
நான் உனக்கு நண்பனோ, இல்லையோ
அதைவிட்டுத்தள்ளு!
நீ உனக்கு நண்பனா? எதிரியா?
என்பதை முதலில் கண்டுபிடி!
<>
உன்னுடைய எதிர்மறைக்கூறுகளை
எண்ணிக்கொண்டிராதே!
ஆயிரம் விரல்கள் போதாது!
முடிவில்லாமல் அது போய்க்
கொண்டேயிருக்கும்!
ஆகவே, உனக்கு எதிரான திசையில்
நீ பயணித்திடு!
அது தான் உனக்கு நல்லது!
<>
உனது இருப்பை, எதையோ
அல்லது எவரையோ
எதிர்ப்பதிலிருந்து
கட்டியெழுப்பாதே!
பிறகு உனது வாழ்க்கை
எதிர்வினைகளின் சங்கிலித்
தொடராகிவிடும்!
ஆகவே, வாழ்க்கைக்கு மட்டும்
பதிலளித்திடு!
நீ வேறு எதற்கும் எவருக்கும்
பதில் சொல்லக்
கடமைப்பட்டவனல்ல!
<>
உங்களில் அநேகருக்கு
பிழைப்புக்கும், வாழ்க்கைக்கும்
வித்தியாசம் தெரியவில்லை!
ஆகவேதான் நீங்கள்
சமுதாயத்தின் வழிகளையும்
விதிகளையும் பின்பற்றுகிறீர்கள்!
நான் வாழ்க்கையை நேசிக்கிறேன்!
ஆகவே, நான் வாழ்க்கையின்
விதிகளையே பிரதானமாகப்
பின்பற்றுகிறேன், அதையே நான்
உங்களுக்கும் சொல்லுகிறேன்!
<>
உன்னுடைய தேக்கத்திற்கும்
வளர்ச்சியின்மைக்கும், தோல்விக்கும்,
வெளியே எவரையோ காரணமாகச்
சுட்டும் வரையில் உனக்கு
விடுதலை இல்லை!
உனது கடமையிலிருந்தும்
பொறுப்பிலிருந்தும் நழுவுவதற்கு
எவரையோ பொறுப்பாக்குகிறாய்!
யாரோ உனக்கு எதிராகச்
சதி செய்கிறார்கள், உனது
முன்னேற்றத்தைத் தடுக்கிறார்கள்
என்று பழிகூற ஒருவனைக்
கொண்டிருக்கும் வரை
நீ வளர்வதில்லை, வாழ்வதில்லை!
<>
நீ உன்னுடைய உண்மையான
எதிரியை அடையாளம் காணும்வரை
பொய்யான எதிரிகளுடன்
சண்டையிட்டுக்கொண்டு
சச்சரவில் ஈடுபட்டுக்கொண்டு
உனது நேரத்தையும், சக்தியையும்
வாழ்வையும் வீணே விரயம்
செய்து கொண்டிருப்பாய்!
<>
உன்னுடைய உண்மையான
எதிரிகள் அநேகர்.
அவர்கள் உனக்கு மிகவும்
நெருக்கமாக இருப்பதால் அவர்களை
அடையாளம் காண்பது சிரமம்தான்!
உனது கீழியல்புகள், இச்சைகள்,
துய்ப்புகள், பயம், சினம், பொறாமை
பேராசை, விருப்பு வெறுப்புகள்,
சோம்பல், சிந்தனையின்மை,
தந்திரபுத்தி, குறுக்குபுத்தி
சந்தேகபுத்தி, உடமை சுபாவம்,
சுய நலம், ஒட்டுண்ணித்தனம் . . . .
ஆனால், இவையெல்லாவற்றுக்கும்
மூலம் உனது உணர்வற்ற
தன்மையே, அகந்தையே, நீயே!
<>
பயணிக்க மனமில்லாதவன்
வழியைப்பற்றிக் கேட்காதிருப்பதே
நல்லது!
வழியைக் கேட்டறிந்த பிறகு
பயணிக்காதிருப்பது அதிகக்
கேடானது!
உனக்கு வழிகாட்ட முன் வந்தவனை
உதாசீனம் செய்யும் வகையில்
வழியைச் சொல்லவிடாமல்
வீணான விவகாரங்களை
கதைகளைப் பேசி
வீண் வாதம் புரியாதே!
<>
வழியைத் தேடுவதற்கு முன்னே
இலக்கை அடைந்தவர்கள் அநேகர்!
அடைந்தவர்களில் வழியை ஆராய்ந்து
அறிந்தவர் வெகு சிலரே!
வழியறியாது வாடியோர்க்கு
வழி காட்டியவர் அதில் சிலரே!
<>
பயண வழியில் பராக்கு பார்க்கிறவன்
சொந்த ஊர் போய்ச்சேருவதில்லை!
கவனத்தை ஈர்த்துச் சிதறடிக்கும்
நிகழ்வுகளை எட்டிக்கூடப்பார்க்காதே!
நீங்கா-நிறைவடைய நீ விரும்பினால் எந்த
விடுதியினுள்ளும் நுழையாதே!
முழுமையை நீ நேசித்தால் எந்த
மன்றத்திலும் அங்கத்தினராயிராதே!
முழு-விடுதலையை நீ விரும்பினால் எந்த
சங்கத்திலும் உறுப்பினராயிராதே!
அன்புள்ளவன் நீ என்றால் எவருடனும்
எதனுடனும் பந்தம் கொள்ளாதே!
உண்மையை நீ நேசித்தால் வழித்துணை
தேடாது தனியே பயணித்திடு!
<>
மனிதா,
சாக்குப்போக்குகளைச்
சொல்லி மனிதனுக்குரிய ஆன்மீகக்
கடமைகளைத் தவிர்ப்பதின்
வழியாக நீ உன்னை மனிதத் தரத்
திலிருந்து கீழிறக்கிக்கொள்ளாதே!
"நான் குடும்பஸ்தன், ஆகவே என்னால்
ஆன்மீகத்தில் ஈடுபடவியலாது!"
"என் மனைவி அனுமதிக்கமாட்டாள்!"
என்று ஏதேதோ காரணங்களைச்
சொல்லி உன்னை நீயே ஏமாற்றிக்
கொள்ளாதே!
நீ குட்டையோ, நெட்டையோ
கறுப்போ, வெளுப்போ
மணமானவனோ, இல்லையோ
குழந்தைகுட்டிகளைப்பெற்றவனோ
அல்லது மலடனோ
இளைஞனோ,முதியவனோ
இதுவோ,அதுவோ, எதுவாயினும்
நீ மனிதன் தானே?
சித்த சுவாதீனத்தை நீ இழக்காதவரை
மனிதனுக்குரிய இலக்கை அடைந்திட
நீ முயன்றிடு!
<>
'மனிதன்' என்றாலே
பிணைப்புகளற்றவன்,
'சுதந்திரன்' என்று அர்த்தம்!
இவ்வுலகிற்கு உன்னைக்கொண்டு
வந்த தாயுடனான தொப்புள் கொடிப்
பிணைப்பும் நீ பிறந்ததும்
அறுக்கப்பட்டு விடவில்லையா?
<>
நிறுத்துங்கள்! உங்கள் புகார்களைக்
கூறுவதற்கு முன் உங்கள் மீதான
புகார்களை யாரிடம் கூறுவீர்கள்
என்பதை முதலில் சொல்லுங்கள்!
நல்லது! உங்களுடைய அபிப்பிராயம்
சிறிதும் கலவாத உண்மை என்று ஏதும்
உங்களிடம் இருந்தால் முதலில்
அதைச் சொல்லுங்கள்!
பேசுங்கள்! ஆனால், பேச வேண்டும்
என்பதற்காக எதையாவது பேசாதீர்கள்!
நீங்கள் பேசாதிருந்தாலும் பொழுது
அதன் போக்கில் போகும்!
<>
அர்த்தம் தேடல், ஆன்மீக விசாரம்
உண்மை நாட்டம், மெய்ம்மை நாட்டம்
இறைக்காதல் . . .இவையெதுவும்
உங்களுக்கு ஏற்பட வாய்ப்பேயில்லை!
ஏனென்றால், நீங்கள் அகந்தையில்
அமிழ்ந்து திளைத்திருக்கும் வரை
இவையெதுவும் உங்களுக்குத்
தேவைப்படாது!
<>
உங்களுக்கு சொர்க்கமும் வேண்டும்
அகந்தையும் வேண்டும் என
விரும்புகிறீர்கள்!
முன்னதன் பிரமாண்டத்தையும்
பின்னதன் சிறுமையையும்
எவ்வாறேனும் ஒன்றிணைத்திட
முடியும் என நீங்கள் எண்ணுகிறீர்கள்!
<>
எவ்வொரு ஆன்மீகச் செய்தியையும்
உயர் உண்மையைப் பற்றியும்
நீ கேள்விப்படும் போதெல்லாம்
அவற்றைப் புகழ்ந்து போற்றுகிறாய்!
அவ்வழியே உன் அகந்தை தந்திரமாய்
தன்னையே மெச்சிக்கொள்கிறது!
அவ்வுண்மைகளை ஒருவாறு ஏற்று
அடைக்கலமும் அளிக்கிறாய்!
பூவுடன் சேர்ந்த நாராய் மணக்கிறாய்!
அகந்தையின் மேற்பார்வையில்
உனது ஆன்மீக வளர்ச்சியைக்
கொண்டுசெல்ல எத்தனிக்கிறாய்!
உன்னுள் உறையும் விதை முளைத்து
வேகமாக வளரத் தொடங்கியதும்
அவ்வளர்ச்சியின் ஆக்கிரமிப்பு கண்டு
அதிர்ச்சியடையும் அகந்தை அவசர
அவசரமாய் ஆன்மீகத்தைக் கைவிட்டு
ஆசுவாசமடைகிறது!
'அகந்தையின் உருமாற்றமே ஆன்மீக
வளர்ச்சி' என்பதை அறிந்ததும் நீ பெரும்
ஏமாற்றமடைகிறாய்!
<>
தான் மேற்கொள்ளாத ஆன்மீக முயற்சிகள்
யாவும் தோற்றுப்போனதற்கு, தானே காரணம்
என்று வெட்கமில்லாமல் அவமானப்பட்டு,
இல்லாத தன்மானத்தையிழந்து,
வெளிப்படையான தன் தவறுகளை
அறிக்கையிட்டு, பிறரிடம், "பாருங்கள்! நான்
எவ்வளவு உண்மையாக இருக்கிறேன்!" என்று
பாசாங்குகாட்டி, தன் போலித்தனத்தை மறைத்து
தன்னைத் தக்கவைத்துக்கொள்ளும் அகந்தை!
<>
எவ்வொன்றிலும் தனக்குச் சாதகமானதைத்
தேடிடும் அகந்தையால் உண்மையை மட்டும்
அப்படியே ஏற்றுக்கொள்ள முடியுமா என்ன?
உண்மையை தனக்குத் தகுந்தவாறு வளைத்து
நெளிக்க முடியாது என்று தெரிந்ததும் விட்டு
விடும் - தன்னையல்ல, உண்மையை!
<>
ஆன்ம-விசாரத்தின் குறிக்கோளைத்
தோற்கடிப்பதற்கான வழிகளையும்
உபாயங்களையும் அகந்தை தொடர்ந்து
கண்டுபிடித்த வண்ணம் இருக்கும்!
அதற்காக அது ஆன்ம-விசாரத்தில்
தீவிரமாக ஈடுபடுவதுபோல நடிக்கும்!
<>
தானதருமம், சமூக சேவை, நன்னடத்தை
நல்லொழுக்கம் . . ஆகியவை நல்ல அம்சங்களே!
ஆனால், அவை அகந்தையைச் சிறிதும்
மாற்றமுறச்செய்வதோ, உணர்வுகொள்ளச்
செய்வதோ இல்லை!
எது அகந்தையை விழிப்புறச்செய்கிறதோ
மேன்மேலும் உணர்வுகொள்ளச்செய்கிறதோ
அதுதான் எல்லாவற்றையும்விட மேலானது!
ஆனால், அப்படி யாதொரு அம்சமும்
அகந்தைக்கு வெளியே இல்லையாதலால்
அதைத்தேடுவது அர்த்தமற்றது!
<>
எல்லாவற்றுக்கும் நடுவே மிக
வித்தியாசமாய் விளங்கும் அம்சமான
அகந்தை உண்மையில் ஒரு ஆழமான
புதிராகும்!
