
அவர்கள் எதுவாக ஆக விரும்பினார்களோ அதுவாகவே
இருக்கிறார்கள்!
- இப்னு அராபி
நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள், நீங்கள் விரும்பியவாறே இருக்கிறீர்கள்!
பிறகு ஏன் இந்தப் பொருமல், பெருமூச்சு? உங்கள் போக்கில் வாழ்க்கையை
நீங்கள் அனுபவித்து வாழவில்லையா? அதில், கழுத்துவரை திருப்தியடைய
வில்லையா, என்ன? பிறகு ஏன் இவ்வளவு அதிருப்தியும், விரக்தியும்?
நீங்கள் விதைத்ததை அறுவடை செய்கிறீர்கள்! உங்கள் உழைப்புக்குரிய
பலனுக்கு மேல் நீங்கள் எதிர்பார்ப்பது ஏன்? பிறருடைய நிலைகளைப் பார்த்து
பொறாமைப்படுவதினால், இம்மியளவும் நீங்கள் வளரவோ, உயரவோ முடி
யுமா, சொல்லுங்கள்?
நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்; அதுதான் உங்கள் பிரச்சினை! அதாவது,
உண்மையிலேயே நீங்கள் நீங்களாக ஆவதற்காகக் கொடுக்கப்பட்ட அனைத்து
அடிப்படைகளையும், கட்டுமானப்பொருட்களையும் பயன்படுத்தி உங்களுக்குச்
சௌகரியமானதொரு அமைப்பில் உங்களை அமைத்துக்கொண்டுவிட்டீர்கள்!
அதாவது மெய்ம்மை உங்களுக்குள் வந்து வாசம்செய்யும்வகையில் உங்களை
அமைக்காதவரை அதிருப்தி, மற்றும் அர்த்தமின்மையையே நீங்கள் அனுபவிப்
பீர்கள்! ஏனெனில், மனிதன் என்பவன் தன்னை நிலைநாட்டுவதற்காகத் தோன்
றியவனல்ல; மாறாக, தன் வழியே மெய்ம்மையை நிலை நாட்டுவதற்காகத்
தோன்றியவனாவான்!
தன்னை அறியாத மனிதன் தன்னில் எதைப் பெரிதெனக் கண்டு நிலைநாட்டு
வான்? உங்களிடம் எத்தகைய மகத்துவமான பண்பை நீங்கள் கண்டு விட்டீர்?
சுயநலம், பொறாமை, பேராசை, தற்பெருமை, கயமை, சிறுமை, கஞ்சத்தனம்,
போலித்தனம், வஞ்சகம், பாரபட்சம், ஒட்டுண்ணித்தனம், அகங்காரம்,ஆணவம்
இவற்றில் எதை நீங்கள் கொண்டாடுவீர்? இவை யாவும் எவ்வாறு உங்களுக்
குள் முளைத்தன என வியக்கிறீர்களா? "உணர்வின்மை" தான் இவை எல்லா
வற்றுக்குமான விளை நிலம்!
அட, உங்களுடைய சுதந்திர-சித்தம் எவற்றைத் தெரிவுசெய்ததோ அவற்றைத்
தானே உங்களுடைய உள்ளடக்கங்களாகக் நீங்கள் கொண்டிருக்கமுடியும்?
நீங்கள் உங்கள் நிலத்தைப் பண்படுத்தி நல் வித்துக்களை விதைக்காமல் கரம்
பாக விட்டுவைத்தால், களைகளும், புல்பூண்டுகளும் தானே மண்டிக்கிடக்கும்!
நீங்கள் விழிப்பாக இல்லாவிட்டால், இரண்டு வழிகளில் தீமைகள் உங்களை
வந்தடையும்! நீங்கள் எவற்றையெல்லாம் விரும்பிச் செய்கிறீர்களோ அவ்வழி
யாகவும், எவற்றையெல்லாம் நீங்கள் செய்யத் தவறுகிறீர்களோ அவ்வழியாக
வும்! இவ்விரண்டுக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பு!
பெரும்பாலான உங்கள் கவலைகள் அர்த்தமற்றவை! உங்களுடைய உண்மை
யான சந்தோஷமும், நிறைவும், உங்கள் உணர்வு எட்டும் தூரத்திலேயே
இருக்க, நீங்களோ சமூகம் கொண்டாடும் டாம்பீகமான மதிப்புக்களைத்துரத்திச்
சென்று அவற்றை அடையமுடியாத நிலையில் தோல்வியில் துவண்டு போய்
துன்பப் படுகிறீர்கள்! உங்களில் சிலர் தோல்வியைத்தாங்க முடியாமல் தம்மை
மாய்த்துக் கொள்வதுமுண்டு! அவர்களுக்காக நாம் வருத்தப்பட முடியாது!
ஏனெனில், வாழ்க்கையின் அசலான மதிப்புக்களை விட்டுவிட்டு போலியான
மதிப்புக்களைத் தேடும் போதே நீங்கள் தற்கொலை செய்து கொண்டவர்களாக
ஆகிவிடுகிறீர்கள்! ஆகவே, உங்களுக்காகவும் நான் வருத்தப்படுவதில்லை!
எவரும் வருத்தப்பட்டு பாரம் சுமக்கத் தேவையில்லை! விருப்பப்பட்டு பாரம்
சுமப்பவர்களுக்கு என்னிடம் எவ்வொரு நற்செய்தியும் இல்லை! நரகத்திற்கான
பாதை உங்களது விருப்பங்களைக்கொண்டே போடப்படுகிறது! வரங்களை சாப
மாகவும், சாபங்களை வரங்களாகவும் மாற்றுவது, இவ்விரண்டுமே மனிதர்
களால் சாத்தியமாகக்கூடியதே! பூமியில் நரகத்தை ஏற்படுத்துவதும், அல்லது,
சொர்க்கத்தைப் படைப்பதும் உலக மக்கள் பின்பற்றுகிற வாழ்க்கை-மதிப்புக்
களைப் பொறுத்ததாகும்!
நீங்கள் சிறப்பாகவும் வசதியாகவும் வாழவிரும்பி மேற்கொள்ளும் செயல்கள்
உடன்-விளைவுகளாக பிரச்சினைகளையும் உருவாக்கி விடுகின்றன! அவை
உங்களுடைய மன அமைதியையும், நிம்மதியையும் குலைத்துவிடுகின்றன!
நீங்கள் செல்லவேண்டிய ஊர் ஒன்றாகவும், சென்று சேர்ந்த ஊர் வேறாகவும்
இருப்பது குறித்து நீங்கள் எதுவும் செய்வதில்லை! ஆனால், பிரச்சினைகள்
தீர்ந்து மன அமைதியையும், நிம்மதியையும் திரும்பப்பெற விரும்பும் நீங்கள்
மெய்ம்மை குறித்து சிறிதும் அக்கறை கொள்வதில்லை! ஆனால், மெய்யூரில்
மட்டுமே கிடைக்கக்கூடிய அம்சங்கள் பொய்யூரில் கிடைக்குமா என்ன?
எப்போதும் உங்கள் நலம், உங்கள் நிம்மதி, உங்கள் சந்தோஷம், உங்கள் சௌ
கரியம், உங்கள் லாபம், உங்கள் வியாதி, உங்கள் பிரச்சினை என உங்கள் இத்
யாதிகள் மட்டுமே பெரிதென எண்ணிக்கொண்டிருக்கும் நீங்கள் மெய்ம்மை
யிலிருந்து எவ்வளவு தொலைவு விலகியிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத்
தெரியுமா? அல்லது, மெய்ம்மை எதற்குப்பயன்படும் என்று கேட்கிறீர்களா?
நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள், நீங்கள் விரும்பியவாறே இருக்கிறீர்கள்
என்பது இருக்கட்டும்! ஆனால், எந்த அடிப்படையில் நீங்கள் நீங்களாக இருக்
கிறீர்கள்? உங்களுக்கான அடிப்படை, அளவீடு எது? அடுத்து, உங்கள் விருப்பத்
தின் அடிப்படை எது? உண்மையில் நீங்கள் நீங்களாக இருக்கும்பட்சத்தில்
உங்களுக்கு விருப்பம் என்று எதுவும் இருக்கமுடியாது! உண்மையில், ஒரு
கூழாங்கல்லைவிட நீங்கள் அதிகம் முழுமையாக இருப்பதில்லை! ஏனெனில்,
ஒரு கூழாங்கல் எவ்வித விருப்பமும், எதிர்பார்ப்பும், வெறுப்பும், எதிர்ப்பும்,
எதுவும் இல்லாமல் முழுமையாக, பூரணமாக இருக்கிறது! ஆனால், நீங்கள்
ஒரு கூழாங்கல்லைப் போன்று உயிரற்ற சடம் அல்ல என்கிறீர்களா? நல்லது,
ஒரு உயிர்-ஜீவிக்குரிய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டபிறகும் நீங்கள்
நிறைவடையாதிருப்பது ஏன்? அடிப்படைத் தேவைகள் மட்டுமல்லாமல், அடிப்
படையற்ற தேவைகளை அடைந்தும் கூட நீங்கள் நிறைவடைவதில்லையே
ஏன்? ஏனெனில், இன்னும் நீங்கள் முழுமையாக நீங்களாக இல்லை! ஏதோ
வொன்று குறைகிறது! அது என்ன?
"முழுமை" என்பது சிலவற்றை, அல்லது பலவற்றை உங்களுடன் சேர்த்துக்
கொள்வதால் அடையப்படுவதல்ல! மாறாக, அது உங்கள் உணர்வில் ஏற்பட
வேண்டிய மாற்றத்தில் அடங்கியுள்ளது! சிலர், "எண்ணம் போல் வாழ்வு" என
வும், "நீங்கள் என்னவாக ஆக எண்ணுகிறீர்களோ அதுவாகவே ஆவீர்" எனவும்
சொல்வர். ஆனால், விஷயம் அவ்வளவு எளிதானல்ல! தினமும் எண்ணற்ற
எண்ணங்களை நீங்கள் எண்ணுகிறீர்கள்; ஆனால், உங்களுள் ஒரு மாற்றமும்
நிகழ்வதில்லை! உங்களில் சிலர், ஒரு ஆன்மீக நூலை வாசித்துமுடித்தவுடன்
ஞானமடைந்து விட்டதாக எண்ணிக்கொள்கிறீர்கள்! இந்த எண்ணம் வெறும்
ஒரு பிரமையே தவிர, நிஜமல்ல! ஒரு நூலை வாசித்துப் புரிந்து கொள்ளுதல்
என்பது வேறு; ஞானமடைதல் என்பது வேறு. ஒரு நூலில் காணப்படும் வாச
கங்களின் சொற்களுக்கான அர்த்தத்தை அறிந்துகொள்ளுதலும், ஞானமடை
தலும் ஒன்றாகாது! ஆன்மீகக் களத்திற்குரிய சொல்லாடல்களையும், வாய்பாடு
போன்ற ஒருசில கோட்பாடுகளையும், சூத்திரங்களையும் ஒருவர் தெரிந்து
கொண்டு விபரமறியாதவர்களிடம் சென்று சொற்பொழிவாற்றுவதும், வியாக்கி
யானம் செய்வதும் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் செயலாகும்! அறிவுச்
சேகரமும், அறிவை வெளிக்காட்டுதலும் ஞானம் அல்ல!
நீங்கள் நீங்களாகவே இருப்பதில் ஒரு தவறுமில்லை! ஆனால், நீங்கள் ஒரு
போதும் எண்ணிப்பார்க்காத, எட்ட முயற்சிக்காத உங்களைக்கடந்த உயர்நிலை
கொண்டிருக்கும் அனுகூலங்கள் மீது ஆசைகொள்வதுதான் சிறிதும் பொருத்த
மற்றது, அடிப்படையற்றது ஆகும்! நீங்கள் விரும்பிய வகையிலான தொரு
நிலையை உங்களுக்குத் தெரிவுசெய்துகொண்டபிறகு அதனுடைய பலாபலன்
களை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை!
மனிதஜீவிகளாகிய நமக்கு சுதந்திர-சித்தம் உள்ளது; தேர்வுச்சுதந்திரம் உள்ளது!
