
"இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய
ஒருவனாலும் கூடாது: ஒருவனைப் பகைத்து,
மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப்
பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்;
தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய
உங்களால் கூடாது.
(மத்தேயு 6 : 24)
என அறிவுறுத்திய இயேசு, உடனே அவ்வசனத்தைத் தொடர்ந்து,
"ஆகையால், என்னத்தை உண்போம்,
என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள்
ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம்
என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்
படாதிருங்கள் என்று, உங்களுக்குச்
சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும்
ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும்
விசேஷித்தவைகள் அல்லவா?"
(மத்தேயு 6 : 25)
என்பதாக அறிவுறுத்துகிறார்.எப்படிப்பட்ட மனிதர் இந்த இயேசு!
தாம் என்ன பேசுகிறோம் என்பதை அறியாமலேயே பேசுகிற ஒரு
மனம் குழம்பிய மனிதரா அவர்? இன்னும் சாதாரணரும், யாவரும்
அறிந்த இயற்கை மற்றும் உயிரியல் நியதிகளைக்கூட அறிந்திரா
மூடரா அவர்? உணவில்லாமல் உயிர் வாழ முடியாது என்பதை
அவர் அறியாதவரா என்ன?
இல்லை, இல்லை; அவர் உயிர்-வாழ்தலைப் பற்றி இங்கு சொல்ல
வில்லை. உயிர்-வாழ்தலைக் கடந்த உண்மையான, நித்திய
வாழ்க்கையைப்பற்றியே அவர் சொல்கிறார். மேலும்,
"அழிந்து போகிற போஜனத்திற்காக அல்ல,
நித்தியஜீவன்வரைக்கும் நிலை நிற்கிற
போஜனத்திற்காகவே கிரியை நடப்பி
யுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்
குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய
தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்."
(யோவான் 6 : 27)
இவ்வாறு இன்னொரு இடத்தில் இயேசு கூறியுள்ளார். ஆம், இயேசுவி
னுடைய "வாழ்க்கை-தரிசனம்" எப்படிப்பட்டதாக இருந்தால், இவ்வாறு
"என்னத்தை உண்போம்,என்னத்தைக் குடிப்போம்,
என்னத்தை உடுப்போம் என்று கவலைப் படாதிருங்கள்."
என்று சொல்ல முடியும்? வாழ்க்கையை அதன் அடியிலிருந்து அதன்
கொடுமுடியான உச்சம் வரை முழுமையாகத் தரிசித்த ஒருவரால்
மட்டுமே இப்படிச் சொல்லமுடியும்!
பொதுவாக, நாமனைவரும் வாழ்க்கையை உணவு, உடை, உறைவிடம்
எனும் அதன் அடித்தளத்தில் மட்டுமே அறிந்தவர்களாயுள்ளோம்!
அதற்குமேல், ஒரு அங்குலம் கூட நாம் மேலே நிமிர்ந்து கண்டதில்லை!
அவ்வாறு காண்பதற்கான தேவையைக்கூட நாம் உணர்ந்தது கிடை
யாது! அந்த அளவிற்கு நாம் உடலின் பசி, தாகம், பாலுணர்வு போன்ற
இயல்பான தூண்டுதல்களுக்குப் பதிலளிக்கும் உணர்வற்ற விலங்கு
களாகவே விளங்குகிறோம்! இவ்வாறு வாழ்க்கைக்கு நாம் பதிலளிக்
கும் உணர்வற்ற தன்மையிலிருந்தும், நமது விலங்குத்தனமான அணுகு
முறையின் மட்டுப்பாட்டிலிருந்தும் நம்மை விடுவிக்கவே இயேசு
"என்னத்தை உண்போம்,என்னத்தைக் குடிப்போம்,
என்னத்தை உடுப்போம் என்று கவலைப் படாதிருங்கள்."
என்று சொன்னார். மனித ஜீவிகள் என்கிற வகையில் வாழ்க்கையை
நோக்கிய நமது பிரதான அணுகுமுறையும், நமது பதிலளிப்பும்
(response)எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற மிகவும் முக்கிய
மான அடிப்படையான பாடத்தையே இயேசு இந்த வசனத்தின் மூலம்
புகட்டுகிறார். இயேசுவானவர் வாழ்க்கையைப் பார்க்கும் பார்வை
முற்றிலும் வேறானது! அது எவ்வளவு முழுமையானதோ, அந்த
அளவிற்கு முற்றிலும் சரியானது! ஆம், அவர் "வாழ்க்கை" என எதைக்
காண்கிறார், சுட்டுகிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளா
மல்,அவரையும் அவரது உபதேசங்களையும் நாம் முழுமையாகப்
புரிந்து கொள்ள முடியாது!
இயேசு, உண்மையில் நம்மை உண்ண வேண்டாம், உடுக்கவேண்டாம்,
என்று சொல்லவில்லை. மாறாக, மனிதஜீவிகள் என்ற வகையில் நாம்
கவலைப்பட வேண்டியது உண்பது, குடிப்பது, உடுப்பது பற்றியல்
லாமல் வாழ்க்கையின் அர்த்தம், குறிக்கோள், இலக்கு, மற்றும்
வாழ்க்கையின் சாரமான உண்மை பற்றியே நாம் பிரதானமாகக்
கவலைப்பட வேண்டும், அக்கறை கொள்ளவேண்டும் என்கிறார்.
உணவு, உடை, உறையுள் இவையெலாம் தேவை என்பதை இயேசு
மறுக்கவில்லை. உணவு இல்லாமல், மனிதன் உயிர்வாழ முடியாது
என்பது புரிந்தமைந்த விஷயம். ஆனால், எது இன்னும் பலராலும்
புரிந்து கொள்ளப்படாத விஷயம் என்றால், உணவுடனும் இன்னும்
இதர அன்றாடத் தேவைகளுடனும் மனித-வாழ்க்கை முழுமை
யடைந்து விடுவதில்லை என்பது தானாகும்! ஆகவேதான் பிறிதொரு
இடத்தில்,
"மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல,
தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற
ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்
என்று எழுதிருக்கிறதே"
(மத்தேயு 4: 4)
என்று "பழைய ஏற்பாடு" நூலிலிருந்து மேற்கோள்காட்டுகிறார்
இயேசு. ஆக, "என்னத்தை உண்போம்,என்னத்தைக் குடிப்போம்,
என்னத்தை உடுப்போம் என்று கவலைப்
படாதிருங்கள்."
என்று சொன்னதோடு,
"இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள்
நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம்
உங்களுக்கு வேண்டியவைகள் என்று
உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்."
(மத்தேயு 6: 32)
என்பதாகவும் சொல்கிறார் இயேசு. ' இவைகளெல்லாம் நமக்கு
வேண்டியவைகள்' என்பது ஒட்டுமொத்த வாழ்க்கையில் இவை
யும் அடக்கம் என்பதைத்தான். இந்தத் தேவைகள் யாவும்
இயற்கையானவை, உயிருள்ள அனைத்து தாவரங்களுக்கும்,
விலங்கினங்களுக்கும் பொதுவானவை. ஆகவே, இவை பிரதான
மாக நாடிடுவதற்கும், தேடிடுவதற்கும் உரியவை அல்ல என்ப
தாலேயே, ' இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடு
கிறார்கள்' என்பதாக இயேசு குறிப்பிடுகிறார்.
உணவு, உடை, உறைவிடம் இவையெல்லாம் எல்லா மனிதர்களுக்
கும் வேண்டியவைகளே என்றாலும், இவை பிரதானமாக நாடித்
தேடிடக்கூடியவைகளல்ல. குறிப்பாக ஞானமுள்ள மனிதர்கள்,
அதாவது வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தையும், குறிக்
கோளையும், இலக்கையும் புரிந்து கொள்வதை தமது பிரதான
ஆர்வமாகக் கொண்டுள்ளவர்கள், உணவு, உடை . . .போன்றவற்றை
முதலாவதாகத் தேடுவது இல்லை! இவர்களுக்கு மாறானவர்களை,
அதாவது வாழ்க்கையின் உண்மையை விட உணவுக்கு முதல் இடம்
கொடுத்து தேடுகிறவர்களைத்தான் "அஞ்ஞானிகள்" என்று
இயேசு கூறுகிறார்.
இயேசுவின் தர்க்கம் வித்தியாசமானது. அது, "மேலிருந்து கீழ்" நோக்
கிக் காண்கிற (Top-Down),முழுமையான பார்வை மற்றும்
புரிதலின் தர்க்கமாகும். நம்மைப் போன்ற சாதாரண, மேலோட்டமான
புரிதலின் "கீழிருந்து மேலே" (Bottom-Up)காணும் தர்க்கம் போன்ற
தல்ல அவருடையது!
மனிதஜீவிகள் என்ற வகையில், நாம் அனைவரும் வாழ்க்கையின்
"உட்- பொருளை"த்தான் தேடிட வேண்டுமே தவிர, விலங்குஜீவி
களைப்போல வாழ்க்கையின் மேற்புறத்திலுள்ள புறப்பொருள்
களைத் தேடிக்கொண்டிருக்கக்கூடாது! இது தான் மனிதஜீவி
களுக்கும், விலங்குஜீவிகளுக்கும் உள்ள பெரும் வித்தியாசம் ஆகும்.
வாழ்க்கையின் உட்- பொருளையல்லாமல் புறப்பொருள்களைத்
தேடுகிறவர்களை, இயேசு "அஞ்ஞானிகள்" என்று குறிப்பிடுகிறார்.
"உண்வில்லாமல் மனிதன் வாழமுடியுமா?" என்று நாம் கேட்கலாம்.
உணவில்லாமல் மனிதன் உயிர் வாழ முடியாதுதான்; ஆனால்,
"வாழ்க்கையின் உட் பொருளை அறியாது, அர்த்தமில்லாமல்
நம்மால் எப்படி வாழமுடிகிறது?" என்ற கேள்வியை ஏன் நாம்
கேட்பதில்லை? வாழ்க்கை பற்றிய, அதன் அர்த்தம் பற்றிய
கேள்வியும், விசாரமும் நம்மிடம் இல்லையெனில், நாமும்கூட
அஞ்ஞானிகளே, வெறும் விலங்கு ஜீவிகளே! மனிதஜீவிகள் என்ற
வகையில், முதலாவதாகவும், பிரதானமாகவும் நாம் தேடிட
வேண்டியது "வாழ்க்கையின் உட் பொருளை"த்தான்! ஏனெனில்,
இதுதான் 'மனிதத்தரத்திற்கேற்ற "தேடு-பொருள்" ஆகும்.
ஆகவேதான் இயேசு,
"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும்
அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது
இவைகளெல்லாம் உங்களுக்குக்
கூடக்கொடுக்கப்படும்."
(மத்தேயு 6 : 33)
என்பதாகச் சொன்னார். ஆம், மனிதர்கள் முதலாவதாகத் தேட
வேண்டிய "தேவனின் ராஜ்யம்" எனும் வாழ்க்கையின் இலக்கு
நிலையான "முழுமை"யை, "முக்தி"யைத் தேடினால், அம் முழுமை
யின் பகுதிகளான பிற விஷயங்களும் நமக்குக் கொடுக்கப்படும்.
ஏனெனில், முழுமையினுள் பகுதிகள் அடக்கம். பெரியதில்
சிறியதுஅடங்கும். பெரியதும், முக்கியமானதும், மையமானது
மான விஷயங்களைத் தேடிப்பெறுகின்ற வழிமுறையிலேயே
சிறியதும், அவசியமானதும், அத்தியாவசியமானதுமான
பொருட்களும்,விஷயங்களும் சுலபமாக அடையப்பட்டுவிடும்.
மனிதவாழ்க்கையின் உன்னதமான இலக்கை மறந்து, உயிர்
பிழைத்தலின் அன்றாடத்தேவைகளுக்காக அனுதினமும்,
வாழ் நாட்கள் முழுவதும் தமது சக்தியையும், அறிவையும்,
நேரத்தையும் செலவழித்து, முடிவில் உணர்வற்ற விலங்கு
களைப்போல மனிதர்கள் மாண்டு போகத்தேவை இல்லை!
உண்மையில் சொல்லப்போனால், அடிப்படையான, அத்தியா
வசியத் தேவைகளை விட அடிப்படையற்ற, 'தேவையில்லா'
தேவைகளுக்காகவும், போலியான மதிப்புக்களுக்காகவும்தான்
மனிதர்கள் அதிகமாய் உழைக்கவேண்டியுள்ளது! இந்த
'சாபக்கேடான நிலை' மனிதர்கள் தமக்குத்தாமே ஏற்படுத்திக்
கொண்டதேயாகும். வாழ்க்கையைச் சிறிதும் புரிந்துகொள்ளாத
உணர்வற்ற தன்மைதான் இதற்குக் காரணம்.
உண்மையில், அடிப்படையான, உண்மையான வாழ்க்கைத்
தேவைகள் என்பவை மிகச் சிலவேயாகும். ஆனால், இந்த ஒரு
சில தேவைகள் எவ்வாறு மனிதர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை
யையும் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டன?வாழ்க்கையைவிட
வாழ்க்கைத்தேவைகள் எங்ஙணம் முக்கியத்துவம் பெற
முடியும்? ஆம், அடிப்படைத்தேவைகள் என்பவை அடிப்படை
யானவை மாத்திரமே தவிர அவையே அனைத்துமாக ஆகிட
முடியாது! ஆனால், துரதிருஷ்டவசமாக, நம்மைப்பொறுத்த
வரை அவையே அனைத்துமாகிவிட்டன!
வாழ்க்கையானது தொடக்க நிலையில், தேவைகளின் வழியாகத்
தான் நம்மையும், வாழ்க்கையையும் உணரச்செய்கிறது! ஆனால்,
நாமோ தேவைகளை மட்டுமே உணர்கிறோம்; அதற்கு மேல்,
'நம்மை'யும் உணர்வதில்லை! 'வாழ்க்கை'யையும் உணர்வதில்லை!
ஆம், தேவைகளைத் தாண்டி நாம் இன்னும் வாழ்க்கைக்கு விழிக்க
வில்லை!! தேவைகள்,தேவைகள்தான்-அவை உயிர்பிழைத்திருக்க
உதவுகின்றன. ஆனால், உயிர்பிழைத்திருத்தல் என்பது அதன
ளவில் (முழு)வாழ்க்கையுமல்ல, வாழ்க்கையின் இலக்குமல்ல!
ஆகவேதான், "இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள்
என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். " எனவும், ஆனால்,
"இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்."
எனவும் இயேசு குறிப்பிடுகிறார்.
உணவில்லாமல் உயிர்வாழமுடியாது என்பது உண்மைதான்.
நேற்று மூன்று வேளை உண்டோம்; ஆனால், வேறு என்ன நேற்று
சாதித்தோம்? இன்றும் மூன்று வேளை உண்போம்,அதற்காக
உழைக்கவும் செய்வோம். இவ்வாறே தினம்தினம், மாதம், வருடம்
எனத்தொடரும்; ஆனால், என்று நாம் வாழ்க்கையை உணர்ந்து,
அறிந்து, புரிந்து வாழத்தொடங்கப்போகிறோம்? வாழ்க்கையின்
மிக மையமான, சாரமான, முக்கியமான அம்சத்தை என்றேனும்
தேடுவோமா?? இதுதான் நம்முடைய பிரச்சினையும் மட்டுப்
பாடும் ஆகும்!
ஆகவேதான், வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சத்தை
முதலில் தேடுமாறு இயேசுநமக்கு அறிவுறுத்துகிறார்.முக்கிய
மானதை , இறுதியானதை முதலில் தேடாவிடில், பிறகு அது
குறித்து யோசித்துப்பார்க்கவும் கூட நமக்கு அவகாசமும்
வாய்ப்பும் கிட்டாமல் போய்விடக்கூடும்.
ஏனெனில், நம்மைச் சுற்றியுள்ள சமூகமானது வாழ்க்கை
யல்லாத வற்றுக்காக நம்மை தயார்படுத்திக்கொண்டிருக்
கிறது! மேலும், ஒருமுறை நாம் 'அன்றாடம்' எனும் தேவைகளின்
வாழ்க்கையாகிய காட்டாற்றில் இறங்கினோமேயானால், பிறகு
உண்மையான வாழ்க்கையின் கரையின் பக்கம் ஒதுங்கக்கூட
முடியாமல் அடித்துச்செல்லப்பட்டுவிடுவோம்!
அன்றாட வாழ்க்கை எனும் காட்டாற்றில் சிக்குண்டு அதிலிருந்து
தப்பிக் கரையேறுபவர்கள் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய ஒரு
சிலரேஆவர்! அதில், புத்தர் தலைமையானவர். தனது 29ம் வயது
வரை அரச-வாழ்க்கை வாழ்ந்து வந்த அவர் ஒரு நாள் மானிட
வாழ்க்கையின் "நிலையாமை"யை உணர்த்துகின்ற வகையில்
அமைந்த 'நோய்', 'மூப்பு', 'மரணம்' ஆகிய நிலைமைகளைக்கண்ட
தும், துன்பமயமானதும், நிரந்தரமற்றதுமான 'வாழ்க்கையின்
புதிரை' விடுவிக்கும் தீவிரத்தேடலார்வத்தினால், அரசையும்,
வீட்டையும், நாட்டையும் விட்டு காட்டிற்குச் சென்று தியான-தவப்
பயிற்சிகளைச் செய்தார்; கடுமையான விரதங்களையும் மேற்
கொண்டார். அவரது ஆன்மீகப்பயிற்சிகள் அவருடைய இலட்சிய
நிலையை அடைய உதவிடவில்லை என்பதை அறிந்துஅனைத்
தையும் கைவிட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்து, தன்-உணர்வில்
ஆழ்ந்து நிலைத்து "ஞான-விழிப்பு" எனும் முழுமை நிலையை
அடைந்தார். ஆனால், ஞானமடைந்தபிறகு அவர் தனது பழைய
அரச-வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்லாமல் இறுதிவரை பிச்சை
யேற்று உண்டார். அதற்கு பதிலாக, ஞானப்பொக்கிஷங்களான
தனது உபதேசங்களை உலகிற்கு இலவசமாய் வழங்கினார்!
புத்தர் நினைத்திருந்தால் ஞானமடைந்த பிறகு அவர் தமது
பழைய அரச-வாழ்க்கைக்குத் திரும்பிருக்கலாம்! ஆனால், அவர்
அப்படிச்செய்யவில்லை. ஏனெனில், அடிப்படைத்தேவைகள்
என்பவை வெறுமனே அடிப்படைத்தேவைகள்தானே தவிர,
அவையே அனைத்துமல்ல என்பதைப்புரிந்து கொண்டவர்
புத்தர். மேலும், "நிர்வாணம்" எனும் மனிதவாழ்க்கையின்
முழுமை நிலையான "மறுகரையை" அவர் அடைந்து விட்டார்!
இதையே, இயேசுவின் சொற்களில் சொன்னால் : "தேவனின்
ராஜ்யம்". ஆம், புத்தரின் 'நிர்வாணா' என்பதும், இயேசுவின்
"தேவனின்ராஜ்யம்" என்பதும் ஒன்றே!
ஆம், மனிதர்கள் முதலாவதாகத் தேட வேண்டியது "தேவனின்
ராஜ்யம்" எனும் வாழ்க்கையின் இலக்கு நிலையான "முழுமை"
யையே ஆகும். 'தேவனின்ராஜ்யம்' என்பது இங்கு, இந்திய மற்றும்
தமிழக ஆன்மீகத்தில் கூறப்படும் "முக்தி", வீடுபேறு" ," மரணமிலா
பெருவாழ்வு" என்றெல்லாம் வெவ்வேறு சொற்களைக்கொண்டு
குறிப்பிடப்படும் நிலையே தவிர வேறல்ல!
'தேவனின்ராஜ்யம் என்பது 'இந்தியராஜ்யம்', 'இங்கிலாந்துராஜ்யம்'
போன்றதல்ல! மாறாக, அது ஒரு"முழுமை" நிலையாகும். இன்னும்
துல்லியமாகச் சொன்னால் "முழு உணர்வு" நிலையே அது!
"ஆகையால்,என்னத்தை உண்போம்,என்னத்தைக் குடிப்போம்,
என்னத்தை உடுப்போம் என்று கவலைப் படாதிருங்கள்."
<<<><<><><>><>>>
* "பட்டயத்தைக்கொண்டு வந்தவனின் செய்தி"
(இயேசுவை மறு-கண்டுபிடிப்பு செய்தல்)
தொகுப்பிலிருந்து.
** ** ** **
மா.கணேசன்/ (18.7.2011 & 02.05.2016)
No comments:
Post a Comment