
ஒரு சமயம் மாபெரும் இயற்பியல் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
அவர்களிடம், "மனிதன் பதில் கண்டுபிடித்தாகவேண்டிய மிக முக்கியமான
கேள்வி எது?" என்று கேட்கப்பட்டபோது அவர் முன் வைத்த கேள்வி,
"இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?" என்பது தான்.
"சூரியன் காலையில் கிழக்கே உதிக்கிறது, மாலையில் மேற்கே மறைகிறது,
இடையில் ஆயிரத்தெட்டு அலுவல்கள், பிரச்சினைகள், விவகாரங்கள்; அதில்
உலகைப்பற்றிய ஆராய்ச்சிக்கெல்லாம் ஏது இடம், நேரம்?" என்பதாக நாம்
வாழ்ந்துசெல்கிறோம்! ஆனால், அன்றாடத்தைக் கடந்து சிந்திக்கும் ஒரு சிலர்
நம்மிடையே இருக்கக்கூடும் அவர்களுக்கு இக்கட்டுரை நிச்சயம் பயன்படும்!
விஞ்ஞானி ஐன்ஸ்டீன் முன்வைத்த அவரது கேள்விக்கு அவரே சொன்ன
பதில் :
"இப்பிரபஞ்சம் ஒரு நட்பார்ந்த இடமில்லை என நாம் தீர்மானித்தோமெனில்,
பிறகு நாம் நமது தொழில் நுட்பத்தையும், நமது விஞ்ஞானக் கண்டுபிடிப்பு
களையும், மற்றும் நமது இயற்கை வளங்களையும் பயன்படுத்தி
அப்பகைமையை வெளித்தள்ளும் வகையில் பெரிய சுவர்களை எழுப்பி
நம்முடைய பாதுகாப்பு, மற்றும் வலிமையைச் சாதிப்போம். பகைமையான
எல்லாவற்றையும் அழிக்கும் வகையில் பெரும் ஆயுதங்களை
உருவாக்குவோம். தொழில் நுட்பத்தைப்பொறுத்தவரை நாம் அத்தகைய
ஒரு வலிமைமிக்க நிலையை நோக்கிச் செல்கிறோம் என்பதாகவே நான்
நம்புகிறேன். அந்த வழிமுறையில், ஒன்று நாம் நம்மை முற்றாகத்
தனிமைப்படுத்திக்கொள்வோம் அல்லது முற்றாக நம்மை நாமே அழித்துக்
கொண்டுவிடுவோம்!
"அதே வேளையில், இப்பிரபஞ்சம் நட்பார்ந்ததுமில்லை, பகைமையானது
மில்லை, அதாவது கடவுள் அடிப்படையில் 'பிரபஞ்சத்துடன் தாயக்கட்டை
உருட்டிக் கொண்டிருக்கிறார்' என்பதாக நாம் தீர்மானித்தோமெனில், பிறகு
நாம் வெறும் அந்த தாயக்கட்டை உருட்டலின் குருட்டாம் போக்கான
விளைவுகளின் பலிகடாக்களே; மேலும் நமது வாழ்க்கைக்கு உண்மையான
யாதொரு குறிக்கோளும் அர்த்தமும் இருக்காது"
"ஆனால், இப்பிரபஞ்சமானது ஒரு நட்பார்ந்த இடம் என்பதாகத் தீர்மானித்
தோமெனில், பிறகு நாம் நமது தொழில் நுட்பத்தையும், நமது விஞ்ஞானக்
கண்டுபிடிப்புகளையும், மற்றும் நமது இயற்கை வளங்களையும்
இப்பிரபஞ்சத்தை புரிந்துகொள்வதற்குரிய கருவிகளையும், மாதிரிகளையும்
உருவாக்கிடப் பயன்படுத்துவோம். ஏனெனில், பிரபஞ்சம் எவ்வாறு
செயல்படுகிறது என்பதையும் அதனுடைய நோக்கங்களையும் புரிந்து
கொள்வதன் வாயிலாகவே வலிமையும், பாதுகாப்பும் வந்து சேரும்."
விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொன்ன இந்த பதில் அவ்வளவு திருப்திகரமாகவும்
இல்லை, பொருத்தமாகவும் இல்லை என்பதை சிரத்தையுடன் சிந்திக்கும்
எவரும் சொல்லிவிடக்கூடும்!
முதலிடத்தில், விஞ்ஞானி ஐன்ஸ்டீன் முன்வைத்த அக்கேள்வி உண்மை
யிலேயே அதிமுக்கியமானது தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை!
ஆனால், அக்கேள்வி பெரிதும் இருத்தலியல் மற்றும் தத்துவபூர்வமானதே
தவிர, விஞ்ஞானபூர்வமானதல்ல!
அடுத்து, ஐன்ஸ்டீன் அவர்கள் ஒரு மாபெரும் இயற்பியல் விஞ்ஞானியே
என்பதிலும் நமக்கு எவ்வித சந்தேகமுமில்லை! மேலும் பிரபஞ்சவியலைப்
பொறுத்த விஷயத்தில் அவர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞானி
யாவார். அதே நேரத்தில் அவர் வெறும் ஒரு வறட்டுத்தனமான இயற்பியல்
விஞ்ஞானியாக மட்டும் இருக்கவில்லை; தத்துவச் சிந்தனையிலும் பரிச்சய
முள்ள ஒருவராக இருந்தவராவார்.
எனினும், பெரிதும் அவரது சிந்தனைகள் விஞ்ஞான ரீதியான தர்க்கத்திலேயே
வேர்கொண்டிருந்தமையால் இயற்பியலுக்கு வெளியேயமைந்த கேள்விகளைப்
பொறுத்தவரை அவரது பதில்கள் முழுமையானவையாக அமையவில்லை!
குறிப்பாக, "இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?"
என்கிற கேள்வியை அவர் ஊகத்தின் அடிப்படையிலேயே அணுகியுள்ளார்.
அதாவது, "இப்பிரபஞ்சம் ஒரு நட்பார்ந்த இடமில்லை", "இப்பிரபஞ்சம் நட்பார்ந்
ததுமில்லை, பகைமையானதுமில்லை", "இப்பிரபஞ்சமானது ஒரு நட்பார்ந்த
இடம்" என்பதான மூன்று வகைப்பட்ட ஊகங்கள், அல்லது 'தீர்மானங்களை'
அடிப்படையாகக்கொண்டு அவர் தனது பதிலை உருவாக்குகிறார்!
ஆனால், இத்தகைய அணுகுமுறை அடிப்படையிலேயே குறைபாடுடையது
ஆகும்! அதாவது, இப்பிரபஞ்சம் எத்தகையது என்பதை நமது ஊகங்களைக்
கொண்டு புரிந்து கொள்வது சரியான அணுகுமுறையாகாது! அது நமது ஊகங்
களையும், தீர்மானங்களையும் பிரபஞ்சத்தின் மீது சுமத்துவது போன்றதாகும்!
உண்மையிலேயே இப்பிரபஞ்சம் எத்தகையது என்பதற்கான தரவுகளைத்
திரட்டி, அவற்றை அடிப்படையாகக்கொண்டே நமது புரிதலை கட்டியெழுப்பிட
வேண்டும்! அதாவது, ஒரு குறிப்பிட்ட முடிவு, ஊகம், அல்லது தீர்மானத்தை
தொடங்குபுள்ளியாகக்கொண்டு அதற்கேற்ப தரவுகளைத் திரட்டுவது முறை
யாகாது!
முதலிடத்தில், மனிதஜீவிகளாகிய நாம் இப்பிரபஞ்சத்தின் ஒரு வளர்ச்சிநிலை,
அல்லது பகுதியே என்பது ஐன்ஸ்டீனுக்குத் தெரியாத உண்மையா என்ன!
ஒரு மரத்தின் பகுதியான கிளைகளுக்கு, பூக்கள் அல்லது பிஞ்சுகளுக்கு
அம்மரமானது பகைமையாக இருக்கமுடியுமா
ஒருவகையில், முழுமைக்கும், பகுதிகளுக்குமான உறவை நட்பு, பகைமை
எனும் சொற்களைக்கொண்டு புரிந்து கொள்வது பொருத்தமற்றதாகும்!
அப்படியானால், "இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?"
எனும் கேள்வி பொருத்தமற்றதாகிறது! பிறகு எவ்வாறு இக்கேள்வி
அதிமுக்கியமானது என்று சொல்லமுடியும் எனக்கேட்கலாம். அடிப்படையில்,
"இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?" எனும் கேள்வி
பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்குமான தொடர்பு பற்றிய கேள்வியே என்பதால்
அத்தொடர்பு எத்தகையது என்பதைப் புரிந்துகொள்வது அவசியமானதே
என்பதை மனதிற்கொண்டு எவ்விதத் தடையுமின்றி நாம் தொடர்ந்து நமது
இந்த ஆய்வை மேலெடுத்துச் செல்லலாம்!
அதே நேரத்தில் நமது ஆய்வை, இப்பிரபஞ்சம் ஒரு நட்பார்ந்த இடம் எனவோ
அல்லது பகைமையான இடம் எனவோ யாதொரு முன்முடிவுமின்றி கொண்டு
செல்வது அவசியம். விஞ்ஞானிகளின் கணக்குப்படியே இப்பூமியில் உயிர்
தோன்றி வெற்றிகரமாக 400 கோடி ஆண்டுகள் தாண்டிவிட்டன! மனிதஜீவிகள்
தோன்றி இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன! இனி திடீரென
இப்பிரபஞ்சம் பகைமையானதாக மாறிவிடக்கூடும் என்பதற்கு எவ்விதச்
சான்றும், காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை!
உண்மையில், இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா இல்லையா என்பதை
விட, மனித இனம்தான் தனக்குத்தானே எதிராக நடந்து கொள்கிறது. நாடுகள்
பரஸ்பரம் ஒன்றையொன்று முற்றாக அழித்துக்கொள்ளும் வகையிலான
அபாயகரமான அணு ஆயுதங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. உலக
நாடுகள் அனைத்துமே பொருளாதார நடவடிக்கைகள் என்ற பெயரில் பூமியின்
இயற்கை வளங்களைச் சுரண்டி நுகர்ந்து வருகின்றன! அளவு கடந்த மக்கள்
தொகைப் பெருக்கம் ஒருபுறம், அவர்களனைவரின் தேவைகளையும் நிறைவு
செய்வதற்கான தொழிற்சாலைகளின் பெருக்கம் இன்னொருபுறம் என பூமியின்
சுற்றுச்சூழல் பெரிதும் மாசடைந்ததோடு, புவிக்கோளம் சூடேறுதலும் சேர்ந்து
பூமியில் மனித இனம் தொடர்ந்து உயிர்வாழ்வதே பெரும் கேள்விக்குறியாகி
விட்ட ஒரு காலத்தில் நாம் தற்போது வாழ்ந்து வருகிறோம்! மேலும், மனிதர்
களுக்கு எதிரிகள் வேற்றுக்கிரகத்திலிருந்து வரவேண்டியதில்லை; இன்னும்,
இயற்கையுலகமும் எதிரியல்ல! அதாவது, மனிதர்களுக்கு எதிரிகள் மனிதர்
களே யாவர்! மனிதர்களுக்கிடையே பெரிதாக யாதொரு இணக்கமும்,
நட்பார்ந்த உறவும் கிடையாது! பகைமை பாராட்டுவது என்பது நாடுகளுக்
கிடையே மட்டுமல்லாது தனி நபர்களுக்கிடையேயும் நிலவுகிறது!
ஆக, "இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?" என்று
கவலைப்படுவதற்கு முன்னர், நம்முடைய இதயங்களில் நட்புக்கான ஒரு சிறு
இடமாவது உள்ளதா என்பது பற்றியே முதலில் நாம் அக்கறைப்படவேண்டும்!
இப்பூமியிலேயே நட்பார்ந்த, அதாவது உயிரினங்களும், மனிதர்களும் வாழ்
வதற்கு உகந்த இடங்களும் உள்ளன! இதற்கு மாறான, பகைமை நிறைந்த
இடங்களும், அதாவது உயிரினங்களும், மனிதர்களும் வாழ்வதற்குத் தகாத
இடங்களான பாலைவனங்களும், கடும்பனியால் போர்த்தப்பட்ட துருவப்
பிரதேசங்களும் உள்ளன! அவ்வாறே, இப்பிரபஞ்சத்தில், நம் பூமிக்கிரகத்திற்கு
அப்பால் செல்லச்செல்ல உயிரினங்கள் வாழ்வதற்கு சற்றும் இடம் தராத
ஆபத்தான இடங்களே அதிகம்! கிட்டத்தட்ட நம் பூமிக்கிரகத்தைத் தவிர,
இப்பிரபஞ்சத்தில் வேறு எங்கும் உயிரினங்கள் வாழவே இயலாது என்று
முடிவாகச் சொல்லிவிடலாம்! ஆனால், இதன் அர்த்தம் பிரபஞ்சம் நட்பார்ந்த
இடமல்ல என்பதல்ல! மாறாக, நாம் தோன்றிய, நம்முடைய பிறந்த வீடான
பூமிக்கிரகத்தில் மட்டுமே பாதுகாப்பாக வாழமுடியும் என்பதே அர்த்தமாகும்!
மேலும், நம்முடைய சூரியமண்டலத்தில் ஒன்பது கிரகங்கள் இருக்கையில்,
சூரியனிலிருந்து மூன்றாவது கிரகமான பூமியில் மட்டும் ஏன் உயிர் தோன்றிட
வேண்டும்? ஆம்,உயிர் தோன்றுவதற்குரிய அனைத்து உகந்த சூழல்களும்
ஒருங்கே இங்கே அமைந்திருப்பதுதான் காரணம் எனலாம்!
அடுத்து, உயிரற்ற சடப்பொருளாலான பௌதீகப்பிரபஞ்சத்தில் உயிர் ஏன்,
எதற்காகத் தோன்றிடவேண்டும்? மேலும், உயிர் தோன்றுவதற்கான அவசியம்,
நோக்கம், குறிக்கோள் என்ன? அத்துடன், அதாவது உயிர்ஜீவி தோன்றியதுடன்
நில்லாமல், உணர்வுடைய மனிதஜீவி ஏன் தோன்றிடவேண்டும்? இவ்வாறு
இப்பிரபஞ்சத்தைப் பற்றியெல்லாம் எதற்காக ஆய்வு செய்திடவேண்டும்?
அடிப்படையில் பிரபஞ்சமானது உயிர்ஜீவிகளுக்கு எதிரானதாயிருந்திருந்தால்
முதலிடத்தில் இப்பிரபஞ்சத்தில் உயிர்ஜீவி எதுவும் தோன்றியிருக்காது! உயிர்
தோன்றிட இப்பிரபஞ்சம் இடமளித்திருக்காது அல்லவா? ஆனால், இத்தகைய
விளக்கத்தைக்கொண்டு உடனே இப்பிரபஞ்சம் ஒரு நட்பார்ந்த இடம் தான்
என்ற முடிவிற்கு நாம் வந்திடுவது எளிது! பிரபஞ்சம் ஒரு நட்பார்ந்த இடம்
என்பதைவிட, இப்பிரபஞ்சம் என்பது எத்தகைய மெய்ம்மை? அது எதற்காகத்
தோன்றியது? அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன? நமது வாழ்வின்
அசலான குறிக்கோள் என்ன? மனிதன் என்பவன் எத்தகைய மெய்ம்மை?
சடப்பொருளாலான பிரபஞ்சத்தில் (மனித) உணர்வுக்கான பணி என்ன?
என்பவற்றையெல்லாம் புரிந்து கொள்வதே அதிமுக்கியத்துவம் வாய்ந்த
அம்சங்கள் ஆகும்!
இப்பிரபஞ்சம் பல தளங்களைக் கொண்டதாகும்; துல்லியமாகச்சொன்னால்,
பௌதீகத்தளம், உயிரியல்தளம், உணர்வியல்தளம் என மூன்று தளங்களைக்
கொண்டதாகும். இப்பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள இரு-மட்டப் பார்வை
அவசியமாகும். ஒன்று வழக்கமான "கிடைமட்டப் பார்வை", இரண்டாவது
"செங்குத்துப்பார்வை" யாகும்! "கிடைமட்டப் பார்வை" என்பது முழுக்கமுழுக்க
பொருள்வயமானது, எந்திரத்தனமானது, அதனுடைய அதீதமான பார்வையில்
அது சுருக்கல்வாதமாகச் சுருங்கிவிடுகிறது! இப்பார்வையே விஞ்ஞானத்தின்
பிரதான பார்வையும் ஆகும்! இதை நாம் "உலக-மையப்பார்வை" எனவும்
குறிப்பிடலாம்! இதுவே ஐன்ஸ்டீனின் பார்வையுமாகும்! விஞ்ஞானிகளையும்,
பொருள்முதல்வாதிகளையும், இயற்கைவாதிகளையும், பகுத்தறிவுவாதிகள்
என்று தம்மை அறிவித்துக் கொள்பவர்களையும் பொறுத்தவரை உலகமே
பிரதானம் ஆகும்! இவர்களைப் பொறுத்தவரை, பிரபஞ்சம் என்பது பொருளால்
ஆன பௌதீகப் பிரபஞ்சம் மட்டுமே!
ஆனால், செங்குத்துப்பார்வையைப் பொறுத்தவரை பௌதீகப்பிரபஞ்சம் என்பது
ஒரு அடிப்படையே, அதாவது பிரபஞ்சத்தின் அடித்தளமே தவிர அதுவே
மொத்தப் பிரபஞ்சமும் அல்ல! ஏனெனில், பிரபஞ்சமானது தனது பௌதீகத்
தளத்தைக் கடந்து வளர்ந்து உயிரியல் தளத்தை எட்டியதுடன், அதையும்
கடந்து மனிதனுள் உணர்வாக உணர்வியல் தளத்தையும் எட்டி வெகு காலம்
ஆகிறது! தற்போது பிரபஞ்சம் எனும் பரிணாம இயக்கமானது பிரதானமாக
உணர்வுத்துடிப்புள்ள தனிமனிதர்களின் உணர்வில் மையம் கொண்டுள்ளது!
கிடைமட்டப் பார்வைக்கும், செங்குத்துப்பார்வைக்கும் உள்ள வித்தியாசம்
என்னவெனில், கிடைமட்டப்பார்வையானது, ஒரு மரத்தின் அடிப்பகுதியையும்,
அதன் பிரதானக்கிளைகளையும் மட்டுமே மரம் எனக் கணக்கில் கொள்கிறது!
அம்மரத்தின் பூக்களையும், பிஞ்சுகளையும், காய்களையும், கனிகளையும்
மரமாகக் கணக்கில் கொள்வதில்லை! ஆனால், செங்குத்துப்பார்வையானது,
வேர்கள், அடிமரம், கிளைகள், பூக்கள், பிஞ்சுகள், காய்கள், கனிகள் என
அனைத்தையும் மரமாகக் கணக்கில் கொள்வதுடன், பிரதானமாக அம்மரத்தின்
கனிகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஏனெனில், மரத்தின்
கனியினுள் இருக்கும் வித்தில் தான் ஒட்டுமொத்த மரமும் அடங்கியுள்ளது!
அதாவது, கனி, அல்லது வித்து தான் எவ்வொரு மரத்தின் முழுமையும்,
இலக்கும் ஆகும்! ஆம், வித்து இல்லாமல் விருட்சம் இல்லை! வித்து தான்
விருட்சத்தின் மூலமும், முழுமையும் ஆகும்!
விஞ்ஞானி ஐன்ஸ்டீன் உள்பட அனைத்து விஞ்ஞானிகளின் பார்வையும்
கிடைமட்டப்பார்வையைச் சேர்ந்தவையே! அவர்களுக்கு, பிரபஞ்சத்தின்
பௌதீகத்தளம் ( மரத்தின் அடித்தண்டும் கிளைகளும் மட்டும்) தான் ஒட்டு
மொத்த பிரபஞ்சம் ஆகும்! உயிர்ஜீவிகள் மற்றும் மனிதஜீவிகள் (பிஞ்சுகள்,
காய்கள் கனிகள்) யாவும் பிரபஞ்சத்தின் முக்கியத்துவம் ஏதுமற்ற
மேற்சேர்க்கையான விஷயங்களே!
விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டுச் சாதனைகள் இயற்பியல்
துறையின் எல்லைக்குள் மட்டுமே பிரமாதமானவை! ஏனெனில், அவை சடப்
பொருளாலான பிரபஞ்சத்தை, அதாவது பிரபஞ்சத்தின் ஒரு குறிப்பிட்ட
பகுதியை மட்டுமே ஆராய்பவை! அவை பிரபஞ்சத்தின் உயிரியல், மற்றும்
அதைக்கடந்த உணர்வியல் தளங்களையும் தொடுவதில்லை, விளக்குவது
இல்லை! ஐன்ஸ்டீனின் விஞ்ஞான மேதைமை தான் அவருடைய ஆன்மீக
பேதைமையின் ஆரம்பம் ஆகும்! இல்லாவிடில், பிரபஞ்சம் எவ்வாறு செயல்
படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதன் வாயிலாக பிரபஞ்சத்தைப் புரிந்து
கொண்டுவிடமுடியும் என அவர் எவ்வாறு எண்ணமுடியும்? இதிலிருந்து,
ஐன்ஸ்டீன் அவர்கள் பிரபஞ்சத்தை ஒரு எந்திரம் போல கருதி வந்திருப்பது
புலனாகிறது!
மேலும், அவருடைய இயற்பியல் துறையிலேயும் அவர் சில தவறான
முடிவுகளைக் கொண்டிருந்தார் என்பதையும் விஞ்ஞான உலகம் நன்கறியும்!
குறிப்பாக, அவரது காலத்திய பிற விஞ்ஞானிகளைப்போலவே அவருக்கும்
பிரபஞ்சம் விரிவடையும் தன்மை கொண்டது என்பது தெரியாது! ஆகவே
அவர் ஒரு நிலைத்த பிரபஞ்சத்தையே (Static Universe) உருவகித்துக்
கொண்டிருந்தார்! அந்நிலையில், அவர் தனது புதிய சார்பியல் கோட்பாடு
கொண்டு பிரபஞ்சத்தை விளக்கமுற்படும் வேளையில், அவருடைய
சமன்பாடுகள் நிலைத்த பிரபஞ்சத்திற்கேற்றவாறு அமையவில்லை என்பதால்
தனது சமன்பாட்டில் சமாளிப்புக்காக ஒரு மதிப்பைச் சேர்த்து(fudge factor)
சமன்பாட்டைச் சமன்படுத்தி சரி செய்துவிட்டார்! ஆனால், 1920-களில்
வானவியலாளர் எட்வின் ஹப்புள் (Edwin Hubble) அவர்களின் ஆராய்ச்சி
முடிவுகள் பிரபஞ்சம் விரிவடைகிறது எனும் உண்மையை தெளிவாக
எடுத்துக்காட்டியதை அறிந்த ஐன்ஸ்டீன், தனது சமன்பாட்டிலிருந்து சமாளிப்பு
காரணத்திற்காகத் தான் சேர்த்த அந்த மாறாத மதிப்பை ("cosmological
constant") நீக்கிவிட்டார்! பிறகு ஒருசமயம் அவர் அது குறித்துச்சொல்லும்
போது, "இதுவே தன் வாழ்க்கையில் தான் இழைத்த பெரும் தவறு!" என்றார்.
ஆனால், பிரபஞ்சவியலின் வேறொரு சிக்கலைத்தீர்க்கும் முயற்சியில்
ஈடுபட்டிருந்த சில விஞ்ஞானிகள், ஐன்ஸ்டீன் நீக்கிய அதே "மாறாத மதிப்பை"
மீண்டும் சமன்பாட்டில் சேர்க்கவேண்டிய அவசியத்தைச் சந்தித்ததாகச்
சொல்லப் படுகிறது!
இவ்வாறு விஞ்ஞானப் பிரபஞ்சவியலானது பலவித சமாளிப்புகளையும்,
பூசிமெழுகுதல்களையும், தவறான முடிவுகளையும், அரை-உண்மைகளையும்
கொண்டதாக விளங்குகிறது!
ஐன்ஸ்டீன் அவர்கள் இயற்கையின் கணிதவியல் விதிகளில் நம்பிக்கை
கொண்டவராக இருந்தார். இயற்கை விதிகளின் துல்லியமான தன்மையை
அவர் கடவுளின் கையாகக் கண்டார்! இதன் காரணமாகவே அவர் குவாண்டம்-
எந்திரவியலின் அடிப்படைக் கோட்பாடான ஹெய்ஸன்பெர்க்கின் "நிச்சயமற்ற
விதி" யை ஏற்றுக்கொள்ள மறுத்தார். அதாவது, அணுக்கருவின் மட்டத்தில்,
இயற்கையும், பிரபஞ்சமும் குருட்டாம் போக்கில் இயங்குகிறது, அதாவது,
நிகழ்வுகள் தற்செயலாக, விதியற்ற முறையில் நிகழ்கின்றன என்பதை
ஐன்ஸ்டீனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! இவ்வகையில், அவர் தனது
கொள்கைகளில் ஒரு பழமைப்பேணியாக (Conservative)இருந்தார். இதன்
காரணமாகவே அவர், "கடவுள் பிரபஞ்சத்துடன் தாயக்கட்டை உருட்டி விளை
யாடிக் கொண்டிருக்கவில்லை!" என்று குறிப்பிட்டார்!
ஆனால், நிறை, சக்தி, ஈர்ப்பு, (ஒளியின்) வேகம், அணுத்துகள்கள், மின்காந்த
விசை, வடிவவியல் ஆகியவை பௌதீகச் சடப் பிரபஞ்சத்தின் பொருண்மை
யான அம்சங்களே எனும் பட்சத்தில், இக்காரணிகளை, அல்லது பௌதீகப்
பண்புகளைக் கொண்டு எவ்வாறு ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும், அது ஏன்,
எதற்காகத் தோன்றியது, அதன் குறிக்கோள், இலக்கு என்னவென்றும்; மேலும்,
பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்கும்(உணர்வுக்கும்) உள்ள தொடர்பு என்ன? மனித
வாழ்வின் அர்த்தம், மற்றும் குறிக்கோள் என்ன? என்பவை பற்றியும் எவ்வாறு
புரிந்து கொள்ளமுடியும்? முடியாது! பௌதீகப் பிரபஞ்சத்தின் அமைப்பையும்,
அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைக்கொண்டும் பிரபஞ்சத்தின் நோக்கம்
என்ன என்பதை ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியாது! நாம் வசிக்கும் வீட்டை
(கட்டடத்தை)ப் புரிந்துகொள்வதன் மூலம் நம் வாழ்வின் அர்த்தத்தையும்,
குறிக்கோளையும் புரிந்து கொள்ள இயலாது! நாம் வசிக்கும் வீடு நம்மால்
கட்டப்பட்டது, ஆனால் பிரபஞ்சம் எனும் வீடு தானே அமைந்தது (அதாவது
ஆமையும், அதன் ஓடும் போல) என்பதுதான் இரண்டிற்குமுள்ள வித்தியாசம்!
ஆம், ஆமையும், அதன் மேலோடும் பிரிக்கவியலாதவையாகும்! ஆமைக்கு
அதன் மேலோடு பகைமையானதல்ல; மாறாக, அதுவே அதன் பாதுகாப்புக்
கவசம் ஆகும்!அவ்வாறே பிரபஞ்சம் என்பது மனிதனின் மேலோடு போன்றதே
ஆகும்! ஆனால், ஆமையின் மேலோட்டைப் பொறுத்தமட்டில், ஆமை
ஏன், எதற்காக இருக்கிறது, வாழ்கிறது; ஆமையினுடைய வாழ்வின் இலக்கு,
குறிக்கோள் என்ன என்பது தெரியாது! துரதிருஷ்டவசமாக ஆமைக்கும் கூட
தன் வாழ்வின் குறிக்கோள், இலக்கு என்ன என்பது தெரியாது! அதேநேரத்தில்,
ஆமையினுடைய வாழ்வின் குறிக்கோள் எதுவாயினும், அக்குறிக்கோளை
அடைவதற்கு உதவும் ஒரு கருவியாகச் செயல்படுவதே மேலோட்டின் பணி
ஆகும்!
அதேபோல், மனிதனின் மேலோடான பிரபஞ்சத்திற்கும் மனிதனுடைய
வாழ்வின் நோக்கம், குறிக்கோள், இலக்கு என்னவென்று எதுவும் தெரியாது!
ஆனால், ஆமையைப்போல் மனிதன் தனது வாழ்வின் அசலான குறிக்கோள்
என்ன, இலக்கு என்ன என்று தெரியாமல் வாழ இயலாது! மனிதன் தனது
வாழ்வின் குறிக்கோளை அறிவதற்காக முடிவேயில்லாமல் தன் மேலோடான
பிரபஞ்சத்தை ஆராய்ந்து கொண்டு இருக்க வியலாது! மாறாக, மனிதன் தன்
உள்ளீடுகளை ஆராய்வது அவசியம்; ஏனெனில், ஒரு ஆரஞ்சுப்பழம் என்பது
அதன் மேல் தோல் மட்டுமல்ல; அதனுடைய சுளைகளும், முக்கியமாக அச்
சுளைகளில் அடங்கியுள்ள சாறும் ஆகும்! மனிதனே (ஒவ்வொரு மனிதனும்)
பிரபஞ்சத்தின் இதயம் போன்றவன் ஆவான்! ஆகவே, மனிதன் தன் சாரத்தை
அறிவது அவசியமாகும்!
இவ்விடத்தில் இன்னொரு அம்சத்தையும் நாம் தெளிவுபடுத்திக் கொள்வது
நமது புரிதலை மேலும் ஆழப்படுத்துவதாக அமையும்! அதாவது, ஆமை
முக்கியமா? அல்லது அதன் ஓடு முக்கியமா? ஆமைக்காக அதன் மேலோடு
இருக்கிறதா? அல்லது ஓட்டிற்காக ஆமை இருக்கிறதா? அதாவது, பிரபஞ்சம்
மனிதனுக்காக இருக்கிறதா? அல்லது மனிதன் பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு
மூலையில் விபத்துபோலத் தோன்றிய வெறும் ஒரு வேடிக்கைப்பொருளா?
உண்மையில், ஆமையும், அதன் மேலோடும் வேறு வேறு அல்ல என்பதைப்
போல மனிதனும், பிரபஞ்சமும் வேறு வேறு அல்ல! ... .
முடிவாக, "இப்பிரபஞ்சம் நட்பார்ந்த ஒரு இடமா அல்லது இல்லையா?" என்ற
கேள்விக்கு நாம் இருவித பதில்கள் இணைந்த ஒரு முழுமையை வந்தடை
கிறோம் எனலாம்! அதாவது, இப்பிரபஞ்சத்தை ஒரு சாசுவதமான வசிப்பிடம்
என்பதாகக் கருதுவோமெனில், அது ஒரு பாதுகாப்பான, நட்பார்ந்த இடமல்ல!
ஏனெனில், இப்பிரபஞ்சமானது அதிகபட்சம் ஒரு நூறு ஆண்டுகளுக்கு மேல்
மனிதனை உயிரோடு வைத்துக்காப்பதில்லை! மாறாக,அதை ஒரு தற்காலிகத்
தங்குமிடம் என்பதாகக் கருதுவோமெனில், அது ஒரு நட்பார்ந்த இடமே
எனலாம்!
உண்மையில், ஒரு மேலோட்டமான பார்வைக்குத்தெரிவது போல், பிரபஞ்சம்
என்பது ஒரு "இடம்" அல்ல; அது ஒரு இயக்கம் அல்லது நிகழ்வுமுறையே
ஆகும். அதை நாம் மிகப்பொருத்தமாக ஒரு பரிணாம நிகழ்வுமுறை எனலாம்!
அது தன்னைத்தானே கடந்து வளர்ந்து செல்லும் ஒரு விசித்திரமான நிகழ்வு
முறை யாகும்! பிரபஞ்ச இயக்கத்தின் அம்புத்தலை பௌதீகத்தளத்தை விட்டு
வளர்ந்து வெளியேறி வெகு காலமாகிறது! ஆனால், விஞ்ஞானிகளோ
இன்னும் பௌதீகத்தளத்தையே ஒட்டுமொத்த பிரபஞ்சம் என்பதாகக் கருதி
ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்! ஒரு அமீபா என்பது உண்மையில்
பிரபஞ்சத்தின் ஒரு உயர்-வளர்ச்சி நிலையே என்பதை இயற்பியல் விஞ்ஞானி
களால் இனம் காண முடியவில்லை! இன்னும் உயிரியல் விஞ்ஞானிகளாலும்
ஒரு அமீபாவை வெறும் ஒரு ஒரு-ஸெல் உயிரியாகத்தான் பார்க்கமுடிகிறதே
தவிர அதைப் பிரபஞ்சத்தின் வித்தியாசமான ஒரு வளர்ச்சிநிலையாக, உயிர்
பெற்ற பிரபஞ்சமாகப் பார்க்க முடிவதில்லை! இந்நிலையில் எவ்வாறு
இவ்விஞ்ஞானிகளால், மனிதனே பிரபஞ்சம் எனும் நிகழ்வுமுறையின் இறுதிக்
கண்ணி, அதாவது பிரபஞ்ச விருட்சத்தின் ஒப்பற்ற கனி, அதாவது, உணர்வு
பெற்ற பிரபஞ்சம் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள இயலும்?
ஒரு மரத்தில் காய்த்திருக்கும் காய்களுக்கும் அம்மரத்திற்கும் என்ன தொடர்பு
உள்ளதோ அதே தொடார்புதான் பிரபஞ்சத்திற்கும், மனிதர்களுக்கும் உள்ள
தொடர்பும் ஆகும்! காய்களைப்பொறுத்தவரை அவை அம்மரத்தில் காய்த்திருக்
கின்றன என்பதைத் தாண்டி அம்மரம் பாதுகாப்பானதா, நட்பார்ந்த இடமா
என்பது போன்ற கேள்விகள் அர்த்தமற்றவை! காய்களின் குறிக்கோளும்
இலக்கும் அம்மரத்திலேயே தங்கி வாழ்ந்துகொண்டிருப்பதல்ல; மாறாக,
எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முற்றிக்கனிகளாவது
ஒன்றே காய்களின் ஒரே குறிக்கோளும், இலக்கும் ஆகும்! ஏனெனில், காய்கள்
கனிகளாக ஆவதே அக்காய்களுடையது மட்டுமல்லாமல் அம்மரத்தினுடைய
அர்த்தமும், முழுமையும் ஆகும்! இவ்வாறே, மனிதர்களும் எவ்வளவு
விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக தம் உணர்வில் முற்றிக்கனிந்து
முழு-உணர்வு நிலையை அடைவதொன்றே மனிதர்களை முழுமைப்படுத்தும்!
மனிதன் அடையக்கூடிய அம்முழுமையில்,வித்தினுள் அடங்கிய விருட்சமாக
இப்பிரபஞ்சம் மனிதனுள் அடங்கிவிடும்! அம்முழுமை மட்டுமே உண்மையில்
பாதுகாப்பான, நட்பார்ந்த ஒரே இடமாகும்!
••
மனிதா, உன்னைத்தவிர்த்து விட்டு
உலகை நீ புரிந்து கொள்ள முடியாது!
உலகைப் புரிந்து கொள்ளும் உணர்வாளன்
உலகிடமிருந்து வேறானவனாக
இருக்க முடியுமா?
உலகைத்தவிர்த்து விட்டும் உன்னை நீ
புரிந்து கொள்ள முடியாது!
உலகின் நீட்சியும் உயர் வளர்ச்சி நிலையும்
நீ தானே!
மனிதா நீ உலகைச் சார்ந்திருப்பதை விட
பெரிதும் உலகம் தான் உன்னைச்
சார்ந்திருக்கிறது!
உன் வழியாக உலகம் அடைய வேண்டிய
உய்விற்காக!
உலகின் உயர் வளர்ச்சி நிலையே நீ எனில்
உனது வளர்ச்சியின் உச்சப்புள்ளியே
உலகையும் உன்னையும் கடவுளையும்
ஒன்றிணைக்கும் ஒப்பற்ற
ஒருமையும் முழுமையுமான உண்மை!
••
மா.கணேசன்/ நெய்வேலி/ 24-08-2017
-----------------------------------/----------------------------------------