ஆகவே நாம் நம் மனம் போன போக்கில் வாழ்கிறோம், நாம் விரும்பியவாறு
நம்மையும், நம் வாழ்க்கையையும் அமைத்துக்கொள்கிறோம்! அதில், நாம்
சின்னச்சின்ன ஆசைகளை நிறைவேற்றிக்கொள்கிறோம்; சின்னச்சின்ன சுகங்
களை, சந்தோஷங்களை அடையவும் அனுபவிக்கவும் செய்கிறோம்! ஆனால்,
ஏனோ நாம் மகிழ்ச்சியாக இருப்பதில்லை! பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு,
கவலைகளைச்சுமந்துகொண்டு, நிம்மதியற்று அல்லாடுகிறோம்! யாவற்றுக்கும்
மேலாக வாழ்க்கை அர்த்தமற்றதாக, வெறுமையாகக் கனக்கிறது! இந்த அர்த்த
மற்ற வாழ்விலிருந்து தப்பிக்க நம்மில் சிலர் ஆன்மீகத்தை நாடுகிறோம்; ஏதா
வதொரு ஆன்மீக மார்க்கத்தில், ஆசிரமத்தில் சேர்ந்து கொள்கிறோம்!
ஆனால், ஆன்மீகம் என்பது வாழ்க்கையை முறையாக வாழாமல் தவிர்த்தவர்
களுக்கான புகலிடம் அல்ல! மாறாக, வாழ்க்கையை உக்கிரமாகவும், உண்மை
யாகவும், முழுமையாகவும் நேசிப்பவர்கள் வாழ்க்கைக்கு அளிக்கும் தங்கு
தடையற்ற பதிலளிப்பு ஆகும்! நீங்கள் உங்கள் மேலோட்டமான விருப்பங்
களைக்கொண்டு வாழ்க்கையை முற்றிலுமாக ஆக்கிரமிக்காமல்,வாழ்க்கையின்
விருப்பத்திற்கும் சிறிது இடம் விட்டிருப்பீர்களெனில், வாழ்க்கை உங்களுள்
வினைபுரிந்து உங்களை மாற்றமுறச் செய்து முழுமைப்படுத்திடும்!
வாழ்க்கை என்பது உணவு, உடை, உறையுள், மற்றும் உறவுகள் எனும்
மேலோட்டமான விவகாரமோ, அன்றாடச் சுற்றோ; சொந்த விருப்பு-வெறுப்பு
களினால் கட்டுப்படுத்தப்பட்ட,அல்லது மட்டுப்படுத்தப்பட்ட இயக்கமோ அல்ல!
அல்லது, அது, உடல் எனும் உணர்வற்ற பிராணிக்கு ஊழியம் செய்வதோ,
அல்லது எளிதாக பிரமைகளுக்கு ஆட்படும் மனத்தின் புனைவோ அல்ல!
மாறாக, வாழ்க்கை என்பது ஒட்டுமொத்தப் பிரபஞ்ச இருப்பின் உள்ளார்ந்த
விழைவிற்குப் பதிலளிப்பதும், அவ்விழைவை நிறைவேற்றுவதும் தான்
வாழ்க்கை!
மொத்தத்தில்,வாழ்க்கை உங்களுடைய சொந்த விவகாரமல்ல! வாழ்க்கையில்
உங்களுடைய விருப்பத்தேர்வுக்கும் இடமுள்ளது; ஆனால்,அது மிகக் குறுகிய
எல்லைக்குட்பட்டது! பிரபஞ்சம் எனும் இந்தமாபெரும் பரிசோதனை யாருடை
யது, அல்லது, எத்தகைய மெய்ம்மையினுடையது என்பதைக் கண்டுபிடிப்பது
தான் வாழ்க்கை! உங்களுடைய விருப்பம்,வாழ்க்கையின் விருப்பத்திடமிருந்து
அதிகம் விலகிச்செல்வது "அர்த்தமிழப்பு" எனும் ஆபத்தை உள்ளடக்கியதாகும்!
மா.கணேசன்/ நெய்வேலி/ 03-06-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment