Tuesday, 22 August 2017

நோய்பிடித்த இனம்!




பூக்களைப் பறிக்காதீர், பூக்கள் தோட்டத்திற்கு அழகு!
புல்தரையில் நடக்காதீர்! புற்கள் ஆடு, மாடுகளுக்கு உணவு!
புல்தரைகளை அமைக்காதீர்! புற்களை சுதந்திரமாக வளரவிடுங்கள்!
இயற்கையில் வெட்டித்திருத்தப்பட்ட புல்தரைகள் எங்கேயுமுண்டா?
முதலில் உமது நோய்பிடித்த அழகியலை திருத்திக் கொள்ளுங்கள்!

தோட்டத்துச் செடிகளை, காட்டுச்செடிகளை மூலிகை என்றழைக்காதீர்!
அவை உங்களுக்காக இருக்கின்றன என்றால் நீர் எவருக்காக இருக்கிறீர்?
உம்மைப்போலவே ஒவ்வொரு உயிரினமும் தமக்காகவே வாழ்கின்றன!
சுய நலம் பீடித்த விலங்குகளா! நீவிர் எதற்கான மருந்தாகிறீர்?
நோய் பிடித்த மனிதர்களே, நீங்களே பூமியைப்பீடித்த பெருநோய்க்கிருமிகள்!
உம்மால் எதற்கும், யாருக்கும் எவ்வித உதவியும் பயனும் இல்லை!
முடிவில் மரணத்தில் முடிந்துபோகும் நீவிர் உமக்கும் பயனற்றவர்களே!

இவ்வுலகமும் அதிலுள்ள யாவும் உமக்காகப் படைக்கப்பட்டதெனில்
நோக்கம் கெட்ட மனிதர்களா, நீவிர் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளீர்?
உண்டு, உறங்கி, இனம்பெருக்குவதே உம்முடைய வாழ்வுமெனில்
அதற்கு புழுக்களும், பூச்சிகளும் போதுமே, இன்னொரு விலங்கு எதற்கு?

உடல் நலம் பேணுவது அவசியமே; ஆனால், மனித ஜந்துக்களைத் தவிர
வேறு எவ்வுயிரினமும் தம் உடல்நலம் குறித்து அலட்டிக்கொள்வதில்லை!
நோயுற்ற உடலோ, நோயற்ற உடலோ இரண்டுமே மரணத்திற்குட்பட்டதே!
மரணத்தில் முடிந்துபோகும் உடலின் நலத்தைவிட ஆன்மநலமே முக்கியம்!
ஆகவே ஆரோக்கியம் பற்றியல்லாமல் ஆன்மாவைப்பற்றி அக்கறைப்படுங்கள்!
ஆன்மாவாய் மலர்வதிலேயே மரணம் கடந்த பெருவாழ்வு அடங்கியுள்ளது!

உடலைப் பீடிக்கும் நோய்களைப் பற்றி அரற்றும் அறிவிலிகளா!
"உடலே நோய்!" என்று சொல்லப்பட்டிருப்பதை நீவிர் அறியவில்லையா?
உடலிலிருந்து விடுதலை பெறும் ஞானத்தைப்பெறுவதே ஆன்மீக வாழ்க்கை!
அதற்குமுன் உமது மனத்தைப் பீடித்துள்ள நோய்களை அகற்றுங்கள்!

"உணர்வின்மை" என்பது தான் உம்மைப் பீடித்த மூலமுதல் மனநோய்!
பிற நோய்கள் யாவும் உணர்வின்மையைப் பின்பற்றி வருபவையே!
உணர்வின்மைக்கு மருந்து இல்லை; ஆனால், மருத்துவர்கள் இருக்கின்றனர்!
ஞானிகளே அந்த மருத்துவர்கள்! அவர்களது நல் உபதேசங்களே தீர்வு!
அவற்றை முறையாகப் பின்பற்றினால் உமது பிறவி நோய் தீரும்!

உணர்வின்மையை தொடர்வது சுயநலம் எனும் சுயம்-அழிக்கும் நோய்!
அடுத்தது ஆணவம், அதையடுத்து பொறாமை, பேராசை, தற்பெருமை
சுய-முக்கியத்துவம், சோம்பல், போலித்தனம் ஆகியவை தொடர்கின்றன!
பொதுவாக மன-நோயை மட்டுமே நீவிர் பைத்தியநிலை என அறிகின்றீர்!
ஆனால், சுயநலம், ஆணவம், பொறாமை, தற்பெருமை, பேராசை
போலித்தனம் போன்றவையும் மனநோய்களே, பைத்திய நிலைகளே!

எவையெல்லாம் மனித உணர்வை உயரவிடாமல், மட்டுப்படுத்துகின்றனவோ
அவையெல்லாம் மன-நோய்களுக்கான  விஷ வித்துக்களே!
சுருங்கச் சொன்னால், மெய்ம்மை நாட்டம் கொள்ளாத எவரும் பைத்தியமே!
எதற்காக வாழ்கிறோம் என்பதை அறியாத ஒருவரை வேறு என்ன சொல்ல?

மேலும், மனிதன் ஒரு விலங்கு அல்ல! ஆயின், வாழ்வின் அர்த்தமறியாது
வாழ்பவர்களுக்கும் விலங்குகளுக்கும் பெரிதாக வித்தியாசம் எதுவுமில்லை!
மனிதவாழ்வின் தலையாய அம்சங்கள் இரண்டே இரண்டு மட்டுமே!
அவை, வாழ்வின் அர்த்தம் மற்றும் வாழ்வின் குறிக்கோள் பற்றியவையே!
இவ்விரண்டையும் அறிவதைத்தவிர்த்த பிறசெயல்கள் பிழைப்புக்கானவையே!
பிழைப்பு வேறு, வாழ்க்கை வேறு என்பதை எப்போது நீர் அறியப்போகிறீர்?
மூடர்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் மூடர்களாகவே இருப்பர்!

ஏழு மலைகள், ஏழு கடல்கள் தாண்டி அங்கோரிடத்தில் ஒரு செடி உள்ளது!
அதன் மலரைத் தின்றால் இறப்பு என்பது ஒருபோதும் உங்களுக்கு நேரிடாது!
என்று யாராவது சொன்னால் உடனே அந்த அற்புதச் செடியை தேடிச்செல்வீர்!
ஆனால், இறவாமல் வாழ்வதற்கும் கூட ஒரு காரணம், இலக்கு வேண்டும்!
ஏனெனில், அர்த்தமில்லாத வாழ்க்கை மரணத்திற்கு ஒப்பானதாகும்!
ஆயின், உண்மையில் சாகா நிலையைத்தரும் அற்புத மலர் ஒன்று உள்ளது!
அதற்கு நீர் ஏழு மலைகளையும், கடல்களையும் தாண்டவேண்டாம்!
உமது அகந்தையைத் தாண்டினால் போதும்! நீர் ஆன்மாவாய் மலர்ந்திடுவாய்!

பிரதானமாக நீர் மதிப்பது பணத்தையும்,பொன்னையும்,பொருளையும் தானே?
உடமைகளால் உம்மை ஸ்தாபிக்கும் நீர் மரணத்தின் உடமையே அல்லவா?
வாழ்வின் அசலான இலக்கை அறிய நேரமில்லாமல் நீர் வாழ்வீரெனில்
ஏற்கனவே நீர் மரணத்தை உம்முடைய இலக்காகத் தேர்ந்துவிட்டவராகிறீர்!
உண்மையை அறிவீர்! வாழ்வின் முடிவிடம் மரணமல்ல, நித்திய வாழ்வே!

இவ்வுண்மைகள் வழக்கத்திற்கு மாறானவை, ஆகவே உமக்குக் கசப்பானவை!
ஏனெனில், அசலான வாழ்க்கை உமது வழக்கத்திற்குள் அடங்குவதில்லை!
இப்பதிவுகள் எல்லோருக்குமானவையே என்றாலும் என்ன செய்வது?
சிரத்தை கொண்டு புரிந்துகொள்பவர்களுக்கே இவை முதலில் உரித்தானவை!

அசலான வாழ்க்கையைப் பொறுத்தவரை நீவிர் அனைவரும் அந்நியர்களே!
அடிப்படைத்தேவைகளை வாழ்க்கையாகக் கொண்ட நீர் அடிப்படைவாதிகளே!
வீண் பகட்டுக்களையும் ஆடம்பரங்களையும் மோகிக்கும் நீர் வீணர்களே!

உம்முடைய அற்ப சந்தோஷங்களையும், சொந்த சோகங்களையும் விடவும்
அதிமுக்கியமான அம்சங்கள் இப்பிரபஞ்சத்தின் உச்சியில் உள்ளன!
தமது சொந்த விருப்பங்களையும் உணர்வுகளையும் கருத்துகளையும் கடந்து
மெய்ம்மையை நேசிப்பவனே உணர்வின் உச்சத்தை அடைகிறான்!
இன்பம் துன்பம் இரண்டையும் கடந்து மெய்ம்மையை நாடுபவனுக்கே
ஞானப்பொக்கிஷங்கள் அடங்கிய மாளிகையின் கதவுகள் திறக்கின்றன!


மா.கணேசன்/ நெய்வேலி/ 18-08-2017
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...