
'அன்பு' எனும் சொல்லே அது சுட்டுகின்ற
மெய்ம்மைக்கான வித்து அல்ல !
இணக்கமான உறவுகளுக்கான பாலம் அல்ல அன்பு ! இன்னும்
இரண்டு பேர்களுக்கிடையே பிரச்சினைகள், முரண்பாடுகள்
பிணக்குகள், சண்டை சச்சரவுகள் தோன்றிடும் போது
அவ்விருவருக்கிடையே விட்டுக்கொடுக்கும்மனப்பாங்கு இல்லை,
புரிதல் இல்லை, அன்பு இல்லை, அது இல்லை, இது இல்லை,இன்னும்
என்னென்னமோவெல்லாம் இல்லை என்றெல்லாம் சொல்கிறோம்,
அக்கறையுடன் கவலைப்படுகிறோம்.
ஆனால், இப்படி யோசித்துப் பார்ப்போம் : திடீரென சமூகத்தில்,
உலகில், குடும்பத்திற்குள், குடும்பங்களுக்கிடையில், ஆணுக்கும்
பெண்ணுக்கும் இடையில், நண்பர்களுக்கிடையில், எதிரிகளுக்
கிடையில், . . யாதொரு பிணக்கும் இல்லை, முரண்பாடும் இல்லை,
சண்டை சச்சரவும் இல்லை என்பதான நிலைமை நிலவுவதாக (!)
வைத்துக்கொள்வோம்; எங்கும் அன்பு, அமைதி, ஆனந்தமே
நிலவுகிறது (!) அப்போது சமுதாயம், உலகம், வாழ்க்கை எப்படிப்
பட்டதாயிருக்கும் ? ஆம், பூமியே சொர்க்கமாக,பொன்னுலகமாகத்
திகழும் !
இப்படியெல்லாம் நாம் கனவு காணலாம், கதைகள் எழுதலாம்,
கவிதைகள் புனையலாம். ' இப்படி ஒரு பொன்னுலகம் சாத்தியம்
தானா, இல்லையா?' என பட்டிமன்றம் நடத்தலாம் ! ஆனால்,
இத்தகைய உலகம் சாத்தியம்தான் என்றால் அது ஏன் தற்போது
நிஜமாக இல்லை? அல்லது அது எப்போது சாத்தியமாகும்? அதற்கு
எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்? அது வரை நாம் எவ்வாறு
வாழ்வது?
உண்மையில் 'எதுவும் சாத்தியமே' என்பதான உலகில் தான் நாம்
வாழ்கிறோம்! ஆனால், இன்று இப்பொழுது சாத்தியமில்லாத
'பொன்னுலகம்' எப்பொழுதுமே சாத்தியமாகாது! ஏனெனில்,
மனிதர்களுடைய, நம்முடைய வாழ்க்கைப்பார்வை அப்படி!
நம்முடைய இலட்சியங்கள், இலக்குகள், மதிப்புகள், ஆசைகள்,
தெரிவுகள் அப்படி! நம்முடைய உணர்வின் தன்மை அல்லது
உணர்வின்மையின் தன்மை அப்படி! 'எதுவும் சாத்தியமே!' எனும்
ஒரு அற்புதமான உலகில், நாம் தெரிவு செய்திட்ட சாத்தியப்பாடு
இத்தகையது! அதன் தவிர்க்கவியலாத தாறுமாறான விளைவுகளை
நாம் அனுபவித்து வாழ்ந்துதான் தீர்த்தாக வேண்டும்!
இரண்டு மனிதர்களுக்கிடையே இணக்கம் இல்லை, விட்டுக்
கொடுக்கும் மனப்பக்குவம் இல்லை, புரிதல் இல்லை, அன்பு இல்லை,
இது இல்லை, அது இல்லை என்றால் இருவரில் யார் விட்டுக்
கொடுப்பது? யார் முதலில் புரிந்து கொள்வது? யார் யார் மீது அன்பு
செலுத்த வேண்டும்? . . . . இவ்வாறு இரண்டு மனிதர்கள் பரஸ்பரம்
ஒருவரிடம் இன்னொருவர் கேள்விகள் கேட்டுக்கொண்டும், வாதம்
புரிந்து கொண்டும் இருந்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது!
