
வாசகர்களே, மிகவும் நேர்மறையான ஒரு பதிவிற்கு உங்களை
வரவேற்கிறேன்! வெகுகாலமாக உங்களிடம் உள்ள குறைகளைச் சொல்லியும்,
உங்களைக் குறை கூறியும், எனது பதிவுகளைப் பதிவேற்றம் செய்து
வந்துள்ளேன்! நீங்கள் எவ்வாறிருந்தாலும், நீங்கள் நீங்களாகவே இருப்பதில்
தான் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறீர்கள், திருப்தியடைகிறீர்கள்!
உங்களைப்பற்றி உங்களுக்கே எவ்வித அதிருப்தியும் இல்லாத நிலையில்
உங்களைக் குற்ற உணர்வில் ஆழ்த்துவதற்கு நான் யார்?
உங்களுக்கு நீங்கள் எவ்வளவு அற்புதமானவராக இருக்கிறீர் என்பது எனக்குத்
தெரியாமலில்லை! உங்களை ஆன்மீகத்தின் உச்சிக்குக் கொண்டு சேர்க்க
வேண்டுமெனும் எனது ஆர்வக்கோளாறினால் நான் எனது கறாரான
அளவுகோலைக்கொண்டு உங்களை அளந்து உங்களது போதாமையைச்
சுட்டிக்காட்டும் தவற்றைச் செய்து வந்துள்ளேன்! அது போகட்டும்! நீங்கள்
வாழும் அர்த்தமற்ற வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாயிருக்கும்
பட்சத்தில் உங்கள் வழியில் குறுக்கிட நான் யார்?
உங்களுடைய போதாமையிலும் நீங்கள்தான் எவ்வளவு முழுமையானவராக,
பூரணமானவராக உள்ளீர்! நீங்கள் எவ்வளவு மன்னிக்கும் குணம் உள்ளவராக
இருந்தால் உங்களுடைய அனைத்துத் தவறுகளையும், மதியீனங்களையும்
எவ்வளவு சுலபமாக மன்னித்து மறந்து விடுபவராக உள்ளீர்!
உங்களுடைய தாராள குணத்தைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை;
உங்களுக்குத்தான் நீங்கள் எவ்வளவு தாராளமாக யாவற்றையும் அள்ளிக்
கொடுத்துவிடுகிறீர்கள்! என்ன, அதிர்ஷ்டம் உங்களைப் பெரிய கோடீஸ்வரராக
ஆக்கிடவில்லை என்பதுதான் அதிர்ஷ்டத்தின் குறை! உங்களை நன்கு அறிந்த
சிலர் உங்களை கஞ்சன், கருமி என்றெல்லாம் சொல்வது உங்கள் மீதுள்ள
காழ்ப்புணர்ச்சியினால் தான் என்பதும் உங்களுக்குத் தெரியும்!
பொறாமையின் மொத்த உருவமாக நீங்கள் திகழ்ந்தாலும் அழகில் நீங்கள்
குறைந்தவரல்ல என்பது நீங்கள் எவ்வாறு உங்களை அலங்கரித்து அழகு
படுத்தி உள்ளூர மகிழ்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியுமே!
உங்களுடைய பேராசையைப் பொறுத்தவரை, வானமே எல்லை என்றுதான்
சொல்லவேண்டும்! உங்களுடைய சுயநலத்தைப் பற்றிச் சொல்லத்
தேவையில்லை; இந்த உலகில் எவர் தான் சுயநலமாக இல்லை?
சுயநலமற்றிருப்பதற்கு நீங்கள் என்ன, பிழைக்கத்தெரியாத காந்தியா,
புத்தரா, அல்லது யேசுவா?
அகந்தையின் சிகரமாக நீங்கள் இருந்தாலும் கற்றறிந்தோர் சபையில் நீங்கள்
எவ்வளவு அடக்கமாக ஒன்றும் தெரியாதவர் போல நிறைகுடமாக இருக்கிறீர்
என்பது எனக்கு மட்டுமே தெரியும்!
உங்களுடைய போலித்தனம் உங்களுடைய ஒட்டுண்ணித்தனத்தைப்போல
எவ்வளவு அசலானது! எவருமே அதை நகல் செய்யமுடியாது!
ஞானம், பக்குவம், தெளிவு, போன்று உங்களிடம் இல்லாத பண்புகளையும்,
அம்சங்களையும் உங்களிடம் இருப்பதாகக் கொள்ளும் விஷயத்தில் நீங்கள்
பிரமையின் எல்லை என்றால் அது மிகையாகாது! இன்மையின் பூரணம்
நீங்கள்! இருப்பின் சூன்யம் நீங்கள்! உங்களைப்பற்றிச் சொல்ல வார்த்தைகளே
இல்லை என்பதால் தானே நீங்கள் ஒரு ஊமையைப்போல அவ்வளவு
அமைதியாக உள்ளீர்!
உள்ளதைக்கொண்டு திருப்தியடையும் உங்களது பா(சா)ங்கு தான் என்ன!
ஆழமற்ற உங்களுடைய கொஞ்ச அறிவில் நீங்கள் கொள்ளும் நிறைவு பசிபிக்
கடலைவிட ஆழமானது!
மொத்தத்தில் நீங்கள் அனைவருமே மனிதருள் மாணிக்கமாக விளங்குவதால்
இப்பூமிக்கிரகமே சூரியனைப்போல பிரகாசிக்கிறது! உங்களில் எவரையும்
எவருடனும் ஒப்பிடவியலாத அளவிற்கு அனைவரும் ஒரே குட்டையில்
ஊறிய அற்புத மட்டைகளாய் உள்ளீர்!
மா.கணேசன்/ நெய்வேலி/ 23-08-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment