
எவ்வளவு தெளிவாக எடுத்துச்சொன்னாலும்
எத்தனை முறை சொன்னாலும் தவளைக்கு
சீவிதம் கடந்த வாழ்க்கை புரிபடுவதேயில்லை!
எவ்வளவு முயன்றாலும் ஓணான்களையும்
அரணைகளையும் திசைப்படுத்தவோ
நெறிப்படுத்தவோ முடிவதில்லை!
மனித நிலை எத்தகையதென குரங்குகளுக்குச்
சொல்லிப் புரிய வைக்க முடியுமெனில்
ஒரு வேளை, புத்த நிலையை மனிதனுக்குச்
சொல்லிப்புரிய வைத்திட முடியலாம்!
கிளிப்பிள்ளைகள், அர்த்தம் தெரியாவிட்டாலும்
சொல்லிக்கொடுத்தவைகளை அப்படியே திரும்பச்
சொல்லும்! அவைகளுக்கு ஞாபகசக்தி இருந்தால்
மனிதர்களைப்போல் திருக்குறள் முழுவதையும்
அப்படியே ஒப்பிக்கும்! ஆனால் என்ன, அவைகளுக்கு
மனிதர்களைப்போல மேற்கோள் காட்டத் தெரியாது!
மனிதர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் வித்தியாசப்பட
விரும்புகின்றனர்! ஆனால், எவரும் அசலாக
ஆகவேண்டுமென விரும்புவதில்லை!
அசலுக்கும் மேலோட்டமான வித்தியாசத்திற்கும்
உள்ள வித்தியாசம் ஏனோ அவர்களுக்குப் புரிவதில்லை!
கேவலம், பணம், சொத்து, இவற்றின் அளவு மனிதர்களை
வித்தியாசப்படுத்திடுமா? அப்படியானால், மனிதர்களின்
உள்ளார்ந்த மதிப்பு தான் என்ன?
நகல் செய்யும் குரங்கு புத்தி உள்ளவரை மனிதர்களுக்கு
தம் அசலான (தனித்) தன்மையை அறியும் வாய்ப்பில்லை!
புறக்கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டுள்ளவரை அற்பனின் கண்களுக்கு
அகத்தின் ஆழத்திலுள்ள பொக்கிஷங்கள் தெரிவதில்லை!
மேலும், மனிதர்களுக்கு பொருட்களின், சாதனங்களின் தரத்திற்கும்
வாழ்க்கையின் தரத்திற்கும் உள்ள வித்தியாசமும் தெரிவதில்லை!
வீட்டின் உள்-அலங்காரம் மனிதனின் நேர்த்தியைக் கூட்டுவதில்லை!
மனிதர்களின் மனங்கள் உலகியல் குப்பைகளால் நிரம்பிவழிகின்றன!
உணவு, உணவுக்காக உத்தியோகம், அர்த்தமின்மை மறக்க உல்லாசம்!
இவ்வளவு தானே மனிதா உனது அன்றாடமும் மொத்த வாழ்க்கையும்?
சோறில்லாதவன் சோற்றுக்கும், வறியவன் செல்வத்திற்கும்
சமூக அங்கீகாரம் மறுக்கப்பட்டவன் ஒப்புதலுக்கும் ஏங்குகிறான்!
சமூகப் பொருளாதார மேம்பாடு அடைந்ததும் தேங்கிப்போகிறான்!
எவரும் விடுதலைப்படுத்தும் உயர்பேரறிவைத் தேடுவதில்லை!
கழுத்துவரை உலகியலில் மூழ்கியுள்ளவனின் ஆன்மீக ஈடுபாடு வீண்!
உலகியல் என்பதென்ன, அது உடல் எனும் விலங்கியலின் நீட்சி தானே!
ஆன்மீகம் என்பதென்ன, அது ஆன்மாவின் உயர்-உணர்வியல் தானே!
"மனிதன் உடலா? ஆன்மாவா?" என்பது பட்டிமன்றத் தலைப்பு அல்ல!
தன்னைக் கணக்கில் கொண்டுள்ள வரை ஒருவன் பூஜ்ஜியமே!
மனிதன் ஒரு உருப்படியல்ல, அவன் அனைத்துமான அனந்தன்!
ஒப்பீட்டளவில் சிறப்பானவன் ஒப்பிடவியலா சிறப்புக்கு அந்நியன்!
ஒப்பிட எவருமில்லையேல், மனிதா! உமது உண்மை நிலை என்ன?
அகந்தையற்றிருப்பது ஆசைகளற்றிருப்பது பற்றுக்களற்றிருப்பது
எண்ணங்களற்றிருப்பது என்பன பற்றியெல்லாம் அரற்றிக்
கொண்டிருப்பவனுக்கு உண்மையைப் பற்றுவதற்கு நேரமிருக்காது!
தன்னில் லயிக்கும் பயனற்ற பகுப்பாய்வு முடிவுறும்போது
உண்மையான தன்னையறிதல் தொடங்குகிறது!
உண்மையான மையம் பற்றிய விசாரம் தோன்றிடின்
அகந்தை-மைய-நோக்கு தாமே சுவடற்றுப்போகும்!
அகந்தை தோன்றாத நிலை விலங்கிற்குரியது!
அகந்தை இல்லையேல் மனிதன் இன்னொரு தவளையே!
அகந்தையில் தேங்கிடுபவன் அரை மனிதன்!
அகந்தையைக் கடந்திடுபவன் முழு மனிதன்!
உணர்வின் தொடக்கப்புள்ளிக்கு அகந்தை நிகரில்லா அழகு!
தொடக்கப்புள்ளி முற்றுப்புள்ளியாவதே பிரச்சினைக்குரியது!
அகந்தையற்றிருப்பது குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்!
அற்றிருப்பது, விடுவது, விலக்குவது, துறப்பது பற்றி வீணே பேசாதீர்!
மெய்ம்மை நாட்டம் கொள்ளுங்கள்! இறை நேசம் கொள்ளுங்கள்!
இறை, மெய்ம்மை, உண்மை இவை உமது துய்ப்புக்கான பண்டமல்ல!
இறையனுபவம் என்பது இறைக்கு இரையாவதன் அனுபவம் ஆகும்!
நதி கடலைக்கொள்ளாது, உமது சிற்றுணர்வு பேருணர்வைக் கொள்ளாது!
உமது சிற்றறிவுடன் பேரறிவு சேராது! ஆகவே பேரறிவை நாடிச் சேர்ந்திடு!
உண்மையை உடமை கொள்ளமுடியாது, உண்மையின் உடமையாகிவிடு!
மெய்ம்மையை வசப்படுத்தவியலாது, மெய்ம்மைக்கு உனை அர்ப்பணித்திடு!
மா.கணேசன்/ நெய்வேலி/ 11-08-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment