
அழகும் அவலட்சணமும் பரஸ்பர அலட்சியத்துடன்
உடன் வசிக்கும் உலகம் எனக்கு வேண்டாம்!
இரவும் பகலும் ஒன்றையொன்று பின்தொடராத
பூமி வேண்டும்!
நன்மையில் தீமை, தீமையில் நன்மை என
கலப்பில்லாத பிரபஞ்சம் எங்குள்ளது?
அதுவே எனது வீடு!
- மா.கணேசன் / 'தலைக்கு மேல் வெள்ளம்'
எவ்வொரு அழகும் ஓரு மூடிய கதவாகவும், திறந்த கதவாகவும்,
இரண்டாகவும், வேறு சொற்களில் சொன்னால், ஒரு தடையாகவும்
அல்லது ஒரு ஊர்தியாகவும் இருக்கிறது எனலாம்: ஒன்று அழகு நம்மை
கடவுளிடமிருந்து பிரிக்கிறது, ஏனெனில், அது நம் மனத்தில் முற்றிலுமாக
அதன் பூமி சார்ந்த ஆதாரத்துடன் அடையாளப் படுத்தப்படுகிறது, பிறகு
அது ஒரு வடிவத்தின் (idol)பாத்திரத்தை எடுத்துக்கொள்கிறது. அல்லது
அழகு நம்மை கடவுளுக்கு நெருக்கமாகக் கொண்டு சேர்க்கிறது, ஏனெனில்
நாம் அதில் ஆசிர்வாதம் மற்றும் அனந்தத்தின் அதிர்வுகளை உணர்கிறோம்.
. . . நல்லறம் கடவுளிடமிருந்து துண்டிக்கப்பட்டால் அது ஆணவமாக
ஆகிறது; அழகு கடவுளிடமிருந்து துண்டிக்கப்பட்டால் அது வெறும்
வடிவமாக (idol) ஆகிறது; ஆனால், நல்லறம் கடவுளுடன் இணைக்கப்
படுமெனில் அது அருளுடைமையாகிறது, அழகு கடவுளுடன் இணைக்கப்
படுமெனில் அது புனிதச்சின்னமாக ஆகிறது.
- ஃப்ரிஜ்ஜோஸ் ஷ்க்வான் (Frithjof Schuon)
'அழகு என்பது இருபுறமும் கூர்கொண்ட வாளைப்போன்ற தன்மை கொண்டது!
அழகின் அனுபவம் மனிதர்களை வெவ்வேறு விதமாகப் பாதிக்கிறது, அதாவது
அழகை உணர்வது என்பது ஒரு மனிதனின் நுண்ணுணர்வையும், உள்ளத்தின்
மேன்மையையும், அவனது ஆன்மீக முதிர்ச்சியையும் சார்ந்தது' என ஷ்க்வான்
கூறுகிறார்
அழகு என்பது காணும் பொருட்களில் உள்ளதா, அல்லது, காண்பவனின் கண்
களில் உள்ளதா என்று கேட்டால் அதற்கு நேரடியான சுலபமான பதிலைச்
சொல்வது கடினம்! ஏனெனில், அழகு காணும் பொருட்களிலும் இருக்கிறது;
ஆனால்,அழகு காண்பவனின் கண்களில் இருக்கிறது என்று சொல்லமுடியாது!
அதே நேரத்தில், அழகைக்காண கண்களும் வேண்டும்! ஏனெனில், கண்களின்
வழியாகத் தான் காட்சிகள் மனத்திற்குள் செல்லுகின்றன.ஏன் அழகு காண்பவ
னின் கண்களில் இருக்கிறது என்று சொல்லமுடியாது என்றால், ஒருவனது
கண்களுக்கு அழகெனத் தெரிவது இன்னொருவனது கண்களுக்கு அழகெனத்
தெரிவதில்லை! பெரும்பாலான உயிரினங்களுக்கு கண்கள் இருக்கின்றன,
ஆனால்,பன்றிகளும்,சேற்றுத்தவளைகளும் அழகை ரசிப்பதாகத்தெரிவதில்லை!
ஏன்,மனிதர்களில் சிலரும் அழகை ரசிப்பதாகத் தெரிவதில்லை! சிலர் எவ்வித
இசையையும் கேட்பதில்லை!
ஆக, அழகு என்பது, காணும் பொருட்களிலும் இருக்கிறது; மேலும், அழகைக்
காண கண்களும் வேண்டும்; ஆனால்,கண்கள் மட்டும் போதாது; பிரதானமாக,
அழகை அழகென இனம்காணக்கூடிய உணர்வு வேண்டும்! ஆக,அழகு என்பது
காண்பவனின் உணர்வில்தான் உள்ளது! ஆனால், இதுவே இறுதியான பதில்
என்று சொல்லிவிடமுடியாது! ஏனெனில்,உணர்வு என்பது ஒருபடித்தானதல்ல!
அதில் பல படிநிலைகள் உள்ளன! மிகத் தாழ்நிலை உணர்விலிருந்து மிக அதி
உயர் நிலை உணர்வு வரை உள்ளன!
அடுத்து, அழகு என்பது மிகத் தற்காலிகமானது, நிலையற்றது! ஒரு மலரானது
மிகவும் அழகான வடிவத்துடனும், வண்ணங்களுடனும் திகழ்கிறது; ஆனால்,
ஒரு நாள் மட்டுமே நிலைக்கக்கூடியதாயுள்ளது! இந்த பூமியும்,சூரியனும், ஏன்
ஒட்டு மொத்தப் பிரபஞ்சமும் ஒரு நாள் அழியக்கூடியதே! அதனால்தான் என்
னவோ இப்பூமி எவ்வொரு மனிதனையும் ஒரு நூறு வருடங்களுக்கு மேல்
உயிருடன் வைத்துப்பேணுவதில்லை போலும்!
அடுத்து, அழகு என்பது மேலோட்டமானது, அது எவ்வகையிலும் இறுதியான
தல்ல! அதாவது, அது எவ்வொரு இறுதியான குறிக்கோளுக்கும் சேவை புரிவ
தாய் இருப்பதில்லை! தாஜ்மகால் மிக அழகான ஒரு கட்டடம்!அதை அன்பின்
சின்னம் என்று சொல்வர்! மிகஆழமான உணர்வின் மிக மேலோட்டமான ஒரு
வெளிப்பாடு! ஒரு கூட்டு-உழைப்பின் சாதனை! தாஜ்மகாலை வடிவமைத்த
கட்டடக் கலைஞனுடைய கற்பனையின் அழகைச் சொல்வதா? பிற கலைஞர்
களின், வினைஞர்களின் நுணுக்கமான கை-வேலைப்பாட்டின் அழகைச் சொல்
வதா? ஒரு குறியீடு என்றவகையில் மட்டுமே அது அழகானது! அதாவது ஒரு
தாஜ்மகாலோ அல்லது ஆயிரம் அழகிய தாஜ்மகால்களோ, அவை அழகின்
ஊற்றை இறைத்துத் தீர்க்கவியலாது! ஏனெனில், அழகான ஒரு பொருளானது
அதனளவிலேயே ஒரு முடிவு அல்ல! அழகு நம்மை முடக்கிப்போடவியலாது!
மாறாக, அழகானது ஒரு கணமேனும் காலத்தை அகற்றிடச் செய்யுமானால்,
அது தன் பணியைச் செவ்வனே செய்துவிட்டது எனலாம்!
இந்த உலகமும், மொத்தப்பிரபஞ்சமும் நிலையானதல்ல எனும் பட்சத்தில்,
அதன் அழகு எத்தகையதாயிருக்கும்? ஆனால், மறுக்கமுடியாத வகையில்
அழகு என்பது இருக்கிறது - எதற்காக என்றால், அனைத்தையும் கடந்த ஒரு
இறுதியான நித்திய மெய்ம்மையைச் சுட்டுவதற்காக, நினைவூட்டுவதற்காக!
அடுத்து, அழகு, குறிப்பாக உலகின்,படைப்பின் அழகு என்பது மட்டுப்பாடானது.
அழகு என்பது தன்னைக்கடந்த ஒரு அதீதமெய்ம்மையின் குறியீடு மாத்திரமே!
ஒரு மலரின் அழகைக் கண்டு வியக்காதவன் உணர்வற்ற விலங்காவான்!
அதன் அழகை வழிபடுபவன் உள்ளீடற்றவன்! ஒருமலரைக்கண்டதும் தன்னில்
மலர்பவன் மட்டுமே உண்மை மனிதன்! இப்பூமியிலுள்ள தாவரங்கள், காட்டுச்
செடிகள், கொடிகள், மரங்கள் எல்லாமே பூக்கின்றன, மனிதனைத்தவிர!
இயற்கை அழகானது! ஆனால், இப்பூமியின் அழகைக் கண்டு, உணர்ந்து,
ஆனந்திப்பது எது, அல்லது யார்? இயற்கையால், அழகைக் காண முடியாது!
ஒரு மலருக்கு அதன் அழகு தெரியாது! ஏனெனில், அதற்கு "உணர்வு" கிடை
யாது. உணர்வுள்ள மனித ஜீவியால் தான் புறத்தேயுள்ள அழகை உணர்வு
கொண்டு ஆனந்திக்க முடியும். ஆக, அழகைக் கண்டு ஆனந்திக்கும் " மனித-
உணர்வு " அழகிலிருந்து வேறானதாய் இருக்கமுடியுமா?
அழகு புறத்தேயுள்ளதா? அல்லது காண்பவனின் அகத்தேயுள்ளதா? பிரபஞ்சம்
அழகானதே, அதிலுள்ள யாவும் அழகானவையே! அழகு எங்கும், எதிலும்
உள்ளது. எல்லாம் அழகின் வெவ்வேறு வடிவங்களே, நிலைகளே! ஆனால்,
"அனைத்து-அழகின்" (All Beauty)உறைவிடம் எங்குள்ளது? அதன் ஊற்றுக்
கண் எது?
பூமி, இயற்கை, பிரபஞ்சம் மொத்தத்தையும் "இக்கரை" என்ற சொல்லைக்
கொண்டு குறிப்பிடுவோமெனில், புறத்தேயுள்ள அழகு அகத்தின் அடியாழத்தில்
"மறுகரை" யில் உறையும் "அனைத்து-அழகை" நினைவூட்டும் மங்கலான
பிரதிபலிப்பு மாத்திரமே! சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கும் சந்திரனைப்
போன்றது "இக்கரை". ஆம், உண்மையில் அழகு என்பது "மறுகரை"யைச்
சேர்ந்தது! ஆனால், "மறுகரை" என்பது என்ன? அது எங்குள்ளது? "மறுகரை"
என்பது மனிதனின் சாரத்திலிருந்து வேறானதல்ல! அதுவே மனிதனுடைய
உங்களுடைய உண்மையான "சுயம்"! "மறுகரை" என்பது உங்களது "ஆன்மா"
வே தான்! ஆனால், உங்களுடைய ஆன்மா உங்களுக்குள்ளோ, அல்லது, புறத்
தேயுள்ள உலகிலோ எங்கும் இல்லை! அதே நேரத்தில், உங்கள் அகத்தின்
வழியாகத்தான் அந்த மறுகரையைச் சென்றடைந்தாக வேண்டும்! அவ்வாறு
சென்றடைந்திடும் போது, அதை உங்களது ஆன்மா என நீங்கள் அழைத்துக்
கொள்ளலாம்!
ஆக, பூமியைச்சார்ந்த அழகையும், பிறவம்சங்களையும், ஒட்டுமொத்த பிரபஞ்
சத்தையும், தன்னையும், தன் வாழ்க்கையையும், அனைத்தையும் இறுதியான
மெய்ம்மையை அடைவதற்கான பாதையாக, பாலமாகக் கொள்பவனே ஞானி!
மாறாக, அவற்றை அடைவிடமாகக் கொள்பவன் மூடன்!
அழகு என்பது இயற்கையில் மட்டுமல்லாமல், மனிதனின் படைப்புகளிலும்
உள்ளது! ஓவியம், கலை, இலக்கியம், கவிதை, இசை இவை யாவும் அழகின்
வெவ்வேறு முகங்களே! இயற்கையின் படைப்புகளாகட்டும், மனிதனின்
படைப்புகளாகட்டும், அனைத்துப் படைப்புகளுக்கும் அடிப்படை படைப்புப்பூர்வ
மான சக்தியே ஆகும்; அதை நாம் "இறைவன்" என்று அழைக்கலாம்! ஆக,
படைப்புகளிலிருந்து படைத்தவனுக்கு,படைப்பின் ஊற்றுக்குச் செல்வதொன்றே
மனிதனை முழுமைப்படுத்தும்!
உண்மையில், ஒட்டு மொத்த பிரபஞ்சமும், அதிலுள்ள யாவும் "இறைவன்"
எனும் படைப்புச்சக்தி தன்னை உட்படுத்திக்கொண்டு உருமாறி எழுந்தவையே!
அப்படைப்புகளில் உயிர்பெற்று எழுந்தது மட்டுமல்லாமல், உணர்வும் பெற்று
எழுந்த ஒரு படைப்புதான் மனிதன்! படைப்பின் வழியே படைத்தவன் தன்னை
நோக்குவதே படைப்பின் நோக்கம்! கடவுள் தன்னைக்காண்பதற்கான ஒரு ஆடி
(Mirror)தான் படைப்பு! அதாவது, படைப்பின் அழகைக் காணும் மனிதன்
அவ்வழகில் மயங்கி படைப்பினுள் சிறைப்பட்டுவிடாமல், படைப்பின், அழகின்
ஊற்றைச் சென்றடைந்தாக வேண்டும்! ஏனெனில், படைப்பின் சிகரமான
மனிதனின் வழியாகத் தன்னைக்காண்பதே கடவுளின் திட்டம்!
மா.கணேசன்/ நெய்வேலி/ 06-06-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment