
[ஏன் எல்லோராலும் ஆன்மீகத்தில் முன்னேறமுடிவதில்லை?]
ஒரு சண்டிக்குதிரை (இன்னொரு சண்டிக்குதிரையிடம்): அட, இந்தப்
பயிற்சியாளன் என்ன எதற்கெடுத்தாலும் வசை பாடுகிறான், இல்லை
யென்றால் சாட்டையைச் சொடுக்குகிறான்!
சில ஆன்மீகப் பள்ளிகள், "எல்லா மனிதர்களாலும் ஆன்மீக உயரங்களை எட்ட
முடியாது!" என்று கூறுகின்றன. ஆனால், இக்கூற்றை நான் முற்றிலுமாக
மறுக்கிறேன்! ஏனெனில், எல்லா மனிதர்களாலும் ஆன்மீக உச்சத்தை அடைய
முடியாது என்றால், பலர் மானிடப்பிறப்பு எடுத்ததே வீண் என்றாகிவிடும்!
இவ்விஷயம் குறித்து, தத்துவ ஞானி பிளாட்டினஸ்(Plotinus)கூறுகையில்,
"எல்லா மனிதர்களுக்கும் உயர் உணர்வுத்தளங்கள் எட்டும்வகையில் இல்லை
என்றாலும், ஆன்மீகம் மற்றும் தத்துவப்பயிற்சி மூலமாக அவற்றை எட்டவிய
லும்; அதாவது புலன்வழி-தரவுகளை விட்டுவிட்டு உள்முகமாகத் திரும்புவதன்
மூலம் உயர்-பேரறிவை அடைய இயலும்" என்கிறார்.
பொதுவாக ஸென் குருமார்களும், குறிப்பாக போதிதருமரும், தம் சீடர்களது
விஷயத்தில் மிகக் கடுமையாக நடந்து கொண்டதாகவும், கடுமையான கட்டுப்
பாடுகளைக் கொண்டு வழி நடத்தியதாகவும் சொல்லப்படுவதுண்டு! இதில்
கவனிக்கப்படவேண்டிய ஒரு அம்சம் என்னவெனில், மனிதர்கள் எவ்விதமான
கட்டுப்பாடுகளும், கட்டளைகளும், மேலாதிக்கமும், புற அழுத்தமும் இல்லாத
சுதந்திரமான நிலையில் தாமாகவே ஆன்மீகத்தை தேர்வுசெய்வதுமில்லை,
அதில் ஆர்வத்துடன் ஈடுபடுவதும், தொடர்ந்து அதில் முன்னேறுவதுமில்லை!
அதாவது, "இல்லாத ஊருக்கு"ச் செல்லவேண்டுமென, பெரும் ஏக்கம்கொண்டு
"பாதையற்ற பாதை"யில், பயணிப்பதென்பது பலரைப்பொறுத்தவரை எண்ணிப்
பார்க்கவியலாத, சாத்தியமற்ற விஷயமே! ஆக,மனிதர்கள் எவ்வித கட்டுப்பாடு
களும், கட்டளைகளும், மேற்பார்வையும் இல்லாத தமது சுதந்திரமான சூழ்
நிலையில் ஆன்மீகத்தைத் தெரிவுசெய்து, அதில் ஈடுபடுவதில்லை, அதாவது,
தங்களுக்குள் ஆழமாகச் செல்லுவதில்லை எனும்பட்சத்தில், ஒரு குருவின்
மேற்பார்வையும், வழிகாட்டுதலும், கண்டிப்பு மிக்கதாகவும், கட்டுப்பாடுகள்
நிறைந்ததாகவும் அமைவது தவிர்க்கவியலாததாகும்!
குதிரைகள் தாமாக விரும்பி வண்டிஇழுப்பதோ, வேறு பணிகளை மேற்கொள்
வதோ கிடையாது! குதிரைகளைப் பழக்குவது கடினமானசெயல்தான்; ஆனால்
பழக்க முடியும்! அதே நேரத்தில், ஓணான்களையும், அரணைகளையும் பழக்கு
வது, நெறிப்படுத்துவது என்பது இயலாத காரியமாகும்! மனிதர்களில் சிலர்
குதிரைகளைப்போலவும், பலர் ஓணான்களைப் போலவும் இருக்கின்றனர்!
குதிரைகள் தமது இயல்பான, சுதந்திரமான நிலையை விட்டுவிட்டு எதையும்
புதிதாகக் கற்றுக்கொள்ள முயற்சிப்பதில்லை! ஆகவே, குதிரைகளைப் பயிற்று
விப்பவன், அவற்றை இயல்பான நிலையில் தொடரவிடாமல் கட்டுப்படுத்தி
யும்,உணவைக் குறைத்தும், சாட்டைகொண்டு விலாசியும் பயிற்றுவிக்கிறான்!
மனிதர்கள் தாமாகவே தம்முள் உணர்ந்து மேற்கொள்ளவேண்டிய தம் வாழ்
வின் மிகமுக்கியமான கடைத்தேற்றம் அளிக்கும் ஆன்மீகத்தை தம் உணர்வுக்
குறைவால் தவறவிட்டதால், ஒரு குருவின் வழியாகக் கற்றுக்கொள்ள வேண்
டிய நிலையில் அவருடைய கட்டளைகளையும், அவர் விதிக்கும் கட்டுப்பாடு
களையும் சிரமேற்கொண்டு நிறைவேற்றுவது அவசியமாகும்!
குதிரைப் பயிற்சியாளனைப் பொறுத்தவரை, குதிரைகளுக்கென்று தனியே,
சொந்த விருப்பமோ, நோக்கமோ, வாழ்க்கையோ, இலக்குகளோ எதுவும்
இருக்கமுடியாது! அவை தமது இயல்பான போக்கில், எந்நேரமும் புற்களை
மேய்ந்துகொண்டிருக்க விரும்பலாம்;அல்லது பெட்டைக்குதிரைகளை விரட்டிக்
கொண்டு செல்லலாம்; அல்லது, காட்டில் சுதந்திரமாக ஓடியாடித்திரிய விரும்
பலாம்! அவ்வாறே,சீடர்களுக்கும் தங்களுக்கென்று தனியே, சொந்தவிருப்பமோ,
நோக்கமோ, வாழ்க்கையோ, இலக்குகளோ எதுவும் இருக்கமுடியாது!
குதிரைகளைப்பொறுத்தவரை, பயிற்சியாளன் விதிக்கும் கட்டுப்பாடுகள் நியாய
மற்றவைதான்; ஏனெனில், வண்டிகளை இழுத்துச்செல்வதோ, அல்லது வேறு
பல்வேறு பணிகளைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுவதோ அநீதியானதே!
அப்பணிகளைச் செய்வதன் வழியே குதிரைகள் முக்தியடையப் போவதோ,
ஞானமடையப் போவதோ கிடையாது! ஆனால், மனிதர்களைப்பொறுத்தவரை
ஆன்மீக உச்சத்தை அடைவதொன்றே அவர்களுடைய முக்திக்கான ஒரே வழி
யாகும்!
குதிரைகள், பயிற்சியாளனுடன் முரண்படவோ, வாதம்புரியவோ, தம் உரிமை
களுக்காகப் போராடவோ முடியாது! அவ்வாறே, சீடர்களும் குருவுடன் முரண்
படவோ, வாதம் புரியவோ, தம் உரிமைகளுக்காகப் போராடவோ முடியாது!
அதற்கான யாதொரு அடிப்படையும், தகுதியும் சீடர்களிடம் கிடையாது! அதா
வது, சீடர்கள் தமது வழக்கமான சுயத்தின் வாழ்க்கையைத் தொடர்வதற்காக
வும், தமது வழக்கமான வழிகளில் செல்வதற்கான சுதந்திரத்தைத் தக்கவைத்
துக்கொள்வதற்காகவும் உரிமைக்குரல் எழுப்புகிறார்கள்! குருவோ, ஒவ்வொரு
சீடனும் தன் உயர்-சுயத்தை எட்டுவதன் வழியாக மட்டுமே உண்மையான
சுதந்திரத்தை அடையமுடியும் என்பதை வலியுறுத்துகிறார்!
குதிரைகளைப் பொறுத்தவரை, அவற்றின் இயல்பு நிலை என்பது ஆசீர்வாதம்
ஆகும்! ஆனால், மனிதர்களைப் பொறுத்தவரை, அவர்களது இயல்பு நிலை
என்பது சாபம் போன்றதாகும்! ஏன் மனிதர்கள் எல்லோராலும் ஆன்மீகத்தில்
முன்னேற முடிவதில்லை என்பதற்கான ஒரே காரணம், அவர்கள் அவர்களது
இயல்பான சுயத்தையும், அதன் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டாடிக்
கொண்டு இருப்பதேயாகும்! மனிதனை நாம் ஒரு "பழக்கவழக்கத்தின் பிராணி"
(A Creature of Habit)எனலாம்! மனிதர்கள் தாங்கள் பழகிப்போன வாழ்க்
கையை வாழ்வதிலேயே திருப்தியடைந்திடும் பட்சத்தில், அல்லது தாங்கள்
விரும்பிய விஷயங்களையும், நிலைகளையும் அடைவதில், மும்முரமாக ஈடு
பட்டிருக்கும் வரையிலும்,ஒருபோதும் அவர்களால் வேறுவகை வாழ்க்கையை
எண்ணிப்பார்க்கவும், மேற்கொள்ளவும் இயலாது!
மொழி வழியாகக் குதிரைகளுக்குக் கட்டளையிட்டு பழக்கமுடியாது! சாட்டை
யின் மொழிதான் குதிரைகளுக்குப் புரியும்! அவ்வாறே, மானுடச் சீடர்களும்;
எத்தனை முறை அவர்களுடைய தாய்மொழியிலேயெ அவர்களுக்குப் போதித்
தாலும் அவர்களால் புரிந்து கொள்ளமுடியாது! ஆகவே தான் ஸென் குருமார்
கள் பிரம்பைக் கையில் எடுக்கவேண்டியதாயிற்று! ஆன்மீகத்தைப் பயிற்று
விக்கும் குருவானவர் மொழியையும், சொற்களையும் பயன் படுத்தினாலும்,
சொற்களின் வழியே அவர் கடத்தவிரும்புவது சொற்களுக்குரிய அர்த்தங்களை
யல்ல; மாறாக, அவற்றையும் கடந்து தாம் இருக்கும் உணர்வு நிலையையே
அவர் கடத்த விரும்புகிறார்! ஆனால், சீடர்கள் அவ்வுணர்வு நிலையைப் பற்று
வதைவிட்டுவிட்டு குருவின் சொற்களைப்பற்றிக்கொண்டு அவரதுசொற்களைக்
கொண்டே அவரிடம் வாதம்புரிவது நகைப்புக்குரிய மடமையாகும்!
குதிரைப் பயிற்சியாளன் குதிரைகளுடன் நண்பனாகவும் பழகிக்கொண்டு, ஒரு
குருவாகவும் போதிக்க முடியாது! ஏனெனில், மனிதர்கள் தங்களுக்குச் சமமான
சகமனிதர்களிடமிருந்து ஆன்மீகத்தைக் கற்றுக் கொள்ளமுடியாது! ஆம், ஒரு
குதிரை இன்னொரு குதிரையைப் பழக்கமுடியாது! குதிரைகளுக்குப் பயிற்சியா
ளன் அவசியம் தேவை! அவ்வாறே, மனிதர்களுக்கும் குரு என்பவர் அவசியம்
தேவை! குரு என்பவர் சீடர்களுடன் ஒரே படகில் இல்லை! சொல்லப்போனால்
அவர் எந்தப்படகிலும் இல்லை; சீடர்களை அவர் நடுக்கடலில் குதிக்கச் சொல்
கிறார்; ஏனெனில் அவர் ஏற்கனவே நடுக்கடலில் தான் நிற்கிறார்; அவருக்குத்
தெரிந்த, ஆனால், நீங்கள் நம்பவிரும்பாத ரகசியம் நீங்கள் பயணிக்கும் கப்பல்
ஓட்டை என்பதுதான்!
ஆன்மீக சாதகர்கள் சிலர், தாங்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்
வதாகக் கூறுகிறார்கள்; அதில் அவர்கள் திருப்தியடையவும் செய்கிறார்கள்!
ஆனால், அவர்களது உழைப்புக்கேற்ற பலன்கள் தான் கிடைப்பதில்லை என
அங்கலாய்த்துக் கொள்கின்றனர்! இதுதான் அவர்களிடம் உள்ள முரண்பாடு!
ஆன்மீகம் என்பது அவர்களது பிறப்புரிமை எனக் கருதுகின்றனர்; ஆனால் அது
தவறு. மாறாக, ஆன்மீகம் என்பது "விழிப்பு" எனும் கடமையாகும்!
சிலர் ஆர்வத்துடன் ஆன்மீகத்தில் ஈடுபடுவதாகவும், ஆனால், போதிய நேரம்
தான் கிடைப்பதில்லை என்று பொறுப்பற்ற முறையில் பேசுகிறார்கள்! சிலர்,
தாம் மேற்கொள்ளும் எவ்வொரு சிறு முயற்சியையும், (உதாரணத்திற்கு ஒரு
ஆன்மீக நூலைப் பிரித்து அதில் சில பக்கங்களை வாசித்ததை) பெரிய விஷய
மாகக் கருதுகிறார்கள்! இவர்களது தற்பெருமைக்கு எல்லைகளே கிடையாது!
உண்மையில், தீவிர ஆன்மீக ஈடுபாடு மன-நோய்களிலிருந்து ஒருவரை விடு
விக்கும் தன்மை கொண்டது என்பது பலருக்குத் தெரியாது! ஆனால், சிலர்,
தாங்கள் எவ்வாறிருக்கிறோம், என்னசெய்கிறோம் என்பதே தெரியாமல் உணர்
வற்று இயங்குகின்றனர்; ஆனால்,வெகுஎளிதாக இவர்கள் பிறருக்கு அறிவுரை
கூறவும், போதிக்கவும் தொடங்கிவிடுகின்றனர்! பொதுவாக, ஆன்மீக சாதகர்கள்
ஆன்மீகத்திற்குள் நுழைவதற்கு முன்னர், மிகப்பரவலான ஒருவகை மனநோய்
கொண்டவர்களாக இருக்கின்றனர்! ஆன்மீகத்தில் ஈடுபட்டவுடன் வேறு வகை
மன-நோய்க்கு ஆளாகிவிடுகின்றனர்!
அகந்தை-உணர்வு என்பது மனிதஜீவிகள் மட்டுமே பெற்றுள்ள அரிய வரம்
ஆகும்! ஆனால், அகந்தை-உணர்விலேயே தரித்திருப்பது, தேங்கி நிற்பது என்
பது மன-நோய்க்கு ஒப்பானதாகும்! நம்மில் பலர், மன-நோய் என்பது பைத்திய
நிலை என்பதாக மட்டுமே அறிகின்றனர். ஆனால், பொறாமை, தற்பெருமை,
சுய நலம், பேராசை, சுய-முக்கியத்துவம், போலித்தனம், ஆகியவைகளும் மன
நோய்களே பைத்திய நிலைகளேயாகும்! எவையெல்லாம் மனிதர்களை உணர்
வில் வளரவிடாமல், மட்டுப்படுத்துகின்றனவோ அவையெல்லாம் மன-நோய்க்
கான வித்துக்களே! மேலும், பொறாமை, தற்பெருமை, சுயநலம், பேராசை
இவை தனித்தனி அம்சங்கள் அல்ல; மாறாக, இவையாவும் ஒன்றோடு ஒன்று
தொடர்புடையவையாகும்! இவற்றில் ஒன்று ஒருவனிடத்தில் இருக்குமானால்,
மற்ற அம்சங்களும் உடன் இருக்கவே செய்யும்!
ஆன்மீகம் என்பதை எளிதாக விளக்கவேண்டுமென்றால்,"சுய- நிர்வாகம்", அதா
வது தன்னைத்தானே நிர்வாகம் செய்துகொள்வதுதான் ஆன்மீகம் என்று சொல்
லலாம்! தங்களை முறையாக நிர்வாகம் செய்ய இயலாதவர்களால் ஆன்மீகத்
தில் முன்னேறமுடியாது! உண்மையான ஆன்மீகம் என்பது ஒருவன் தன்னை
எவ்வாறு அணுகுகிறான், அறிகிறான் ஆராய்கிறான், என்பதிலிருந்து தொடங்கு
கிறது! 'சுய-நிர்வாகம்' என்பது, ஒருவன் தன்சுயத்தை நிர்வகிப்பதாகும்! ஆனால்,
அகந்தையை மையமாகக் கொண்ட சுயத்தால் எவ்வாறு தன்னைத் தானே
நிர்வகிக்க இயலும்? இயலும், ஆம், அகந்தையை மிகச்சுலபமாகக் கடப்பதற்
கான ஒரே வழி, அகந்தைக்கு தன்னைக் கண்டுபிடிக்கும் பணியை வழங்குவது,
அதாவது, மனிதன் தன்னை மையமாகக் கொண்டு தனக்குப் புறத்தேயுள்ள
அனைத்தையும் காண்கிறான், ஆராய்கிறான், மதிப்பிடுகிறான்; ஆனால், அவன்
ஒருபோதும் தன்னைக் காண்பதேயில்லை! தான் உண்மையில் யார்? என்பதை
அறிவதேயில்லை!
எப்போது ஒரு மனிதன் உண்மையிலேயே தன்னைக்காண்கிறானோ, அப்போது
பிறவனைத்தும், உலகம், உலகிலுள்ள பொருட்கள் அனைத்தும் முக்கியத்துவ
மற்றவை என்கிற உண்மை புரியத் தொடங்கும்! மனிதன் தன்னையறியாத
போது தன்னை மையமாகக் கொண்டிருந்ததற்கும், தன்னையறிந்த பிறகு
தன்னை மையமாகக் காண்பதற்கும் வித்தியாசம் உள்ளது! அதாவது தன்னை
அறிந்த பிறகுதான் அவன் உண்மையில் மையம் உள்ளவனாகத் திகழ்கிறான்!
அதாவது, மனிதனின் அகந்தை அல்ல உலகின், அனைத்தின் மையம்! மாறாக,
மனிதனின் அகந்தை-உணர்வைக் கடந்த ஒரு பேருணர்வுதான் அசல் மையம்!
அம் மையத்தை அடைவதற்கான ஒரு தற்காலிக மையம் தான் மனிதன்; இது
தான் மனிதனின் உண்மையான முக்கியத்துவம் ஆகும்!
மா.கணேசன்/ நெய்வேலி/ 30.05.2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment