
மனிதர்களே! உங்கள் பார்வைகளை உடனே மாற்றிக்கொள்ளுங்கள்!
ஏனெனில், உண்மையை நீங்கள் அறியும் வேளை வந்துவிட்டது!
உண்மையை அறிவதற்கு முன்பு மலைகள் மலைகளாக இருந்தன!
ஆறுகள் ஆறுகளாக இருந்தன; உண்மையை அறியும் போது
மலைகள் மலைகளாகவும், ஆறுகள் ஆறுகளாகவும் இருப்பதில்லை!
உண்மையை அறிந்த பிறகு திரும்பவும் மலைகள் மலைகளாகவும்,
ஆறுகள் ஆறுகளாகவும் ஒருபோதும் இருக்கப்போவதில்லை!
இவ்வாறில்லாவிடில், பின் உண்மையை அறிந்ததன் அர்த்தம் என்ன?
ஞானிகள் பைத்தியக்காரர்களா என்ன, அவர்கள் ஏன் இவ்வுலகிற்கு
முதுகைக்காட்டிக்கொண்டு, கண்களை மூடி அகமுகமாகி அமர்ந்துள்ளனர்?
உலகை அறிந்த பிறகு உலகம் நம் அறிதலின் பகுதியாகி விடுகிறது!
அதனுடைய முந்தைய முதன்மைத்தானத்திலிருந்து விலக்கப்பட்டுவிடுகிறது!
அந்த இடம் இப்போது இறுதி மெய்ம்மைக்கு ஒதுக்கப்பட்டுவிடுகிறது!
உலகம், உயிர்ஜீவி, மனிதன் பற்றிய உண்மை
-----------------------------------------------------------
படிப்படியான படைப்பைக் குறிக்கும் ஒற்றைச் சொல்லே பரிணாமம்!
உயிர் தோன்றியது என்னவோ உலகின் பகுதியான இப்பூமியில் தான்!
ஆயின், இவ்வுலகம் ஒரு வளர்ப்பு வீடே தவிர நம் சொந்த வீடு அல்ல!
உயிர்ஜீவி என்பதென்ன, உலகின் ஒரு சிறு துண்டு இவ்வுலகிலிருந்து
தனியே தன்னைப் பிய்த்துக்கொண்டு உருவானது தானே!
உலகம் தன் சடத்தன்மை உதிர்த்து உயிராக ஏன் எழவேண்டும்?
அத்துடன் நிற்காமல் மனிதனுள் உணர்வாக ஏன் உதிக்கவேண்டும்?
உலகம் என்பது தன்னைத்தானே கடந்து செல்லும் ஒரு பரிணாமப்பொருள்!
அதில் உயிர்ஜீவி என்பது வேறொரு உலகிற்கான வாசல் அல்லவா!
அதன்வழி பிரவேசிப்பது உணர்வாக எழுந்த மனிதன் அல்லவா!
அகந்தை என்பது பேருணர்வு மாளிகைக்கான இன்னொரு வாசல்!
அவ்வாசற்படியில் தங்கி விடுபவன் தன் காலம் முடிந்ததும் சாகிறான்!
அதன் வழியாகச் செல்பவன் மரணம் கடந்த பெருவாழ்வு பெறுகிறான்!
உயிர்ஜீவி உலகைச் சார்ந்துள்ளதா, உலகம் உயிர்ஜீவியைச் சார்ந்துள்ளதா?
உயிர்ஜீவி, உலகம் இரண்டும் பரஸ்பரம் ஒன்றையொன்று சார்ந்துள்ளன!
ஏனெனில், வெவ்வேறு நிலைகளில் உள்ள இவை வெவ்வேறு அல்ல!
மனிதனுக்கும் உலகிற்கும் உள்ள சார்பும் பிணைப்பும் இத்தகையதே!
ஆயினும் இப்பரஸ்பரச் சார்பு நிரந்தரமானதோ, இறுதியானதோ அல்ல!
மனிதன் தன் உயிர்-இருப்பின் தேவைகளுக்காக உலகைச் சார்ந்திருக்கிறான்!
உலகமோ தனது உய்விற்காக, முழுமைக்காக மனிதனைச் சார்ந்துள்ளது!
உலகின், மற்றும் மனிதனின் பொதுவான இலக்கைப் பொறுத்தவரை
இவ்விரு மெய்ம்மைகளும் வேறொரு உயர்-மெய்ம்மையைச் சார்ந்துள்ளன!
அவ்வகையில் மனிதன் உலகைச் சார்ந்திருப்பதைவிட உலகம் தான்
மனிதனைப் பெரிதும் சார்ந்துள்ளது! ஏனெனில், மனிதனின் வழியே தான்
உலகம் தன் இலக்கை, உய்வை, முழுமையை எய்தவுள்ளது!
கடவுள், சொர்க்கம், நரகம் பற்றிய உண்மை
-----------------------------------------------------------
கடவுள், சொர்க்கம், நரகம் பற்றிய பேச்சுக்கான குறிப்பு எங்கிருந்து வந்தது?
அவை சும்மா பேச்சுக்களா என்ன? அவை வெறும் கற்பனைகள் தானா?
இல்லாத விஷயங்களை உருவகித்து அவற்றுக்குப் பெயரிட்டது யார்?
இவை அர்த்தமற்ற சொற்களென்றால் அகராதியில் இடம்பெற்றது எப்படி?
கடவுள் என்ன, மேலே சொர்க்கத்தில் வசிக்கும் எல்லாம்வல்ல ஒரு நபரா?
சொர்க்கம் என்பது பாலும் தேனும் ஆறாய் ஓடும் ஒரு பிரதேசமா?
நரகம் என்பது கொதிக்கும் எண்ணெய்க்கொப்பரைகள் நிறைந்த ஒரு இடமா?
யாவுமாய் ஆகிய யாவற்றையும் கடந்த ஒருமை தான் கடவுள்!
தெளிவும், விழிப்புற்ற மனமும், உயர்பேரறிவும் தான் சொர்க்கம்!
குழப்பமும், விழிப்படையா மனமும், அரைகுறை அறிவும் தான் நரகம்!
அர்த்தம், உண்மை, மெய்ம்மை பற்றிய உண்மை
-----------------------------------------------------------
உங்களைப்போலவே உங்களுடைய அறிதலும் மேலோட்டமானதே!
வாழ்வின் மேற்புறத்திலேயே விழுந்து புரண்டு உழலும் உங்களுக்கு
ஆழம் பற்றிய உணர்வில்லை, ஆகவே அர்த்தம் பற்றிய தேடல் இல்லை!
உங்களைப்பொறுத்தவரை தேவைகளைத் தாண்டிய உண்மை எதுவுமில்லை!
ஆகவே உங்களது தேவைகளின் பட்டியலில் உண்மை இடம்பெறுவதில்லை!
உயிர்-பிழைத்தலின் விவகாரங்களில் கழுத்தளவு நீங்கள் மூழ்கியுள்ளீர்!
ஆதலால் அசலான வாழ்க்கை பற்றிய அளவளாவுதல் உங்களிடமில்லை!
ஆகவேதான் சண்டை, சச்சரவுகளே உங்களுடைய வாழ்க்கையாகவுள்ளது!
உலகம் மட்டுமே ஒரே மெய்ம்மை என்று காண்பது உங்களது துரதிருஷ்டம்!
அனைத்து உலகங்களுக்கும் உயிர் கொடுப்பது உணர்வு எனும் மெய்ம்மையே!
மனித-உணர்வு ஒரு நதி என்றால் 'கடவுள்' எனும் பேருணர்வு மகாசமுத்திரம்!
குறிக்கோள், நோக்கம், இலக்கு பற்றிய உண்மை
-----------------------------------------------------------
எலிகளைப்போலவே உங்களுக்கும் பிரத்யேகக் குறிக்கோள் எதுவுமில்லை!
குறிக்கோள் இல்லையென்றால் இலக்கு பற்றிய பேச்சுக்கு இடமேது?
ஆயுள் முழுவதும் அன்றாடச்சுற்று எனும் சுழலில் சிக்கி உழலும் உங்களுக்கு
இப்பதிவுகள் ஒரே பல்லவியைப் பாடுவதாகத்தெரிவது ஆச்சரியமே!
அறம், பொருள், இன்பம், வீடு பற்றிய உண்மை
-----------------------------------------------------------
அறம் என்பது சுமுகமான சமூக இயக்கத்திற்கான மசகு எண்ணெய் அல்ல!
பொருளும், இன்பமும் நீ உயிரோடிருக்கும்வரை மட்டுமே உதவக்கூடும்!
மனிதா! வீடுபேறு மட்டுமே இம்மையிலும், மறுமையிலும் தரும் மகாசுகம்!
அஞ்ஞானிகளும், விஞ்ஞானிகளும் இம்மையை மட்டுமே வாழ்கிறார்கள்
ஞானிகளோ மும்மைகளைக் கடந்த உண்மையை இப்போதே வாழ்கிறார்கள்!
தியானம், பயிற்சி, முயற்சி பற்றிய உண்மை
-----------------------------------------------------------
கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்து கொண்டே உறங்குவதல்ல தியானம்!
கண்களுக்குப்புலப்படாத மெய்ம்மைகளைத் தரிசிக்கும் ஆழ்நிலை சஞ்சாரம்!
ஞானிக்கு காலம் ஏது? ஏனெனில், இப்போதில் காலம் என்பதில்லை!
"இப்போது" என்பதே ஞானியின் வீடு! காலம் அவன் காலாற உலவும் வீதி!
மனிதன் தன்னை முழுமையாக வந்தடையும் வரை உலகம் தேவை!
உலகம் என்பது தன்னைத்தானே ஏறிக்கடந்திடும் ஒரு பரிணாம ஏணி!
மனிதன் தன்னைத்தானே கடக்க வேண்டிய அந்த ஏணியின் உச்சிப்படி!
தினமும் செக்கிழுப்பதனால் மாட்டிற்கு சொர்க்கத்தின் கதவுகள் திறக்குமெனில்
மனிதா நீயும் அறிந்தவற்றைப் பயிற்சி செய்து அறியாததை அடையலாம்!
உன் ஆழ்மனத்தின் விருப்பங்கள் உலகப்பொருட்களைப் பற்றியதாயிருப்பின்
உன் மேல்மனத்தின் விருப்பங்களும் முயற்சிகளும் விழிப்பதற்கு உதவுமா?
வட்டம் வரையும் உங்களது முயற்சிகள் எப்போதும் சதுரத்திலேயே முடியும்!
வாழ்வு, மரணம், பெருவாழ்வு பற்றிய உண்மை
-----------------------------------------------------------
இவ்வுலகம் மரணத்தின் வீடு, இங்கே நிரந்தரமாக வாழ்ந்தவர் எவருமில்லை!
இவ்வுலக வாழ்க்கை என்பது நித்திய வாழ்வுக்கான ஒரு பயணவழி மட்டுமே!
இவ்வுலகுடன் மனிதனுக்குள்ள தொடர்பு அவன் ஒரு வழிப்போக்கன் என்பதே!
மனிதவாழ்க்கை எனும் பயணம் புதுமையானது, உண்மையை அறிவதே அது!
உண்மையே மரணமிலா பெருவாழ்வின் வீடு, அதுவே அவனது அசலான வீடு!
மா.கணேசன்/ நெய்வேலி/ 14-08-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment