Tuesday, 24 January 2017

நீங்கள் உண்மையிலேயே இருக்கிறீர்களா? (Liberation Unleashed DEBUNKED!)






      " நீங்கள் உண்மையிலேயே இருக்கிறீர்களா? நான் என்பது
        இருக்கிறதா? இதுபோன்ற கேள்விகளை நாம் அதிகம்
        கேட்டுக்கொள்வதில்லை. 'நான்' என்ற தனியான சுயம்
        ஒன்று இல்லை என்பதைத்திட்டவட்டமாக மறுக்கிறது
        'லிபரேஷன் அன்லீஷ்ட்' இணையதளம். 2011-ம் ஆண்டு
        செப்டம்பர் 17-ம் தேதி  அன்று இலோனா சிவுநைட் மற்றும்
        எலினா நெலின்ஸ்கி ஆகியோரால் தொடங்கப்பட்ட  இந்த
        இணையதளம், தனிமனம் மற்றும் தனிச்சுயம் என்ற
        மாயைகளிலிருந்துவிடுபடும் வழிகளை தன்னார்வலர்கள்
        வழியாகவும், இணையக்குழுக்களின் உரையாடல்கள்,
        முகநூல் குழுக்கள், வலைப்பூக்கள் வழியாகவும், செய்து
        கொண்டிருக்கிறது. நாம் நமக்குள் பார்க்கும் தைரியமும்,
        ஆர்வமுமிருந்தால் அதற்கான வழிகாட்டுதல்கள் இதில்
        உள்ளன . . . . . . .  "
           
            - தி இந்து தமிழ் நாளிதழ், வியாழன், ஜனவரி 19, 2017
             
                   <<•>>

"கட்டவிழ்க்கப்பட்ட விடுதலை" அல்லது "விடுதலை கட்டவிழ்க்கப்பட்டது"
(Liberation Unleashed) என்ற பெயரிலான இந்த இணையதளத்தின்
நிறுவனர் இலோனா சிவுநைட் (Ilona Ciunaite) எனும் (இங்கிலாந்து)
பெண்மனி ஆவார்.

     "இந்த  உலகத்தின் இயற்கையிலிருந்து நாம் தனித்தவர்கள் என்ற
      மாயையிலிருந்து விடுபட்ட அனுபவத்தைப்பெற்ற மக்களுக்கான
      உலகளாவிய வலைப்பின்னல் இது. இந்த விழிப்புணர்வை அடைந்த
      வர்கள் பிறரோடு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்
      தளம் இது."              - லிபரேஷன் அன்லீஷ்ட்

என்று சொல்லப்படுகிறது.  ஒரு முதல்  பார்வையில்,  உடனடியாகச் சொல்ல
வேண்டும் என்றால்,  இவரது தத்துவம் (அல்லது அதன் அடிப்படை) புதிதல்ல;
ஆனால்,  அவரது  விளக்கம் புதியது.  அதே நேரத்தில்,  அவரது தத்துவ முடிவு
கள் தலைகீழானவை, ஏனெனில், அவை எதிர்மறையானவை!

"இந்த  உலகத்தின்  இயற்கையிலிருந்து  நாம்  தனித்தவர்கள்  என்ற  மாயை
யிலிருந்து  விடுபட்ட  அனுபவத்தைப் பெறுவது"   என்பது வேறு;   அதற்காக,
"தனிச்சுயம்"  என்பது  இல்லை;  "நான்"  என்று  எதுவுமில்லை  என்றெல்லாம்
சொல்வது தவறு!  இந்த உலகம் இருக்கிறது,   இயற்கை  இருக்கிறது,  அதில்,
நீங்கள்  இருக்கிறீர்கள்;    நானும்  இருக்கிறேன்,     எல்லாம்     இருக்கின்றன!
ஆனால்,   உலகம்,  இயற்கை  என்பதென்ன?  நான்  எத்தகைய   மெய்ம்மை?
நான் ஏன் எதற்காக,எத்தகைய குறிக்கோளுக்காக இருக்கிறேன்?வாழ்க்கை
என்றால்  என்ன?  வாழ்க்கையின் குறிக்கோள்,  அர்த்தம்,  உண்மை,  இலக்கு
யாவை? போன்ற இந்த அடிப்படைக்கேள்விகளுக்கான பதில்களைக்கண்டு
பிடிப்பது முக்கியமாகும்!

உண்மையில் தான்  'யார்'  அல்லது  'என்ன'  என்பதை ஒவ்வொரு மனிதனும் கண்டுபிடித்தாக வேண்டியது  மிகவும்  தலையாய  விஷயம்  ஆகும்!  இல்லா
விடில்,  ஒருவனது  "நான்"  என்பது வெறும் ஒரு புகைமூட்டமான கோட்பாடே;
ஒருவனது "சுயம்" என்பது வெறும் ஒரு சொந்தப் புனைவே யாகும்! அதாவது,
"நான்" என்பதும், "சுயம்" என்பதும் இருக்கவே செய்கின்றன; ஆனால், அவை
எவ்வகையிலும்  முழுமையானவையோ,  இறுதியானவையோ  அல்ல! இந்த
மட்டுப்பாடுதான் பிரச்சினையே தவிர; அம்மட்டுப்பாட்டைக் களைவதற்குப்
பதிலாக,  "நான்" என்பதை, "சுயம்" என்பதை மறுப்பதும், அல்லது  அவற்றை
விளக்கிக் காலிசெய்வதும் தீர்வாகிடாது!
                   
                   <•>
 
    "நேரடியாகத் துல்லியமாகப் பார்க்கவைப்பதற்குப் பதில், ஞானத்தை
     நோக்கிய ஒருவரின் பயணம்,அடர்த்தியான எதிர்பார்ப்புகளாலும்,
     கதைகளாலும் பின்னப்பப்பட்டதுதான் அந்தப்பாதைக்குத்தடையாகிப்
     போகிறது. இந்த எதிர்பார்ப்பு அனைத்தையும் அடுக்கி அவையெதுவும்
     இல்லையென்பதை உணரச்செய்வதே இதன் முதல்படி.

      இது அன்றாட வாழ்க்கையிலிருந்து தப்பிப்பதற்கான வழியல்ல.
      கூடுதலாக எதையும் பெறுவதோ சிறப்பானவராக ஆவதோ இதன்
      நோக்கம் அல்ல. மேலான, அதி உன்னதமான பிரக்ஞை நிலையையும்
      இதனால் எட்டிவிட முடியாது.

      சில குறிப்பிட்ட கருத்தோட்டங்களை நம்புவதற்கு மனதைப்பழக்கும்
      தந்திரமும் இதில் கிடையாது. குறிப்பிட்ட அறிவை இதன் மூலம் பெற
      முடியாது. இதன் மூலம் புனிதமாகவோ, அருமையானவராகவோ,
      ஒழுக்கமானவராகவோ, நல்ல மனிதராகவோ மாறிவிட முடியாது.
      இது நம்பிக்கையோ, சமயமோ, தத்துவமோ, மாயாவாதமோ
      கிடையாது. பணமோ, பொருளோ இதனால் சேராது. இது சுய
      முன்னேற்றத்திட்டமும் அல்ல."  -லிபரேஷன் அன்லீஷ்ட்

நேரடியாகத்  துல்லியமாகப்  பார்ப்பது  என்பது மிகச்சரியான அணுகுமுறை
தான் என்பதில்  ஐயமில்லை!  மேலும், ஞானத்தை நேரடியாகத்தேடுவது என்
பது சரியானதல்ல என்பதும் சரியே!ஏனெனில்,முதலில் கவனிக்கவேண்டிய
விஷயங்களை  முதலில் கவனிக்காமல் ஞானத்தையோ, உண்மையையோ
தேடுவது என்பது அடித்தளம் இல்லாமல் கட்டடம்  கட்டுவதற்குச் சமமாகும்!

"இது   அன்றாட  வாழ்க்கையிலிருந்து   தப்பிப்பதற்கான  வழியல்ல."   என்ற
குறிப்பு     சற்று   பொருத்தமற்றதாக   ஒலிக்கிறது!      ஏனெனில்,     அன்றாட
வாழ்க்கை   என்பது  ஒட்டுமொத்த  வாழ்க்கையில்  எவ்விடத்தில்  பொருந்து
கிறது;  அதன் பங்கு, பணி, பாத்திரம், அளவு எத்தகையது என்பதைப் புரிந்து
கொள்ளாமல்,  வெறுமனே  அன்றாட வாழ்க்கையை மேன்மைப்படுத்த முடி
யாது!  அதே வேளையில்,   அன்றாட வாழ்க்கை  என்பது பெரும் அசம்பாவித
மாக  வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்வதாயிருக்கும் பட்சத்
தில்  அதனிடமிருந்து  தப்பிப்பது என்பது ஒவ்வொருவரும் உடனடியாக மேற்
கொள்ள வேண்டிய  அவசர அவசியம் ஆகும்!  மேலும்,  அன்றாட வாழ்க்கை
என்று  தனியேயும்,  ஆன்மீக வாழ்க்கை என்று தனியேயும்  ஏதுமில்லை! ஒரு
வகையில், உயிர்வாழ்தலைப்பற்றியதுதான் அன்றாடவாழ்க்கையென்றால்,
அது   தவிர்க்கவியலாததும்   தப்பிக்கமுடியாததுமாகும்!    அவ்வாறு   தப்பிச்
செல்பவர்கள்    போதைப் பழக்கத்திற்கு  ஆளானவர்களும்,   மன-நோயால்
பாதிக்கப்பட்டவர்களும்,     உழைப்புச்   சோம்பேறிகளுமாகத்தான்   இருக்க
முடியும்!

      "கூடுதலாக எதையும் பெறுவதோ சிறப்பானவராக ஆவதோ இதன்
       நோக்கம் அல்ல. மேலான, அதி உன்னதமான பிரக்ஞை நிலையையும்
       இதனால் எட்டிவிட முடியாது."  -லிபரேஷன் அன்லீஷ்ட்

ஆன்மீகத்தின் இலக்கு எதையேனும் பெறுவதையோ, சிறப்பானவராக ஆவ
தையோ பற்றியதல்ல என்பது சரியே!  ஆனால்,  எவ்வொரு  பயணத்திற்கும்
போய்ச் சேரும் இடம், ஒரு இலக்கு என்று ஒன்று உண்டென்பதால், ஆன்மீகத்
திற்கும்  அத்தகைய  ஒரு  இலக்கு  உண்டு!   அதை   நாம் முழுமையடைதல்,
ஞானமடைதல், விழிப்படைதல்,  முக்தி அல்லது  வீடுபேறு அடைதல் . . . .என்
றெல்லாம் குறிப்பிடலாம்! ஆனால், இலோனா சிவுநைட்-ன் "விடுதலை  கட்ட
விழ்க்கப்பட்டது"   எனும் இயக்கம்  தனது  மட்டுப்பாடுகளை  நன்கு  உணர்ந்
துள்ளதாகத் தெரிகிறது.   ஆகவே தான் அது,   "மேலான,   அதி உன்னதமான
பிரக்ஞை  நிலையையும்  இதனால்  எட்டிவிட  முடியாது."  என்று   கூறுகிறது!
போலியான வாக்குறுதிகளை அளிப்பதைவிட இது ஒரு நல்ல, நேர்மையான
விஷயமாகும்!  அதே நேரத்தில்,  உள்ளது மனித-உணர்வு மாத்திரமே;  மனித
உணர்வைக்கடந்த வேறு எவ்வித உயர்-உணர்வு நிலைகளும்  இல்லை என்ப
தாக அது சொல்லுமெனில், அவ்வழியைப்பின்பற்றுவது பயனற்றதாகும்!

மேலே  மேற்கோள் காட்டப்பட்டுள்ள மூன்று பத்தியில், மூன்றாம் பத்தியில்
சொல்லப்பட்ட  விஷயங்களில் பெரிதாக முரண்பாடுகள் இல்லை எனலாம்!

                     <•>

    "நம்மில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு குறைபாட்டை
     உணர்பவர்களாக இருக்கிறோம். ஆனால் அது சரியான உணர்வல்ல.
     இந்த உணர்விலிருந்து வெளியேறுவதற்கு வெவ்வேறு பாதைகளைத்
     தேடுகிறோம். நாம் முழுமையடைய முடியும் என்று நம்புகிறோம்

     இந்தப்பாதையில் ஒருவருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் 'நான் யார்' என்ற
     கேள்வி வரும். அது தெளிவானவுடன் இந்த  உலகில், உறவுகளில்,
     உடைமைகளில் , அனுபவங்களில் எதிலும் இந்த முழுமையில்லை
     என்று தெரிகிறது. அப்போது தேடல் உள்ளே திரும்புகிறது.
                                                           -  லிபரேஷன் அன்லீஷ்ட்

'வாழ்க்கையில் ஏதோவொன்று குறைகிறது, ஏதோவொன்று முற்றிலுமாகச்
சரியில்லை'  என்ற  உணர்வு எதைக்குறிக்கிறது என்பது தெரியாமல், ஏதாவ
தொரு  வழியைத் தேடித்  தேர்வுசெய்து  அவ்வழியில்  பயணிப்பது  என்பது,
ஒருபோதும் மனிதனைப் பூர்த்தி செய்திடாது என்பது சரியான  பார்வையே!
ஆனால்,   தமது தேடலில்,   அதிர்ஷ்டமுள்ள   ஒருவனுக்கு,  'நான் யார்'  என்ற
கேள்வி  வரும்  என்பதும்,  அது  தெளிவானவுடன்  இந்த   உலகில்,  உறவுகள்,
உடமைகள், அனுபவங்கள்  எதுவும் ஒருவனைப் பூர்த்தி செய்திடாது என்பது
தெரிய வரும் என்பதும்,  அப்போது   தேடல்  உள்ளே  திரும்புகிறது  என்பதும்
வெறும் (போதைக் குழாய்க்)கனவே (Pipe-dream)ஆகும்!

முதலிடத்தில்,   வாழ்க்கை  பற்றிய  புரிதல்  இல்லையெனில்,  ஒட்டுமொத்த
வாழ்க்கையையும்  ஒருவன்  இழந்து விட்டான்  என்றுதான்  அர்த்தம்;  ஏதோ
வாழ்க்கையில்  ஒரு குறை,  அல்லது  இரண்டு குறைகள்தான் என்பதில்லை!
அடுத்து,  'தமது  தேடலில்,  அதிர்ஷ்டமுள்ள   ஒருவனுக்கு,  'நான் யார்'  என்ற
கேள்வி வரும்'  என்பது, "வாழ்க்கையே  ஒரு பெரும் சூதாட்டம்" என்று சொல்
வதாகத் தெரிகிறது! இப்பார்வை அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானதும்
ஆகும்! பரவலாக,  பெரும்பாலான ஆன்மீக மார்க்கங்கள் தோற்றுப்போகும்
பிரதான அம்சம்  இதுதான்.  அதாவது,  'நான் யார்'  என்ற  கேள்வி,  அதிர்ஷ்ட
முள்ள  ஓரிரு  சாதகனுக்கு  மட்டுமே வாய்க்கும் என்பது அபத்தமான கூற்று
ஆகும்!  ஏனெனில்,  ஒருவன்   தன்னை  நோக்கி விழிப்பது,  தன்னைக் கண்ட
டைவது,  உணர்வை  உணர்வுகொள்வது, உணர்வுக்கு வருவது  என்பதுதான்
ஆன்மீகத்தின்  முதற்படியும்  முடிவான படியும் ஆகும்!  அதாவது,  விழிப்பை
யும்,   உணர்வுக்கு  வருவதையும்    ஒருவர்  இன்னொருவருக்குக்   கற்றுத்தர
இயலாது! இது புதிரிலும் புதிரான அம்சமாகும்! அதாவது, விழிப்பதும் உணர்
வுக்கு வருவதும் ஒருவரது அதிர்ஷ்டத்தைப்பொறுத்த விஷயம் அல்ல!

                       <•>

         "அப்போது (தேடல் உள்ளே திரும்பும் போது) தான் சுயம் என்பது
         பற்றிய கேள்வி வருகிறது. யார் அல்லது எது இந்த முழுமையையும்,
         விடுதலையையும் தேடுகிறது?  இங்கே தான் 'லிபரேஷன் அன்லீஷ்ட்'
         தலையிடுகிறது. ஒரேயொரு கணம் உங்கள் மனதைத் தொந்தரவு
         செய்பவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு, நீங்கள் சுயம் என்று
         நினைத்திருக்கும் அம்சத்தை உற்றுப்பாருங்கள். அந்தக் கற்பனை
         செய்யப்பட்ட மனசுயத்தை நீங்கள் நேரடியாகவும் நேர்மையுடனும்
         பார்த்தால் , சுயம் என்பதே இல்லை என்பதோடு அப்படி ஒன்று
         இருந்ததே இல்லை என்பதும் தெரியவரும். அதை ஒரு கோட்பாட்டு
         சாத்தியமாக மட்டும் ஏற்றுக்கொள்ளாமல், அப்பட்டமாகப் பார்க்கும்
         போது 'தனியான மனச்சுயம்' என்பதின் மீதான நம்பிக்கை
         படிப்படியாக விழத்தொடங்கிவிடும். நமது இயற்கையான இருப்பு
         நிலையை உணரமுடியும்.

         இந்த  மனச்சுயம் சார்ந்த மாயையிலிருந்து விடுபடுவதைத் தான்
         நாங்கள் விடுதலை என் கிறோம்."     -லிபரேஷன் அன்லீஷ்ட்

மேலே   சொல்லப்பட்டிருக்கும்  விஷயங்கள்   யாவும்  பெரிதும்  முன்னுக்குப்
பின் முரணானவைகளாகும்.  விஷயங்கள் ஒன்றும் அவ்வளவு எளிதானவை
யல்ல! சொற்களை இப்படியும் அப்படியுமாக மாற்றிப்போடுவதன் வழியாக
மாற்றங்களைச்  செய்து விட  முடியாது.   முதலில்,   அவர்களின்  கூற்றுப்படி
தேடல் உள்ளே திரும்புவதற்கு  ஒருவனுக்கு அதிர்ஷ்டம் வேண்டும்!  மேலும்,
தேடலும்   தேடுபவனும்   ஒன்றாயிருக்கும்  பட்சத்தில்   அவன்    ஒருபோதும்
தன்னை  இழக்கும்  பாதையில்  செல்லமாட்டான்;   அப்படியே  சென்றாலும்,
எல்லா வகைகளிலும்    தன்னைக்   காப்பாற்றிக்   கொள்ளவே    செய்வான்!
ஆகவே ஒருவன் ஒருபோதும் உள்முகமாகத் திரும்பவே மாட்டான்! அதாவது
ஒவ்வொரு  கணமும்  விழிப்பதற்கான  கணமாகவே உள்ளதாகையால்,  ஒரு
வன் அதை மிகச்சாதுர்யமாகத் தவிர்த்துவிடுவான்!ஒருவனுள் சுயம் பற்றிய
கேள்வி  எழவேண்டுமானால்,  எவ்வாறேனும்  அவன் 'தான்  இதுதான்!' எனத்
தாமே புனைந்துகொண்ட சுயத்தைக் கடந்து சென்றிட வேண்டும், அதாவது
அவன்  உணர்வுக்கு  வந்தாக  வேண்டும்!  அப்போதுதான் அவனுக்குச் சுயம்
பற்றிய கேள்வி தோன்றும்!

அடுத்து,  ' ஒரேயொரு  கணம்  உங்கள்  மனதைத் தொந்தரவு செய்பவற்றை
யெல்லாம் ஒதுக்கிவிட்டு, நீங்கள் சுயம் என்று நினைத்திருக்கும் அம்சத்தை
உற்றுப்பாருங்கள்.'  எனும்  வேண்டுகோள்  மிகக்கடினமான,  சாத்தியமற்ற
கோரிக்கை (Tall order)ஆகும்!  மேலும், 'அந்தக் கற்பனை செய்யப்பட்ட
மனசுயத்தை நீங்கள் நேரடியாகவும் நேர்மையுடனும் பார்த்தால், சுயம்   என்
பதே இல்லை  என்பதோடு அப்படி ஒன்று இருந்ததே இல்லை என்பதும் தெரி
யவரும்.'  எனும் கூற்று சாத்தியமற்றதும், தன்னகத்தே நீக்கமுடியாத  குறை களைக்  கொண்டதுமாகும்.  அதாவது,  'சுயம்  என்று  ஒன்று  உள்ளது!  எனும்
தவறைச்  சுட்டிக்காட்டி  அதைப் போக்க  முயன்று தானும் அதே பொறியில்
வீழ்ந்த்துவிட்டது என்பதையே அது குறிக்கிறது! முதலில்,எவ்வொரு விஷயத்
தையும்    நேரடியாகவும்  நேர்மையுடனும்   பார்த்தல்   என்பது   விழிப்பின்றி
சாத்தியமில்லை!     அடுத்து,   ஒருவேளை   அப்படிப்  பார்க்கமுடியும்  போது,
'சுயம்  என்பதே இல்லை என்பதோடு அப்படி ஒன்று  இருந்ததே இல்லை  என்
பதும்  தெரியவரும்'   என்றால்,  அது  யாருக்கு,  அல்லது,  எந்த   சுயத்திற்குத்
தெரியவரும்?  என்ற  கேள்வி  அங்கே தொக்கி நிற்கிறது!   'லிபரேஷன்  அன்
லீஷ்ட்' குழுவினர்  "சுயமற்ற சுயம்" அல்லது, "இயற்கையான இருப்பு நிலை"
போன்ற கற்பனையான எதையேனும் மனதிற்கொண்டிருக்கலாம்!

ஆனால், உணர்வு என்பது இருந்தால்,அதைச்சுற்றி சுயம் என்பது உருவாவது
தவிர்க்கவியலாமல் நிகழ்ந்தேறும்! மிகத்தெளிவான (சுய)உணர்வு இல்லாத
எலிகளுக்கும்,தவளைகளுக்கும் தான் 'சுயம்' என்பதிருக்க முடியாது!  உணர்
வுள்ள  மனிதனால்  சுயமில்லாமல் இருக்கமுடியாது!  சுயம்  என்பது தொடக்
கத்தில்    ஒரு  புராணிகப்  புனைவாகத்தான்  உருவாகிறது.  பிறகு   உணர்வு
வளர்ச்சிக்கேற்ப  சுயமும்  புதுப்புது வார்ப்பில் இடப்பட்டு  வளர்த்தெடுக்கப்
படுகிறது!  'லிபரேஷன் அன்லீஷ்ட்' குழுவினரின் நிகழ்ச்சிநிரலில் (Agenda)
உணர்வுப் பரிணாமத்திற்கு (Evolution of Consciousness)இடமில்லா
தது   வருத்தத்திற்குரியதாகும்!  மேலும்,  அவர்களிடம்   பரிணாமப் பார்வை
இருப்பதற்கான அடையாளம்  எதுவும் தென்படவில்லை; அதுவே அவர்களது
புரிதலில் உள்ள பெரும் ஓட்டைக்குக் காரணமாகும்!

மேற் குறிப்பிட்ட     அதே பத்தியில்,   அவர்கள்  மனிதனின்    'இயற்கையான
இருப்பு நிலை'  பற்றிப்பேசுகிறார்கள்.  ஆனால், சுயமற்ற நிலை தான் மனித
னின்  'இயற்கையான இருப்புநிலை' என்றால்,  மனிதனுக்கும், தவளைக்கும்
வித்தியாசம்   இல்லையென்றாகிவிடும்!     உயிரற்ற  கூழாங்கல் சட-இருப்பு
நிலையைச் சேர்ந்தது;  உயிருள்ள  தவளை உயிர்-இருப்புநிலையைச்  சேர்ந்
தது; உணர்வுள்ள  மனிதன் உணர்வு-இருப்பு நிலையைச் சேர்ந்தவனாவான்.
அதாவது, உணர்வு நிலையைப்பற்றிக் குறிப்பிடாமல், வெறும் இருப்புநிலை
பற்றிப்பேச முடியாது. உணர்வு இருந்தால், அதைச்சுற்றி சுயம் என்பது அமை
யவே  செய்யும்!  அதே வேளையில்,  மெய்ம்மைக்குத்   தொடர்பு  இல்லாமல்,
அல்லது தொடர்பு படுத்தாமல், தான் தோன்றித்தனமாக சுயம் என்பது கட்ட
மைக்கப்படுமானால்,   அது  மிகவும்   அர்த்தமற்றதாகவும்,    மட்டுப்பாடான
வகையிலும் தான் அமையும்.

சுயத்தின் இப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழியாகச் சொல்லப்பட்டது
தான் "சுயத்தை அறிதல்",அல்லது "தன்னைஅறிதல்" (Self-Realization)
என்பது! இதற்கு மாறாக, "சுயத்தை அழிப்பது" (Self-Demolition)என்பது
சரியான வழியாகாது! ஆக, சுயத்தை பின்-நவீனத்துவ பாணியில்(`a la Post-Modernism) கட்டுடைத்து,  'சுயம்  என்று  அப்படி  எதுவும்  இல்லை,  அப்படி
ஒன்று இருந்ததே இல்லை!'   என்று  அறிவிப்பது  சுயத்தின் பிரச்சினையைத்
தீர்க்க உதவாது! ஏனெனில், மனம்,சுயம்,நான் என்பவை பெரும் மட்டுப்பாடு
களேதவிர அவை மாயையல்ல! 'லிபரேஷன் அன்லீஷ்ட்' குழுவினர் சுயத்தை
அழித்துவிட்டு,  "மனச்சுயம் சார்ந்த மாயையிலிருந்து  விடுபடுவதைத் தான்
நாங்கள் விடுதலை என்கிறோம்." என்கிறார்கள்! மனச்சுயம் என்பதிலிருந்து
கீழிறங்கிப் பின்னோக்கிச் செல்வது விடுதலையாகாது;  அது சுயத்தை எட்டி
டாத  ஆதி மனிதன்  அல்லது  அதற்கும் முந்தைய விலங்குஜீவிகளின்  நிலை
யாகும். மாறாக, மனச்சுயத்தைக் கடந்து மேலேறி முன்னோக்கிச் செல்வதே
உண்மை விடுதலையாகும்!

சுயத்தை எட்டிய,  தனது  தனித்தன்மையை ஓரளவிற்கேனும் உணர்ந்த ஒரு
மனிதனால்,    இன்னும்   சுயத்தை எட்டாத  ஆதி மனிதர்களின்   சமூகத்தில்
அதிக காலம் தங்கி வாழ இயலாது என்பதை,  அமெரிக்க மானுடவியலாளர்
டோபியாஸ்  ஷ்னீபாம்  (Tobias Schneebaum)  என்பவரது     பீதியூட்டும்
அனுபவம் சொல்கிறது.  ஷ்னீபாம் அவர்கள் பெரு நாட்டின் வனப்பகுதியில்
வாழ்ந்து வரும்  "அகாரமாஸ்"  (Akaramas) எனும் தொல்குடி இனத்து மக்க
ளுடன்   வாழும் வாய்ப்பு கிடைத்தது.  அதுவரை  ஒரு  வெள்ளை  மனிதனை
யும்  பார்த்திராத  அவர்களும் அவரை ஏற்றுக்கொண்டனர். அவரும், அவர்க
ளுடைய  மொழியையும், கலாச்சாரத்தையும் கற்றுக்கொண்டார். அவர்களு
டைய  வாழ்முறையில்  "தனிமனிதன்"  என்பதற்கு சிறிதும் இடமில்லை என்
பதை  அவர்  அறிந்து கொண்டார்;  அக்கோட்பாடு  அவர்களுக்கு முற்றிலும்
அந்நியமாகவும்,    அறியப்படாததாகவும்    இருந்தது.    அவர்கள்    எதையும்
தனியே செய்வதில்லை - வேலை, விளையாட்டு, வேட்டையாடுதல், உண்ணு
தல் என எல்லாவற்றையும் சிறு சிறு குழுவாகச்சேர்ந்தே செய்தனர்.

அவர்கள் அவ்வளவு நெருக்கமாகவும்,தோழமைப்பினைப்பில் இருந்தாலும்,
அவர்களில்  எவரது  இறப்பும்,  இழப்பும்  குறிப்பிடப்படாமலும், கண்டுகொள்
ளப்படாமலும்  போகின்றன.   ஷ்னீபாம்  அவர்கள்    "அகாரமாஸ்"  மக்களை
விட்டு, தம் சொந்த நாட்டிற்க்குச் செல்லத் தீர்மானித்தபோது, அவரது இல்லா
மையோ,  அவர்களை விட்டு  அவர் சென்று விட்டார்  என்பதோ  அவர்களால்
பெரிதாக  உணரப்படாது   என்பதை  அவரால்  தீர்க்கமாக   உணர முடிந்தது.
'அகாரமாஸ்' மக்களிடம் தனிப்பட்ட நபர்கள் என்பது அங்கீகரிப்பிற்குள் வர
வேயில்லை.   ஒவ்வொரு   உறுப்பினரும்,   முற்றிலுமாக  குழுவின்  பகுதியே,
வெறும்   பகுதி மட்டுமே.   குழுத்தன்மை தான்  அவர்களின் முதன்மையான
அகவயநிலை.   அவர்களிடம்,  பேசப்படும் வகையிலான  தனி-மையப்பட்ட (Individualized) சுயங்கள்  என்பதேயில்லை!  இவ்விடத்தில்தான் ஷ்னீ
பாம்-ன்  பிரச்சினை  வெளிப்படுகிறது.   ஷ்னீபாம்  அவர்கள்  அக்காட்டிற்கு
வரும்போது எத்தகைய  'சுயமாக'  வந்தாரோ,  அச்சுயமானது  "அகாரமாஸ்"
மக்களுடன்  வாழ்ந்து  செல்லுகையில்,  சமூகரீதியாக கரைக்கப்பட்டு விட்ட
தோடு,  ஷ்னீபாம்-ன் துல்லியமான  'நான்' உணர்வுதவிர பிற யாவும் துடைத்
தழிக்கப்பட்டது. கடைசியில் அது அவரை பீதியில் ஆழ்த்தியது. ஆக, "அகார
மாஸ்"  வகை  அகவயத்தை,  தொடர்ந்து  அனுஷ்டித்துச் செல்வது  மிகமிகக்
கடினம்  என்பதை உணர்ந்த ஷ்னீபாம், "அகாரமாஸ்"  வாழ்க்கையை உதறி
உடனே  காட்டைவிட்டு வெளியேறிச்சென்றார்.  மீண்டும்  அவர்  தனது மேற்
கத்திய தனிமனிதத்தன்மையைத் திரும்பப் பெற்றார்.(Source:"The Self
We Live By",2000 by James A.Holstein and Jaber F.Gubrium)

                       <•>

       "நமக்குள் பார்ப்பது அத்தனை சிரமமா? ஆம், இல்லை. இரண்டும்
        தான். ஏன் சிரமம் என்றால், அது மிகவும் எளிமையானது என்பதுதான்.
        ஏனெனில் நமது மனம், சிக்கலை விரும்புகிறது. அது நம்மை
        எண்ணற்ற புதிர் விளையாட்டுகளுக்குள் செலுத்தி அலைக்கழிக்க
        வைக்கக் கூடியது. உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு
        உண்மையான ஆசையும், நேரடி அனுபவத்தை அப்பட்டமாகப்
        பார்க்கும் உந்துதலும் இருந்தால், சுயத்தின் இன்மையைப் பார்ப்பது
        மிகவும் எளிதானது."             - -லிபரேஷன் அன்லீஷ்ட்

'நமக்குள் பார்ப்பது அத்தனை  சிரமமா?'  எனும்  கேள்வி   சிறுபிள்ளைத்தன
மானது.   உண்மையை அறிதல்,  தன்னை அறிதல்,  ஞானமடைதல்,  போன்ற
விஷயங்கள்  சிரமம்,  சுலபம்  என்ற  பிரச்சினைக்கு  அப்பாற்பட்ட   கட்டாய
அவசியமாகும்!   அவை  சுலபம்  என்றால்,   இங்கு  எல்லோரும் ஞானிகளாக
ஆகியிருக்கவேண்டும்;   அவை கடினம்   என்றால்,   ஒருவரும்   ஞானமடைந்
திருக்க முடியாது!   உலகில்  எல்லாப் பகுதிகளிலும்  மிகக் கணிசமான எண்
ணிக்கையில் ஞானிகள் இருந்துள்ளனர்; இன்றும் இருக்கின்றனர்!

அடுத்து, 'நமது மனம் சிக்கலை விரும்புகிறது' என்பது பொருந்தாதக் கூற்று
ஆகும். மனம் சிக்கலை விரும்பவில்லை, மாறாக, அது தொடும் அனைத்தை
யும் சிக்கலாக ஆக்கிவிடுகிறது!   மேலும்,  மனம் மேலோட்டமானதை, அற்ப
மானதை,சௌகரியமானதை,துய்ப்புக்குரியதை,இச்சைகளுக்குரியதையே
விரும்புகிறது, நாடித்தேடுகிறது! அது வாழ்க்கையெனும் நூல்கண்டின் நுனி
யைக்  கண்டு  பிடித்துப்   பிரிக்க  முயற்சிக்காமல்   கன்னாபின்னாவென்று
பிரித்து  சிக்கலாக்கிவிட்டு வாழ்க்கை மிகவும் சிக்கலானது, அபத்தமானது,
துன்பமயமானது . . . .  என்றெல்லாம் புகார்களைக் கூறிவருகிறது

அடுத்து, "மனம் நம்மை  எண்ணற்ற புதிர் விளையாட்டுகளுக்குள் செலுத்தி
அலைக்கழிக்க வைக்கக் கூடியது." என்ற கூற்றும் தவறானதாகும்! முதலில்,
மனம்  வேறு  மனிதன் வேறு அல்ல;  மனம் தான் மனிதன்!  அதாவது,  மனம்
நம்மை  எண்ணற்ற புதிர் விளையாட்டுகளுக்குள் செலுத்தி அலைக்கழிக்க
வைக்கவில்லை. மாறாக,மனம், அல்லது நாம் தான் நம்மைநாமே ஏமாற்றிக்
கொள்ளும் ஒளிந்து கண்டுபிடிக்கும் விளையாட்டில் (Hide and Seek)ஈடு
பட்டிருக்கிறோம்!  விழிப்படையாத  மனம்தான்  சிலந்தியைப் போல பிரச்சி
னைக்குரிய சுயம் எனும் வலையைப் பின்னி அதன் நடுவே  அமர்ந்துகொள்
கிறது!  விழிப்படைந்த மனம்  அனைத்தையும்  தன்னுள் கொண்டதும், அதே
நேரத்தில் அனைத்தையும் கடந்ததுமான ஒருமையும்  முழுமையான, "மகா
சுயமாக"ப் பரிமளிக்கிறது!
       
அடுத்து,  உண்மையைத்  தெரிந்து  கொள்வதற்கு உண்மையான ஆசையும்,
நேரடி  அனுபவத்தை  அப்பட்டமாகப் பார்க்கும் உந்துதலும் ஒவ்வொருவரிட
மும்  இருக்க  வேண்டும்  என்பது  பெரிதும் விரும்பத்தக்கதும்  அவசியமான
தும் ஆகும்!ஆனால்,அவ்வாறு இருக்கும்பட்சத்தில், "சுயத்தின் இன்மையைப்
பார்ப்பது   மிகவும்  எளிதானது"   என்பது   தலைகீழ்ப் பாடமாகும்!    மாறாக,
சுயத்தின் அசலான தன்மையைப்பார்ப்பது சாத்தியமாகும்! ஏனெனில்,  இல்
லாத சுயத்தின் இன்மையைப் பார்ப்பது எதற்கு?

"சுயம்"  என்பது  அருவருக்கத்தக்க ஒரு அசிங்கமோ,  தீமையோ அல்ல. அது
பெரிதும்    மட்டுப்பாடானது   என்பது    மட்டுமே  அதன்   பிரச்சினை  ஆகும்!
மற்றபடி  மனமில்லாமல்,  எண்ணம்  இல்லாமல்,  'நான்'  உணர்வு இல்லாமல்,
சுயம்   என்பதில்லாமல்  மனிதன்   இல்லை!    அதே நேரத்தில், சுயம் என்பது
இறுதியானது  அல்ல;  அது ஒரு  அடிப்படை ( ஏனெனில்  ஆன்மீகம்,  விழிப்பு,
ஞானம்,  விடுதலை,  இவையெதுவும்  வெற்றிடத்தில்  நிகழவியலாது!) ;  அது
ஒரு தொடக்கநிலை, அது முழுமையான இறுதிச்சுயமாக மாற்றமுறும்வரை
அது   மட்டுப்பாடானதே!   அதாவது,  உணர்வின்  வளர்ச்சிக்கேற்ப,   சுயமும்
வளரவேண்டும்! உணர்வு முழுமையடையும் போது சுயமும் முழுமையடைய
வேண்டும்.  அப்போது  அது  தனது  மட்டுப்பாடுகளனைத்தையும் கடந்துவிட்
டிருக்கும்!
                          <•>

      "சுயம் என்பதின்றி என்னால் செயல்பட முடியுமா, வாழ்க்கைக்கான
       உந்துதலை நான் இழந்துவிட மாட்டேனா, என்ற கேள்வி   நமக்குள்
       வரலாம்.                  
     
       மனச்சுயத்தின் தலையீடு அற்று எல்லாமே சரியாகத்தான் நடந்து
       கொண்டிருக்கிறது. அதனால், விழிப்புணர்வு அடைந்த பிறகு எந்தப்
       பெரிய மாற்றமும் ஏற்படுவதில்லை."
                                                        - லிபரேஷன் அன்லீஷ்ட்

"சுயம்  என்பதின்றி  என்னால்  செயல்பட  முடியுமா?"  எனும் இக்கேள்வி படு
அபத்தமானது!    ஏனெனில்,  உருப்படியான,  முறையான,  தன்னை  அறிந்த
சுயமாக    எழாத  மனிதர்களால்  தான்    இந்த   உலகம்   நிரம்பி   வழிகிறது!
உலகில்   பெரும்பாலான  மனிதர்களுக்குச்  "சுயம்'  என்பதே இல்லை என்று
தான்  சொல்லவேண்டும்!  மனமற்ற,  "தாம் இருக்கிறோம்!"  என்ற உணர்வே
இல்லாத,  'நான்'  எனும் உணர்வற்ற,   ஆகவே சுயமற்ற விலங்கு ஜீவிகள் இப்
பூமியில்   செயல்படாமலா  உள்ளன?   அவை யாவும்  தம்  வாழ்க்கைக்கான
உந்துதலை இழந்தாவிட்டன? இல்லையே! அவை குன்றா  உற்சாகத்துடனும்
செயலூக்கத்துடனும் தான் உயிர்-பிழைத்துவருகின்றன!

மேலும், பொதுவாக மனிதர்கள்  எதை 'வாழ்க்கை' எனக்கருதி வாழ்ந்து  வரு
கின்றனரோ, அதற்கு மாறான ஒன்றாக உள்ளது அசலான மனித வாழ்க்கை
என்பது!அதாவது, சுயம் என்பதின்றி வாழ்க்கைக்கான உந்துதலை மனிதன்
இழந்து விடுவானோ,  என்ற  அச்சம் அடிப்படையற்றது!  பரிணாம இயற்கை
யினால்,  பொதுவாக  உயிர்-ஜீவிகளுக்கென்று   முன்-திட்டமிடப்பட்ட  அந்த
உயிர்-ஜீவித்தல்  என்கிற  அடிப்படை வாழ்க்கையைத்தான், எலிகள் உள்பட
அனைத்து  விலங்கு ஜீவிகளும்,  மனிதஜீவிகளும்  காலம்காலமாக வாழ்ந்து
வருகின்றனர்!   அந்த   வாழ்க்கைக்கு  "சுயம்"   என்பது   தேவையே இல்லை!
ஆகவே,  சுயம்  என்பதின்றி வாழ்க்கைக்கான உந்துதலை மனிதன் இழந்து
விடுவானோ, என்று எவரும் அஞ்சத்  தேவையில்லை!

விலங்கு ஜீவிகளாயினும், மனித ஜீவிகளாயினும்,மிகுந்த செயலூக்கத்துடன்,
ஆர்வமிழக்காமல்,வெறுமனே உயிர்-பிழைத்திருப்பதற்கு மனமோ, சுயமோ,
'நான்' உணர்வோ, எதுவும் தேவையில்லை! எனும் உண்மையை,  'லிபரேஷன்
அன்லீஷ்ட்'   குழுவினர்  அறிந்திருப்பதாகத் தெரியவில்லை! பெரும்பாலான
மனிதர்களுக்கு,   நேரடியாகத்    "தாம் இருக்கிறோம்!"    என்பது    தெரியாது;
மாறாக, "அண்டைவீட்டுக்காரன்  இருக்கிறான், ஆகவே நான் இருக்கிறேன்!"
என்கிற அளவில் தான் அவர்களுக்குத் தங்களைத் தெரியும்!

அடுத்து,  "மனச்சுயத்தின் தலையீடு அற்று எல்லாமே சரியாகத்தான் நடந்து
கொண்டிருக்கிறது. அதனால், விழிப்புணர்வு அடைந்த பிறகு எந்தப் பெரிய
மாற்றமும்  ஏற்படுவதில்லை."   என்ற கூற்றும்  தவறானதாகும்.   ஏனெனில்,
மட்டுப்பாடான மனச்சுயத்தின்  தலையீட்டினால், எல்லாமே  தாறுமாறாகத்
தான்  நடந்து  கொண்டிருக்கிறது;  எதுவும்  சரியாக  நடக்கவில்லை  என்பது
தான் உண்மை நிலையாகும்!' எல்லாமே சரியாக நடந்திருந்தால், வாழ்க்கை
யில் ஏதோவொன்று குறைகிறது,ஏதோவொன்று முற்றிலுமாகச் சரியில்லை'
என்ற  உணர்வு   எழுவதற்கான  வாய்ப்பே   இல்லாமல்  போயிருக்கும்!    இக்
குறைபாடு உண்மையில் ஒருவரிடம் விலையுயர்ந்த பொருட்கள் இல்லாமை
யையோ,  அல்லது,  செல்வச் சுபிட்சம்  இல்லாமையையோ குறிக்கவில்லை!
மாறாக,  அது   "தன்னறிவு"  (Self-Knowledge) இல்லாமையையே குறிக்
கிறது!

அடுத்து,  "விழிப்புணர்வு அடைந்த பிறகு எந்தப் பெரிய மாற்றமும் ஏற்படுவ
தில்லை" என்பது அப்பட்டமான தோல்வியின் வெளிப்பாடாகும்! சுயத்தைக்
காலி பண்ணுவது  குறித்து  அவ்வளவு   சந்தோஷம் கொள்ளும்  'லிபரேஷன்
அன்லீஷ்ட்'  குழுவினர், விழிப்புணர்வு பற்றிப்பேசுவது ஆச்சரியமளிக்கிறது!
அதோடு,  "விழிப்புணர்வு  அடைந்த பிறகு  எந்தப் பெரிய மாற்றமும்  ஏற்படு
வதில்லை." எனும் அவர்களுடைய கூற்று, அவர்களுடைய போலித்தனமான
மேதாவிலாசத்தையே வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது! ஏனெனில், "விழிப்
புணர்வு" தான் ஒவ்வொரு மனிதனும் அடையவேண்டிய ஆகப்பெரிய இறுதி
யான   மாற்றமாகும்!   அதற்குப் பிறகு சாதிக்க எதுவுமில்லை!
                      <•>
   
    "இறந்தகாலம் குறித்தும், எதிர்காலம் குறித்தும் கவலைப்பட்டுக்
      கொண்டும் கனவுகண்டும் கொண்டிருக்கும் நமது மனதைத்தான்
     'நான்' என்று கருதிக்கொண்டிருக்கிறோம். மனம் என்பதற்கும்
     'நான்' என்ற உயிர்-இருப்புக்கும் தொடர்பு கிடையாது. மனம் என்பது
      நினைவுகள், பழக்கங்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பு
      என்பதை இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகள் உணர்த்து
      கின்றன. மனதிலிருந்து விடுபடத்தான் ஆயிரக்கணக்கான ஆண்டு
      களாக சித்தர்களும் ஞானிகளும் முயன்று வருகிறார்கள். அதற்கு
      இந்த இணையதளமும் நமக்குப் பயன்படலாம்."

என  'லிபரேஷன் அன்லீஷ்ட்'  எனும் இணையதளம் பற்றிய தனது அறிமுகக்
கட்டுரை   ( காண்க:  தமிழ் இந்து நாளிதழ்,  வியாழன், ஜனவரி 19, 2017)   யை
திரு.ஷங்கர்  அவர்கள் முடித்திருக்கிறார்.  சிந்தனையைத் தூண்டும்  இக்கட்
டுரையை வழங்கிய அவருக்கு நன்றிகள்.

"மனம் என்பது என்ன?"  என்று  தலைப்பிடப்பட்ட  அவரது கட்டுரையில் 'லிப
ரேஷன் அன்லீஷ்ட்' குழுவினர்,  மனம்  என்று  ஒன்று இல்லை என்று அறிவிக்
கிறார்கள்!ஆனால்,"இறந்தகாலம் குறித்தும், எதிர்காலம் குறித்தும் கவலைப்
பட்டுக்கொண்டும்   கனவுகண்டும்   கொண்டிருக்கும்  நமது  மனதைத்தான்
'நான்'  என்று  கருதிக்கொண்டிருக்கிறோம்"   என   அவர்கள் கூறுகிறார்கள்.
அதே நேரத்தில்,   அந்த  மனம்  இல்லாவிடில்,  நாம்   இறந்தகாலம் குறித்தும்,
எதிர்காலம் குறித்தும் கவலைப் படாதிருக்கும் தவளைகளைப்போலத்தான்
இருப்போம்!  'லிபரேஷன் அன்லீஷ்ட்'  குழுவினர்,  எவ்வாறேனும்  மனம்  அல்
லது உணர்வு எனும்அம்சத்தைக் கழித்துக்கட்டிவிடத்துடிக்கும் பொருண்மை
வாதிகளைப் போலவும்;   உணர்வை  இயற்கைப்படுத்திடத்  (Naturalize)
துடிக்கும் இயற்கையின் உண்மையான 'இயற்கை' என்னவென்று  அறியாத
மொண்ணையான இயற்கைவாதிகளைப்போலவும் தான் பேசுகிறார்கள்!

அடுத்து,   "மனம்   என்பதற்கும்   'நான்'  என்ற  உயிர்-இருப்புக்கும்  தொடர்பு
கிடையாது.   மனம்  என்பது   நினைவுகள்,  பழக்கங்கள்  மற்றும்   அனுபவங்
களின் தொகுப்பு (தான்)"   எனும்  அவர்களது கூற்று மிகவும் மேலோட்டமான
தாகும்.  அதாவது  மனம்  என்று ஒன்று  இல்லை என ஒரே வீச்சில் அப்படியே
பெருக்கித்தள்ளிவிடும் பட்சத்தில்,  மிச்சமிருப்பது  மனத்தின்  உதவியின்றி
தாமே   சுவாசிக்கும்  நுரையீரலைக் கொண்ட,   தானியங்கி  எந்திரம் போல்
சீரணிக்கும்  வயிற்றைக் கொண்ட தவளை மட்டுமே யாகும். மனிதன் என்ப
வனும்    ஒருவகை   தவளை தான்  என  டார்வினிய  பரிணாமவாதிகளுடன்
சேர்ந்து கொண்டு இவர்களும் கூறுவதாகத்தெரிகிறது!

அடுத்து,  "மனதிலிருந்து  விடுபடத்தான்  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக
சித்தர்களும்  ஞானிகளும்  முயன்று வருகிறார்கள்.  அதற்கு  இந்த இணைய
தளமும் நமக்குப்பயன்படலாம்." என கட்டுரையாளர் திரு. ஷங்கர் அவர்கள்
சிபாரிசு செய்வது பொருத்தமற்றதாகும்.  ஏனெனில்,  சித்தர்கள்,  ஞானிகள்
சொன்ன முடிவான உண்மையும்,  'லிபரேஷன் அன்லீஷ்ட்' குழுவினர் கூறும்
உண்மையும்  ஒன்று அல்ல!  சித்தர்களும்,  ஞானிகளும்  மனதிலிருந்து, விடு
படுவது    அல்லது  மனதைக்கடந்து  செல்வதன்  அவசியம்  பற்றிச் சொல்லி
யிருக்கலாம்; ஆனால்,அதற்கான வழியாக, மனதை ஆயிரம் இதழ் தாமரை
போல  மலரச் செய்யச் சொன்னார்களே தவிர,  மனம் எனும் அடிப்படையை
யே மறுக்கச் சொல்லவில்லை!

முடிவுரையாக, உண்மையில்,  நம்முன்னே  மூன்று கேள்விகள் அல்லது பிரச்
சினைகள் அல்லது தெரிவுகள் உள்ளன. இம்மூன்றில் நீங்கள் எதுவொன்றை
யும்  தெரிவு செய்துகொண்டு,  அது உண்மை  என்று  நீங்கள் கண்டுபிடித்தீர்
களெனில்   அதை    அப்படியே  தழுவிக் கொள்ளலாம்;  பிரச்சினை  அல்லது
சவால் என்று இனம் கண்டால், அதைத் தீர்ப்பதை உங்கள் வாழ்க்கையாகக்
கொள்ளலாம்

1. நமது 'சுயம்' -  நம்மைப்பற்றி  நாமே புனைந்துகொண்ட பிம்பம், அடையா
   ளம், இன்னபிற விஷயங்களைக்கொண்டு கட்டமைக்கப்பட்ட சுயம்.

2. 'சுயம்' என்ற ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லப்படும் நிலைப்பாடு.

3.  எனக்கு நானே ஒரு வடிவம், அடையாளம், பிம்பம் கொடுத்துக்கொள்ளும்
     கற்பிதத்திற்கும், சுயம் என்பது இல்லவேயில்லை என்பதற்கும், இடையே,
     அல்லது இவ்விரண்டையும் கடந்ததாக, மூன்றாவதாக உள்ள ஒரு கேள்வி/
     பிரச்சினை :  சுயத்தின் உண்மையான தன்மை என்ன? அல்லது  சுயத்திற்
     குப் பின்னால் உள்ள உண்மைதான் என்ன?      

மா.கணேசன்/ நெய்வேலி/ 20.01.2017
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...