
அந்த தந்தகோபுரத்தை கட்டியெழுப்பியவன் நான் தான்!
அதன் உச்சியில் உள்ள சாய்வு நாற்காலி என்னுடையதே!
அதில் அமர்ந்துகொண்டு சிந்திப்பவனும் நான் தான்!
என் பெயர் மா.கணேசன்! நான் தத்துவம் பற்றி பேசுகிறேன்
ஆனால், நான் தத்துவவாதியல்ல!
நான் விஞ்ஞானம் பற்றி பேசுகிறேன்,ஆனால் நான்
விஞ்ஞானி அல்ல! ஆனால், வாழ்க்கை பற்றிய ஆழமான
விசாரம்தான் தத்துவம் என்றால் நானும் ஒரு
தத்துவச் சிந்தனையாளனே!
<•>
இக்கட்டுரை தத்துவத்தைப்பற்றியும், விஞ்ஞானத்தைப்பற்றியும், அவற்றுக்
கிடையேயான பிணக்குகள், வித்தியாசங்கள் பற்றியும் பேசினாலும், அது
பிரதானமாக, மனிதனைப்பற்றியதும், அவனது உண்மையைப்பற்றியதும்,
அவனது வாழ்க்கையின் உண்மையைப் பற்றியதும், அவ்வுண்மையை
அடைவதன் அவசியம் பற்றியதுமே ஆகும்!
•மனிதனின் தலையாய பிரச்ச்சினை "வாழ்க்கை என்றால் என்ன, அதன்
அர்த்தம் என்ன; வாழ்க்கையின் அசலான குறிக்கோள் அல்லது இலக்கு
என்ன?" என்பதை அறிவதேயாகும்!
•மனிதனின் தலையாய பிரச்சினை "தான் யார் அல்லது எத்தகைய நிஜம்?"
என்பதை அறிவதேயாகும்!
•மனிதனின் தலையாய பிரச்சினை "உலகம் அல்லது பிரபஞ்சம் என்பது
என்ன; அதற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்புறவு என்ன?" என்பதை
அறிவதேயாகும்!
•மனிதனின் தலையாய பிரச்சினை "இறுதி மெய்ம்மை அல்லது உண்மை
எத்தகையது என்பதை உணர்ந்தறிவதே!
மேலே, மனிதனின் தலையாயபிரச்சினை என ஒன்றன்கீழ் ஒன்றாக நான்கு
பிரச்சினைகள் கொடுக்கப்பட்டுள்ளன.அவை முதலாவது,இரண்டாவது என
எண்கள் குறிக்கப்படாமல் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனெனில், அவை உண்
மையில், நான்கு தனித்தனிப் பிரச்சினைகள் அல்ல! மாறாக, அவை ஒரே
பிரச்சினையின் நான்கு முகங்கள் அல்லது பக்கங்கள் ஆகும்!
தத்துவம் என்றாலே மண்டையைப்பிளக்கும் தர்க்கமுறை என்பது தவறான
புரிதலின் கோட்பாடு ஆகும்!வாழ்க்கையைப்புரிந்துகொள்வது அதிமுக்கிய
மானது; ஏனெனில், வாழ்க்கையை, அதன் அர்த்தம், உண்மை, நோக்கம்,
குறிக்கோள், இலக்கு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளாமல், வெறுமனே
உயிர்-பிழைத்துச் செல்வது என்பது மனிதஜீவிக்கு அழகல்ல! இதுதான் என்
னுடைய "அழகியல்" ஆகும்!
"வாழ்க்கை" என்பதுதான் "முழுமை"! வாழ்க்கையைப் புரிந்து கொள்வதும்
அனைத்தையும் புரிந்துகொள்வது என்பதும் ஒன்றே! வாழ்க்கை என்பது புற
உலகமான பிரபஞ்சம், அகஉலகமான மனிதன், மற்றும், அவனது அன்றாட
உயிர்-வாழ்தல் என அனைத்தையும் உள்ளடக்கியதும், அனைத்தையும்
கடந்ததும் ஆகும்.
புறவுலகமான பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வது அவசியமே; ஆனால், மனி
தனைப் புரிந்துகொள்ளாமல் பிரபஞ்சத்தைமட்டும் தனியே புரிந்துகொள்ள
வியலாது! ஏனெனில், மனிதன் என்பவன் பிரபஞ்சத்தின் உயர்-வளர்ச்சி
நிலையாவான்! மேலும், மனிதனின் அறிதலுக்கும், அனுபவத்திற்கும்
வெளியே, ஆயிரமாயிரம் பிரபஞ்சங்கள் (Multiverse) இருந்தாலும்
ஒன்றுதான்; இல்லாவிட்டாலும் ஒன்றுதான்! ஆம், மனிதன் இல்லாமல் பிர
பஞ்சம் இல்லை! அட, மனித இனம் தோன்றியது மிகச் சமீபத்தில் தானே
எனலாம்! ஆனால், என்னசெய்வது? மரம் பெரிதாகவளர்ந்தாலும், உடனே
பூத்துப் பிஞ்சுகள்விட்டு,பிஞ்சுகள்காய்களாகி, காய்கள்முற்றிக்கனிகளைக்
கொடுப்பதில்லையே! மனிதன் இல்லையேல் பிரபஞ்சத்திற்கு அர்த்த
மில்லை! காய்க்காத, கனி கொடாத மலட்டுமரத்தைப்போல!
பிரபஞ்சத்தைப்புரிந்து கொண்டாலும், மனிதன் தன்னைப்புரிந்துகொள்ளா
விடில் என்னபயன்? ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தையும்,அதிலுள்ள எதுவொன்
றையும்விட மனிதனே முக்கியமானவன்! ஏனெனில்,பிரபஞ்ச-நோக்கத்தின்
நிறைவேற்றம் மனிதனின் வழியாகவே நிகழவேண்டியுள்ளது! இதன்
அர்த்தம்,மனிதன் இறுதியானவனோ, முழுமையானவனோ அல்ல என்பதே!
முழுமைக்கு, கடக்க இன்னும் ஒரு படி உள்ளது! மனிதர்கள் பெரும்பாலும்
தம் உணர்வில் பிஞ்சுகளாகவே உள்ளனர்! கொஞ்சம் பேர் பச்சைக் காய்
களாகவே உள்ளனர்! ஒட்டுமொத்தத்தில் ஓரிருவர் மட்டுமே நன்கு முற்றிக்
கனிகளாகிறார்கள்! கனியாவது தான் முழுமை, அதுவே மெய்ம்மை நிலை
அடைதல் என்பதும்! தத்துவம் என்பது முழுக்கமுழுக்க மெய்ம்மையை அறி
வதும், மெய்ம்மை நிலையடைவதையும் பற்றியதே!
தத்துவம் என்பது அடிப்படையில் தனிமனிதனைக் குறித்தது! தனிமனி
தனின் உணர்வைக் களமாகக் கொண்டது! தத்துவச் சிந்தனை நிகழ்த்தப்
படும் இடம் மனிதனின் அகமே, உணர்வேயாகும்! சிந்திக்கும் மனிதன் தன்
வாழ்தலை நிகழ்த்தக்கூடிய இடமும் அகமே! மனிதன் தன் உயிர்வாழ்தலுக்
குரிய பொருட்களை மட்டுமே புறத்தேயிருந்து பெறுகிறான்,மற்றபடி அவன்
உண்மையில் வாழ்வது தன் அகத்தில்தான்! பொதுவாக மனிதர்கள் ஆழமா
கச்சிந்திப்பதை தேவையில்லாத, வேண்டாத வேலை எனக்கருதுகிறார்கள்!
ஆனால், "ஆராய்ந்தறியப்படாத வாழ்க்கை வாழத்தகுதியற்றது" என்பதாக
2,400 ஆண்டுகளுக்கு முன்னர் தத்துவ ஞானி சாக்ரடீஸ் கூறியுள்ளார். நாம்
அனைவருமே சிந்திக்கிறோம்; ஆனால், உயிர்வாழ்தலைப்பற்றியும், பொரு
ளாதாரத்தில் எவ்வாறு முன்னேறுவது, சமூகத்தில் எவ்வாறு பிறரை முந்திச்
செல்வது ஆகியவை பற்றியும்தான் சிந்திக்கிறோமேதவிர வாழ்க்கை பற்றி
நாம் சிந்திப்பதில்லை! அதாவது, மையத்தை விட்டுவிட்டு, ஓரங்களிலுள்ள
விஷயங்களையே சிந்திக்கிறோம்!
ஒருவகையில், "ஆராய்ந்தறியப்படாதவாழ்க்கை வாழத்தகுதியற்றது" என்ற
கூற்று பொருத்தமற்றது எனலாம்! எவ்வாறெனில், விலங்கு ஜீவிகள் எதுவும்
தம் வாழ்க்கை குறித்து ஆராய்வதில்லை என்பதால் அவை வாழ்வதில்லை,
அவற்றிற்கு வாழ்க்கையே இல்லை என்று சொல்லிவிட முடியுமா? ஆனால்,
மனிதனைப்பொறுத்தவரை அவன் தன் வாழ்க்கை குறித்து பிரத்யேகமாக
ஆராயவில்லை எனில், அவன் வாழ்தில்லை, அவனது வாழ்க்கை விலங்கை
ஒத்தது என்று சொல்லிவிடலாம்! முதலிடத்தில், வாழ்க்கை குறித்து சிந்திப்ப
தென்பது, வேண்டாத வேலையோ, அதிகப்படியான விஷயமோ அல்ல. பிரத்
யேகமாக வாழ்க்கை குறித்து நாம் சிந்திப்பதேயில்லையென்றால்,யோசித்
துப்பாருங்கள் நாம் வேறு என்ன செய்துகொண்டிருப்போம்? எலிகளும் தவ
ளைகளும் என்ன செய்துகொண்டிருக்குமோ அதைத்தான் நாமும் செய்து
கொண்டிருப்போம், அதிகநேர்த்தியுடன்! பொதுவாக, வாழ்க்கை குறித்த நம்
புரிதல் என்னவெனில், உயிர்-வாழ்தல் என்பது அடிப்படை; அதில்,அதிகச் சௌகரியமாக,சொகுசாக,ஆடம்பரமாக உயிர்வாழ்தல் என்பதே வாழ்க்கை
யின் ஒரே ஒப்பற்ற இலக்கு! இவ்விஷயம்கூட நாம் தெளிவாகச் சிந்தித்து
உணர்ந்திட்ட ஒன்றல்ல! மாறாக, இது ஒருவகையில் நம்மையறியாமலேயே
முன்-தேர்வு செய்யப்பட்டதாக (Default) தானியங்கித்தனமாகக் கடைப்
பிடிக்கப்படும் கொள்கையாகும்!
ஆனால், அசலான மனிதவாழ்க்கை என்பது, "வாழ்க்கை என்றால் என்ன?"
எனும் கேள்வியுடன்தொடரும் இடையறா விசாரத்துடன் மட்டுமே தொடங்கு
கிறது; அதற்கு முன் ஒருபோதும் இல்லை! மிகவும் முக்கியமான ஒரு அம்சம்
என்னவெனில், இருப்பை நீங்கள் உணர்ந்ததன் அடையாளம் கேள்விகளும்,
அதைத் தொடர்ந்து நீங்கள் மேற்கொள்ளும் விசாரமும்தான்! விசாரம்,
அல்லது சிந்தனை, சிந்தித்தல் என்பது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மேற்
கொள்ளும் பலவிதசெயல்பாடுகளில் ஒன்றுஅல்ல! மாறாக, சிந்தித்தல்தான்
மையமானது! அதாவது சிந்தித்தல்தான் வாழ்தல்! வாழ்க்கையின் அர்த்தம்
பற்றிய பிரத்யேக விசாரம்தான் அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆரம்பம்!
வாழ்க்கை தனிமனிதனின் வழியாகத்தான் தன்னைப் பூரணமாக வெளிப்
படுத்துவதாயுள்ளது! கும்பல் வழியாக வாழ்க்கை வெளிப்படுவதில்லை!
கும்பலானது மிகஎளிதாக அதன் உறுப்பினர்களின் கவனத்தைச்சிதறடித்து
விடக்கூடியது. மாட்டுமந்தைக்கும் சிந்தனைவயப்பட்ட தியான நிலைக்கும்
வெகுதூரம்! மேலும், சமூகத்தில் கவனத்தைக் கவர்ந்து செல்லக்கூடிய
ஆயிரத்தெட்டு விஷயங்கள், பொருட்கள் உள்ளன! அத்தனையும் மேலோட்
டமான, மட்டுப்பாடான அம்சங்களே! வாழ்க்கை, அசலான வாழ்க்கை, மேற்
புறத்தே காணப்படக்கூடியதல்ல! மேற்புறத்தில் காணப்படும் வாழ்க்கை
உணர்வில்லாத ஜீவிகளுக்குரியது! உணர்வில்லாமல் மனித வாழ்க்கை
இல்லை; ஏனெனில் உணர்வுதான் வாழ்க்கை!
தன்னையறியாத, உணர்விருந்தும் உணர்வுக்கு விழிக்காத மனிதர்களின்
கூட்டம் எதற்குப் பயன்படும்? அதனிடம் அறம் எவ்வாறு துளிர்க்கும்?
தத்துவம்என்றாலே அறவியல்பிரச்சினைகள்தான் என்பதுதவறு! ஏனெனில்,
வாழ்க்கை என்பது அறவியல் பிரச்சினையல்ல; மாறாக, விழிப்படைவதற்
கான திறந்திருக்கும் வாய்ப்பு ஆகும்! மேலும், வாழ்க்கை என்பது பொது
வானது மட்டுமல்ல, அது பெரிதும் தனிமனிதபூர்வமானதாகும்! அதாவது,
அறம் என்பது சமூகம் சார்ந்தது, சமூகம் தொடர்பானது என்றால், அது
எனக்குப்பொருந்தாது! ஏனெனில், என்னுடன் வினைபுரிவதற்கே எனக்கு
நிறைய விஷயங்கள் இருக்கும்போது, சமூகத்தினருடன் எனக்கு என்ன
வேலை? ஆனால், அறம் சமூகத்தில் வாழும்போது மட்டும்தான் தேவையா?
இல்லை, காட்டில் வாழ்ந்தாலும் தேவையே என்பது தான் என் கொள்கை!
ஆம், அறம் அல்லது விழிப்பு என்பது நாட்டில் வாழ்ந்தாலும், காட்டில் வாழ்ந்
தாலும்; அல்லது வேற்றுகிரகத்தில் வாழ்ந்தாலும் தேவையே! அறம், விழிப்பு
இரண்டும் ஒன்றே! விழிப்புதான் அறத்தின் சாரம்; விழிப்பு இல்லையேல்
அறம் இல்லை! அறம் என்பது விழிப்படைந்த தனிமனிதனின் வழியாகவே
சமூகத்திற்குள் வெளிப்படுகிறது! என்னைப்பொறுத்தவரை, சமூகம், நாடு
என்பதும் ஒருவகைக் காடே!
தத்துவம் என்பது உணர்வைப் பெருக்கும், உணர்வைக் கட்டியெழுப்பும்
செயல்பாடாகும். அது தனிமனிதனின் உணர்வை உயர்ந்தோங்கச் செய்
கிறது. தத்துவம் அடிப்படையிலேயே தனிமனிதபூர்வமானது, அது கும்பல்
தழுவிய நிகழ்வுமுறையன்று; அதற்கு கும்பலைத் தெரியாது! இன்னும் தனி
மனிதனின் விஷயத்திலும்கூட அவனது உடல்-சுயத்தை அது அறியாது;
மாறாக அது மனிதனின் அகச்சுயத்துடன், உணர்வின் தளத்துடன் மட்டுமே
பொருந்தும்!
மனிதன் என்பவன் மிகத்துல்லியமாக அவனது உடலிலிருந்து வேறானவன்!
மனித உடல் சடப்பொருளின் சாயலைக்கொண்டது! பௌதீக விஞ்ஞானம்
சடத்தை மட்டுமே விளக்கும்! உயிரியல் விஞ்ஞானம் வெறும் உயிருள்ள
உடல்களான விலங்குஜீவிகளை மட்டுமே விளக்கும்!
பௌதீகம் மனிதனை முழுமையாக விளக்காது, வெளிப்படுத்தாது; அதற்கு
பௌதீகம் கடந்த "மீபௌதீகம்" (Metaphysics) வேண்டும்! மனிதன் என்
பவன் பாதி பௌதீக அம்சத்தினாலும், இன்னொரு பாதி மீபௌதீக அம்சத்
தினாலும் ஆனவன்! உணர்வு தான் அந்த மீபௌதீக அம்சம்! மனிதன்
அவனது உடலிலிருந்து வேறானவன் என்றால், பின் எதுதான் மனிதன்? இக்
கேள்வியை எது கேட்கிறதோ அதுதான் மனிதன்!ஆம், உணர்வுதான் நீங்கள்,
உணர்வுதான் மனிதன்!
தத்துவம் என்பது முழுக்க முழுக்க மீபௌதீகம் (Metaphysics)பற்றியதே.
தத்துவத்தின் பணி, 'பிரபஞ்சம் எவ்வாறுதோன்றியது', 'எதனால் ஆனது' என
பௌதீக ரீதியான விபர உண்மைகளைக் கண்டறிவதல்ல! இவைகளை
ஆராய்ந்து கண்டறிவது விஞ்ஞானத்தின் வேலையாகும்! மாறாக, உலகம்,
பிரபஞ்சம் ஏன், என்ன நோக்கத்திற்காகத் தோன்றியது? அதில் நாம் ஏன்
தோன்றினோம்? பிரபஞ்சத்திற்கும் நமக்கும் உள்ள தொடர்புறவு என்ன?
மனித வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள், இலக்கு என்ன? என்பன
போன்ற பௌதீகம் கடந்த கேள்விகளுக்கான பதில்களைக்கண்டுபிடிப்பது
என்பதே தத்துவத்தின் தலையாய பணியாகும்! இப்பணியைச் செவ்வனே
செய்திட பெரிய ஆய்வுக்கூடங்களோ, துகள்-முடுக்கிகளோ (Particle-
Accelerators),பெரிய தொலை நோக்கிகளோ, சிக்கலான பரிசோதனை
களோ,எதுவும் தேவையில்லை! மாறாக, கூருணர்வும், தெளிவான சிந்தனை
யும், சௌகரியமாக அமர்ந்து சிந்திப்பதற்கு கை நாற்காலி அல்லது சாய்வு
நாற்காலியே போதும்!
தத்துவத்திற்கு எதிராக விஞ்ஞானிகள் பலர் பேசியும், எழுதியும் வருகிறார்
கள் அவர்களில் குறிப்பாக பௌதீக விஞ்ஞானிகளான ஸ்டீவென் வெய்ன்
பெர்க்(Steven Weinberg),ஸ்டீஃபென் ஹாக்கிங்க் ( Stephen Hawking),
லாரன்ஸ் க்ராஸ் (Lawrence Krauss),மற்றும் உயிரியல் விஞ்ஞானியான
எட்வர்டு ஓ. வில்சன் (Edward O.Wilson) ஆகியோர் ஆவர். பொதுவாக
இவர்கள் கூறுகின்ற குற்றச்சாட்டு என்னவெனில், 'கைநாற்காலி - தத்துவ
ஆராய்ச்சி'களால் ஒரு பயனும் இல்லை என்பதே! ஆனால், அதேவேளையில்,
பல நோபல் பரிசுகள் கோட்பாட்டியல் பௌதீக விஞ்ஞானிகளுக்குத்தான்
(Theoretical Physicists) வழங்கப்பட்டுள்ளன! அவர்களது புதிய
கோட்பாடுகள், பெரிதும் ஏற்கனவே திரட்டப்பட்ட தரவுகளைக்கொண்டு
கணிதத்தின் ஆற்றலைப் பயன்படுத்தி தங்களது கை நாற்காலியில்
உட்கார்ந்தபடியே, எந்தவொரு ஆய்வுக்கூடம் பக்கமும் ஒதுங்காமலேயே
உருவாக்கப்பட்டவையே! ஆக, கண்-கவனிப்பு, கடினமான பரிசோதனை
கள் எதுவுமின்றி கைநாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே விஞ்ஞானக்
கண்டுபிடிப்புகள் சாத்தியமாகும்போது தத்துவக்கண்டுபிடிப்புகள் மட்டும்
ஏன் சாத்தியமாகாது?
பௌதீகம் எங்கு முடிவடைகிறதோ, அங்கு மீபௌதீகம் தொடங்குவதாகச்
சொல்லப்படுவது தலைகீழ் பார்வையாகும். ஒருவேளை, பௌதீக விஞ்ஞா
னத்தால் முக்கியமான அடிப்படைக் கேள்விகளுக்குப்பதில் கண்டுபிடிக்க
முடியாமல் போகும் கையறு நிலையில், கடைசியாக, பௌதீகம் கடந்த
மீபௌதீகம், அதாவது, தத்துவம் தான் கைகொடுக்கும் என்ற அர்த்தத்தில்
அவ்வாறு சொல்லியிருக்கலாம்! ஆனால், உண்மை என்ன வெனில்,
மீபௌதீகம் அல்லது மெய்யியல் என்பது பௌதீக விஞ்ஞானம் தொடங்கு
வதற்கு முன்னே தொடங்கிவிட்ட ஒன்றாகும். பிரபஞ்சம், மனிதன், மனம்,
அல்லது உணர்வு, வாழ்க்கையின் அர்த்தம் மற்றும் குறிக்கோள் பற்றிய
அனைத்து அடிப்படையான முக்கியமான கேள்விகளையும் முதன் முதலில்
எழுப்பியது தத்துவம்தான்! விஞ்ஞானம் பேசக் கற்றுக் கொள்வதற்கு முன்
னேயே, தத்துவம் வெகு சிறப்பாக சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தது!
முதலிடத்தில், தத்துவமோ,அல்லது விஞ்ஞானமோ, நமக்கு அவை எதற்காக
வேண்டும்?கைநாற்காலியிலோ,அல்லது சாய்வுநாற்காலியிலோ சௌகரிய
மாக அமர்ந்துகொண்டு தத்துவபூர்வமாகச் சிந்தித்துதான் எதைச்சாதிக்கப்
போகிறோம்? அல்லது, பெரும் பணச்செலவுடன் பெரிய பெரிய ஆய்வுக்
கூடங்கள் அமைத்து, பலவித பரிசோதனைகளைச் செய்து முடிவில் எதை
நாம் புரிந்து கொள்ளப்போகிறோம்? இதுவரை என்ன பெரிதாகப் புரிந்து
கொண்டுள்ளோம்? எழுபது, எண்பது, தொன்னூறு , அதிகபட்சம் ஒரு 100 வரு
டங்களை மட்டுமே வாழ்-காலமாகக் கொண்ட இந்த மானுட வாழ்க்கையில்
எவற்றைப் புரிந்துகொள்வது, எவற்றைப் புரிந்துகொள்ளாமல் விட்டுவிடு
வது? முக்கியமாக நாம் புரிந்துகொள்ள வேண்டியவை எவையெவை? மிகக்
குறுகிய வாழ்-காலத்தில், அனைத்தையும் இல்லாவிட்டாலும், முக்கியமான
அம்சங்களை மட்டுமேனும் முழுமையாகப்புரிந்துகொள்ள உதவும் அறிதல்
முறை எது? தத்துவமா? விஞ்ஞானமா? இவையிரண்டும்தான் நம்முன் உள்ள
பிரதான அறிதல் முறைகளாகும்!
நிச்சயம், தனிமனிதஅளவில், விஞ்ஞானம் உதவிடும் என்று சொல்வதற்கிட
மில்லை! ஏனெனில், விஞ்ஞானத்தின் வழிமுறை மிகவும் நெடியது! அது
முடிவேயில்லாமல் நீண்டு வளைந்து செல்லும் நிச்சயமற்ற பாதையாகும்!
நேற்றுவரை முடிவான விஷயமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விஞ்ஞானக்
கோட்பாட்டை , இன்று ஒரு விஞ்ஞானி வந்து தவறென நிரூபித்துவிடுவார்!
அக்கோட்பாட்டிற்குப்பதிலாகவோ, அல்லது அதன் செழுமைப்படுத்தப்பட்ட
வடிவமாகவோ,இவர் முன்வைத்த புதியகோட்பாட்டை,நாளை வேறொருவர்
வந்து தவறெனச் சொல்லிடுவார்! அப்படித்தான் நியூட்டன் கண்டுபிடித்த
எந்திர விதிகளை விஞ்சியதாக ஐன்ஸ்டீன் தனது சார்பியல் கோட்பாட்டைக்
கொண்டுவந்தார் - அதை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இன்னும் ஆய்வு
செய்துகொண்டே இருக்கிறார்கள்!
விஞ்ஞானத்தைப் பற்றிய ஒரு முக்கிய உண்மை என்னவென்றால், அதன்
வழியாகப்பெறக்கூடிய அறிவனைத்தும், தொழில் நுட்பத்தின் வழியாக பல
வித பொருட்களாக, சாதனங்களாக, கருவிகளாக மாற்றப்பட்டு மனிதனின்
நடைமுறை வாழ்க்கைக்கு மட்டுமே உதவுமேதவிர, வாழ்க்கையின் சார
மான உட்பொருளை (அர்த்தத்தை) அறிய விஞ்ஞானம் சிறிதும் உதவுவது
இல்லை! இதுவரையிலும் அது மனித வாழ்க்கையின் அர்த்தம் பற்றியோ,
குறிக்கோள், இலக்கு பற்றியோ உருப்படியாக எதையும் கண்டறிந்து சொன்
னது இல்லை! மாறாக, அது உலகைப்பற்றியும், மனிதன் மற்றும் அவனது
வாழ்க்கை பற்றியும் மிகவும் எதிர்மறையான முடிவுகளையே அறிவித்து
உள்ளன.அதாவது, "பிரபஞ்சம் அர்த்தமற்றது, குறிக்கோளற்றது! பரிணாமம்
குறிக்கோளற்றது, மற்றும் அது ஒரு குருட்டு நிகழ்வுமுறை! மனிதன் என்ப
வன் பல விலங்கினங்களில் ஒரு விலங்கினம்! (மனித) வாழ்க்கை குறிக்
கோளற்றது, மற்றும் அர்த்தமற்றது!" இவைதான் விஞ்ஞானம் வெளிப்படுத்
திய பேருண்மைகள்! <இதைப்பற்றிய விரிவான விளக்கங்களுக்கு காண்க:
"அபத்தமான ஐந்து விஞ்ஞானப்பேருண்மைகள்!"
@ vicharamarg.blogspot.in
விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை ஒருபோதும் அதனால் எதைப்பற்றியும்
முடிவான உண்மையைக் கண்டறிந்து சொல்ல இயலாது! துண்டு துண்டாக
அது பலவற்றைப்பற்றிய விபர உண்மைகளைக்(Facts)கண்டறிந்து சொல்
லக்கூடுமே தவிர, அவ்விபர உண்மைகளை ஒன்றிணைத்து ஒரு முழு -சித்தி
ரத்தை அதனால் அளிக்கஇயலாது!விஞ்ஞானத்தின் பிரதானவெற்றியானது,
இயற்கை, அதாவது பருப்பொருளாலான உலகம், எவ்வாறு, எத்தகைய விதி
களைக் கொண்டு செயல்படுகிறது என்பதை ஆராய்ந்து அவ்விதிகளைக்
கண்டுபிடித்திடுவதில் தான் அடங்கியுள்ளது! அந்த இயற்கை-விதிகளைக்
கொண்டுதான் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள், சாதனைகள் சாத்தியமா
கின்றன!அதேநேரத்தில், இயற்கையின், உலகின் "விதிகளை"க்கண்டுபிடித்
திடுவது என்பது ஒரு விஷயம்; அதாவது, இயற்கை விதிகள்தான் உலகைச்
செலுத்துகின்றன அல்லது நிர்வகிக்கின்றன, இவையெல்லாம் சரிதான்!
ஆனால், அந்த விதிகள், ஏன், எதற்காக, எந்த நோக்கத்திற்காக, எத்தகைய
உன்னதமான இலக்கை அடைவதற்காக முடுக்கிவிடப்பட்டுள்ளன? இங்கு
நாம் விதிகளைப்பற்றிப்பேசிக்கொண்டிருக்கிறோம்! அதாவது, "எத்தகைய
உயர்-விதிகள், அல்லது, ஒரு ஒற்றைத் தலைமை விதி, இயற்கைவிதிகளை
முடுக்கிவிட்டன அல்லது உருவாக்கி நிர்வகிக்கின்றன?" எனும் இந்தக்கேள்
விக்கு விஞ்ஞானத்திடம் பதில் இல்லை! ஒருபோதும் அதனிடமிருந்து பதில்
வரப்போவதுமில்லை!
ஆகவேதான், முறையான தத்துவச் சிந்தனையின் இடத்தை ஒருபோதும்
விஞ்ஞானத்தால் இட்டு நிரப்பவோ, ஈடுசெய்யவோ இயலாது என்கிறேன்!
அதே நேரத்தில், விஞ்ஞானத்தின் இடத்தை தத்துவத்தைக்கொண்டு நிரப்ப
வேண்டிய தேவையில்லை! ஏனெனில், அது தத்துவத்தின் வேலை அல்ல!
பகுதிகளை ஆராய்ந்தறிவது விஞ்ஞானத்தின் பணி! முழுமையை அதன்
சாரமான ஒருமையில் உணர்ந்தறிவது தத்துவத்தின்பணி! ஆம்,பகுதிகளை
ஆராய்ந்தறியும் விஞ்ஞானத்தினால் நமக்குப் பலப்பல பயன்கள் உண்டு!
ஆனால், தத்துவத்தினால் மட்டுமே பிறவிப்பயனை அளிக்க இயலும்! அதே
நேரத்தில், விஞ்ஞானஉண்மைகளை நாம் விஞ்ஞானிகளிடமிருந்து தெரிந்து
கொள்ளலாம், புரிந்தும் கொள்ளலாம்;அல்லது புரிந்துகொள்ளாமலும் போக
லாம்! ஒரு தொலைக்காட்சிப் பெட்டி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப்
புரிந்து கொள்ளாமலே அதனுடைய பயன்களை நாம் அனுபவிக்கலாம்!
அதற்கு நாம் எல்லோரும் விஞ்ஞானிகளாக ஆகவேண்டிய அவசியமில்லை!
ஆனால், தத்துவ உண்மைகளை நாம் தத்துவ ஞானிகளிடமிருந்து தெரிந்து
கொள்ளலாம், அறிவுப்பூர்வமாகப் புரிந்துகொள்ளவும் முடியலாம்; ஆனால்,
அவை நம் ஒவ்வொருவருக்கும் பெரும் ஆர்வத்தூண்டுதலாக(Inspiration)
மட்டுமே அமைய முடியும்! ஏனெனில், தத்துவ உண்மைகள், உவமைகள்,
விளக்கங்கள் வடிவில் 'செய்முறைக்குறிப்புகளாக' (Recipes) மட்டுமே
வழங்கப்பட முடியும்! நமக்கான உண்மையை நாம் ஒவ்வொருவரும் தான்
நேரடியாகச்சிந்தித்து உணர்ந்தறிந்திடவேண்டும்!அதாவது நாம் ஒவ்வொரு
வரும் தத்துவஞானியாக ஆகவேண்டியது தவிர்க்கக்கூடாத அவசியமாகும்!
மேலும், வாழ்க்கை என்பது ஒவ்வொரு தனிமனிதனும் தன் வாழ்-காலத்திற்
குள்ளேயே முழுமையாக வாழ்ந்து முடிக்கவேண்டிய ஒன்றாகும். அது எவ்வ
ளவு வருடங்கள் உயிர்-வாழ்கிறோம் எனும் மேலோட்டமான விவகாரமல்ல!
உயிர்-வாழ்தல் என்பது உடலியல்ரீதியானது;அது எல்லா விலங்குஜீவிகளுக்
கும் பொதுவானது. உண்மையான வாழ்தல் என்பது உணர்வுரீதியானது,அது
உணர்வு கொள்ளும் மனிதஜீவிக்கு மட்டுமே உரியது!
உண்மையில், தந்த கோபுரம் என்பது தந்தத்தால் கட்டியெழுப்பப்பட்டதல்ல!
அது மனிதனின் உணர்வைக்குறிக்கிறது. தத்துவம் சாய்வு நாற்காலியில்
சௌகரியமாக அமர்ந்து கொண்டிருக்கும் போது மட்டுமே நிகழக்கூடிய
தல்ல! மனிதனின் உணர்வே தத்துவம் நிகழும் தளம்; ஆக, ஒருவர் நின்று
கொண்டிருக்கும்போதும், அன்றாட அலுவல்களில் ஈடுபட்டிருக்கும்போதும்,
சந்தடி நிறைந்த சூழலிலும், அமைதியான சூழலிலும், இன்னும் உறங்கும்
போதும்கூட தத்துவம் நிகழும்! எனினும், அமைதியான சூழலும், ஆய்ந்து
சலித்தபின் ஓய்வாக அமர்தலும் தத்துவத்திற்கு மிகவும் உகந்ததாய் அமை
யும்; அதற்கு சாய்வுநாற்காலி உதவுமெனில், தத்துவம் தடையின்றி நிகழும்!
"தந்த கோபுரம்"(IvoryTower)என்பது ஒருவர் நிஜஉலகின் நடைமுறைகள்
மற்றும் உண்மைகளிலிருந்து ஒதுங்கி சாதகமாகத் தனிமையை அனுபவிக்
கும் நிலையென எதிர்மறையாகக் குறிக்கும் ஒரு சொற்சேர்க்கை யாகும்!
ஆனால்,நிஜஉலகம் என்பது எவ்வளவு நிஜமானது?உலகம் என்பது உறைந்து
நிற்கும் நிலக்காட்சி (Static Landscape)அல்ல! அது பாய்ந்தோடும் நதி
யைப் போன்ற இயக்கமாகும்; அது முடிவாக எத்தகைய இலக்கு நோக்கிச்
செல்கிறது என்பதை, இதுவரை அது படிப்படியாக எத்தகைய நிலை மாற்
றங்களைக் கடந்து வந்துள்ளது என்பதிலிருந்து உய்த்துணர்ந்து கண்டுபிடிக்
காமல், இனி விஞ்ஞானம் ஓரடிகூட முன்னோக்கிச் செல்லவியலாது! உலகம்
என்பது முடிவான நிஜமோ, ஒரு மூடுண்ட அமைப்போ அல்ல! மாறாக, அது
நிஜத்திலும் நிஜமான நிலையை நோக்கிச் செல்லும் நிஜமாகும்! அதாவது,
உலகம் எனும் பரிணாம இயக்கத்தின் இலக்கை அறியாதவரை, அதை ஒரு
அரை-நிஜமாகத்தான் கொள்ளமுடியும்!
நாம் ஒரு மேசையைப் புரிந்து கொள்வது போல உலகைப் புரிந்துகொள்ள
முடியாது! ஒரு மேசையைக்கூட, அது எப்பொருளினால் ஆனது, மரத்தினால்
ஆனதா, அப்படியானால், எந்த மரத்தினால ஆனது; அல்லது இரும்பினால்
ஆனதா? அதன் நீளம், அகலம், உயரம் எவ்வளவு; அதற்கு எத்தனை கால்கள்
உள்ளன, இழுப்பறைகள் எத்தனை? எனும் விபர-உண்மைகளைக் கொண்டு
மட்டுமே புரிந்துகொள்ளமுடியாது; அதாவது, அதன் இருப்பிற்கான நியாயம்
என்ன,அதாவது அதன் நோக்கம்,பயன்பாடு என்ன, என்பவைகளைப்புரிந்து
கொள்ளாமல் ஒரு மேசையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது!
ஆனால், தத்துவவாதிகள் 'அர்த்தம்' மற்றும் 'குறிக்கோள்' பற்றிப் பேசும்
போது, விஞ்ஞானிகளின் ஒரு விமர்சனம் என்னவெனில், 'அர்த்தம்' மற்றும்
'குறிக்கோள்' ஆகியவை மானுடச் சொல்லாடலிலிருந்து பெறப்பட்டவை;
ஆகவே, அவற்றை இயற்கையின்மீது ஏற்றிச்சொல்லக்கூடாது, என்பதுதான்.
இதைத்தான் நானும் சொல்கிறேன், 'அர்த்தம்' , 'குறிக்கோள்' ஆகியவை
மானுடச் சொல்லாடலிலிருந்து பெறப்பட்டவையாகும்; ஆகவே, அவற்றை
இயற்கையின் மீது ஏற்றிச் சொல்லக்கூடாது என்பதைப்போலவே, சடப்பொ
ருளின் பௌதீகப்பண்புகள் இயற்கைக்கு உரியவை, அவற்றை மனிதஜீவி
களுக்கு பொருத்திச்சொல்வது கூடாது!
ஆனால், மானுடச் சொல்லாடல் வழியாக அல்லாமல், மானுட நோக்கிலல்லா
மல் எதையும் நம்மால் புரிந்துகொள்ளமுடியாது! மேலும், மானுட நோக்கு
என்பதும் இறுதியானதாக இருக்கமுடியாது! ஏனெனில், மனிதன் பரிணாம
வழிமுறையில் தோன்றியவனாதலால், பரிணாமத்தின் முடிவான இலக்கு
எதுவோ அதுதான் மனிதனின், அதாவது அவனது வாழ்வின் இலக்காகவும்
இருக்கமுடியும்!
அதாவது, இயற்கையை, உலகை, பருப்பொருளினுடைய பண்புகள், மற்றும்
அதன் பௌதீக இயக்கத்தின் சொற்களிலேயே புரிந்துகொள்ளமுடியாது!
ஏனெனில், பௌதீக இயக்கம் என்பது எந்திரத்தனமானது, ஆகவே, அதுவும்,
பண்பு நிலை மாற்றங்களைக் கொண்டு முன்னேறிச்செல்லும் பரிணாம
இயக்கமும் ஒன்றல்ல! இயற்கையானது பருப்பொருள் பண்பினைக்கடந்து
சென்று வெகுகாலம் ஆகிவிட்டது! உலகம், இயற்கை என்பது வெறும் பருப்
பொருள் மட்டுமல்ல; அது உயிர் பெற்றெழுந்து, தற்போது உணர்வாகவும்
எழுந்துள்ளது! உணர்வுதான் உலகின் தற்போதைய புதிய முகம்! ஆனால்,
விஞ்ஞானம் தன்னை பருப்பொருளாலான உலகைப்பற்றிய ஆய்வாகச்
சுருக்கிக் கொண்டதன் விளைவாக, அதனால் உயிரற்ற, எந்திரத்தனமான
உலகைமட்டுமே புரிந்துகொள்ளமுடியும்!இயற்கையை,உலகை,அதனுள்ளே
இருந்தவாறே முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது! மாறாக, உலகிற்கு
வெளியேயிருந்து அதைப்புரிந்துகொள்ளவேண்டும்!
அதாவது, உலக இருப்பிற்கான நியாயம், நோக்கம், அர்த்தம், குறிக்கோள்,
மற்றும் இலக்கு ஆகியவற்றின் நோக்கிலிருந்து மட்டுமே உலகை முழுமை
யாகப்புரிந்துகொள்ளமுடியும்!மேலும்,பருப்பொருளாலான உலகைப்பற்றிய
விபர-உண்மைகளையும், அதன் விதிகளையும் ஓரளவிற்கு முழுமையாகத்
திரட்டிப் புரிந்துகொள்வதுடன் விஞ்ஞானம் முடிவிற்கு வந்திடுவது என்பது
தவிர்க்கமுடியாததாகும்!
தத்துவம் விஞ்ஞானத்தின் தொடர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், பெரும்
அச்சுறுத்தலாக விளங்குகிறதா? அதாவது, விஞ்ஞானமானது புலனறிவின்
எல்லைகளைத்தொட்டுவிட்டதா? அதாவது, பருப்பொருளினது பண்புகளின்
(Properties),அதன் நிகழ்வுமுறைகளின் (Phenomena),சாத்தியப்பாடு
களின் எல்லைகளைத் தொட்டுவிட்டதா? "விஞ்ஞானம் முடிந்து விட்டது!"
எனும் முன்னறிவிப்பு உண்மையாகிவிட்டதா? ஏனெனில்,விஞ்ஞானிகள் தற்
போது, கண்-கவனிப்பு (Observation)மற்றும் பரிசோதனைகள் (Experi
ments)மூலம் அறிய முடியாதவகையிலான, "பல-பிரபஞ்சம்"(Multiverse) "நாணிழைக்கோட்பாடு" (String Theory)போன்ற கற்பனைக்கோட்பாடு
களைப்புனைந்து கொண்டு தடுமாறிக்கொண்டுள்ளனரே! விஞ்ஞானத்தின்
முடிவு பற்றி விரிவாக வேறொரு தனிக்கட்டுரையில் பார்ப்போம்.
விஞ்ஞானமாகட்டும், தத்துவமாகட்டும், மனிதன் தன்னையும்,தான் வாழும்
உலகையும்,தன்னுடைய வாழ்க்கையையும்,அதன் உண்மையான நோக்கம்,
குறிக்கோள், அர்த்தம், இலக்கு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் அறிதல்
முறைகள் என்கிற வகையில், இரண்டுமே அவற்றின் பணி முடிந்ததும், ஒவ்
வொரு தனிமனிதனைப்பொறுத்தவரையிலும், முடிவிற்கு வந்துதான் ஆக
வேண்டும்! ஆயினும், மனித இனம் உள்ளவரை, இரண்டின் பணியும்,சேவை
யும் தொடர்ந்திடவே செய்யும். விஞ்ஞானம், தத்துவம், இவ்விரண்டும் மனித
வாழ்வின் இரு வெவ்வேறு தேவைகளை நிறைவேற்றுவதற்கான கருவிகள்
ஆகும். விஞ்ஞானம் உயிர்-வாழ்தலுக்குரிய நடைமுறைத் தேவைகளைப்
பூர்த்திசெய்திடும்! தத்துவம் உயிர்-வாழ்தலின் அர்த்தம், குறிக்கோள்,
மற்றும் இலக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய ஆன்மீகத்தேவையை நிறை
வேற்றி மனிதவாழ்வை முழுமைப்படுத்திடும்!
முக்கியமாக, தனிமனிதன் தனது வாழ்-காலத்திற்குள்ளாகவே வாழ்க்கை
யைப்புரிந்து கொள்ளாவிடில், அவனது வாழ்க்கை அர்த்தமற்ற ஒன்றாகி
விடும்! இன்று புரிந்துகொள்ளாததை நாளை, அல்லது, என்றாவது புரிந்து
கொள்ளலாம் என்கிற சாவதானமான விஞ்ஞான அணுகுமுறை அடிப்படை
யிலேயே தவறானதாகும்! ஏனெனில், வாழ்க்கையின் அர்த்தம் அறியாமல்
வாழ்ந்து செல்வதற்கு மனிதன் உணர்வற்ற விலங்கு அல்ல! மேலும், உலகம்,
மனிதன், வாழ்க்கை இம்மூன்றும் சங்கமமாகும் புள்ளியான ஒருமையும்
முழுமையுமான மெய்ம்மையை உணர்ந்தடைவது தான் மனிதஜீவிக்கான
பிரத்யேக வாழ்க்கைச் சவால் என்றால், நிச்சயம் ஒவ்வொருவரும் தனது
வாழ்-காலத்திற்குள் அதைச் சாதிப்பதற்கான எளிமையான நேர்வழி ஒன்று
இருக்கவேண்டும்!
<•>
மா.கணேசன் / நெய்வேலி/ 28.11.2016
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment