Friday, 24 November 2017

யாருக்காக நான் பேசுகிறேன்?





      எனது அரசியல், வாழ்க்கையைப் பற்றியது!
      எனது வாழ்க்கை, மெய்ம்மையைப் பற்றியது!
      வாழ்க்கைக்கு வெளியே ஒரு அரசியலும் இருக்கமுடியாது!
      அரசியல் எனும் சிமிழுக்குள் வாழ்க்கை ஒருபோதும் அடங்காது!


நான் மக்களைப்பற்றி பேசுகிறேன்; மக்களின் நலன்கள் குறித்துப்பேசுகிறேன்;
ஆனால், நான் அரசியல்வாதியும் அல்ல; அதேநேரத்தில், நான் மக்களின்
பிரதிநிதியும் அல்ல! இன்னும் மக்களின் சார்பாகவும் நான் பேசவில்லை!
ஏனெனில், நான் வேறு, மக்கள் வேறு அல்ல! நான் மக்களுக்காகப் பேச
வில்லை; மாறாக, நான் எனக்காகவே பேசுகிறேன்!  நான் மக்களில் ஒருவன்
என்பதால் மக்களிடமிருந்து என்னைப் பிரித்துவிட முடியாது! இதன் அர்த்தம்
நான்தான் மக்கள்; மக்கள்தான் நான்; நானும், மக்களும் ஒன்றாயிருக்கிறோம்!

நானும், மக்களும் ஒன்றாயிருக்கிறோம்; அதேநேரத்தில், மக்களிலிருந்து நான்
வேறாகவும் இருக்கிறேன்! ஏனெனில், நான் என்னிலிருந்தும் வேறானவனாக
வும் இருக்கிறேன்; அதாவது, தொடர்ந்து என்னையே நான் கடந்து செல்பவ
னாக இருக்கிறேன்! அவ்வாறே மக்கள் ஒவ்வொருவரும் தம்மைக் கடந்து
செல்ல வேண்டியது "உயர்" வாழ்க்கையின் முக்கிய விதியாகும்! ஆம்,
ஒவ்வொரு மனிதனும் ஒருகட்டத்தில் உயிர்-வாழ்க்கையைக் கடந்து உயர்-
வாழ்க்கைக்குச் சென்றாகவேண்டும்! இல்லாவிடில், உயிர்-வாழ்க்கையானது
சாரமற்றதாக, அர்த்தமற்றதாகப் போய்விடுவதுடன், உயிர்-வாழ்வதென்பதே
பெரும் நெருக்கடிக்குள்ளாகிவிடும்; அதாவது, விரைவில் மனித இனம் பூமிக்
கிரகத்தில் பூண்டோடு இற்றழிந்து போகும்!

உயர்-வாழ்க்கை விதியின் கோணத்திலிருந்து காணும்போது, மக்களைவிடவும்,
என்னையும் சேர்த்து எவ்வொரு தனி மனிதனையும் விடவும் அதி முக்கிய
மானதாக வேறொன்றை நான் காண்கிறேன்! அதை நான் "வாழ்க்கை" என்று 
அழைக்கிறேன்! உண்மையான வாழ்க்கை என்பது உணர்வின் அளவில்
மட்டுமே அளக்கப்படமுடியும் -- ஒருபோதும், பணத்தின், பொன்னின், பொருட்
களின் அளவைக்கொண்டு அளக்க முடியாது! மனித வாழ்க்கையின் அசலான
மதிப்புகளைத் தழுவிடாமல், செயற்கையும் போலியுமான மதிப்புகளைத் துரத்
திச் செல்லுவோமெனில், தவறாமல் தீமைகள் நம்மைத் தழுவிக்கொள்ளும்!

ஆனால், பணம், பொன், பொருள் ஆகியவற்றை முக்கியமானவையாகக்
கருதும் மனித சமூகம் எவ்வளவு அறிவீனமானது! கழுதைகளுக்குக் கூடத்
தெரியும் தங்கத்தை விட வைக்கோல் தான் மதிப்பு மிக்கது என்பது! இதுதான்
அர்த்தமுள்ள மதிப்பீட்டின் உதாரணம் ஆகும்!

"மக்களின் சமூகம்" என்பதற்கும், "சமூகத்தின் மக்கள்" என்பதற்கும் மாபெரும்
வித்தியாசம் உள்ளது என்பதை நம்மில் அநேகர் அறியார்! தங்களுக்குத் தாங்
களே சுயமாகச் சிந்திப்பவர்களின் சமூகம்தான் மக்களின் சமூகம் என்பதாகும்!
சுய-சிந்தனையற்று பிறரது கருத்துக்களையும் வழிகளையும், மதிப்புகளை
யும் பின் பற்றுபவர்கள் "சமூகத்தின் மக்கள்" ஆவர்!  ஆகவேதான், "மானிட
இனத்தில் சேருங்கள்!" என்று மக்களிடம் நான் தொடர்ந்து கூறிவருகிறேன்!

ஆம், வாழ்க்கையின் மீது நான் கொண்ட அக்கறையினால் தான் நான் மக்க
ளைப் பற்றியும், மக்களின் நலன்களைப் பற்றியும் பேசுகிறேன்! மக்கள்
முதலில் மக்களாக ஆகவேண்டும் என்பதை நான் வலியுறுத்திச் சொல்கிறேன்!
அதாவது, மக்கள் முதலில் தங்களது சிந்தனைகளை, பார்வைகளை, அக்கறை
களை வாழ்க்கைமீது குவிக்குமாறு, செலுத்துமாறு வேண்டுகிறேன்! வாழ்க்கை
யல்லாத, வாழ்க்கைக்குத் தொடர்பில்லாத விஷயங்கள், நடைமுறைகள்,
மதிப்புகள் யாவும் இனம் காணப்பட்டு தயவுதாட்சண்யம் இன்றி அகற்றப்பட
வேண்டும்!

முதலிடத்தில், மக்களாகிய நமக்கு அரசியல் எதற்காக வேண்டும்? அரசியலுக்
கும், வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு உள்ளது? அரசியல்வாதிகள், அதாவது,
ஆட்சியாளர்கள்  மக்கள் நலன்களைக் கருதாமல், என்ன ஆட்சிபுரிகிறார்கள்,
எதை ஆட்சிசெய்கிறார்கள்? நாட்டில், மாநிலம்தோறும் விவசாயிகள் அல்லல்
படுகிறார்கள்; சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். படித்த இளைஞர்கள்,
பட்டதாரிகள் வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள். ஏழைகள் மேன்மேலும்
ஏழைகளாகிக் கொண்டிருக்கிறார்கள்; விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய மிகக்
குறைந்த எண்ணிக்கையிலான பணக்காரர்கள் மேன்மேலும் அர்த்தமில்லாமல்
லட்சலட்சமாக கோடிகளைச் சேர்த்துக்கொண்டே செல்கிறார்கள்!

நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன! ஆறுகளில்
தண்ணீரும் இல்லை; மணலும் இல்லை என்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது!
ஒரு புறம் குடிநீர்ப் பஞ்சம், இன்னொரு புறம் பாசனநீர்ப் பஞ்சம்! கிராமப்புறங்
களிலும், நகர்ப்புறங்களிலும் எங்குமே முறையான சாலைவசதிகள் இல்லை!
. .இத்தகைய இன்னபிற பல அடிப்படைப் பிரச்சினைகள் யாவும் கடந்த பத்து
பன்னிரெண்டு ஆட்சிக்காலங்களாக, தொடர்கதையாகத் தொடர்பவையாகும்!
அடிப்படையான இப்பிரச்சினைகளைத் தீர்க்கமுடியவில்லையெனில், அரசியல்,
அரசியல்வாதிகள், தேர்தல்கள், தலைவர்கள், அரசாங்கம், பிரதிநிதித்துவ ஜன
நாயகம் . . . .இவையெல்லாம் எதற்காக, யாருக்காக? யாருடைய நலன்களுக்
காக? முறையான பள்ளிக் கட்டடங்கள், சாலைகள், குடிநீர், மின்சார இணைப்
புகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லாமல் எவ்வாறு மக்கள் வாழ
இயலும்? நம் நாடு மிக வறிய நாடாக இருக்கிறதென்றால், இந்த இல்லாமை
யைச் சகித்துக்கொள்ளமுடியும்! இது, இல்லாமையா? அல்லது, ஆட்சியாளர்
களின் இயலாமையா?

நாம் இருக்கும் ஆட்சிமுறை ஜனநாயகம், மக்களாட்சி என்று சொல்லப்படுவ
தால் தான் இக்கேள்விகளை நாம் கேட்கிறோம்! அதே நாம் ஒரு சர்வாதிகார
ஆட்சியின் கீழிருந்தால் இக்கேள்விகளை நாம் கேட்க மாட்டோம்! ஆனால்,
ஜனநாயக ஆட்சிமுறையிலும், பலமுறை, உரிமைகளுக்காகப் போராடும்
தொழிலாளர்கள் அடக்குமுறை, பணி நீக்கம் ஆகியவற்றிற்கு உள்ளாக்கப்பட்
டுள்ளனர்! அரசின் தவறான, மக்கள் விரோதக் கொள்கைகளை விமர்சித்தால்,
குண்டர்சட்டம் பாய்கிறது, தேசவிரோதி பட்டம் சூட்டப்படுகிறது, சிறைவாசம்
கிடைக்கிறது! ஆனால், மக்களை தங்கள் பிழைப்பை விட்டுவிட்டு சாலை
களில் இறங்கிப் போராடச் செய்வது எது? பிழைப்பு கெட்டுப்போன, அல்லது,
பிழைக்க வழியில்லாத நிலைமை தானே! போராட்டங்கள் சட்டவிரோத
மானவை என நீதிமன்றம் ஆணைபிறப்பிப்பது மிகவும் வேடிக்கையானதாகும்!
"சட்டம்-ஒழுங்கு" பிரச்சினை பற்றி ஆட்சியாளர்கள் பேசுவது அபத்தமானது!
ஏனெனில், எந்த அரசியல் சட்டத்தையும், ஒழுங்கையும் பின்பற்றி ஆட்சியா
ளர்கள் ஆட்சி நடத்துகிறார்கள்?

மக்களாகிய நாம் இனியாவது வழக்கத்திலிருக்கும் போலி அரசியல் விஷயங்
களையும், விவகாரங்களையும் பேசிக்கொண்டிராமல், அவற்றில் ஈடுபடாமல்,
வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கவேண்டும்! அரசியலானது உண்மையிலேயே
நம் வாழ்க்கையுடன் தொடர்புடையதாயிருக்கிறதா, அதாவது, எவ்வகையி
லேனும் நம்வாழ்க்கைக்கு (குறைந்த பட்சமாவது) உதவும்வகையில் உள்ளதா
என்பதை நாம் கண்டறிந்தாக வேண்டும்! ஏனெனில், உயிர்- பிழைத்திருப்
பதற்கே நாம் அன்றாடம் போராட வேண்டியிருக்கும் ஒரு சமூக-பொருளாதார-
அரசியல் அமைப்பில் எவ்வாறு, எப்போது உண்மையிலேயே நாம் வாழத்
தொடங்குவது? உண்மையில் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நாம்
இன்னும் இழந்துவிட வில்லை; ஆகவே தான் தொடர்ந்து தேர்தலின் போது
வாக்களித்துவருகிறோம்! ஆனால், மக்களாகிய நாம் ஜனநாயகத்தை மதித்து
நடக்கும் பிரஜைகளாக இருப்பது மட்டும் போதாது; நம்முடைய அரசியல்வாதி
களும் ஜனநாயகத்தை மதித்து நடப்பவர்களாக இருக்க வேண்டும்! மேலும்,
தீவிரமாக நேரடியாக அரசியலில் ஈடுபட்டிருந்தாலும், அரசியல்வாதிகளும்
இந்நாட்டின் "பிரஜைகளே" என்பதை அவர்கள் மறந்துவிடாதிருக்கவேண்டும்!

ஜன நாயக அமைப்பு முறையில், அரசியல் என்பது பொறுப்புமிகுந்த சமூகப்
பணியாகும்! அப்பணியைச் செய்யும் அரசியல்வாதிகள் எனும் பிரஜைகள், பிற
பொதுவான அதாவது, சமூகத்தின் பல்வேறு தேவைகளுக்குரிய பொருட்களை
உற்பத்தி செய்யும் பிரஜைகளைவிட மேலானவர்களோ, பிரத்யேக சலுகை
களுக்குரியவர்களோ, பிரதானமானவர்களோ, எதிலும், எவ்வகையிலும் முன்
னுரிமை பெற்றவர்களோ; அதிகம் மதிக்கத்தக்கவர்களோ அல்ல! அதாவது,
அரசியல்வாதியும் மக்களில் ஒருவரே!

மனிதர்கள் எப்பணியை, தொழிலைச்செய்தாலும், அடிப்படையில் எல்லோரும்
மக்கள்-சமூகத்தின் பிரஜைகளே, எல்லோரும் மனிதஜீவிகளே என்பதை நாம்
மறந்துவிடலாகாது! ஒரு நாட்டின், சமூகத்தின் "பிரஜை" என்பதுகூட இரண்
டாம் நிலை அடையாளமே தவிர, மனிதஜீவி என்பதுதான் ஒருவரைப்பற்றிய
உண்மையான, கருவான, உள்ளார்ந்த அடையாளத்திற்கான அடிப்படையாகும்!
ஆம், 'மனித ஜீவி' என்பதும்கூட உண்மையான அடையாளத்திற்கான ஒரு
அடிப்படை மாத்திரமே! ஏனெனில், தன்னைக் கண்டடைபவனே உண்மையான
மனிதனாகிறான்! அதாவது, தனது இருப்பை முழுமையாக உணர்வுகொள்ளும்
வழிமுறையில் மட்டுமே மனிதன் உண்மையில் வாழ்கிறான்! மனிதஜீவிகள்
வெறுமனே எலிகளைப்போல உயிர்-பிழைத்திருப்பதையே "வாழ்க்கை" எனக்
கொண்டாடமுடியாது!

ஆனால், உயிர்-பிழைத்திருப்பதற்கே மக்கள் அன்றாடம் போராடவேண்டும்
எனில், அந்த சமூக-பொருளாதார-அரசியல் அமைப்பு மக்கள்-விரோதமானதும்,
வாழ்க்கை-விரோதமானதும் ஆகும்! ஆகவே, அந்நிலைமையை மாற்றியமைப்
பதற்கும்; மேலும், திண்டாட்டமோ, போராட்டமோ இல்லாமல் உயிர்-வாழ்வ
தற்கு மட்டுமல்லாமல் உயர்-வாழ்க்கைக்கும் உதவும்வகையிலான ஒரு சமூக
அமைப்பும், பொருளாதாரமும், ஆட்சிமுறையும் ஒருங்கே அமைந்த, இலட்சிய
பூர்வமான தொரு அமைப்பை தங்களுக்காக ஏற்படுத்திக் கொள்வதற்குமான
முழு உரிமையும், சுதந்திரமும் மக்களுக்கு உள்ளது!

ஒரு குறிப்பிட்ட ஆட்சிமுறை மட்டுப்பாடானதாக இருக்கலாம்; மக்களுக்குச்
சேவைபுரிவதாக இல்லாமலிருக்கலாம்! அதாவது, தற்போதைய ஜனநாயக
முறை செயல்படாததாக இருக்கலாம்; அரசியல்வாதிகளும் செயல்படாதவர்
களாக, மக்கள் நலன் மீது அக்கறையற்றவர்களாக இருக்கலாம்! அதற்காக,
மக்களின் வாழ்க்கையும் இடர்ப்படத்தான் வேண்டுமென்று யாதொரு நிர்ப்பந்த
மும், விதியும் இருக்கிறதா, என்ன? இந்த அளவிற்குள், எல்லைக்குள், வரம்
பிற்குள் மட்டுமே மக்கள் வாழவேண்டும் என்று சட்டம் போட்டு மக்களை,
அவர்களுடைய வாழ்க்கையை முடக்க முடியுமா? தற்போதைய ஜனநாயக
முறை செயல்படவில்லையென்றால், வேறொரு ஜனநாயக முறையை
மக்களாகிய நாம் ஏற்படுத்திட என்ன தடை இருக்கமுடியும்; நம்முடைய
செயலின்மை, மற்றும் ஊக்கமின்மையைத் தவிர!

மா.கணேசன்/ நெய்வேலி/ 22-11-2017
----------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...