
குறிப்பு : இவை குறிப்பிட்ட சிலரை மனதிற்கொண்டு அவர்களுக்காக
எழுதப்பட்டவை யல்ல! வகை தெரியாமல் ஆன்மீகத்திற்குள்
நுழைந்துவிட்டு முன்னுக்கும் போக முடியாமல், பின்னுக்குப்
பழைய வாழ்க்கைக்கும் போக முடியாமல் தடுமாறிக்கொண்டு
இருக்கும் சாதகர்களிடம் பொதுவாகக் காணப்படும் குணக்கேடு
களையும்,மன-நோய்க்கூறுகளையும் இனம்கண்டு அவைகளைக்
களைவதன் அவசியத்தை இக்குறிப்புகள் கூறுகின்றன. ஆகவே
எவரிடமெல்லாம் இக்கூறுகள் உள்ளதோ அவர்கள் அனைவருக்
கும் இவை பொருந்தும்.
*
என்னுடைய வழியில் உங்களுடைய நேரத்தைப்
பயனுள்ளதாக்க விரும்பினால் என்னிடம்
வாருங்கள்!
இங்கே வந்து, உங்களுடைய வழிகளில் உங்களுடைய
நேரத்தைப் போக்க விரும்பினால் என்னிடம்
வராதீர்கள்!
ஏனெனில், உங்களுடைய குறிக்கோள்களின்
அதிகபட்ச உயரம் என்னவென்பதை நான்
நன்கறிவேன்!
*
தயவுசெய்து என் நேரத்தை வீணாக்காதீர்!
உங்களுடைய அற்ப பிரச்சினைகளையும்
அசௌகரியங்களையும், மனக்குறைகளையும்
என்னிடம் கொண்டுவராதீர்!
உங்களுடைய மேலோட்டமான
சந்தோஷங்களை தனியே உங்களுடனேயே
கொண்டாடி மகிழுங்கள்!
*
வாழ்வின் அர்த்தம் பற்றிய அக்கறை
உள்ளவர்கள்,
உண்மை மீது பசி தாகம் கொண்டவர்கள்,
உண்மையிலேயே ஆன்மீகத்தில் ஆர்வம்
கொண்டவர்கள் மட்டுமே
என்னிடம் வாருங்கள்!
அப்படி வரும்போது, உங்கள் முகமூடிகளை
வீட்டிலேயே கழற்றிவைத்துவிட்டு வாருங்கள்!
உங்கள் பாசாங்குகளையும், போலித்தனங்களையும்
களைந்துவிட்டு வாருங்கள்!
இங்கு வரும்போது
சிரத்தையையும், சிதறாத கவனத்தையும்
காணிக்கைகளாகச் செலுத்தத் தவறாதீர்கள்!
*
என் நேரத்தை வீணாக்குவது என்பதும்
என்னை அவமதிப்பது என்பதும் ஒன்றுதான்!
இன்னும், என்னை அவமதிப்பது என்பதும்
வாழ்க்கையை அவமதிப்பது என்பதும் ஒன்றுதான்!
ஏனெனில், என்னிடம் வாழ்க்கை பற்றிய
விசேடச் செய்தி உள்ளது!
அது 'அன்றாடம் - கடந்த' அரிய செய்தியாகும்!
நான் வாழ்க்கையின் தூதுவன்!
உண்மையில், வாழ்க்கை தன்னை முன்னிறுத்தி
வலியுறுத்துவதோ, பிரகடனம்செய்வதோ இல்லை!
நீங்கள் மனநலம் தவறாதவராக இருக்கும்பட்சத்தில்
உயிர்-வாழ்தலை உங்களால் தவிர்க்கவோ,
தள்ளிப்போடவோ இயலாது!
ஆனால், உயிர்-வாழ்தலைக்கடந்த "உயர்" வாழ்தலைப்
பொறுத்தவரை, உணர்வார்ந்த தீவிர ஈடுபாடு
தேவைப்படுவதால், அது உங்களுக்கு பிடிபடாத
ஒன்றாக, கண்களுக்குப்புலப்படாததாக
மறைவாக இருக்கிறது!
ஆகவேதான், என்னைப்போன்ற வாழ்க்கைத்
தூதுவர்கள் உங்களிடையே உருவாகி
உங்களை உணர்வுக்குக் கொண்டுவரும்
ஆன்மீகப்பணியாற்றுவது அவசியமாகிறது!
*
மாபெரும் அவமதிப்பு எதுவென்றால்,
வாழ்க்கை பற்றிய விசேடச் செய்தியைக்
கொண்டுவரும் தூதுவனை மதியாதிருப்பது தான்!
ஆம், என்னை அவமதிப்பது என்பதும்
வாழ்க்கையை அவமதிப்பது என்பதும் ஒன்றுதான்!
பகிர்ந்து கொள்ள உங்கள் எல்லோரிடமும்
ஏதாவதொரு செய்தி, தகவல் எப்போதும் இருக்கும்!
அச்செய்திகள், தகவல்கள் அவற்றின்
தன்மைக்கேற்ப உங்களை
மகிழச்செய்யலாம், அல்லது துயரப்படச் செய்யலாம்!
ஆனால், அவை எதுவும் உங்களை, உங்கள் வாழ்க்கையை
மாற்றமுறச் செய்யாது! கடைத்தேற்றாது!
*
என்னுடன் அமர்ந்திருக்கும் போது
உங்களுடைய அன்றாடப் பிரச்சினைகளையும்
உங்கள் மனைவியுடன், அல்லது சக பணியாளருடன்
ஏற்பட்ட மனத்தாங்கல்களையும் சொல்லி உங்கள் தரப்பு
நியாயங்களை அடுக்கிக்கொண்டிருக்காதீர்!
உங்களுக்கு எவ்விதப்பிரச்சினையும், தொல்லைகளும்
இல்லாதிருந்தால் நீங்கள் ஆன்மீகத்தில்
சிறந்துவிளங்குவீர்கள் என்பதாகக் கனவு காணாதீர்!
மனைவியோ, மக்களோ, அண்டை அயலாரோ,
நண்பனோ, பகைவனோ, சகபாடியோ
உங்களுக்கு வாய்த்த ஒவ்வொரு உறவின் வழியாகவும்
நீங்கள் கற்றுத் தெளிய வேண்டிய பாடம் உள்ளது!
உறவுகள் தான் உங்களுடைய உளவியலை,
உங்களுடைய குணாதிசயங்களை, கோணல்களை
உங்களுக்குக் காட்டும் கண்ணாடியாகும்!
நீங்கள் எதிர்கொள்ளவேண்டியது பிறரையல்ல
உங்களைத்தான், உங்களை மட்டும் தான்
என்பதை மறந்துவிடாதீர்கள்!
*
என்னைத் தெரியாதவர்களை நான்
சந்திக்கையில், அவர்களுடன் உரையாடுகையில்
என் நேரம் வீணாகக் கழிவது எனக்கு
வருத்தமளிக்கவே செய்கிறது!
எவ்வாறேனும் எனது செய்தியை அவர்களுக்குள்
விதைத்திடவும், அவர்களுடைய இதயத்திற்குள் புகவும்,
அவர்களுடைய கவனத்தை அசலான
வாழ்க்கையின் பக்கம் திருப்பவும்
நான் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும்
வீணாகிப்போகின்றன!
அந்த அளவிற்கு அவர்கள் முற்றிலுமாக
அன்றாடத்தின் விஷயங்களாலும், விவகாரங்களாலும்,
அலுவல்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு
நிரம்பி வழிகிறார்கள்!
*
ஆனால், என்னைத் தெரிந்தவர்களைச்
சந்திக்கையில், தெரிந்தே அவர்கள்
என் நேரத்தை வீணாக்குகிறார்கள் என்பது
உயிருடன் என்னை எரிப்பதைப்போல
உணரச்செய்கிறது!
இதனால், பல நேரங்களில்
நான் உங்களிடையே இருந்தும்
இல்லாதவனைப்போல உணர்கிறேன்!
என்னை அறிந்தவர்கள் என்னை
முறையாகப் பயன்படுத்திக்கொள்வதில்லை
என்பது குறித்து எனக்கு மிகுந்த வருத்தம்
எப்போதும் உண்டு!
அதே வேளையில், எல்லோரும் என்னை
அவரவர் விருப்பம் போல பயன்படுத்திக்கொள்ள
விழைவது தான் எனக்கு மிகுந்த சோகத்தைத்தரும்
அவமதிப்பாகும்!
*
இவற்றையெல்லாம், ஏதோ நான்,
வானத்திலிருந்து வந்தவனைப்போலவும்,
விசேடப்பிறவி என்பதாகவும்,
விதிவிலக்கானவன் என்பதாகவும்,
ஆகவே, எல்லோரும் என்னைத் தொழவேண்டும்
என்றெண்ணிச் சொல்லவில்லை!
மாறாக, என்னுடைய ஆன்மீகப்பணியின்
நிமித்தம்தான் சொல்கிறேன்!
எனது இந்த ஆன்மீகப்பணியும், நானே விரும்பியோ
வலிந்தோ தேர்ந்துகொண்டதல்ல!
இன்னும் இது எவராலும் என்மீது சுமத்தப்பட்டதுமல்ல!
மாறாக, வாழ்க்கை தான் என்னைத் தேர்ந்துகொண்டது!
இப்பணி மட்டும் இல்லையென்றால், நானும்
உங்களில் ஒருவன் தான்!
இப்போதும் நான் உங்களில் ஒருவன் தான்!
நீங்கள் வாழும் அதே அன்றாடத் தளத்தில் நானும்
அவ்வப்போது பங்குபெறுவதால்!
உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்
நீங்கள் அன்றாடத்திலேயே மூழ்கித் தொலைந்து
போகிறீர்கள்! நானோ உணவிற்கு ஊறுகாய் போல
அன்றாடத்தைத் தொட்டுக்கொள்ள மட்டுமே செய்கிறேன்!
நான் வாழ்க்கையை கிடைமட்டத்திலிருந்து
செங்குத்தாக வாழ்கிறேன்!
நீங்களோ கிடைமட்டத்திலேயே வாழ்கிறீர்கள்!
*
ஒரு உவமையின் மூலம் சொன்னால்,
தொடக்கத்தில், நானும் உங்களைப்போலவே
ஒரு கம்பளிப்புழுவாகத்தான் இருந்தேன்!
இடையில் நான் ஒரு வண்ணத்துப்பூச்சியாக
மாற்றமடைந்தேன்! எனது வாழ்க்கையே மாறிவிட்டது!
ஆனால் நீங்கள் இன்னமும் கம்பளிப்புழுக்களாகவே
இருக்கிறீர்கள், வாழ்கிறீர்கள்!
ஏற்கனவே நான் என் ஆன்மீகப்பணி பற்றியும்,
விசேட- வாழ்க்கைச்செய்தி பற்றியும்
சொன்னேன் அல்லவா, அது என்னவென்றால் உண்மையில்
நீங்கள் கம்பளிப்புழுக்கள் அல்ல; வண்ணத்துப்பூச்சிகளே!
நீங்களும் வண்ணத்துப்பூச்சிகளாக மாற்றம் பெறமுடியும்
என்பதுதான்!
அதாவது, கம்பளிப்புழு, வண்ணத்துப்பூச்சி
இவ்விரண்டின் வாழ்க்கையும் வேறுவேறாயினும்
இரண்டும் சந்தித்துக்கொள்ளவும், உரையாடவும் முடியும்!
ஆனால், அவற்றின் சந்திப்பும், உரையாடலும்
வண்ணத்துப்பூச்சி வாழ்ந்து கொண்டிருக்கும்
வாழ்க்கையைப் பற்றியதாயும்
கம்பளிப்புழு வாழவிருக்கும் வாழ்க்கையைப்
பற்றியதாயும் இருக்கும் பட்சத்தில் அர்த்தமுள்ளதாக
அமையும்!
இதற்கு மாறாக,
வண்ணத்துப்பூச்சி வாழ்ந்து கடந்த வாழ்க்கையைப்
பற்றியதாயும், கம்பளிப்புழு வாழ்ந்து கொண்டிருக்கும்
வாழ்க்கையைப் பற்றியதாயும் இருக்கும் பட்சத்தில் யாவும்
அனர்த்தமாகிவிடும்!
*
ஆகவே, உங்கள் மனத்தை ஆக்கிரமித்துக்
கொண்டிருக்கும் விஷயம் எவையெவை என்பதை
நீங்கள் அவ்வப்போது அறிவது அவசியம்!
அதற்குப்பெயர் தான் "தியானம்" என்பதாகும்!
உங்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ
உங்கள் அடி-மனத்திலிருந்தும், புற-உலகிருந்தும்
எழுகின்ற பலவித எண்ணங்களாலும், உணர்ச்சிகளாலும்,
பிம்பங்களாலும் எப்போதும் உங்கள் மனம்
முற்றுகையிடப்படுகிறது, ஆக்கிரமிக்கப்படுகிறது!
அவற்றில் எத்தகைய அம்சங்கள் உங்கள் மனத்தை
ஆக்கிரமிக்க நீங்கள் அறிந்தோ, அறியாமலோ
அனுமதிக்கிறீர்கள் என்பதுதான்
உங்களது தன்மையை, நீங்கள் எத்தகைய மனிதர்
என்பதைத் தீர்மானிப்பதாகிறது!
இவையல்லாமல், இயல்பாக உங்கள் மனமானது
கற்பனைகளுக்கும், புனைவுகளுக்கும் மிக எளிதாக
ஆட்படுவதுமாயுள்ளது என்பது குறித்தும் நீங்கள்
எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்!
*
நீங்கள் என்னிடம் வருவதற்கு முன்,
அன்றைய தினத்தில் நீங்கள் சந்தித்த விஷயங்களையும்
உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும்;
நீங்கள் கண்ட, கேட்ட செய்திகளையும், தகவல்களையும்
அவை குறித்த உங்களுடைய எதிர்-வினைகளையும்
அபிப்பிராயங்களையும், கருத்துக்களையும்;
அவை உங்களுக்குள் ஏற்படுத்திய சந்தோஷங்களையும்,
சோகங்களையும், பிற தாக்கங்களையும்
உங்கள் மனத்திலிருந்து அழித்துவிட்டு, அதாவது
உங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு பிறகு
இங்கு வாருங்கள்!
ஏனெனில், வாழ்க்கை பற்றி நான் சொல்லவிருக்கும்
புதிய உண்மைகளை, உட்பார்வைகளை ஏற்பதற்கு
உங்கள் மனத்திலும்,
இதயத்திலும் இடம் இருக்கவேண்டும்!
வெறும் இடம் மட்டும் இருந்தால் போதாது;
இதுவரை நீங்கள் அறிந்திராத, வாழ்க்கையின் புதிய
பக்கங்களை, பரிமாணங்களை
அறிந்து கொள்ளும், ஆழமாகப் புரிந்துகொள்ளும்
தீவிர ஆர்வமும் உங்களிடம் இருக்க வேண்டும்!
புதிய அறிவை பழைய அறிவுடன் கலப்பதும்
அறிவிலியாக இருப்பதும் ஒன்றுதான்!
குறிப்பாக, இங்கு வரும் போது உங்களைப்பற்றிய
எவ்வித பிம்பங்களுடனும் வராதீர்கள்!
இங்கு வந்த பிறகு, என்னைப்பற்றிய எவ்வித
பிம்பங்களையும் உருவாக்கிக்கொள்ளாதீர்கள்!
இங்கு வந்தபிறகு, சிம்மாசனம் எதையும் தேடாமல்
உங்களுக்குரிய ஆசனத்தில் அமருங்கள்!
ஆம், உங்களுடைய ஆன்மீகத் தகுதிநிலை
குறித்த யாதொரு பிரமையும் இல்லாதிருங்கள்!
இங்கு என்னிடம் வருவதற்கு எவருக்கும் எந்த
விசேடத்தகுதியும் தேவையில்லை!
உண்மையில் உங்களுடைய தகுதிகள் என்று
நீங்கள் கருதிக்கொண்டிருக்கும் எதையும்
நான் கணக்கில் கொள்வதில்லை!
மாறாக, இன்னும் உங்களால் தொடப்படாத
உங்களுடைய உட்பொதிவை மட்டுமே நான்
தகுதியாகக் காண்கிறேன்!
ஏனெனில், உங்கள் உட்பொதிவில்தான் நீங்கள்
அடையவேண்டிய ஆன்மீக உயரங்களும்,
ஞானப்பொக்கிஷங்களும் அடங்கியுள்ளன!
ஆகவே, இங்கு வந்தபிறகு, ஆன்மீக விசாரம்
என்ற போர்வையில், உங்கள் மேதாவிலாசத்தை
வெளிக்காட்டுவதற்காக கண்டதையும் அலப்பாதீர்!
மாறாக, என் நேரத்தை வீணாக்காமல்
நேரடியாக மையமான, சாரமான விஷயத்திற்கு
உடனடியாக வந்துவிடுங்கள்!
என்னுடன் செலவிடும் ஒவ்வொரு வினாடியையும்
தரமான நேரமாக, உண்மையில் நீங்கள்
வாழ்ந்ததற்கான சாட்சியமாக மாற்றிடுங்கள்!
எனது நேரத்தை வீணாக்காதீர்கள் என்று
நான் சொல்வது என்னுடைய நேரத்தைப்பற்றியது
மட்டுமல்ல; உங்களது
நேரத்தையும் நீங்கள் வீணாக்காதீர்கள் என்பதையும்
உள்ளடக்கியதே ஆகும்!
ஏனெனில், நேரம் என்பது வாழ்க்கை யாகும்!
எனது கவலையெல்லாம் என் நேரம் வீணாவது
பற்றியல்ல!
"வாழ்க்கை" வாழப்படாமல் வீணாக்கப்படுகிறதே
என்பது பற்றித்தான்!
வாழ்க்கையை வாழ்வதற்காகக் கொடுக்கப்பட்ட
அரிய மானிடப்பிறவி வீணாக்கப்படுகிறதே
என்பது பற்றித்தான்!
மா.கணேசன்/ நெய்வேலி/ 25.11.2016
----------------------------------------------------------------------------