
இன்றைய அரசியல் அர்த்தமுள்ளதாக இல்லை; ஏனெனில்,
அரசியல்வாதிகள் மனிதர்களாக இல்லை. ஏனெனில்,
மக்களாகிய நாம் மக்களாக இல்லை!
•••
நாம் ஏன் அரசியல் குறித்துப் பேச வேண்டும்?
-----------------------------------
"அரசியல்" என்பது, முற்றிலும் ஒரு தனி விஷயமோ, துறையோ, மிகவும்
விசேடமான, அல்லது வித்தியாசமான ஒரு சிலருக்கு மட்டுமே உரியதோ
அல்ல! அரசியலை வெறும் அதிகாரம் என்பதாகச் சுருக்கிக் காண்பவர்கள்
மிகவும் நயவஞ்சகமாக, வாழ்வின் எவ்வொரு விஷயமும், அம்சமும் அரசிய
லுக்கு உட்பட்டதே என்கிறார்கள்! எங்கும், எதிலும், எல்லாவற்றிலும் அரசியல்
உள்ளது என்கிறார்கள்! ஆனால், இப்பேச்சு தவறானது, தலைகீழானது! மாறாக,
மனிதனின் புற-வாழ்க்கையில், பலவித விஷயங்களுள் அரசியலுக்கும் ஓர்
இடமுள்ளதே தவிர, நம் வாழ்வனைத்தையும் ஆக்கிரமிக்கும் வகையில் அரசி
யலுக்கு மட்டுமல்ல, வேறு எவ்வொரு விஷயத்திற்கும் இடமில்லை! மேலும்,
மனித வாழ்க்கை என்பது வெறுமனே உணவு, உடை, உறையுள் என "புற-
வாழ்க்கை" யுடன் முடிந்து போகிற விஷயமல்ல; புற-வாழ்க்கையை அர்த்தம்
உள்ளதாகச் செய்யக்கூடிய "அக-வாழ்க்கை", எனும் "ஆன்மீக வாழ்க்கை" என்
பதும் உள்ளது!
இந்த அக-வாழ்க்கை, அல்லது ஆன்மீக வாழ்க்கை குறித்து அதற்குரிய இடத்
தில் பார்ப்போம். முதலில், உயிர்-வாழ்க்கையைத் தக்க வைத்துக்கொள்வோம்,
அதையடுத்து, "உயர்-வாழ்க்கைக்குச் செல்லுவோம்! இப்போதைக்கு, உடனடி
யாக மக்களை, நம் அனைவரையும் பாதிக்கின்ற அதாவது அடிப்படை உயிர்-
வாழ்க்கைக்குத் தடைகளாக விளங்கும் விவகாரங்களை, காரணிகளைப் பார்ப்
போம்! முதலில், நாம் ஏன் அரசியல் குறித்துப் பேச வேண்டும்? ஏனெனில்,
நாம் வாழ்ந்தாக வேண்டும்; அதில், நம் வாழ்க்கையில், குறுக்கிடுகின்ற, தடை
களாக நிற்கின்ற விஷயங்களை நாம் அகற்றியாக வேண்டும்! நம் வாழ்க்கைப்
பாதையில் கல், முள், போன்றவைகள் இல்லாமல் அவ்வப்போது பராமரிப்பது
நம்முடைய பணியாகும்! ஆகவே, நாம் அரசியலைப் பற்றியும் பேசியாக
வேண்டும்!
ஆனால், நம்மில் பெரும்பான்மையோர் அரசியல் பக்கம் திரும்பிப்பார்ப்பதுகூட
இல்லை! ஏனெனில், நகரத்தைச் சுத்தமாக வைத்திருப்பது நகராட்சியின், துப்
புரவுப் பணியாளர்களின் பொறுப்பு எனவும்; குற்றங்களைத் தடுப்பது, திருடர்
களைப் பிடிப்பது என்பது காவல்துறையின் பொறுப்பு எனவும்; மாநிலத்தை
நிர்வகிப்பது என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான அரசியல்வாதிகளின்
பொறுப்பு எனவும் எண்ணிக்கொண்டு, நாம் நம்முடைய அன்றாட அலுவல்
களில் மூழ்கிக் கிடக்கிறோம்! ஆனால், "வேலியே பயிரை மேய்வது போல",
காவலர்களே திருடர்களாக மாறிடும்போது, ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்களே
ஊழல், லஞ்சம் என்று மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும்போது,
நாம் விழித்துக்கொண்டே தூங்கிக்கொண்டிருக்கிறோம்! அதாவது, நாம் நம்
முடைய அன்றாடத்தில் - வருமானத்திற்காக உத்தியோகம், தொழில், வியா
பாரம் என ஆழ்ந்திருக்கும் போது, அரசியல்வாதிகள் பாவம், அவர்கள் என்ன
செய்வார்கள்? அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அரசியல் மட்டும் தானே!
ஒரு முறை அரசியலில் ஈடுபட்ட பிறகு, "அரசியல்வாதி" எனும் வேடத்தைத்
தரித்துக்கொண்டுவிட்ட பிறகு, அவர்களால் வேறு எந்த உத்தியோகத்தையும்,
தொழிலையும் செய்ய முடியாத, எண்ணிப்பார்க்க முடியாத நிலையில், ஒரு
வழிப்பாதையில் அவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள் என்பது பரிதாபகரமானதே!
ஆகவேதான், அரசியல்வாதிகள் தங்களது ஆட்சிக்காலத்திற்குள்ளேயே பல
தலைமுறைகளுக்கு வேண்டிய சொத்துக்களை சேர்த்துக்கொள்ள வேண்டிய
நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்! "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!"
எனும் தருமத்தை மிகச் சரியாகப் பின்பற்றுபவர்கள் அரசியல்வாதிகள்தான்!
தங்களைத்தாங்களே தேர்வு செய்துகொள்ளும் அரசியல் தலைவர்கள்!
----------------------------------------------------
தேர்தலின் வழியாக வாக்குகளைச் செலுத்துவதன் மூலம் நம்முடைய பிரதி
நிதிகளை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பது ஒரு கண்-துடைப்பு விஷயமாகும்!
உண்மையில், நம்முடைய அரசியல் பிரதிநிதிகளை நாம் தேந்தெடுப்பதில்லை!
தற்போது நடைமுறையிலிருக்கும் போலி-மக்களாட்சியில், உண்மையில்,
மக்களாகிய நாம் நம்முடைய அரசியல் பிரதிநிதிகளை (தலைவர்களை)தேர்வு
செய்வதில்லை! மாறாக, அரசியல்வாதிகள் ஏற்கனவே தாங்களே தங்களை,
மக்களின் தலைவர்களாவும், பாதுகாவலர்களாகவும், தவிர்க்கவியலாதவர்க
ளாகவும், முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவும் அறிவித்துக்கொண்டு, சிலந்தி
வலைபின்னுவது போல, தம்மைச்சுற்றி ஒரு கட்சியைக் கட்டிக்கொண்டு,
தொண்டர்படையைச் சேர்த்துக்கொண்டு நம்மிடம் வந்து வாக்கு கேட்கிறார்கள்!
இவ்வாறு வாக்கு வேட்டையாட வரும் பல கட்சியைச் சேர்ந்த தலைவர்களி
லிருந்து நாம் ஒருவரைத் தேர்வு செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறோம்! இந்த
நிர்ப்பந்தத்திற்குப் பெயர்தான் தேர்தல் என்பதாகும்! இத்தகைய நிர்ப்பந்தம்,
அதாவது, 'தேர்தல்' நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படுவதாக வேறு
சொல்கிறார்கள்!
ஆம், நமக்கான அரசியல் பிரதிநிதிகளை உண்மையில்,நாம் தேர்ந்தெடுப்ப
தில்லை! அதாவது, தங்களுக்குள் கடுமையாகப் போட்டி போடுகின்ற இரண்டு
பெரிய பிராந்திய கட்சிகளில், ஏதாவதொரு கட்சியைத் தேர்வுசெய்யும்படி
நாம் நிர்ப்பந்திக்கப்படுகிறோம்! வலுவான இரு பிராந்தியக்கட்சிகளைத் தாண்டி
வேறு கட்சிகள் இருந்தாலும், அவை சிறியனவாகவும், வலுவற்றதாகவும்
இருக்கும்பட்சத்தில் அவைகளை நாம் தேர்வு செய்வதில்லை! அப்படியே,
மூன்றாவதாக வளர்ந்துவரும் ஒரு சிறுகட்சி, சில தொகுதிகளில் தேர்ந்தெடுக்
கப்பட்டாலும், அதிக தொகுதிகளை வென்ற ஆனால், பெரும்பான்மை பெறாத
ஒரு பெரிய கட்சியானது தம்முடன் அச்சிறு கட்சியை இணைத்துக்கொண்டு
ஆட்சியைப்பிடித்துவிடக்கூடும்! கட்சிகள் சிறியதோ, பெரியதோ அவற்றிற்கு
எவ்வாறேனும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமே நோக்கமாகும்!
'வலுவான' கட்சி, 'பெரிய' கட்சி என்பதெல்லாம் ஒரு கட்சி எவ்வாறு தனது
பிம்பத்தை, கவர்ச்சித்திற சொல்லாட்சி (Political Rhetoric) மற்றும்
விளம்பரம் மூலமாகவும் நிறுவிக்கொள்கிறது என்பதைப் பொறுத்ததாகும்!
"மக்கள் நலன்கள்", "சமூக நீதி", "பொருளாதாரச் சமத்துவம்", "சுதந்திரம்",
"நல்லாட்சி" போன்றவை வெறும் கவர்ச்சித் திற அரசியல் சொல்லாடல்களே
தவிர வேறல்ல!
அரசியல் கட்சி என்பது ஒரு விபரீத ஜந்து ஆகும்! குறிப்பிட்ட ஒரு கட்சி
தேர்தலில் தோற்றுப்போனாலும் அக்கட்சி உயிருடன் இருப்பதாகவே கருதப்
படுகிறது! 'எதிர்க்கட்சி' என்ற அந்தஸ்த்தில் அது தன் இருப்பைத் தொடர்ந்து
தக்கவைத்துக்கொள்கிறது; அவ்வப்போது ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளை
விமர்சிப்பதன் வழியாக அது தனது இருப்பை நியாயப்படுத்திக்கொள்கிறது!
எவ்வாறு ஒரு கால்பந்தாட்ட அணியானது ஒரு குறிப்பிட்ட போட்டியில்
தோற்றுப்போனாலும், தொடர்ந்து அந்த அணி பயிற்சியில் ஈடுபட்டு, அடுத்த
போட்டிக்குத் தன்னைத் தயார் செய்துகொள்கிறதோ அவ்வாறே தேர்தலில்
தோற்றுப்போன கட்சியும் தொடர்ந்து அரசியல் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது!
இத்தகைய நடைமுறை கால்பந்து அணிகளுக்கு வேண்டுமானால் பொருத்த
மாக இருக்கலாம்; அரசியல் கட்சிகளுக்குப் பொருத்தமாக இருக்கமுடியுமா
என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்! அதாவது, தொடர்ந்து ஒரே
கட்சியோ, அல்லது தலைவரோ மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது
தவிர்க்கப்படவேண்டும்!
எவ்வொரு அரசியல் கட்சியும் தொடர்ந்து நீடித்து நிலைப்பதான ஒரு அமைப்
பாக, நிறுவனமாக நீடிக்க அனுமதிக்கலாகாது! மாறாக, அரசியல் கட்சி என்பது
ஒரு தற்காலிக அமைப்பாக மட்டுமே இருக்கவேண்டும்! அல்லது ஆட்சியாளர்
களைத் தேர்வுசெய்யும் வழிமுறை மாற்றப்படவேண்டும். அல்லது ஒருமுறை
ஆட்சியதிகாரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஒருவர், ஒரு தலைவர், மறுமுறை
யும் தேர்வுசெய்யப்படுவது தவிர்க்கப்படவேண்டும்! ஏனெனில்,தொடர்ந்து ஒரு
அரசியல் கட்சியோ, ஒரு தலைவரோ மீண்டும் மீண்டும் ஆட்சியதிகாரத்தில்
அமர்வதன் மூலம் அவர் மிகச் சுலபமாக தமது சொந்த நலன்களையும், தன்
குடும்ப நலன்களையும் பன்மடங்காகப் பெருக்கிக் கொள்ள வழி வகுத்திடும்!
மேலும், அத்தலைவருக்குப் பின், அவரது புதல்வர் அல்லது உறவினர் என்று
வாரிசு அரசியலுக்கு வழிவகுத்திடும். வாரிசு அரசியல் என்பது மக்களாட்சிக்கு
விரோதமானதாகும்!
ஆடுகள் நனைவது குறித்து கண்ணீர் வடிக்கும் ஓநாய்கள்!
---------------------------------------------
அரசியல் வாதிகள் என்போர் வித்தியாசமானவர்கள் மட்டுமல்ல, விபரீதமான
வர்களும் கூட! அதாவது, மனிதத் திரளிலிருந்து எவ்வாறு, எதற்காக ஒரு
சிலர் மட்டும் தன்னலம் துறந்தவராக, பொதுநலவாதியாகத் தோன்றுகிறார்?
அவர்கள் என்ன வேற்றுக்கிரகத்திலிருந்து இங்கே பூமிக்கு வந்தவர்களா? ஏன்,
அல்லது, எவ்வாறு அவர்களிடம் ரிச்சர்ட் டாக்கின்ஸ் கூறும் சுயநலம்கொண்ட
மரபணுக்கள் இல்லாமல் போனது? அல்லது இருந்தும் அவை வேலை செய்ய
வில்லையா? இல்லை! நமது கணிப்பு முற்றிலும் தவறானது, ஏனெனில், சுய
நல மரபணுக்கள் மக்களாகிய நம்மிடம் வேலைசெய்வதைவிட அரசியல்வாதி
களிடம் தான் பன்மடங்கு வேலை செய்கிறது! ஆனால், அவர்கள் அதை
மறைத்து பொதுநலவாதிகளைப் போல வேடமணிந்து பசப்புகிறார்கள்! நமது
நாட்டில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்காத அரசியல்வாதிகள்,
தலைவர்கள் மிக மிக மிகக் குறைவே!
மக்களின் நலன்களை முன்னிறுத்தி மேடையில் முழங்கும் நம் தலைவர்கள்
உண்மையில் தமது சொந்த நலன்களையே பிரதானமாக மனதில் கொண்டுள்
ளனர்! அரசியலில் ஈடுபடுபவர்களும் நம்மைப்போலவே சாதாரண சராசரி
மனிதர்களே! ஆடுகள் நனைவது குறித்து கண்ணீர் வடித்துக் கவலைப்படும்
ஓநாய்கள் போன்றவர்கள் அவர்கள்! இந்த ஓநாய்த் தந்திரத்தைத்தான் அவர்
கள் "அரசியல் ஞானம்" என்றும், "ராஜ தந்திரம்" என்றும் பசப்புகிறார்கள்!
மக்களின் விருப்பங்களையும், அவர்களது அறியாமையையும், பலவீனங்களை
யும் தெரிந்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகள், மக்களுடைய பிரச்சினை
களையும், உரிமைகளையும் பற்றி மேடையில் உணர்ச்சி பொங்க முழங்கு
வதன் மூலமும், தமது பேச்சாற்றல் மூலமும் மக்களைத் தங்கள் பக்கம்
ஈர்த்துக் கொண்டுவிடுகிறார்கள்! மக்கள் கூட்டமும் புகழ்ச்சியின் போதையை
வெகுவாக விரும்புவதால், "மக்களின் பாதுகாவலன்" என்று அறிவித்துக்
கொள்ளும் ஒரு மகா பொய்யனை ஆட்சியதிகாரத்தில் ஏற்றிவிடுகிறார்கள்!
மக்களின் பிரச்சினைகளையும், விருப்பங்களையும் பற்றி பேசுவதன் வழியே
அரசியல்வாதியானவன் குரலற்ற மனிதர்களின் குரலாகவும், மக்களின் நலன்
களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகச்சொல்லி, தான் அணிந்து கொள்ளும்
முகமூடியைக்கொண்டு முகமற்ற மக்களின் முகமாகவும், அரசியல்வாதியான
வன் தன்னை நிறுவிக்கொண்டுவிடுகிறான்!
ஆனால், தேர்தலின்போது, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், "நான்", "நீ"
என்று மக்களுக்குச் சேவைசெய்வதற்காகப் போட்டிபோட்டுக்கொண்டு களத்தில்
இறங்குவதைப் பார்க்கும்போது அப்படியே நமக்குப் புல்லரித்துப்போகிறது!
ஆனால், அவர்கள் எவரும் மக்களுக்குச் சேவை செய்வதற்காகப் போட்டி
போடுவதில்லை! மாறாக, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றவே படாத பாடுபடு
கிறார்கள்!
அரசியல்வாதிகள் தனியொரு இனம் அல்ல!
---------------------------------
அரசியல் என்பது ஒரு தொழிலோ, வியாபாரமோ, ... அல்ல! குறிப்பாக, அது
பரம்பரை பரம்பரையாகத் தொடரும் குடும்பத் தொழிலும் அல்ல! இவ்வாறு
அமையுமானால், அது மக்களாட்சிக்கு நேர் எதிரானது! ஆதிக் காலத்து அரசர்
களாயினும், இன்றைய அரசியல்வாதிகளாயினும், அவர்கள் ஒரு தனி இனம்
அல்ல! அவர்களும் சாதாரண மக்கள் தான், சராசரி மனிதர்கள் தான்! இந்த
உண்மை அன்றைய புராதன காலத்து மக்களுக்குப் புரிந்திருக்காது. அன்றைய
நடப்புகள் யாவும் விபத்து போன்ற சூழ்நிலைகளில் நிகழ்ந்தேறின. அன்று
அரசனை தெய்வமாகக் கண்டனர்! அந்த ஆண்டான்-அடிமை காலங்கள் முற்றி
லும் மறைந்து போயின! இன்று நாம் நாகரிகத்திலும், பண்பாட்டிலும் வளர்ச்சி
யடைந்துள்ளோம். இன்று நாம் ஜனநாயக அமைப்பினுள் இருந்து கொண்டு
பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருக்கிறோம். இன்றும்கூட நாம் விழிப்
புடன் இல்லாவிட்டால் அரசியல்வாதிகள் தங்களைத் தனியொரு இனமாக,
அதிகாரத்துவ இனமாக, ஆளப்பிறந்தவர்களாக நிலைப்படுத்திக்கொண்டு
நம்மை மீண்டும் மன்னராட்சிக் காலத்திற்கு கொண்டு போய்விடலாம். நாம்
முக்கியமாகப் புரிந்து கொள்ளவேண்டியது யாதெனில், அரசியல்வாதிகள் தனி
யொரு இனமல்ல; அவர்களும் நம்மைப்போலவே சராசரி ஆசைகளையும்,
விருப்பு வெறுப்புகளையும், உணர்ச்சிகளையும்கொண்ட சாதாரண மனிதர்களே!
நாம் நன்கறிவோம் நமது அண்டைவீட்டுக்காரர் எவ்வாறு ஒரு அரசியல்வாதி
யாக உருவானார் என்பதை! நேற்றுவரை அவர் நம்மில் ஒருவராக, சாதாரண
மனிதராக, முகமற்ற ஒருவராக இருந்தார்! இன்று அவர் செய்தித்தாள்களில்
இடம் பெறுகிறார், தொலைக்காட்சியில் தோன்றிப் பேசுகிறார்! நேற்றுவரை
அவர் குரலற்ற மனிதராக இருந்தார், இன்று அவர் மக்களவையில் குரல்
கொடுக்கிறார், இன்று அவர் மக்களின் பிரதிநிதி! நேற்றுவரை அவர் மக்களில்
ஒருவர், நம்மில் ஒருவர், நமது அண்டைவீட்டுக்காரர், நேற்றுவரை யாரோ
ஒருவராக இருந்த அவர் இன்று தவிர்க்கவியலாத ஒருவராக, அரசியல்வாதி
யாக, அரசியல் தலவராக, மந்திரியாக மாறியுள்ளார்! இனி அவர் தம்மை எப்
போதும் தவிர்க்கவியலாத ஒருவராக தம்மை நிலை நிறுத்திக்கொள்வார்!
ஆனால், மக்களில் - நம்மில் - தவிர்க்கவியலாதவர் என்றும், முக்கியமானவர்
என்றும், எவரேனும் இருக்கிறார்களா? முக்கியத்துவம் வாய்ந்தவர், முக்கியத்
துவம் அற்றவர் என்று மக்களை வகைப்பிரிக்க இயலுமா?
ஆனால், மக்கள் எனும் செம்மறியாட்டுக் கூட்டத்திலிருந்து பிரிந்து நமது
அண்டைவீட்டுக்காரர் ஏன், என்ன காரணத்துக்காக அரசியல்வாதியாக, ஒரு
'கறுப்பாடாக' மாறுகிறார்? ஆம், அரசியல் என்பது முதலீடு தேவையில்லாத
ஒரு வியாபாரம்; அரசியல் என்பது அதிகார ஏணி; வாய்ப்புகளின் தலைவாசல்!
நமது அண்டைவீட்டுக்காரர் எவ்வளவு புத்திசாலி என்பது நமக்குத்தெரியும்!
நம்மைப்போலவே, அவரும் ஒரு பேராசைக்காரர், பொறாமைக்காரர், மற்றும்
ஒரு பகட்டு விரும்பி! ஆனால், இன்று அவர் ஒரு முதலமைச்சர், அரசியல்
தலைவர்! இந்த நபர் ஒரு போதும் நன்னெறியாளனாக மாற முடியாது! பிறகு
எவ்வாறு அவருக்குக் கீழேயுள்ள அமைச்சர்களும், அலுவலர்களும் நன்னெறி
யாளர்களாக விளங்க முடியும்? பிறகு எவ்வாறு தொழிலாளர்களும், சாதாரண
மனிதர்களும், நகரத்தாரும், கிராமத்தாரும் நன்னெறியாளர்களாக இருக்க முடி
யும்? அரசியல்வாதிகளின் ஒழுக்கக்கேடான அம்சங்களை, ஊழல்களை, வரு
மானத்திற்கு மேலாக சேர்த்துக்கொண்ட சொத்துக்குவிப்பு வழக்குகளை நாடே
அறியும்!
ஆனால், நாம் பொழுது போகாதபோது, அல்லது பொழுதைப் போக்குவதற்காக
சில வேளைகளில் அரசியல் பேசுகிறோம்! அப்போது நாம் கூறுகிறோம், "அந்த
அதிகார நிலைகளை நாம் அடையும் போது ஊழல் நிறைந்த அரசியல்வாதி
களைப் போலத்தான் நாமும் இருப்போம். இப்பொழுது நாமிருக்கும் சாதாரண
நிலையில் நியாயம், நேர்மை, ஒழுக்கம், தருமம் பற்றியெல்லாம் பேசிக்
கொண்டிருக்கலாம்!" என்கிறோம். இக்கூற்றில் உண்மையில்லாமல் இல்லை!
ஆம், சுய சிந்தனையும், பொறுப்புமற்ற இக்கூற்றினை கூறிடும் எவருமே ஒரு
அரசியல்வாதியாக ஆவதற்கான முழுத்தகுதியையும் உடையவரே. ஜனநாயக
அமைப்பில் யார் வேண்டுமானாலும் தலைவராகலாம், மந்திரியாகலாம் என்ப
தால் அல்ல. உண்மையில் எல்லோருமே அரசியல்வாதிகளாகிவிடுவதில்லை!
ஏனெனில், மக்கள் அனைவருமே ஒழுக்கக் கேடானவர்களோ, தீயவர்களோ
அல்ல. சில சந்தர்ப்பங்களில் சூழ்நிலைகளில் நல்லவர்களும் அரசியலில்
ஈடுபட்டுவிடுவதுண்டு!
ஆக, விதிவிலக்கான ஒரு சில 'நல்ல' அரசியல் தலைவர்களையும், அரசியல்
வாதிகளையும் தவிர, ஏனையோர் பொதுவான மக்கள் கூட்டத்திலிருந்து
பிரிந்து செல்லும், பொருளாசை கொண்ட, பேராசை மிக்க, சுயநலம் மிகுந்த,
பகட்டு விரும்பிகளான கறுப்பாடுகளே அரசியலில் ஈடுபடுகின்றன! இதன்
அர்த்தம் அரசியல்வாதிகள் அனைவரும் அயோக்கியர்கள் என்பதல்ல! ஏனெ
னில், நாம் எந்த மண்ணில், நிலத்தில் விளைகிறோமோ அதே நிலத்திலிருந்து
தான் அரசியல்வாதிகளும், திருடர்களும், பொய்யர்களும், புரட்டர்களும், நல்ல
வர்களும், ஞானிகளும், வள்ளல்களும் விளைகிறார்கள்! அதாவது, மக்கள் எவ்
வாறோ அவ்வாறே மன்னன், அல்லது தலைவன் அமைகிறான்! மக்களின்
பொதுவான பண்பு நிலைகளில் எப்பண்பு, விழைவு, நாட்டம் மேலோங்கி
நிலவுகிறதோ, அதற்கேற்பவே அரசியலும், ஆட்சியும் அமைகின்றன! நாம் நம்
அண்டைவீட்டுக்காரரை மறந்து விட வேண்டாம்! அவரது பொறாமைக்குணத்
தையும், பேராசையையும், அவரது மனக்கோணல்களையும், தந்திர புத்தியை
யும் மறந்து விட வேண்டாம்! மேலும், இக்குணாதிசயங்கள் எந்தெந்த விகிதங்
களில் நம்மிடமும் உள்ளன என்பதையும் நாம் நினைவில் கொள்வோமாக!
உண்மையான மக்களாட்சியை நோக்கி!
-----------------------------
தற்போது நம் நாட்டில் நடைமுறையிலிருக்கும் ஆட்சி முறை எத்தகையது?
நாம் நினைத்துக்கொண்டிருப்பது போல தற்போதைய ஆட்சிமுறை உண்மை
யான மக்களாட்சி முறை தானா? ஆனால், மக்களாகிய நாம் எவ்வகையிலும்
ஆட்சியில் அங்கம் வகிப்பதில்லை! நம்முடைய பிரதிநிதிகளாக, ஆட்சியாளர்
களைத் தேர்ந்தெடுத்து ஆட்சியதிகாரத்தை அவர்கள் கைகளில் ஒப்படைப்பது
டன் நம்முடைய பங்கும், பணியும் முடிந்து விடுகின்றன! ஆட்சியாளர்களைத்
தேர்ந்தெடுப்பது, தேர்தலின்போது வாக்களிப்பது என்பது மக்களுடைய "கடமை"
என்று புகழ்ந்து சொல்லப்படுகிறது! ஆனால், வாக்களிப்பது என்பது வெறும்
கடமை யல்ல! மாறாக, மக்களாகிய நாம் நம்முடைய வாழ்க்கையைச் செயல்
படுத்துவதற்கான பொறுப்பையும், அதிகாரத்தையும் வாக்குச்சீட்டுகளின் வாயி
லாக அரசியல்வாதிகளின் கைகளில் வழங்குகிறோம்! ஒவ்வொரு தேர்தலின்
போதும், இம்முறை நம் வாழ்வு வளம்பெறும் என நாம் தேர்ந்தெடுக்கும்
அரசியல் தலைவரை மலைபோல நம்புகிறோம்! ஆனால், நம் அரசியல்வாதி
களும், தலைவர்களும் ஆட்சியதிகாரத்தைப் பெறுவதற்காக, நம் வீடுகளைத்
தேடி வந்து கெஞ்சிக் கும்பிட்டுக் கூத்தாடி வாக்குகளைச் சேகரிக்கின்றனர்!
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் அவர்கள் நாம் அணுகவே முடியாத உயரத்
திற்குச் சென்று விடுகின்றனர்! இதுதான் பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பது!
ஆனால், வேறு ஒரு சிறந்த ஜனநாயக ஆட்சிமுறையை நாம் கண்டுபிடிக்கும்
வரை, பிரதிநிதித்துவ ஜனநாயக முறையை விட்டால் வேறு வழியில்லை!
இப்போதைக்கு நம்முன்னேயுள்ள பிரதான சவால் என்னவென்றால். நாம்
தேர்ந்தெடுக்கும் நம்முடைய பிரதிநிதிகளை எவ்வாறு நாம் ஆள்வது,அதாவது,
எவ்வாறு அவர்களை உண்மையாக மக்களுக்குச் சேவை புரியுமாறு செயல்பட
வைப்பது என்பதுதான்! இது குறித்தும், இன்னும் ஜனநாயகத்திற்கு பாதகமாக
விளங்கும் பல்வேறு காரணிகளை இனம் கண்டறிந்து எவ்வாறு ஜனநாயகத்
தைக் காப்பாற்றுவது என்பது குறித்தெல்லாம் ஒவ்வொன்றாக அடுத்தடுத்த
கட்டுரைகளில் காண்போம்!
மா.கணேசன்/ நெய்வேலி/ 15-11-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment