
"இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்து போகையில் மீன்
பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்
னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில்
வலை போட்டுக் கொண்டிருக்கிற போது, அவர்களைக் கண்டு :
(மத்தேயு 4 :18)
என் பின்னே வாருங்கள், உங்களை
மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
(மத்தேயு 4 :19)
உடனே அவர்கள் வலைகளை விட்டு,
அவருக்குப் பின் சென்றார்கள்.
(மத்தேயு 4 :20)
அவர் அவ்விடம் விட்டுப்போகையில், வேறே இரண்டு
சகோதரராகிய செபதேயுவின் மகன் யாக்கோபும்,
அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன்
செபதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப்
பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக்
கண்டு, அவர்களையும் அழைத்தார்.
(மத்தேயு 4 :21)
உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும்
விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்.
(மத்தேயு 4 :22)
--+--
எப்படிப்பட்ட மனிதர் இந்த இயேசு! தமது அன்றாட ஜீவித்தலுக்
காக மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து, தன் பின்
னே வரும்படி அழைக்கிறார்! அதோடு,எப்படிப்பட்ட மனிதர்கள்
இந்த பேதுருவும், அந்திரேயா; யாக்கோபு மற்றும் யோவானும்!
அவர்களும் இயேசு அழைத்தவுடனேயே தமது மீன் பிடிக்கும்
வலைகளையும்,தங்கள் தகப்பனையும்,படகையும் விட்டுவிட்டு
இயேசுவின் பின்னே சென்று விடுகிறார்கள்!
சாதாரணமாக, நாம் நம் அன்றாட வாழ்வில், ஒருவர் முனைப்
பாக தனது தொழிலை, வேலையைச் செய்து கொண்டிருக்கும்
போது, அதை விட்டுவிட்டு வருமாறு நாம் அழைக்கமாட்டோம்.
மிகவும் அவசரமான, ஆபத்தான நிலைமைகள் ஏதுமிருந்தா
லொழிய, வேலை செய்து கொண்டிருக்கும் ஒருவரை அவ்
வேலையை நிறுத்திவிட்டு வருமாறு நாம் அழைக்கமாட்டோம்.
வேலை ஏதுமில்லாமல் சும்மா உட்கார்ந்திருப்பவரைத்தான் நம்
முடன் வருமாறு அழைப்போம்.
ஆனால், இயேசுவோ, பேதுரு, அந்திரேயா, யாக்கோபு மற்றும்
யோவான் ஆகியோரை தன் பின்னே வருமாறு அழைத்தார்.
அப்படி அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டு
விட்டு வருமாறு அழைப்பதற்கு என்ன அவசரமான, அதி முக்கி
யத்துவம் வாய்ந்த காரணத்தை இயேசுகொண்டிருந்தார்?
ஆம், பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, மற்றும் யோவான் ஆகி
யோரை அழைப்பதற்கான உண்மையிலேயே மிக அவசரமான,
அதிமுக்கியத்துவம் வாய்ந்த காரணம் இயேசுவிடம் இருந்தது!
இந்த அழைப்பு அவர்களுக்கு மாத்திரமானதல்ல! இன்று வாழ்
கின்ற நம் ஒவ்வொருவருக்குமே உரியதாகும்!
ஆம், "அறியப்படாத", "அசலான", "ஆழமான" வாழ்க்கையை
அறிந்து கொள்ளவும், வாழ்ந்திடவும் வேண்டி, 'அறிந்த', 'மட்டுப்
பாடான', 'மேலோட்டமான' அன்றாட வாழ்க்கையை விட்டு
விட்டு வரச் சொல்கிறார் இயேசு!
ஆகவேதான், இயேசு மீன் பிடிப்பவர்களாகிய பேதுரு, . . .முத
லானவர்களை நோக்கி, " என் பின்னே வாருங்கள், உங்களை
மனுஷரைப்பிடிக்கிறவர்களாக்குகிறேன்." என்றார். என்ன ஒரு
அருமையான, அதிரடியான அழைப்பு இது!