தன்னைச்சுற்றிலுமுள்ள எதுவும் தன்னை
விளக்குவதில்லை, வெளிப்படுத்துவதில்லை
என்பதை அறியாதவரையில் தனது
முக்கியத்துவத்தை அது
அறிவதில்லை!
<>
நீ ஆன்மாவை அல்லது கடவுளைத்
தரிசிக்க ஆர்வம் கொள்வாயெனில்
முதலில் உன் அகந்தையைக் கீழிறக்கி
உன் அரியணையைக்காலியாக வைத்து
அதனருகே நீ அமைதியாக அமர்ந்திரு!
<>
எல்லாப்பிரமைகளுக்கும்
அடிப்படையாக அமைந்திருப்பது
'தான் ஒரு சாசுவதமான' நிஜம் என
பிரமைகளுக்குப் பின்னால் பதுங்கிக்
கொண்டிருக்கும் அகந்தை எனும்
மையப்பிரமை!
<>
தனது அறிவை, எண்ணங்களை
இப்படியும் அப்படியுமாக இடம்மாற்றி
இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சமாக
ஒழுங்குபடுத்தி,
இங்கு கொஞ்சம் குறைத்து அங்கு கொஞ்சம்
கூட்டி, . . .
உண்மையை வசப்படுத்திடலாம் என்கிற
போக்கு ஆன்ம-விசாரமாகாது!
<>
புத்தனின் போதனைகளும்
உன்னை விழிக்கச்செய்யாது!
இயேசுவின் அக்னி வசனங்களும்
உன்னை மனந்திரும்பச்செய்யாது!
ரமணரின் உபதேசங்களும்
உன்னை விசாரவழி செலுத்தாது!
பிரபஞ்ச உண்மைகள், மற்றும்
வாழ்க்கையின் உயர் உட்-பார்வைகள்
பற்றிய விளக்கங்களும்
உன் உணர்வை அசைக்காது!
உன்னுள் அவ்வப்போது எழும்
மரண-பயமும் உன்னை
உணர்வுக்குக் கொண்டுவராது!
என்றால், மரணத்தால் மட்டுமே
உன் அகந்தையை வலிய முடிவிற்குக்
கொண்டுவரமுடியும்!
<>
சொகுசும் சோம்பலுமான ஜீவிதத்தில்
பரிமாறும் தட்டுஉன்னருகே வந்ததும்
உள்ளவற்றில் பெரியதை சிறந்ததை
தேர்ந்தெடுத்து உண்டுக் களித்து;
எல்லாவற்றையும் மேம்போக்காகப்
பார்த்து, ரசித்து, விமர்சித்துச் செல்லும்
வாழ்வின் போக்கில் ஞானமும்,முக்தியும்
மோட்சமும் கூட தட்டில் வைத்து
உன்முன் நீட்டப்படலாம், நீயும் எடுத்துக்
கொள்ளலாம் எனக்காத்திருக்கிறாயா?
<>
உன்னாலேயே உன்னை ஒன்றும்
செய்ய இயலவில்லையெனில்
வேறு எவரும், ஏன் கடவுள் கூட
உனக்கு உதவ இயலாது!
<>
செங்குத்தான மலை தான்!
ஏறுவது கடினத்திலும் கடினம் தான்!
வாழ்வா, சாவா எனும் சவால் தான்!
வலியில்லாமல் பிரசவம் இல்லை!
உணர்வுக்கு வராமல் நீ மனிதனாவதில்லை!
அருள்,ஆசி,ஆன்மா, கடவுள், ஞானம், முக்தி
மோட்சம், மீட்சி . . . இவையெதுவும்
புறத்தே இல்லை!
மதிய உணவு கூட இலவசமாகக் கிடைக்கலாம்
இரட்சிப்பு இலவசமாகக் கிடைக்காது!
சுலபமான வழி, சுலபமான அருள்
என்பதும் இல்லை!
செங்குத்தான மலை மீது
சிரமப்பட்டு ஏறிச் சிகரம் அடைந்தால்
முக்தி நிச்சயம்!
மலையடிவாரத்திலேயே அமர்ந்து
வாளாவிருந்தால் சமாதி தான்!
<>
வழக்கத்தை மீறிய எதையும்
உன்னால் செய்யமுடியவில்லையா?
நல்லது, வழக்கமானவற்றை மட்டும்
ஏன் செய்கிறாய்? செய்யாதே!
அவற்றைச் செய்யச்சொல்லி எது
அல்லது யார் உன்னை வற்புறுத்துவது?
உண்பது ஒரு வழக்கம் என்றால்
வயிற்றைப் பட்டினி போடு!
தொங்கிய நாக்கை மறைத்துக்கொண்டு
நீயும் விருந்துக்குப்போக வேண்டாமே!
உறங்குவது ஒரு வழக்கம் என்றால்
உறங்காதிரு, உறங்கி எழுந்ததும் அப்படி
என்னத்தை நீ சாதிக்கப்போகிறாய்?
உறவுகொள்வது இயற்கைத் தூண்டுதல்
என்பதாகவே இருக்கட்டும்; ஆனால்
நீயே ஏன், எதற்காக இருக்கிறாய் என்பது
தெரியாத அபத்தத்துடன் மேலும்
அபத்தங்களைச் சேர்க்கும் இனவிருத்தி
அவ்வளவு அவசியமா?
உனக்கு நீயே உண்மையானவனாக,
உன்னுடன் இணக்கமாக இல்லாதபோது
நண்பர்கள் உனக்கு எதற்கு?
உன் நண்பர்களில் எத்தனை பேர் புத்தர்கள்?
சமுதாயம் ஒரு முகமூடி உற்சவம் என்பதால்
நீயும் முகமூடி தரித்துக்கொண்டாயா?
உன்னிடம் நீ கேட்டிருக்க வேண்டிய
இக்கேள்விகளுக்கான பதில்களையாவது
உன்னை நீயே ஏமாற்றிக்கொள்ளாமல்
உன்னிடம் நேர்மையாக அளித்திடு!
<>
அகந்தைக்குக் கீழான நிலையும்
அகந்தையைக் கடந்த நிலையும்
ஒன்றல்ல!
<>
மது, மாது, மதம், சாகசம், இலட்சியம்
இவை அகந்தையைத் தற்காலிகமாக
மறந்திருக்க உதவலாம்!
இவையெதுவும்
அகந்தையைக் கடப்பதற்கான சரியான
வழியாகாது!
<>
அகந்தையும் கடவுளும் சேர்ந்திருக்க
வியலாது!
உன்னால் கடவுளைக் கீழே உனது
மட்டத்திற்குக் கொணர்ந்திடவோ
அல்லது கடவுளின் மட்டத்திற்கு உனை
உயர்த்திக்கொள்ளவோ முடியாது!
அதே வேளையில்,
அகந்தையில்லாமலோ, அல்லது அதைச்
சுற்றிச்சென்றோ கடவுளை அடைய
முடியாது!
அகந்தையின் முழு 'நிலை-மாற்றமே'
கடவுள்!
<>
அகந்தையின் கதை:
மகாராஜாவின் வருகையை அறிவிக்க வந்த
தூதுவன் அவரைச் சிறையிலடைத்துவிட்டு
தனக்குத்தானே முடிசூடிக்கொண்டு
மகாராஜா போல ஆட்சி செய்து
கொண்டிருக்கிறான்!
<>
"நான்" என்ற முழக்கத்துடன் அகந்தை
உருவாகி வெளிப்பட்டாலும்;
தன்முனைப்பு, அகங்காரம், ஆணவம், கர்வம்
தாந்தோன்றித்தனம் . . . என்றெல்லாம்
இழிசொல்லுக்கு ஆளாகியுள்ள அகந்தை
உண்மையில் தன்னை முன்னிறுத்திடவுமில்லை!
தன்னைப் பிரதிநிதித்துவம் செய்திடவும் இல்லை!
மாறாக, அது தான் பிறந்த வீடாகிய உடலைத்தான்
'தான்' என்று தவறாக அடையாளப்படுத்திக்
கொண்டுள்ளது; உடலையும் அதன்
தேவைகளையும்தான் அது பிரதிநிதித்துவம்
செய்து வருகிறது!
அகந்தையின் ஒரேபெருந்தவறு அது இன்னமும்
தன்னைப் பற்றிய உணர்வுக்கு வரவில்லை!
தனது உண்மையான அடையாளம் குறித்த
கேள்வியை அது இன்னும் கேட்கவில்லை
என்பது மட்டும்தான்!
<>
அகந்தை மட்டும் தவறாக உடலுடன்
தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு
உடலின் தேவைகளைப் பிரதிநிதித்துவம்
செய்யாமல்;
தனது உண்மையான அடையாளம் குறித்த
கேள்வியை அது கேட்டிருந்தால்,
தன்னைப் பற்றிய உணர்வுக்கு வந்திருந்தால்
பூமி இந்நேரம் சொர்க்கமாகத் திகழ்ந்திருக்கும்!
நாம் எல்லோரும் கடவுளர்களாக ஆகியிருப்போம்!
<>
அகந்தையின் நிலை எவ்வளவு
பரிதாபகரமானது என்பதைப்பாருங்கள்:
'தான் யார்?', 'எதற்காக இருக்கிறோம்?'
என்பதெதையும் அறியாத உணர்வற்ற
'உடல்' எனும் ஒரு விலங்கின் முகத்தின் முன்
'நான்' என்று எழுதப்பட்ட ஒட்டுச் சீட்டாகத்
தொங்கிக்கொண்டிருக்கிறது!
<>
உனக்கு நீ நண்பனா அல்லது எதிரியா
என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பாய்?
நாற்பதைக் கடந்தும் இன்னும் உனது
வாழ்முறை மீது உனக்கு சிறிதும் அதிருப்தி
ஏற்படவில்லையா?
உன்னுடன் உனக்கு எவ்வித முரண்பாடும்
எழவில்லையா?
அப்படியானால் நிச்சயம் கூடவேயிருந்து
குழிபறிக்கும் எதிரியுடன் தான் நீ
வாழ்ந்துகொண்டிருக்கிறாய்!
இதற்குமாறாக, சதா உனது வழிகளை
விமர்சிப்பதும், உனது தவறுகளைச்
சுட்டிக்காட்டி எச்சரிப்பதுமான குரல்
ஒன்று உன்னுள் ஒலிக்கிறதா?
நிச்சயமாக உன் மீது அக்கறைகொண்ட
உற்ற நண்பன் உன்னுடன் இருக்கிறான்!
அவன் சொல்படி நடந்துகொள்வது
உனக்கு நல்லது!
<>
தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்:
அகந்தைக்கு தனி-இருப்பு கிடையாது!
நிரந்தரமற்றதற்கும், நிரந்தரமானதற்கும்
இடையே தொங்கிக்கொண்டிருக்கும்
ஒரு 'அரை-நிஜம்' தான் அகந்தை!
ஒன்று: அது நிரந்தரமற்ற உலகைச் சார்ந்த
மிகக் குறுகிய ஆயுளைக்கொண்ட உடலைச்
சார்ந்திருக்கலாம் - தற்போதிருப்பதைப்போல!
அல்லது: தன்னை விஞ்சிய அழிவில்லா
ஆன்மாவைச் சென்று சேரலாம்!
அழியக்கூடிய உடலையும் உயிரையும்
சார்ந்திருப்பதா?
அல்லது, அழிவில்லா ஆன்மாவின்
பாதுகாப்பான கரையைச் சேருவதா?
தெரிவு அகந்தையின் கையில்; காலம்
கடத்தாமல் உடனே முடிவெடுப்பது முக்கியம்!
<>
நீ சும்மா வெட்டியாக இருந்தாலும்
காலம் ஒரே சீராக நகர்ந்து கொண்டே
தான் இருக்கும்!
ஒவ்வொரு நொடியும் உன்னை
நோய், மூப்பு வழியாக மரணத்திற்கு
இட்டுச்செல்லும்!
<>
கண்டங்களின் நகர்வு
கண்ணுக்குத் தெரியாது!
கடல் மலைத்தொடராக
மலைத்தொடர் கடலாக
மாறிப்போகும்!
நாட்களின் நகர்வும்
அப்படித்தான்!
எத்தனையோ நூற்றாண்டுகள்
எத்தனையோ சாம்ராஜ்யங்கள்
எத்தனையோ தலைமுறைகள்
காணாமலேயே போயின!
<>
ஒவ்வொரு நொடியும்
வாழ்வை அல்லது சாவை
தேர்வு செய்வதற்கான நேரமே!
உணர்வை அல்லது உணர்வின்மையை
ஞானத்தை அல்லது அஞ்ஞானத்தை
நீ தேர்வு செய்யலாம்!
காலத்தில் பயணிப்பவன்அஞ்ஞானி!
காலத்தைக் கடப்பவன் ஞானி!
அடுத்தடுத்த நொடிகளை
தன் வழிப்படுத்திடும்
இந்த நொடி அதி முக்கியம்!
<>
தான் உருவாக்கிய கற்பிதங்களில்
கற்பனைகளில், உறவுப்பிணைப்புகளில்
அடையாளங்களில், மட்டுப்பாடுகளில்
தானே சிறைப்பட்டு அவஸ்தைப்படும்
அகந்தையால் தனது உருவாக்கங்களைக்
கலைக்க மனமில்லாமல் கலக்கமடைகிறது!
தானே கலைத்தால் அகந்தை மோட்சம் பெறும்!
மரணம் வந்து கலைத்தால் மொத்தமும்
மோசம் போகும்!
<>
தவிர்க்கவியலாதவை, அவசியமானவை
என்பதாகத் தோற்றம் தருகின்ற
மனித உருவாக்கங்களான குடும்பம்,
பந்தம், பாசம், சமுதாயம், தேசம், நகரம்
கல்வி, அரசியல், பொருளாதாரம்,
கண்டுபிடிப்புகள், சாதனைகள்,
வாழ்முறைகள், இலட்சியங்கள்,
மதிப்புகள், விழுமியங்கள் யாவும்
அகந்தையின் தவறான அடையாளப்
படுத்துதலின், மற்றும் தவறான
பிரதி நிதித்துவத்தின் விளைவுகளே
தவிர அவை எதுவும் மெய்ம்மைக்குத்
தொடர்புடையவை அல்ல!
அவையெல்லாவற்றிலிருந்தும் விடுபட
அசாதாரணமான எளிமையும்,
நுண்ணறிவும் விழிப்பு நிலையும்
வேண்டும்!
<>
நீங்கள் நீங்களாக இருப்பது
என்பது நீங்கள் விரும்பியபடி
இருப்பது அல்ல!
மற்றவர்களிடமிருந்து நீங்கள்
வித்தியாசமாய் இருக்கிறீர்கள்
என்பதும் அல்ல!
ஊரும் உலகமும் உங்களை
மெச்சிக்கொள்வதால் நீங்கள்
நீங்களாக இருக்கிறீர்கள்
என்று அர்த்தமல்ல!
உங்களுக்கு நேர்ந்த வாழ்க்கை
விபத்துகள் சாதகமாக அமைந்ததால்
உங்களை அதிருஷ்டசாலி என நீங்கள்
கருதுவதால் நீங்கள் நீங்களாக
இருப்பதாக அர்த்தமல்ல!
உங்களைப்பற்றி யாதொரு
கற்பிதமும், கருத்தாக்கமும்,பிரமையும்
வரலாறும் இல்லாதிருக்கும் போது
இருப்பீர்கள் நீங்கள் நீங்களாக!
<>
மரம் வேறாக, நீ வேறாக
பூமி வேறாக, நீ வேறாக
ஆகாயம் வேறாக, நீ வேறாக
நட்சத்திரங்கள் வேறாக, நீ வேறாக
பிரபஞ்சம் வேறாக, நீ வேறாக
இருக்கும்வரை நீ நீயாக
இருப்பதில்லை!
நீ வேறாக உண்மை வேறாக
நீ வேறாக முழுமை வேறாக
நீ வேறாக ஆன்மா வேறாக
நீ வேறாக கடவுள் வேறாக
இருக்கும்வரை நீ நீயாக
இருப்பதில்லை!
<>
உன்னை நீ எப்போது
உண்மையாகச் சந்திக்கிறாயோ
அப்போது நீ கடவுளைச் சந்திப்பாய்!
<>
மா.கணேசன்/ 18.05.2016