'புரிதல்' என்பது பரஸ்பரம் ஒருவர் இன்னொருவரைப் புரிந்து
கொள்வதா? அல்லது ஒவ்வொருவரும் தன்னைத்தானே புரிந்து
கொள்வதா? 'அன்பு' என்பது இருவருக்கிடையே பாலம் போல
எழுப்பப்படவேண்டிய ஒன்றா?அல்லது ஆக்சிஜன் (பிராணவாயு)
போல ஒவ்வொருவரும் அன்பைச் சுவாசித்தாக வேண்டுமா?
முதலிடத்தில், 'அன்பு' என்பது இருக்கிறதா, இல்லையா? என்று
கேட்டால் அக்கேள்வி 'கடவுள்' இருக்கிறாரா,இல்லையா? என்பதை
ஒத்ததாகும்!
உண்மையில் நம்மிடமும், நம்மைச்சுற்றிலும் காணப்படுவது வெறும்
'உணர்ச்சிக் கனிவும்', பாசமும், பல்வேறு உணர்ச்சிவயப்பட்ட
தன்மைகளும் தானே தவிர அன்பு அல்ல! நம்மிடமுள்ள அன்பை
"கோழிப்பாசம்" என்று தான் குறிப்பிட வேண்டும்! ஒரு பெட்டைக்
கோழி தனது குஞ்சுகளை பருந்திடமிருந்தும், நாய், பூனை
யிடமிருந்தும் போராடிப் பாதுகாப்பதைப் போன்றதே, "அன்பு" என்று
நாம் குறிப்பிடும் நம் 'மனிதப்பாச'மும் ! இப்பாசம் மிகவும் இயல்பானது, ,
இயற்கையானது இது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான
உயிர்-பிழைத்திருத்தல் எனும் கோளத்திற்கு உரிய அடிப்படையான
இயல்பூக்கி ஆகும். சொல்லப்போனால், 'பாலுணர்வு' இயல்பூக்கியின்
ஒரு நீட்சி தான் கோழியின் பாசமும், இன்னும் மனிதனின் பாசமும் !
இது ஒரு ஜீவி தன்னைத்தானேகாத்துக்கொள்ளுகிற விஷயத்திலிருந்து
தொடங்குகிறது. இதை நாம் "சுய-பாதுகாப்பு" இயல்பூக்கி
என்றழைக்கலாம். இந்த சுய-பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு
வெளிப்படுவதுதான் "சுய-பாசம்" ! சற்று உயர்-வளர்ச்சியடைந்த எல்லா
உயிரினங்களிடமும் இந்த இயல்பூக்கியின் வெளிப்பாடு, அதாவது
சுய-பாசம் சுலபமாகப்புலப்படும். சுய-பாசத்தின் ஒரு நீட்சி தான்
ஒரு ஜீவி தன் குஞ்சுகளின், குட்டிகளின் மீது கொள்கின்ற பாசமாகும்.
மனிதப்பாசமும் இவ்வகையைச் சேர்ந்ததே!
கோழிப்பாசம் ஏன் 'அன்பு' அல்ல என்றால், கோழிக்கு 'தன்னறிவு'ம்
(தன்னைப்பற்றிய அறிவும்), இல்லை. அதற்கு 'சுய-உணர்வு'ம்
("தாம் இருக்கிறோம்!" என்ற உணர்வும்) இல்லை என்பதால் தான்
கோழியின் பாசம் அன்பாகாது ! பல சமயங்களில், சில விலங்குகள்
தங்களது குட்டிகளின் மீது காட்டுகின்ற அதே பாசத்தை வேறு ஒரு
இனத்தின் குட்டிகளின் மீதும் காட்டிடக்கூடும். அதைப்பார்த்து நாம்
வியந்து போகிறோம்! ஒரு வேளை, நம்மிடம் நம்மினத்தின் மீதே
அத்தகைய பாசம் இல்லை என்பதால் இருக்கலாம்! காகத்திற்கு
தன்னுடைய முட்டைக்கும் குயிலின் முட்டைக்கும் வித்தியாசம்
தெரியாமல் அடைகாத்து காகக்குஞ்சுகளுடன் சேர்த்து குயிலின்
குஞ்சையும் உணவு ஊட்டி வளர்க்கிறது! ஆனால், மனிதர்களிடம்
பிரித்தறியும் திறன் அமோகமாக வளர்ந்துள்ளதால் மிக சாதுர்யமாக
அடுத்த வீட்டுக் குழந்தைகளை அவர்களது வீட்டிற்கு அனுப்பிவிட்டு
நம் குழந்தைகளை வீட்டிற்குள்ளே அழைத்து வந்து உணவு
ஊட்டுவோம் !
மனிதர்கள் 'சுய- நலம்' மிக்கவர்களாக இருக்கிறார்கள்! அவர்கள்
தம் குழந்தைகளை, குடும்பத்தினரை மட்டுமே நேசிக்கிறார்கள்! அந்த
நேசத்தை அவர்கள் இன்னும் சற்று அதிகப்படுத்தி, விரிவுபடுத்தி பிற
சக மனிதர்களையும் எல்லோரையும் நேசிப்பார்களெனில் சமூகம், தேசம்,
உலகம் எல்லாம் ஆனந்தத்தில் திளைக்கும் என்று எண்ணுவது
சிறு பிள்ளைத்தனமானது! ஏனெனில், கோழிப்பாசத்தையொத்த
மனிதப்பாசத்தில் குறைவாக நேசிப்பது, கூடுதலாக நேசிப்பது
என்பதெதுவும் கிடையாது. முக்கியமாக, இயற்கையான இயல்பூக்கி
களின் வெளிப்பாடான விலங்குப்பாசத்தில் , 'சுய-நலமே' பிரதானமானதும்
இறுதியானதும் ஆகும்! இயல்பூக்கிகள் யாவும் உணர்வற்ற
மையங்களிலிருந்து தானியங்கி எந்திரம் போலச் செயல்படுபவை
என்பதால், மட்டுப்பாடு என்பது உள்-அமைந்த ஒன்றாகும்! மனிதர்கள்
தங்களது உணர்வுக்கு விழிக்காமல், உணர்வுக்கு வராமல் அவர்களால்
அவர்களது சொந்த-சுயங்களைக் கடப்பது என்பது ஒருபோதும் முடியாது!
மேலும், உணர்வற்ற-தன்மையும், அன்பும் சேர்ந்து செல்லாது !
கோழிக்கு தன்னறிவு கிடையாது. மேலும் அன்பும், அறியாமையும் சேர்ந்து
செல்லாது ! ஆகவே கோழிப்பாசம் அன்புஆகாது எனக்கண்டோம்.
அது போல மனிதனும் தன்னறிவு பெறாதவரையிலும் மனிதனது
பாசமும் அன்பாகாது !
இதன் அர்த்தம், கோழிப்பாசம் அல்லது மனிதப்பாசம் என்பது
தேவையற்றது, பயனற்றது என்று பொருளல்ல! ஏனெனில், நம்
அனைத்து உறவுகளுக்கும் , உறவுச்சிக்கல்களுக்கும் அடிப்படையாக
அமைந்திருப்பது இந்தக் கோழிப்பாசம் தான்! இது தான் அதன்
மட்டுப்பாடு! அதேபோல , உறவுகளும் தேவையானவையே,
பயனுள்ளவையே ! ஆனால், பாசமும் சரி, உறவுகளும் சரி எதுவும்
இறுதியானவையல்ல. இவை யாவும் உயிர்-வாழ்தலின் கோளத்திற்கு
உரியவை மட்டுமே. உயிர்-வாழ்தலைக் கடந்த உண்மையான
வாழ்தலுக்கு மெய்ம்மையுடனான உறவு மட்டுமே முக்கியமானது !
அதுவே இறுதியானது ! முழுமையானது !
மிகத்துல்லியமாக அன்பு, அறம், தன்னையறிதல். அர்த்தம் தேடல்,
உண்மையுணர்தல், விழிப்படைதல், உணர்வுக்கு வருதல், மெய்ம்மை
நாட்டம் இவை யாவும் உயிர்-பிழைத்திருத்தலின் கோளத்தையோ,
மனித-உடலின் இயல்பூக்கிகளின் கோளத்தையோ சேர்ந்தவையல்ல.
இவை 'உயிர்-பிழைத்தலைக்' கடந்த அசலான மனித வாழ்தலைச்
சேர்ந்தவையாகும்.
நச்சரிப்பான இயல்பூக்கிகளின் கட்டுப்பாடுகளிலிருந்து தன்னை
விடுவித்துக்கொள்கிற, உணர்வுக்கு வந்த , அல்லது உணர்வுக்கு
விழித்த தனிமனிதர்கள் மட்டுமே அசலான மனித வாழ்க்கையின்
கோளத்திற்குள் பிரவேசிப்பவர்களாக எழுகிறார்கள்! ஆம், உணர்வு
(பிரக்ஞை)எனும் கதவின் வழியாக மட்டுமே அன்பின் மாளிகைக்குள்
பிரவேசிக்க இயலும். அவ்வாறு பிரவேசிப்பவர்கள் வெகு சிலரே 1
நிபந்தனைகள் ஏதுமின்றி உணர்வின் கதவுகளை தன்னுள் அகலத்
திறந்து வைத்திருப்பவனுள் அன்பு வாசம் செய்கிறது! அம்மனிதன்
வழியே அது சமூகத்திற்குள்ளும் கசிகிறது ! ஆனால் அந்த அன்பின்
மீது அவனுக்கு யாதொரு ஆளுமையும், கட்டுப்படுத்துதலும்
கிடையாது. அன்பு எவரது கட்டுப்பாட்டிற்குள்ளும் அடங்குவதோ,
உட்படுவதோ கிடையாது. அன்பு கையாளக்கூடியதும், உடமையாக
ஆக்கிக்கொள்ளக்கூடியதுமான விஷயம் அல்ல. ஏனெனில், அது ஒரு
உணர்ச்சியோ, பொருளோ அல்ல. அன்பை வரவேற்கவோ, தங்குமாறு
செய்யவோ முடியாது !
உணர்வின் கதவுகள் அகலத்திறந்திருக்கும் போது(மட்டுமே) அன்பு
வாசம் செய்யும். உணர்வின் கதவுகளை அகலத்திறப்பது என்பது
அதேசமயத்தில் அனைத்து உலக-விஷயங்களுக்கும் கதவுகளைச்
சாத்தி மூடுதல் என்பதை உள்ளடக்கியதாகும்!
இவ்வாறு, உணர்வின் கதவுகளை அகலத்திறப்பது என்பது
உணர்வார்ந்த செயலாகும். ஆனால் அது அகந்தையின்
(தன்முனைப்பின்) உணர்வின்றி( மேற்பார்வையின்றி) செய்யப்
படவேண்டும்!
அன்பு என்பது ஒரு மகத்தான "இன்மை" யாகும். கடவுளைப்போல
அதன் 'இன்மை' அல்லது 'இல்லாமை'தான் அதை அதிமுக்கியத்துவம்
வாய்ந்ததாக ஆக்குகின்றது. "அன்பே கடவுள்", "அன்பேசிவம்" போன்ற
வாசகங்கள் வெற்று வாசகங்கள் அல்ல. அவை ஒரு மாபெரும்
உண்மையை ஆரவாரமின்றி வெகு சாதாரணமாகச் சொல்லிவிடுகின்றன!
கடவுள் தான் பிரபஞ்சப்படைப்பின் மூலமுதல் காரணம் என்பதாகவே
இருந்தாலும் கடவுளின் மூலப்பண்பு அன்பே ஆகும். அன்பின்
நிலை-மாற்றம் தான் இப்பிரபஞ்சம். அன்பு தான் உலகமாக,பிரபஞ்சமாக
மாறியுள்ளது. அன்பின் இந்த நிலை-மாற்றம் ஒரு முழுமையான
"தியாகம்" ஆகும்.
அன்பெனும் மூல மெய்ம்மை தன்னை முற்றிலுமாக இழந்து வேறொன்றாக
(உலகமாக) மாறிய பிறகு அன்பு என்பது அதனுடைய அசலான நிலையில்,
தன்மையில் இருக்க முடியாது. ஆகவேதான், அன்பு என்பது ஒரு மகத்தான
இல்லாமை என இங்கு குறிப்பிடப்படுகிறது. ஆனால், அன்பின் இல்லாமை
ஒரு பிரச்சினையோ, அல்லது இழப்போ அல்ல! மாறாக, அன்பு தான்
படைக்கப்பட்ட இப்பிரபஞ்சத்தின், மற்றும் பிரபஞ்சத்தின் பிரதான
பிரதிநிதியான மனிதனின் ஒரே இலக்கு ஆகும். ஏனெனில் அன்பு தான்
மூலம் ஆகும். பிற யாவும், சக்தி, ஆற்றல், பொருண்மை, காலம், வெளி,
நிறை . . . .போன்றவை அன்பிலிருந்து பெறுவிக்கப்பட்டவையே,
தருவிக்கப்பட்டவையே!
விஞ்ஞானிகள் பொருண்மையான சக்தி அல்லது ஆற்றலையே
பிரபஞ்சத்தின் மூலம் எனக் காண்கிறார்கள் ! பொருள்முதல் வாதிகள்
பிரபஞ்சத்தின் ஒருமையானது அதனுடைய 'பொருண்மையில்'
(சடத்தன்மையில்) அடங்கியுள்ளதெனக் காண்கின்றனர். இறை-
நம்பிக்கையாளர்கள் அனைத்தின் மூலகாரணம் 'கடவுள்' என்று
ஒற்றைச் சொல்லில் அடக்கிவிடுகின்றனர். அவர்களிடம் விளக்கம்
இல்லை. விஞ்ஞானிகளிடம் நெடிய விளக்கம் உள்ளது. ஆனால்,
அவர்களது விளக்கங்கள் யாவும் முடிவில் "எல்லாம் அணுத்துகள்களின்
விளையாட்டே !", "சடப்பொருளே பிரம்மம்" என்று சுருக்கி விடுகின்றனர்!
இவர்களது "சுருக்கல்-வாதம்" பரிணாமப்பார்வைக்கு முரணானதும்,
பரிணாமத்தைக் கொச்சைப்படுத்துவதுமாகும்!
மூலமெய்ம்மையான அன்பிற்கும் மனிதப்பாசத்திற்கும் ஏதேனும்
ஒற்றுமை, தொடர்பு, பொருத்தப்பாடு உள்ளதா? அறவே இல்லை என்று
சொல்லிவிட முடியாது. ஏனெனில், மனிதன் தன்னை உணராதிருந்தாலும்
அவன் உணர்வைக்கொண்டுள்ளவனாக இருக்கிறான். உணர்வு தான்
அன்பின் வித்து. உணர்வைக்கொண்டுள்ளவன் என்கிற நிலையிலிருந்து
உணர்வாக மேலெழுவது ஒவ்வொரு மனிதனுக்குமான சவால் ஆகும் !
தான் ஒரு உடலோ, மனமோ அல்ல; தான் ஒரு உணர்வே என்கிற
உண்மைக்கு ஒவ்வொரு மனிதனும் விழித்தாக வேண்டும். பிறகு
உணர்வுப் பரிணாமத்தின் உச்சத்தை அவன் அடையும் போது பூரண
அன்பாக மலர்வான்! அதுவரையிலும் அவனது பாசம் அன்பாகாது.
இன்னும் அது கோழிப்பாசத்தை விட மேலானதோ, இறுதியானதோ
அல்ல !
நதியின் இலக்கு, முடிவு, முழுமை, அர்த்தம், நிறைவு . . . .யாவும் அது
சமுத்திரத்துடன் சங்கமிப்பதில் மட்டுமே அடங்கியுள்ளது. நதிக்கும்,
சமுத்திரத்திற்கும் உள்ள அதே ஒற்றுமையும், தொடர்பும், பொருத்தப்
பாடும், வித்தியாசமும் தான் மனிதப்பாசத்திற்கும், ஆழமான அன்பிற்கும்
ஆனதுமாகும்
மனித உணர்வு என்பது ஒரு நதியைப் போன்றது. நதியானது
இடைவழிகளில் எதனாலும் தடுக்கப்படவில்லை, தேக்கப்படவில்லை
என்றால் அது விரைவாக சமுத்திரத்தைச் சென்றடைவது உறுதி.
உணர்வும் அவ்வாறே இடைவழிகளில் யாதொரு பொருளைக்கொண்டும்,
உறவைக்கொண்டும், கற்பனை அல்லது கோட்பாட்டைக் கொண்டும்
கட்டப்படவில்லை; எதனுடனும் பிணைக்கப்படவில்லை எனில் மனித
உணர்வானது "முழு-உணர்வு" எனும் பேருணர்வு நிலையைச் சென்றடைந்து
தனது முழுமையைத் தழுவிக்கொள்ளும் !
உறவுகள், அனைத்து உறவுகளும் மட்டுப்பாடானவையே, மேலோட்ட
மானவையே. எந்த உறவும் இறுதியானதல்ல. ஆகவே எந்த உறவும் ஒரு
திறந்த வாசலாக அமையவேண்டுமேதவிர மூடிய அறையாக,
கல்லறையாக அமைதல் கூடாது ! உறவுகள் யாவும் மிகத் தற்காலிகமான
மனிதவாழ்வில் இடம்பெறுகிற மிகத் தற்காலிகமான பிணைப்புக்களே !
