
"வாழ்க்கை" தான் நம் அனைவரின் ஒரே அசலான
உண்மையான மதம் ஆகும்!
உண்மை மட்டுமே ஒரே உண்மையான கடவுள்!
மக்கள் அனைவரும் தங்களிடையே சாதி, மதம், இனம், நிறம், மொழி என
எவ்வொரு அடிப்படையிலும், பிரிவினை பாராட்டாமல் ஒற்றுமையாக ஒரே
கட்சியாக, அதாவது, மக்களாகவே இருப்பார்களேயானால், அரசியல்வாதி
களின் வாக்கு வங்கி அரசியலுக்கும் இடமிருக்காது, மக்களுடைய பிரிவினை
வாதத்தில் குளிர்காயும், பிரித்தாளும் அரசியலும் இருக்காது! ஆனால், மக்கள்
அனைவரும் ஒற்றுமையாக இருக்க முடியாது, இருக்க மாட்டார்கள் என்பது
அடிப்படையற்ற வாதமாகும்! ஏனென்றால், மக்கள் அனைவரும் ஒற்றுமை
கொள்வதற்கு ஒரு அற்புதக் காரணி உள்ளது! அது, அனைத்து மக்களுக்கும்
"பொதுவான அடிப்படை வாழ்க்கைப் பிரச்சினைகள்" தான்! மேலும்,பெரும்பான்
மையினரின் நலன்கள், சிறுபான்மையினரின் நலன்கள், சாதிவாரியான நலன்
கள், இனரீதியான நலன்கள் என தனித்தனி நலன்கள் என்று எதுவும் இல்லை!
ஏனெனில், பசி என்பது பொதுவானது; பசிக்கு எந்த சாதியும் இல்லை, மதமும்
இல்லை! ஆகவே,மக்களின் "பொதுவான அடிப்படை வாழ்க்கைப்பிரச்சினைகள்"
தான் மக்களை ஒருமைப்படுத்தும், ஒற்றுமைப்படுத்தும் அற்புத அம்சம் ஆகும்!
இனம், மதம், சாதி, நிறம், மொழி, கலாச்சாரம் போன்ற அம்சங்களைப் பற்றிக்
கொண்டிருப்பது என்பது மனிதஇனத்தின் முதிர்ச்சியின்மையின் அடையாளங்
கள் ஆகும்! ஏனெனில், இவ்வம்சங்கள் மனிதர்களிடம் "மனிதம்" எனும்
பண்பை வளரவிடாமல் தடுத்து அழித்துவிடுகிற பணியையே செய்கின்றன!
மேலும், மனிதர்களில் குள்ளமானவர்களும், உயரமானவர்களும், நடுத்தர
உயரமானவர்களும் இருக்கிறார்கள்; அவர்களில் குள்ளமாக உள்ளவர்களை
நாம் மனிதர்களே இல்லை என்று சொல்லிவிட முடியுமா? இன்னும், ஒல்லி
யான மனிதர்களும், குண்டான மனிதர்களும் இருக்கிறார்கள்; சிலர் கருப்பாக
வும், சிலர் சிகப்பாகவும், சிலர் மாநிறமாகவும் உள்ளனர்! ஆனால், மனிதர்
களின்தோலின் நிறம், அவர்களுடைய உண்மையான நிறத்தை (மனிதத்தை)
காட்டுவதில்லை!
உண்மையில், முகத்தோற்றத்தில், அளவில், நிறத்தில் ஒரு மனிதனைப்போல
இன்னொரு மனிதன் இல்லை! இவை இயற்கையான வேறுபாடுகள் என்றால்;
இன்னொருபுறம், சமூகத்தில் செயற்கையும், போலியுமாக கற்பிக்கப்பட்ட பல
வேறுபாடுகளும் உள்ளன -- சமூக அந்தஸ்து, உத்தியோகநிலை, கல்வி, பதவி,
பொருளாதார நிலை, அறிவுத்திறன், திறமை, . . . . போன்றவையே அவை!
அதாவது, இவ்வாறான இயற்கையானதும், செயற்கையானதுமான, மேலோட்
டமான வேறுபாடுகளுடன் இனம், மதம், சாதி, நிறம், மொழி, கலாச்சாரம்
போன்ற வேறுபாடுகளையும் சேர்த்துக்கொண்டு எவ்வாறு நாம் ஒரு தேசத்தின்
பிரஜைகளாக, மக்களாக அமைதியாகவும், இணக்கத்தோடும் வாழ இயலும்?
மிகவும் ஆழமான இன அடிப்படையிலான பிளவுகளைக்கொண்ட சமூகங்
களில் ஜனநாயகம் என்பது மிகக் கடினமாகும். . . இத்தகைய சமூகங்களில்
ஜனநாயகம் முறிந்து போகும் என்கிறார், ஆஸ்திரேலிய அரசியல் விஞ்ஞான
ஆய்வறிஞர் பெஞ்ஜமின் ரெய்லி. ஆகவே, பூசல்களை நிர்வாகம் செய்யும்
முகமாக 'தேர்தல் பொறியியலை' (electoral engineering)பயன்படுத்து
வதற்கான சாத்தியம் பற்றி அவர் ஆராய்ந்தார். தேர்தல் பொறியியல் மூலமாக
மிகவும் பிளவுபட்ட சமூகங்களிலும் கூட ஜனநாயகத்தை தக்கவைக்க
முடியும் என அவர் சில நாடுகளை உதாரணமாகக் காட்டுகிறார்! ஆனால்,
பெஞ்ஜமின் ரெய்லி போன்ற ஆய்வறிஞர்கள் பிளவுகளின் வேர்களைக் கண்ட
றிந்து அவற்றைக் களையாமல், மேலோட்டமான உத்திகள் மூலமாக பூசல்
களைத் தற்காலிகமாகக் களைவதற்கான வழிகளையே கண்டறிந்து கூறுகின்
றனர்!
பிளவுண்ட சமூகங்களில் ஜனநாயகம் தழைக்க முடியுமா, முடியுமென்றால்,
எவ்வாறு எனும் கேள்வி அரசியல் விஞ்ஞானத்தில் நெடுங்காலமாக சர்ச்சைக்
குரிய விஷயமாக இருந்து வந்துள்ளது. சில பெரும் அரசியல் சிந்தனையாளர்
கள், 'நிலையான ஜனநாயகம் கிட்டத்தட்ட ஒருபடித்தான தன்மையைக்
கொண்ட சமூகங்களில் மட்டுமே சாத்தியம்!' என்பதாக வாதம் செய்தனர்.
"பல்வேறு இனங்களைக்கொண்ட சமூக அமைப்பும், ஜனநாயகமும் சேர்ந்து
செல்லாது!" என ஜான் ஸ்டூவர்ட் மில் அவர்கள் கூறினார்.
இனவாதம் என்பது அடிப்படையிலேயே தவறான அடையாளப்படுத்துதலில்
இருந்து தான் முளைத்தெழுகிறது! மக்கள், அதாவது சமூகக் குழுக்கள்
தங்களுடைய உள்ளார்ந்த அம்சங்களைக்கொண்டு தங்களைக் காண்கிறது,
அடையாளப்படுத்திக்கொள்கிறது எனும் பட்சத்தில், பெரிதாக பிற குழுக்களி
டையே பிரச்சினைகள் எதுவும் எழ வாய்ப்பில்லை! மாறாக, மேல்பூச்சாக
வரித்துக்கொள்ளும் செயற்கையான கற்பிதமான விஷயங்கள், கொள்கைகள்,
கோட்பாடுகளின் வழியாகத் தங்களைக் காணும்போதும், அவற்றுடன் தம்மை
அடையாளப்படுத்திக் கொள்ளும்போதும், அவ்வடையாளங்களை முன்னிறுத்
தும் போதும், சமூகக் குழுக்களிடையே பிரச்சினைகளும், பூசல்களும், தீராப்
பகையும் ஏற்படுவது தவிர்க்கவியலாததாகிவிடுகிறது!
பிளவுகள், பிரிவினைகள் சமூகத்தில் இருக்கவே செய்கின்றன. பிளவுகளற்ற
ஒற்றுமையான சமூகம்; சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை
வெறும் விரும்பத்தக்க தொலை-தூரத்து லட்சியநிலைகளாகவே உள்ளன!
ஆனால், பிளவுகள், பிரிவினைகள் என்பவை மானிட இனத்தின் அடிப்படை
களோ, அல்லது எவ்வகையிலும் இறுதியான அம்சங்களோ அல்ல! மாறாக,
அவை சிறு பிள்ளைத்தனமான பிடிவாதப் போக்குகளேயாகும்! பிரிவினை
வாதம் என்பது புறவயமாக வெளியே தெரிகின்ற மேலோட்டமான அம்சங்
களை பெரிதுபடுத்திப் பின்னப்பட்ட அகவயமான கோட்பாடுகளே! அகவயமான
விஷயங்கள், அம்சங்கள், நம்பிக்கைகள் யாவும் சொந்த விவகாரங்கள் எனும்
கோளத்தைச் சேர்ந்தவையாகும்; அவைகளை அம்பலத்திற்குக் கொண்டுவந்து
அரங்கேற்றம் செய்வது அபத்தமானது!
பிரிவினை வாதங்களை நிறுவுவதன் மூலம் ஒரு பிரிவினர் பெறுகின்ற
சொற்பப் பயன்களையும், இலாபங்களையும்விட, மொத்தசமூகமும் அடையும்
நஷ்டங்களும், இழப்புக்களும்தான் அதிகம்! பிரிவினைகள், பிளவுகள் நாட்டிற்
குள் மட்டுமல்ல; ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் உள்ளன! ஆனால், வீட்டிற்குள்
ளும், குடும்பத்திற்குள்ளும் அவை ஒருவாறு கட்டுக்குள் வைக்கப்படுகின்றன!
கட்டுக்களை மீறிடும் போது அவை குடும்பத்தையே அழித்துவிடுகின்றன!
ஒரு குடும்பத்திலுள்ள அங்கத்தினர்கள் யாவரும் ஒருபடித்தானவர்களாக
இருப்பதில்லை! குடும்ப அங்கத்தினர்கள், வயதிலும், தோற்றத்திலும், அளவி
லும், கல்வியிலும், திறமையிலும், புத்திசாலித்தனத்திலும் வேறுபடவே செய்
கின்றனர்! குறிப்பாக, குழந்தைகளும், முதியவர்களும் உதவியற்றவர்களாகவும்,
பலவீனமானவர்களாகவும் உள்ளனர்! ஒருவர் பலசாலியாக இருக்கலாம்; இன்
னொருவர் ஊனமுற்றவராக இருக்கலாம்! ஒரு குடும்பத்தில் ஆண்கள், பெண்
கள், குழந்தைகள், இளையவர்கள், முதியவர்கள், ஊனமானவர்கள், நோயாளி
கள், மன-வளர்ச்சி குன்றியவர்கள், என பலதரப்பட்ட மனிதஜீவிகள் உள்ளனர்!
ஆனால், அனைத்து வித்தியாசங்களையும், வேறுபாடுகளையும் தாண்டி ஒரு
குடும்பத்தின் அங்கத்தினர்கள் அனைவரையும் பிணைப்பது எது? அதேவேளை
யில் சொத்து தகராறில் அண்ணன் தம்பிகள் ஒருவரையொருவர் வெட்டிச்
சாய்த்துக் கொள்வது எதனால் நிகழ்கிறது?
ஆம், அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி ஒவ்வொருவரும், அனைவரும்
உயிர்-பிழைத்தாகவேண்டும், வாழ்ந்தாக வேண்டும் என்பது முக்கியத்துவம்
பெறும்போது, இணக்கமும், இசைவும் இயல்பாக வெளிப்படுகின்றன! பணம்,
பொன், பொருள், சொத்து ஆகியவை முக்கியத்துவம் பெறும்போது, அதாவது,
உயிரைவிடவும், வாழ்க்கையைவிடவும் அவை முதலிடம் வகிக்கும்போது;
அண்ணன், தம்பி என்ற உறவுப்பிணைப்பு அறுந்து போகிறது! பரஸ்பரம் ஒரு
வரையொருவர் வெட்டிச் சாய்த்துக் கொள்வதன் மூலம், மனிதர்கள் மட்டும்
செத்துப் போவதில்லை! மாறாக, அம்மனிதர்களின் வழியாக வெளிப்படவேண்
டிய வாழ்க்கையும் செத்துப்போகிறது!
உண்மையில், நாடு, தேசம், சமூகம் என்பதும் ஒரு பெரும் குடும்பம் போன்ற
தேயாகும்! ஒரு நாட்டின் மக்கள் பிரிவினை வாதங்களால் பிளவுபட்டு தங்க
ளுக்குள் சண்டையிட்டுக் கொள்வாரேயானால், (எதிரி நாடுகளின் படையெடுப்
புக்கள் இல்லாமலேயே), அந்நாடு விரைவில் வீழ்ந்திடும்! உலக வரலாற்றில்,
எத்தனையோ சாம்ராஜ்யங்களும், நாகரிகங்களும் வீழ்ந்து மறைந்து போயின!
சாம்ராஜ்யங்களும், நாகரிகங்களும் வீழ்ந்து அழிந்து போவதற்கு பல காரணங்
கள் இருக்கலாம்! உள்-நாட்டுப் பிரச்சினைகள், கலகங்கள், பிரிவினைவாதப்
போக்குகள், பொருளாதாரத் தேக்கம்; அயல்நாட்டுப் படையெடுப்புகள், ஆக்கிர
மிப்புகள், . . . என பல காரணங்கள் இருக்கலாம்! ஆனால், அவற்றில் எதுவும்
மையமான காரணம் அல்ல! ஏனெனில், பண்டைய பல நாகரிக சமூகங்கள்
பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும், உற்பத்தி முறைகளிலும், ராணுவ
பலத்திலும் முன்னேற்றம் கண்டிருந்தன! ஆனால், அவை வாழ்க்கையின்
மையமான நோக்கத்தையும், குறிக்கோளையும், இலக்கையும் அறிந்து நிறை
வேற்றத் தவறிவிட்டதால், மனம்போன போக்கில் செயற்கையும், போலியுமான
நோக்கங்களை, இலக்குகளை கைக்கொண்டதால் தறிகெட்டுப்போய் வீழ்ந்தன!
பொதுவாக, 'வாழ்க்கை' என்பதை, நாம் விரும்பியவற்றைச் செய்வதற்கான
ஒரு வாய்ப்பு என்பதாகக்கருதுகிறோம்! அதாவது, நாம் பிறந்துவிட்டதாலேயே,
வாழ்க்கை எனும் வாய்ப்பை நாம் உடமையாகக் கொண்டுவிட்டோம் என எண்
ணுகிறோம்! அதாவது, நாம் வாழ்க்கையின் சொந்தக்காரர்களாக நம்மைக்காண்
கிறோம்! அதாவது, உலகம் முழுவதும் தனக்கே உரியதென, படைபலத்தாலும்,
தடையில்லா வர்த்தகத்தாலும் உலகை வெற்றி கொள்ளவும், நம்முடைய
சொந்த சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பவும் முயல்கிறோம்! ஆனால், உண்மை
யில் நாம் மரணத்தின் சாம்ராஜ்யத்திற்குத்தான் சொந்தக்காரர்களாகத்தான்
இருக்கிறோம்!
அலெக்ஸாண்டரை நாம் எல்லோரும் மாவீரன் எனக் கொண்டாடுகிறோம்!
உலகம் என்பது நம் ஒவ்வொருவருடைய அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும்
செயல்படுத்துவதற்கான களம் என்பதாக எண்ணுகிறோம்! வாழ்க்கை எனும்
புத்தகத்தைத் திறந்து பார்ப்பதற்கு முன்னே, முட்டாள் தனமாக, உலகை
வெற்றிகொள்ள, அல்லது நம்மால் முடிந்த அளவு சிறு தாக்கத்தையேனும்
உலகின் மீது ஏற்படுத்திடவேண்டும் எனக் கிளம்பிவிடுகிறோம்!
அடிப்படையில் வாழ்க்கையை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதைப்
பொறுத்தே, அதாவது, நம்முடைய "வாழ்க்கைப் பார்வை"யைப் பொறுத்தே
நம்முடைய சமூக, பொருளாதார, அரசியல் அமைவுநிலைகளை நாம்
உருவாக்கிக்கொள்கிறோம்! "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, இல்லையேல்
அனவருக்கும் தாழ்வு!", "ஒற்றுமையே வலிமை!", நாடு, தேசம் என்பதும் ஒரு
குடும்பம் போலத்தான் என்றெல்லாம் உணர்ச்சிக்கனிவு மிக்க சொற்களைக்
கொண்டு மக்களை ஒற்றுமைப்படுத்திடலாம் என எண்ணுவது சிறுபிள்ளைத்
தனமானது! இவ்வாறான, எளிய அறிவுரைகளைக் கேட்டு மக்கள் உடனே
திருந்திவிடுவதற்கு அவர்கள் பிழைக்கத்தெரியாத முட்டாள்கள் அல்லவே!
ஏனெனில், மக்கள் அடிபட்டுத்தான், அழிந்துதான் பாடம் கற்றுக்கொள்வார்கள்!
அப்போதும் கூட அவர்கள் வாழ்க்கையை புரிந்துகொள்வார்கள் என்று எதிர்
பார்க்க முடியாது!
மனிதர்களிடம் காணப்படும் வித்தியாசங்கள், வேறுபாடுகள்; மனிதர்களுக்கு
இடையே நிலவும் பாகுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் யாவும் மேலோட்டமானவை
யாகும்! அவை மனிதர்களின் உண்மையான சாரத்தை உருவாக்குவதோ,
விளக்குவதோ, வெளிப்படுத்துவதோ கிடையாது! இன்னும், மனிதர்களிடம்
வெளிப்படும் விசேடத்திறமைகளும், அறிவுக்கூர்மையும், எதுவும் அம்மனிதர்
களை முழுமைப்படுத்துவதுமில்லை, நிறைவுசெய்வதுமில்லை! வரங்களாகத்
தெரியும் அவற்றை முறையாக வாழ்க்கைக்குச் சேவை செய்யும் வகையில்
பிரயோகிக்கவில்லையெனில், முடிவில் அவை சாபங்களாக மாறிவிடக்கூடும்!
உலகில் தனிநபர்கள் எத்தனை கோடி பேர்கள் இருக்கின்றனரோ அத்தனை
கோடி வித்தியாசங்கள் உள்ளன எனலாம்! ஆனால், எத்தனை கோடி வித்தியா
சங்கள் இருந்தாலும், அவற்றுக்கடியில் எல்லா மனிதர்களிடமும் இருப்பது
ஒரே மானிட உட்பொதிவு (உள்ளுறையாற்றல்) மட்டுமே! ஆம், எல்லா
மனிதர்களிடமும் அந்த உட்பொதிவு உள்ளது, ஆனால், எவரெல்லாம் அந்த
உட்பொதிவை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்கிறார்களோ அவர்கள்
மட்டுமே உண்மையான, அல்லது முழுமையான மனிதர்களாக எழுகிறார்கள்!
மனிதர்களுக்கிடையேயுள்ள வித்தியாசங்களை, வேறுபாடுகளை, மனிதர்களிட
மிருந்து மனிதர்களை அந்நியப்படுத்தும், வெட்டிப்பிரிக்கும் ஆயுதங்களாகக்
கொள்வது தவறு! ஏனெனில், வித்தியாசங்கள், வேறுபாடுகளினால் விளையக்
கூடிய பயன்களை நாம் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதால் பெறக்கூடிய பயன்
களும், நன்மைகளும் பன்மடங்குகளாகப் பெருகும்! ஒவ்வொருவருக்கும் ஒவ்
வொருவித திறமை உள்ளதெனில், கூட்டாக அத்திறமைகளை நாம் பயன்
கொள்வதுதான் அறிவார்ந்த செயலாக இருக்கமுடியும்! இன்று நாம் அனுபவிக்
கின்ற அனைத்துப் பொருள்வளங்களும் அவ்வாறு பரிமாற்றம் செய்யப்பட்ட
வைகளே, பகிர்ந்துகொள்ளப்பட்டவைகளே! ஒருவர் தனது திறமையின் விளை
வாகப் பெற்றவைகளை தான் மட்டுமே பயன்கொள்வேன் என்று பதுக்கியிருந்
தால் நாம் இன்றுள்ள நாகரிக நிலையை அடைந்திருக்க முடியாது! மேலும்,
மனிதர்கள் யாவரும் மண்புழுக்களைப்போல ஒரே மாதிரியாக எவ்வித வித்தி
யாசமும், வேறுபாடுமின்றி இருந்திருப்போமெனில், நாமும் மண்புழுக்களாகத்
தான் இருப்போம்!
ஆகவே, மக்களாகிய நாம், சிறு சிறு வேறுபாடுகளை, மேலோட்டமான வித்தி
யாசங்களைப் பெரிது படுத்தி நமக்கிடையே பிளவுகளை, பிரிவினைகளை
மேன்மேலும் ஆழப்படுத்திடுவோமெனில், அரசியல்வாதிகள் அவற்றைப் பயன்
படுத்திக்கொண்டு நம்மைப் பிரித்தாள்வதற்கு இடமளித்துவிடுவோம்! அதாவது,
ஏற்கனவே நாம் மதம், இனம், சாதி, மொழி ஆகியவற்றின் அடிப்படையில்
பிரிந்து கிடக்கிறோம்! அதில் அரசியல் கட்சிகள் புகுந்து, ஒவ்வொரு கட்சியும்
ஒரு பிரிவினரை பிரதிநிதித்துவம் செய்கிறோம் பேர்வழி என்று தத்தெடுத்துக்
கொள்ளும் பட்சத்தில், அதாவது மக்களைக் கட்சி பிரித்துக் கொள்வதனால்
சமூகத்தில் தேவையில்லாத இறுக்கமும், பகைமையும், மேலதிகப்பிரச்சினை
களும் தான் விளையும்!
மக்களின் வாழ்க்கை நலன்கள் என்பவை பொதுவானவையாகும்! அசலான
வாழ்க்கை நலன்களைப் பொறுத்தவரை நாமனைவரும் ஏற்கனவே ஒரே
கட்சியாகத்தான் உள்ளோம்! அதில், வெவ்வேறு அரசியல் கட்சிகள் - வெவ்
வேறு கொடிகளுடன், சின்னங்களுடன் உட்புகுந்து தத்தம் கொள்கைகளைக்
கொண்டு விசேடமாக எந்த, அல்லது, எவருடைய நலன்களை நிறைவேற்றப்
போகின்றன? மக்களின் நலன்களையா, அல்லது தங்களுடைய சொந்த நலன்
களையா? மீண்டும், மீண்டும், எத்தனை முறை சொன்னாலும், மக்களின்
"வாழ்க்கைத்தேவைகள்" என்பதைவிட வேறு கொள்கை கோட்பாடுகள் எதுவும்
இருக்கமுடியாது! மேலும், ஒரு மனிதனை அவனைத்தவிர வேறு எவரும்,
எந்த அரசியல் கட்சியும், தலைவரும், இன்னும் கடவுளும் கூட சிறப்பாகவும்,
உண்மையாகவும், முழுமையாகவும் பிரதிநிதித்துவம் செய்யமுடியாது!
அவ்வாறே பொதுவான வாழ்க்கை நலன்களைக் கொண்ட மக்களையும் அம்
மக்களைத்தவிர வேறு எவரும், எதுவும் பிரதிநிதித்துவம் செய்யமுடியாது!
இதுவரை, ஜனநாயக ஆட்சிமுறையைக் கொண்ட, குறிப்பாக பிரதிநிதித்துவ
ஜனநாயக ஆட்சியமைப்பு கொண்ட எந்த நாட்டிலும், எந்த அரசியல் கட்சியும்
மக்களின் நலன்களை, உரிமைகளை முழுமையாக நிறைவேற்றியதில்லை!
அவ்வாறே, மக்களின் எப்பிரச்சினையையும் முழுமையாகத் தீர்த்ததுமில்லை!
அப்படியே விதிவிலக்காக ஏதாவதொரு நாடு இருக்கமுடியுமெனில், அது,
தங்களுக்கிடையேயான வித்தியாசங்களையும், வேறுபாடுகளையும்,
பிரிவினைகளையும் கடந்த, அந்நாட்டு மக்களின் ஒருமித்த விழைவின்
வெற்றியாக மட்டுமே இருக்கமுடியும்!
மா.கணேசன்/ நெய்வேலி/ 17-11-2017
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment