Tuesday, 17 May 2016

இப்படிக்கு, வெட்டியான்.




            வெட்டியானின் பொன்மொழி:
            "சிவத்தை அறியாதவன் சவமே!"

        <>

      வெட்டியானின் விண்ணப்பம் :

இதன் மூலம் அரசாங்கத்திற்குத்
தெரியப்படுத்துவது என்னவெனில்,
சுடுகாட்டுக்கு வராத ஏராளமான
சவங்கள் ஊருக்குள் உலவிக்கொண்
டிருக்கின்றன!
ஆகவே, என்னுடைய பணியைச்செவ்வனே
செய்வதற்கு உதவியாக அவற்றைச்
சுடுகாட்டிற்குக் கொண்டுவந்து சேர்க்குமாறு
கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
வெட்டியான்.
    குறிப்பு: அத்தனையும் தற்கொலைச்
                     சவங்களே.

       <>


உங்கள் நல்லடக்கத்திற்கு/நற்தகனத்திற்கு
உங்களை அன்புடன் வரவேற்கிறேன்!

       <>

எல்லாவற்றிலும் தெரிவுகளைத்தேடித்தேடி
வாழாமல் போனவர்களே!
உங்களுடைய கடைசித் தெரிவு என்ன?
நல்லடக்கமா? நற்தகனமா?

       <>

           'ரியல் எஸ்டேட்' விளம்பரம்:

பாலைத்தெளித்துவிட்டு
திரும்பிப் பார்க்காமல்
வேகவேகமாகச் செல்பவர்களே!
அங்கே ஊருக்குள் சென்று
என்ன செய்யப்போகிறீர்கள்?
வந்ததுதான் வந்துவிட்டீர்கள்
இந்த 'எஸ்டேட்டில்' உங்களுக்கு
எந்த 'ப்ளாட்' வேண்டும்
என்பதையாவது முன்பதிவு
செய்துவிட்டுச் செல்லலாமே?

        <>

வேறு வழியேயில்லை!
மரணம் மட்டும்தான் உங்களை
மாற்றமுறச்செய்ய முடியும்!

        <>

வீணாக 'எதை' அல்லது 'யாரை'
எதிர்பார்த்து நீங்கள் காத்திருக்
கிறீர்கள்?
சொல்லிவிடுங்கள் இப்போதே!
உங்களை எரியூட்டவேண்டுமா?
அல்லது நல்லடக்கம் பண்ண
வேண்டுமா?

       <>

வாழும் காலங்களில் நீங்கள்
விழிக்கவில்லையெனில்,
சாவும் தருணத்தில் மட்டும்
நீங்கள் விழித்துக்கொள்வீர்களா
என்ன?

       <>

வெறுமனே மரணம் குறித்து பயப்படுவது
முட்டாள்தனமானது!
அப்படியென்னத்தை நீங்கள் பெரிதாகச்
சாதித்துவிட்டீர்கள்?
இன்னும் இருந்து அப்படி என்னத்தைச்
சாதிக்கப்போகிறீர்கள்?
'வாழ்க்கை' பற்றிய எந்த உண்மையை
நீங்கள் கண்டுபிடித்தீர்கள்?
அதை இழந்துவிடுவோமோ என மரணம்
குறித்து நீங்கள் இப்படி பயப்படுகிறீர்கள்?

       <>

நீங்கள் 'வாழ்வதாக' எண்ணுகிறீர்கள்!
ஆனால், உண்மையில் நீங்கள்
எரியூட்டப்படுவதற்கோ அல்லது
நல்லடக்கம் பண்ணப்படுவதற்கோ தான்
காத்திருக்கிறீர்கள்!

       <>

"தூங்குகிறவனை எழுப்புவது எளிது;
ஆனால், தூங்குவது போல் நடிப்பவனை
எழுப்புவது கடினம்." என்று சொன்னார்கள்!
ஆனால், விழித்திருப்பதுபோல இமைக்காமல்
இருக்கிறவனை எழுப்புவதுதான்
கடினத்திலும் கடினம்!

       <>

வாழ்க்கை பற்றிய யாதொரு சிந்தனையும்
புரிதலும், பார்வையும் இல்லாமல்;
வாழ்க்கையின் அர்த்தம், குறிக்கோள்
மற்றும் இலக்கு குறித்த யாதொரு
நேரடியான கண்டுபிடிப்பும்  இல்லாமல்
வாழ்ந்து விடலாம் என்பதான உங்களது
போக்கு எவ்வளவு அபத்தமானது என்பது
உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான்!

      <>

இன்று இரவு சாப்பாட்டிற்கு எதைச்
சாப்பிடலாம்?
பையனை எந்தக்கல்லூரியில் என்ன
படிக்க வைக்கலாம்?
பெண்ணுக்கு மாப்பிள்ளையை
எங்கே தேடுவது?
ஓய்வு பெறுவதற்கு முன் வீட்டைக்
கட்டுவதா, அல்லது, . . . . .? ? ? ?
மன்னிக்கவும், இவை எதுவுமே
உண்மையில் வாழ்க்கை பற்றிய
சிந்தனை அல்ல!

      <>

வாழ்க்கையால் விழிக்கச்செய்ய முடியாத
உங்களை மரணம் வந்து விழிக்கச்செய்
திடுமோ?!

      <>

ஊரும் உலகமும் சுற்றியுள்ளவர்களும்
உன்னை என்னவேண்டுமானாலும்
சொல்லட்டும்!
அவற்றுக்கு எதிர்வினையாற்றுவதல்ல
உனது தலையாய பணியும் வாழ்க்கையும்!
உனது 'எதிர்-வினை' அவர்களது கூற்றை
உண்மையெனக்கொள்ளும் உனக்கெதிரான
ஆயுதமாகிவிடும்!
உண்மையில் அவர்களுக்கு
அவர்களைப்பற்றிய உண்மையும்
உனக்கு உன்னைப்பற்றிய உண்மையும்
தெரியாது!

      <>

உண்மையில் நீ யார்
எனும் உண்மையைக்
கண்டுபிடி!
அதிலே ஒட்டுமொத்த
பிரபஞ்சத்தின்
உண்மையும்
அடங்கியுள்ளது!

      <>

      (வெட்டியானின் ஞானம்)

என் பணியின் நிமித்தம் நான்
ஊருக்குவெளியே இந்தச்
சுடுகாட்டிலேயேதான் தங்கி
இருக்கிறேன், வாழ்கிறேன்!
ஊருக்கும், சுடுகாட்டுக்கும்
அதிக வித்தியாசம் இல்லை!
அங்கேயுள்ள  சவங்கள்
நடமாடுகின்றன!
இங்கேயுள்ள சவங்கள்
அடங்கிக் கிடக்கின்றன!
வாழ்க்கை, இடத்தைப்
பொறுத்ததல்ல!
நான் எங்கேயிருந்தாலும்
அங்கே வாழ்க்கை மையம்
கொண்டிருக்கும்!

      <>

       (வெட்டியானின் ஞானம்-2)

எரியூட்டுவது, அடக்கம் பண்ணுவது
என சவங்களுடன் தொழில் புரிவதால்
உணர்வு மறத்து, மரணத்துக்கு
பழக்கப்பட்டுவிடவுமில்லை!
வாழ்க்கையை வெறுத்து
விடவுமில்லை!
சொல்லப்போனால், மரணத்தை
எவரும் நண்பனாக்கிக்
கொள்ள முடியாது!
வாழ்க்கையும் அப்படித்தான்!
எப்போதும் புத்துணர்வோடு
இருப்பவன் வாழ்வான்
இந்தப்பக்கமும் மரணத்திற்கு
அந்தப்பக்கமும்!
 
      <>

         (வெட்டியானின் ஞானம்-3)

பயனற்றவைகளை நீங்கள் எரிக்கிறீர்கள்
அல்லது புதைக்கிறீர்கள் அல்லவா?
அதே வேலையைத்தான் இந்த
வெட்டியானும் செய்கிறேன்!
"மனிதன் ஒரு பயனற்ற இச்சை!"*
என்று சொன்னவன் ஒரு
அரை-வெட்டியானாகத்தான்
இருக்கவேண்டும்!
ஏனெனில், மனிதர்கள் முற்றிலும்
பயனற்றவர்கள்-தங்களுக்கும்
பிறருக்கும்!
எனது உணர்வு-நிலையை உங்களால்
புரிந்துகொள்ள முடியாது!
வாழ்விற்கும் மரணத்திற்கும் நடுவே
நிகழ்த்தப்படும் கத்தி-முனை சாகசம்!
ஒருவேளை யோகிகளும் தத்துவ
ஞானிகளும் இதைப் புரிந்து
கொண்டிருப்பார்கள்!

  *இருத்தலியலாளர் சார்த்தரின் கூற்று

      <>

         வெட்டியானின் வேதனை!

மக்களின் வாழ்வை நாசமாக்கிடும்
நாட்டின் பிரிவினை விதிகளை, சாதி சமய
பேதங்களை, சாவிலும்
சாவைக்கடந்தும்,இங்கே சுடுகாடு வரை
நீட்டிக்கும் முட்டாள்தனம் எந்த சாதியைச்
சேர்ந்தது?
பிடி சாம்பலாகவோ, மக்கி மண்ணோடு
மண்ணாகவோ போகிற சடலங்களுக்கு
சாதியேது ? சமயமேது ?

      <>

வெட்டியான் வேலை மோசமானதல்ல!
தொழிலில் சிறிது பெரிது என்பது சார்பானது
ஆனால், உயர்வு தாழ்வு கிடையாது!
எல்லாத்தொழிலும் ஏதோவொரு தேவைக்கு
சேவை புரியும் பிழைப்புக்கான வழியே!
விரும்பித்தேர்ந்தாலும் அல்லது
விரும்பாமலே ஏற்றாலும் எல்லாத்தொழிலும்
அடிமைத் தொழிலே!
கூலித்தொழிலாளியோ, பெரும்முதலாளியோ
ஏழையோ, பணக்காரனோ; நல்லவனோ,
கெட்டவனோ - கடைசியில்
வந்து சேருவது இங்கேதான்!
கட்டையில் ஏற்றினாலும், குழியில்
இறக்கினாலும் வெட்டியான் எனது
உதவியால் தான்!

      <>

சிறு அசௌகரியம் என்றாலும்
அங்கலாய்க்கும் சுக-போகிகளே!
நீங்கள் விரும்பியவண்ணம்
கட்டளைகளை நிறைவேற்றத்
தவறிடும் பணியாட்களை
கடிந்து கொள்ளும் எசமானர்களே!
வாழ்வினூடே அலுங்காமல்
குலுங்காமல் பயணிக்கும்
பெரிய மனிதர்களே!
எதிர்ப்பு, எதிர்பார்ப்பு, எதிர்வினை
எல்லாம் அடங்கிப்போகும்
வேளை வரும் - அப்போது
ஏற்றப்படுவீர்கள் மலர்ப்பல்லக்கில்!
அலுக்கி குலுக்கி வழியனுப்பி
வைக்கப்படும்  அந்த இறுதி
யாத்திரை குறித்து கற்பனை
கொள்வது உங்களுக்கு நல்லது!

     <>

வாழாமல் வாழ்கிறவர்களே!
இந்த வெட்டியான் சொல்லுவதைக்
கேளுங்கள்!
வாழ்க்கை ஒரு அற்புதப்பரிசு!
அதைப்பெற்றிருப்பது பெரிதல்ல!
பயன்படுத்தத் தெரியனும்!
அப்பரிசுப்பெட்டியை இன்னும்
திறந்து பார்க்காமலேயே
நீங்கள் வாழ்வதென்ன?
உங்கள் வாழ்க்கை இவ்வளவு
மகிழ்ச்சிக்குறைவாக, மந்தமாக
மேலோட்டமாக, அர்த்தமற்றதாக
இருப்பதின் காரணம் இப்போதாவது
உங்களுக்குப்புரிகிறதா?
சமூகச் சந்தைக்கடைச் சந்தடியில்
தொலைந்து போனவர்களே!
உங்கள் பரிசுப்பெட்டியை எங்கோ
வைத்துவிட்டு வாழ்க்கையை
எங்கோ தேடிக்கொண்டிருப்பதென்ன?
இன்னும் உங்களுக்குப்
புரியவில்லையா?
நீங்கள் தான் அந்தப் பரிசு, பொக்கிஷப்
பெட்டி, புதையல் யாவும்!
நீங்கள் வேறு வாழ்க்கை வேறு அல்ல!
வீட்டுக்குச் சென்றவுடன் முதலில்
உங்களைத் தோண்டத் தொடங்குங்கள்!

      <>
எவ்வளவு தன்மையாகப் பழகினாலும்
மனிதர்களை நான் நம்புவதில்லை!
எவ்வளவு விகாரமாக இருந்தாலும்
பிணங்களைப் பார்த்து நான்
பயப்படுவதில்லை!
ஏனெனில், பிணங்கள் ஒருபோதும்
உங்கள் முதுகில் குத்துவதோ;
கூடவேயிருந்து குழிபறிப்பதோ
இல்லை!
உயிருள்ள உடலின் சேவை
மகத்தானது என்பது உங்களுக்குத்
தெரியாது!
நீங்கள் பிறந்ததிலிருந்து, நீங்கள்
வளர்கிறீர்களோ இல்லையோ
உங்கள் உடல் வளர்ந்து
பல பருவக் கட்டங்களைக்கடந்து
உழைத்துத்தேய்ந்து நோயுற்று நலிந்து
முடிவில் சுடுகாட்டுக்கு வந்து சேர்கிறது!
உடலின் வளர்ச்சி நிலைகளில்
பங்கெடுத்து வாழும் நீங்கள் உங்கள்
உள்ளத்தில் வளர்வதேயில்லை!
ஆகவேதான் நீங்கள் உண்மையில்
உங்கள் (உள்ளத்தின், உணர்வின்)
வாழ்க்கையை வாழவேயில்லை
என்று சொல்கிறேன்!

     <>

விளக்கு, எண்ணெய், திரி யாவும்
ஒளியை எட்டுவதற்கான அமைப்பின்
கூறுகளே தவிர இவ்வெதையும்
ஒளி சார்ந்திருப்பதில்லை!
இவ்வெதுவும் ஒளியை
உருவாக்குவதில்லை!
ஒளி மட்டுமே ஒளியை ஏற்றும்!
விளக்கு, எண்ணெய், திரி, யாவும்
ஒளியின் வெவ்வேறு நிலைகளே!
ஒளி  இல்லாமல் உலகில் எதுவுமில்லை
உலகமும் இல்லை!

     <>

உடல் ஒரு உயிருள்ள கூடு!
மனிதன்  தன் உடலையும் உயிரையும்
கடந்த உணர்வு!
உடலும் உயிரும் பிரிக்கமுடியாதவை!
எண்ணெய் தீர்ந்ததும் விளக்கு
அணைந்துவிடுகிறது!
உடல் நலிவுற்றதும் உடலுடன்சேர்ந்து
உயிரும் அடங்கிவிடுகிறது!
உணர்வாகிய மனிதன் இறப்பதில்லை!
மனிதன் உயிரை விடுவதில்லை!
உடலும் உயிரும் தான் மனிதனை
விட்டு விடுகின்றன!!
வெட்டியானாகிய நான் உயிரற்ற
கூடுகளைத்தான் அகற்றுகிறேன்!!

     <>

நான் இருக்கிறேன், இருக்கும்போதே
இல்லாமலும் போகிறேன்!
இல்லாத போதும் இருக்கிறேன்!
வாழ்க்கைப்புதிரை விடுவித்தோர்
வெகுசிலரே!
அதை விளக்கியோர் அதிலும் சிலரே!
இதற்கு மேல் இந்த வெட்டியானால்
விளக்க இயலாது!
உணர்வின் மொழியைக் கற்றுக்
கொள்வதொன்றே நேர்வழி!
வேறு வழிகளைத் தேடாதீர்!

     <>

மா.கணேசன்/ 13.5.2016












No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...