
பொதுவாக நம்மைப்பற்றிய நெருடலான ஒரு அடிப்படை உண்மையைச்
சொல்ல வேண்டுமென்றால் , நாமனைவரும் "ஆழம் குறைந்தவர்கள் "
அதாவது "மேலோட்டமானவர்கள்" என்பதுதான் அது ! ஏனென்றால்
நம்முடைய சிந்தனை மேலோட்டமானது! நம்முடைய பார்வை மேலோட்ட
மானது ! நம்முடைய அன்பு மேலோட்டமானது ! இவ்வாறே நம்முடைய
அக்கறையும், பொறுப்பும் மேலோட்டமானவையே ! மொத்தத்தில் நமது
எண்ணம்,சொல், செயல், வாழ்க்கை யாவும் மேலோட்டமானவையே !
இவையெல்லாவற்றுக்கும் அடிப்படையான அம்சங்களான கவனமும்,
உணர்வும், விழிப்பும் மேலோட்டமானவையே !
ஏன், நமது ரசனையும்,கலை இலக்கிய ஈடுபாடுகளும், படைப்புகளும்
மேலோட்டமானவையே ! நமது நட்பும், உறவும் மேலோட்டமானவையே!
ஏனெனில், நாம் ஆழங்குறைந்த 'தட்டையான' ஜீவிகள் ! நமது தட்டைத்
தனத்தால் நாம் காண்கின்ற, ஈடுபடுகின்ற அனைத்தையும் தட்டையாக
ஆக்கிவிடுவோம் ! நமது மதிப்பிடலும், நாம் கொண்டாடுகின்ற மதிப்பு
களும் தட்டையானவையே ! ஏனெனில், நாம் மனிதர்களையும்,
எல்லாவற்றையும் தட்டையிலும் தட்டையான மெல்லிய காகிதப்
பணத்தைக்கொண்டே அளக்கிறோம், மதிப்பிடுகிறோம் ! எல்லாவற்றையும்
பணத்தைக்கொண்டே வாங்கிவிடலாம் என நம்புகிறோம் ! ஆகவே,
விலைமதிப்பில்லா பிறவனைத்தையும் நாம் மிக எளிதாக எடுத்துக்
கொள்கிறோம், அல்லது, அவ்வம்சங்களை அப்படியே அலட்சியப்படுத்தி
ஓரங்கட்டி விடுகிறோம் !
நாம் ஒரு அற்புதமான ஓவியத்தைக் காண்கிறோம், அல்லது ஒரு இசையைக்
கேட்கிறோம் அல்லது ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு பற்றிக் கேள்விப்
படுகிறோம். புத்தர், இயேசு, லாவோ த்சூ போன்ற ஞானிகளின்உபதேசங்களை
நூல்களின் வாயிலாக வாசிக்கிறோம். இவை யாவும் அப்படியே மேற்புறத்
திலேயே தயார்-நிலையில் தோன்றியவையல்ல! அவை ஒவ்வொன்றும்
மனித உள்ளங்களின் வெவ்வேறு ஆழங்களிலிருந்து உருவாகி மேற் பரப்பிற்கு
கொண்டுவரப்பட்டவையாகும் ! முறையே அவற்றின் ஆழங்களுக்கேற்ப
இணையாக நம்முள் நாம் ஆழாமல் ஒருபோதும் ஒரு மேலோட்டமான
வாசிப்பின், பார்வையின், சிந்தனையின் வழியாகப் புரிந்துகொள்ளவோ,
அனுபவம் கொள்ளவோ முடியாது !
முத்துக்கள் கடற்கரை நெடுகிலும்
மணற்பரப்பின் மீது எங்கு பார்த்தாலும்
இறைந்து கிடப்பதில்லை !
நம்மால் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு போன்றதொரு கோட்பாட்டை
அல்லது, பீத்தோவானின் இசைக்கோவை போன்றதொரு இசையை ஏன்
உருவாக்கமுடிவதில்லை என்பது ஒருபுறமிருக்கட்டும்; ஏன் அவற்றை நம்மால்
முழுமையாகப் புரிந்துகொள்ளக்கூட முடிவதில்லை என்பது தான் கேள்வி !
ஏனென்றால், நம்மைப்போலவே நமது ஆர்வமும், ஆச்சரிய உணர்வும்
மேலோட்டமானவை !
நாம் இயற்கையின் மேற்புற அழகை மட்டுமே ரசிக்கிறோம். ஆனால்,
ஐன்ஸ்டீனின் ஆர்வமும்,ஆச்சரிய உணர்வும் ஆழமிக்கவை; ஆகவே அவரால்
இயற்கையின் மேற்புறத் தோற்றத்திற்கும், நிகழ்வுகளுக்கும் காரணமான,
அடியோட்டமான விதிகளை தன்னுள் ஆழமாகச் சென்று அவற்றை அறிந்து
அவை பற்றிய கோட்பாடுகளை உருவாக்கி அளிக்கிறார். அவருடைய
ஆர்வமும், ஆச்சரியமும், இயற்கைக்கு, இருப்புக்கு அவர் தரும் பதிலளிப்புகளும்
ஆழமானவை !
நாமும் சில வேளைகளில், சில விஷயங்களில் ஆழமாகச்செல்வதுண்டு !
அதாவது, நாம் நிலத்தை அகழ்ந்து சுரங்கம் தோண்டி பலவகை உலோகங்கள்,
நிலக்கரி, வைரம், தங்கம், எண்ணெய் போன்றவற்றை மேலே கொண்டு வந்து
நமது நுகர்வு மற்றும் பயன்பாட்டுத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறோம்.
அல்லது, கடலின் ஆழத்திற்குச்சென்று முத்துச்சிப்பிகளை சேகரித்து வருகிறோம்.
இவை யாவும் சார்புரீதியில் சுலபமான, எளிதில் சாத்தியமான காரியங்களே !
ஆனால், எவன் ஒருவன் தனது மனதின், உள்ளத்தின் ஆழங்களுக்கே
செல்கிறானோ அவன் பிரபஞ்சப்படைப்பின் ஆழங்களுக்கே செல்கிறவனாக
உயர் பேரறிவை, அரிய ஞானத்தை, பிரபஞ்சப் பேருண்மைகளை
கண்டடைபவனாக நம் அனைவரிலும் மேலானவனாக உயர்வடைகிறான்.
ஒருவன் தன் உள்ளத்தினுள் எவ்வளவு ஆழம் செல்கிறானோ அதற்கிணையான
தனது உயரங்களை அடைபவனாகிறான்.
உண்மையில் நாம் காணும் கனவுகளும்கூட மேலோட்டமானவையே! சில
சமயங்களில் அடிமனத்தின் ஆழத்திலிருந்து சில செய்திகளை, சமிக்ஞைகளை
கனவுகள் மேலே கொண்டுவருவதுண்டு. ஆனால், அவ்வகைக்கனவுகள்
மிக அரிதானவை! ஆனால், அக்கனவுகளை நாம் காண்பதில்லை -அவை
தாமே ஏற்படுகின்றன,வெளிப்படுகின்றன ! நாம் கனவுகள் காண்பதில்லை;
அப்படியே கண்டாலும் அவை மேலோட்டமானவை. ஏனென்றால், நமது
விழிப்பும் மேலோட்டமானது. விழிப்பில் மிகுந்தவனே அர்த்தமுள்ள கனவுகளைக்
காண்பவனாகிறான்! தென் அமெரிக்காவின் 'மாயன்', மற்றும் ' இனுயிட்'
போன்ற இனத்தில், "ஷாமன்" எனப்படும் 'மருத்துவன்' அல்லது
'குணப்படுத்துபவன்' ஆகிய விசேட- ஊடகமாக அமைந்த மனிதர்களுக்குத்தான்
கனவுகள் தோன்றும். அவர்களின் வழிகாட்டுதல்கள் அல்லது ஆலோசனைகளின்
படியே அந்த இனத்தின் பிற மனிதர்கள் நடந்து கொள்வர், காரியமாற்றுவர்.
நமது கனவுகளைப்போலவே நமது நனவும் மேலோட்டமானதே ! எவ்வாறெனில்,
நமது பகற்பொழுது முழுவதும் அன்றாடத்திற்குச் சேவை செய்வதிலேயேமுடிந்து
போகிறது ! அதாவது, அடிப்படைத்தேவைகளை அடைவதைத்தானே நாம்
வாழ்க்கை என வாழ்ந்து செல்கிறோம். 'உயிர்-வாழ்தல்', அல்லது சற்று மேலே
சென்றால், 'சௌகரியமாக உயிர்-வாழ்தல்' என்பதற்குமேல் வேறு என்ன பிரத்யேக
இலட்சியம், இலக்கு நமக்கு உள்ளது ? "உண்பதற்காக நாம் வாழவில்லை;
வாழ்வதற்காகத்தான் நாம் உண்கிறோம்!" என்பதாக அழகிய மேற்கோள்
பலகைகள் சொல்கின்றன. ஆனால், 'வாழ்தல்', 'வாழ்க்கை' என்றால் தான் என்ன
என்று எப்போதாவது நாம் சிந்தித்திருக்கிறோமா?
அடுத்து, 'அன்பு' பற்றியும் அழகழகான வாசகப்பலகைகள் சமூக வலைத்
தளங்களின் பக்கங்களை அலங்கரிக்கின்றன! ஆனால், நம் குழந்தைகளை
நாம் நேசிக்கிறோம், அன்பு செலுத்துகிறோம் என்பது எவ்வகையில் பருந்திட
மிருந்தும், நாய் பூனைகளிடமிருந்தும் போராட்டித் தன் குஞ்சுகளைக் காப்பாற்றும்
'தன்னறிவற்ற' கோழியின் பாசத்தைவிட மேலானது? கோழிப்பாசத்தையும்,
மனிதப்(பெற்றோர்ப்) பாசத்தையும் ஒப்பிடும் வழியில் நாம் கோழியைக்
கொச்சைப்படுத்துகிறோமா அல்லது, நம்மை நாம் கொச்சைப்படுத்துகிறோமா?
இருவரையும் நாம் கொச்சைப்படுத்தவில்லை! மனிதன் "தன்னறிவை" எட்டாத
வரையிலும் இருவரது பாசமும் ஒன்று தான்!
அதாவது, கோழிப்பாசமும் மனிதப்பாசமும் "இயல்பூக்கி" வகையைச்சேர்ந்ததே!
ஆகவே, இவ்விரண்டு வகைப்பாசமும் அன்பு அல்ல ! ஏனென்றால், அன்பு என்பது
ஒரு இயல்பூக்கி அல்ல. பாசம் என்பது உணர்வினால் உயிரூட்டப்படும் போதுதான்
அது அன்பாக மலரும்!
இந்த உலகம் 'அன்புள்ளம்' கொண்ட பெற்றோர்களால் நிரம்பி வழிகிறது ! ஆனால்,
உலகில் வன்முறை, குரூரம், கொலை, களவு, கற்பழிப்பு, போர், தீவிரவாதம்; போட்டி,
பொறாமை, ஏய்ப்பு, சுரண்டல், . . . .எல்லாம் தலைவிரித்தாடுகின்றன! இவை எவ்வாறு
சாத்தியம்? எல்லாப்பெற்றோர்களும் உண்மையிலேயே அன்புள்ளம் கொண்ட
வர்களாக இருந்தால் உலகில் வன்முறைகளுக்கு இடமிருக்குமா ?அல்லது எல்லாப்
பெற்றோர்களும் சுய-நலத்துடன் தம்தம் குழந்தைகளை மட்டுமே நேசிக்கிறார்களா?
அப்படியானால், சுய- நலமும், அன்பும் எவ்வாறு சேர்ந்து செல்லஇயலும்? எல்லாப்
பெற்றோர்களும் பாசத்தை அல்லது அன்பைக்கொட்டி தங்கள் குழந்தைகளை
வளர்க்கிறார்கள்! ஆனால், பெற்றோர்கள் பாவம், முதியோர் இல்லங்களிலும்,
அனாதைகளைப்போலத் தனிமையிலும் வாடுகின்றனர்! அப்படியானால்,
பெற்றோர்களின் அன்பு 'ஒரு-வழிப்பாதை' போன்றதா ? பிள்ளைகள் தங்களது
பெற்றோர்களைவிட தம்தம் மனவிகளையும்,குழந்தைகளையும் தான் அதிகம்
நேசிக்கிறார்களா? அப்படியானால், இவ்வழியிலும் நம்முடைய மனிதப்பாசம்
என்பது அன்பாகாது! மாறாக, 'பாசம்' என்பது பாலுணர்வைப்போலவே ஒரு
இயல்பூக்கி தான் ! இன்னும் சொல்லப்போனால் , பாலுணர்வு எனும் இயல்பூக்கி
யின் நீட்சிதான் பாசம் எனக்காணலாம்! ஆக, பாசம் அன்பாகாது; ஏனெனில்,
அன்பு என்பது இன்னுமொரு இயல்பூக்கி அல்ல! நம்முடைய அன்பு அன்பே அல்ல!
அது வெறும் பாசம் மட்டுமே. பாசம் என்பது மிகவும் மட்டுப்பாடானது!
எவ்வாறெனில், மனித உறவுகளை எடுத்துக்கொண்டால், உறவு என்பது முதலில்
ஒருவர் தன்னைப்பாதுகாத்துக்கொள்ளும் "சுய-பாதுகாப்பு" எனும் இயல்பூக்கி
யினால் தொடங்கிவைக்கப்படுகிறது. இதை 'சுய-பாசம்' எனலாம்! தன்னைப்
பாதுகத்துக்கொள்வதன் நீட்சியாக ஒருவரிடமிருந்து அவரது பிள்ளைகள் மற்றும்
இரத்த -சொந்தங்கள் வரை விரிவடைகிறது. இதை 'குடும்ப-பாசம்' எனலாம்.
அதற்கு மேல், அது 'தன்சாதி' , 'தன் இனம்' என்கிற 'இன-பாச'த்தின் வட்டமாக
அமைகிறது! அதற்கு மேல், உறவு வட்டமோ, பாச வளையமோ ஒரு போதும்
விரிவடையாது. முற்றுப்புள்ளி.
இது தான் பாசத்தின் எல்லை, மட்டுப்பாடு ! எவ்விடத்தில் நம்முடைய உறவு
அல்லது பாசவட்டம் முடிவடைகிறதோ அவ்விடத்தில் அடுத்தவருடைய பாச
வட்டமும் முடிவடைகிறது! ஒரு போதும் இரண்டு வட்டங்களும் (மோதிக்கொள்ளுமே
தவிர) ஒன்று கலவாது! இதுதான் பாசத்தின், இயல்பூக்கியின் மட்டுப்பாடு. இது
அன்பு அல்ல. இப்போது புரியும்- சமூகத்தில் போட்டி, பொறாமை, வன்முறை
போன்றவை மலிந்திருப்பதன் காரணம். சக-மனிதனை நேசிப்பதற்கு அன்பு
வேண்டும்; பாசம் போதாது!
மனிதர்களைப்பொறுத்தவரை பாசவட்டம் என்பதும் நிலையானதல்ல! எந்த
நேரத்தில் பாசவட்டம் சுருங்கி சுய-நலப்புள்ளியாக மாறிடும் என்று சொல்ல
முடியாது! அச்சுய-நலப் புள்ளியில் ஒருவர் மட்டுமே வாழ முடியும்! ஒரு சிறு
பிரச்சினை, முரண்பாடு, சந்தேகம், தவறான புரிதல் போதும் சகோதரர்கள்
ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்துக்கொள்வர்! எல்லா உறவுகளும் நிலையற்றவை!
சுய-நலம்,அல்லது சொந்த-நலம் தான், பிறர் நலம் அல்லது பொது நலம் யாவற்றுக்கும்
அடிப்படையாகும். பல வேளைகளில், பிறர் அல்லதுபொது நலம் பேணாமல்
சொந்த நலம் சாத்தியமாகாது! ஆகவே பொது நலம்போன்ற ஒன்று, ஒரு சாயல்,
சமூகத்தில் எப்போதும் இருக்கவே செய்கிறது. எல்லாம் "சுயநல-மயம்!"
இரத்த உறவுகள் உள்பட நட்பும், அனைத்து உறவுகளும் சார்ந்திருத்தல்,
கொடுக்கல்-வாங்கல் பரிவர்த்தனை,தேவைகளின் நிமித்தம் ஆகியவற்றையே
சார்ந்திருக்கின்றன. ஆகவே உறவுகளில் அன்பை ஊற்றி ஆற்றலாம் என்று
எண்ணுவது அறிவீனமாகும். அன்பிற்கும், உறவிற்கும் எவ்வித சம்பந்தமும்
கிடையாது! ஏனெனில், அன்பிற்கு உறவுகளோ, சொந்த-பந்தங்களோ கிடையாது!
'உறவு' அல்ல, "இசைவு" தான் அன்பின் வீடு! அது, அது, அதனதன் இடத்தில்
இருப்பதுதான் இசைவு ! நம் வீட்டை, இருப்பிடத்தை கண்டடையும் வரை
அன்பைப் பற்றிப் பேசுவது அப்பட்டமான போலித்தனம்!
விஷயம் சிறியதோ,பெரியதோ எல்லாவகையிலும், எல்லாவிஷயத்திலும்
நாம் மேலோட்டமானவர்களே! தலைக்கு மேலாக வைத்து நாம் கொண்டாடுகிற
விஷயங்களாகட்டும், நமது விருப்பங்களாகட்டும், நாம் விசுவாசம் காட்டுகிற
விஷயங்களாகட்டும், எல்லாமே மேலோட்டமானவையே! நாம் தேடுகிற
அனுபவங்களாகட்டும், நாம் கற்றுக்கொள்கிற விஷயங்களாகட்டும், எல்லாம்
மேலோட்டமானவையே
"உண்மையில் நாம் யார்?" என்பது நமக்குத்தெரியாது; இந்நிலையில், யாரோ
நம் மீது சுமத்திய அடையாளங்களை நாம் சுமந்துகொண்டிருக்கிறோம்
என்பதற்கு மேல் வேறு என்ன சாட்சியம் வேண்டும், நாம் மேலோட்டமானவர்கள்
தான் என்பதற்கு ?
நாம் மேலோட்டமானவர்கள் என்பது நம்மைப் பற்றிய அடாத விமர்சனம் அல்ல.
அது தான் நம்மைப்பற்றிய நிதர்சனம் ஆகும் ! பிறரால் நம் மீது சுமத்தப்பட்ட
அடையாளங்கள் ஒருபுறமிருக்க, போதாக்குறைக்கு நமக்கு நாமே சில
அடையாளங்களைத் தேடிக்கொள்கிறோம்! நாம் செய்கிற தொழில்களுடனும்
படிப்பு , பட்டம் , பொருளாதார நிலைகள், அந்தஸ்து நிலைகள் போன்றவை
களுடனும் நம்மைப்பிணைத்துக் கொள்கிறோம்! நாம் உயரமோ, குள்ளமோ,
கருப்போ, சிகப்போ, மாநிறமோ; நமது படிப்பு சிறியதோ, பெரியதோ; நமது
உத்தியோகம், வருமானம் சிறியதோ, பெரியதோ இவை போன்ற எண்ணற்ற
பல காரணிகள் எதுவும் நமது உள்ளார்ந்த மனிதத்தை தொடுவதும் இல்லை,
வெளிப்படுத்துவதும் இல்லை! இவை போன்றதே சாதி, மத, இன, மொழி,
மாநில, தேச அடையாளங்களும் ! இவை நம்மீது ஒட்டப்பட்ட ஒட்டுச்சீட்டு
போன்றவையே! இவை மனித ஜீவிகளுக்கான உண்மையான அடையாளங்கள்
அல்ல !இவை விபத்து போன்ற வரலாற்றுச் சூழ்நிலைகளில் நம்மீது சுமத்தப்
பட்டவை, அல்லது திணிக்கப்பட்டவையாகும். பொய்யும் செயற்கையுமான
அடையாளங்களில், உயர்ந்த அடையாளம், தாழ்ந்த அடையாளம் என்ற
பேச்சுக்கே இடமில்லை! மனிதர்களில் உயர்ந்தவனும் இல்லை, தாழ்ந்தவனும்
இல்லை; ஒரே மனித -சாதியில், உயர் சாதியும் இல்லை, தாழ்ந்த சாதியும்
இல்லை! மாறாக, தன் அசலான தன்மையை , தனது சாரமான உண்மையை
தன்னுள் ஆழ்ந்து சென்று கண்டடையாதவன் மனிதனே அல்ல!
உண்மையில் மனித சமுதாயத்தைப் பீடித்துள்ள மட்டுப்பாடான,
மேலோட்டமான விஷயங்கள் கணக்கற்றவை; அவற்றையெல்லாம் ஒன்று
விடாமல் இங்கு திரட்டிப் பட்டியலிட்டுத் தீர்த்துவிட முடியாது! இவ்வெல்லா
மட்டுப்பாடான, மேலோட்டமான விஷயங்கள் அனைத்தும் மட்டுப்பாடான
மேலோட்டமான மனித மனங்களின் கண்டுபிடிப்புக்களே, உருவாக்கங்களே!
இவ்வுருவாக்கங்கள் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக மட்டுப்பாடான
மேலோட்டமான மனங்களையே, மனிதர்களையே உருவாக்கி வருகின்றன!
ஆனால், சிந்திக்கின்ற, உணர்வுள்ள, புத்திசுவாதீனமுள்ள மனிதர்கள்
இத்தகைய நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுவதை சகிக்க மாட்டார்கள்!
சந்தேகத்திற்கிடமில்லாமல், மரபு , கலாச்சாரம் , பண்பாடு , நாகரிகம் ,
பாரம்பரியம் யாவும் மட்டுப்பாடானவையே, மேலோட்டமானவையே! இவை
எதுவும் எவ்வகையிலும் இறுதியானவையல்ல !
வாழ்க்கையை வாழ்வதற்கு, ஆழமாகப் புரிந்து கொள்வதற்கு என்ன மரபு ,
பாரம்பரியம் உள்ளது? புத்தர், இயேசு போன்ற தனிமனிதர்கள் எந்த மரபை,
பாரம்பரியத்தைப் பின் பற்றினார்கள், அல்லது விட்டுச் சென்றார்கள் ?
புத்தரும் , இயேசுவும் தங்கள் காலத்திற்கு முன்பிருந்து தொடர்ந்துவந்த
அனைத்து மரபுகளையும் , பாரம்பரியங்களையும் உடைத்தெறிந்ததனால்
தானே அவர்களை மையமாகக் கொண்டு அவர்களின் பெயர்களிலேயே
புதிய மதங்களை நாம் ஏற்படுத்தியுள்ளோம்?! இதிலுள்ள பெரியதொரு
முரண்பாடு என்னவெனில், அவர்கள் உண்மையில் புதிய மதங்கள் எதையும்
தோற்றுவிக்க எண்ணவும் இல்லை! மாறாக, அவர்கள் வாழ்க்கையை
அணுகுவதற்கான சரியான முறையை, வழியைத்தான் உபதேசித்தனர்!
ஆனால், நாம் அவர்கள் காட்டிய புதிய வழியை -- புதியதொரு வழிபாடாக,
சடங்காக , மரபாக, முடிவில் மதமாகவே மாற்றிவிட்டுள்ளோம் ! இதில்,
ஆச்சரியப்பட எதுவுமில்லை, ஏனென்றால், மனிதர்களின் மேலோட்டமான
மனங்கள் எல்லாவற்றையும் தமக்கு ஏற்றவாறு சுருக்கி, குறைத்து,
மலினப்படுத்தி சுலபமாக்கிவிடும் !
ஆனால், நம்மைப்பற்றிய ஆறுதலான ஒரு உண்மை என்னவெனில், நாம்
ஒவ்வொருவரும் ஆழமிக்கவரே, உயரமானவரே! நமது ஆழத்தையும்,
உயரத்தையும் எவரும் களவாடிச்செல்லவோ, மறுக்கவோ இயலாது! ஆனால்,
நம் ஆழம் இன்னும் நம்மால் இறங்கிப்பார்க்கப்படாமல் உள்ளது. ஆகவே,
நம்முடைய உயரம் நமக்கு எட்டாமலேயே போய்விடும் போலுள்ளது! ஆனால்,
இந்த ஆறுதலான உண்மை "ஆறுதல் பரிசு" போலவே நமக்குப்பெரிதாய்ப்
பயன் தராது !
ஆனால், வாழ்க்கையை நம்முடைய முழு-பொறுப்பில் எடுத்துக்கொள்ளும்
புத்தி-சுவாதீனமிக்க , துணிவார்ந்த தொரு தீர்மானத்தை நாம் ஒவ்வொருவரும்
மேற்கொள்ளும் பட்சத்தில், மேலோட்டமானவை அனைத்தையும் நாம் நம்
வாழ்க்கையிலிருந்து அகற்றிவிடும் பட்சத்தில் முதன்முதலாக அசலான
மனித வாழ்க்கையினுள் நாம் பிரவேசிப்போம்!
- மா.கணேசன்/ 20.03.2016
No comments:
Post a Comment