Friday, 11 August 2017

உலகின் மறுபக்கம்!



                      

                                           எச்சரிக்கை!
          திறந்து பார்க்கக்கூடாத பொக்கிஷப்பேழை இது!
          திறந்து பார்த்தபின் வாளாவிருப்பது ஆபத்து!
          இவ்வரிகளை அடியொற்றி வாசிப்பதாயிருப்பின்
          வாசித்ததை சிந்தித்துப் புரிந்துகொள்வதாயிருப்பின்
          அப்புரிதலை கவனத்துடன் கையாள்வதாயிருப்பின்
          மட்டுமே வாசிக்கவும்! ஏனெனில், புரிதலுக்கு இட்டுச்
          செல்லாத சிந்தனையும், சிந்தனைக்கு இட்டுச்செல்லாத
          வாசிப்பும் பயனற்றது! வழியறியாதிருப்பது அறியாமை;
          வழி தெரிந்தும் பயணிக்காமல் இருப்பது கயமை!
          இலக்கறியாத வாழ்வு அர்த்தமற்ற வீண் சுமை!


ஒவ்வொரு பொருளுக்கும் மறுபக்கம் ஒன்றும் உள்ளது!
ஒரு தாளுக்கு, ஒரு வீட்டிற்கு, ஒரு மனிதனுக்கு!
வானத்தின், அல்லது இவ்வுலகின் மறுபக்கம் எது?
ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் மறுபக்கத்தில் என்ன உள்ளது?
என்பதை அறியாமல் இவ்வுலகைப் புரிந்து கொள்வதியலாது!

இவை வெறும் கவிதை வரிகளோ, தகவல் துணுக்குகளோ அல்ல!
ஒவ்வொரு வரியின் கோரிக்கையை முழுமையாக நிறைவேற்றாமல்
அது ஒரு கேள்வியாயின் அதற்கான பதிலைக் கண்டுபிடிக்காமல்;
அது ஒரு பதிலாயின் அதன் உணர்த்துதலைச் செயல்படுத்தாமல்;
அது ஒரு பாதையைச் சுட்டுவதாயின் அதில் இறங்கிப்பயணிக்காமல்;
அது ஒரு விதியாயின் அதை பூரணமாகக் கடைப்பிடிக்காமல்
அடுத்தடுத்த வரிகளுக்குச் செல்வது முறையான வாசிப்பு ஆகாது!

உலகின் இந்தப் பக்கத்தைப் பற்றிய அறிவு அவசியம்!
ஆயின் அதன் மறுபக்கம் பற்றிய அறிவே இறுதியானது!
ஏனெனில், மறுபக்கம் இல்லாமல் இப்பக்கம் இல்லை!
மறுபக்கம் பற்றி ஆர்வம் கொள்பவன் ஆசிர்வதிக்கப்பட்டவன்!
அவன் ஏற்கனவே விலங்கு நிலையைக் கடந்திட்டவன்!

உலகின் இருப்பை அறிவது அறிவின் ஆரம்பம்!
உலகின் மறுபக்கத்தையும் அறிவது அறிவின் முழுமை!
இப்பிரபஞ்சத்தைப் பற்றிய அனைத்துக்கேள்விகளுக்குமான
விடைகளும், அனைத்துச் சிக்கல்களுக்குமான தீர்வுகளும்
பிரபஞ்சத்தின் மறுபக்கத்திலேயே உள்ளன!

பிரபஞ்சத்தின் ஒரே விழைவு தன் மறுபக்கத்தைத் தரிசிப்பதே!
ஆகவே, அது தன்னைத்தானே திரும்பிப் பார்க்கும் முயற்சியில்
சுழன்று சுழன்று வெளி-உள்ளாகத் திரும்பி மனிதனாகியுள்ளது!

பிரபஞ்சத்தின் மறுபக்கத்திற்கான வாசல் எது? அது எங்குள்ளது?
மனிதனிடமே உள்ளது, மனித உணர்வே அந்த வாசல்!
மனித உணர்வின் நோக்கம் உலகின் மறுபக்கத்தை அடைதலே!
அதற்கு மனிதன் தன்னுணர்வின் மறுமுனையை அடையவேண்டும்!
இதற்கு மாறாக, உலகியலில் உழன்று முடிவில் மாண்டுபோவது அல்ல!
வாழ்வின் உன்னதம் பிரபஞ்சப் புதிரை விடுவிப்பதில் உள்ளது!
மாறாக, இங்கே குந்தித்தின்று குப்பை கொட்டுவதில் இல்லை!

பிரபஞ்சத்தின் மறுபக்கம் முற்றிலும் இப்பக்கத்திலிருந்து வேறானது!
இப்பக்கம் பன்மையின் உலகம் எனில் அப்பக்கம் ஒருமையினுடையது!
அதில் சிறிதும் இப்பிரபஞ்சத்தின் சாயலை நீங்கள் காண முடியாது!
விருட்சத்தின் சாயலை நீங்கள் வித்தினுள் காண முடியுமா என்ன?
ஏனெனில் சாரத்தில் உட்கூறுகளுக்கும், பகுதிகளுக்கும் இடம் ஏது?
விருட்சத்தின் மறுபக்கம் வித்து எனில் பிரபஞ்சத்தின் மறுபக்கம் கடவுள்!

வித்து என்பது விருட்சத்தைக் கட்டமைக்கும் அறிவல்லாமல் வேறென்ன?
வித்து விருட்சமாவதெதற்கு, எண்ணற்ற வித்துக்களை விளைவிக்கத்தானே!
வித்து இல்லாமல் விருட்சமில்லை, கடவுள் இல்லாமல் பிரபஞ்சமில்லை!
வித்துடைய கனியே விருட்சத்தின் மூலத்திற்கான அத்தாட்சியாகும்!
ஞானமடைந்தவனே பிரபஞ்சத்தின் மூலத்திற்கான சாட்சியும் நிரூபணமும்!

தீவுபோல் தனித்தனியாக இருப்பதால் நீங்கள் தனிமனிதர்கள் அல்ல!
பிரபஞ்சத்தின் ஒருமையாய் எழுபவன் மட்டுமே (தனி)மனிதனாகிறான்!
பிறர் யாவரும் உள்பொதிவு செத்த மானிடப் பதர்களே யாவர்!
உணர்வின் தொடக்க முனையில் உங்களுக்குப் பெயர் மனிதன்!
அதே உணர்வின் இறுதி முனையில் உங்களுக்குப் பெயர் இறைவன்!
ஆகவேதான் நீங்கள் "கடவுளின் சாயல்" என்றழைக்கப்படுகிறீர்கள்!
சாயலிலிருந்து அசலாக நீங்கள் மாறும்வரை கடவுள் கடவுளாவதில்லை!
கடவுளைக் கடவுளாக்கும் வரை நீங்களும் முழுமையடைவதில்லை!

'மனிதன்' என்பது கடவுளைப்போலவே உள்ளீடற்ற ஒரு சொல் மட்டுமே!
அவனது புற வடிவமோ, பேசும் திறனோ, பகுத்தறிவோ அல்ல மனிதன்!
மனிதன் என்பவன் உலகின் சாரத்தை பிரித்தெடுக்கும் ஒரு அபூர்வப் புனல்!
அப்புனல் வழியே அவன் தன்னையும் வடிகட்டி தன் சாரத்தை அடைகிறான்!
உலகம், மனிதன், பிரபஞ்சம் மொத்தத்தின் ஒருமை தான் கடவுள்!

மனிதனை மனிதஜீவி என்றழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை!
"மனிதஜீவி" என்பதிலுள்ள ஜீவியைக் கடந்திடுபவனே மனிதனாகிறான்!
ஜீவி என்பது வெறுமனே உயிர்ஜீவிக்கும் ஒரு விலங்கைக் குறிக்கிறது!
உடலுக்கு உணவிட்டு, தான் அறிவை உண்டு வாழ்பவனே மனிதன்!
உலகையும், தன்னையும், அனைத்தையும் பற்றிய இறுதி அறிவே கடவுள்!

உலகிற்கும் உலகைப்பற்றிய அறிவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
உலகைவிட உலகைப்பற்றிய அறிவே அடிப்படையானது, சாசுவதமானது!
உலகம் என்பது பேரறிவின் விசேட உருமாற்றம் அல்லாமல் வேறென்ன?
உலகிலுள்ள அனைத்தும், ஒட்டு மொத்த உலகமும் அழிந்துபோகலாம்!
ஆனால், பேரறிவு மீண்டும் எண்ணற்ற உலகங்களாக எழுந்திடக்கூடும்!

உலகை அறிந்து அதன் சாரத்தைக் கிரகித்தபின் உலகம் வெறும் சக்கையே!
அறிதல், தெளிதல், புரிதல் என்றால் என்னவென்று எண்ணுகிறீர்கள்?
அறியப்படும் பொருளை உணர்வில் கரைத்துச் செரித்து தன்வயமாக்குதலே!
தன்னையறிதலில் தானும் கரைந்து முடிவில் மிஞ்சுவது பேரறிவு மட்டுமே!
மலை, பள்ளத்தாக்கு, சமவெளி, காடு, நாடு, நகரம் யாவற்றையும் கடந்து
கடைசியாகத் தன்னையும் கடக்கும் நதி சேர்வது சமுத்திரமே!

மனிதா!  உன் வாழ்க்கையின் லட்சியத்தை இவ்வுலகில் தேடாதே!
உன் ஆன்மாவைத் திருப்தி செய்கிற பொருள் எவ்வுலகிலும் கிடையாது!
மனிதா! நீ தேனும் அடையுமாக, சாரும் சக்கையுமாக இருக்கிறாய்!
ஆகவே நீ உன்னிலிருந்து உனது சாரத்தைப் பிரித்து அறிந்திடுவாயாக!
உயிர் உன்னைக் கைவிடுவதற்குள் உடலிலிருந்து உன்னைப் பிரித்திடு!
மனிதா! உணர்வாகிய நீ உடலின் அடிமைச் சேவகனாக வாழ்கிறாயே!
சக்கையின் வாழ்வை விட்டு சாரத்தின் வாழ்வை நீ வாழ்வதெப்போது?

தயவுசெய்து மறுபக்கம் பார்க்கவும்!

மா.கணேசன்/ நெய்வேலி/ 30-07-2017
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...