Monday, 9 May 2016

இறுதியான உறவை நாடுங்கள்! *






                 "ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன்
                  வீட்டாரே."
                                         (மத்தேயு 10:36)

                 "தகப்பனையாவது தாயையாவது என்னிலும்
                  அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன்
                  அல்ல; மகனையாவது மகளையாவது  என்னிலும்
                  அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன்
                  அல்ல."
                                         (மத்தேயு 10:37)

                  "யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன்
                    தகப்பனையும் தாயையும் மனைவியையும்
                    பிள்ளைகளையும்  சகோதரரையும் சகோ
                    தரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்கா
                    விட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
                                        ( லூக்கா 14:26)
         
                  "அப்படியே உங்களில் எவனாகிலும்
                   தனக்கு உண்டானவைகளையெல்லாம்
                   வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச்
                   சீஷனாயிருக்கமாட்டான்."
                                       ( லூக்கா 14:33)

ஆன்மிகத்தில் தீவிரமாக ஈடுபடவிரும்பும் ஒருவனுக்கு, வாழ்க்கையை
மேலோட்டமாக வாழ்ந்து சென்றிடாமல் வாழ்க்கையின் உட்பொருளை
அர்த்தத்தை    உண்மையை   மெய்ம்மையை அறிந்திடத் தீவிர ஆர்வம்
கொண்ட  ஒருவனுக்கு  இயல்பாகவே  'குடும்பம்'  எனும் அமைப்பானது
சாதகமாக இருக்காது!    மேலும்    அதிகமானோருக்கு ஆன்மீக நாட்டம்
என்பதே    ஏற்படுவதில்லை என்பதற்கும்  குடும்ப-அமைப்பே காரணம்
எனலாம்!

இன்னும், குடும்பஅமைப்பு என்பது சமூகஅமைப்பின் ஒரு சிறுபகுதியே
ஒரு சிறு உறுப்பே  என்பதால்  அது  தனது மட்டுப்பாடான அம்சங்களை
சமூக அமைப்பிலிருந்தே  சுவீகரித்துக்கொண்டுள்ளது   எனலாம்!    இவ்
வகையில் சமூகஅமைப்பும் தனிமனிதர்களின் ஆன்மீகநாட்டத்திற்கும்
வளர்ச்சிக்கும் சாதாகமாக அமைந்திடாது!

ஏனெனில்,  குடும்ப அமைப்பும்  சமூகஅமைப்பும்    ஒரு தனிமனித ஜீவி
யைப்போன்று    வாழ்க்கையை    நேரே   அணுகக்கூடிய   உணரக்கூடிய
தன்மையைப் பெற்றிருக்கவில்லை.    வாழ்க்கையை    அதன் ஆழமான
உண்மையை   ஒவ்வொரு   தனிமனிதனாலும்  மட்டுமே  உணரமுடியும்!

சமூகஅமைப்பு  என்பது பல தனிமனிதர்களால்தான் ஆனது என்றாலும்
எல்லாரும்    சமமான   ஒரே அளவிலான    உளவியல்   மற்றும்    ஆன்மீக
வளர்ச்சியைப்  பெற்றிருப்பதில்லை!    ஆக    ஒவ்வொரு  தனிமனிதரும்
வாழ்க்கையை        ஒவ்வொரு விதமாகவே   காண்பர்   புரிந்துகொள்வர்.
அதில்   யாதொரு  ஒற்றுமையையும்   ஒத்தகருத்தையும் எட்ட முடியாது!
குடும்ப அமைப்பின்  நிலையும் இதுவே!    வாழ்க்கையின் அசலான தன்
மையை  அதன் ஆழமான அர்த்தத்தை  உண்மையை    உணர்வுத் துடிப்
புள்ள ஒவ்வொரு தனிமனிதனாலும் உணரமுடியும். ஆனாலும் அத்தனி
மனிதனின் கருத்தை  பார்வையை  சமூகத்தின்   அனைவரும்   ஏற்றுக்
கொள்வர்   என்று  சொல்லமுடியாது.   ஏனெனில்,    தாங்கள்  கண்டிராத
அனுபவம் கொள்ளாத   உணராத  ஒரு  விஷயம்  குறித்த  அறிவை புரித
லை பிற தனிமனிதர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது;  அதைப்பகிர்ந்து
கொள்ளவும் முடியாது.

அப்படி   சமூகத்திலுள்ள     குடும்பத்திலுள்ள    எல்லா உறுப்பினர்களும்
ஏற்றுக்கொள்ளக்கூடியதாக  பகிர்ந்துகொள்ளக்கூடியதாக அனைவருக்
கும் பொதுவான ஒரு வாழ்க்கை உள்ளதென்றால் அது   அடிப்படையான
அன்றாட ஜீவித்தல் மட்டுமேயாகும்!

ஆம் புத்தரின் இயேசுவின் கருத்துகளை  வாழ்க்கைப் பார்வையை   நம்
எல்லோராலும்   எளிதாகப்   புரிந்துகொள்ளவோ   பகிர்ந்துகொள்ளவோ
இயலாது!   ஆனால்  அவர்களுடைய  உணவை பொருட்களை அறையை
நாம் பகிர்ந்துகொள்ள முடியும்!

சமூகத்திற்கு வெறும் உயிர்-வாழ்தலும் அதற்குரிய தேவைகளின் நிறை
வேற்றமும் மட்டுமே தெரியும். அதற்குமேல் ஆன்மீகரீதியான வாழ்க்கை
இன்னும் மனிதவாழ்க்கையின் அசலான குறிக்கோள்  இலக்கு குறித்தும்
எதுவும் தெரியாது!  அவை குறித்த  அவசியமும்  முக்கியத்துவமும் அதற்
குப்புரியாது!

ஆனால் இயேசு,  நமக்கும்   உலகிற்கும்  சொல்ல வந்தது  நாமனைவரும்
அறிந்த  இந்த அன்றாட உயிர்வாழ்க்கையைக்கடந்த உணர்வுபூர்வமான
தொரு "உயர்-வாழ்க்கை"யைப் பற்றியே ஆகும்.

ஆம்  இயேசுவின் பார்வையில் வாழ்க்கை என்பது முற்றிலும்  சுத்தமான
தாக  சுதந்திரமானதாக கலப்படமில்லாததாகத் திகழ்கிறது. பொதுவாக
நாமெல்லோரும் வாழ்க்கையை ஒரு நெடிய பயணமாகக் கருதுகிறோம்.
ஆனால்  இயேசுவோ பயணத்தின் முடிவாகப்   போய்ச்சேருமிடத்தையே
வாழ்க்கையாகக்    காண்கிறார்!    அவ்வாறே  அவர்  அந்த  இலக்கையும்
சென்றடைந்து விட்டார். அவர் அடைந்தது  வாழ்க்கையின் "உச்ச நிலை"
யாகும்! அங்கிருந்துதான் அவர் நமக்கு உபதேசிக்கிறார்!   நாம் ஒவ்வொ
ருவரும்   அந்த    'உச்ச-நிலையை'   முழுமையை   அடையவேண்டுமென
நமக்கு நேர்வழியைக் காட்டுகிறார்!

இது   மிகவும்  முக்கியமானது!   எந்தவொரு பயணமும்  அதன் முடிவிடத்
தைக்கொண்டுதான் அர்த்தம் பெறுகிறது. வாழ்க்கையும் அப்படித்தான்.
போய்ச்  சேருமிடம்  அறியாத     முடிவிடமில்லாத  பயணம்    அர்த்தமற்ற
தாகும்!    நாம் பயணிக்கிறோம்,    அதாவது   'வாழ்கிறோம்'  என்கிறோம்!
ஆனால் நாம் எங்கே எதை நோக்கிச்செல்கிறோம் என்பது நமக்குத்தெரி
யாது!    அதைத்  தெரிந்து  கொள்ள  நாம்  பெரிதாக  ஆர்வமும்   கொள்வ
தில்லை முயற்சியும் மேற்கொள்வதில்லை.  நாம்    உண்மையில் போய்ச்
சேரவேண்டியஇடத்தை அறியாததால் "மரணம்" நம்மை வந்துசேர்கிறது!
ஆனால்  முறையாக  உண்மையாக  நாம் பயணித்தோமெனில் 'மரணம்'
நம்மை  நெருங்குவதற்குள்   நாம்   நித்தியவாழ்வை   அடைந்திடுவோம்!
ஏனெனில் உண்மையான உணர்வார்ந்த வாழ்க்கை மரணத்தில் முடிவது
இல்லை!   மாறாக  முழுமையான   அழிவில்லா   நித்திய   வாழ்க்கையில்
தான்  அது  நிறைவடையும்!   உண்மையான வாழ்க்கை ஒரு போதும் அழி
வதோ,  முடிவடைவதோ  கிடையாது!!  மாறாக  வாழ்க்கை முழுமையடை
யவே செய்கிறது!

உயிர்-பிழைத்திருத்தலைத்தவிர மனித-வாழ்க்கை பற்றி எதுவுமே தெரி
யாத ஒரு பெரும் சமூகத்திற்குள்,  அதன் பகுதியான குடும்ப-அமைப்பிற்
குள்தான் (தனி)மனிதர்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கரையேறவேண்டி
யுள்ளது என்பது துரதிருஷ்டவசமானதாகும்!

மேலும்  ஆன்மீகரீதியாக வளர்ச்சியடைந்த தனி மனிதர்களுடன் ஒப்பிடு
கையில்     சமூகமும்   குடும்பமும்  மிகவும்  பின்தங்கிய    பிற்போக்கான
ஜந்துக்களின்    கோட்டையாகவே   உள்ளன எனலாம்!ஆகவே அன்றாடம்
கடந்த 'ஆன்மீகவாழ்க்கை' என்பது இந்த சமூக-ஜந்துக்களுக்கும் குடும்ப
ஜந்துக்களுக்கும் ஒரு மாபெரும் 'அச்சுறுத்தலாகவும்' 'வாழ்க்கைவிரோத'
மான விவகாரமாகவே தெரியும்!

ஆன்மீகவளர்ச்சியின் உச்சத்தையடைந்த இயேசு போன்ற ஒரு தனிமனி
தரானவர்  அன்றாட வாழ்க்கை  நடைமுறைகளையும் மட்டுப்படுத்துகிற
அதன்   சுற்றினையும்     கடந்து  செல்வதன்  அவசியத்தைப்  போதிக்கும்
போது   அவர்   ஒட்டு மொத்தமாக    இந்த    அடிப்படை வாழ்க்கையையே
தகர்ப்பவராகவே மறுப்பவராகவே தெரிவார்!   இயேசுவின் தனிச்சிறப்பு
மிக்க 'வாழ்க்கைப்பார்வை' யின் சாரம் என்னவென்றால் :
           வாழ்க்கை என்பது உணவு உடை உறைவிடம்
           மற்றும் உறவுகள் குறித்த விவகாரம் அல்ல!
என்பதே யாகும்! இவ்விவகாரங்களுக்கும்  வாழ்க்கையில் இடம் உள்ளது
என்றாலும் அதற்கான இடம் மிகமிகச் சிறியதே என்கிறார்! ஆகவேதான்
அவர்     "என்னத்தை உண்போம்   என்னத்தைக் குடிப்போம்  என்னத்தை
உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள் . . .முதலாவது தேவனின்ராஜ்
யத்தை தேடுங்கள். ." என்கிற வசனத்தின் மூலம் வாழ்க்கையை வெறும்
"சோற்றுப் பிரச்சினை"யாகவும் தேவைகளுக்குச் சேவைபுரியும்  விவகா
ரமாகவும்  காண்கிற  சுருக்கி விடுகிற மட்டுப்பாட்டிலிருந்தும் வெளிவரு
மாறு நம்மைக் கோருகிறார்!  ஆகவே தான் :
                    "ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள்
                     அவன் வீட்டாரே."          (மத்தேயு 10:36)                                          
என்றுசொல்லி நம்மை எச்சரிக்கிறார்!   ஆம்,  'ஒரு மனிதனுக்கு எதிரிகள்
அவன் குடும்பமே குடும்பத்தாரே' என்பதை நாம் அப்படியே எடுத்தஎடுப்
பிலேயே புரிந்துகொள்ளமுடியாது!

முதலில்  வீடு குடும்பம் என்பவை   எவற்றைக்குறிக்கின்றன பிரதி நிதித்
துவம்  செய்கின்றன  என்பதைக்காண்போம்.   வீடு  குடும்பம்   என்பவை
மிகவும்  பாதுகாப்பான  சௌகரியமானதொரு   கூடு  எனலாம். பெரிதும்
அடிப்படையானதும்   உடனடியானதுமான  தேவைகளை மட்டுமே மைய
மாகக்கொண்டதொரு 'வாழ்க்கை' யை மட்டுமே அவை பிரதிநிதித்துவம்
செய்கின்றன.    அடுத்து   பிராணித்தனமான   இன்பங்களையும்   இச்சை
களையும்     பாசப் பிணைப்புக்களையும்   பிரதானமாகக்   கொண்டவை.
அடுத்து  பழமை  பாரம்பரியம் பிற்போக்குத்தனம் ஆகியவற்றைப்பேணு
கிற அமைப்புமாகும்!

அடுத்து    ஒரு குடும்பத்திலுள்ள   அங்கத்தினர்களைப் பாதுகாத்துப் பரா
மரிப்பதற்கு  குடும்பத்தலைவராக  விளங்குபவர் உத்தியோகம் தொழில்
என்று வெளியேசென்று சம்பாதித்துவரவேண்டியுள்ளது. அதற்காக அவர்
தமது உழைப்பையும் சக்தியையும் நேரத்தையும்முழுமையாகச்செலவிட
வேண்டியிருப்பதால்   அவரால்    அன்றாட வாழ்க்கைக்குரிய  தேவைகள்
பொருட்கள் அலுவல்கள் விவகாரங்கள் பரிவர்த்தனைகள்ஆகியவற்றை
கடந்து  வேறு எந்த விஷயத்திலும்  ஈடுபடுவது என்பது     இயலாத காரிய
மாகும்! அதில் எந்தவித பொருட்-பயனும் இல்லாத  உயரிய ஆன்மீக விஷ
யங்களில் ஈடுபடுவது என்பது  நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத காரிய
மாகும்!

இன்னும்    பலரது குடும்பங்களில்      பொருளாதாரக் காரணங்களுக்காக
குடும்பத்  'தலைவரும்'   'தலைவியும்' வெளியேசென்று பணி புரியவேண்
டியுள்ளது!   குழந்தைகளுக்கோ பள்ளி கல்லூரி செல்வது பிழைப்புக்கான
கல்வியையும்   திறமைகளையும் கற்பது   போன்ற  ஈடுபாடுகள் உள்ளன.
இவ்வாறு குடும்பத்திலுள்ள அனைத்துஅங்கத்தினர்களும் - சிறியவர்கள்
பெரியவர்கள்   என எல்லோருமே  அன்றாட உயிர்வாழ்த்லுக்கான  பொரு
ளியல்    சம்பந்தமான   விவகாரங்களில்  மட்டுமே    முழுவதுமாக  மூழ்கி
யிருக்க   வேண்டியுள்ளது!    இதனால்   மனிதஜீவிகள்   என்கிற வகையில்
மனிதஜீவிக்குரிய    உயரிய-ஆன்மீக வாழ்க்கைத்  தொடர்பான விஷயங்
களில்  ஈடுபட இயலாமல்  எப்போதும் புறத்தே பொருட்கள் மற்றும் சமூக
நிகழ்வுகளின்  உலகத்தைச் சார்ந்திருக்குமாறு  ஆகிவிடுகிறது! அதாவது
வீடு  குடும்பம்  குடும்பத்தார் என்றாலே உடலின் நலம் உள்ளிட்ட உடலின்
வாழ்க்கையை   மட்டுமே    பிரதிநிதித்துவம் செய்வதாயுள்ளது. ஆக ஆன்
மீகம் சேராத  வெறும்  உடலின்-வாழ்க்கை  என்பது  பிராணித்தனமானது
அதாவது   மனிதத்தரத்திற்குக் குறைவானது    என்பதை பிரத்யேகமாகக்
குறிப்பிடத் தேவையில்லை!

வீடு குடும்பம் எனும் சூழலில் லௌகீகம் மட்டுமே பெருகிவளரும்! அதில்
ஆன்மீகம்  என்கிற  பேச்சுக்கே இடமில்லை   என்பது தான் அப்பட்டமான
உண்மை நிலையாகும்!   இத்தகைய  சூழலில் ஒருசில மனிதஜீவிகளுக்கு
எவ்வாறேனும்   ஆன்மீக-நாட்டம் தோன்றிவிடுகிறது   என்றாலும் குடும்ப
அங்கத்தினர்களின்   எதிர்ப்புகளையும்   தடைகளையும் தாண்டி  அவர்க
ளால்  ஆன்மீகத்தில் முன்னேறுவது முழுமையடைவது என்பது சாதாரண
விஷயமல்ல!    ஆகவே தான்,    "ஒரு   மனுஷனுக்கு    சத்துருக்கள்    அவன்
வீட்டாரே" என்று இயேசு குறிப்பிடுகிறார். மேலும்,

                  "தகப்பனையாவது தாயையாவது என்னிலும்
                   அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன்
                   அல்ல; மகனையாவது மகளையாவது  என்னிலும்
                   அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன்
                   அல்ல."                                         (மத்தேயு 10:37)
                                       
எனவும் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் தனது தகப்பனையோ, தாயையோ        
மகனையோ   மகளையோ  அதிகமாய் நேசிப்பதில்  பெரிய தவறு எதுவும்
இல்லை!   ஆனால்  இவ்வாறு  தனது குடும்பத்தாரை அதிகமாய் நேசிப்பது
என்பது  வெறும் 'நேசிப்போடு'  நின்றுவிடக்கூடிய விஷயமல்ல!  நாம் யார்
யாரையெல்லாம்     அதிகமாய்  நேசிக்கிறோமோ  அவர்களுடைய    நலன்
களையும்   தேவைகளையும்   ஆசைகளையும் விருப்பங்களையும்   நிறை
வேற்றுவதும் அதில் அடங்கியுள்ளது - சில சமயங்களில் அவர்களது விருப்
பம்  நியாயமற்றதாகவும்   பிறர்க்குத்  தீங்குவிளைவிப்பதாகவும் தவறான
தாகவும்   அர்த்தமற்றதாகவும் கூட அமைந்து விடலாம்!    ஒருவன்     தனது
மனைவியின்    விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காக   கொலை   களவு
போன்ற தீய காரியங்களையும்  செய்திடத் துணியலாம்!  ஆக நாம் அதிக
மாய்   நேசிப்பவர்களை    மகிழ்விக்கும் பொருட்டு அவர்களது விருப்பங்க
ளுக்கும்  வழிமுறைகளுக்கும்  இணங்கிச்செல்வதும் அவர்களுக்குச் சேவ
கம்   புரிவதும்   தவிர்க்க இயலாத தாகிவிடும்!    இவ்வகையில்   உறவுகள்
யாவும் பினைக்கும் தளைகளே சங்கிலிகளே எனலாம்!
ஆக,            " தகப்பனையாவது   தாயையாவது   என்னிலும்
                       அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன்
                       அல்ல; மகனையாவது மகளையாவது  என்னிலும்
                       அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல."                        
என்று   இயேசு சொல்லிடும் போது   அவர்  தன்னை முன்னிலைப்படுத்துவ
தாகவும் பிரதானப்படுத்துவதாகவும் தெரியலாம்!  ஆனால் அவர் ஓர் உயர்
ஆன்மீகவாழ்க்கையைப் பிரதிநிதித்துவம்செய்வதால் மேலும் அத்தகைய
உயரிய வாழ்க்கையையே அவரும் வாழ்ந்து கொண்டிருந்ததால் அதையே
அவர்    நமக்கும்   உபதேசிப்பதால்    பிற  சாதாரண மனித உறவுகளையும்
பொருட்களையும்   விஷயங்களையும்விட அதிகமாய் நாம் இயேசுவையும்
அவர்  உபதேசிக்கும் உயரிய ஆன்மீக வாழ்க்கையையும் நேசிப்பது பிரதா
னமாகிறது!

உயரிய   ஆன்மீக வாழ்க்கை என்பது    "கடவுளுடனான"   உறவைப்பற்றிய
தாகையால்  நாம்   குடும்பம்  மற்றும்   பிற உறவுகளில்  சிறைப்பட்டிராமல்
அவற்றைக்கடந்து  செல்வது அவசியமாகிறது!   ஏனெனில் குடும்ப உறவுக
ளைப்போல   வேறு   எந்த உறவும்   நம்மைப்  பெரிதாகச்   சிறைப்பிடிப்பது
இல்லை! மேலும் குடும்ப உறவுகள்   யாவும்   குறுகியவையும்   சுயநலமான
வையும்   ஆகும்! ஆகவே அனைத்திற்கும் மூலமாகவும் முடிவாகவும் விளங்
குகிற கடவுளைத்தேடுகிற,   கடவுளுடனான உறவு  மட்டுமே   முக்கியமான
தாகும்.    ஏனெனில்  அது மட்டுமே   மனிதனை   நிறைவுசெய்து  முழுமைப்
படுத்தி "விடுதலை" செய்வதாகும்!

ஆனால்   கடவுளை ஏன் மனிதன் முதலில் தேடிடவும் நாடிடவும் வேண்டும்?
சாதாரணமாக  பொதுவாக எல்லோரும் எண்ணுவது போல கடவுள் என்பது
படைப்புக்கு  மூலகாரணமாக  அமைந்திட்ட  ஒன்று  மட்டுமல்ல!  அதாவது
கடவுள்  உலகைப்படைத்துவிட்டு  பொறுப்பில்லாமல்   எங்கோ காணாமல்
போய்விடவில்லை! அல்லது அவர் மேலே சொர்க்கத்தில்அமர்ந்துகொண்டு
கீழே      உலகில்   நிகழ்பவைகளை    கண்காணித்துக்கொண்டும்   இருக்க
வில்லை!   மாறாக   கடவுள்  படைப்பினுள்  உள்ளடங்கியுள்ளார்!   அதாவது
கடவுள்  உலகைப் படைக்கவில்லை;   மாறாக  அவரே  உலகமாக உருமாறி
யுள்ளார்!   உலகமாக உருமாறிய கடவுளைத்தான் நாம் 'படைப்பு' 'சிருஷ்டி'
'உலகம்' என்றெல்லாம் அழைக்கிறோம்!

உலகமாக   உருமாறிய கடவுள்  மனிதஜீவியின் வழியாக  மனிதனின்  உள்
ளேயும் ஊடேயுமாக எழுந்து (வெளிப்பட்டு) மீண்டும் தனது அசலானநிலை
யை அடையும்விதமாகத்  திட்டம் கொண்டுள்ளார்!

                  "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச்
                    சிருஷ்டித்தார்,அவனைத் தேவசாயலாகவே
                    சிருஷ்டித்தார்.ஆணும் பெண்ணுமாக
                    அவர்களைச்  சிருஷ்டித்தார்."
                                     (ஆதியாகமம் 1 :27) / பழைய ஏற்பாடு

என்ற    வசனத்தின்   உள்ளார்ந்த  அர்த்தம்  இதுதான். சிருஷ்டியாக மாறிய
கடவுள் சிருஷ்டியின் நிலையிலிருந்து மீண்டும் தனது அசலானநிலைக்குத்
திரும்பிடும்  வழிமுறையைத்தான் நாம்  "பரிணாமம்"  என்றழைக்கிறோம்.
அதில் கடவுள் தனது  அசலான நிலைக்குத் திரும்புவது என்பதும்   மனிதன்
கடவுளின்  மீது நேசம்  (தேவ அன்பு)  கொண்டு  அவரைத் தேடிக்  கண்டடை
வது என்பதும் ஒன்றேயாகும்.

கடவுளின் மீது நேசம் கொள்வது,   'தேவஅன்பு'  கொள்வது என்பது  ஞானத்
தாகம் கொண்டு      உண்மையைத் தேடுவது,    மெய்ம்மையைத்  தேடுவது
தன்னையறிவது, வாழ்வின் அர்த்தத்தைத் தேடுவது,  மூலத்தைத்தேடுவது
முழுமையைத் தேடுவது என்பவற்றையே குறிக்கின்றது.   ஆம்   மனிதஜீவி
யானவன் ஒரு எலியைப் போன்றவனோ,  அல்லது    தவளையைப் போன்ற
வனோ    அல்லவெனில்,     அவன்  தனது  உணவைத்தேடுவதற்கு முன்பாக
உண்மையைத் தேடுபவனாக இருக்கவேண்டும்!அவன் தனது 'இரை'யைத்
தேடுவதற்கு  முன்பாக,   "இறை"யைத் தேட வேண்டும்!  ஏனெனில்  கடவுள்
என்பது நமது "உயிரின் உயிர்,"  "ஆன்மாவின் ஆன்மா" ஆகும். அனைத்தின்
சாரம்  ஆகும்.     'மெய்ம்மையின் மெய்ம்மையாக'   விளங்குவது   கடவுளே!
ஆகவேதான் எல்லா உறவுகளையும் கடந்து நாம் கடவுளைத்  தேடிக்கண்ட
டைவது அவசியமாகும்!

இயேசு நம்மிடம் நமது தாய் தந்தையை நம் குழந்தைகளை நேசிக்கவேண்
டாம் என்று சொல்லவில்லை!   மாறாக  நமது  "நேசிப்பின்"  இலக்கு  எதைக்
குறிவைத்ததாக  உள்ளது என்பது குறித்து கவனம் கொள்ளச்  சொல்கிறார்.
அதாவது  நாம் நமது தாய் தந்தையை குழந்தைகளை நேசிப்பதன் வழியே
நாம் அவர்களை எங்கு கொண்டு சேர்க்கிறோம்?   அல்லது    நமது     தாயும்
தந்தையும்   அவர்களது    நேசத்தினால்  நம்மை எங்கு கொண்டு  சேர்த்துள்
ளார்கள்?   மேலும்   நம்முடைய   'சுய-நேசம் '  (ஒருவன் தன்மீது கொள்ளும்
நேசம்) என்பது நம்மை எங்கு கொண்டுசேர்க்கிறது? இவைகுறித்தெல்லாம்
என்றாவது நாம் யோசித்திருக்கிறோமா? நம்முடைய   'சுய-நேசம்'  நம்மை
உண்மையில் கரை சேர்க்கிறதா?   நம்மை  நாம்  அவ்வளவு  அதிகமாகவும்
முழுமையாகவும் நேசிக்கிறோம்!   ஆனால்  முடிவில்  மரணத்தில் அல்லவா
நாம் முடிந்து போகிறோம்?  அப்படியானால் நேசம் அன்பு என்பது பயனற்ற
விஷயமா?  அன்பைவிட  மரணம்  வலியதா?   அப்படியானால்  எது அல்லது
எதனுடனான  நேசம்  அல்லது  உறவு  நம்மை  பாதுகாப்பான இறுதிக் கரை
யில் கொண்டு சேர்க்கும்?

நம்    பெற்றோர்கள்  நம்மை அன்பைக் கொட்டி  சீராட்டிப் பாராட்டி வளர்க்
கிறார்கள்!    ஆனால்   அவர்கள்  நம்மை  எதற்குத் தயார்படுத்துகிறார்கள்?
நாமும் நம் குழந்தைகளை அன்பைப்பொழிந்து வளர்த்து அவர்களை எதற்
குத்  தயார்படுத்துகிறோம்?    நமது  அன்பு  நேசம்  யாவும்   நம்மையும்  நம்
சொந்தங்களையும் வாழ்க்கையிலிருந்து அழிவிலா நித்தியவாழ்க்கைக்கு
கொண்டு சேர்ப்பதாகவுள்ளதா?  அதாவது 'நித்திய-ஜீவனை' அடைவதற்கு
நம்மைத்  தயார்படுத்துவதாகவுள்ளதா?  அல்லது   மரணத்திடம் கொண்டு
சேர்ப்பிக்கிறதாகவுள்ளதா?   அப்படியானால்   அதாவது மரணம் தான் முடி
வான முடிவு என்றால் நம்முடைய அன்பு நேசம் பாசம்  யாவும் பயனற்றதே!
அர்த்தமற்றதே! மிகவும் மட்டுப்பாடானதே! ஆம் நம்முடையஅன்பில் ஏதோ
பெருங்குற்றம் உள்ளது.

அன்பு   என்பது   மிகவும் மையமானது! அன்பு இல்லாமல் ,  நாம் மட்டுமல்ல
புழு பூச்சிகள் பறவைகள் விலங்குகள்  எதுவும் வாழ முடியாது! "வாழவேண்
டும்"  எனும் விருப்பம்,    "தம்மைப்  பாதுகாத்துக் கொள்ளவேண்டும்"  எனும்
உந்துதல் இன்றி எவரும் எதுவும் உயிர்வாழ முடியாது! மானிட ஜீவிகளாகிய
நாம்  தற்போது   வாழ்ந்துகொண்டிருக்கிற  அர்த்தமற்ற  உணர்வற்ற   இலக்
கற்ற  மேலோட்டமான இந்த அரைகுறையான வாழ்க்கையும்கூட மிகஅடிப்
படையான, சுய-நலம் மிகுந்த 'சுய-அன்பினால்' தான் சாத்தியமாகிறது!

'வாழவேண்டும் எனும் விருப்பமும்' மற்றும் 'தம்மைப்பாதுகாத்துக்கொள்ள
வேண்டும்  எனும்  உந்துதலும்'   தான்       அன்பிற்கான     அடிப்படையாகும்!
ஆனால்    நம்முடைய   அன்பைக்கொண்டு  நம்மால்  உயிர்-பிழைத்திருக்க
மட்டும் முடிகிறதேயொழிய முழுமையாக வாழவும் முழுமையாக நம்மைப்
பாதுகாத்துக்கொள்ளவும் முடிகிறதா?  'மரணம்' சம்பவிக்கும் வரை மட்டும்
வாழமுடியும்! மரணம்வந்ததும் நம் கதை முடிந்துவிடும்! அதாவது முழுமை
குறைவான  முதிராத 'பிஞ்சு' அன்பைக்கொண்டு நாம் ஏதோ வாழ்கிறோம்!
ஆனால்  அதைக்கொண்டு  நம்மை   முழுமையாகக்   காப்பாற்றிக்கொள்ள
முடிவதில்லை! அப்படியானால் முழுமையான அன்பு நம்மிடமிருந்தால்  நம்
மால்   முழுமையாக    வாழவும்   முழுமையாக மரணத்திடமிருந்து நம்மைக்
காப்பாற்றிக்கொள்ளவும் முடியும்!

ஆகவேதான்  இயேசு "தேவனின் ராஜ்யம்" பற்றியும்,  "இரட்சிப்பு"  பற்றியும்,
"நித்தியஜீவன்"  மற்றும்,  "தேவஅன்பு"   பற்றியும்    உபதேசிக்கிறார்!    ஆம்
இவை ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவையாகும்!  இரட்சிப்பு என்பது
பாவத்திலிருந்தும்  அதன் விளைவுகளிலிருந்தும்  ஆன்மா  காப்பாற்றப்படு
தலைக்குறிக்கிறது.   "பாவத்தின் சம்பளம் மரணம்" (ரோமர் 6:23).  அதாவது
மரணத்திலிருந்து      காப்பாற்றப்படும்   ஆன்மா   அழிவற்ற "நித்தியஜீவன்"
எனும் நிலையை அடைகிறது; அதாவது "தேவனின் ராஜ்யத்தினுள்"அடைக்
கலம் புகுகிறது! ஆம் மரணத்திற்குமாற்றாக இயேசு முன்வைக்கும் அம்சம்
தான்  "இரட்சிப்பு"  என்பதாகும்!    ஆனால்,      இயேசுவின்  உபதேச வசனங்
களின்படி   'இரட்சிப்பு'   என்பது   'இலவசமாக'வோ,   அல்லது  'பரிசாக'வோ
கிடைக்கவழியில்லை!!

ஆனால்,   'பதிமூன்றாம் அப்போஸ்தலர்' என்று சொல்லப்படும் பவுல் என்ப
வருடைய   திரிக்கப்பட்ட பிரச்சாரத்தில்,   "இயேசு நம்முடைய பாவங்களுக்
காக மரித்தார்!"  எனவும், "இயேசு மனித குலத்திற்காக தன்னைத் தியாகம்
செய்தார்!" எனவும் சொல்லப்படுவது இயேசுவின் உபதேசங்களுக்கு விரோ
தமானதாகும்!    மேலும், அப்போஸ்தலனாகிய யோவான் எழுதிய முதலாம்
நிருபத்தில்(கடிதத்தில்) ,
          "  நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற
             கிருபாதாரபலி அவரே(இயேசுவே); நம்முடைய
             பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின்
             பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியா
             யிருக்கிறார்"        (1யோவான்2:2)
என்று எழுதப்பட்டிருக்கிறது! ஆனால், இவ்வசனம்,  இயேசுவின் மையமான
போதனைக்கு முற்றிலும் முரணானதாகும்! எவ்வாறென்றால்,

            "பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்
             என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால்,
             குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்த
             மாட்டீர்கள்"  
                                              (மத்தேயு 12:7)
என்பதாக    இயேசு  சொல்லியிருக்கிறார்! அதாவது "பலியையல்ல இரக்கத்
தையே    விரும்புகிறேன்"   என்று  சொன்ன  இயேசுவை;    குற்றமில்லாதவர்
களை நீங்கள் குற்றப்படுத்த மாட்டீர்கள்"   என்று   அறிவுறுத்திய  'குற்றமில்
லாத'  இயேசுவை,  'நம்முடைய குற்றங்களுக்காகவும்,பாவங்களுக்காகவும்'
"பலிகடாவாக"   ஆக்கிடுவது   அப்பட்டமான   சுய நலமும்    கயமைத்தனமு
மாகும். மேலும், இயேசு சொல்லியிருக்கிறார் :
            "ஒருவன் என் வார்த்தையைக்  கைக்கொண்டால்,
              அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்ப
              தில்லை என்று மெய்யாகவே  மெய்யாகவே
              உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்."
                                            (யோவான்8:51)
"ஒருவன் என் வார்த்தையைக்  கைக்கொண்டால்,"  என்பதன் அர்த்தம் 'என்
உபதேசங்களைக்   கடைப்பிடித்தால்'    என்பதே தவிர வெறுமனே என்னை
'நம்பினால்',   'விசுவாசித்தால்'  போதும்   உங்களுக்கு   'இரட்சிப்பு'   பரிசாக
அல்லது    இலவசமாகக் கிடைத்துவிடும்    என்று    எந்த இடத்திலும் இயேசு
சொன்னதில்லை!   மேலும்,
            "அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி:
              ஆண்டவரே,இரட்சிக்கப்படுகிறவர்கள்
              சிலபேர்தானோ என்று கேட்டான்;
              அதற்கு அவர்:"                (லூக்கா 13:23)
         
              "இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப்
               பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க
               வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும்
               என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."
                                                            (லூக்கா 13:24)

              "பரலோகத்திலிருக்கிற என் பிதாவின்
               சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக
               ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல்,
               என்னை நோக்கி : கர்த்தாவே!  கர்த்தாவே!
               என்றுசொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை."
                                                           (மத்தேயு 7 :21)
இவ்வாறு,  இயேசுவின் அனைத்து உபதேச வசனங்களும், விசுவாசத்துடன்
நில்லாமல்,   நாம் செய்யவேண்டிய  கிரியைகளையும், நாம் கடைப்பிடிக்க
வேண்டிய கற்பனைகளையும்(கட்டளைகளையும்), நிறைவேற்றவேண்டிய
நிபந்தனைகளையும் வலியுறுத்துவதாயிருக்கையில்,   'இரட்சிப்பு   இலவச
மாய்க் கிடைக்கும்'   என்று   சொல்வது   படு அபத்தமாகும்!  இப்போது நாம்
மேலே சொல்லப்பட்ட வசனத்தைப் பற்றிச்செல்வோம். "பரலோகத்திலிருக்
கிற என்பிதாவின் சித்தத்தின்படி" செய்தல் என்றால் என்ன? 'பிதா' என்பது
தேவனை, கடவுளைக் குறிக்கிறது. ஆனால், பிதாவின் சித்தத்தை எவ்வாறு
அறிவது?  ஒவ்வொரு மனிதனும் பிதாவின் 'உயர்-உணர்வு'க்கு  உயருவதன்
மூலம்  அறிந்து  கொள்ளலாம்!   உண்மையில்,  'பிதா',  'கடவுள்'  என்பது ஒரு
பேருணர்வே தவிர வேறல்ல!
               "தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத்
                தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும்
                உண்மையோடும் அவரைத்தொழுது
                கொள்ளவேண்டும் என்றார்."
                                             (யோவான் 4:24)
'ஆவி'  என்பது உணர்வையே (பிரக்ஞையையே) குறிக்கிறது. ஆக, மனிதன்
தனது  'அகந்தை' எனும் சிற்றுணர்வைக்கடந்து வளர்ந்திடும் போது அவன்
உணர்வின்   உச்சமான   பேருணர்வை,   கடவுளை  அடைகிறான். அதாவது
கடவுளுடன் ஒன்றாகிறான்! இயேசு அறிவித்தது போல,

              "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்"
               என்றார்.                         (யோவான்10:30)

இவ்வாறு மனிதனும் கடவுளும் ஒன்றாயிருக்க இயலாது;அது இயேசுவைப்
போன்ற விதிவிலக்கான ஓரிருவருக்கு மட்டுமே சாத்தியமாகும் என்று எவ
ரேனும்  சொன்னால்,   அவர் பைபிளை முறையாக, முழுமையாக வாசிக்க
வில்லை,  புரிந்து  கொள்ளவில்லை என்றுதான்  சொல்ல வேண்டும்.   ஏனெ
னில், இத்தகைய சாத்தியத்தை இயேசு   தன்னில் அடைந்ததோடல்லாமல்
எல்லோராலும் அடையமுடியும் என்று அறிவிக்கிறார். இதோ வசனம் :

           "ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள்
             பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல;
             நீங்களும் பூரண சற்குணராயிருக்கக் கடவீர்கள்."
                                                          (மத்தேயு5:48)

இவ்வசனத்தில், அவர் வெறும் சாத்தியப்பாட்டைப்பற்றி மட்டும் அறிவிக்க
வில்லை; நீங்கள் ஒவ்வொருவரும்அவ்வாறு இருக்கவேண்டும் என ஊக்கப்
படுத்துகிறார்.  ஆனால், ஒவ்வொரு  மனிதனும் உணர்வுக்கு வராமல், மேன்
மேலும் உணர்வில் பெருகி உயராமல், கடவுளின் சித்தத்தைஅறிந்துகொள்
ளவோ,படைப்பின்(பரிணாமத்தின்) திட்டத்தையும்,மானிடவாழ்க்கையின்
இலக்கையும்  உணர்ந்தடையவோ இயலாது!  இவை வெறும் அறிவு சார்ந்த
அணுகுமுறையின்  மூலமாக  அடையக்கூடியவையல்ல!   மாறாக, பிரதான
மாக உணர்வு சார்ந்த அணுகுமுறையைக்கோருபவையாகும்! ஆகவேதான்
யோவான்ஸ் நானனும்,  இயேசுவும்  " மனந்திரும்புங்கள்" பரலோகராஜ்யம்
சமீபித்திருக்கிறது   என்று   உபதேசித்தார்கள்!    இவ்வசனம்     மனிதனின்
உணர்வில்  ஏற்பட வேண்டிய பெரும் மாற்றத்தைப் பற்றியதாகும். உணர்வு
மாற்றத்திற்கு "தேவ அன்பு" வேண்டும்!  "தேவ அன்பு" என்பது இடை-நிலை
மெய்ம்மைகளைத் தாண்டிய    "இறுதி-மெய்ம்மை"    மீதான   நாட்டத்தைக்
குறிப்பதாகும்!

ஏற்கனவே,  நாம்  'முழுமைக்குறைவான' அன்பு பற்றியும்,    'முழுமையான'
அன்பு பற்றியும் பார்த்தோம். அதாவது நம்முடைய அன்பு 'முழுமைக்குறை
வாக  இருப்பதற்குக் காரணம்,   நாம் விரும்புகிற,    நேசிக்கிற விஷயங்கள்
யாவும்  நம்மைச் சுற்றியுள்ள மேலோட்டமான விஷயங்களும், உறவுகளும்,
பொருட்களுமாகத்தான் உள்ளன!   அந்தப்பட்டியலில்    மெய்ம்மை     இடம்
பெறுவதில்லை!அதாவது நாம் மேலோட்டமான  விஷயங்களையும், , உறவு
களையும்,  பொருட்களையும்  தேடுகிற விரும்புகிற,  நேசிக்கிற  பட்சத்தில்,
நமது உணர்வும்  அவைகளைத்தழுவி, அவைகளுக்கேற்ப மேலோட்டமான
தாகச் சுருங்கி  விடுகிறது!  ஆனால்,  நாம் மெய்ம்மையைத் தேடுகிற, நாடு
கிற, நேசிக்கிற பட்சத்தில் நமது உணர்வானது மெய்ம்மைக்கேற்ப விரிந்து
பரந்து முழுமையைத்தழுவி ஒன்றுபடுகிறது! "எண்ணம் போல் வாழ்வு"என
சாதாரணமாகச் சொல்வதுண்டு. ஆனால், "உணர்வு போல் வாழ்வு" என்பது
தான் மிகச் சரியானது.  ஏனெனில், எண்ணம், மனம் யாவற்றுக்கும் அடிப்ப
டையானது  உணர்வு.  அதாவது,  உணர்வு  மாறினால்  வாழ்க்கையின் தரம்
தன்மை யாவும் மாறிவிடும்! ஆம், உணர்வு மாற்றத்தினால் (பெற்றதினால்)
தான் குரங்கு மனிதனாயிற்று! தன்உணர்வின் 'மையத்துவத்தையும்,'  'முக்
கியத்துவத்தையும்  உணரும் மனிதன் கடவுளாகிறான்!     ஆம்   அஞ்ஞானி
ஞானியாவதும்,   கெட்டவன்  நல்லவனாவதும்,  'மரணம்'  நித்தியவாழ்வாக
மாறுவதும்,    யாவும்   உணர்வு- மாற்றத்தையே   சார்ந்துள்ளன!  ஏனெனில்,
முழுமையான உணர்வு தான் கடவுள் ('தேவன் ஆவியாயிருக்கிறார்')!

ஆம்,  பொருட்களுக்கும், உறவுகளுக்கும்  வாழ்க்கையில்   உரிய இடம்  உள்
ளது.  ஆனால்  கடவுளைத்தவிர   வேறு  எந்த உறவும்  இறுதியானதோ  முழு
மையானதோ அல்ல! ஆகவேதான், இயேசு இவ்வாறு

                   " யாதொருவன் என்னிடத்தில் வந்து,
                     தன் தகப்பனையும் தாயையும் மனைவியை
                     யும் பிள்ளைகளையும் சகோதரரையும்
                     சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்கா
                     விட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்"
                                                            (லூக்கா14:26)

என்று பிறிதொரு இடத்தில் சொல்லுகிறார். இவ்வசனத்தில், "எவனொருவன்
தனது 'குடும்பத்தாரை' வெறுக்காவிட்டால்"  என்று,    'குடும்பத்தாரை' எனும்
ஒற்றைச் சொல்லைக்கொண்டு குறிப்பிடாமல்,    ஒவ்வொரு உறவாக பட்டிய
லிட்டுச் சொல்லுகிறார்!    அப்பட்டியலில்   கடைசியாக       "தன் ஜீவனையும்"
வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான் என்று மிகத் துல்லிய
மாகவும்     தெளிவாகவும்   விதிவிலக்கின்றி     அனைவரையும்     அடியோடு
துடைத்துத்தள்ளுவதாகவும் குறிப்பிடுகிறார்.

ஒருவகையில்,   பிற உறவுகளனைத்தையும்  'வெறுக்கவேண்டும்'  என்பதை
நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம் என்று வைத்துக்கொள்வோம்! ஆனால்,
ஒருவன் தனது சொந்தஜீவனையும் வெறுக்கவேண்டும் என்று இயேசு சொல்
வதன் அர்த்தம் என்ன?

ஒருவன் தனது சொந்த ஜீவனுக்காக வாழ்வது என்பது 'சுய-அன்பை'க் குறிப்
பதாகவும்,   உடலின் தேவைகளையும்  இச்சைகளையும்  இன்னும்  லௌகீக
சுக போகங்களையும்  பூர்த்தி செய்துகொள்வதற்காக வாழ்வது  என்பதைக்
குறிப்பதாகவுமே  உள்ளது!    மேலும்,  பிறவனைத்து   உறவுகளும்,     ஒருவன்
தனது சொந்த ஜீவனுக்காக வாழ்தல் என்பதையே அடிப்படையாகக்கொண்
டுள்ளது!    இது  மிகவும்  மட்டுப்பாடான,  மனிதத்தரத்திற்குக்  கீழானதொரு
வாழ்க்கையாகும்!     இத்தகைய      வாழ்க்கையில்    மூழ்கியிருக்கும்   வரை,
மெய்ம்மை,  உண்மை, கடவுள் குறித்த தேடலுக்கு இடமிராது என்பதாலேயே
பிற உறவுகளோடு, ஒருவன் தன் 'சொந்த-ஜீவனுடன்' கொண்டுள்ள சுய-உற
வையும்  வெறுக்கவேண்டும்;  அதாவது,  தனது ஜீவனையும் வெறுக்கவேண்
டும், கடந்து செல்லவேண்டும் என இயேசு வலியுறுத்துகிறார்.

இந்த வசனம் இயேசுவினுடைய சீடர்களுக்காக மட்டும் சொல்லப்பட்டதல்ல.
அப்படி   அவர்   தனது  சீடர்களுக்கு மட்டும்தான் சொன்னார் என்றால், இந்த
வசனத்தையும்,  மொத்த பைபிளையும்  நாம்   வாசிக்கவோ புரிந்துகொள்ள
வோ,   அவை  குறித்து   சிந்திக்கவோ,  தியானிக்கவோ   தேவையில்லையே!
"யாதொருவன் என்னிடத்தில் வந்து . .   " என  இயேசு சொல்லும்போது எவரெ
லாம் இயேசு விடம் செல்கிறார்களோ   அவர்களுக்கு மட்டுமே  இந்த வசனம்
பொருந்துகிறது என்று அர்த்தமல்ல!மாறாக,  'இயேசுவிடம் செல்வது' என்பது
எவரெலாம்   'அசலான,   உண்மையான,   அர்த்தமுள்ள வாழ்க்கையை  வாழ
விரும்புகிறார்களோ;'  அன்றாட  ஜீவிதத்திற்குத்  தேவையான  புறப் பொருட்
களை  நாடித்தேடாமல், முதலில் வாழ்க்கையின் உட்பொருளைத்தேடுவதில்
நாட்டம் கொள்கிறார்களோ அவர்களெல்லோருக்கும்  இந்த வசனம் பொருந்
தும்.   'இயேசுவின் சீடனாயிருப்பது'  என்பது,    'அசலான  ஆன்மீகபூர்வமான
வாழ்க்கைக்குத் தகுதியுள்ளவனாயிருப்பது' என்பதையே குறிக்கிறது!

மேலும்,      ஒவ்வொரு  மனிதனும்   தமது  நெருக்கமான குடும்ப  உறவுகளின்
மையமாக விளங்குவதாகத்தெரிந்தாலும் , ஒருவன் தனது மையத்தில் "தான்
யார்?"   எனத் தெரியாத  ஒரு ஜந்துவாகவே விளங்குகிறான்.   அந்த ஜந்துவின்
தேவைகளையும்   இச்சைகளையும்   விருப்பங்களையும்    சிரமேற்கொண்டு
நிறைவேற்றிடும்  ஒரு  ஊழியக்காரனாகவே  அவன்   திகழ்கிறான்   என்பதா
லேயே   ஒருவன் தனது ஜீவனையும் வெறுக்கவேண்டும் என்று இயேசு சொல்
கிறார்.

அடுத்ததாக, இயேசு சொல்கிறார்:

                 "அப்படியே உங்களில் எவனாகிலும்
                  தனக்கு உண்டானவைகளையெல்லாம்
                  வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச்
                  சீஷனாயிருக்கமாட்டான்."
                                                  (லூக்கா 14:33)

எவ்வெவ்விஷயங்கள் ஆன்மீகப்பூர்வமான வாழ்க்கைக்கு,அதாவது உண்மை
யான அர்த்தமுள்ள வாழ்க்கைக்குத் தடைகளாகவிளங்குகின்றனவோ அவற்
றையெல்லாம்      இனம்கண்டு  விலக்கிக்  கடந்து   முன்னேறிச்   செல்லுமாறு
இயேசு  அறிவுறுத்துகிறார்.  இந்த  வசனத்தின் மூலம்  இன்னும் விலக்கவேண்
டிய,  கடந்து செல்லப்படவேண்டிய  தடைகளாக   ஒருவனுக்கு  "உண்டானவை
கள்"   எல்லாவற்றையும்   வெறுக்கவேண்டும்  என இயேசு அறிவுறுத்துகிறார்.
ஒருவனுக்கு   'உண்டானவைகள்'   எவையெவையென  இயேசு  பட்டியலிட்டுச்
சொல்லவில்லை  என்பதிலிருந்து  அவற்றில்  'விதிவிலக்கு'  எதற்கும்  இல்லை
என்பதையே  குறிக்கிறது!  ஆம், நமக்கு  'உண்டானவைகள்' என்பவை  யாவும்
புறம்சார்ந்த, புறத்தேயுள்ள விஷயங்களும் பொருட்களும்தான். அவை பணம்
பொன்,  நிலம், சொத்து, சுகம், மற்றும் பிறபொருட்கள்; அடுத்து சமூகரீதியான
புகழ், நற்பெயர், செல்வாக்கு, அந்தஸ்து;    அரசியல்ரீதியான பதவி, அதிகாரம்,
ஆள்பலம் ஆகியவையும்; ஆளுமைசார்ந்த தனிப்பட்ட தோற்றம், அழகு, நிறம்,
பாணி, விசேடதிறமைகள், மனப்பான்மைகள், விருப்பங்கள், ஆசைகள், இலட்
சியங்கள் . . . ஆகிய எல்லாவற்றையும் ஒருவன் வெறுக்கவேண்டும். அப்போது
தான்,  இயேசு சொல்கிற  உண்மையான  வாழ்க்கையின் விதிகளை முழுமை
யாகப்  பின்பற்றி, நிறைவேற்றி வாழ்ந்திட இயலும்.

ஒருவனுக்கு  'உண்டானவைகள்' என்பவை யாவும் ஒருவனை புறத்தே கட்டிப்
போடுகிற பிணைப்புக்களே, தளைகளே என்பதால் அவை ஒருவனை அகரீதி
யான   ஆன்மீக   வாழ்க்கைக்குள்  விரவேசிக்க விடாது. மாறாக, அவனை புற
வாழ்க்கை எனும் மேலோட்டமான    அன்றாட விவகாரங்களில்     மூழ்கடித்து
விடும். மேலும், அகரீதியான  ஆன்மீக   வாழ்க்கைக்கு   சிதறாத,   முழு-கவன
நிலை மிகவும் அவசியமாகும்.  ஆகவேதான்  இயேசு   ஒருவனுக்கு உண்டான
வைகளையெல்லாம்  வெறுக்கவேண்டும்,  அதாவது  கடந்து சென்றிட வேண்
டும் என்று வலியுறுத்துகிறார்.

மேலும், ஒருவனுக்கு உண்டானவைகள் என்பவை யாவும் மட்டுப்பாடானவை
சாதாரணமானவை;  அவை பயன்பாட்டுக்குரியவை  என்றாலும்  இறுதியான
முழுமையான பயனை,   "பிறவிப்பயனை"ப்  பெற்றுத்தருபவையல்ல.  அவை
எதுவும்     முக்கியமானவையோ,  மனிதனை  நிறைவுசெய்யக்கூடியவையோ
முழுமைப்படுத்தக்கூடியவையோ அல்ல. ஆகவே, ஒருவனுக்கு உண்டானவை
களையெல்லாம் வெறுப்பது, கடந்து செல்வது முன்தேவையாகிறது.   இவைக
ளையெல்லாம்  ஒட்டுமொத்தமாக வெறுக்கவேண்டும் என்று இயேசு சொல்வ
தற்கான மிகமுக்கியமான காரணம், இன்னும் ஒருவனுக்கு "உண்டாகாதவை"
களை கைப்பற்றிடவே யாகும்!

இன்னும்  "உண்டாகாதவை"  என்பவை  அர்த்தம், உண்மை, ஆனந்தம், முக்தி,
மோட்சம்,  நித்தியஜீவன், தேவனின்ராஜ்யம்,  இரட்சிப்பு,  விடுதலை,  மரணம்
கடந்த பெருவாழ்வு, . . . . .ஆகியவையே!

               <><><><><><>
* "பட்டயத்தைக்கொண்டு வந்தவனின் செய்தி!"
(இயேசுவை மறு-கண்டு பிடிப்பு செய்தல்)
தொகுப்பிலிருந்து.

மா.கணேசன்/ 02.08.2011 & 02.05.2016



No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...