
வேரற்ற மரத்திற்கு நீர் பாய்ச்சுவது போலவே
தன்னை ஒருவன் நேசிப்பது வீணே!
- மா.கணேசன் / விசார சாரம்.
<•>
"மனிதனைப் பொறுத்தவரை திருப்புமுனையான கேள்வி என்னவென்றால்,
அவன் அனந்தமான ஒன்றுடனான தொடர்பில் இருக்கிறானா, இல்லையா
என்பது தான். அதுதான் அவனுடைய வாழ்வின் மிக முக்கியமான கேள்வி
யாகும். உண்மையில் பொருட்படுத்தக்கூடிய அம்சம் அனந்தமே என்பதை
நாம் அறிந்தால் மட்டுமே நம்மால் பயனற்றவைகளின் மீதான ஆர்வங்களை
யும், மேலும், உண்மையான முக்கியத்துவம் அற்ற பலவகைப்பட்ட இலக்கு
களையும் தவிர்க்க இயலும். நம்முடைய திறமை,அழகு ஆகிய பண்புகளை
நாம் நம் சொந்த உடமைகளாகக் கருதுகிறோம்; அவைகளுக்காக உலகம்
நம்மை மதிக்கவேண்டும் எனக்கோருகிறோம். எவ்வளவு அதிகமாக ஒருவன்
போலியான உடமைகள் மீது நாட்டம்கொள்கிறானோ, அவ்வளவிற்கு முக்கிய
மான அம்சத்தின் மீதான அவனது நாட்டம் குறைந்துபோகும். அதனால்
அவனது வாழ்க்கை மிகக்குறைவாகவே திருப்தியளிப்பதாயிருக்கும். ஆகவே,
அவன் தன்னை மட்டுப்பாடானவனாக உணர்கிறான், ஏனெனில், அவனது
குறிக்கோள்கள் மட்டுப்பாடானவை; விளைவு பொறாமையும்,பொச்செரிப்புமே
ஆகும். ஆனால், இங்கு இந்த வாழ்க்கையில் ஏற்கனவே அனந்தத்துடன்
நமக்குத் தொடர்பு உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளவும் உணரவும்
செய்வோமெனில், நம்முடைய ஆசைகளும், மனப்பான்மைகளும் மாறும்."
- C.G.யூங்
<<•>>
உண்மையில் "தான்" யார், எத்தகைய மெய்ம்மை என்பதை அறியாதவன்
வேரற்றவன்! "தன்னை நேசிப்பது போல பிறரையும் நேசி!" என்று சொல்லப்
பட்டது என்னவோ உண்மைதான்; ஆனால்,அதன் அர்த்தம் 'தன்னை நேசிப்பது'
அல்லது "சுய-நேசம்" என்பது அன்பிற்கான அடிப்படை அலகு என்பது அல்ல!
மாறாக, "சுய-நேசம்" என்பது அதனளவில் முழுமையானதோ, அல்லது இறுதி
யானதோ அல்ல; மேலும், சுய-நேசம் என்பது பெரிதும் குருடானது, மட்டுப்
பாடானது என்பதாலேயே அவ்வாறு சொல்லப்பட்டது! ஆம் சுய-நேசம் என்பது
வெறும் ஒரு தொடக்கம் மட்டுமேயாகும்! தொடங்கவேண்டிய புள்ளியிலிருந்து
ஒருவன் சிறிதும் நகராதிருப்பது தேக்க நிலையாகும்! தேக்கநிலை என்பது
வெறும் மட்டுப்பாடு மட்டுமல்ல; மாறாக, வளர்ச்சிக்கான அனைத்துக் கதவு
களையும் மூடிவிட்ட "சுய-திருப்தி" எனும் கல்லறையாகும்! சுய-நேசம் என்பது
ஏற்கனவே தனது இலக்கைத் தொட்டு ஓய்ந்துவிட்ட தேக்க நிலையாகும்!
அறியாமையைப் புகலிடமாகக் கொண்டுவிட்ட ஒருவனது சொந்தச்சுயம் தான்
அந்த இலக்கு! அதாவது, ஒருவனது ஆன்மீக வளர்ச்சி, அல்லது பயணம்
தொடங்கவேண்டிய புள்ளியே முற்றுப்புள்ளியாகிவிட்ட பரிதாபம்!
•
"சுய-நேசம் என்பது பெரிதும் குருடானது!" என்று இங்கு சொல்லப்படுவதன்
அர்த்தம் என்ன? தனது மையத்தில் உண்மையில் "தான் யார்?" என்பதை
அறியாத ஒருவன் தொடர்ந்து தன்னையே நேசித்துக்கொண்டிருப்பது என்பது
மேன்மேலும் தன்னுள்ளேயே சுருங்கிப்போகும் அபாயத்தைக்கொண்டதாகும்!
அன்பின் தன்மை சுருங்குதல் அல்ல விரிவடைதலே ஆகும்! விரிந்து பரவி
அனைத்தையும் தழுவி, பன்மையை தன்னுள் கொள்ளும் ஒருமையாதலே
அன்பு ஆகும்! அதில், 'தான்', 'பிறர்'; 'அகம்', 'புறம்' (அதாவது, 'உலகம்' ) எனும்
பிளவுகள் கிடையாது!
•
சுய-நேசம் என்பது ஒருவன் தன்னை, தனது சுயத்தை நேசிப்பது ஆகும்.
ஆனால், ஒருவன் தன்னைத்தானே நேசிப்பதற்கான அந்த அலாதியான, மகத்
துவம் மிக்க அடிப்படை, அல்லது காரணம் என்ன? முதலிடத்தில், ஒருவனது
சுயம் என்பது என்ன? எத்தகைய மெய்ம்மை, அல்லது நிஜம்? ஒருவனது சுயம்
என்பது ஒருவனுடைய சொந்த "உடமை" என்பதால் அது இனிமையானதாக
வும், நேசிக்கத்தக்கதாகவும் உள்ளது என்றே வைத்துக்கொண்டாலும், அதன்
தோற்றுவாய், அல்லது மூலம் எது? அது என்ன, தன்னில்தானே சுயம்புவாகத்
தோன்றியதொரு நிஜமா? அல்லது, தன்னளவிலே அது முழுமையானதொரு
மெய்ம்மையா?
•
முதலிடத்தில், தன்னை, தனது சுயத்தை நேசிப்பது என்றால் என்ன? அதாவது,
சுயம் என்பது ஒருவனது சொந்த உடமையா? சுயம் என்பது ஒருவனுடைய
உடமையானால், உடையவன் யார்? எவ்வாறு, எப்போது ஒரு மனிதன் தனக்
குத்தானே சொந்தமானவனாக ஆனான்?
•
சுய-நேசம் என்பது சுய-பாதுகாப்பை இலக்காகக்கொண்டதொரு இயல்பூக்கி
(Instinct)ஆகும். இந்த இயல்பூக்கி இல்லாமல், எவ்வொரு உயிர்ஜீவியும்
பூமியின் மீது உயிர்வாழ முடியாது! சுய-நேசம் என்பது ஒரு ஆற்றல் ஆகும்;
அதை ஒருவன் முறையாக, சரியான இடத்தில் முதலீடு செய்திட வேண்டும்!
சரியான இடம் என்பது, நிச்சயம் குன்றாத ஆற்றலின் மையமாக, ஆற்றலின்
ஊற்றாக அது இருக்கவேண்டும்! அப்போதுதான் முதலீட்டுக்குரிய பிரதிபலன்
முழுமையாகக் கிடைக்கும்! எது ஒருவனை முழுமையாகக் காப்பாற்றிடக்
கூடுமோ, அதில் தனது நேசத்தை முதலீடு செய்வதுதான் அறிவார்ந்த செயல்
ஆகும்! அத்தகைய ஆற்றலின் ஊற்று எது? அது எங்கிருக்கிறது?
•
ஒருவனது சுய-நேசம் அவனை முழுமைப்படுத்தி நிறைவு செய்யுமெனில்,
முழுமையாகக் கடைத்தேற்றுமெனில்,மரணத்திடமிருந்து அவனைக் காப்பாற்று
மெனில், சுய-நேசம் போன்றதொரு பிறவிப்பிணி நீக்கும் அருமருந்து வேறெது
வும் இருக்கமுடியாது! ஆனால், சுய-நேசம் முடிவில் சுய-வெறுப்பாகவும், சுய-
முக்கியத்துவம் முடிவில் தாழ்வுணர்ச்சியாகவும், சுய-திருப்தி முடிவில் சுய-
அதிருப்தியாகவும், அதாவது பெரும் மனக்குறையாகவும் மாறிவிடுவது
தவிர்க்கவியலாது நிகழ்ந்துவிடுகிறது! ஏனெனில், ஒருவனது சுயம் என்பது
மெய்ம்மைக்குச் செல்வதற்கான நுழைவாயில் தானே தவிர, அதுவே மெய்ம்
மையின் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அல்ல!
•
சுய-நேசத்தின் மையம் சுயநலமே ஆகும். தன்னையும் தனது நலன்களையும்
மையப்படுத்தி அவற்றில் முனைப்பாக இருத்தல் என்பதே சுயநலம், அல்லது
தன்னலம் எனப்படுவது! ஆனால், சுய-நேசத்தின் மையம் சுயநலம் என்றால்,
"சுய-முக்கியத்துவம்", "தற்பெருமை","சுய-திருப்தி" ஆகியவை அதன் ஆரக்கால்
களாகத் திகழ்பவையாகும்!
•
ஒருவனது சுய-நேசமானது முழுமையாக இருக்கும் பட்சத்தில் வேறு எவரும்,
எதுவும் ஒருவனுக்கு முக்கியமாகப் படுவதில்லை! மேலும், சுய-நேசத்துடன்
தற்பெருமையும், அதாவது, தன்னையும், தன்னைச்சார்ந்தவர்களையும் பற்றிப்
பெருமை கொள்ளுதலும், உயர்வாக எண்ணுதலும் சேர்ந்து கொள்ளும்போது
சுய-நேசம் விஷமாகிவிடுகிறது! எலியின் வளை கூட தப்பிச்செல்வதற்குரிய
வகையில் பல கிளைவழிகளைக் கொண்டிருக்கும்! ஆனால், மனிதனது சுய-
நேசமானது ஒரு முட்டுச்சந்து போன்றதாகும்; அதில் சிக்கிக்கொள்பவனுக்கு
போசனம் கிடைக்கலாம் ஆனால் விமோசனம் கிடைக்காது!
•
சுய-நேசம் தானியங்கித்தனமானது அதாவது நனவிலிரீதியானது (Unconscious)
ஒரு இயல்பூக்கி என்கிற வகையில் அது இயற்கையானதும் கூட! ஆனால்,
உணர்வுள்ள மனிதஜீவிகளாகிய நாம் சுய-நேசத்தை மறுக்கத் தேவையில்லை;
மாறாக, அதை மிதமிஞ்சிப்போகாமல் பார்த்துக்கொள்வது அவசியம்! ஏனெனில்,
அளவுளடன் கூடிய சுய-நேசம் அமிர்தம் போன்றது; அளவுக்கு மிஞ்சினால்
சுய-நேசம் சுய-நாசத்திற்கு இட்டுச்சென்றுவிடும்!
•
சுயநலமியாக இருப்பதால் தனக்கு பெரும் ஆதாயம் என்று ஒருவன் எண்ண
லாம்! ஆனால், அந்த ஆதாயங்கள் மிகவும் மேலோட்டமானவை! அப்படியா
னால், இறுதியான ஆதாயம் எது?
•
ஆனால், சுயநலத்திற்கு மாற்று பொதுநலம் அல்ல; அதாவது, சுய-நேசத்திற்கு
மாற்று பிறரை நேசித்தல் என்பதல்ல! ஏனெனில், தன்னை நேசித்தல் என்பது
தன்னை உறுதிப்படுத்துவதாக, நிலைநாட்டுவதாக அமைகிறது; பிறரைநேசித்
தல் என்பது பிறரை உறுதிப்படுத்துவதாக அமைகிறது! அதாவது, சுய-நேசமும்,
பிறர்-நேசமும் சேர்ந்து பரஸ்பரம் நம் ஒவ்வொருவரையும் உறுதி செய்வதாக
அமையும் என்பதில் சந்தேகமில்லை! இந்த பரஸ்பர நேசம் உயிர்-வாழ்தலுக்கு,
சுமுகமான சமூக-உறவுகளுக்கு மட்டுமே உதவிடும்! அதாவது, இத்தகைய
மனிதநேயம் (Humanism) தேவையானதே என்றாலும் எவ்வகையிலும் அது
இறுதியானதல்ல! ஏனெனில், அமைதியும், வளமும் நிறைந்ததொரு பொது-
வாழ்க்கை அல்ல மனிதவாழ்க்கையின் ஒப்பற்ற இலக்கு! ஆக, சுய-நேசம்,
பிறர்-நேசம் இவ்விரண்டுமே மட்டுப்பாடானவை; அப்படியானால், எது முக்கிய
மானது எனில், "மெய்ம்மை-நேசம்" மட்டுமே ஆகும்! ஏனெனில், மெய்ம்மை,
முழுமையும் இறுதியுமான மெய்ம்மை மட்டுமே மனிதனை நிறைவுசெய்து,
முழுமைப்படுத்தி விடுதலை செய்யக்கூடியதாகும்!
•
உண்மையில், தன்னை ஒருவன் அவ்வளவு அதிகமாக நேசிக்கிறான் எனில்,
எவ்வாறேனும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறான் எனில், அவன்
மிகவும் மேலோட்டமான தன்னை நேசிப்பதை விட்டு, தன்னுள் ஆழமாகச்
சென்று (தன் உணர்வில் ஆழ்ந்து) தனது சாரத்தைக் கண்டடைவானாக! தனது
மையத்தில் "தான்" உண்மையில் எத்தகைய மெய்ம்மை என்பதை அறிய
பெரு விருப்பம் கொள்வானாக! தன்னை நேசிப்பது என்பது பெரிய சாதனை
அல்ல; தன்-உணர்வற்ற ஒவ்வொரு புழுவும், பூச்சியும், புல்லும், பூண்டும்
அதைத்தானே செய்கின்றது! தனக்கும், இப்பிரபஞ்சத்தி/ற்கும், அனைத்திற்கும்
ஆதாரமான மூல-காரணமாகவும், முடிவான விளைவாகவும் விளங்கும் அந்த
மெய்ம்மையை நேசித்து அவன் உய்வடைவானாக!
•
மா.கணேசன்/ நெய்வேலி/ 13-06-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment