Tuesday, 3 May 2016

மரித்தோரின் உலகிலிருந்து வெளியேறுங்கள்!*



       "அவருடைய  சீஷர்களில் வேறொருவன்
         அவரை நோக்கி : ஆண்டவரே! முன்பு நான்
         போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு
         உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்."
                                  (மத்தேயு 8 : 21)
       "அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை
        அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா
        என்றார்."
                                 (மத்தேயு 8 : 22)

ஆம், அறியப்படாத,அசலான வாழ்க்கையை அறிந்து கொள்ளவும்,
வாழ்ந்திடவும் வேண்டி,   இயேசு நம்மை,   அறிந்த   மட்டுப்பாடான
அன்றாட வாழ்க்கையை  விட்டுவிட்டு  வரச்சொல்கிறார்.   இதைத்
தானே  தமது  அன்றாடபிழைப்புக்காக    மீன்  பிடிக்கிறவர்களான
பேதுரு, அந்திரேயா, யாக்கோபு,  மற்றும் யோவான் ஆகியோரிடம்,
         "என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்
          களாக்குவேன்." (மத்தேயு 4:19)
என்று சொல்லி அழைத்தார்.

மேலும்,  வாழ்க்கை என்றால்  என்னவென்றே அறியாத நிலையில்,
உணர்வற்ற  தன்மையில்,    அன்றாட வாழ்க்கை  விவகாரங்களில்
மூழ்கிக்   கிடப்பவார்களைத்தான்,   இயேசு, "மரித்தோர்" அதாவது
"வாழாதோர்" என்று குறிப்பிடுகிறார்!

இறந்து போன   தந்தையை     மற்றவர்கள் - அங்கே சுற்றிலுமுள்ள
"வாழாதோர்"  பார்த்து   அடக்கம்பண்ணட்டும்;      உனக்கு     வேறு
'முக்கியமான'   வேலை உள்ளது.   ஆகவே,    'நீ என்னைப்பின்பற்றி
வா'  என்பதாக  இயேசு அந்த சீடனிடம் கட்டளையிடுகிறார்.

இயேசுவைப்  பொறுத்தவரை,    அவர்    நம்மை  முதலில்,   அறிந்த
அன்றாட   வாழ்க்கை  விவகாரங்களைக்    கடந்து         வருமாறும்,
வாழுமாறும்    அழைக்கிறார்.    இரண்டாவதாக, அதன் தொடர்ச்சி
யாக,   மரணத்தில் ஒரு நாள் நிச்சயம் முடிந்துவிடக்கூடிய உடலின்
வாழ்க்கையையும் கடந்து,    மரணம் தீண்டவியலாத,    உணர்வின்
"நித்திய வாழ்க்கைக்குள்"   பிரவேசிக்குமாறும்,அதன் முக்கியத்து
வத்தையும்,அவசர அவசியத்தையும் வலியுறுத்துகிறார்.

ஏனெனில், இந்த உலகில் நாம் வாழ்வது மிகக்குறுகியகாலத்திற்கு
மட்டுமே!  ஆகவே,  நாம் உயிரோடிருக்கும்   காலத்திற்குள்ளாகவே
அழிவில்லாத நித்திய ஜீவனையும், வாழ்க்கையையும் அடைந்திடு
வது  அவசர-அவசியமாகும். எனவேதான்,

              "என்னத்தை உண்போம்,என்னத்தைக் குடிப்போம்,
               என்னத்தை உடுப்போம் என்று கவலைப்
               படாதிருங்கள்."      (மத்தேயு6 : 31)

             "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும்
              அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது
              இவைகளெல்லாம் உங்களுக்குக்
              கூடக்கொடுக்கப்படும்."
                                                  (மத்தேயு 6 : 33)

என இயேசு அறிவுறுத்துகிறார். உணவைவிட வாழ்வின் உண்மையே
பிரதானமானது  என்பதை    நாம் புரிந்து கொள்ளாவிட்டால்,    இயேசு
வின்  தனிச்சிறப்புவாய்ந்த செய்தியை நாம்  தவறவிட்டுவிடுவோம்!

நாம்  உயிரோடிருப்பது  முக்கியம் தான்;   ஆனால்,  உயிரோடிருப்பது
எதற்காக   என்பதை    அறியாமல்   உயிரோடிருப்பது   அர்த்தமற்றது!
ஆம், உயிரோடிருந்தும் உணர்வுக்கு வராமலும், உணர்வில் நிலைத்து
முழு-உணர்வை அடையாமலும் இருப்போமெனில்,    நாம் ஒரு விலங்
கைப் போலவே  வாழ்ந்து மடிந்து போவோம்.     ஆம்,ஆரோக்கியமாக,
திடகாத்திரமாக உயிரோடிருக்கலாம்; ஆனால்,  உணர்வுக்கு வராமல்
இருந்தால் நாம் ஆன்மீக ரீதியாக இறந்தவர்களே!

இவ்வாறு,      உணர்வற்ற  தன்மையில்     உணவு,  உடை,  உறைவிடம்,
உறவுகள்  என்று உழன்று கொண்டிருப்பவர்களைத் தான்,  அதாவது,
ஆன்மீக ரீதியாக உயிர்ப்பற்றவர்களைத் தான்,  இயேசு, "மரித்தோர்"
எனக் குறிப்பிடுகிறார். மனித சமூகம் முழுவதும்   இத்தகையோரால்
நிரம்பிவழிகிறது!

ஆகவேதான்,   'முதலில்  போய்  தனது    தகப்பனை அடக்கம்பண்ண
அனுமதி கொடுக்குமாறு கேட்ட சீடனிடம், "மரித்தோர் தங்கள்  மரித்
தோரை   அடக்கம்பண்ணட்டும்  நீ  என்னைப்  பின்பற்றி வா"   என்று
சொல்லி அனுமதி கொடுக்க மறுத்துவிட்டார்  இயேசு!

பொதுவாக, மனிதர்களது வாழ்க்கை என்பது அன்றாட நிகழ்வுகளை,
சம்பவங்களைச்  சார்ந்ததாகவே  உள்ளது!     ஒரு  சிறு அசம்பாவிதம்
நிகழ்ந்துவிட்டால்  உடனே   வாழ்க்கை    துன்பமயமாகி     விடுகிறது!
ஒரு   குழந்தை  பிறந்துள்ளது,   அல்லது   வேறு    ஏதாவதொரு    'நல்ல'
காரியம் என்றால், வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாகத்தோன்றுகிறது!
ஆக, கல்யாணம், காட்சி, நல்லது, கெட்டது, வாழ்வு, சாவு . . .இப்படியே
திரும்பத்திரும்ப அதே விஷயங்கள், விவகாரங்கள்  இவற்றைத்தான்
நாம்  'வாழ்க்கை'  என்கிறோம்!    அந்தந்த    நேரத்துப் பிரச்சினைகள்,
தேவைகள்,  அலுவல்கள் - இவைதான் வாழ்க்கை! இவற்றைக்கடந்து
ஒன்றுமில்லை! உண்பது, உறங்குவது, உறவு கொள்வது - இவைகளுக்
காக உழைப்பது; பிறகு நோய், மூப்பு, மரணம்.   முடிந்துவிட்டது மனித
வாழ்க்கை!

இத்தகைய  விவகாரங்களின்  மத்தியில்,  பிரத்யேகமாக,  வாழ்க்கை
யின்  "அர்த்தம்"  என்று    எதையும் தேட வேண்டாம்!      வாழ்க்கைக்கு
"குறிக்கோள்" என்று ஏதும் உண்டா என்று அறியவேண்டாம்!வாழ்வின்
இலக்கை   அடைய   வேண்டாம்!       வாழ்க்கை    பற்றியும்,   உண்மை,
மெய்ம்மை, கடவுள் பற்றியும்  சிந்திக்க(வும்)நேரமில்லை!     இதுதான்,
பொதுவான,  சாதாரண,  பெரும்பான்மையான  மனிதர்களின் வாழ்க்
கையாகும்!

ஆனால், இயேசு குறிப்பிடுகிறவாழ்க்கை இதுவல்ல. ஏனெனில், உணர்
வுள்ள, சிந்திக்கும் மனிதனுக்கு இவற்றைவிட அதிமுக்கியமான வேறு
வேலை  உள்ளது!   அது  என்னவென்றால்,   தன்னையறிவது,    அல்லது
கடவுளை உணர்வது, அல்லது உண்மையை, மெய்ம்மையை,வாழ்வின்
உட்-பொருளான  அர்த்தத்தை  அறிவது!  இதையே,  இயேசுவின் சொற்
களில்     சொன்னால்,     "தேவனின்   ராஜ்யத்தை" த் தேடுவது,   மற்றும்
தேவனின் ராஜ்யத்தைக் குறித்து பிறருக்குப் பிரசங்கிப்பது!

"மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்" எனும்இயேசு
வின்   இந்த வசனம் மிகவும்  "அதிரடி"யான  ஒன்றாகத் தோன்றுகிறது!
ஆனால்,அது மிகவும் "ஆழமான"உண்மையைதன்னுள்கொண்டுள்ளது.
மனிதனுக்கும்,  மூலமும்-முடிவுமான மெய்ம்மையான, "சொர்க்கத்தில்
இருக்கும் நமது தகப்பனான," கடவுளுக்கும் இடையேஇருக்கவேண்டிய
உன்னதமான    உறவின்   முதன்மையான    தேவையைப்  பற்றி    இந்த
வசனம் கூறுகிறது!

தந்தைக்கு  மகன்  ஆற்ற வேண்டிய கடமைகளைச்  செய்யவேண்டாம்,
தகப்பனை மதிக்கவேண்டாம் என்று இயேசு சொல்லவில்லை! மாறாக,
                  "உன் தகப்பனையும், உன் தாயையும்
                    கனம் பண்ணுவாயாக."
                                         (மத்தேயு 19:19)
என்று ஒரு வாலிபனுக்கு இயேசு அறிவுரை கூறியுள்ளதையும் நாம் அறி
வோம். அதேநேரத்தில்,பெற்றவர்கள்,உடன்பிறந்தவர்கள்,பிறஉறவுகள்,
நண்பர்கள்   என்று   எல்லோருடனும்   உறவு  இருந்தாலும்,   மனிதர்களு
டனும்,   பொருட்களுடனும்    கொள்ளுகிற   உறவுகள்    எவ்வகையிலும்
முழுமையானதோ, இறுதியானதோ அல்ல!

ஒருவன் தனது தகப்பனையும், தாயையும் கனம்பண்ணுவது  எவ்வளவு
அவசியமோ, முக்கியமோ; அதைப்போல,  இந்த பூமி,  வானம்,  சூரியன்,
சந்திரன்,  நட்சத்திரங்கள் என  இந்த மொத்தப்பிரபஞ்சமும், அதிலுள்ள
அனைத்தும் உருவாகக் காரணமான -   தகப்பனை, அதாவது கடவுளை
கனம் பண்ணுவது  ஆயிரமாயிரம் மடங்கு  அவசியமல்லவா,     முக்கிய
மல்லவா? இவ்வாறு செல்கிறது இயேசுவின் தர்க்கம்!

மேலும், கடவுளைக் கனம் பண்ணுவது என்பது பல கடமைகளில் ஒன்று
அல்ல.   ஏனென்றால்,   நமக்கு   உயிர் கொடுத்த தகப்பனும், தாயும் ஒரு
நாள் உயிரைவிட்டு மாண்டுபோவார்கள்! எல்லாஉறவுகளும் குறிப்பிட்ட
ஒரு  கட்டம்  அல்லது  எல்லை  வரைதான்;       எந்த  உறவும்  இறுதிவரை
வராது, நிலைக்காது! ஆனால், கடவுளுடனான உறவுஅப்படிப்பட்டதல்ல!
அதுவே இறுதிவரை வருவது,முழுமையானது, நித்தியமானது. கடவுளுட
னான உறவு மட்டுமே மனிதனை மரணத்திலிருந்து மீட்பதும்,மரணமில்
லாப் பெருவாழ்வு தருவதுமாகும்!  ஆகவேதான்,
                             " மரித்தோர் தங்கள் மரித்தோரை
                               அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப்
                               பின்பற்றி வா."      (மத்தேயு 8 : 22)
என்பதாக தனது சீடனுக்கு இயேசு கட்டளையிட்டார்!

இறந்து போன    தகப்பனின் உடலை  அடக்கம் பண்ணுவது என்பது ஒவ்
வொரு மகனின் தவிர்க்கமுடியாத ஒரு கடமையாகும்.ஆனால், 'தவிர்க்க
முடியாதது',    'நிர்ப்பந்தமானது'  என்பது    இந்த  ஒரு கடமை மட்டுமல்ல!
மனிதர்களின்  அன்றாடவாழ்வின்  ஒவ்வொரு விஷயமும்  'தவிர்க்கமுடி
யாதது',     'நிர்ப்பந்தமானது'    என்பதாகவே   மனிதர்களைச் சிக்கவைக்
கிறது!  'தேவையானது',   'அவசியமானது',   'அடிப்படையானது', 'தவிர்க்க
முடியாதது',   'நிர்ப்பந்தமானது'   என்கிற   விஷயங்களே     மனிதர்களை
இயக்குகின்றன,    விரட்டிச்செலுத்துகின்றன!     இந்த  அறிந்த  அன்றாட
விஷயங்கள் மட்டுமே மனிதர்களின் வாழ்க்கையாக உள்ளது!

ஆனால்,   மிகவும்   உண்மையான,    அசலான   மனிதவாழ்க்கைஎன்பது
எல்லா அன்றாடவிஷயங்களையும், தேவைகளையும்,எல்லாவித உறவுப்
பிணப்புகளையும் கடந்ததாக உள்ளது.    ஆகவே,     இத்தகைய அசலான
வாழ்க்கையானது பெரும்பாலானமனிதர்களுக்கு அந்நியமானஒன்றாக
வே உள்ளது! ஆக, புத்தர்,இயேசு போன்று தமது "விழிப்பினால்" தம்மைத்
தாமே   உருவாக்கி   முழுமைப்படுத்திக் கொண்ட    ஒருவர்    சமூகத்தில்
புகுந்து எதிர்ப்படுகிற மனிதர்களை அன்றாடஉலகியல்எனும்'புதை சேற்
றிலிருந்து', பல(வந்த)மாக வெளியே பிடித்து  இழுத்து விடுவிக்க வேண்டி
யுள்ளது.   இல்லாவிடில்,   அவர்களை   ஒன்றுமே  செய்ய  இயலாது!     ஆம்,
கழுத்து வரை புதைச் சேற்றில் சிக்கியவர்களால் தாமாகவே அதிலிருந்து
தம்மை  விடுவித்துக்கொள்ள இயலாது!   வெளியே  இருக்கும்   ஒருவரால்
தான் அவர்களைப்பலமாகப் பிடித்து வெளியே இழுக்க முடியும்!

உலகியலில்   சிக்கிய  மனிதர்கள்  உண்மையான  வாழ்க்கைக்கு   எதிர்த்
திசையில்,   எதிர்க்கோடியில் உள்ளதால்,  அவர்களிடம் சென்று உண்மை
யான வாழ்க்கையைக்குறித்து சொல்லப்படும்    எந்த உண்மையும் "தீவிர
வாதம்" (Extremism)போலத்தான்தோன்றும்!  அது   அவர்களின், சமூகத்
தின் வழக்கமான  வாழ்க்கைக்கு 'விரோதமான' ஒன்றாகவே தெரியும்!

ஆம்,    அசலான வாழ்க்கைக்கு   அந்நியர்களான      பெரும்பான்மையான
மனிதர்கள்தான்    சாக்ரட்டீஸை 'விஷம்' குடிக்கச் செய்து கொன்றார்கள்!
இயேசுவை   'சிலுவை'யில்  அறைந்து  கொன்றார்கள்!     ஆக, இயேசுவின்
இந்த உபதேசம் மட்டுமல்ல; பிற உபதேசங்களும் சரி,  நம்மைப்பொறுத்த
வரை, அவை வழக்கத்திற்குமாறானவையாகவும், நடைமுறைக்கு ஒவ்வா
ததாகவும் தான்தோன்றும்!  ஆனால்,  நம்முடைய வழக்கமும், நடைமுறை
யும் உண்மையான வாழ்க்கையுடன் சிறிதும் பொருந்துவதில்லை  என்பது
தான் உண்மை!

ஏனெனில், நமது 'நடைமுறையில்' உயிர்-வாழ்தல் மட்டுமே நிறைவேற்றப்
படுகிறது! உயிர்வாழ்தலின் நோக்கமும், அர்த்தமும், இலக்கும் தொடப்படு
வதேயில்லை! உயிர்வாழ்தல் என்பது உடலின் நச்சரிப்பானதேவைகளைப்
பூர்த்திசெய்து கொள்கிற விலங்கையொத்த வாழ்க்கையாகும்! அது,மனித
மனதின் மற்றும்  உணர்வின்  "உயர்-நிலை" வாழ்க்கையல்ல. ஆகவேதான்,
இயேசு நம்மை "மரித்தோர்" என்று குறிப்பிடுகிறார்!

ஆம்,  நாம் உயிரோடிருக்கிறோம்;  ஆனால், உணர்வோடில்லை.ஆன்மீகரீதி
யாக  நாம் 'மரித்தோராகவே' உள்ளோம்!  "மரித்தோர்"   என இயேசு யாரை
யோ, அல்லது அவரது காலத்து மனிதர்களை மட்டுமோ குறிப்பிட்டுச்சொல்
லவில்லை.  மாறாக,  எவரெல்லாம் ஆன்மீக ரீதியாக உயிர்ப்பற்றவர்களாக,
உணர்வற்றவர்களாக உள்ளனரோ அவர்கள் எந்த தேசத்தில்,  எந்தக்காலக்
கட்டத்தில் வாழ்ந்தாலும்  அவர்களனைவருக்கும்  அது பொருந்தும்!   அதில்,
இயேசுவின்  சீடர்கள்  மட்டுமே விதிவிலக்கு.   ஏனெனில், தமது  சீடர்களாக,
தமது வழியைப் பின்பற்றுகிறவர்களாக,   அவர் தெரிந்தெடுத்துக்கொண்ட
வர்களை, அவர் ஏற்கனவே சமூகச்சகதியிலிருந்து தனியே பிரித்தெடுத்துக்
கொண்டுவிட்டார்!

மேலும்,  முற்றிலும்  புதியதும்,  மிகவும் அசலானதுமான வாழ்க்கைக்கு வழி
காட்டும்  விதமாகத்தானே  இயேசு   அவர்களைத் தமது    சீடர்களாக தேர்ந்
தெடுத்துக் கொண்டுள்ளார். ஆக, அவர்களைஅவர் அந்தப் பழைய தேய்ந்து
போன பாதையில் பயணிக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்!     அதனால்
தானே தனது தகப்பனை அடக்கம் பண்ண அனுமதி கேட்ட சீடனிடம்,
                           (லூக்கா எழுதியசுவிசேஷத்தின்படி) :
                           "மரித்தோர் தங்கள் மரித்தோரை
                           அடக்கம்பண்ணட்டும்; நீ போய்,
                           தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப்
                           பிரசங்கி என்றார்."
                                                       ( லூக்கா 9 : 60)
என்று  சொல்லி அனுமதி  மறுத்ததோடு   அச்சீடனுக்கு புதிதாக ஒருமுக்கிய
பணியைச் செய்யுமாறு கட்டளையும் இடுகிறார். ஆம்,  மனிதனாய்ப் பிறந்த
ஒவ்வொருவனுக்கும்   ஒரு    முக்கியமான    ஆன்மீகப்பணியும்,   தலையாய
கடமையும் உள்ளது! மேலும்,   தனது ஆன்மீகப்பணியை இனம் கண்ட பிறகு,
ஒருவன்  அப்பணியைச்செய்யாமல்  வேறு பணி எதையும் செய்ய இயலாது!
இந்த    அதிமுக்கியமான  வாழ்க்கைப்  பணியைக்   குறித்த உபதேசத்தைக்
கேட்டபிறகு, அதில்உடனே தீவிரமாக ஈடுபடுவதன்அவசியத்தையும் இயேசு
வலியுறுத்துகிறார்:

                            "பின்பு வேறொருவன் அவரை நோக்கி:
                              ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன்,
                              ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்
                              கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டு
                              வரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும்
                              என்றான்.      
                                                      ( லூக்கா 9 : 61)
                                                     
                             "அதற்கு இயேசு : கலப்பையின்மேல் தன்
                               கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற
                               எவனும் தேவனுடையராஜ்யத்துக்குத்
                               தகுதியுள்ளவன் அல்ல என்றார்.
                                                      ( லூக்கா 9 : 62)

ஆம், கலப்பையின்மேல் தன் கையை வைத்தபிறகு ஒருவன்முன்னிட்டுத்
தான் பார்க்க வேண்டும், செல்லவேண்டுமே தவிர  பின்னிட்டுப்பார்ப்பது
கூடாது!    இவ்வாறே,  மனிதவாழ்க்கையின்   முழுமையும்,    இலக்குமான
தேவனுடையராஜ்யத்தைக் குறித்த உபதேசத்தைக்கேட்டபிறகு,அதற்குள்
பிரவேசிப்பதற் குரிய   செயல்பாட்டில்   இறங்காமல்    பழைய     அன்றாட
வாழ்க்கை விவகாரங்களில் கவனம் செலுத்துவது  அசலானவாழ்க்கைக்
குப்புறம்பானதாகும்.     இத்தகைய   ஒரு   மனிதன்       "தேவனின்ராஜ்யத்
திற்குள்," அதாவது மரணம்கடந்த நித்திய வாழ்க்கைக்குள்பிரவேசிக்கும்
தகுதியை இழந்து விடுபவனாகிறான்!

இயேசுவின் உபதேசத்தை நேரடியாகக் கேட்டபிறகு,    "ஆண்டவரே,    உம்
மைப்பின்பற்றுவேன்,   ஆனாலும்    முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்
களிடத்தில்   விடைபெற்று    வரும்படி   எனக்கு அனுமதிதாருங்கள்"    என
இயேசுவிடம்    கேட்கும்  மனிதனின் மனதில் சிறிது 'தயக்கம்' இருப்பதை
யும், அசலான வாழ்க்கைக்குள் பிரவேசிக்க   அவனுக்கு விருப்பம் இருந்த
போதிலும்,   அவனது  உணர்வில் அது ஆழமாகத் தைக்கவில்லை;  அவனி
டம் 'ஊசலாட்டம்' இருப்பதையும், இன்னும் அவன் முழுமனதுடன்அதற்குத்
தயாராகவில்லை  என்பதையும் புரிந்து கொண்ட இயேசு,   "கலப்பையின்
மேல் தன்கையை  வைத்துப்பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய
ராஜ்யத்துக்குத்   தகுதியுள்ளவன் அல்ல" என்று எச்சரிக்கிறார்.

ஏனெனில், உண்மையான வாழ்க்கையின் அழைப்பை எவ்வழியிலேனும்
உணர்ந்த   ஒருவன் அதற்குள் பிரவேசிப்பதற்காக    தனது வீட்டாரிடமும்,
தாய் தந்தையாரிடமும்,     மனைவி மக்களிடமும்,   இன்னும்   எவரிடமும்
விடைபெறவேண்டிய  அவசியமோ,   அவர்களின்  ஒப்புதலை,       அல்லது
அனுமதியைப் பெறவேண்டியகட்டாயமோ, நிர்ப்பந்தமோ எதுவுமில்லை!
அவர்களும் அதற்குச்சம்மதிக்கவும்  மாட்டார்கள்!    ஏனெனில்,  அசலான
வாழ்க்கைபற்றி அவர்களுக்கு எதுவும்தெரியாது! அவர்களுக்குத்தெரிந்த
தெல்லாம் அன்றாடத் தேவைகளைத் தேடிப்பெறும் வாழ்க்கை மட்டுமே!
ஆகவே, அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வருவது என்பது இயலாத
காரியமாகும்!

ஆகவேதான்,    இயேசுவின் காலத்திற்கும்  500 ஆண்டுகளுக்கும் முன்னே
மனித வாழ்க்கையின்   "நிலையாமை"  பற்றிய  கேள்வியினால்    கிளறப்
பட்டு 'வாழ்க்கையின் புதிரை' விடுவிக்கும்பொருட்டு தனது மனைவியை
யும், பிறந்து ஏழு நாட்களேயான  தனது மகனையும், அரண்மனையையும்,
அரசவாழ்க்கையையும்,   இன்னும் மற்றவர்களையும்,  நாட்டையும் விட்டு,
யாரிடமும்   சொல்லாமல்   நள்ளிரவில் கிளம்பி காட்டிற்குச்  சென்று  விட்
டான்,  கௌதம சித்தார்த்தன்   எனும்  இளவரசன்.    அடுத்த ஆறு ஆண்டு
களாகமேற்கொண்ட இடைவிடாத ஆன்மீகப்பயிற்சிகள், முயற்சிகள் எது
வும்    வாழ்வின்  புதிரை விடுவிக்க   உதவிடாத நிலையில்,    அனைத்துப்
பயிற்சிகளையும் கைவிட்டு, தனித்துதன்னுடன் தானமர்ந்து,  தன்னுணர்
வின்  உள்ளாழ்ந்து "ஞான-விழிப்பு" பெற்று "புத்தர்"  என அகில உலகமும்
அறியப்பட்டார்

இதேபோல, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், பதினாறுவயதே
யான சிறுவன், வேங்கடராமன் தமக்கு ஏற்பட்ட அக-மாற்றத்தின் விளை
வாக  தனது வீட்டார் எவரிடமும் சொல்லாமல் வீட்டையும்,  தனது ஊரான
மதுரையையும்  விட்டு  300 மைல்களுக்கு  அப்பால்  உள்ள  திருவண்ணா
மலைக்குச் சென்றுஅங்கிருந்த மலையில் ஒரு குகையினை தனது இருப்
பிடமாகக்கொண்டுவிடுகிறான். அச்சிறுவனே பின்னாளில், பகவான் ஸ்ரீ
ரமணர் என்று அறியப்பட்ட ஆத்ம ஞானியாவார்.

இவ்வாறு உலகிற்குஅறியப்பட்ட உதாரணபுருஷர்கள், ஞானிகள், புத்தர்
கள், சித்தர்கள் வெகுசிலரே. உலகிற்குத் தெரியவராத ஞானிகள், புத்தர்
கள் எத்தனை பேரோ! ஆனால், அசலானஆழமான மனிதவாழ்க்கையை
வாழும்பொருட்டு  ஒருவர்  காட்டிற்குச்  செல்லவேண்டும்,  மலைக்குகை
யில் வசிக்கவேண்டும் என்பதில்லை! மாறாக, ஒருவர் நாட்டிலேயே, தன்
வீட்டிலேயே,   தோட்டத்தைக் காடாகவும்,   தனது படிப்பறையைமலைக்
குகையாகவும் கொண்டு;    இன்னும்,    அனைத்து  உறவுகளுக்கும் மத்தி
யிலேயே வாழ்க்கையை முழுமையாக வாழமுடியும்! விஷயம் இதுதான்:
உண்மையான வாழ்க்கையை வாழ்வதற்கு குடும்பத்தாருடைய   ஒப்புத
லும்,  அனுமதியும், சம்மதமும்  தேவையில்லை!    தேவை என்னவெனில்,

        கேள்வியின்றி, சிந்தனையின்றி, உணர்வின்றி; ஏதோ பிறந்தோம்,
        வாழ்ந்தோம்     என்றில்லாமல்;      மானிடப் பிறவியின்     ஒப்பற்ற
        நோக்கத்தை    அறிவதன்    வழியாக,     "வாழ்க்கை"    எனும் மகா
        புதிரை      விடுவிக்க வேண்டும்  எனும் "பேரார்வம்" மட்டுமே!
 
               <><><><><><><><><>

   * "பட்டயத்தைக்கொண்டு வந்தவனின் செய்தி"
         (இயேசுவை மறு-கண்டுபிடிப்பு செய்தல்)
       தொகுப்பிலிருந்து.
                 ** ** ** **
மா.கணேசன்/ (02.08.2011 & 02.05.2016)


                     
                             









No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...