இந்த உலகில், மீன் பிடிக்கிறவர்கள் இருக்கிறார்கள்; பறவை
களையும், காட்டு விலங்குகளையும் பிடிக்கிறவர்களும் இருக்
கிறார்கள். இன்னும் பல்வேறு விதமான தொழில்களைச் செய்
கிறவர்களும் இருக்கிறார்கள். ஏன், பிள்ளை பிடிக்கிறவர்கள்
கூட இருக்கிறார்கள். இன்னும், 'கொத்தடிமைக்கு' ஆள்பிடிக்
கிறவர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால், 'மனுஷரைப் பிடிக்
கிறவர்கள்' இருக்கிறார்களா? மனுஷரைப் பிடிப்பதனால்
என்ன பயன்?
ஆம், மனுஷரைப் பிடிக்கிறவர்கள், மிக அரிதாக, இயேசுவைப்
போல மிகச் சிலரே இருக்கிறார்கள்! மீன் பிடிக்கிறவர்கள் மீன்
களைப்பிடித்து மனிதர்களுக்கு இரையாகும்படிவிற்கிறார்கள்.
ஆனால், மனுஷரைப்பிடிக்கிறவர், 'உலகியல்'எனும் சமுத்திரத்
தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மனுஷர்களைப்பிடித்து,
"கடவுள்' எனும் பாதுகாப்பான கரையில் சேர்ப்பிக்கிறார்! ஆம்,
'மனுஷரைப்பிடிப்பதே' இயேசுவின் ஆன்மீகப் பணியாகும்!
அனைத்துப்பணிகளையும்விட மனுஷரைப்பிடிக்கிறபணியே
மிக உயர்வானதும், உன்னதமானதுமான ஆன்மீகப் பணி
யாகும்! ஆகவே தான், இயேசு, "என் பின்னே வாருங்கள்,
உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்" என்று
பேதுருவிடமும், அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியோரி
டமும் சொன்னார். அதாவது, அவர்களை தமது "சீடர்களாக"
ஆக்கிடுகிறேன் என்பதும் அதில் அடங்கியுள்ளது!
உண்மையில், பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகி
யோர் மிகவும் எளிமையான, அருமையான மனிதர்களாக
இருந்திருக்கவேண்டும்! அதனால்தான், இயேசு அழைத்ததும்
அப்படியே அவர் பின்னே வந்துவிட்டார்கள். இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன் இவர்கள் வெறும் மீன் பிடிக்கிறவர்
களாக, குறிப்பாக, பகட்டும் ஆடம்பரமுமான பொருட்களிலும்
போலியான மதிப்புக்களிலும் தங்கள் மனதைப் பறி கொடுத்
திடாத சாதாரணர்களாக, ஊழலற்றவர்களாக இருந்திருக்
கிறார்கள்!
அதோடு, இயேசுவின் அழைப்பைக்கேட்டதும், அவருடைய
கண்களில் எதையோ பார்த்திருக்க வேண்டும்! இயேசுவின்
குரலில் மிகவும் உண்மையான, கம்பீரமான, மறுக்க முடியாத
ஒரு ஈர்ப்பை அவர்கள் உணர்ந்திருக்கவேண்டும்! அவையே
அவர்களை இயேசுவின் பின்னே செல்லுமாறு செய்திருக்க
வேண்டும்!
இன்று, இருபது நூற்றாண்டுகளுக்குப் பிறகு கிறித்துவமதம்
பல்வேறு பெயர்களில், பல பிரிவுகளாக உள்ளன. பல இலட்சம்
கிறித்தவர்கள் இருக்கின்றனர். எண்ணற்ற தேவாலயங்கள்
உள்ளன. போப்புகள், பிஷப்புகள், பாதிரியார்கள் உள்ளனர்.
ஆனால், இயேசு போன்ற ஒருவர் இல்லை. மீனவர்கள் இருக்கி
றார்கள்; ஆனால், பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான்
போன்றவர்கள் இன்று இல்லை.
அப்படியே, இயேசு நேரில் வந்தாலும் எவரும் அவர் பின்னே
செல்லமாட்டார்கள்!இன்னும், கிறித்தவர்கள் என்று சொல்லிக்
கொள்கிறவர்கள் கூட இயேசுவின் பின்னே செல்லமாட்டார்
கள்! ஏனெனில், கிறித்தவர்கள் அனைவருமே இலவசமாகவும்,
சுலபமாகவும், வலியின்றி, தங்கள் சிலுவையை எடுக்காமல்
அப்படியே ஆகாயத்தின் மத்தியிலிருந்தே தங்களை இரட்சித்
துக்கொள்ளக்கூடிய ஒரு இயேசுவுக்காக காத்துக்கொண்டிருக்
கிறார்கள்!
ஆம், கிறித்தவர்களுக்கு இயேசுவின் ஒரு வருகை, அதாவது
-முதல் வருகை- போதவில்லை! ஆகவே, அவர்கள் இயேசுவின்
"இரண்டாவது- வருகை" க்காகக் காத்துக் கிடக்கிறார்கள்!
ஆனால், உண்மையிலேயே இரண்டாவது முறையாக இயேசு
பூமிக்கு வந்தாலும், அவர் மீண்டும் பழைய பாடங்களிலிருந்தே
தொடங்குவார்! ஏனெனில், அவரது பாடங்கள், வாழ்க்கை
பற்றிய அவரது உட்-பார்வைகள், உண்மைகள், அவர் சொன்ன
உவமைக்கதைகள், நற்செய்திகள், அவற்றுடன் இணைந்த
நிபந்தனைகள் யாவும் மாறிடக்கூடியவை அல்ல!முக்கியமான
உண்மை என்னவென்றால், நாம் இன்னும் மாறவில்லை! கிறித்
தவர்கள் என்போர் இன்னும் மாறவில்லை! மனிதகுலம்
இன்னும் மாறவில்லை! ஏனெனில், அவரது உபதேசங்கள்
இன்னும் கடைபிடிக்கப்படவில்லை!முறையாக முழுமையாகப்
புரிந்து கொள்ளப்படவில்லை! இந்நிலையில், இயேசு மீண்டும்
வந்தால்,
"இன்னும் சிந்தியாமலும்,உணராமலும்
இருக்கிறீர்களா? இன்னும் உங்கள்
இருதயம் கடினமாயிருக்கிறதா?
(மாற்கு 8 :17)
என்று, தான் ஏற்கனவே சொன்ன வசனத்தையே மீண்டும்
சொல்ல வேண்டியிருக்கும்! இந்த நிலைமையில், தான் சொன்
னதையே திரும்பத்திரும்பச் சொல்வதற்காக இயேசு மீண்டும்
இன்னொரு முறை வர வேண்டுமா?
இயேசு மீண்டும் பூமிக்கு வந்தால், மீண்டும் அவர் கலிலேயாக்
கடலோரமாய் நடந்துபோய் அங்குள்ள மீனவர்களைத் தான்
அழைத்திடுவாரா? ஏன், அவர்கள் மட்டும் தான் மனிதர்களா?
வானளாவியகட்டடங்கள் நிரம்பிய நியூயார்க், லண்டன்,பாரீஸ்
நகரத்திற்குச்சென்று அங்குள்ள பெரியதொழிலதிபர்களையும்
மென்-பொருள் பொறியாளர்களையும், ஹாலிவுட் புள்ளிகளை
யும்; அல்லது நேரே வாடிகன் நகருக்குச்சென்று, போப் மற்றும்
பிஷப்புகள், கார்டினல்களையும் சந்தித்து, "என்பின்னேவாருங்
கள், உங்களை மனுஷரைப்பிடிக்கிறவர்களாக்குவேன்." என்று
அல்லது, "நீங்கள் போய், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து
பிரசங்கியுங்கள்" என்று சொல்லி அழைத்தால்,அவர்கள்எவரும்
இயேசுவின் பின்னே செல்வார்களா? அல்லது, நாம்தான்அவரது
அழைப்பை மதித்து ஏற்று அவர் பின்னேசெல்வோமா? முதலில்
'கிறித்தவர்கள்' என்று சொல்லிக்கொள்கிறவர்கள் கூட செல்ல
மாட்டார்கள்!
ஏன், இயேசு நேரில் வந்து அழைத்தால் தான் அவர் பின்னே
செல்லவேண்டுமா? இயேசுவின் பின்னே செல்வது என்றால்
என்ன?
"ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது
ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச்
சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும்
ஜீவனாயும் இருக்கிறது."
(யோவான் 6 :63)
என்று, இயேசு சொல்லியிருக்க வில்லையா? இயேசுவின்
வசனங்கள் தான் நம்மிடம் "புதிய ஏற்பாடு" புத்தகத்தில் உள்ள
னவே! "ஆவியாயும் ஜீவனாயும்" இருக்கிற அவரது வசனங்கள்
போதாதா? அவ்வசனங்களைப் புரிந்து கொண்டு கடைப்பிடித்
தால் நாம் கடைத்தேற மாட்டோமா? இயேசு இன்று இப்பொழுது
இல்லையா?
இயேசு மீண்டும், மீண்டும், மீண்டும் வர வேண்டுமா? அப்படியே
அவர் வந்தாலும் அவருடன் செல்ல எந்த விதத்தில் நாம் ஆயத்த
மாயிருக்கிறோம்? அவருடைய உபதேசங்களில் ஒன்றையாவது
உருப்படியாகக் கடைப்பிடித்திருக்கிறோமா?
மாறாக , "இயேசுவை நான் என் சொந்த இரட்சகராக ஏற்றுக்
கொண்டுள்ளேன்!" , " இயேசுவை நான் விசுவாசிக்கிறேன்! "
"ஞாயிற்றுக்கிழமைதோறும் நான் தேவாலயத்துக்குச் செல்கி
றேன்!", "அனுதினமும் ஜெபிக்கிறேன்!", "பைபிள் வாசிக்கிறேன்!"
"தசம பாகம் செலுத்துகிறேன்!" என்றெல்லாம் சொல்கிறீர்களா?
இயேசுவின் வாக்குத் தத்தங்களை மட்டும் ஞாபகத்தில்
கொண்டு, அவருடைய நிபந்தனைகளை சௌகரியமாக மறந்து
விடுகிறவர்களை நோக்கித்தான் இந்த வசனம் சொல்லப்பட்டு
இருக்கிறது :
"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின்
சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக
ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல்,
என்னை நோக்கி : கர்த்தாவே! கர்த்தாவே!
என்றுசொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை."
(மத்தேயு 7 :21)
அடுத்து,
"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே!
நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்;
நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்."
(மத்தேயு 11 :28)
என இயேசு சொல்லியிருப்பது உண்மைதான்; ஆனால், அதற்கு
அடுத்த வசனத்தில் :
"நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய்
இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல்
ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்
கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள்
ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல்
கிடைக்கும். "
(மத்தேயு 11 :29)
"என் நுகம் மெதுவாயும், என் சுமை
இலகுவாயும் இருக்கிறது என்றார்."
(மத்தேயு 11 :30)
என்று சொல்லியிருக்கிறாரே! "என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்
கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள்; அப்பொழுது,
உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். " ஆம்,
இயேசுவின் நுகத்தை நம் மேல் ஏற்றுக்கொண்டு, அவரிடத்தில்
கற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான் 'நிபந்தனை'! இந்த நிபந்த
னையை நிறைவேற்றாமல், இளைப்பாறுதலும் இல்லை; இரட்சிப்
பும் இல்லை! என்பதை நாம் மறந்துவிடலாகாது! ஆம், இரட்சிப்பு
இலவசமாய்க் கிடைப்பதில்லை; எளிதாயும் அது கிடைக்காது!
மேலும், தன்னைப் பின்பற்றுவது குறித்த முக்கியமான நிபந்தனை
களையும் இயேசு தெள்ளத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார்:
" . . . . ஒருவன் என்னைப் பின் பற்றி
வர விரும்பினால், அவன் தன்னைத்
தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்
துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்."
(மத்தேயு 16 :24)
"தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன்
அதை இழந்து போவான்; என்னிமித்த
மாகத் தன் ஜீவனைஇழந்து போகிறவன்
அதைக் கண்டடைவான்."
(மத்தேயு 16 :25)
ஆம், இவை தான் முக்கியமான நிபந்தனையும், எச்சரிக்கையும்
ஆகும். ஒருவன் இயேசுவைப் பின்பற்றிவர விரும்பினால், அவன்
தன்னைத்தானே வெறுத்திடவேண்டும்! "தன்னைத்தானே
வெறுப்பது" என்றால், ஒருவன் மனுஷருக்கு ஏற்றவைகளைச்
சிந்திக்காமல், தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கவேண்டும்
என்பதுதான். தனக்கென ஒரு சொந்த வாழ்க்கையும், இலட்சிய
மும், ராஜ்யமும், அலுவல்களும் இருக்கக்கூடாது! பொதுவாக,
வாழ்க்கை என்றாலே 'புசிப்பது', 'குடிப்பது', 'அனுபவிப்பது', 'சுக
போகமாக இருப்பது' ; இவற்றுக்காக உழைப்பது என்பதாகத்
தான் நாம் எண்ணுகிறோம், வாழ்கிறோம் !
அதாவது, வாழ்க்கை பற்றியும், அதன் அர்த்தம், குறிக்கோள்
குறித்தும்; வாழ்க்கையின் சாரமான உண்மை மற்றும் இலக்கு
குறித்தும் நாம் அக்கறை கொள்வதில்லை, சிந்திப்பதில்லை!
உண்மையில், வாழ்க்கையின் இலக்கு தேவனே; தேவன் அல்லது
கடவுளை அறிவது, அல்லது அடைவதே! ஆக, மனுஷருக்கு ஏற்ற
வைகளைச் சிந்திக்காமலும், செயல்படுத்தாமலும் இருப்பதே,
தவிர்ப்பதே 'தன்னைத்தானே வெறுப்பது' என்பதாகும். அடுத்து
'தன் சிலுவையை எடுத்துக் கொண்டு' என்பது ஒருவன் தான் பட
வேண்டிய பாடுகளைக் குறிக்கின்றது. 'சிலுவை' என்பது பொது
வாக பாடுகளைக் குறிக்கின்றது என்லாம். இதை நாம் ஒருவனது
'கர்மவினைகள்' என்றும் கொள்ளலாம். ஆழமான அர்த்தத்தில்,
ஒருவன் தனது உள்ளார்ந்த "நிழல்-சுயத்தை", தன்னகத்தேயுள்ள
இருளான பகுதியை(Shadow),உணர்வுப்பூர்வமாக இனம் கண்டு
அதைப் புரிந்து கொள்வதன் வழியாக, இணக்குவித்தலைக்குறிக்
கின்றது.
நல்லது, உண்மையில் இயேசுவைப்பின்பற்றுவது என்றால்என்ன?
கிறித்துவ மதத்தில் இணைவதோ, அல்லது, தினமும் ஒரு சடங்கு
போல பைபிளைவாசிப்பதோ அல்ல!மாறாக, அரிதினும்அரிதான
இந்த மானிடப் பிறப்பின் உண்மையான குறிக்கோளையும், இலக்
கையும் அறிந்து, உணர்வுப்பூர்வமாக வாழ்க்கையை வாழ்வது
என்பதும், இயேசுவைப் பின்பற்றுவது என்பதும் வேறுவேறல்ல!
ஆம், உண்மையிலேயே சிந்திக்கிற மனிதனுக்கு இயேசுவின் உப
தேச வசனங்கள் அந்நியமாயிருப்பதில்லை! ஏனெனில், வாழ்க்
கையின் விதிகளைத்தான் இயேசுவின் வசனங்கள் எடுத்துரைக்
கின்றன!
ஆனால், இயேசு காட்டும் வாழ்க்கை, வெறுமனே உணவு, உடை,
உறையுள், உறவுகள் குறித்த விவகாரங்கள் பற்றியதல்ல! மாறாக,
இயேசு முழுமையான வாழ்க்கையாகவும் அதன் குறியீடாகவும்
திகழ்கிறார்!
<><><><><><>
* "பட்டயத்தைக்கொண்டு வந்தவனின் செய்தி!"
(இயேசுவை மறு-கண்டு பிடிப்பு செய்தல்)
தொகுப்பிலிருந்து.
மா.கணேசன்/ 30.04.2016
No comments:
Post a Comment