இந்த விதி, இதுவரை சொல்லப்படாத ஒன்று!
இந்தவிதி உங்கள் தெரிவுகளை நெறிப்படுத்தும்!
கால விரயம், அது வாழ்க்கை விரயம் என எச்சரிக்கும்!
காலம் கடத்தாமல் காலத்தைக் கடக்கும்படிச் சொல்லும்!
உங்கள் மதிப்பீடுகளை மறு மதிப்பீடு செய்யப் பணிக்கும்!
அர்த்தம், உண்மை, மெய்ம்மையை முதலில் தேடச் சொல்லும்!
உயிர்-வாழ்தலல்ல, உயர்-வாழ்தலே உன்னதம் என போதிக்கும்!
மொத்தத்தில் முக்தி எனும் முழுமைக்கு உங்களைத் தயார் செய்யும்!
<•>
இந்த "வாழ்-கால வரையறை விதி" யின் பிரதான உணர்த்துகோல் என்ன
வென்றால், இந்தவிதி நம்மை முழுமையாக நம் வாழ்க்கையை வாழ்ந்திடச்
சொல்வதோடு, அதற்குரிய முயற்சிகள், செயல்பாடுகள் அனைத்தையும்
உடனடியாகவும், விரைவாகவும், துரிதமாகவும், தீவிரமாகவும் மேற்கொளச்
சொல்கிறது! ஏனெனில், நாம் பெற்றுள்ள "வாழ்க்கை" எனும் இந்த அரிய
வாய்ப்பை முறையாக,முழுமையாகப்பயன்படுத்தி, ஒவ்வொருவரும் அவரு
டைய வாழ்-காலத்திற்குள்ளாகவே முழுமை எனும் பிறவிப்பயனை அடையு
மாறு சொல்கிறது! ஏனெனில், இவ்விதி மறுபிறவி மீது நம்பிக்கை கொள்வ
தில்லை! மனிதன் எத்தனை பிறவிகள் எடுத்தாலும், எவ்வளவு தான் சூழ்
நிலைமைகள் மாறியமைந்தாலும், அவனது உளப்பான்மை அப்படியேதான்
தொடரும்; அது இயல்பாகவோ, தாமாகவோ, கடவுள் அல்லது வேறு எவரது
அருளாலோ மாறிட வழியேது மில்லை! இப்பிறவியினால் ஒருவனுக்கு
அர்த்தம், உண்மை, மெய்ம்மை ஆகியவற்றின் மீது ஆர்வம் பிறக்கச்செய்ய
முடியவில்லையெனில், அடுத்தடுத்த பிறவிகளால் மட்டும் என்ன செய்ய
முடியும்? இப்பிறவியில் உணர்வு நிலை மாற்றம் பெறமுடியாதவனால்
எத்தனை பிறவிகள் எடுத்தாலும் முடியாது! இவ்விதியின் குறியீட்டுச்சொல் :
"இப்போதில்லையெனில், வேறெப்போதுமில்லை!"
<•>
இந்த விதி உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழச்சொல்கிறது!அதற்கு
வாழ்க்கை என்றால் என்ன என்று விரைந்து புரிந்து கொள்ளச் சொல்கிறது!
ஏனெனில், அறிதல், தெளிதல், புரிதல் தான் வாழ்தலும், வாழ்க்கையும்,
இலக்கும் என்று அது போதிக்கிறது! அது சரி, ஆனால், வாழ்க்கையைப்
புரிந்து கொள்ளும் விஷயத்தில் விரைவும் அவசரமும் ஏன் என்று கேட்கிறீர்
களா? ஏனென்றால், வாழ்க்கையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை
ஒருவர் மிக அரிதாகவே தேர்வு செய்கிறார்; மேலும், அவ்வாறு தேர்வு செய்
கிறவர்களின் விகிதமும் ஒரு சதவீதத்திற்கும் குறைவே என்பதால்தான்
அவசரத்தின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது! வாழ்க்கை என்றால் என்ன
என்று புரிந்து கொள்ளும் விஷயத்திற்கு, 99 % பேர்கள் அந்நியர்களாகவே
இருக்கிறார்கள்!
வாழ்க்கையைப் புரிந்துகொள்வதன் அவசர-அவசியத்தை ஒருவர் தன்னுள்
உணர்ந்து அதை சிரமேற்கொள்ளத்தொடங்கிவிட்டால், அதன்பிறகு அவர்
மிக நிதானமாகவும்,பரபரப்பின்றியும்,அமைதியாகவும் தன் வாழ்க்கையை
வாழும் கலையைத் தானே கற்றுக் கொள்வார்! ஏனெனில், அசலான வாழ்க்
கைக்குப் புறம்பான மதிப்பீடுகள், நடைமுறைகள், விவகாரங்கள், செயல்
பாடுகள், ஈடுபாடுகள் ஆகியவற்றின் மட்டுப்பாடுகளையும், பொருத்தமின்
மையையும் அவராகவே புரிந்துகொண்டு, அவசியமான,மிகவும் அத்தியாவ
சியமான, அர்த்தமுள்ள தேவைகளை, விஷயங்களை மட்டுமே நாடித்தேடிப்
பெற்று தேவையற்ற அலைக்கழிப்பின்றி நிறைவுடன் வாழ்வார்!
ஆனால், வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாமல்தான் வாழ்கிறோமா? அப்படி
பிரத்யேகமாகப் புரிந்துகொள்ள வாழ்க்கையில் என்ன இருக்கிறது? என்று
நம்மில் பலர் கருதலாம், கேட்கலாம்! ஆம், வாழ்க்கையைப்பற்றி பிரத்யேக
மாகப் புரிந்துகொள்ள ஒரு பிரதான அம்சம் உள்ளது! அது, "வாழ்க்கை" என்
பது தான்! அதாவது,மனிதஜீவிகளாக நாம் பிறக்கும்போது, "உயிர்-வாழ்தல்"
(Survival)எனும் தளத்திற்குத்தான் அறிமுகப்படுத்தப்படுகிறோமேதவிர;
அதோடு, அக்களத்தில் எவ்வாறு நம்மைத் தக்கவைத்துக் கொள்வது, அதா
வது, உயிர்-பிழைத்திருப்பது என்பது மட்டுமே கற்றுத்தரப்படுகிறதே தவிர,
வாழ்க்கைக்கு நம்மை எவரும் அறிமுகப்படுத்துவதுமில்லை, அசலான
வாழ்க்கைக்கு எவரும் நம்மைத் தயார்படுத்துவதுமில்லை! மேலும், வாழ்க்
கையைக் கற்றுத்தர யாதொரு பள்ளியும், பல்கலைக்கழகமும் இல்லை!
ஆம், வாழ்க்கை என்பது நம் ஒவ்வொருவராலும் கண்டடையப்படவேண்டிய
ஒன்றாகும்!
வாழ்க்கையைப் புரிந்துகொள்வது என்றால் என்ன?நிச்சயமாக அது உணவு,
உடை, உறையுள், மற்றும் உறவுகள் குறித்த குறுகிய விவகாரம் அல்ல!
இவை உயிர்-பிழைத்தல் கோளத்தின் விவகாரங்கள் ஆகும்!மாறாக,உலகம்
அல்லது பிரபஞ்சம் ஏன்,எந்த நோக்கத்திற்காகத் தோன்றியது? அதில், உயிர்
ஜீவிகளும், சிந்திக்கும் திறனுள்ள, உணர்வுடைய மனிதஜீவிகளும் ஏன், எதற்
காகத் தோன்றியுள்ளோம்?பிரதானமாக பிரபஞ்சத்திற்கும் மனிதஜீவிக்கும்
இடையேயான தொடர்புறவு என்ன? என்பவற்றையெல்லாம் புரிந்து கொள்
வதே வாழ்க்கையைப்புரிந்து கொள்வது என்பதாகும்!
முக்கியமாக, பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்குமான தொடர்புறவைப் புரிந்து
கொள்வதென்பது பிரபஞ்சத்தைத் தனியே புரிந்து கொண்டு, பிறகு, அதில்
மனிதனைப் பொருத்திக் காண்பது அல்ல! ஏனெனில், இவ்வழியே பிரபஞ்
சத்தையும் புரிந்து கொள்ள இயலாது, மனிதனையும் புரிந்து கொள்ள இய
லாது! அதாவது, மனிதனைத் தொடர்பு படுத்தாமல் பிரபஞ்சத்தையும்;
பிரபஞ்சத்துடன் தொடர்பு படுத்தாமல் மனிதனையும் புரிந்து கொள்ள
இயலாது! பிரபஞ்சம் என்பது பருப்பொருளாலானதொரு, அதாவது, கேலக்
ஸிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள்,மற்றும் பல வினோத பொருட்களையும்
நிகழ்வுகளையும் உள்ளடக்கமாகக் கொண்ட, மாபெரும் அமைப்பு மட்டும்
அல்ல! இது பிரபஞ்சத்தைப் பற்றிய மிக மேலோட்டமானதொரு சித்திரம்
ஆகும்! அதாவது, மனிதன் என்பவன் இதயம், நுரையீரல்கள், இரைப்பை,
குடல்கள், சிறுநீரகங்கள் போன்ற உள்ளுறுப்புகளைக் கொண்ட, ஒரு உயிர்
ஜீவி என்று குறிப்பிடுவதுபோலவே மேலோட்டமானதாகும்!ஆம், மனிதனின்
உள்ளுறுப்புகள் அவனை முழுமையாக வெளிப்படுத்து வதில்லை! அவ்
வாறே, பிரபஞ்சத்தின் உள்ளடக்கமும் அதனை முழுமையாக வெளிப்படுத்
துவதில்லை!
ஆனால், பொதுவாக விஞ்ஞானமும் , பொருண்மைவாதத் தத்துவமும் இத்
தகைய எந்திரத்தனமான அணுகுமுறையைக் கொண்டே பிரபஞ்சத்தையும்
மனிதனையும், அவனது வாழ்க்கையையும் புரிந்து கொள்ள முயற்சித்து
தொடர்ந்து தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கின்றன! இத்தகைய
அறிதல் முறையின் வாயிலாக இன்னும் நூறு நூற்றாண்டுகள் ஆனாலும்
விஞ்ஞானிகளால் பிரபஞ்சத்தையும்,மனிதனையும்,அவனது உண்மையான
வாழ்க்கையையும் புரிந்து கொள்ள இயலாது! இன்று அறியப்படாத ஒரு
விஷயத்தை, நாளை அறிந்து கொள்ளலாம் எனும் சாவதானப் போக்கும்,
நாளை நிச்சயம் விஞ்ஞானம் கண்டுபிடித்துச்சொல்லிடும் எனும் அதிகப்படி
யான நம்பிக்கையும் அறியாமையின் வழிப்பட்டதாகும்! ஏனெனில், விஞ்
ஞானிகள் கண்டுபிடித்துச் சொல்லும் வரையில், வாழ்க்கை காத்திருக்காது!
"வாழ்-கால வரையறை விதி" சொல்வதென்னவென்றால், ஒவ்வொருவனும்
தன் (ஒரு) வாழ்-காலத்திற்குள்ளாகவே வாழ்க்கையைப் புரிந்துகொள்வதை
யும், முழுமையாக வாழ்வதையும் சாதித்தாகவேண்டும் என்கிறது! இதன்
உணர்த்துகோல் என்னவென்றால், இவ்வாறு அனைத்தையும் ஒருவன் தன்
வாழ்-காலத்திலேயே புரிந்து கொள்வது என்பது சாத்தியம் என்பதேயாகும்!
அதற்கு, முக்கியமாக, ஓருவன் மிகச்சரியான, முறையான அணுகு முறை
யினைக் கைக்கொள்வது அவசியமாகும்!
ஆம்,உலகம் என்பது நாம் விழுந்துபுரண்டு காரியமாற்றுவதற்கான களமும்
அல்ல! வாழ்க்கை என்பது உணவு, உடை, உறையுள், உறவுகள் ஆகியவற்
றைச் சுற்றிச் சுழலும் உயிர்பிழைத்தல் விவகாரமும் அல்ல! இதன் அர்த்தம்,
உணவு வேண்டாம், உடை வேண்டாம், எதுவும் வேண்டாம், இன்னும் உயிர்
வாழவும் வேண்டாம் என்பதல்ல! அதாவது,எவ்வொரு கட்டடத்திற்கும் அடித்
தளம் அவசியம் என்பதை எவரும் மறுக்கமுடியாது! அதேவேளையில், அடித்
தளம் மட்டுமே கட்டடம் ஆகிடாது! எவ்வாறு ஒரு கட்டடத்திற்கு அடித்தளம்
என்பது அவசியமோ, அவ்வாறே, 'உயிர்-வாழ்தல்' என்பது உண்மையான
வாழ்க்கைக்கான ஒரு அடிப்படையே, அடித்தளம் மாத்திரமே தவிர அதுவே
முழு-வாழ்க்கையாகவும் ஆகிடாது!
ஆனால், மனிதகுலம் காலம்காலமாக, உயிர்-பிழைத்தலையே வாழ்க்கை
யென வாழ்ந்து நெடிய வரலாறும் படைத்து வந்துள்ளது! இத்தகைய அவல
நிலையைக் கண்ட ஞானி இயேசு,
"என்னத்தை உண்போம்,என்னத்தைக் குடிப்போம்,
என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்."
"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய
நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம்
உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும்."
(புதிய ஏற்பாடு, மத்தேயு 6 : 33)
என்று கூறினார்! ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் இவ்வாக்கின்
உண்மையை எவரும் புரிந்து கொண்டதாகவோ, அசலான வாழ்க்கையை
எவரும் நாடியதாகவோ தெரியவில்லை! மாறாக, மனிதகுலம் எப்போதும்
போலவே பிழைப்பு நடத்திச் செல்கிறது! உண்மையான மனித வாழ்க்கை
என்பது உயிர்-வாழ்தலைக் கடந்தது எனும் உண்மையை எப்போது நாம்
புரிந்து கொள்ளப்போகிறோம்? ஏன் நாம் எப்போதும் வாழ்க்கையின் மேற்
புறத் தேவைகளுக்குரிய பொருட்களை மட்டுமே நாடித் தேடுகிறோம்?
எப்போது நாம் வாழ்க்கையின் உட்பொருளான அர்த்தத்தைத் தேடுவோம்?
என்பதே நம்முன்னே நிற்கும் கேள்வியாகும்!
உயிர்-வாழ்தல் என்பது அனைத்து உயிர்-ஜீவிகளுக்கும் பொதுவானதொரு
செயல்பாடாகும். ஆனால், மனித ஜீவிக்கும், பிற விலங்கு ஜீவிகளுக்கும்
உள்ள வித்தியாசம் என்ன? அல்லது, டார்வின் முதல் டாக்கின்ஸ் வரை
பரிணாம வாதிகள் சொல்வது போல, மனிதன் என்பவன் இன்னுமொரு
விலங்கினம் தானா? விலங்குஜீவிகளும் உயிர்வாழ்கின்றன, நாமும் உயிர்
வாழ்கிறோம்! ஆனால், உயிர்-வாழ்தல் என்றால் என்ன? ஒரு சில குறிப்பிட்ட
இயல்பூக்கிகளின் - பசி, தாகம், பாலுணர்வு, பாதுகாப்புணர்வு ஆகியவற்
றின்- தூண்டுதல்களுக்குப் பதிலளிப்பது என்பதுதானே! மனிதன் உள்பட
அனைத்து உயிர்-ஜீவிகளும் உயிருள்ள எந்திரம் போல இயங்குகிறோம்!
நமது இயக்கம் எதைக் குறிக்கோளாக இலக்காகக் கொண்டிருக்கிறது என்
பது குறித்து நாம் கேள்வி எழுப்பியதுண்டா? ஒருவகையில், 'உயிர்வாழ்தல்'
என்பது அனைத்து உயிரினங்களின் மீதும் திணிக்கப்பட்டதாக உள்ளது!
உயிர்வாழ்தல் என்பது ஒரு வரமா? அல்லது சாபமா? உண்மையில் மனித
ஜீவிகள் உள்பட அனைத்து ஜீவிகளும் உயிர்வாழும்படிச் சபிக்கப்பட்டுள்
ளோம் என்பதாகவே தோன்றுகிறது! தெரிவுகளில்லா நிர்ப்பந்தம் எவ்வாறு
வரமாகும்? உயிர்வாழ்தலுக்காக உயிர்வாழ்தல் என்ற கட்டாய உழைப்பு
முகாமுக்குப் பெயர்தான் 'வாழ்க்கை'யா? "எதற்காக உயிர்வாழ்கிறோம்?"
"இது என்ன கேள்வி, உயிர்வாழ்வதற்காக உயிர்வாழ்கிறோம்!" ஆக, அர்த்த
மின்றி, குறிக்கோளின்றி, இலக்கின்றி; ஏன், எதற்கு என்ற கேள்வியின்றி,
ஆகவே பதிலின் தேவையின்றி, உயிர்வாழ்வதற்காக உயிர்வாழ்கிறோமா?
இவ்வனைத்துக் கேள்விகளுக்குமான சரியான, முறையான பதில்களைக்
கண்டறிவதில் சிரத்தையுடன் ஈடுபடும் போது மட்டுமே அசலான மனித
வாழ்க்கை என்பது தொடங்குகிறது! அதற்கு முன்னர் ஒருபோதும் இல்லை!
ஆனால், கேள்விகளுக்கும், மனித வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு என்ன?
ஆம், தொடர்பு இருக்கிறது! கேள்விகள் தான் மனித-உணர்வைக் கிளறி
மனிதனை உணர்வுக்குக் கொண்டுவருகின்றன! இவ்விடத்தில், உணர்வுக்
கும், வாழ்க்கைக்குமான தொடர்பைப் புரிந்துகொள்வது முக்கியம்! ஏனெ
னில், உணர்வில்லாமல், வாழ்க்கை, குறிப்பாக, மனிதவாழ்க்கை என்பது
சாத்தியமில்லை! பிரத்யேகமாக வாழ்க்கை என்றால் என்ன என்று புரிந்து
கொள்ளத் துவங்கும் போது தான் நாம் அசலான (மனித) வாழ்க்கைக்குள்
பிரவேசிக்கிறோம்; அதற்கு முன்னர் ஒருபோதும் இல்லை! சற்று எண்ணிப்
பார்ப்போம், நாம் எதை வாழ்க்கை என வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்
பதை சற்று திரும்பிப்பார்ப்போம்! ஆம், எலிகள் தம் வாழ்க்கைக்கு என்ன
வெல்லாம் செய்கின்றனவோ, அவற்றையே தான் நாமும் செய்கிறோம்;
ஆனால், மிக நேர்த்தியாகவும், மிக விரிவாகவும் செய்கிறோம்! ஆனால், எலி
களின் சமூகத்தில், அந்தஸ்து,வீண்ஆடம்பரம்,போன்ற போலியானமதிப்பீடு
களும்; ஏழை, பணக்காரன் எனும் ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதாகத்தெரிய
வில்லை!
அதாவது, அசலான வாழ்க்கை பற்றியும், வாழ்க்கையின் அர்த்தம், குறிக்
கோள், இலக்கு பற்றியுமான தேடல் நம்மிடம் இல்லாததால், வெறும் உயிர்
பிழைத்தலையே ஆடம்பரமாக அலங்கரித்துக் காண்பதன் வழியாக வாழ்க்
கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிவிட்டதான மாயையில் மயங்குகிறோம்!
மேலும், பொய்யும் போலியுமான மதிப்பீடுகளை உருவாக்கி சமூகத்தைப்
போட்டிக் களமாக மாற்றி, இத்தகைய எலிப்பந்தயத்தில் (Rat-Race)ஒரு
வரை ஒருவர் முந்திச் செல்வதை வாழ்க்கையில் முன்னேற்றம் அடைதல்,
வெற்றி பெறுதல் என்றெல்லாம் வாழ்க்கைக்கு போலியான இலக்கு நிலை
களைக் கற்பித்துக்கொண்டு வாழ்க்கையைக் கொச்சைப்படுத்தி வாழ்ந்து
செல்கிறோம்! ஏதோ வாழ்க்கைக்கு தனியே பிரத்யேகமாக அர்த்தம் இல்லா
தது போல, அதற்கு நாம் எதைக்கற்பிக்கிறோமோ அதுதான் அர்த்தம் என்று
காணும் சார்த்தரிய (Jean-Paul Sartre)வகை இருத்தலியல் கொள்கை அடிமுட்டாள்தனமானதாகும்! அதாவது, வாழ்க்கைக்கு நாம் தான் அர்த்தம்
வழங்கிடவேண்டும் என்பதைப்போன்ற அர்த்தமற்றசிந்தனை வேறெதுவும்
இருக்கமுடியாது!
மாறாக, வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளது;அதைக்கண்டடைவதே ஒவ்வொரு
மனித ஜீவியின் தலையாய கடமையும், வாழ்க்கைப்பணியும், வாழ்க்கை
யும் ஆகும். மேலும், வாழ்க்கையின் அர்த்தத்தை, உண்மையைக் கண்டறி
வதற்கு மாற்றாக, வேறு எவ்வகையான சொந்த இலட்சியங்களையும்,
இலக்குகளையும், ஈடுபாடுகளையும் ஒருவர் மேற்கொள்ளல் ஆகாது!
அடுத்து, வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டடைதலில் ஒவ்வொரு தனி
மனிதனும் நேரடியாக ஈடுபட்டாக வேண்டும்! ஒருவருடைய வயிற்றுப் பசி
யைப்போக்கிட இன்னொருவர் உண்ண முடியாது என்பதைப் போன்றதே,
அர்த்தத்திற்கான பசியும்! அர்த்தத்தை ஒவ்வொருவரும் நேரடியாகத்தான்
அறிந்தாகவேண்டும்; உணவைப் பகிர்ந்துகொள்வது போல, அர்த்தத்தைப்
பகிர்ந்து கொள்ளமுடியாது! வேண்டுமானால், அர்த்தத்தை அறிவதற்கான
வழிமுறைகளை ஞானிகளிடமிருந்து அறிந்துகொள்ளலாம்!
ஆனால், முதலில் ஒவ்வொருவரிடமும் அர்த்தத்திற்கான பசி இருக்கவேண்
டும்! அதாவது, சாதாரண பசியை உணர்ந்து உணவின் தேவையை உணர்த்
துவதற்கு ஒரு மையம் இருப்பதுபோல, தண்ணீரின் தேவையைத் தாகம் ஏற்
பட்டு உணர்த்துவது போல, அர்த்தத்தின் தேவையை உணர்த்துவதற்கான
ஒரு மையம் (அத்தகைய தோர் மையம் மனிதனினுள் இயற்கையாக இருப்
பதில்லை என்ற போதிலும்) ஒவ்வொரு மனிதனினுள்ளும் புதிதாய்த் திறந்
தாக வேண்டும்! அத்தகைய தோர் மையம் ஒவ்வொரு மனிதனினுள்ளும்
திறக்காதவரை, தோன்றாதவரை; ஆன்மீகப்பயிற்சிகளாகட்டும், தத்துவ
ஆராய்ச்சிகளாகட்டும், அவற்றினால் ஒரு பயனும் விளைய வாய்ப்பில்லை!
எப்போது, ஒரு மனிதனுள் அர்த்தத்தின் தேவையை உணர்த்தும் மையம்
திறக்கிறதோ, உருவாகிறதோ, அப்போதுதான் அவன் உண்மையில் மனித
னாக எழுகிறான்! ஆனால், அம் மையம் தானாகவோ, இயற்கையாகவோ,
அல்லது, ஒருவரது விருப்பத்தினாலோ, பெருமுயற்சியினாலோ தோன்றுவ
தில்லை! அம்மையம் தோன்றும் கணத்தை நாம் "உணர்வுக்குவரும் கணம்"
அல்லது "விழிப்பின் கணம்" என்றும் சொல்லலாம்!
எவ்வொரு மனிதன் (தன்) இருப்பைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல்,
(பெரிதாகப் புறக்கவர்ச்சிகளுக்கு ஆட்படாமல்) ஆழமாகவும், முழுமையாக
வும் உணர்வு கொள்கிறானோ, அம்மனிதனே தன்னைக்கண்டடைந்தவனா
கிறான்!தன்னைக்கண்டடைந்தவனே மனிதன் ஆவான்!பொதுவாக,விலங்கு
ஜீவிகள் தம்மை அறிவதோ,"தாம் இருக்கிறோம்!" என்பதை, தனது இருப்பை
உணர்வதோ இல்லை! அவை உணர்வற்ற வெறும் உயிர்-இருப்பின் ஜீவி
களே! ஆனால், மனிதனோ தனது இருப்பை உணர்வுகொள்வதன் வழியாக,
உயிர்-இருப்பிலிருந்து, உணர்வு-இருப்பிற்கு உயர்பவனாகிறான்! ஆனால்,
பெரும்பாலான மனிதர்கள் தம் காலத்தில் உணர்வு-இருப்பிற்கு உயர்வதே
யில்லை! ஏனெனில், இத்தகைய உயர்வு, அல்லது, மாற்றம் தாமாகவோ,
இயற்கையாகவோ நிகழ்வதில்லை! மாறாக, அது ஒருவன் எந்த அளவிற்கு
உணர்வு கொள்கிறான், அதாவது, உணர்வுப் பூர்வமாக மாறுகிறான் என்ப
தைச் சார்ந்ததாகும்! அதாவது இம்மாற்றம், காரணம்-விளைவு எனும் சங்கி
லித் தொடரில் இன்னொரு நிகழ்வு அல்ல! மாறாக, அச்சங்கிலித்தொடரை முடிவிற்குக்கொண்டுவந்திடும் இயற்கை மீறியதொரு நிகழ்வாகும்!
ஆம், உணர்வுக்கு வருதல் (Becoming Conscious),விழிப்படைதல் (இது
இரவு உறங்கி காலையில் விழித்தெழுந்து சூரிய ஒளியில் உலகைக்காணும்
அந்த வழக்கமான விழிப்பு அல்ல! மாறாக, காலையில் விழித்தெழுந்தபிறகு
இன்னொரு முறை, உணர்வின் உள்ளொளியில் தன்னையும், அனைத்தை
யும் காணும் "இரண்டாவது விழிப்பு" (Second Awakening) ஆகும்! இந்த
விழிப்பு, "தான் ஒரு உணர்வுதான்!" எனும் உண்மைக்கு விழிக்கும் "ஞான
விழிப்பு" ஆகும்! இவ்விழிப்பு மனிதஉணர்வினை கால-வெளியின் பிணைப்
பிலிருந்து விடுவித்துவிடுகிறது! இதன் உணர்த்துதல்கள் (Implications)
மிகவும் ஆழமானவை! அதாவது, ஒருவர் உடலளவில் இவ்வுலகில் இயங்கி
னாலும், உணர்வின் அளவில் அவர் இவ்வுலகைக் கடந்தவராக இருப்பார்!
'உணர்வுக்கு வருதல்', 'விழிப்படைதல்' பற்றிய இக்குறிப்புகளைத் தம் உணர்
வில் கிரகித்துக்கொள்ளும் எவ்வொரு வாசகரும் அதனால் நிச்சயம் உரிய
பலனை அடைவார்!
உணர்வு இல்லாமல் "இருப்பு"(Existence)என்பது இருக்கமுடியும்! ஆனால்,
"வாழ்க்கை" (Life) என்பது இருக்கமுடியாது! உதாரணம் : கூழாங்கல்,
அதற்கு இருப்பு உள்ளது; ஆனால் வாழ்க்கை இல்லை! இருப்பு என்பதை மிக
எளிமையாக விளக்க முடியும் : ஆம், இருப்பதெல்லாம் இருப்பு தான், இருப்
பின் வகைகள்தான். அதாவது, இருப்பவை அனைத்தும் ஒரு படித்தானவை
அல்ல! கூழாங்கல், தவளை, மனிதன் இவை ஒவ்வொன்றும் இருப்பின் வெவ்
வேறு வகைகளைச் சேர்ந்தவை ஆகும். கூழாங்கல் என்பது சட-இருப்பு
ஆகும்; தவளை என்பது 'உயிர்-இருப்பு' வகையைச் சேர்ந்ததாகும் - ஒரு தவ
ளைக்கு இருப்பும் உண்டு, வாழ்க்கையும் உண்டு! மனிதன் 'உணர்வு-இருப்பு'
வகையைச் சேர்ந்தவன் - மனிதனுக்கு இருப்பும் உண்டு, வாழ்க்கையும்
உண்டு, இவற்றுக்கும் மேலாக, அனைத்தையும் பற்றிய புரிதலும் உண்டு!
வாழ்க்கை என்பதைச்சுருக்கமாக விளக்கவேண்டுமெனில், ஒரு கூழாங்கல்
லுக்கு இருப்பு உண்டு ஆனால், வாழ்க்கை இல்லை என்று கண்டோம்! அதா
வது, அதற்கு உள்-அமைந்த தேவைகள் எதுவும் கிடையாது; மேலும், அதற்கு
சொந்த இயக்கமோ, உணர்ச்சியோ, உணர்வோ கிடையாது! ஒரு கூழாங்கல்
தன்னையும் அறியாது புறத்தையும் அறியாது!மேலும், அதற்கு தனி-மையம்
ஏதும் இல்லை! ஆனால், ஒரு தவளைக்கு இருப்பும், வாழ்க்கையும் உள்ளன.
அதற்கென குறிப்பான தேவைகள் உள்ளன; ஆகவே அதற்கு சொந்த இயக்
கம் உண்டு. அதற்குத் தனது இருப்பை உணரும் அளவிற்குப் பெரிதாக
"சுய-உணர்வு" என்பது இல்லையென்றாலும், புறத்தை அறியக்கூடிய வகை
யிலான "புலன்-உணர்வு" உண்டு!அப்புலன்-உணர்வு வழியாகப்பெறும் அனு
பவமும், அறிவும் உண்டு! ஒரு தவளை என்பது ஒரு தனி மையத்தைச் சுற்றி
ஒருங்கிணக்கப்பட்ட தொரு மிகச் சிக்கலான அமைப்பு ஆகும்! ஒரு தவளை
சட-இருப்பைக்கடந்த மேலான உயிர்-இருப்பைச் சேர்ந்ததாகும்! ஆனால்,
ஒரு தவளைக்கு தன் இருப்பை உணர்வுபூர்வமாக அறியும் வாய்ப்பு இல்லை!
ஆகவே தான், அத்தவளை மனிதஜீவியாக பரிணமித்து எழுந்தது!
மனிதனைப்பொறுத்தவரை, அவனுக்கு இருப்பும், வாழ்க்கையும்; தன் இருப்
பையும், வாழ்க்கையையும், உலகையும் பற்றிய தெளிவான அறிவையும்,
புரிதலையும் பெறும் வாய்ப்பும் உண்டு! அவன் சட-இருப்பைக்கடந்த உயிர்
இருப்பின் தளத்தில் தோன்றியவனாயினும், அவன் உயிர்-இருப்பையும்
கடந்த, உணர்வு-இருப்பைச் சேர்ந்தவன் மட்டுமல்லாமல், உணர்வின் உச்ச
மான "முழு-உணர்வு" எனும் "முழு-இருப்பு" நிலையை, "இறுதி மெய்ம்மை"
நிலையையும் அடையக்கூடிய ஒப்பில்லா வாய்ப்பு பெற்றவனாகவும் திகழ்
பவனாவான்! அதே நேரத்தில், மனிதர்கள் எல்லோரும் தமக்கு வழங்கப்பட்
டுள்ள இந்த அரிய வாய்ப்புகளைப்பயன் படுத்திக்கொள்வதில்லை என்பது
துரதிருஷ்டவசமானதாகும்! அதாவது, பெரும்பாலான மனிதர்கள் எலிகளை
யும், தவளைகளையும் போலவே உணர்வு-இருப்பிற்குள் பிரவேசிக்காமல்
வெறுமனே உயிர்-பிழைத்துச் செல்கின்றனர்!
பலர் கவிதைப்பூர்வமாக, வாழ்க்கையை பயணத்திற்கு ஒப்பிட்டுச் சொல்வ
துண்டு! ஆனால், போய்ச்சேரும் இடம் அறியாத பயணம் அர்த்தமற்றது என்
பதை ஏனோ அவர்கள் சௌகரியமாக மறந்துவிடுகிறார்கள்! மேலும், பலர்
கருதுவது போல வாழ்க்கை என்பது ஒரு கடிகார இயக்கம் போன்றதுமல்ல!
மாறாக, வாழ்க்கை என்பது ஒரு நதியின் இயக்கத்தை ஒத்தது ஆகும்; சமுத்
திரத்தை சென்றடைவதே நதியின் ஒரே குறிக்கோளும் இலக்கும் ஆகும்!
அதேவேளையில்,ஒரு நதியானது தனது இலக்கை அடையவேண்டுமெனில்,
அதன் இயக்கம் தொடக்கத்திலிருந்தே சமுத்திரத்தை நோக்கியதாக
அமைந்திருப்பது அவசியமாகும்! அதாவது, நதியானது காடு மேடு என்று
சுற்றித் திரிந்துவிட்டு, திடீரென, சமுத்திரத்தை நோக்கிப்பாய்ந்து செல்ல
முடியாது! மேலும், நதியிடம் யாதொரு வரைபடமும் இல்லை என்றபோதி
லும், அது, புவி ஈர்ப்பை தனது வழிகாட்டியாகக் கொண்டு பாய்ந்து சென்று
முடிவில் சமுத்திரத்தை அடைந்துவிடுகிறது! அது போலவே, மனிதன் தனது
வாழ்க்கையின் இலக்கை, முழுமையை அடைவதற்கு வரைபடம் எதுவும்
தேவையில்லை! நதிக்கு புவி-ஈர்ப்பு போல, மனிதனுக்கு "உணர்வு-ஈர்ப்பு"
தான் வழிகாட்டியாகும்! நதியானது மேட்டிலிருந்து பள்ளத்திற்குப்பாயும்;
(மனித) உணர்வு பள்ளத்திலிருந்து மேட்டிற்கு உயரும்! இந்த அம்சம் தான்
பெரும்பாலான மனிதர்களுக்கு பெரிய சவாலாக உள்ளது! அதாவது மேட்டி
லிருந்து பள்ளத்திற்கு இறங்குவது எளிது; பள்ளத்திலிலிருந்து மேட்டிற்கு
உயருவது மிக்கக் கடினம்!
எவ்வாறு, நதியின் இயக்கமானது தொடக்கத்திலிருந்தே தனது இலக்கான
சமுத்திரத்தை நோக்கியதாக அமைந்துள்ளதோ, அவ்வாறே மனிதனின்
வாழ்வியக்கமும் தனது வாழ்வின் இலக்கான அர்த்தம், உண்மை, முழுமை
ஆகியவற்றை நோக்கியதாக அமைவது அவசியம்! நதியானது அது தொடங்
கிய இடத்திலிருந்து தன் அடைவிடம் சேரும்வரை ஓய்வில்லாமல் பாய்ந்து
சென்று கொண்டேயிருக்கிறது;அது தன் பாதைநெடுகிலும் தான் சந்திக்கும்
எதனுடனும் தங்கிவிடுவதுமில்லை, பிணைத்துக் கொள்வதுமில்லை, அடை
யாளப் படுத்திக்கொள்வதுமில்லை! நதியானது எத்தகைய நிலப்பரப்பின்
மீது பாய்ந்து சென்றாலும்,அதன் உய்வும், முழுமையும் சமுத்திரத்தை அடை
வதிலேயே உள்ளது! நதிக்கும் அது பாய்ந்து செல்லும் நிலப்பரப்புகளுக்கும்
இடையேயான உறவு என்பது மிகத் தற்காலிகமானது! நதியின் ஒரே உறவு
சமுத்திரம் மட்டுமே! தன் இலக்கை அடையும் குறிக்கோளிலிருந்து வழுவா
மல்,சிந்தாமல் சிதறாமல் செல்லும்பொருட்டு நதி தனது கரைகளை, கட்டுப்
பாடுகளைத் தானே உருவாக்கிக்கொள்கிறது!
ஆம், நதியைப்போலவே மனிதனுக்கும் கரைகள், சுய-கட்டுப்பாடுகள் அவ
சியமாகும்! அவற்றைவிட, இலக்கு குறித்த ஒற்றை மனம்கொண்ட தன்மை
(Single-Mindedness)மிகமிக அவசியமாகும்! இலக்கு குறித்த தீவிரமான
உணர்வு இல்லாமல் வெறும் கட்டுப்பாடுகளால் ஒரு பயனுமில்லை! மேலும்,
மனிதனுக்கு உண்மை குறித்த இடையறாத (ஓய்வில்லாத) விசாரமும் அவசி
யமாகும்! நதியைப்போலவே, மனிதனுக்கும் இவ்வுலகில் எதனுடனும் உறவு
என்பது இருக்கமுடியாது! எல்லா உறவுகளும் தற்காலிகமானவையே! ஏனெ
னில், உண்மை மட்டுமே மனிதனின் ஒரே நிரந்தர உறவாகும்! ஏனெனில்,
உண்மைதான் மனிதனது சாரம் அல்லது ஆன்மா ஆகும்! உண்மை என்பது
பூடகமானதொரு கருத்தோ, கோட்பாடோ, புரியாத நுட்பச் சொற்களைக்
கொண்டமைந்த தத்துவ விளக்கமோ அல்ல! மாறாக, உண்மை என்பது ஒவ்
வொரு மனிதனும் அடையக்கூடிய உச்ச நிலை உணர்வாகும்! அனைத்தும்
- இப்பிரபஞ்சம் முழுவதும் - ஒரு ஒற்றைப் புள்ளியில் குவிக்கப்பட்டு
அடையப்படும் ஒருமையும் முழுமையுமான உணர்வுமயமான மெய்ம்மை
தான் உண்மையாகும்! இது வித்திலிருந்து தோன்றிய மாபெரும் விருட்சம்
மீண்டும் வித்தினுள் அடங்குவதை ஒத்ததாகும்!
பொதுவாக, நாம், வாழ்க்கை என்பதை உணவு, உடை, உறையுள், உறவுகள்
எனும் மிகவும் குறுகிய வட்டத்தினுள் அடைபட்ட, உயிர்-பிழைப்பு விவகார
மாகவே காண்கிறோம்! உயிர்-வாழ்தல் என்பது, எவ்வளவு சௌகரியக்
குறைச்சலாக இருந்தாலும், அல்லது எவ்வளவு சௌகரியமிக்கதாக, ஆடம்
பரமாக அமைத்துக்கொண்டாலும்,அது வெறும் உயிர்-பிழைத்தல் மட்டுமே!
அர்த்தம் அறியப்படாத வாழ்க்கை மனிதத் தரத்துக்குக் கீழானதே ஆகும்!
மனித வாழ்-காலம் வரையறைக்குட்பட்டது என்பது உண்மையே; ஆனால்,
அது பலரும் எண்ணுவதுபோல, மிகவும் குறுகியதல்ல! மாறாக, போதுமான
தற்கும் மிக அதிகமாகவே மனிதர்க்கு வாழ்-காலம் வழங்கப்பட்டிருக்கிறது!
அதாவது, வாழ்க்கையின் தரம் அல்லது சிறப்பு, எவ்வளவு அதிகஆண்டுகள்
ஒருவர் உயிர்-வாழ்கிறார் என்பதைப் பொறுத்ததல்ல! மாறாக, எவ்வளவு
உணர்வுபூர்வமாக வாழ்க்கையை உணர்கிறார், எவ்வளவு அர்த்தபூர்வமாக
வாழ்க்கையை அறிகிறார் என்பதைப் பொறுத்ததாகும்! ஆகவே, வாழ்க்கை
யைப்புரிந்து கொள்ளவேண்டும் எனும் நோக்கத்திற்குப் புறம்பான காரியங்
களிலும்,ஈடுபாடுகளிலும் காலத்தை விரயம்செய்துவிட்டு,"ஐயோ,எவ்வளவு
குறுகியது மனிதவாழ்க்கை!" எனப் புலம்புவது அறிவீனமாகும்!
ஆக, வாழ்க்கையை நாம் உணவு,உடை, உறையுள், உறவுகள் எனும் மிகவும்
குறுகிய வட்டத்தினுள் அமைந்த, உயிர்-பிழைப்பு விவகாரமாகச் சுருக்க
வில்லையெனில், அது ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் தழுவிய ஒன்றாகத்
தன்னை இனம் காட்டிடும் அற்புதம் நிகழ்ந்திடும்! பிரபஞ்சத்திற்கும் மனித
னுக்கும் உள்ள தொடர்பு சூட்சுமமானது! மனிதன் (=உணர்வு) இல்லாமல்
பிரபஞ்சத்திற்கு அர்த்தம் கிடைக்காது! அதேபோல, பரந்த பிரபஞ்சத்துடன்
தொடர்பு படுத்தாமல் மனிதவாழ்க்கையும் முழுமை பெறாது! அதாவது
உணர்வு எனும் விசேட அம்சமாக மனிதன் விளங்குவதால், உணர்வுள்ள ஒவ்
வொரு மனிதனும் பிரபஞ்சத்தின் தற்காலிக மையமாகத்(Virtual Center)
திகழ்கிறான் எனலாம்! ஏனெனில், மேன்மேலும் ஒருமைப்படும் மனித
உணர்வின் வழியாகத்தான் பிரபஞ்சமானது தனது இறுதி ஒருமையையும்,
முழுமையையும் அடையவிருக்கிறது! இது வெறும் கற்பனையான கூற்று
அல்ல! எவ்வாறு ஒரு மரமானது தனது ஒவ்வொரு கனியின் வழியாகவும்
தன்னைக் கடந்து சென்று தனது முழுமையை அடைகிறதோ அவ்வாறே
பிரபஞ்சமும் ஒவ்வொரு மனிதனின் (முற்றிக்கனியும்) உணர்வின் வழியாக
தன்னைக்கடந்து சென்று தனது முழுமையை அடைய எத்தனிக்கிறது! இது
(டார்வினியம் அறியாத) பரிணாமபூர்வமான உண்மையாகும்
இவ்விடத்தில்,நாம் புரிந்துகொள்ளவேண்டிய இன்னுமொரு உண்மை என்ன
வெனில், மரமானது வெறுமனே ஒதுங்கியிருந்து காய்களையும், கனிகளை
யும் விளைவிப்பதில்லை! மாறாக, மரமே தனது சாரத்தைத் திரட்டிக் காய்
களாக மாறுகின்றது; பிறகு, ஒவ்வொரு காயும் முற்றிக் கனியானதும், ஒவ்
வொரு கனியின் வழியாகவும் மரம் தன்னைக்கடந்து சென்று விடுகிறது!
அவ்வாறே பிரபஞ்சமும் தனது சாரத்தைத் திரட்டி மனிதனாக, மனிதனுள்
உணர்வாக மாறுகின்றது; உணர்வாகிய மனிதன் மேன்மேலும் உணர்வில்
வளர்ந்து (கனிந்து) உணர்வின் முழுமையை அடையும் போது பிரபஞ்சமும்,
மனிதனும் ஒருங்கே "முழு -உணர்வு" எனும் இறுதி மெய்ம்மையில் தம்
முழுமையைத் தழுவிக் கொள்கின்றனர்!
மனித வாழ்காலம் மிகவும் குறுகியதாகத் தெரிவதற்குக் காரணம், மனித
ஜீவிகள் நெடிய ஆயுளையும், ஆரோக்கியமாகத் திகழ்வதையும் இலட்சிய
நிலைகளாகக் கருதுவதே யாகும்! ஆனால், மனித-உடலானது ஒரு நூறு
ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும்வகையில் உருவாக்கப்பட்டிருக்கவில்
லை! ஏனெனில், "வாழ்க்கை" என்பது நீடித்து உயிர்-பிழைத்திருப்பது அல்ல!
மேலும், உயிர்த்தோற்றமும், உயிரியல் பரிணாமமும், மிகத்தொலைவான
தொரு ஒப்பற்ற இலக்கு நோக்கியதாக முடுக்கிவிடப்பட்டுள்ளன!
மனிதஜீவிகளைப் பொறுத்தவரை, தாம் எதற்காக இங்கிருக்கிறோம், தம்
வாழ்வின் மிகஅசலான குறிக்கோள்,இலக்கு என்ன என்பவைகளைக்கண்டு
பிடித்துச் செயல்படுத்தியாகவேண்டும் எனும் சவாலை ஏற்காமல்,எலிகளை
யும், தவளைகளையும் போல யாதொரு சிந்தனையும், கேள்வியுமின்றி
வெறுமனே உயிர்-பிழைத்தலை வாழ்க்கையாக மேற்கொள்வது என்பது
மனிதஜீவிகளுக்குப் பொருத்தமானதல்ல! மேலும், மனிதவாழ்காலம் மிகக்
குறுகியது என்பது எதை உணர்த்தி நிற்கிறது என்பதை நாம் கண்டுபிடித்
தாகவேண்டும்! முதல் உணர்த்துகோல், நாம் நம் வாழ்-காலத்தை வீண் விவ
காரங்களிலும்,ஈடுபாடுகளிலும் விரயம்செய்யக்கூடாது என்று சொல்கிறது!
இரண்டாவது உணர்த்துகோல், "வாழ்க்கை என்பது ஒரு அரிய வாய்ப்பு!"
அவ்வாய்ப்பு முடிவடைவதற்குள் முறையாக அதைப்பயன்படுத்திக்கொள்
வது முக்கியம் என்று சொல்கிறது!
நல்லது, "வாழ்க்கை என்பது ஒரு அரிய வாய்ப்பு!" என்றால், அது எதற்கான
வாய்ப்பு என்பதைத் துல்லியமாக அறிவதுதான் நமது அடுத்த பணியாகும்!
நிச்சயமாக, 'வாழ்க்கை' என்பதை நாம் விரும்பியவற்றைச் செய்வதற்கான,
அல்லது, அனுபவிப்பதற்கான வாய்ப்பாகக் கொள்ளமுடியாது! ஏனெனில்,
நம்முடைய விருப்பம் என்பதென்ன? அதனுடைய அடிப்படை என்ன? எவ்
வகையில் அவ்விருப்பம் மெய்ம்மையுடன் தொடர்புடையது? நம்முடைய
விருப்பங்கள் என்பவை நம்மால், நேரடியாக உணரப்பட்ட உடலின் அடிப்
படைத் தேவைகளைத்தழுவியவை என்பதற்குமேல் வேறெவையுமல்ல! இத்
தேவைகள் உயிர்-பிழைத்தலுக்கு அடிப்படையானவை என்ற அளவில்
அவசியமானவையே என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை! ஆனால்,
உயிர்-பிழைத்தலுக்கு உதவும் தேவைகள், அதாவது பொருட்களும் சரி,
உயிர்-பிழைத்தல் என்பதும் சரி, எவ்வகையிலும் அவை இறுதியான அம்சங்
களாகவோ,விஷயங்களாகவோ இருக்கமுடியாது! ஏனெனில், உயிர்-பிழைத்
திருப்பதற்கான நோக்கம், குறிக்கோள், இலக்கு ஆகியவை அறியப்பட்டாக
வேண்டும்!
இதையே வேறுசொற்களில் சொன்னால்,வாழ்க்கை என்பது மெய்ம்மையை
அறிவதற்கான தொரு வாய்ப்பே தவிர வேறு எதற்குமான வாய்ப்பும் அல்ல!
ஏனெனில்,பேருணர்வாகிய மெய்ம்மை தான், தன்னைச்சுருக்கிக்கொண்டு,
பரிணாம இருப்பாகவும், இருப்பினூடே பரிணமிக்கும் உணர்வாகவும் மாறி
யுள்ளது! பேருணர்வு எனும் மெய்ம்மையின் சாரம் ஆனந்தமே தவிர வேறில்
லை! இருப்பு என்பது எவ்வளவு சிறிதாயினும், அதாவது அணுத்துகள்களை
மட்டுமே உள்ளடக்கிய, சட- இருப்பாயினும், அதுவும் ஆனந்தத்தின் வெளிப்
பாடேயாகும்! இன்னும், புழு, பூச்சிகளின் மட்டத்து தொடக்க நிலை உயிர்-
இருப்பாயினும், அதுவும் ஆனந்தத்தின் வெளிப்பாடேயாகும்! இன்னும் பெரி
தாக "சுய-உணர்வை" எட்டாத ஆதி-மனிதனின், அரைகுறையான உணர்வு-
இருப்பாயினும்,அதுவும் ஆனந்தத்தின் வெளிப்பாடேயாகும்!
ஆனால், மனித ஜீவியானவன் மேன்மேலும் உணர்வில் அதிகரிப்பதும்,
உணர்வின் உச்ச நிலையை எட்டுவதும் அவனது பரிணாம உரிமையாகும்!
மனிதன் மட்டும் தனது தற்போதைய அரை-விலங்கும் அரை-மனிதனுமான
நிலையினைக் கடந்து வளர்வானெனில், எதையும் சார்ந்திராத, அகலாத
தூய பேரானந்தம் அவனுடையதேயாகும்! இன்னும்,அனைத்தின் இதயத்தை
யும் ஊடுருவிக்காணும் ஞானமும் அவனுடையதேயாகும்! இன்னும், உணர்
வின் உச்சத்தில் காலத்தின் கட்டுகள் உதிர்ந்திட மரணம் கடந்த நித்திய
வாழ்வும் அவனுடையதேயாகும்!
உண்மையில், மரணம்-கடந்த நித்திய வாழ்வை ஒருவன் தனது உடலின்
மரணத்திற்கு முன்னேயே, அதாவது, தன் வாழ்-காலத்திற்குள்ளேயே, தான்
உயிரோடிருக்கும் காலத்திலேயே, சாதித்தாக வேண்டும்! சிலர், மரணமில்
லாப் பெருவாழ்வு பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள்! அதாவது, ஒருவர் தனது
உடலையும் மரணத்திடமிருந்து காப்பாற்றிக்கொள்ளமுடியும் எனும் சாத்தி
யப்பாட்டைப்பற்றிப் பேசியுள்ளனர்! கோட்பாட்டுரீதியாக, அது சாத்தியமே
என்றாலும், உடலை (உடலின் ஒவ்வொரு செல்லையும்) முழுமையாக உணர்
வுப்படுத்துவது என்பது மிகமிகக்கடினமாகும்!வேறொரு கோணத்திலிருந்து
காணும் போது, உடலையும் உணர்வுப் படுத்திக்கரை சேர்ப்பது என்பது
அதிகப்படியான சுமையாகும்! இன்னும், உடலையடுத்து, உலகை உணர்வுப்
படுத்துவதுபற்றியும் நாம் பேசலாம்! ஏனெனில், உலகம்,பிரபஞ்சம், மற்றும்
அதிலுள்ள அனைத்தும் உணர்விலிருந்து உருவானவையே, உணர்வின்
வெவ்வேறு நிலைகளும் வெளிப்பாடுகளுமேயாகும்!ஆனால்,இவை அதிகப்
படியானவை, ஆகவே அவசியமற்றவை எனலாம்!
மேலும், இன்னும் உணர்வின் நுனியைக்கூட எட்டிப்பிடிக்காத, உணர்வுக்கு
வராத; புசிப்பும்,குடிப்பும், மற்றும் பிற இச்சைகளின் நிறைவேற்றங்களிலும்
மூழ்கிக்கிடக்கும் சராசரி மானிடர்களுக்கு, மரணமில்லாப்பெருவாழ்வு என்
பது, எவ்வகையிலும் எட்டக்கூடிய விஷயமாகத்தெரியவில்லை! அதற்காக,
உணர்வுப் பூர்வமாக அணுகவேண்டிய ஆன்மீகத்தை, அனைவருக்கும்
கொண்டு சேர்க்கும் விதத்தில் எளிமைப்படுத்தவியலாது என்றபோதிலும்,
அதி-தீவிர ஆன்மீகக்கோட்பாடுகளை நாம் கட்டுடைத்துத் தெளிவுபடுத்தி
தேவையற்ற சுமைகளைத் தவிர்க்கலாமல்லவா!
ஆம், மனிதன் என்பவன் மிகத் துல்லியமாக உணர்வேயாவான்! உடலும்
உயிரும், உணர்வாகிய மனிதனைத் தாங்கும் பாத்திரம் மட்டுமே யாகும்!
ஆம், "தான் ஒரு உணர்வுதான்!" என்பதை உணர்ந்தறிவதே ஒவ்வொரு மனி
தனுக்குமான ஒரே வாழ்-காலச்சவால் ஆகும்! "தான் ஒரு உணர்வுதான்!" என்
கிற உண்மைக்கு விழித்திடும் மனிதன் தொடர்ந்து மேன்மேலும் உணர்வில்
பெருகுவதற்கு தடையேதும் இருப்பதில்லை!ஏனெனில்,உடலைத் 'தான்' என
அடையாளப்படுத்திக் கொள்ளும் மனித மனம்தான் ஒருவன் உணர்வாக
எழுவதற்குப் பெருந்தடையாக விளங்கும் பிரதான விஷயமாகும்! மேலும்,
விழிப்படையாத மனிதமனமே அனைத்துப் பிரமைகளுக்கும்,புனைவுகளுக்
கும் ஊற்றுக்கண் ஆகும்! மனமானது உடலை மட்டுமல்லாது, பணம், பொன்,
பொருள், வீடு, நிலம், சொத்து, புகழ், பட்டம், பதவி, வெற்றி, சிலரது விஷயத்
தில்,மிகவும் பிறழ்ச்சியாக தோல்வி,இழிநிலை அல்லது தாழ்நிலை,போன்ற
எண்ணற்ற பல விஷயங்களுடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்
ளக்கூடியதாகும்! அதாவது, தனது உண்மையான அடையாளத்தை அகழ்ந்த
றிவதைத் தவிர்த்து, மிகச் சுலபமாக அது எதனுடனும் தன்னை அடையாளப்
படுத்திக்கொண்டுவிடும்!
பொதுவாக, மனிதஜீவிகள் எல்லோரும் மிகச்சரியாக சந்தோஷத்தையும்,
மன நிறைவையும், மற்றும் மன அமைதியையும் தான் தேடுகிறார்கள்!
ஆனால், மிகவும் தவறாக, அவற்றை அவர்கள் தவறான பொருட்களிலும்,
விஷயங்களிலும்; தவறான இடங்களிலும் தேடித் தோற்றுக் களைத்துப்
போவதுடன் தங்களது உள்ளார்ந்த மன அமைதியையும் இழந்துதவிக்கிறார்
கள்! பலரது ஆசைகளுக்கு அளவும் எல்லையும் கிடையாது!
சந்தோஷம், மன நிறைவு ஆகியவை புறத்தேயிருந்து ஒருவன் தன்னுடன்
சேர்த்துக் கொள்ளக்கூடியவையல்ல! அவ்வாறு சேர்த்துக் கொள்ளக்கூடிய
பொருட்களிலும், விஷயங்களிலும் அடங்கியிருக்கவில்லை! மாறாக, அவை
ஒருவன் தன்னைத் தோண்டி தனது சுயத்தின் முழுமையில் கண்டடையக்
கூடிய அற்புதப்பொக்கிஷங்கள் ஆகும்! "மனிதன் தன்னில்தானே முடிவான
வன், (அதாவது முழுமையானவன்)!" என்ற உண்மையை ஒவ்வொருவனும்
உணர்ந்தறியக் கடமைப்பட்டவனாவான். ஒவ்வொரு மனிதனும் ஏற்கனவே
சந்தோஷம்,மனநிறைவு,மற்றும் மனஅமைதி ஆகியவற்றின் விதையாகவே
இருக்கிறான்! எவனும் புதிதாக விதைகளைத் தேடவோ, விதைக்கவோ
தேவையில்லை! ஒருவன் செய்யவேண்டியதெல்லாம், மேன்மேலும் உணர்
வில் வளர்வது மட்டுமே; உயரும் உணர்வின் மட்டத்திற்கேற்ப தன் சுயத்தை
வார்த்துக் கொள்வது மட்டுமே! ஒருவன் மிக்கக் கவனத்துடன் பார்த்துக்
கொள்ள வேண்டியது பிரமைகள் எனும் களைகளை அண்டவிடக்கூடாது
என்பதை மட்டுமே! அவை சந்தோஷத்தின் பயிர்களை அழித்துவிடும்!
தன் சொந்த விருப்பங்களைப் பிரதானமாகப் பின்பற்றிச் செல்பவன் தன்
வழியைத் தவறவிட்டவனாவான்! அவன் விரும்பினாலும், உண்மையை அவ
னால் அறியமுடியாது, மெய்ம்மையை நெருங்கவும் முடியாது! ஏனெனில்,
விருப்பங்களும், மெய்ம்மையும் சேர்ந்து செல்லாது! இதற்கு ஒரே தீர்வு,
மெய்ம்மையை தன் ஒரே பெருவிருப்பமாகக் கொள்வது மட்டுமேயாகும்!
பெரும்பாலான மனிதர்கள் தம் சொந்தவிருப்பங்களை மட்டுமே கணக்கில்
கொள்கிறார்களே தவிர, "வாழ்க்கையின் விருப்பம்" குறித்துக் கருதுவதே
யில்லை! மனிதஜீவிகளாகிய நாம் முழுமையின் எத்தகைய பகுதிகள்?
மேலும், முழுமைக்கும், பகுதிகளான நமக்கும் உள்ள தொடர்பு அல்லது
உறவு எத்தகையது?
பிரபஞ்சம் என்பது ஒரு பெரிய விருட்சமெனில், நாம் அவ்விருட்சம் எனும்
முழுமையின் எத்தகைய பகுதிகள்? முழுமையின் வாழ்க்கைக்கும், பகுதி
களின் வாழ்க்கைக்கும் இடையே வித்தியாசம் அல்லது முரண்பாடு இருக்க
முடியுமா? முழுமையின் விருப்பமும்,பகுதிகளின் விருப்பமும் வெவ்வேறாக
அமையமுடியுமா? நிச்சயம் வெவ்வேறாக அமைய முடியாது! மாறாக, விருட்
சத்தின் இலக்கு என்னவோ, அதை நிறைவேற்றும் வகையிலான கருவிகளா
கத்தான் அதன் ஒவ்வொரு பகுதியும் பங்காற்றமுடியும்! ஆனால், மனிதஜீவி
கள் மட்டும்தான் தம்தம் விருப்பத்தின்படி மனம்போன போக்கில் முழுமை
யின் வாழ்க்கைக்கும், விருப்பத்திற்கும் புறம்பானவழிகளில் செல்கிறோம்!
நாம் நம் விருப்பத்தின்படி சொந்தவழிகளில் செல்வதால், முழுமையிடம்
இருந்து பிரிந்து வேரற்றவர்களாகிப்போகிறோம்! மேலும், நாம் நம் சொந்த
இலட்சியங்களைப்பின்பற்றிச்செல்வதால்,நம்முடைய அசலான இலக்கைக்
கைவிட்டு, நாம் அடையவேண்டிய முழுமையிலிருந்தும் துண்டிக்கப்படு
கிறோம்!
நம்மில் சிலர், தாம் அடைந்த அற்பசொற்ப உலகியல்வெற்றிகளிலும், அனு
கூலங்களிலும்; அறிமுக ஆன்மீகப் பரிச்சயத்திலும் அகமகிழ்ந்து ஏதோ
பெருஞ்சாதனை படைத்துவிட்டாற்போலவும், பிறவிப்பயனை அடைந்து
விட்டாற்போலவும் போலித் தன்னிறைவில் (Complacency) திருப்தியுற்று
வாளாவிருக்கிறோம்! வாழ்வில் விரக்தியில் குமைவது என்பது ஒரு எதிர்
மறைத் துருவம் என்றால், போலித்தன்னிறைவில் திருப்தியுறுவது என்பது
இன்னொரு எதிர்மறைத்துருவம் எனலாம்! இவ்விரு எதிர்மறைத்துருவங்க
ளுக்கிடையே ஒருவன் அசலான வாழ்க்கையைக்கண்டடைதல் என்பது அரி
திலும் அரிதானதாகும்!
ஆக,ஒருவன் அசலானவாழ்க்கையின் இலக்கிற்குப்புறம்பாகத் தன் சொந்த
விருப்பத்தின் வழி செல்வதிலும், அல்லது சமூக நடை முறைகள், மற்றும்
மதிப்பீடுகளைப் பின் பற்றிச் செல்வதிலும், தன் வாழ்-காலத்தை விரயம்
செய்துவிட்டு,வாழ்க்கையைத் தவறவிட்டுவிட்டதாக, குருவின் சொற்களை
மதிக்காமல் போய்விட்டதாக, நீலிக்கண்ணீர் வடிப்பதில் ஒருபயனுமில்லை!
ஒருவன் தன் ஐம்பதாவது வயதைக்கடந்துவிட்ட போதிலும், தன் வழிகளை
மாற்றிக்கொண்டு, தன்னை நிலைநிறுத்திக் கொள்ளமுடியும், ஆன்மீகத்
திற்கு,அதாவது அசலானவாழ்க்கைக்குத் திரும்புவதற்கு ஒருபோதும்காலம்
கடந்து விட்டதாகச்சொல்லமுடியாது! காலம் கடந்து மனம் திரும்பும் மைந்த
னுக்கு வாழ்க்கை தனது பொக்கிஷங்களைக் குறைவாக அளிப்பதில்லை!
எனினும், ஒருவன் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளவியலாத அளவிற்கு
சிந்தை தடுமாறிய நிலையில், இடுகாட்டை நோக்கியிருக்கும் பட்சத்தில்,
ஒன்றும் செய்யவியலாது!
வாழ்-காலம் என்பது அசலான வாழ்க்கையை வாழ்வதற்கு அளிக்கப்பட்ட
காலம் மட்டுமே தவிர, வேறு எதற்குமான காலம் அல்ல! ஆகவே, ஒருவன்
வீணேசோம்பியிருக்காமல்,பிரமைகளுக்கு ஆட்படாமல், தன்சொந்த விருப்
பங்களைத் துரத்திச் செல்லாமல், வாழ்க்கையின் விருப்பத்தை அறிந்து
நிறைவேற்றி வாழ்வானாக!
மா.கணேசன்/ நெய்வேலி/ 20.12.2016
----------------------------------------------------------------------------