Wednesday, 25 January 2017

நீங்கள் இருக்கிறீர்கள்!






இருப்பின் இரகசியம்
முடிவில்லாது அதிசயிக்கும்
உணர்வில் உள்ளது!

   \•/

நீங்கள் இருக்கிறீர்கள்
என்பது முதல் அற்புதம்!
அதை அறிவது
இரண்டாவது அற்புதம்!
நீங்கள் இருக்கிறீர்கள்
என்பதை
முழுமையாக உணர்வு
கொள்வது
இறுதி அற்புதம்!
அதுவே விழிப்பு.

  \•/

நீங்கள் இருக்கிறீர்கள்
என்பது ஒரு உணர்வல்ல;
அந்த உணர்வே தான்
நீங்கள்!

  \•/

தனது இருப்பே மனிதனது
முழு கவனிப்பிற்கும்
அக்கறைக்கும்
உரிய
ஒரே அற்புதம் ஆகும்!
மனிதன் எனும் புதிருக்கு
தன்னை முழுவதுமாகத்
திறந்திருப்பதொன்றே
மனிதனின் சிறந்த
முயற்சியாக
இருக்க முடியும்!

  \•/

நீங்கள் இருக்கிறீர்கள்
என்பது ஒரு அற்புதம்!
அதற்கு மேல் நீங்கள்
எப்படி என்னவாக
எங்கே இருக்கிறீர்கள்
என்ன செய்கிறீர்கள்
என்பதெதுவும் அந்த
அற்புதத்தைச் சிறிதும்
கூட்டுவதுமில்லை!
குறைப்பதுமில்லை!

  \•/

எவ்வொரு குறிப்பிட்ட
நிலையிலும்
இடத்திலும்
நேரத்திலும்
இருப்பிற்கு
தீவிரமாகவும்
முழுமையாகவும்
பதிலளிப்பதொன்றே
முக்கியம்!

  \•/

"நீங்கள் இருக்கிறீர்கள்!"
என்பதை
ஓரு அற்புதமாக நீங்கள்
உணரவில்லையெனில்
மிகவும் முக்கியமான ஒன்றை
இழந்து விட்டீர்கள் என்றுதான்
சொல்லவேண்டும்!
வேறு எதைக்கொண்டும்
இன்னும் எல்லாவற்றையும்
கொண்டும் ஈடுசெய்ய முடியாத
அரிய பொக்கிஷத்தை
உங்கள் கவனக்குறைவினால்
கண்டும் காணாமல்
கடந்து சென்று விட்டீர்கள்.

நீங்கள் இழந்தது எதை
என்பதைக் கண்டுபிடிப்பதற்குள்
உங்கள் ஆயுட்காலம்
முடிந்தேவிடும்!
மேலும் எவரும் அதுபற்றி
எடுத்துச் சொன்னாலும்
உங்களால் ஒருபோதும்
அதைக்கண்டு பிடிக்க
இயலாது!

  \•/

"நீங்கள் இருக்கிறீர்கள்!"
என்பது உங்களுக்குத்தெரியும்.
"ஆனால், அதிலென்ன அதிசயம்?"
என்கிறீர்கள்.
அதனால்தான் சொல்கிறேன்
"நீங்கள் இருக்கிறீர்கள்!"
என்பதை  இன்னும் நீங்கள்
கண்டுபிடிக்கவேயில்லை
என்கிறேன்!
கண்டுபிடித்திருந்தால்
இப்படி அலட்சியமாகப்
பேச மாட்டீர்கள்.

  \•/

மனிதனின் ஒரே சீரிய தொழில்
"தான் யார்?" எனும் உண்மையைக்
கண்டுபிடிப்பது தான்!
இதுவொன்றே (யாவற்றிற்கும்)
அர்த்தம் தரும் செயல்பாடாகும்.

  \•/

"நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள்"
என்பதற்கும்
"நீங்கள்  இருக்கிறீர்கள்!"
என்பதற்கும்
மாபெரும் வித்தியாசம் உள்ளது!
உயிரோடு இருப்பது என்பது
ஒரு உயிரியல் நிஜம்
எலிகளும் தவளைகளும் கூடத்தான்
உயிரோடிருக்கின்றன!
எனினும்  "தாம் இருக்கிறோம்!"
என்பதை அவை உணர்வதில்லை
உணரவும் வழியில்லை!
உயிரோடிருந்தென்ன?
உணரப்படாத இருப்பு குறையிருப்பே!
ஆனால், "நீங்கள்  இருக்கிறீர்கள்!"
என்பது  உமது உயிர்-இருப்பைக்
கடந்த ஒரு உணர்வுபூர்வ நிஜம்!
ஆனால், அதில் நீங்கள்
பங்கு பெறுவதில்லை - ஏனெனில்
நீங்கள் இன்னும் உணர்வுக்கு
வரவேயில்லை!

  \•/

நீர் "உயிரோடிருக்கிறீர் !"
என்பதை மட்டுமே அறிகிறீர்
ஆகவே தொடர்ந்து உயிரோடிருக்க
என்னவெல்லாம் செய்யவேண்டுமோ
அவற்றையெல்லாம் செய்கிறீர்!
விரைவாகவோ சற்று தாமதமாகவோ
மரணம் வந்தே தீரும் என்பதறிந்தும்
தொடர்ந்து உயிர்-இருப்பை விடாது
பற்றிக்கொள்கிறீர்!
அதிலேயே உம்மை முற்றாக
முதலீடு செய்திடுகிறீர்!
இதுதான் உமது மாபெரும்
மட்டுப்பாடு!

  \•/

நீங்கள் போகும் பாதையில்
பேராபத்து காத்திருக்கிறது
என்பது தெரிந்தும்
இன்னும் நீங்கள்
உணர்வுக்கு வராதது
பேராச்சரியம் தான்!

  \•/

பரிணாம இயற்கையின்
பரிசான உயிர்-இருப்பு
என்பது வெறும் கையிருப்பு
போலத்தான்!
அதன்  வீச்சு உச்சம்
மாற்று-மதிப்பு
என்னவென்று பாருங்கள்
உடனே!
காலம் கடந்துபோவதற்குள்
உணர்வு கொள்ளுங்கள்
இருப்பை வாழ்க்கையாக
மாற்றுங்கள்
இப்போதே!

  \•/

நீங்கள் உயிரோடிருக்கிறீர்கள்!

வளமுடனோ அல்லது
வறுமையிலோ இருக்கிறீர்கள்!

நோயுற்றோ அல்லது
நோயற்றோ இருக்கிறீர்கள்!

சிலர் மிகவும் சொகுசாக
ஆடம்பரமாக இருக்கிறீர்கள்!

நீங்கள் நல்லவராகவோ
அல்லது கெட்டவராகவோ
இருக்கிறீகள்!

ஆம், இருக்கிறீர்கள் - ஆனால்
என்ன துரதிருஷ்டம்!

நீங்கள் எவருமே வாழவில்லை!

  \•/

ஆம், வெறுமனே உயிரோடு
இருக்காதீர்கள்!
உணர்வோடிருங்கள்!
உணர்வோடிருப்பதும் போதாது!
முழு-உணர்வை அடையுங்கள்!
அதற்குக் குறைவான எதுவும்
மரணமே!

  \•/

இருப்பு முற்றிலும்
உயிரோடிருத்தலைச்
சார்ந்ததல்ல - என்பதால் தான்
நீங்கள் இறந்தாலும்
மீண்டும் மீண்டும் பிறப்பது
சாத்தியமாகிறது!

  \•/

முதலில் உணர்வுக்கு வாருங்கள்!
பிறகு என்னவேண்டுமானாலும்
செய்யுங்கள்
எப்படி வேண்டுமானாலும்
வாழுங்கள்!!

  \•/

விரைவாகவோ சற்று தாமதமாகவோ
முடிவிற்கு வந்துவிடும் உமது உயிர்-இருப்பில்
அதிகம் முதலீடு செய்யாதீர்!
மாறாக, உணர்வில், உணர்வின்- இருப்பில்
முழுமையாக முதலீடு செய்யுங்கள்
அதனால் அதிகமாகத் திரும்பப்பெறுவீர்
ஆம், மரணம்-கடந்த-பேரிருப்பை அடைவீர்!

  \•/

உமது மரணத்திற்கு முன்னேயே
பேரிருப்பைச் சுவைக்காவிடில்
நீங்கள் இருந்தாலும் இறந்தாலும்
இரண்டுமே  ஒன்றுதான்!

  \•/

"உணர்வோடிருப்பது
என்றால் என்ன?"
என்று உங்களையே கேட்டுப்
பாருங்கள் - எந்தப்
பதிலும் வரவில்லை, ஒரு
சிந்தனையும் எழவில்லையா?!
அது தான் உணர்வு
அதனுடன் இருங்கள்!

  \•/

"நீங்கள்  இருக்கிறீர்கள்!"
ஆனால், அரையும் குறையுமாக!
முழுமையடைவதற்காகவும்
பூரணமடைவதற்காகவும் தான்
நீங்கள் இங்கு இருக்கிறீகள்!
முழுமையாகவும் பூரணமாகவும்
நீங்கள் இருந்தால்  இங்கு
தோன்றியிருக்க மாட்டீரகள்!
          •
"நீங்கள்  இருக்கிறீர்கள்!"
அதுவே பெரும் துன்பத்திற்கும்
பேரின்பத்திற்கும் அடிப்படை!
இயற்கையளித்த இருப்பை
உணர்வின்றி அப்படியே தழுவிக்
கொள்வதற்கும்
உணர்வு கொண்டு இருப்பின்
உண்மையை உய்த்துணர்வதற்கும்
உள்ள வித்தியாசம்
மரணத்திற்கும் நித்தியவாழ்விற்கும்
உள்ளதாகும்!
           •
உண்மையான தொடக்கம்
நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை
உணர்ந்திடும் போது தான்
தொடங்குகிறது!
அதற்கு முன் இருப்பவை யாவும்
இதற்கான வெறும் முன்-தயாரிப்பே!
தன்னைக் கண்டடைதல்
முழுமையடையும்  அக்கணம்
அதுவே அனைத்தின் முடிவும்!
அதற்கு முன்  இருந்தவை
முக்கியமல்ல!
அதற்குப்பின் எதுவுமில்லை!

  \•/    \•/
   /\    /\
 
மா.கணேசன்/நெய்வேலி/ (18.06.2011) & 24.01.2017
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...