
கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதனே, பேரார்வம் கொள்! வெறும்
சாயலிலேயே எவ்வளவு காலம் தான் தங்கியிருப்பாய்?
சாயலைக் கடந்து வளர்ந்து அசலான நிலையை அடைந்திடு! அதற்காக நீ
பெரிதாகச் செய்திட வேண்டியது எதுவுமில்லை!
மீண்டும் சொல்கிறேன், பேரார்வம் கொள்! வேறேதற்கும் உன்னைப்
பங்கிடாத, தீவிரம் குன்றாத எல்லையற்ற பேரார்வம்!
ஏனெனில், பேரார்வம் தான் கடவுள் அல்லது மூலான்மாவின் சாரம்! எனவே
நீ எதுவாகவும் இல்லாமல் பேரார்வத் தீயாகவே மாறிவிடு!
அப்போது நீ ஆகிடுவாய் சாயல் நீங்கி அசலாக!
<•>
பேரார்வம் என்பது மிச்சம் மீதமின்றி உன்னை முழுவதுமாகக் கொடுப்பது!
பேரார்வத்திற்கு இன்னொரு பெயர் : அன்பு! ஆம், கடவுள் தன்னை மிச்சம்
மீதமின்றி முழுவதுமாக இழந்ததால் தானே சிருஷ்டி எழுந்தது -அதில் நீயும்
எழுந்தாய்! நண்பனே, இப்போது, நீ உன்னை முழுவதுமாக இழந்து கடவுளை
எழச் செய்திடு! ஏனெனில், இவ்வழியாக உன்னுள் எழுப்பப்படும் கடவுளைத்
தவிர வேறு கடவுள் எதுவும் இப்பிரபஞ்சத்தில் எங்கேயும் இல்லை!
உன்னுள் நீ எழுப்பும் கடவுள் தான் நீ அடைய வேண்டிய பாதுகாப்பான
இறுதிக் கரையும், நிரந்தர நன்மையும், முழு நிறைவும், மரணம் கடந்த
நித்திய வாழ்வும்!
நண்பனே, நீ அடையவேண்டிய உணர்வின் உச்ச நிலையே கடவுள்! ஆகவே
தான், "நீயே உனது சொந்தக்கடவுள்!" என நான் திரும்பத்திரும்பச் சொல்லி
வருகிறேன்!
ஆனால்,நண்பனே,உன்னிடம் பேரார்வம் உள்ளதா?ஆர்வத்தில் சிற்றார்வம்,
பேரார்வம் என இருவகை உள்ளதா என நீ வியக்கிறாயா? உயிரற்ற அடிப்
படை அணுத்துகள்களுக்கும்; அமீபாவிலிருந்து மனிதன் வரையிலான
அனைத்து உயிருள்ள ஜீவிகளுக்கும் ஆர்வம் என்பது பொதுவானது! அதுவே
பிரபஞ்சப் பரிணாமத்தின் அடிப்படை உந்துவிசை! ஆனால், பேரார்வம்
என்பது மனிதனுக்கு மட்டுமே பிரத்யேகமானது! அதிலும், அது உணர்வுக்கு
வந்திட்ட மனிதனுக்கு மட்டுமே உரித்தானது!
உணர்வுக்கு வருவதும் பேரார்வம் செயல்படுவதும் ஒருங்கே நிகழ்வதாகும்!
பேரார்வம் இன்றி உணர்வுக்கு வருதலும், உணர்வுக்கு வராமல் பேரார்வம்
செயல்படுவதும் இயலாது!
எல்லோரும் தங்களிடம் பேரார்வம் உள்ளதென நம்புகிறார்கள், ஆனால்,
பேரார்வம் ஒருவரிடம் இருந்தால், அது அவரை எங்கு கொண்டு சேர்க்கும்
என்பது தெரியாது! மேலும், அது பேரச்சத்தைத் தருவதாகவும் இருக்கும்!
ஆகவே, அநேகர் அக்கதவின் வழியே செல்லத்துணிவதில்லை! தெரியாமல்
அதை நெருங்கிடும் பலரும் நெருப்பைத் தொட்டுவிட்டது போல வெடுக்
கென உடனே பின் வாங்கி விடுகின்றனர்!
எல்லோரிடமும் இயல்பாய் இருப்பது, செயல்படுவது சிற்றார்வமே! ஆம்,
உணர்வுக்கு வராத, விழிப்படையாத மனிதஜீவியினுள் விழித்திருப்பது
பிராணிய ஆர்வமே!
ஆர்வம் இருவித இயக்கங்களைக் கொண்டதாயுள்ளது! முதலாவது, உடலை
மையமாகக் கொண்டு உடலின் பசிகளை, இச்சைகளை, உடனடித்தேவை
களை நிறைவு செய்யும் பொருட்டு புறத்தே பொருட்களைத்தேடி நுகரும்
சிற்றார்வம்!
இரண்டாவது, உணர்வை மையமாகக் கொண்டு இறுதித் தேவைகளான
மெய்ம்மையை, நிரந்தர நிஜத்தை, ஒருமையும் முழுமையுமான உண்மை
யைத்தேடி அகத்தின் வழி செல்லும் அழியாப் பேரார்வம்!
சிற்றார்வம் உணர்வற்றது, எல்லைகளுடையது! பேரார்வம் உணர்வுடையது,
எல்லைகளற்றது! சிற்றார்வம் கொடுக்கப்பட்ட சுயத்தைத் தக்க வைத்துப்
பேணிக்காத்திடும் மட்டுப்பாடான இயக்கமாகும்!
பேரார்வம் இருக்கின்ற சுயத்தைக் கடந்து மேன்மேலும் வளர்ந்துயரச்செய்
திடும் பேரியக்கமாகும்!
ஆகவே, நண்பனே! உன்னிடம் எவ்வகை ஆர்வம் உள்ளது? எப்போது உனது
ஆர்வம் நீ அறிந்த, அனுபவித்த, ஆயிரம் அன்றாட விஷயங்களையும்
பொருட்களையும் கடந்து மெய்ம்மை நோக்கிச் செல்கிறதோ அப்போதே
உன்னுள் பேரார்வம் துளிர்த்திடும்!
நண்பனே, இந்த உலகமும், அதிலுள்ள பொருட்களும், அனைத்து உறவு
களும், மிக நெருக்கமான உனது சொந்தங்களும் இன்னும் உனதருமைச்
சுயமும் உட்பட அனைத்தும் தற்காலிகமானவையே, நிரந்தரமற்றவையே!
விரைவிலோ சற்று தாமதமாகவோ அழியக்கூடியவையே!
அழியக்கூடியவற்றை, நிரந்தரமற்றவைகளை, தற்காலிகமானவைகளைத்
தேடுவது, சார்ந்திருப்பது சிற்றார்வம்!
அழிவற்றதை, நிரந்தரமானதை, நித்தியமானதைத் தேடுவது, சேருவது
பேரார்வம்!
ஆகவே, நண்பனே! உன்னிடம் எவ்வகை ஆர்வம் உள்ளது?
•<•>•
இப்பகுதி, 2013-ல் வெளியிடப்பட்ட, "மனிதனின் சொல்" எனும் எனது
இரண்டாவது நூலின் மூன்றாம் பாகத்திலிருந்து எடுக்கப்பட்டு,
விசேடமாகத் தலைப்பிடப்பட்டு இங்கு தரப்படுகிறது
•<•>•
மா.கணேசன்/ நெய்வேலி/ 07.01.2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment