
மன்னிக்கவும்!
உங்களுடன் சண்டையிட எனக்கு நேரமில்லை!
எவருடனும் என்னை ஒப்பிட்டுப் பார்க்கவும்
பிறகு எவர் குறித்தும் பொறாமை கொள்வதற்கும்
எனக்கு நேரமில்லை!
என்னைத் தோண்டி எனது ஆழங்களை
அறிவதற்கே எனக்கு நேரம் போதுமானதாக
இல்லை!
மன்னிக்கவும்!
நான் உங்களைக் கண்டுகொள்ளவில்லை
என நீங்கள் வருந்தவேண்டாம்!
என்னைக் கண்டு கொள்ளவே எனக்குப்
போதுமான நேரம் இல்லை!
என்னை நான் கண்டடைந்தாலும்
என்னுடனான என் பணியில்
நான் முழுவதுமாக மூழ்கியுள்ளேன்!
மன்னிக்கவும்!
உங்களுடனான உங்கள் பணியை
நீங்கள் முறையாக மேற்கொள்ளவில்லை;
அல்லது இன்னும் தொடங்கவேயில்லை
என்றாலும் அதை மேற்பார்வையிடும் சுமை
எனக்கு வேண்டாம்!
மன்னிக்கவும்!
உங்களுக்கு நான் ஆசானாக இருக்க முடியாது!
உங்களுக்கு அறிவுரை சொல்லவும்
வழி நடத்திச் செல்லவும்
உங்கள் வழிகளில் குறுக்கிடவும்
நான் யார்?
மன்னிக்கவும்!
உங்களுக்கு நான் குருவாக இருக்க முடியாது!
ஏனெனில், உங்களுக்குப் பேச்சுத்துணையாக,
விதூடகனாக இருக்க என்னால் முடியாது!
மேலும், செவிடர்களுடனும் ஊமைகளுடனும்
கலந்துரையாடுவது சாத்தியமற்றது!
மன்னிக்கவும்!
நான் உங்களை செவிடர்கள் என்றழைப்பதற்கு!
நீங்கள் உங்களுடைய மேதைமையில்
மூழ்கியிருப்பதால், பிறருடைய பேச்சுகள்
உங்கள் காதுகளுக்குக் கேட்பதில்லை!
மன்னிக்கவும்!
நான் உங்களை ஊமைகள் என்றழைப்பதற்கு!
அர்த்தமுள்ள என்னுடைய பேச்சு உங்களை
வாயடைத்துப் போகச் செய்யவில்லை!
என்னைக் கவிழ்ப்பதற்கான உபாயம் எதுவும்
அகப்படாததும்; உங்களுடைய எதிர்ப்பையும்,
மறுப்பையும் தெரிவிக்க இயலாததும் உங்களை
ஊமைகளாக்கிவிடுகின்றன!
மன்னிக்கவும்!
என்னை வெற்றிகொள்ள நினைப்பனுக்கும்
என்னைக் கவிழ்க்க கனவுகாண்பவனுக்கும் இடையே
பெரும் வித்தியாசம் உள்ளது!
ஒருவனுக்கு நினைப்பு பிழைப்பைக் கெடுக்கிறது
என்றால், இன்னொருவனுக்குக் கனவு உறக்கத்தைக்
கெடுக்கிறது!
நானல்ல உண்மையான பிரச்சினை
என்பது ஏனோ இருவருக்கும் புரிவதில்லை!
மன்னிக்கவும்!
சுய-உணர்வுள்ள மனிதன்
சுய-நலம் கொண்டவனாக இருக்கவியலாது!
உணர்வற்ற ஜீவிகளின் தலைமைப்பண்பு
சுயநலம்!
தன்னையறியாத ஜந்துக்களின் ஒரே நலம்
சுய-நலம்!
மன்னிக்கவும்!
நான் சுய-நலமற்றவன்!
ஏனெனில், கொடுக்கப்பட்ட சுயத்தின் நலத்தைப்
பேணுபவன் மூடன் மட்டுமல்ல அவன் ஒரு
விலங்கு!
கொடுக்கப்பட்ட சுயத்தினை முழுமைப்
படுத்துபவனே மனிதன்!
சதா என்னை நான் கடந்துசெல்லும்
வழிமுறையில் எனது எந்த சுயத்தின் நலத்தை
நான் பேணுவது?
மன்னிக்கவும்!
நான் உங்களுடைய சுதந்திரப்போக்கில்
தலையிட விரும்பவில்லை!
ஏனெனில், என்னுடைய சுதந்திரத்தை
மோப்பம் பிடிக்கக் கூட எவரையும்
நான் என்னருகே அனுமதிப்பதில்லை!
மன்னிக்கவும்!
உங்களைப்பற்றி எனக்குத் துளியும்
அக்கறையில்லை!
ஏனெனில், உங்களைப்பற்றி உங்களுக்கே
அக்கறை இல்லாதபோது நான் என்ன
செய்ய முடியும்?
மன்னிக்கவும்!
எவரையும் நான் வணங்குவதில்லை!
எவருடைய வணக்கத்தையும் ஏற்பதில்லை!
ஏனெனில், மதிப்பு, மரியாதை, வணக்கம்,
கௌரவம் ஆகியவை பரிவர்த்தனை மூலம்
பரஸ்பரம் வழங்கிப்பெற முடிகிறவைகளல்ல!
மன்னிக்கவும்!
உங்களுடன் வாதம்புரிய என்னால் முடியாது!
ஏனெனில், உங்களுக்குக் கைவந்த அந்தக்
குருட்டுத் தைரியம் என்னிடமில்லை!
மன்னிக்கவும்!
உங்களுடன் போட்டியிட நான் விரும்பவில்லை!
காரணம், என்னால் உங்களை வெற்றிகொள்ள
முடியாது! ஏனெனில், உங்களாலேயே
உங்களை வெற்றிகொள்ள முடியவில்லையே!
மன்னிக்கவும்!
உங்களுடன் உரையாட நான் விரும்பவில்லை!
ஏனெனில், ஓய்வாக இல்லாதவனுடன்
என்னால் உரையாட இயலாது!
உங்களது வேகம் தலைகீழானது
உங்களது வாழ்க்கையைப் போலவே!
ஓய்வாக இருக்கமுடிந்தவன்
ஆசீர்வதிக்கப்பட்டவன் - ஓய்வினால்!
மன்னிக்கவும்!
எனது வேகத்திற்கு உங்களால்
ஈடுகொடுக்க இயலாது!
ஓய்வாக இருப்பவனே அதிவிரைவாகப்
பயணிக்கிறவன்!
மன்னிக்கவும்!
உங்களுடன் உறவாட நான் விரும்பவில்லை!
ஏனெனில், அலைகளைப்போல ஆர்ப்பரிப்பவன்
மேலோட்டமானவன்; அவனுடன்
என்னால் உறவாட இயலாது!
அமைதியாக இருப்பவனே ஆழமானவன்
அவனே தன்னுள் ஆழமாகச் செல்பவன்!
மன்னிக்கவும்!
தன்னுள் ஆழமாகச் சென்றவன், பிறருள்ளும்
அதே ஆழத்தைத் தேடவே செய்வான்!
ஆம், ஆழமற்றவர்களுடன் அவனால்
பழக முடியாது!
மன்னிக்கவும்!
உங்களுடன் நட்புகொள்ள என்னால் இயலாது!
ஏனெனில், என்னிடம் சகிப்புத்தன்மை
சிறிதும் இல்லை!
நீங்கள் எக்கேடு கெட்டாலும்
உங்களை நீங்கள் சகித்துக்கொள்வதுபோல
என்னால் முடிவது சந்தேகமே!
இன்னும், என்னிடம் பொறுமையும்
இல்லை!
மன்னிக்கவும்!
நான் விபத்துக்களைக் கொண்டாடுவதில்லை!
நட்பு, வழித்துணை, உடன்-பயணிப்பவர்
இவை யாவும் விபத்துக்களின் விளைவுகளே!
முன்-பின் தெரியாதவர்களாக இருந்த நாம்
ஏதோவொரு வெட்டுப்புள்ளியில் சந்தித்துக்
கொண்டதால் நட்பு அல்லது
வேறொரு உறவின் பெயரில் பரஸ்பரம் நாம்
ஒருவருக்கொருவர் சுமையாகக் கனக்க
வேண்டுமா என்ன?
மன்னிக்கவும்!
இவ்வுலகில் நமக்குத் தெரிந்தவர்களைவிட
முன்-பின் தெரியாதவர்கள், பரிச்சயமற்றவர்கள் தான்
அதிகத்திலும் அதிகம்!
அவர்களெல்லாம் ஒருவருக்கு எதிரிகளுமல்ல!
நண்பர்களுமல்ல! சுமையுமல்ல, சுகமுமல்ல!
மன்னிக்கவும்!
நமக்குத் தெரிந்தவர்களைவிட, முன்-பின்
தெரியாதவர்கள்தான் இனியவர்கள்!
அவர்களுக்கும் நமக்கும் எவ்வித பிணைப்பும்,
பிணக்கும், முரண்பாடும், சண்டையும், சச்சரவும்
ஏற்பட வாய்ப்பில்லை!
அவர்களுக்கும் நமக்குமிடையே எவ்வித
பொறுப்பும் இல்லை, பொறுப்பின்மையும் இல்லை!
கடமையும் இல்லை, கடமை தவறுதலும் இல்லை!
மன்னிக்கவும்!
உங்களை என்னால் நேசிக்க இயலாது!
உண்மையை நேசிக்கும் என்னால்
என்னைப் பெரிதாக நேசிக்க முடியாதபோது;
எப்போதும் உங்களைப்பற்றிய எண்ணங்களால்
நிரம்பியிருக்கும் உங்களைவிட
என்னால் உங்களை அதிகமாக நேசிப்பது
என்பது சாத்தியமேயில்லை!
மன்னிக்கவும்!
உங்களைப் போலவேதான் நானும் என்பதாக
நீங்கள் எண்ணுகிறீர்!
உங்களை நீங்கள் கொச்சைப்படுத்திக்
கொள்வதில் எனக்கு ஆட்சேபமில்லை!
ஆனால், நான் உங்களுடன் ஒரே
படகில் இல்லை!
மன்னிக்கவும்!
என்னைப் போலவேதான் நீங்களும் என நம்பி
உங்களிடமிருந்து அதிகம் எதிர் பார்த்தேன்!
அது எவ்வளவு தவறு என்பதை
இப்போது நான் உணர்ந்து விட்டேன்!
மன்னிக்கவும்!
மனிதர்கள் புறத்தோற்றத்தில் மட்டுமே
ஒரே மாதிரியாக இருக்கிறார்கள்!
ஆனால், முன்-மாதிரியாக விளங்குபவர்
வெகு சிலரே, அவர்களே மனிதகுலத்தின்
விதி போன்றவர்!
மனிதர்களில் விதி-விலக்கான சிலரும்
இருக்கிறார்கள்!
அவர்களை மன்னித்துவிடலாம்!
ஆனால், அநேகநேகர் (ஏதோ) இருக்கிறார்கள்!
எதற்காக என்று அவர்களுக்கே தெரியாது!
மன்னிக்கவும்!
எனது பேச்சுக்கள் வெறும் புலம்பலாகவும்,
எதிர்மறையாகவும், ஊக்கங்கெடுப்பதாகவும்
தொனிப்பதாக நீங்கள் நினைக்கலாம்!
ஆனால், இது வெள்ளைத்தாளில் கறுப்பு மையால்
தீட்டப்பட்ட ஓவியம் - கருமையைக் கடந்து
ஓவியம் உணர்த்தும் செய்தியைப் பாருங்கள்!
அதே வேளையில், உங்களது களிப்பு,
நேர்மறைத்தன்மை, ஊக்கமிகுபோக்கு ஆகியவற்றினால்
நீங்கள் எட்டிய ஆன்மீக உயரம் எவ்வளவு
என்பதையும் அளந்து பாருங்கள்!
மன்னிக்கவும்!
அச்சாணி இல்லாமல் சக்கரம் சுழலாது!
கிரியா-ஊக்கி இல்லாமல் ரசாயண மாற்றம் நிகழாது!
உங்களால் என்னை நேராகவோ அல்லது
எனக்குத்தெரியாமல் பதுங்கிப் பக்கவாட்டில் சென்றும்
முந்திச்செல்ல முடியாது!
எனக்குத்தெரியாமல், நீங்கள் ஒரு இம்மியளவும்
இடம்பெயர இயலாது!
மன்னிக்கவும்!
ஆகவேதான் சொல்லுகிறேன்:
நீங்களும் நானும் சேர்ந்து பயணிக்க முடியாது!
ஏனெனில், நாம் ஒரே படகில் இல்லை!
* * *
மா.கணேசன்/ நெய்வேலி/ 25-06-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment