!
ஒருவகையில், பிரபஞ்சத்தின் இருப்பையும், தனதிருப்பையும் அடால்ஃப்
கிரன்பாம் அவர்கள் வியப்போ, புதிருணர்வோ இன்றி ஏற்றுக்கொள்கிறார்
என்பது பாராட்டுக்குரியது ஆகும்! மேலும், அவர் ஒரு சூன்யவாதி அல்ல என்
பதும் மகிழ்ச்சிக்குரியதே! ஆனால், இப்பிரபஞ்சமும், அதில் அவரும், குறிப்
பாக, என்ன நோக்கத்திற்காக, எந்த இலக்கை அடைவதற்காக இருக்கிறார்
கள்? இக்கேள்விக்கு அவரது பதில், பிரத்யேகமாக ஒரு இலக்கும் இல்லை
என்பதாக இருக்குமானால், நிச்சயம் அவரது நிலைப்பாடு குறித்து நாம்
வியப்படைவதும், எச்சரிக்கை கொள்வதும் தவிர்க்கமுடியாது! எதற்கும்
அவர் ஒரு மன நல மருத்துவரை அணுகுவது அவருக்கு நலம் தருவதாயிருக்
கும்! இல்லாவிட்டால், தொடர்ந்து அவர் தனது சாரமற்ற நிலைப்பாட்டை
பிறரிடமும் தொற்றச்செய்துகொண்டிருப்பார்! "தத்துவம் வியப்புணர்வில்
தொடங்குகிறது!" என தத்துவ ஞானி அரிஸ்ட்டாட்டில் (Aristotle)வியந்து
கூறினார்; ஆனால், அடால்ஃப் க்ரன்பாம்-உடன் தத்துவம் மடிந்துவிடுகிறது
என்றுதான் கூறவேண்டும்! ஏனெனில், கனிகொடாத எந்த விருட்சமும் தன்
னுடன் அழிந்துவிடும்!
இருப்புடன் இன்மையை முடிச்சுப்போட்டு எழுப்பப்படும் கேள்வியானது
கடவுளையோ அல்லது வேறெதுவொன்றையோ நோக்கிய பாதையல்ல என
அடால்ஃப் க்ரன்பாம் சொன்னாலும், இருப்பு என்பது ஒரு இயக்கமாதலால்,
அது ஒரு ஒப்பற்ற இலக்கு நோக்கிச்செல்வதை அவர் அறியாமலிருக்கலாம்!
அதாவது, பிரபஞ்ச இருப்பின் மூலம் (Origin) குறித்த பிரச்சினையில்
இன்மையையோ, அல்லது கடவுளையோ உள்ளே கொண்டுவருவதை அவர்
ஆட்சேபிக்கலாம்; ஏனெனில், ஆரம்பம் குறித்த விஷயம் திறந்த நிலையில்
இருப்பதால், அவரவர்க்குத் தோன்றியபடி விளக்கமளிக்க அது இடமளிப்
பதாக உள்ளது! ஆனால், இருப்பின் முடிவு நிலை (Consummation)பற்றிய
விஷயத்தில், சில வரையறைகள்,நியதிகள் உள்ளன! முதலிடத்தில்,பிரபஞ்ச
இருப்பு என்பது ஒரு பரிணாம இயக்கமாக இருப்பதை மறுக்கவோ, தவிர்க்
கவோ முடியாது! அடுத்து, "பரிணாமம்" என்றால் என்ன? பரிணாமத்தில்
பரிணமிப்பது எது? என்பதை முறையாகப் புரிந்து கொள்வது மிகவும் அவ
சியம்! அடுத்து, உலகிற்கும், உணர்வுக்கும் உள்ள தொடர்பையும்; பிரதான
மாக உணர்வு என்றால் என்ன என்பதையும் புரிந்து கொள்வதோடு, பிரபஞ்
சத்தை விளக்கும் சமன்பாட்டில், உணர்வையும் ஒரு முக்கிய காரணியாகச்
சேர்த்து சமன்படுத்த வேண்டும்! அடுத்து, "உணர்வு" என்பது மனித உணர்வு
டன் முடிந்துவிடக்கூடிய அம்சம் அல்ல! மனித உணர்வு என்பது உணர்வின்
ஒரு நுனி, அல்லது தொடக்கம் மட்டுமே ஆகும்! ஆக, உணர்வை ஆராய்ந்து
அறிந்து கொள்ளவேண்டுமெனில், அதை ஒருவர் ஒரு பார்வையாளராக
(Observer Stance), அதாவது, உணர்வுக்கு வெளியே இருந்துகொண்டு
உணர்வை அணுகவோ, ஆராயவோ, புரிந்துகொள்ளவோ ஒருபோதும்
முடியாது! முக்கியமாக உணர்வை முழுமையாகப் புரிந்து கொள்ள ஒருவரது
உணர்வில் மாபெரும் மாற்றம் (Transformation) நிகழ்ந்தாக வேண்டும்!
அதாவது உணர்வின் முழுமையை ஒருவர் அடைந்தாகவேண்டும்!அப்போது
தான் உணர்வைப்புரிந்து கொள்ளமுடியும்!உண்மையில்,உணர்வைப்புரிந்து
கொள்வது தான் அனைத்தையும் புரிந்து கொள்வது என்பதாகும்!
நல்லது, நம்முன்னே இருப்பு, இம்மாபெரும் பிரபஞ்சமும், அதில் உணர்வா
கிய நாமும் இருக்கிறோம்! இருப்பு சிறிதாயினும், பெரிதாயினும், இருப்பி
லிருந்துதான் பிறக்கமுடியும்! ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்றும் பிறக்க முடி
யாது! நாம் இருக்கும் வரை இன்மைக்கு இங்கு இடமில்லை! உணர்வாகிய
நான் இல்லாவிட்டாலும், இன்மையானது, உணர்வின் இடத்தை நிரப்பமுடி
யாது! உணர்வு உறக்கத்தில் ஆழ்ந்திடலாம்; அதன் உறக்கம் நெடியதாகவும்
இருக்கலாம்! உணர்வு என்பது மிகக்குறைவான, கிட்டத்தட்ட (அமாவாசை
நிலவுபோல) உணர்வற்ற நிலையிலிருந்து சிறிது சிறிதாக வளர்ந்து பெருகி,
ஒரு கட்டத்தில், முழு-உணர்வாக, பௌர்ணமி நிலவு போலப் பிரகாசிக்கும்!
எப்படிப் பார்த்தாலும், உணர்வானது தேய்பிறை, வளர்பிறை எனும் வட்டத்
தில் அமைந்ததாக மட்டுமே இருக்கும்! அவ்வட்டத்தில், இன்மைக்கு,சூன்யத்
திற்கு இடமில்லை! உணர்வின்மையும், சூன்யமும் ஒன்றல்ல! இருப்பு உறக்
கத்தில் ஆழ்ந்திருக்கும் வேளையில், அது இன்மையாகிவிடாது!
ஆனால், இருப்பு (இயற்கை, பிரபஞ்சம்) என்பது உறைந்து நிற்கும் ஒன்றோ,
முடிவானதோ அல்ல. மாறாக, இருப்பு என்பது தொடர்ந்து தன்னைத்தானே
கடந்து வளர்ந்துசெல்லும் ஓர் இயக்கமாகும்!அது மிகக்கீழான இருப்புநிலை
யிலிருந்து, உதாரணத்திற்கு, பௌதீகச் சடப்பொருள் நிலையிலிருந்து படிப்
படியாக, பல்வேறு சுய-கட்டமைப்பு (Self-Organization) முறையின்
மூலமாக, முறையே, உயிர்-ஜீவி (புலன்-உணர்வு), மனித-ஜீவி (சுய-உணர்வு),
எனப்பரிணமித்து, முடிவாக ஒவ்வொரு தனிமனிதனும் அடையக்கூடிய
உணர்வின் உச்சகட்ட பரிணாமநிலையான, முழு-உணர்வில் முழுமையடை
கிறது! இருப்பு, உலகம் என்பது உணர்வுப்பரிணாமத்திற்கு வடிவம் கொடுக்
கும் ஓர் ஊடகம் போன்றதாகும்!
.......................... , முழுமையான இருப்பு அழிவற்றது; ஏனெனில், அது கால-வெளி
கடந்த முழு-உணர்வு ஆகும்! பிரபஞ்சம் என்பது மிகக் குறைவான இருப்பிலி
ருந்து - மிகக் குறைவான உணர்விலிருந்து- மேன்மேலும் அதிகரித்து, அதிக
இருப்பு,மிக அதிக இருப்பு- அதிக உணர்வு,மிக அதிக உணர்வு என உயர்ந்து
முழுமையான இருப்பாக - முழு உணர்வாக முழுமையடைகிறது! ஆக, நமது
பிரபஞ்சம் ஒன்றுமில்லாததிலிருந்து பிறந்ததல்ல! ஒன்றுமில்லாததிலிருந்து
ஒன்றும் பிறப்பதில்லை!மாறாக,ஏதோவொன்றிலிருந்துதான் எதுவும்பிறக்க
முடியும்!
ஆகவே, இன்மை, சூன்யம் என்பதெதுவும் இல்லை! இருப்பு (Existence)
எனும் தன்னைத்தானே கடந்து வளர்ந்து செல்லும் மாபெரும் இயக்கம்
இருக்கிறது; நாம் இருப்பின் தலைப்பகுதி! நாம் ஒவ்வொருவரும் பிரபஞ்சப்
பரிணாமத்தை உணர்வுப்பூர்வமாக முன்னெடுத்துச் சென்று பிரபஞ்ச
இருப்பை முழுமைப்படுத்தவேண்டிய பிரத்யேகப் பிரதிநிதிகள் ஆவோம்!
இருப்பு என்பது இல்லாமல், இன்மை பற்றிக் கற்பனை செய்யவும், பேசவும்
கூடஇயலாது! 'இன்மை' என்பது இருப்பின் நிழல்! நிழல் என்பதற்கு மேல்
இன்மைக்கு நிஜத்தன்மை ஏதும் கிடையாது!
மா.கணேசன்/ நெய்வேலி/ 14.12.2016
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment