"எது நம்மை ஆள வேண்டும், வழி நடத்திச்செல்லவேண்டும்?" என்பதே
மிகவும் முக்கியமான அடிப்படையான அரசியல் கேள்வியாகும்! இக்
கேள்வியுடன்தான் அசலான அரசியல் பார்வை அல்லது பிரக்ஞை
தொடங்குகிறது! இக்கேள்வியின் முக்கியத்துவத்தை நாம் ஆழமாக
உணர்வது அவசியமாகும்! ஏனெனில், இக்கேள்வியை இதற்கு முன்னர்
நாம் கேட்டிருக்கவில்லை! கேட்டிருப்பின், அக்கேள்விக்குரிய பதிலை
கண்டடைந்திருப்பின், நாம் வேறு வகையான அரசாங்க அமைப்பை,
அரசியல் அமைப்பை உருவாக்கியிருப்போம்! தற்போதுள்ளது போன்ற
ஒரு போலியான சனநாயக அமைப்பினுள் அடைபட்டிராமல், உண்மை
யான சனநாயக அமைப்பை, மக்களாட்சியை நாம் ஏற்படுத்தியிருப்போம்!
- மா.கணேசன்/ "அர்த்தமற்ற அரசியல்"/ சாத்தியமற்ற புரட்சி!
இந்த மேற்கோள், இன்னும் பிரசுரிக்கப்படாத "சாத்தியமற்ற புரட்சி" எனும்
நூலின் "அர்த்தமற்ற அரசியல்" என்ற தலைப்பிலமைந்த 5-வது அத்தியாயத்தி
லிருந்து எடுக்கப்பட்டது.
•••
"என்ன, நல்லாத்தானே இருந்தார் கணேசன்! திடீரென்று, அரசியல் பிரவேசம்,
அது இது என்று பேச ஆரம்பித்துவிட்டாரே!" என்று எனது நண்பர்கள், வாசகர்
கள் அதிர்ச்சியடைய வேண்டாம்! என்னைப் போன்ற ஒரு சாதாரண தனி நபர்,
"அரசியலில் குதிக்கப்போகிறேன், பேர்வழி!" என்று அறிவித்தால் கோமாளித்
தனமாகத் தான் அது இருக்கும். ஆனால், இன்று, சினிமா-பிரபலங்கள் சிலர்
தங்களது அரசியல் பிரவேசம் குறித்து தினமும் அறிவிப்புகளை வெளியிட்டுக்
கொண்டிருக்கின்றனர்! அதாவது, இத்தகைய அறிவிப்புகள் பொது மக்களாகிய
நம்மைக் கோமாளிகளாக ஆக்கிவிடக்கூடாதே என்பதற்காகத் தான் இப்பதிவு!
உண்மையில், யார், யாரெல்லாம் அரசியலுக்கு வரலாம், வரக்கூடாது என்று
வரைமுறைகள் ஏதும் இருக்கிறதா என்றால், உடனே, "இது சனநாயக நாடு,
எவர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்!" என்று சொல்வர். ஆனால்,
சனநாயக நாட்டில் எவர் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம், ஏதாவது
ஒரு கட்சியில் ஒரு தொண்டனாக ஒரு ஓரத்தில் ஈடுபடலாமே தவிர,
உண்மையிலேயே மக்களின் மீது அக்கறைகொண்ட, அரசியல் ஞானம் உள்ள
ஒருவர் ஒரு போதும் அரசியலில் தலையெடுக்க இயலாது என்பது தான்
எதார்த்தம்! அதே நேரத்தில், உண்மையிலேயே மக்களின் மீது அக்கறை
கொண்டவர், உண்மையிலேயே அரசியல் ஞானம் உள்ளவர் நாட்டில் சிலரா
வது இருக்கக்கூடும்! ஆனால், அவர்கள் அரசியலில் ஈடுபட முடியாத அராஜ
கச் சூழல் நாட்டில் நிலவுகிறது!
நம்மில் பலருக்கு, அரசியல் என்றாலே, முதலாவது நினைவிற்கு வருவது
"அதிகாரம்" என்பதும், இரண்டாவது, "கட்சி" என்பதும் தான்! உண்மையில்,
"அரசியல் கட்சி" என்பது ஆட்சி-அதிகாரத்தை எட்டுவதற்கான ஒரு ஏணியே
தவிர வேறு எதுவுமல்ல! ஏனெனில், அதிகார-நாற்காலியை அடைய விரும்பும்
ஒருவர் தன்னந்தனியாக நேரடியாக அடைந்திடமுடியாது! அதற்காகத் தான்
தொண்டர்-படைகளைக் கொண்ட, 'கட்சி' எனும் அமைப்பும், கொடியும், சின்ன
மும்; "தேர்தல்" எனும் சடங்கும், பிற இத்யாதி விஷயங்களும் உருவாக்கப்
பட்டுள்ளன!
அரசியலில் ஈடுபடுவது என்றால், எல்லோருமே அரசியல்வாதிகளாகவோ,
தலைவர்களாகவோ ஆவது என்று அர்த்தமல்ல! பொதுவாக அரசியலில் இரு
வித நிலைகள் இருக்கின்றன! ஒன்று, ஏதாவதொரு கட்சியில் உறுப்பினராக,
தொண்டனாக மட்டுமே இருப்பது! இரண்டாவது, ஏதாவதொரு கட்சியின்
தலைவராக ஆவது! அடுத்து, ஒருவர் வெறும் உறுப்பினராக அரசியலில்
ஈடுபட இருவழிகள் உள்ளன! ஒன்று ஏதாவதொரு கட்சியின் வழியாக, அதா
வது, கட்சியில் ஒரு உறுப்பினராக, அல்லது, தொண்டனாக இணைவதன்
வழியாக! இரண்டாவது, எவ்வொரு கட்சியிலும் இணையாமல் அரசியல்
விழிப்புணர்வுடன் தனித்துச் செயல்படுவது! பொதுவாக, இந்த இரண்டாவது
வகையினர் எந்தக்கட்சியிலும் உறுப்பினராக இல்லாமலிருப்பர், அதேநேரத்தில்,
முறையான அரசியல்-விழிப்புணர்வும் இல்லாமல் இருப்பர்; அதாவது, இவர்
களின் அரசியல் ஈடுபாடும், கடமையும் தேர்தலின் போது, வாக்களிப்பதுடன்
முடிந்து போகும்!
அடுத்து, அரசியல்வாதியாக, அல்லது தலைவராக ஆக விரும்புகிறவர்களது
அரசியல்! இவர்களும் ஏதாவதொரு கட்சியில் இணைந்து படிப்படியாக
தலைவர் பதவிக்கு உயர வேண்டும்; இதற்கு அதிக காலம் ஆகும்! ஆனால்,
குறைவான காலத்தில், உடனடியாகத் தலைவராவதற்கான ஒரு வழி, தாமே
ஒரு புதிய கட்சியை ஆரம்பிப்பதாகும்! அதாவது, இன்றைய குழப்பமான
அரசியல் சூழலானது, உடனடித் தலைவர்களுக்கும், கட்சிகளுக்கும் மிகவும்
சாதகமானது என்பதாகக் கருதப்படுகிறது! அதிலும், ஏதாவதொரு துறையில்
பிரபலமாக விளங்கும் நபர்களுக்கு இன்னும் சாதகமானது எனலாம்! குறிப்பாக,
அதிக எண்ணிக்கையில் ரசிகர்களைக்கொண்ட சினிமா நட்சத்திரங்கள் புதிதாக
கட்சி தொடங்கினால், ரசிகர்கள் படையை தொண்டர் படையாக மாற்றிக்
கொள்ளலாம்!
ஒருவர் அரசியல் தலைவராக ஆவதற்கு சிறப்புத்தகுதிகள் எதுவும் தேவை
யில்லை! ஒருவர் பிரபலமாக இருத்தல் வேண்டும், பெரிய தொண்டர்-படை
வேண்டும், பணபலம் வேண்டும். ஏற்கனவே ஆளுகின்ற அரசியல் கட்சியின்
நடவடிக்கைகளில் உள்ள குற்றம் குறைகளை சுட்டிக்காட்டும், விமர்சிக்கும்
'திறமை' வேண்டும்! முக்கியமாக, மக்கள் பிரச்சினைகளைத் துருவித்தேடிக்
கண்டுபிடித்து மக்களைக் கவரும் வண்ணம் முழங்க வேண்டும்! பொதுவாக,
எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கட்சிக்கு தனிச்சிறப்பான
கொள்கைகள், கோட்பாடுகள் இருப்பதாகச் சொல்வதுண்டு! ஆனால், மக்களின்
மிகவும் அடிப்படையான தேவைகளைப் பூர்த்தி செய்வதையும், வாழ்வாதாரங்
களைப் பெருக்குவதையும் விட வேறு கொள்கைகோட்பாடுகள் என்ன இருக்க
முடியும்? பன்னெடுங்காலமாக நாட்டில் நிலவும் வறுமை, வேலையில்லாத்
திண்டாட்டம், மோசமான வாழ் நிலைமைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகிய
வையே இவர்களது கொள்கை கோட்பாடுகள் எனும் மோசடியை அம்பலப்
படுத்தும் சாட்சியங்கள் அல்லவா! ஆக, கட்சிகளின் கொள்கை கோட்பாடுகள்
என்பவை அர்த்தமற்ற வெற்று முழக்கங்களே என்பதை மக்கள் இனியாவது
புரிந்துகொள்ளவேண்டும்!
அரசியல் என்பது நெருப்பைக் கையாள்வது போன்று, கவனத்துடன் மேற்
கொள்ளப்பட வேண்டியதொரு விஷயமாகும்! 'அரசியல்' என்றாலே 'அதிகாரம்'
என்பதைக் குறிக்கும் ஒரு சொல்தான் என்பதை நாம் மறுக்கமுடியாதுதான்!
ஆனால், அதிகாரம் என்பது "எதற்கான அதிகாரம்?", "யாருக்கான அதிகாரம்?"
என்பதையெல்லாம் இனியும் நாம் அறியாமல் இருப்பது அறிவீனமாகும்!
நீங்களோ, அல்லது உங்கள் அண்டைவீட்டுக்காரரோ ஒரு அரசியல் தலைவ
ராக ஆகலாம்! முதலமைச்சராக ஆட்சியதிகாரம் உங்களுக்கு வழங்கப்படலாம்!
ஆனால், அந்த அதிகாரத்தை உங்களுக்கு வழங்குவது யார்? மக்கள்தானே!
மக்கள் எவ்வளவு பரிதாபமானவர்கள் பாருங்கள்! அதாவது, ஆட்சியதிகாரத்தை
ஒரு அரசியல்தலைவருக்கு வழங்கும்வரை மக்களுக்கு இருக்கும் அதிகாரம்,
வழங்கியவுடன் எங்கோ காணாமல் போய்விடுகிறது! இதுதான் ஜனநாயகத்தின்
பெரும் சாபக்கேடு ஆகும்! இந்நிலை தலை நேராக மாற வேண்டும்; அப்போது
தான் மக்களாட்சி என்பது உண்மையில் மக்களாட்சியாக விளங்க முடியும்!
ஏனெனில், அடுப்பில் நெருப்பைப் பற்ற வைத்துவிட்டு, பிறகு அதைக் கட்டுப்
படுத்தமுடியாவிட்டால், அதனால் நன்மைகளைவிட தீமைகளே விளையும்!
ஆட்சியதிகாரம், (ஆட்சி+அதிகாரம்) என்பது, ஆளுதல் என்பதையும், நிர்வாகம்,
செயல் பொறுப்பு, மற்றும், மேலாண்மை என்பவற்றையும் குறிக்கும் சொற்
றொடர் ஆகும்! ஆட்சியதிகாரத்தைப் பெற்ற ஒரு கட்சியின் தலைவர் எதை
ஆளுவார், மேலாண்மை செய்வார்? அவரது அதிகாரத்தின் எல்லை எது?
முதலில், ஆட்சியதிகாரத்தைப் பெற்று முதலமைச்சரான தலைவருக்கு என்ன
ஆளுமை உள்ளது? தன்னை முறையாக ஆளத்தெரிந்த ஒருவர் தான்
"ஆளுமை" கொண்டவர் ஆவார்! அவரால் தான் பிறரை ஆளமுடியும்! ஆனால்,
நாம் தேர்ந்தெடுத்த தலைவர் 'ஆளுமை" உள்ளவரா என்பது கேள்விக்குறியே!
அடுத்து, ஆட்சியதிகாரம் என்பது, நிர்வாகம், மற்றும் செயல் பொறுப்பைக்
குறிக்கிறது! ஆனால், நம் தலைவர் தனது சொந்த குடும்ப நலன்களையும்,
பொருளாதாரத்தையும் மட்டுமே நிர்வகிப்பவராக இருக்கிறார்! அவருடைய
செயல் பொறுப்பு என்பது, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவிப்பதுட
னும், அடிக்கல் நாட்டுவதுடனும் முடிந்து விடுகிறது! தேர்தல்நேர வாக்குறுதி
கள் யாவும் காற்றுடன் கலந்து கரைந்து போகின்றன! தங்களது ஆட்சிக்கு
நெருக்கடி நேரும்போது, அல்லது அடுத்த தேர்தல் நெருங்கும் போது ஆளும்
கட்சியினர், நாங்கள் அங்கே ஒரு பாலம் கட்டினோம், இங்கே சாலைகள்
போட்டோம் என்று சிறுபிள்ளைத்தனமாக, சாதனைப்பட்டியலை வாசித்து
தங்களைத்தாங்களே பாராட்டிக் கொள்கின்றனர்! எதிர்க்கட்சியோ ஆளும் கட்சி
யின் குறைபாடுகளை விமர்சித்து, தாராளமாக வாக்குறுதிகளை வழங்கும்
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தேர்தல் களத்தில் இறங்கத் தன்னைத்
தாயார் செய்துகொள்கின்றது!
"எது, அல்லது, யார் நம்மை ஆட்சி செய்யவேண்டும், வழிநடத்திச்செல்ல
வேண்டும்?" என்ற கேள்வி அதிமுக்கியமானது என்று ஆரம்பத்திலேயே குறிப்
பிட்டோம்! நிச்சயமாக மனிதர்களே மனிதர்களை ஆட்சி செய்ய முடியாது.
மனிதனை உருவாக்கிய அல்லது, மனிதனை விஞ்சியதொரு சக்தி மட்டுமே
மனிதர்களை ஆட்சி செய்யவும், வழி நடத்திடவும் வேண்டும்! நிச்சயமாக,
எவ்வொரு அரசாங்கமோ, அரசியல் அமைப்போ, அல்லது சமூக அமைப்போ,
சமூக நிறுவனமோ எதுவும் மனிதர்களை உருவாக்கிடவில்லை! மாறாக,
இவை யாவும் மனிதர்கள் உருவாக்கிய கருவிகளைப் போன்றவையே!
உண்மையில், ஆளுதல், ஆட்சி செய்தல் போன்ற சொற்கள் அருவருக்கத்தக்க
வையாகும்! மனிதர்கள் சுய-உணர்வற்ற விலங்குகள் அல்ல, ஆட்சி செய்யப்
படுவதற்கும், மேய்க்கப்படுவதற்கும்! ஆனால், மனிதர்கள் முதலில் உண்மை
யில் மனிதர்களாக, அதாவது, உள்ளீடு பெற்றவர்களாக ஆகிடவேண்டும்! ஆம்,
வாழ்க்கையை ஒவ்வொருவரும் நேரடியாக வாழ்ந்துபெறும் அறிவும், புரிதலும்
தான் அந்த உள்ளீடு ஆகும்!
ஆம், மனிதர்கள் சிற்றுணர்வு, மற்றும் சிற்றறிவின் சொந்தக்காரகளாக இருப்ப
தால், உயர்-அறிவு, அல்லது உயர்-உணர்வு தான் மனிதர்களை ஆளவும் வழி-
நடத்தவும் முடியும்! அதாவது, வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் வழிமுறை
யில் மனிதர்கள் தங்களது அறிவையும், உணர்வையும் பெருக்கிக் கொள்ள
வேண்டும்!
மேலும், மனிதனை உருவாக்கிய சக்தி, அல்லது, மனிதனை விஞ்சிய சக்தி
எங்கிருக்கிறது? அது எத்தகையது? மனிதனை உருவாக்கிய சக்தி, அல்லது,
மனிதனை விஞ்சிய சக்தி என்றதும், அது "கடவுள்" என்பதைக் குறிப்பதாக
நீங்கள் எண்ணலாம்! அதில் தவறில்லை; ஆனால், அக்கடவுளை ஒவ்வொரு
வரும், வாழ்க்கையை உணர்வு கொண்டு வாழ்வதன் வழியே நேரடியான
உணர்வார்ந்த அனுபவத்தில் கண்டடைந்தாக வேண்டும்! அதாவது, மனிதனும்,
வாழ்க்கையும் சந்திக்கும் உச்சப் புள்ளியே அக்கடவுள்!
அதாவது, "வாழ்தல்" என்பது மனிதத் தரத்திற்குரியதாக மேற்கொள்ளப்பட
வேண்டும்! வெறுமனே அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்வதையே பொது
வாக நாம் அனைவரும் வாழ்க்கை என வாழ்ந்து வருகிறோம்! இத்தேவை
களையே அலங்காரமாகவும், ஆடம்பரமாகவும் பூர்த்தி செய்துகொள்வதையே
"உயர்-வாழ்க்கைத்தரம்" எனவும், உயரிய மதிப்பீடு, உயரிய வாழ்க்கை, மற்றும்
வாழ்வின் இலக்கு எனவும் கொண்டாடுகிறோம்! இவற்றைப் பெறுவதற்கான
வழிவகைகளை அடைவதிலேயே நம் வாழ்க்கை முழுவதும் செலவிடப்பட்டு
விடுகிறது!
நாம் அன்றாடம், அந்தந்த வேளைக்கு வயிற்றுக்கு உணவிடுகிறோம் என்பது,
ஒரு ஊர்திக்கு எரிபொருள் நிரப்புவதைப் போன்றதேயாகும்; அது அவசியமும்
கூட; ஆகவேதான் உணவை நாம் அடிப்படைத்தேவைகளில் மிகவும் அடிப்
படையானது எனக் காண்கிறோம்! ஆனால், எரிபொருள் நிரப்பப்பட்ட ஒரு
ஊர்தியை நாம் பலவகைகளில், பலவிதமான அலுவல்களைச் செய்வதற்காகப்
பயன்படுத்துகிறோம்; அதாவது, ஊர்தியை நாம் நம் பணியிடத்திற்குச் செல்ல
வும், கடைத்தெருக்களுக்குச் சென்று பலவிதப்பொருட்களை வாங்குவதற்காக
வும், இவ்வாறு பலவகைகளில் பயன்படுத்துகிறோம்! ஒரு ஊர்தியைப்பொறுத்
தவரை, அவ்வப்போது எரிபொருள் நிரப்புவதற்காக அந்த ஊர்தியை நாம்
இயக்குவதில்லை! ஆனால், அவ்வப்போது, "உணவு" எனும் எரிபொருளை
நிரப்புவதற்காக மட்டுமே நாம் எண்ணற்ற வேலைகளை, அலுவல்களை,
காரியங்களைச் செய்கிறோம்! இது மிகவும் குறுகிய ஒரு விபரீதச் சுற்றாக,
இருக்கிறது, அதாவது, மனிதத்தரத்திற்குக் கீழாக இருக்கிறது என்பது எவ்வாறு
நமது அறிவுக்கு எட்டாமல் போனது?
ஆம், உணவில்லாமல் நாம் உயிர்-பிழைத்திருக்க முடியாது என்பது உண்மை
யே! ஆனால், நாம் (தொடர்ந்து) உயிர்-பிழைத்திருப்பதே உண்பதற்காகத்தான்
எனும்பட்சத்தில், நம் வாழ்வின் அர்த்தம், உண்மை, குறிக்கோள், இலக்குதான்
என்ன? இத்தகைய நம்வாழ்க்கையில், அரசியல் எவ்விடத்தில் பொருந்துகிறது
என்பதை நாம் அறிந்தாக வேண்டுமில்லையா?
வெறும் உயிர்-பிழைத்தலையே வாழ்வின் இலக்காகக்கொண்ட நம்முடைய
குறுகிய மதிப்பீடுகள் எதுவும் அசலான வாழ்க்கை மதிப்புகளுடன் எவ்வகை
யிலும் தொடர்பற்றதாக, வெறுமனே பொருள்வகைப்பட்டவையாகவே
உள்ளதால் தான், "பொருளாதாரம்" என்பது நம் வாழ்வில் பிரதான இடத்தைப்
பெற்றுள்ளது! பொருளாதாரம் என்று வரும்போது, பங்கீட்டுப் பிரச்சினையும்,
பொருளாதார சமத்துவமின்மை என்பதும் வருகிறது! இவற்றை அடியொற்றி
அரசியல் உள்ளே வருகிறது! அதாவது, அரசியல்ரீதியான சமத்துவத்தின்
வழியாக, அதாவது, பெரும்பான்மையினரின் சட்டத்தின் மூலமாக அரசியல்
பலத்தைப் பெறுவதன் மூலமாக, பொருளாதார சமத்துவத்தை அடையலாம்
என்கிற சமன்பாடு, ஏழைகளான பெரும்பான்மை மக்களின் உள்ளார்ந்த விழை
வின் வெளிப்பாடாக, அதாவது, ஜனநாயகம் அல்லது, மக்களாட்சி எனும்
ஆட்சிமுறையைக் கொண்டுவந்தது! ஆனால், இச்சமன்பாடு இன்றுவரையிலும்
மக்களாட்சி முறையிலும் பெரிதாகப் பலனளிக்கவில்லை!
பூனைக்குட்டிகளுக்கு அப்பத்தை சமமாகப் பங்கிட்டுத் தருவதாகச் சொல்லி
முன்வந்த குரங்கு அப்பத்தை முழுவதுமாகத் தின்றுவிட, ஏமாந்துபோன
பூனைக்குட்டிகளின் கதையைப் போலாகிவிட்டது மக்களாட்சியின் பரிதாபமான
உறுப்பினர்களான நம் கதையும்! நம்முடைய நலன்களைப் பிரதிநிதித்துவம்
செய்வதற்காக நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் ஆட்சியதிகாரத்
தில் அமர்ந்ததும் அவர்கள் கோடி கோடியாகச் சொத்துக்களைச்சேர்த்து தங்கள்
சொந்த நலன்களை பொறுப்பாகக் கவனித்துக்கொள்வதில் இறங்கிவிடுகிறார்
கள்! இதற்காகத்தான் பலர் அரசியலில் ஈடுபடுகிறார்கள், அதாவது, அதிகார-
நிலைகளை எட்டிப்பிடிப்பதற்காகவும், அவற்றைக்கொண்டு தங்களுடைய
சொந்த நலன்களை சாதித்துக்கொள்வதற்காகவும்! இவைதான் அவர்களுடைய
உள்ளார்ந்த அரசியல் கொள்கையும், மறைவான நோக்கமும் ஆகும்!
ஆக, வெறும் உயிர்-பிழைத்தலையே வாழ்க்கையாகக்கொண்டிருக்கும் வரை,
பொருளாதாரம் (உடமைகள், சொத்து-சுகம்) என்பது பிரதானமாக இருக்கும்;
ஆகவே, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் நீடிக்கும்! குரங்குப் பஞ்சாயத்து
செய்யும் அரசியல்வாதிகளும், 'மக்களாட்சி' என்ற பெயரில் மக்களை ஏய்த்துச்
சுரண்டி அரசியல் செய்து கொண்டிருப்பர்!
உண்மையில், "பொருளாதாரம்" என்பதற்கு மனித வாழ்வில் இடமுள்ளது;
ஆனால், அது நம் வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமிக்கும் அளவிற்கு
முக்கியத்துவம் கொண்டதல்ல! இதன் உப-தேற்றம் என்னவென்றால், பொரு
ளாதாரத்தைப்போலவே, அரசியலும் நம் வாழ்க்கை முழுவதையும் ஆக்கிர
மிக்கும் அளவிற்கு முக்கியத்துவம் கொண்டதல்ல! உண்மையில், வாழ்க்கை
யின் அர்த்தம், உண்மை, குறிக்கோள், மற்றும், இலக்கு பற்றியெல்லாம் ஆழ
மாகச் சிந்திக்கும் நேரத்தில் மட்டும் தான் நாம் உண்மையில் வாழ்கிறோம்!
மற்ற நேரங்களில், நாம் எலிகளைப்போல உணவுத்தேடலிலும், பிறதேவை
களைப் பூர்த்தி செய்யும் விவகாரங்களிலும், அலுவல்களிலும் தான் ஈடுபட்
டிருக்கிறோம்! "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை!" என்று சொல்லப்
பட்டதன் அர்த்தம், பொருள் இல்லாமல் உயிர்-வாழ்க்கை சாத்தியமில்லை
என்பதே! அதேபோல, "அருள் இல்லாமல் அவ்வுலகம் இல்லை!" என்பதன்
அர்த்தம், அருள், அதாவது, அருள் எனும் ஆசீர்வாதத்தை உணர்வதற்குரிய
பக்குவம் இல்லாமல் உயர்-வாழ்க்கை சாத்தியமில்லை! இந்த உயர்-வாழ்க்கை
யை நாம் வீடுபேறு அல்லது மரணம் கடந்த பெருவாழ்வு என்றும் கொள்ள
லாம்! ஆனால், மிகவும் துரதிருஷ்டவசமாக பொருள் மீதிருந்த அதீதப் பற்றி
னால், அருளை அவ்வுலகத்திற்குரிய ஒன்றாக விலக்கிவிட்டோம்!
அதே வேளையில், உயர்-வாழ்க்கைக்கு நாம் உயர்ந்து செல்லவேண்டுமானால்,
உயிர்-வாழ்க்கையின் விவகாரங்களிலேயே எப்போதும் நாம் மூழ்கியிருக்கும்
வகையில், உயிர்-வாழ்க்கையானது போராட்டம் மிகுந்ததாக இல்லாமலிருக்க
வேண்டும்! அப்படியானால், ஆடம்பரமும், வீணடிப்புத்தரமும் கொண்ட தொரு
பொருளாதார நிலையை இலக்காகக்கொண்ட அபத்தமான 'பொருளாதாரச்
சமத்துவம்' குறித்து பிரயாசைப்படுவதை விடுத்து; கூடவும் இல்லாத, குறைய
வும் இல்லாத அர்த்தமுள்ள, நடுத்தரமானதொரு பொருளாதார நிலையை நாம்
எல்லோருக்கும் சாத்தியமாக்கிட வேண்டும்! இதன் அர்த்தம் நாம் நம் தேவை
களைச் சுருக்கிக் கொள்ளவேண்டும் என்பதல்ல! மாறாக, நம் தேவைகளை
அர்த்தமுள்ள வகையில் நிறைவேற்றிக் கொள்வதையும்; அடிப்படையற்றதும்,
அர்த்தமற்றதுமான தேவைகளை முற்றாகக் கைவிடுவதையும் பொறுப்புமிக்க
சமூகப் பிரஜைகளாக நாம் கடைப்பிடிக்க வேண்டும்!
ஆக, தொடர்ந்து நாம் பழைய இலட்சியங்களான, "பொருளாதார சமத்துவம்",
போலியானதும் உள்ளீடற்றதுமான "சமூக சமத்துவம்" போன்றவைகளை உரு
வாக்கிட முயற்சிக்கும்வரையில், மக்களாட்சி என்ற போர்வையில், சுய-ஆதாய
ஆர்வம் கொண்ட ஊழல் அரசியல்வாதிகளின் அரசியல் மட்டுமே தொடரும்!
"ஊழல்" என்பது அரசியல் வாதிகளின் தனிப்பண்பு மட்டுமல்ல! மாறாக, ஊழல்
என்பது நம்மையறியாமல் நம்முள் ஊடுருவியிருக்கும் நம் அனைவரின்
பொதுப்பண்பு ஆகும்! ஏனெனில், ஊழல் என்பது முழுக்கமுழுக்க பொருளியல்
ரீதியான நம் மதிப்பீட்டு-அமைப்பின் தவிர்க்கவியலாத தீமையாகும்! மேலும்,
மக்களும், தனிமனிதர்களுமான நாம் நமது அன்றாட உயிர்-பிழைத்தலின்
விவகாரங்களிலேயே மூழ்கியிருக்கும்வரை, அதாவது, ஐந்தாண்டுகளுக்கு ஒரு
முறை வாக்களிப்பதுடன் நமது ஜனநாயக அரசியல் கடமை முடிந்துவிடுகிறது
என்பதாக எதையும் கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டிருக்கும்வரை அரசியல்
அமைப்பைச் சீரமைக்கவோ, மாற்றியமைக்கவோ இயலாது! நாம் மாறாவிடில்,
அரசியல்வாதிகளும் மாறமாட்டார்கள்! வெறுமனே ஐந்தாண்டுகளுக்கு ஒரு
முறை அரசியல் தலைவரையும், கட்சியையும் மாற்றுவதன் மூலம் உருப்படி
யான எந்த மாற்றமும் ஏற்படாது!
அதாவது, எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என வாழ்க்கை முழுவதும்
அரசியலாக்கப்பட்டிருக்கும் அபத்தமான நிலையிலிருந்து வாழ்க்கையை நாம்
அரசியலில் இருந்து பிரித்து மீட்டெடுத்தாக வேண்டும்! அதற்காகவே நாம்
அனைவரும், ஒவ்வொருவரும் செயலூக்கத்துடன் அரசியலில் ஈடுபடுவது
அவசியமாகும்! இவ்வாறு நாம் பேசுவது கூட ஒருவகை அரசியல்தான் என்று
சிலர் சொல்லக்கூடும்; பரவாயில்லை! ஆனால், "இதுவும் ஒருவகை அரசியல்"
என்று அவர்கள் சொல்வதுதான் தவறு! ஏனெனில், இதுதான் உண்மையான
அரசியல்; "வாழ்க்கையின் அரசியல்" ஆகும்! அர்த்தமறிந்து வாழப்படும் மனித
வாழ்க்கையையும், மனிதஜீவிகளையும் விட வேறெதுவும் முக்கியமானதல்ல!
அரசியல், பொருளாதாரம், சட்டம், ... ஆகிய அனைத்தும் வாழ்க்கையை
முழுமையாக வாழ்வதற்கு நமக்குச் சேவை புரிவதற்கான கருவிகள் மட்டுமே!
ஆனால், செயலூக்கத்துடன் அரசியலில் ஈடுபடுவது என்றால் என்ன? ஒரு
தொடக்கமாக, இதுநாள்வரை நாம் தூங்கிக்கொண்டிருந்தது போல் இல்லாமல்
முதலில் விழித்துக்கொள்ளவேண்டும்! அரசியல் என்பது வாழ்க்கையில் எந்த
இடத்தில் பொருந்துகிறது என்பதைக் கண்டறிய வேண்டும்! "எது, அல்லது,
யார் நம்மை ஆட்சி செய்யவேண்டும், வழிநடத்திச்செல்ல வேண்டும்?" என்ற
கேள்விக்குரிய பதிலைக் கண்டுபிடித்தாக வேண்டும்! குறிப்பாக, மக்களாட்சித்
தத்துவத்தின் மாண்பினையும், மகத்துவத்தையும் நாம் நன்கு உணர்ந்திருக்க
வேண்டும்! ஏனெனில், அரசியல் என்பது அரசியல்வாதிகளின் களம் அல்ல;
அது நம் அனைவரது அடிப்படை வாழ்வாதாரத்தையும், அதன் மீது எழுப்பப்பட
வேண்டிய உயர்-வாழ்வின் தன்மையையும் தீர்மானிக்கும் களம் ஆகும்!
ஆகவே, இனியும் நாம், "ராமன் ஆண்டால் என்ன. இராவணன் ஆண்டால்
என்ன?" என்கிற மெத்தனப்போக்கில் செல்வது தகாது! நம்மால் தேர்ந்தெடுக்கப்
பட்ட நம்முடைய பிரதிநிதிகள் நம்முடைய வாக்குகளால் பெற்ற ஆட்சியதி
காரத்தை முறையாக, மக்களாகிய நமக்குப் பயனளிக்கும் வகையில் செயல்
படுத்துகிறார்களா, கடமையாற்றுகிறார்களா, என்பதை நாம் விழிப்புடன்
கவனித்து அவர்களைச் செயல்பட வைக்கவேண்டும்! அவ்வாறு அரசியல்வாதி
களைச் செயல்பட வைக்கும் வழிமுறைகளை நாம் நாளும் கண்டுபிடித்துச்
செயல் படுத்திடவேண்டும்! முறையான அரசியலில், அதாவது, மக்களாட்சி
முறையில் மக்கள் தான் தலைவர்களாக இருக்கவேண்டும்; அரசியல்வாதிகள்
யாவரும் தொண்டர்களாக இருக்கவேண்டும்! ஆனால், நடப்பு அரசியலில்
யாவும் தலைகீழாக உள்ளன!
தற்போது நடைமுறையிலிருக்கும் பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியல்முறை
யில், ஒவ்வொரு தொகுதியிலும் நாம் ஒரு நல்லவரை தேர்ந்தெடுக்க வேண்
டும் என்கிறார்கள்! நாம் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து
ஒரு நல்லவரை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பார்களாம்! ஆனால், தற்போது
உள்ள ஆட்சிமுறையில் உள்ள பெரிய சிக்கல் என்னவென்றால், தேர்தலில்
போட்டியிடும் பிரதிநிதிகளில் எவர் நல்லவர், எவர் கெட்டவர் என்று அறிவது
சாத்தியமில்லை! ஏனெனில், அவ்வாறு அறிவதற்கான அளவுகோல்கள் ஏதும்
நம்மிடம் கிடையாது! மேலும், இவ்வாறு, அரசாள்பவரின், அதாவது, அரசியல்
தலைவரின் நற்குணத்தை, அல்லது தீய குணத்தைப் பொறுத்துதான் நாட்டு
மக்களின் வாழ்வு தீர்மானிக்கப்படும் என்றால், நம் வாழ்க்கை சூதாட்டம்
போலாகிவிடும்! ஆகவே, வாழ்க்கையானது எவ்வொரு அரசரையோ, அரசியல்
தலைவரையோ, முதலமைச்சரையோ, பிரதம மந்திரியையோ சார்ந்ததாக
இருக்க முடியாது, கூடாது! உண்மையில், வாழ்க்கையைப் பொறுத்தவரை,
அரசரோ, அரசியல் தலைவரோ, எவருமே முக்கியமானவர்களும் அல்ல;
தவிர்க்கவியலாதவர்களும் அல்ல! ஆகவே, எவ்வொரு அரசரையோ, அரசியல்
தலைவரையோ பொறுத்து மக்களும், அவர்களுடைய வாழ்க்கையும் அமைவ
தாக இருக்க வியலாது!
ஏனெனில், மக்கள், மனிதர்கள், அதாவது தனிமனிதர் ஒவ்வொருவரும் தான்
முக்கியமானவர்! இவ்வகையில், அதாவது, மக்களில், மனிதஇனத்தில் ஒருவர்
என்றவகையில், நம்முடைய அரசரும், முதலமைச்சரும், பிரதம மந்திரியும்
முக்கியமானவரே! ஆகவேதான், அரசியல்வாதிகள் என்போர் ஒரு தனி இனம்
அல்ல என்று நாம் கூறுகிறோம்! மேலும், மக்கள் இன்று, இப்போதே தங்களது
வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும்! நிறைவேற்றப்படாத வெறும் தேர்தல்
அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை வைத்துக்கொண்டு மக்கள்
வாழமுடியாது! மேலும், தவறான பிரதிநிதியை, அரசியல் தலைவரை தேர்ந்
தெடுத்துவிட்ட குற்றத்திற்காக, மக்கள் தம்மையே நொந்துகொண்டு அடுத்த
தேர்தலை எதிர் நோக்கியவாறு வாழ்க்கையை வாழ முடியாது! ஏனெனில்,
அடுத்த தேர்தல், இன்னொரு அரசியல் கட்சி, இன்னொரு தலைவர் வந்தாலும்,
கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை ஓரிரவிற்குள்ளோ, அல்லது, முதல்
ஓராண்டுக்குள்ளோ மாறிவிடப்போவதில்லை!
.. . .. .......
இவ்வாறு, நடப்பிலுள்ள "அர்த்தமற்ற அரசியல்" பற்றிய விவரிப்புக்களையும்,
"அர்த்தமுள்ள அரசியல்" என்பது எத்தகையதாக இருக்கவேண்டும் என்பது
பற்றிய எனது புரிதல்களையும், பார்வைகளையும் தொடர்ந்து நான் பேசிக்
கொண்டும், எழுதிக்கொண்டும் இருக்க முடியும். ஆனால், ஒரே கட்டுரையில்
அனைத்து விஷயங்களையும் கொட்டித் தீர்த்துவிட இயலாது! ஆயினும்,
இது தான் என்னுடைய அரசியல் பிரவேசத்தின் முன்னுரை, அல்லது அறிமுக
உரை ஆகும்! "வாழ்க்கை" என்பது பிரபஞ்சம் தழுவியதாக இருப்பதால்,
வாழ்க்கையை பிரதானப்படுத்தும் "வாழ்க்கையின் அரசியல்" என்பதும் அகில
உலகையும், அனைத்து மக்களையும் தழுவியதாகத்தான் இருக்க முடியும்!
ஆகவே, நான் முன்வைக்கும் எனது கட்சிக்கு, அனைத்து மக்களின் கட்சிக்கு
ஒரு பெயர் வேண்டுமல்லவா! ஆம், "மானிட ஒருமைக்கழகம்" என்பதுதான்
நமது கட்சியின் பெயர்! நமது கட்சிக்கு ஒரு கொடி வேண்டாமா? ஆம், நமது
ஒவ்வொருவருடைய கைக்குட்டை தான் கொடி! நமது கட்சியின் சின்னம்
" ", ஆம், கேள்விக்குறி தான் நம்முடைய கட்சியின் சின்னம் ஆகும்!
முதலில் நாம் செய்ய வேண்டியது, நம்மைச் சுற்றிலும், குறிப்பாக அரசியல்
களத்தில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது, என்பதை விழிப்புடன் கவனிப்பது
தான்! ஏனெனில், மக்களாகிய நாம் இல்லாமல், அரசியலும் இல்லை, அரசியல்
வாதிகளும் இல்லை! அரசியல் என்பது, வாழ்க்கை எனும் பெரும் களத்தின்
ஒரு பகுதியாக, ஒரு கருவியாக மட்டுமே இருக்க முடியும்! இதற்கு மாறாக,
தற்போதுள்ளது போல, தலை கீழாக, அரசியலின் பகுதியாக நமது வாழ்க்கை
அமைதல் கூடாது!
மக்களாட்சி உண்மையில் மக்களாட்சியாக அமைய வேண்டுமானால், ஆட்சி -
அதிகாரத்தை முழுவதுமாக அரசியல்வாதிகளிடம் அளித்துவிடல் கூடாது!
ஆட்சியதிகாரத்தின் "கடிவாளம்" மக்களாகிய நம் கைகளில் இருக்கவேண்டும்!
கடிவாளத்தை விட்டுவிட்ட்டால், மாடுகள் வண்டியை அதன் இஷ்டத்துக்கு
எங்கேயாவது இழுத்துக்கொண்டு போய்ச் சேர்த்துவிடும்; நாம் சேரவேண்டிய
இடத்திற்குச் செல்ல முடியாது!
ஆக, நான் எனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டேன்; அது போல
மக்களே, நண்பர்களே, வாசகர்களே நீங்களும் தாமதியாமல் உங்களுடைய
அரசியல் பிரவேசத்திற்குத் தயாராகிடுங்கள்! தொடர்ந்து அரசியல் பற்றிய
கட்டுரைகள் முக நூலிலும், எனது vicharamarg.blogspot.in எனும்
எனது வலைத்தளத்திலும் வெளியாகும். நாம் பரஸ்பரம் ஒருவருக்கொருவர்
அரசியல் விழிப்புணர்வை ஊட்டிப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நிச்சயம்
அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும்! நினைவில் கொள்ளுங்கள் நாம்
பேசிக்கொண்டிருப்பது வெறும் அரசியல் அல்ல; நம் வாழ்க்கையையும், நமது
சுதந்திரத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்கான ஆயத்தங்கள் ஆகும்!
மா.கணேசன்/ நெய்வேலி/ 29-10-2017
---------------------------------------------------------------------------