Wednesday, 29 November 2017

அரசியல்கட்சிகள் எனும் வியாபார நிறுவனங்கள்!



   நாம் ஒருவருக்கொருவரும், நம்முடைய குழந்தைகளின் குழந்தைகளுக்கும்
   தான் விசுவாசம் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம், கட்சி அரசியலுக்கு
   அல்ல!
              - டாச்ஷேன் ஸ்டோக்ஸ்

அரசியல் கட்சிகள் என்பவை உண்மையில் மக்களின் நலன்களைப் பிரதிநிதித்
துவம் செய்வதற்கான அமைப்புகள் அல்ல! மக்களின் நலன்களைப் பிரதிநிதித்
துவம் செய்வதற்கான அமைப்புகளே என்றால், நாட்டில் ஏன் ஒம்பத்தெட்டுக்
கட்சிகள் உள்ளன; இன்னும் புதிது புதிதாக கட்சிகள் முளைத்த வண்ணம்
உள்ளன? ஒரு கட்சியைவிட இன்னொரு கட்சி மக்கள் நலன்களைச் சிறப்பாக
பிரதிநிதித்துவம் செய்து, பிரமாதமாக நிறைவேற்றப்போகின்றதா?

இல்லை, இல்லை, இல்லவே இல்லை! அரசியல் கட்சிகள்  உண்மையில்
மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கான அமைப்புகள் அல்ல!
அவை 'சோப்பு' தயாரிக்கும் போட்டி நிறுவனங்களைப்போல, "தங்களுடைய
நிறுவனம் தயாரிக்கும் சோப்புகள் தான் தரமானவை!" என்று போட்டிபோட்டுக்
கொண்டு விளம்பரம் செய்யும் வியாபார நிறுவனங்களைப் போன்றவையே!

ஆம், மக்கள் தங்களது விருப்பத்தேர்வின்படி எந்தக்கட்சியிலும் (வியாபார
நிறுவனத்திலும்) உறுப்பினராகச் சேர்ந்துகொள்ளலாம்! பிறகு அந்தக்குறிப்பிட்ட
கட்சியின் வாடிக்கையாளர் சேவை திருப்தியாக இல்லையென்றால், மக்கள்
வேறு கட்சியில் (வியாபார நிறுவனத்தில்) சேர்ந்துகொள்ளலாம்! ஏன் ஒரு
கட்சியின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் கூட
வேறொரு கட்சிக்குத் தாவிக்கொள்ளலாம்! இத்தகைய நடப்புக்கள் ஜனநாயகத்
தையே கேலிக்கூத்தாக ஆக்குகின்றன!

ஒவ்வொரு கட்சியும் தங்களது ஆட்சிக்காலத்தில்தான் பாலங்களைக்கட்டி
னோம், சாலைகளை அமைத்தோம்; ஏரிகளைத் தூர் வாரினோம், இன்னும்
அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று பட்டியலிட்டு பெருமை பேசு
கிறது! ஆனால், பாலங்கள், சாலைகள், மின்சார இணைப்புகள், மருத்துவ
மனைகள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அன்றாடத் தேவைகளுக்கான அடிப்
படை அம்சங்களா, அல்லது ஆடம்பரத் தேவைகளா? அவற்றைச் சாதனைகள்
என்று விளம்பரப்படுத்துவதன் அர்த்தம் என்ன? இந்த அடிப்படை வசதிகளைப்

பூர்த்திசெய்வதற்காகத்தானே மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்தல்கள்
மூலமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்?

எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்குக் 'கொள்கைகள்' இருப்பதாகவும்,
அவை பிற கட்சிகளைவிட சிறப்பானவை என்பதாகவும், தங்களது கட்சி
மட்டுமே மக்களை வாழ வைப்பதற்காகவே தோன்றியிருப்பதாகவும் சொல்லி
மக்களை நம்பவைத்து ஏமாற்றி வருகின்றன! எவ்வொரு வியாபார நிறுவன
மும் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை விற்று லாபம் சம்பாதிப்பதற்காகத்
தான் இருக்கிறதே தவிர, மக்களுக்குச் சேவை செய்வதற்காக இருப்பதில்லை!
ஆம், வியாபார நிறுவனங்களைப் போலவேதான் அரசியல் கட்சிகளும் செயல்
படுகின்றன! ஆனால், எல்லா அரசியல் தலைவர்களும், தங்களை மக்களுக்குப்
படியளப்பவர்களாகப் பாவித்துக்கொள்ளும் விஷயத்தில் ஒன்றாக இருக்கிறார்
கள்! ஒரு மாநிலத்தின் நன்குவளர்ந்த 'பிரதான', அல்லது, 'பெரிய' கட்சிகள்
எனப்படுபவை பெருநிறுவனங்களைப் போன்றவையாகும்! புதிதாக முளைத்த
கட்சிகள், 'சிறு', அல்லது, 'குறு' நிறுவனங்களைப் போன்றவையாகும்!

அரசியல் கட்சிகள் நம்மை திசை திருப்பிவிடுவதற்காகவே இருக்கின்றன;
அரசின் செயல்பாடுகள் மீதான நமது கவனத்தை மாற்றி கட்சிகளின் மீது
செலுத்தும்படிச் செய்கின்றன - ஏதோ, மக்களாகிய நம்முடைய நலன்கள்,
நல்வாழ்வு யாவும் தேர்தலில் வெற்றிபெறப்போகும் கட்சியை மட்டுமே சார்ந்
திருக்கிறது என்பது போன்ற மாயையைத் தோற்றுவிக்கின்றன!

அரசியல் கட்சிகளிடமுள்ள பிரச்சினை என்னவென்றால், எந்தக்கட்சியிடமும்
மக்களுக்கான உண்மையான "செயல்திட்டம்" எதுவும் இல்லை; ஆட்சியைப்
பிடிப்பது என்ற ஒன்றைத்தவிர! எல்லாக் கட்சிகளும் சுய-ஆதாயத் திட்டத்தில்
ஆழ்ந்திருக்க, மீத அரசியல் செயல்பாடுகள் என்பது, மக்களின் கவனத்தை
அற்ப விஷயங்கள் மீதும், போட்டிக்கட்சிகளுக்கு எதிராகவும் திருப்பிவிடுவதும்;
ஓட்டுப்போடுவது தான் மக்களின் உயர்ந்த ஒரே ஜனநாயகக் கடமையும், ஒரே
அரசியல் செயல்பாடும் என்பதாகச் சிந்திக்கவைக்கும்படியான, வெறும் கவர்ச்
சித்திற அரசியல் சொல்லாடல்களும், வெற்று ஆரவார முழக்கங்களும் மாத்
திரமேயாகும்!

எல்லா மாநிலங்களிலும், நாடுகளிலும் அரசியல்வாதிகள் என்போர் மக்களிட
மிருந்து தனித்த மிக வலிமையான தொரு பிரிவினராக உருவாகிறார்கள்.
அடுத்து, எவ்வொரு மாநிலத்திலும் பிரதானமாக இரு கட்சிகள் உள்ளன;
அவை மாறி மாறி ஆட்சிக்கு வருவதென்பது வழக்கமாயுள்ளது! எல்லா இடங்
களிலும் அரசு எனும் அதிகார அமைப்பு தம்மை, சமூகத்துடனான தொடர்பிலி
ருந்து தனித்துச் சுதந்திரமாக வைத்துக்கொள்கிறது! மேலும், ஊக-வாணிக
அரசியல் சூதாட்ட கும்பல்களான (political speculators)இரு பிரதான
கட்சிகளும் மாறி மாறி ஆட்சியதிகாரத்தைப் பிடித்து அவ்வதிகாரத்தை மிகப்
பிறழ்ச்சியான இலக்குகளை அடைய ஊழல்மிகு வழிகளில் ஏய்த்துக்கொள்
கின்றன! இவ்விரு கும்பல்களுக்கு எதிராக தேசமும், மக்களும் வலிமையற்ற
வையாக நிர்க்கதியாக நிற்கின்றன! முறையாக மக்களின் சேவகர்களாக
இருக்கவேண்டிய அக்கும்பல்கள், நடைமுறையில் மேலாதிக்கம் புரிபவையாக
வும், பகல்-கொள்ளையடிப்பவையாகவும் திகழ்கின்றன!

எல்லோரும் - மெத்தப்படித்தவர்களும், படிக்காதவர்களும் சொல்கிறார்கள்,
ஓட்டுப்போடுவது என்பது தவிர்க்கக்கூடாத உன்னத ஜனநாயகக் கடமை என்
கிறார்கள்!  ஒவ்வொரு தேர்தலின் போதும் மக்கள் தமது கடமையை நிறை
வேற்றத் தவறுவதில்லை! ஆனால், ஒவ்வொருமுறையும் மக்களால் தேர்ந்
தெடுக்கப்படும் எந்த அரசியல்கட்சியும் தமது உன்னத ஜனநாயகக் கடமையை
ஒரு போதும் முறையாக நிறைவேற்றியதில்லை!

உண்மையில், அரசியல்வாதிகள் ஏன், எதற்காக, யாருக்காக இருக்கின்றனர்
என்று மக்கள் எவருக்கும் தெரியாது! அரசாங்கம் என்பது மக்களுக்காக இருக்
கிறது எனவும், அரசியல்வாதிகள் நம்முடைய பிரதிநிதிகளாகச் செயல்படு
வதற்காக இருக்கிறார்கள் எனவும், மக்கள் நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்!
ஆனால், அரசியல்வாதிகளுக்கு மட்டுமே தெரியும், அரசாங்கம் என்பது அவர்
களுக்காகவே இருக்கிறது; அவர்கள் தங்களுக்காகவே இருக்கிறார்கள் என்கிற
உண்மை!

ஜனநாயக ஆட்சிமுறையில், நேராட்சி முறை எனவும், பிரதிநிதித்துவ முறை
எனவும் இரண்டு வகைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது! நேராட்சி முறை
என்பது மிகவும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட நாட்டில், அல்லது
மாநிலத்தில் மட்டுமே செயல்படுத்த முடியும் எனவும், அதிக மக்கள்தொகை
யைக்கொண்ட நாடுகளில், மாநிலங்களில் செயல்படுத்த முடியாது எனவும்
அரசியல் ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர்! அதிக மக்கள்தொகையைக் கொண்ட
நாடுகளில், மாநிலங்களில் பிரதிநிதித்துவ ஜனநாயக ஆட்சிமுறை மட்டுமே
சாத்தியப்படும் என்கிறார்கள்! ஆனால், பிரதிநிதித்துவ ஆட்சிமுறை என்றாலே
அங்கு அரசியல்கட்சிகள் தவிர்க்கவியலாதவையாகிவிடும்!  அடுத்து மக்கள்
தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு எனும்போது, தேர்தல்
எனும் சடங்கு உள்ளே நுழைவது தவிர்க்க வியலாது! அதாவது, மக்களுடைய
நலன்களையும், அடிப்படைத்தேவைகளையும் பிரதிபலிக்கும் பிரதிநிதிகள்தான்
அரசியல்வாதிகள் எனும் வில்லங்கமான, விபரீதமான வகையினர்!

ஆனால், நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் நம்முடைய பிரதிநிதிகளான அரசியல்
வாதிகள்  நம்மைப்போன்று, பொதுவான சமூகத்தின் அங்கத்தினர்களோ, தனி
நபர்களோ அல்ல! அவர்கள் அரசியல் கட்சி எனும் தனி-வகைச் சமூகத்தின்
உறுப்பினர்கள் ஆவர்! அதாவது, ஒரு அரசியல் கட்சி என்பது வெறுமனே ஒரு
தனி-வகைச் சமூகம் மட்டுமல்ல! அது ஒரு அதிகாரப் படிமுறை அமைப்பு
ஆகும்; அந்த அமைப்பின்  உயர்-படிகளுக்கு அல்லது உயர்-பதவிகளுக்கு
உரியவர்களாக, தொடர்ந்து தங்களது சொந்த முயற்சி, மற்றும், செல்வாக்கு
மூலம் தங்களை உருவாக்கிக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தங்களை
உள்ளாக்கிக் கொண்டவர்களாவர்! அரசியல் கட்சி எனும் அதிகார படிமுறை
அமைப்பின் உச்சிப் படியை எட்டிய ஒருவர்தான் கட்சியின் 'தலைவர்' ஆவார்;
அவரே கட்சிக்குள் ( ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு கட்சிக்கு வெளியேயும்)
அனைத்து அதிகாரங்களையும் கொண்டவர்! அரசியல்வாதிகள் என்போர் வித்தி
யாசமான சூழலில்,(அதிகாரப்போட்டிச் சூழலில்), தனிவகை வளர்ப்பு-முறையில்
உருவாகிறவர்களாவர்! அதாவது, 'அதிகாரம்' என்பது மட்டுமே அவர்களுடைய
ஒரே நோக்கம், குறிக்கோள், இலக்கு யாவுமாகும்!

ஆனால், மக்களாகிய நாம் இத்தகைய அரசியல்வாதிகளின் குட்டையிலிருந்து
தான் தங்களுக்கான அரசியல் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும்!
பெயரளவிற்கு மட்டுமே அவரகள் நம்முடைய பிரதிநிதிகளாவர்; மற்றபடி
அவர்களுக்கு வேறுவகை 'செயல் திட்டம்' உள்ளது; அதன்படியே அவர்கள்
செயல்படுவர்! தேர்தலின்போது தமக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதுடன்
மக்களின் ஜனநாயகக் கடமையும், உரிமையும், தேர்வுச் சுதந்திரமும் முடிந்து
போகிறது! தேர்தலின்போது, ஓட்டுக்கேட்க வரும்போது, தாங்களே மக்களின்
உண்மையான உத்தமமான பிரதிநிதிகள், மக்களின் சேவகர்கள், மக்களின்
பாதுகாவலர்கள், . . .என்றெல்லாம் பசப்பு மொழிகளைப்பேசி, மக்களைத் தேடி
வந்து கெஞ்சிக்கூத்தாடும் அரசியல்வாதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு,
மக்களின் எஜமானர்களாக, மக்களை ஆள்பவர்களாக ஆகிவிடுகிறார்கள்!
அதன்பிறகு அவர்கள் மக்களால் அணுகமுடியாத உயரத்திற்குச் சென்றுவிடு
கிறார்கள்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சியமைத்து ஆட்சிக்கட்டில்
அமர்ந்தபிறகு, மக்கள் தங்கள் பிரச்சினைகளை, குறைகளை, கோரிக்கைகளை
-விண்ணப்பங்கள், மனுக்கள் மூலமும்; சாலைகளில் இறங்கி -உண்ணாவிரதம்,
ஊர்வலம், சாலை மறியல் ஆகிய பல்வேறு போராட்டங்கள், இயக்கங்கள்
மூலமும்  தெரியப்படுத்தவேண்டும்! போராட்டத்தின் போது, கண்ணீர்ப்புகை,
தடியடி, கைது நடவடிக்கை, துப்பாக்கி சூடு ஆகியவைகளையும் மக்கள் சந்தித்
தாகவேண்டும்! இவ்வாறெல்லாம், மக்கள் தங்களது பிரச்சினைகளை, கடைசி
யாக, வேறு வழியில்லாமல், தாங்களே பிரதிநிதித்துவம் செய்துகொள்ள
வேண்டும்! எந்த அரசியல்வாதிகளை மக்கள் தங்களது நலன்களைக் காப்பதற்
கான அரசியல் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்தார்களோ, அவர்களிடமே சென்று
மக்கள் கையேந்தி நிற்கும் அடிமை நிலைக்கும், அவல நிலைக்கும் பெயர்தான்
"பிரதிநித்துவ ஜனநாயக ஆட்சிமுறை!"  இதில், பிரதிநிதித்துவம் இருக்கிறது,
ஆட்சிமுறையும் இருக்கிறது; ஆனால் ஜனநாயகம் மட்டும் இல்லை!

மா.கணேசன்/ நெய்வேலி/ 28-11-2017
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...