அசலான வாழ்விற்கான ஒரு அடிப்படையாக அமைந்துள்ள
உயிர்-வாழ்தலின் கோளத்திற்கு மட்டுமே உரியவை உறவுகள்! ஆகவே
உறவுகள் அனைத்தும் அசலான வாழ்க்கைக்கு உதவுகிற , சேவை புரிகிற
வகையில் அமைதல் அவசியம். மேலும் மனிதஜீவிகளும் நிரந்தரமான
வர்களல்ல. மாறாக, அவர்களின் "மனிதம்" அல்லது "சாரம்" மட்டுமே
நிரந்தரமானது. ஒவ்வொரு மனிதனும் தன் மனிதத்தை, சாரத்தைக்
கண்டடைந்தாக வேண்டும்! எந்த மனிதனும் சாரத்துடன் பிறப்பதில்லை!
மாறாக, சாரத்திற்கான உட்பொதிவை (உள்ளுறையாற்றலை) க்
கொண்டவனாக மட்டுமே பிறக்கிறான். ஏனெனில், ஒரு மனிதன்
பிறக்கும் போதே பூரணனாக, முழுமையானவனாகப் பிறக்கிறானெனில்
அவன் எதைக்கொண்டு தன் முழுமையை முழுமைப்படுத்துவான்?
அது முழுமைக்கு முற்றிலும் முரணானது ! ஆகவே சாத்தியமற்றது!
உறவுகளைக் கொண்டாடுவதற்கானதல்ல "வாழ்க்கை" ! வாழ்க்கையைக்
கொண்டாடுவதற்காக அமைந்த கருவிகளும், ஏற்பாடுகளும் தான்
உறவுகளும், இப்பிரபஞ்சம் உள்பட பிறவனைத்தும் ! ஆனால்,
வாழ்க்கையைக் கொண்டாடுவது என்றால் என்ன ? வழக்கமாக நாம்
உயிர்-பிழைத்தலையும் அதற்காக மேற்கொள்ளப்படும் விவகாரங்களும்
தான் 'வாழ்க்கை' என வாழ்ந்து செல்கிறோம். அதில், 'அன்புள்ளம்'
கொண்ட நாம் நம் குழந்தைகளுக்கு எத்தகைய வாழ்க்கையைக்
கற்பிக்கிறோம் ? அவர்களை எத்தகைய வாழ்க்கைக்குத் தயார்
செய்கிறோம்? 'வாழ்க்கை' என்றால் என்னவென்று அறியாமல் எந்த
வாழ்க்கையை நாம் வாழ்வது? கொண்டாடுவது?
வாழ்க்கையின் மேற்புற விஷயங்களனைத்தையும் கடந்து
வாழ்க்கையின் "உட்-பொருளை" உணர்ந்தறிவது, வாழ்க்கையின்
உண்மையான குறிக்கோளையும், இலக்கையும் உணர்ந்தடைவது;
வாழ்க்கையை முழுமையாக வெளிப்படுத்துவது என்பது தான்
உண்மையிலேயே வாழ்க்கையைக் கொண்டாடுவது என்பதாகும்!
வாழ்க்கையின் மேற்புறப் பொருட்களை, விஷயங்களை, அம்சங்களை
நாம் நம் மேற் புறப் புலன்களின் வாயிலாக எளிதாகப் புரிந்து கொள்ள
முடியும். ஆனால், வாழ்க்கையின் "உட்-பொருளை"ப் புரிந்து கொள்ள
வேண்டுமெனில், நாம் உணர்வில் ஆழப்படவேண்டும். அதற்கு நாம்
வாழ்க்கையை மிகத் தீவிரமாகவும், முழுமையாகவும் நேசிக்க வேண்டும்!
எவன் ஒருவன், நிபந்தனைகள் ஏதுமின்றி வாழ்க்கைக்குத் தன்னை
முழுமையாக (கொஞ்சமும் மிச்சம் மீதம் ஒதுக்கி வைக்காமல்)
கொடுக்கிறானோ, அவன் மட்டுமே அன்பிற்குப் பாத்திரனாகிறான்!
பகுதிகளின்-உலகின் பகுதியாக
நீடிப்பதோ வாழ்க்கை !?
பகுதிகள் இடைவெளிகளைக்
கொண்டாடுகின்றன!
இடைவெளிகள் உறவுகளை
உருவாக்குகின்றன!
உறவுகள் இடை வெளிகளைப்
பராமரிக்கின்றன!
தன் இடம் அறிந்து தன்னிலை
நிற்றலே நேர்-வழி !
ஒன்று கூட்டுவதல்ல ஒன்றாதலே
ஒருமை, அதுவே முழுமை !
பெரு-வெடிப்பில் சிதறிய ஒருமையை
மீட்டெடுத்தலே அன்பு !
*****
மா.கணேசன் /22.03.2016.
******