Wednesday, 9 March 2016

அனுபவம், படைப்பு, வெளிப்பாடு

 அனுபவம், படைப்பு, வெளிப்பாடு

          *
     நதி செல்லும் வழி நெடுகிலும் அதற்கு
     பற்பல அனுபவங்கள் - அவற்றில்
     எதுவொன்றிலும் சிக்கித் தங்கிடாத
     நதியே சமுத்திரமடையும் !
     வற்றாத   சமுத்திரமே நதியின் முற்றான
     பாதுகாப்பும் இறுதிப் புகலிடமும்!
     இடைவழியிடங்களோ,  முடிவில்லா
     நெடும்பயணமோ அல்ல முக்கியம்!
     வெள்ளப்பெருக்கெடுத்திடும் வேகமே
     வெற்றியின் ரகசியம்!
     சமுத்திரச் சங்கமமே நதியை
     முழுமைப்படுத்திடும், நிரந்திர
     நிறைவு தந்திடும்  இணையில்லா
     இறுதி அனுபவம்.
          *

         அனுபவம் இருக்கிறது, ஏனெனில் மனிதன் இருக்கிறான். ஆனால்
அவனிடம் புரிதல் இல்லை. அதனால் மனிதன் மனிதனாக இல்லை!
வேண்டியது மனிதன் மனிதனாக ஆவதே; இதுவே அவன் செய்ய
வேண்டிய படைப்பு.
          இங்கு ஏராளமான கவிஞர்கள், கதைஞர்கள், படைப்பாளிகள்
இருக்கின்றனர். ஆனால் மனிதர்கள் இல்லை.ஏனெனில் "மனிதன்"
இருக்க வேண்டிய இடத்தை கவிஞனும், கதைஞனும், வினைஞனும்,
நிபுணனும், படைப்பாளி என்பவனும் பிடித்துக்கொண்டுவிட்டான்.
உண்மையில் அனுபவத்தைப் படைப்பாக மாற்றவேண்டிய சவால்
என்று ஏதும் உள்ளதா? அவரவரும் தமது விருப்பத்தின் மற்றும்
தேர்வின் வழியில் வழி தவறிச்செல்வதை நியாயப்படுத்தவில்லை
யெனில், "இல்லை" என்பது தான் இக்கேள்விக்கான சரியான
பதிலாகும். ஆக, அனுபவத்தை 'படைப்பாக' மாற்ற வேண்டிய சவால்
என்று எதுவும் இல்லை எனும் பட்சத்தில் 'படைப்பாளி' என்பவனும்
இல்லை!   ஆனால், எதார்த்தத்தில் (எதார்த்தம் என்பது இறுதியானது
அல்ல என்பதையும் நினைவில் கொள்வோமாக! ) ' படைப்புகள்'
என்பவைகளும் இருக்கின்றன!  'படைப்பாளிகள்' என்போரும்
இருக்கின்றனர்!
         உண்மையில் எவ்வொரு படைப்பும் ஒரு " முட்டுச் சந்து" போன்றதே.
எவ்வளவுக்கெவ்வளவு அதிகமான 'வாசகர்களை' ஒரு படைப்பு
ஈர்க்கிறதோ, அது பற்றி அதிகம் பேசப்படுகிறதோ - அதாவது
எவ்வளவுக்கெவ்வளவு அதிகமான வாசகர்கள் அந்த முட்டுச்
சந்தில் போய் முட்டிக்கொண்டுள்ளார்கள் என்பதைக் கொண்டே
ஒரு படைப்பின் 'வெற்றி' என்பது  சாதாரணமாக  தீர்மானிக்கப்
படுவதாயுள்ளது! இது வாசகர்களின் தனிப்பிரச்சினை. ஏனெனில்,
ஒரு படைப்பு வாசகர்களை எட்டுவதற்கு முன்பாகவே தானே
உருவாக்கிய முட்டுச்சந்தில் போய் முட்டிக்கொண்டிருப்பவன் தான்
'படைப்பாளி' என்பவன். ஆம், ஒரு படைப்பாளி என்பவன் தனக்குத்
தானே முட்டுச்சந்தாகவும், முட்டுக்கட்டையாகவும் விளங்குகிறான்,
அவனது சொந்த விருப்பம் மற்றும் தேர்வினால்.
        ஆனால், " சரியான வழி" என்பது எப்போதும் திறந்தேயுள்ளது.
அதாவது, நமது அனுபவத்தை படைப்பாக மாற்றுவதற்கு மேலாக
வேறொரு சவால் உள்ளது. அது என்னவெனில், அனுபவத்தை
பிரதிபலித்துப்பார்த்து புரிந்து கொள்வது என்பதே! இந்தச் செயல்
முறையின் வழியேதான் "வாழ்தல்" என்பது நிகழ்த்தப்படுகிறது.
அதாவது, வாழ்க்கை வாழப்படுகிறது. புரிதல் தான் வாழ்தல்,
வாழ்க்கை, யாவும்.  அப்புரிதலுக்கு வடிவம், உத்தி,  இன்னும்
சேர்ப்பதற்கு லவங்கம், பட்டை,அண்ணாசிப்பூ, ஏலக்காய் எதுவும்
வேண்டாம்.  அனுபவம் படைப்பாகாது.  அப்படியே படைப்பாக
ஆனாலும் அது மட்டுப்பாடானதே. ஏனெனில், அனுபவம் என்பது
எப்போதும் மட்டுப்பாடானதே! ஒரு அனுபவத்தின் சாராம்சம்
தொகுக்கப்பட்டு படைப்பாக முன்வைக்கப்படும் பட்சத்தில்
அப்படைப்பு தரும் புரிதலும் மட்டுப்பாடுடையதாகவே அமையும்.
        ஒரு அனுபவத்தை படைப்பாக மாற்றுவதைவிட  அதைச்
செரித்து பிரதிபலித்துப்பார்த்து அடைகிற புரிதலானது அந்த
அனுபவத்தைக் கடந்து  சென்றிட உதவிடும். இறுதி அனுபவம்
மட்டுமே முழுமையான புரிதலைத்தரும்.
        அனுபவம் எவ்வாறு படைப்பாகாதோ அவ்வாறே படைப்பு
என்பது புரிதலாகாது. ஏனெனில், படைப்பு என்பது மெய்ம்மைக்கு
எதிர்த்திசையில்,  புனைவிற்குள் புகுவதாகும். இதன் அர்த்தம்
எவ்வொரு இலக்கியப்படைப்பிலும் வாழ்க்கை பற்றியோ அல்லது
வேறு எதைப்பற்றியோ  யாதொரு புரிதலும் இருக்காது என்பதல்ல.
         மாறாக,பொதுவாக நாம் அறிந்த அதே வாழ்க்கை, அதே புரிதல்
எவ்வொரு படைப்பிலும் சுட்டப்படும். எவ்வளவு அதீதமாகப்
புனையப்பட்டாலும் ஒவ்வொரு நாவலும், கவிதையும், சிறுகதையும்
அதே மானிட உணர்ச்சிகளை - விருப்பு, வெறுப்பு, பகைமை ,
பொறாமை, சோகம், கோபம், தாபம், வேட்கை, துயரம், காதல்,
பாசம், இரக்கம், குரூரம், வஞ்சகம், . . . ஆகிய உணர்ச்சிகளை,
இயல்புகளைத் தூண்டி நினைவுபடுத்தாமல் எவ்வொரு இலக்கியப்
படைப்பும் படைப்பாகத் தெரியாது! ஆகவேதான், விஞ்ஞானமும்,
தத்துவமும், ஆன்மீகமும் படைப்புகளாகப் போற்றப்படுவதில்லை.
ஆனால், இவைதான் உண்மையில் வாழ்க்கையின் அர்த்தத்தை,
உட்பொருளை தமக்கேயுரிய  முறைகளில் அணுகுபவை.
         எல்லாவகை இனிப்புகளுக்கும் அடிப்படை "சர்க்கரை" என்பது
போல எல்லாவகை இலக்கியப் படைப்புகளுக்கும் மையமாகவும்
அடிப்படையாகவும் இருப்பது அதே அர்த்தமற்ற, மேலோட்டமான, கடந்துசெல்லப்படவேண்டிய, அதே வெறுமனே சவுகரியமாக உயிர்-பிழைத்திருத்தல் எனும் வாழ்க்கை தான்  . ஆகவேதான்
'படைப்பு' எனும் பெயரில் புனைவுக்கும், கற்பனைக்கும், புரியாத
எழுத்துக்கும்,  சொல்லப்படும் விதங்களுக்கும் உள்ளே தஞ்சம்
தேடுகிறோம். புனைவு,கற்பனை,புரியாத்தன்மை, பூடகம் ஆகிய
வற்றை அகற்றிடும் போது அங்கிருப்பது அதே அர்த்தமற்ற மேலோட்டமான
'வாழ்க்கை' தான். புனைவும் கற்பனையும் படைப்பாகாது. அசலான
படைப்பு என்பது கல்லிலோ,காகிதத்திலோ செதுக்கப்படுவதோ,
எழுதப்படுவதோ அல்ல.  மாறாக ஒவ்வொரு மனிதனின் உணர்வில்
(பிரக்ஞையில்) நிகழ்த்தப்படவேண்டிய உருமாற்றத்தில்
அடங்கியுள்ளது,
          படைப்பைப் பொறுத்தவரை இரண்டு வகைகள் உள்ளன
எனலாம்.  ஒன்று:  கிடைக்கின்ற அனுபவங்களைக்கோர்த்து
பலவிதங்களில்- வடிவம், உத்தி, மொழித்திறன், சொல்லப்படும்
விதம், கற்பனை, புனைவு ஆகியவற்றைக்கொண்டு மாற்றியமைத்து
உருவாக்கப்படுபவை.இவற்றைப் பொதுவாக இலக்கியப்படைப்புகள்
எனலாம்.
         இரண்டாவது வகை,  ' இறுதி'-அனுபவத்தைக் கொண்டு, அதனால்
வெளிப்படும் படைப்பு. இதை படைப்பு என்று சொல்வதைவிட
"வெளிப்பாடு" என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
வெளிப்பாட்டிற்கு கற்பனையோ,புனைவோ, யாதொரு உத்தியோ,
மொழித்திறனோ, வேறு கூறுகளோ எதுவும் தேவைப்படாது.
         "இறுதி அனுபவம்" எனும் போது, அது  'பெரிய'   அல்லது  'அற்புத'
அனுபவம் என்று அர்த்தமாகாது.  மாறாக அனைத்து அனுபவங்களையும்
அலசி அகழ்ந்தாய்ந்து அவ்வழியே (அனைத்து) அனுபவங்களின்
மட்டுப்பாட்டைஉணர்ந்திடும் மனித உணர்வு உள்ளாகும்
உருமாற்றத்தின் விளைவே  இறுதி அனுபவம் என்பது. அனுபவங்களைச்
சிலாகித்து அவற்றில் சிறைப்படாத;  மேலும் மேலும் புதிது புதிதாக
அனுபவங்களைத் தேடாத மனமே, உணர்வே,  வெடித்து வேறொரு
உயர்-உணர்வாக எழுகிற இறுதி-அனுபவத்திற்குத் தயாராக உள்ள
மனம் அல்லது உணர்வாகும் - அதுதான் படைப்புப் பூர்வ மனமாகும்.
          பாரசீகக் கவி பரீத்தின் அட்டார் அவர்களின் "பறவைகளின் மாநாடு"
எனும்  வெளிப்பாட்டில், மூன்று வண்ணத்துப்பூச்சிகள் எரிகிற மெழுகு
வர்த்தி ஒன்றின் உண்மையை அறிந்து கொள்ளச் சென்றன. முதலாவது
வண்ணத்துப்பூச்சி மெழுகுவர்த்தியைச் சுற்றிப் பறந்து வட்டமடித்து
திரும்ப வந்து,  "அது ஒளி"  என்றது!  இரண்டாவது வண்ணத்துப்பூச்சி
மெழுகுவர்த்தியின் அருகே நெருங்கிச் சென்று தனது சிறகைச் சுட்டுக்
கொண்டு திரும்ப வந்து,  " அது எரிக்கின்றது !"  என்று சொல்லிற்று!
மூன்றாவது வண்ணத்துப்பூச்சி எரியும் மெழுகுவர்த்தியை வட்டமடித்து
நேரே அதன் பிழம்பிற்குள்ளே சென்றுவிட்டது! அது அறிந்து கொள்ள
விரும்பிய உண்மையை அறிந்து கொண்டது. ஆனால், அதனால்
திரும்ப வந்து தான் அறிந்துகொண்டதை பிற வண்ணத்துப்பூச்சிகளிடம்
சொல்ல முடியவில்லை. ஏனெனில் அது திரும்பி வரவேயில்லை !
          இப்போது நாம் கதையிலிருந்து கருத்துக்கு வருவோம். முதல் வண்ணத்
துப்பூச்சி மெழுகுவர்த்தியின் தன்மை குறித்த தனது கண்டுபிடிப்பான
"அது ஒளி" என்பதைப்பிடித்துக் கொண்டு, அதை விளக்கும் வகையில்
விரித்து நீட்டி ஒரு கவிதையாகப் படைக்கலாம்; அல்லது பல கவிதைத்
தொகுப்புகளைக்கூட வெளியிடலாம் ! இரண்டாவது வண்ணத்துப்பூச்சி
மெழுகுவர்த்தியை நெருங்கிச்சென்று  தனது சிறகுகளைச் சுட்டுக்கொண்ட
அனுபவத்தை  வடிவம், உத்தி,  கற்பனை, புனைவு, போன்ற பலவித
சரக்குகளைக்கொண்டு ஒரு பெரும் நாவலாக எழுதிவிடக்கூடும்!
மூன்றாவது வண்ணத்துப்பூச்சியைப் பொறுத்தவரையில் அது தானறிய
விரும்பிய உண்மையை அறிந்து  கொண்டுவிட்டது.  ஆனால்,
தான் பெற்ற அந்த இறுதி-அனுபவத்தைப் பற்றிச் சொல்வதற்கு அதனால்
திரும்ப வரமுடியவில்லை.
          ஆனால், மனிதஜீவிகளாகிய நம்மில் சிலர்  இறுதி-உண்மையை
தரிசிக்கிற வழிமுறையில் உள்ளாகும்  இறுதி-அனுபவத்தின் பிடியில்
தமது உணர்வு நிலையில் பெரும் மாற்றத்திற்கு உட்படுவதன் வழியே
அவர்கள் தமது பழைய மட்டுப்பாடான சுயத்திற்குத்தான் இறந்து
போகிறார்களே தவிர  அவர்கள்  புதியதொரு உணர்வாக, புதுச்சுயமாக
மீண்டு வந்துவிடுவதால் அவர்கள் மற்றவர்களிடம் தங்களுடைய
அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளமுடியாவிட்டாலும் விடுதலைப்படுத்தும்
அந்த அனுபூதி அனுபவத்தின் அவசியம் பற்றி நம்மிடம் எடுத்துச்சொல்ல
முடியும்!
         அத்தகைய வெளிப்பாடுகள் தமக்கேயுரிய வடிவம்,உருவமைதி,உத்தி,
பாணி, தனித்தன்மை ஆகியவற்றைக் கொண்டிருக்கும். அவ்வெளிப்பாடுகள்
எப்படிப்பட்ட பாத்திரத்தில் பரிமாறப்படுகிறது என்பது முற்றிலும்
முக்கியத்துவமற்றது. அவை சொற்களிலும், சொல்லப்படுகிற விதங்களிலும்
அடைபடாதவை. வெளிப்பாடுகள் என்பவை யாதொரு விசேட
பாத்திரத்தையோ, உத்தி, நடை உடை பாவனைகளையோ  உருவாக்கிக்
கொண்ட,  அல்லது தேர்ந்துகொண்ட பிறகு வெளிப்படுபவையல்ல.
வெளிப்பாட்டின் ஒரே பிரதான குறிக்கோள் அலங்காரமோ, அழகியலோ
வேறு எதுவோ அல்ல -  "குணப்படுத்துதல்" தான் அதன் ஒரே நோக்கம்.
         ஆனால்,    'படைப்பாளிகள்'  எனும் விசேடப்பிறவிகளாக, அல்லது ஒரு
தனி இனமாகத் தங்களை அறிவித்துக்கொள்ளும் சிலர்  அந்த அனுபூதி
யாளர்களின் குணப்படுத்துகிற, விடுதலைப்படுத்துகிற பேச்சு அல்லது
எழுத்தை,  "ஆன்மீகம்"  என முத்திரை குத்தி ஒதுக்கி ஓரம் கட்டி விடுவர்.
அல்லது, ஆன்மீகம் என்பது தங்களைப்போன்ற அதி மேதாவிகளுக்கு
மட்டுமே புரியக்கூடிய 'பெரிய்ய' விஷயம் என்று சொல்லி அதிலும் இறங்கி
குட்டையாகக் குழப்பும் வேலையைச்செய்வர்.
     ஏனெனில்,  பகவான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொல்லியவாறு,
மாமரத்தின் அடியில் நின்றுகொண்டு, மாம்பழத்தைப் பறித்துச் சாப்பிடாமல்
அம்மரத்தின் இலைகளையும், கிளைகளையும், பூக்களையும், பிஞ்சுகளையும்
எண்ணிக்கொண்டிருக்கும் அதிமேதாவிகள்தான் 'படைப்பாளிகள்'
என்போர்.
        கலை இலக்கியத்தின் சாரம் என்ன என்று கேட்டால் நம் 'படைப்பாளிகள்'
ஒவ்வொருவரும் வெவ்வேறு விஷயத்தையே சாரம் என்பர். படைப்பாளிகளில்
பலருக்கு இக்கேள்வியைக்கேட்பதற்குக்கூட நேரமிருக்காது. அந்த அளவிற்கு
அவர்கள் படைப்புத்தொழிலில் ஈடுபட்டிருப்பர்!  சிலரைப்பொறுத்தவரை
சாதாரண மனிதனாக இருப்பதிலிருந்து மேலுயர்ந்து ஒரு படைப்பாளியாக
ஆவது தான் இலக்கியத்தின் இலக்கும் சாரமும் என்பர். சிலர்,  மனிதமனத்தின்
இருளைக்கடந்த கனிவு நன்மை, அழகு, மற்றும் ஆனந்தம் ஆகியவற்றை
வெளிப்படுத்துவது என்பர்.
        ஆனால், உண்மையில் எது கலையின், இலக்கியத்தின், விஞ்ஞானத்தின்,
தத்துவத்தின், ஆன்மீகத்தின், இன்னும் கல்வியின் இலக்காக, சாரமாக
இருக்க வேண்டும் என்றால்; எது மனிதனின் சாரமோ,எது பிரபஞ்சப்படைப்பின்
சாரமோ, எது இறுதி மெய்ம்மையோ, எதை நோக்கி ஒட்டு மொத்த பரிணாமமும்
செல்கின்றதோ, சுட்டுகின்றதோ அந்த ஒருமைதான் இலக்கியத்தின் சாரமாக
இருக்க முடியும், இருக்க வேண்டும்.
        ஆம், மனிதன், ஒவ்வொரு மனிதனும் மனிதனாக, முழு மனிதனாக ஆவதுதான்
அந்த ஒப்பற்ற சாரமும் இலக்கும். மனிதன் அடைந்தாக வேண்டிய உணர்வின்
பரிணாம உச்சமே தெய்வீகம்; அந்த உச்சத்தில் மட்டுமே கடவுள் தோன்றுகிறார்.
வேறு வகைகளில், வேறு வழிகளில், வேறு இடங்களில் கடவுள் எனும் மெய்ம்மை
இல்லை.
         நம் 'படைப்பாளிகளை'ப் பொறுத்தவரை அவர்கள் மேற்குறிப்பிட்ட சாரத்திற்கு,
இலக்கிற்கு, மெய்ம்மைக்கு, வெகு தொலைவில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தத்தளித்துக்கொண்டிருப்பவர்கள் பாக்கியவான்கள்; ஏனெனில், அவர்களில்
சிலராவது சரியான வழியைக் கண்டுபிடித்திடக்கூடும். மாறாக தமது சொந்த
கலையிலக்கியக் கோட்பாடுகளில் படிந்து விட்டவர்கள், ஏற்கனவே தமது  
பயணத்தைப் பாதியில் முடித்துக்கொண்டவர்களாவர்.
        நமது நவீனயுகப் படைப்பாளிகள், தமது புனைவுத்திறமையைக் காட்டி
வாசகர்களை பிரமிப்பூட்டுவதையும் யாவற்றுக்கும் மேலாக கனிவாய்க் கசிந்து
உருகிக் கண்ணீர் வடிக்கச் செய்வதையும் செய்து வருகின்றனர். இந்த நெகிழ்ச்சியின்
உளவியலைப்பற்றி சற்று விரிவாக நாம் இங்கு அலசியாக வேண்டும்.
         நெகிழ்வது, கரைந்து போவது, கண்ணீர் விடுவது எல்லாமும் நம் எல்லோரிடமும்
நிகழவே செய்கின்றது. ஆனால், அவை மிக மிக தற்காலிகமானவை. ஒரு கணத்தில்
கோடியில் ஒரு பாகம் மட்டுமே நிலைப்புத்தன்மை கொண்டவை. அதற்கு மேல்
நெகிழ்வுணர்வும் நிலைப்பதில்லை, நாமும் அதிலேயே தங்குவதில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக இவ்விஷயங்களுக்கு நாம் மிக எளிதாகப் பழகிப்
போய்விடுகிறோம்  என்பதுதான்  மிகக்குரூரமான  உண்மை.  இப்போது  நாம்
நெகிழ்கிறோம், கண்ணீர் விடுகிறோம்; இப்போது(உடனே) வேறு விவகாரங்களுக்கு
திரும்பி விடுகிறோம். நாம் பெரிதும் அன்றாடத்தின் ஜந்துக்கள்!
          பழம் பேரிலக்கியங்களும், நவீன இலக்கியங்களும் மட்டுமல்ல; சாதாரண
தொலைக்காட்சித்தொடர்களும், மூன்றாம்- தரத் திரைப்படங்களும் கண்ணீர்
விடுமளவிற்கு நம் நெஞ்சைத்தொடுவதாய் உள்ளன. ஒரு புறம் நெகிழ்ச்சி,    
இன்னொரு  புறம் வீரம், காதல்,உயர் இலட்சியங்கள், சமூக முன்னேற்றம், தீவிர
செயலாற்றுதல் . . .  ஆகியவையும்  இலக்கியத்தின் கருப்பொருட்களாக
நெடுங்காலமாக இருந்து வந்துள்ளன. இவைகளில்லாமல் யாதொரு கலை
இலக்கியப்படைப்பும் படைப்பாக முடியாது. இவற்றைக்கடந்து கலை இலக்கியம்
செல்ல முடியாது. இதுதான் கலை இலக்கியத்தின் மட்டுப்பாடு. மட்டுப்பாடு.
ஏனெனில், இவை யாவும் "உயிர்-வாழ்தலின்"  தளத்தைச் சேர்ந்தவை. அதாவது,
உயிர்-வாழ்தலின் உண்மையான குறிக்கோளை, இலக்கை, உயிர்-வாழ்தலைக்
கடந்த உண்மையான  வாழ்க்கையை  மறுப்பவை.
         கலை இலக்கியம் அதன் வழக்கமான கருப்பொருட்களுடன் உண்மையான
வாழ்க்கையை, வாழ்வின் அர்த்தத்தை, உண்மையை, இலக்கை,தன்னையறிதலை
கருப்பொருளாகக் கொள்ள முடியாது ! அவ்வாறு கொள்ள முனைவது  கலை
இலக்கியத்தின் முடிவை அறிவிப்பதாக அமைந்துவிடும்.
        இன்னும் நாம் புதியதொரு இலக்கியத்திற்குத் தயாராகவில்லை என்றே
சொல்லலாம். இலக்கியம் என்றவுடன் வழக்கம் போல 'கதை சொல்வது' அல்ல.
கதை என்கிற பெயரில்  கற்பனையான கதைமாந்தர்களை உருவாக்குவது,
அவர்களது குணாம்சங்களை சித்தரிப்பது, கதைச் சூழல்களையும்
சம்பவங்களையும், திருப்பங்களையும் கதையோட்டத்தையும்,முடிவையும்
கதைக்கு கதை வித்தியாசமாக அமைப்பது, இவையெல்லாம் இனி செல்லாது!
கற்பனையான கதை மாந்தர்கள் மட்டுமல்ல, நிஜ உலகில் உள்ள மனிதர்களும்
உண்மையில் மனிதர்கள் அல்ல!  மனிதன் மனிதனாக இல்லை என்பதன்
விளைவாகத்தானே  பல வகைப்பட்ட வரலாறும்  கதைகளும் தோன்றுகின்றன!
         முதலில் "தான் உண்மையில் யார் ?" என்பதை அறியாத இலக்கியப்படைப்பாளி
எவ்வளவு மகத்தான கதா பாத்திரங்களை உருவாக்கினாலும் அவற்றின் வழியாக
ஒருபோதும் நாம் 'மனிதன்' என்பவன் எத்தகைய மெய்ம்மை என்பதையோ,
அசலான மனித'வாழ்க்கை' பற்றியோ புரிந்துகொள்ள முடியாது. ஆம்,
தன்னையறிந்த ஒருவன் 'கதை எழுதப்போகிறேன் பேர்வழி' என்று கிளம்ப
மாட்டான். ஏனென்றால், கதை எழுதுவதைவிட தான் தொடங்கிய, தன்னையே
மறுபடைப்பு செய்து கொள்ளும் படைப்புபூர்வமான செயலை முழுமையாகச்          
செய்து முடிக்கும் தலையாய பணிஅவனுக்கு உள்ளது. உணர்வுபூர்வமாக
தன்னைத்தானே மறுபடைப்பு செய்து கொள்பவன் தான் உண்மையான
படைப்பாளி யாவான். நாம் ஒவ்வொருவரும் அத்தகைய படைப்பாளியாக
ஆவது அவசியம்.
          கதைச் சம்பவங்களைப் பற்றிச் சொல்லவேண்டுமென்றால், எவ்வொரு
சிறு சம்பவமும் மனிதர்களை, குறைந்தபட்சம் ஒரு மனிதனையாவது
தொடர்பு படுத்தாமல்,மையப்படுத்தாமல் சம்பவிப்பதில்லை. கதையின்
ஓட்டத்தில், "அப்புறம் என்ன நிகழப்போகிறது?"  "அடுத்தது என்ன?"  என்பன
போன்ற எதிர்பார்ப்புக்களினால் ஒரு பயனும் விளையாது.  "அடடா அந்த
கதை நாயகிக்கு அப்படி ஒரு முடிவு நேர்ந்திருக்கக்கூடாது !" என நாம்
கண்ணீர் வடிக்கலாம். கதையாயினும், நிஜமாயினும் நமக்கு 'மரணம்'தான்
பெரிய, உச்சமான, மிக மோசமான சம்பவமாக இருக்கமுடியும் ! நம்மைப்
பொறுத்தவரை  மரணத்தை எப்படியேனும் (அந்தவொரு குறிப்பிட்ட
இக்கட்டான கணத்தில்) தவிர்ப்பதுதான் வாழ்க்கை! வில்லன் கையில்
கதை-நாயகி சிக்கக்கூடாது!  இவ்வளவுதான்  இலக்கியம்! ஆனால்,மரணத்தை
தவிர்ப்பதோ, தள்ளிப்போடுவதோ, அல்லது மரணத்தை எண்ணி எண்ணி    
செத்து செத்து பிழைப்பதோ அல்ல வாழ்க்கை! கதையிலும்,நிஜத்திலும்
சம்பவங்களும்,நிகழ்வுகளும்தான் முக்கியத்துவம் பெறுகின்றனவே தவிர
வழ்க்கை என்னவோ எப்போதும் விடுபட்டுப்போகிறது! காரணம்
வாழ்க்கையை நாம் தொடக்கத்திலேயே தவற விட்டுவிடுகிறோம்.
         ஆம், ஒவ்வொருவருக்கும் "தாம் இருக்கிறோம்!" என்கிற தரிசனம் தான்
சதா நிகழ்ந்துகொண்டேயிருக்கும் மூல-சம்பவம் ! அம் மூல-சம்பவத்திற்கு
முழுமையாகப் பதிலலிப்பதே வாழ்தல், வாழ்க்கை, யாவும்! முக்கியமாக
மனிதன் தன்னையும்  தனது இருப்பையும் புரிந்துகொள்வதற்கு கதைகள்
தேவையா ? மனிதனும், ஒட்டுமொத்த பிரபஞ்ச இருப்பில் அவனது இருப்பும்
ஒரு மாபெரும் மந்திரக்கதை தானல்லவா!  நம்மை உள்ளடக்கிய இம்-
மாபெரும் பிரபஞ்சம் உண்மையில் ஒரு மகத்தான படைப்பல்லவா!
         நாம் நம் பக்கத்து வீட்டு கந்தசாமியை புரிந்துகொள்ள ரங்கசாமியின் மகன்
ர.கந்தசாமியையும், தங்கராசு மகன் த.கந்தசாமியையும், இன்னும்
கு.கந்தசாமி , ச.கந்தசாமி போல எத்தனை கந்தசாமிகளைத் தேடிப்பிடித்து
ஒப்பிட்டுப்பார்த்துப் புரிந்துகொள்ளவேண்டும் ? இவ்வழியே நம் கந்தசாமியை
புரிந்துகொள்ளத்தான் முடியுமா ? ஆனால், இதேபோன்ற ஒரு கதையைத்தான்
பிரபஞ்சவியலில் சில விஞ்ஞானிகள் கட்டிவிட்டுள்ளார்கள்! அதுதான்
"பல-பிரபஞ்சங்கள்" அல்லது  "இணை-பிரபஞ்சங்கள்" எனும் கோட்பாடு.
உள்ள ஒரு பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள , இல்லாத பொல்லாத,
பரிசோதிக்கவே வழியில்லாத,  கற்பனைப் பிரபஞ்சங்களைப் பற்றி சில
விஞ்ஞானிகள் பிதற்றிக்கொண்டுள்ளனர்.
          உண்மையில் புராணங்கள், தொல்கதைகள், இதிகாசங்கள், காப்பியங்கள்
யாவும் மனித இனத்தின் குழந்தைப்பருவத்திற்குரியவை எனலாம்.
அவைகளின் காலங்கள் முடிந்து விட்டன. ஒரு வேளை அவை இன்னும் நம்
குழந்தைகளுக்குத் தேவைப்படலாம் -  சிந்தனைக்கு உதவும் வகையிலான
கற்பனாசக்தியை தூண்டுவதற்காக,  உத்வேகமளிப்பதற்காக! இன்றைய
நவீன இலக்கிய வடிவங்களான சிறுகதை, நாவல், புனைகதை போன்றவை
கதை சொல்லலின் ஒரு வகை பரிணாம முயற்சிகள் எனலாம். கிட்டத்தட்ட
அவைகளின் காலமும் முடிவிற்கு வந்துகொண்டிருக்கிறது எனலாம்.
இனி கதை சொல்லல் என்பது அடுத்த கட்ட, முதிர்ந்த நிலைக்கு தாவிச்
செல்லுதல் வேண்டும். படைப்பாளிகள் என்போர் புதுப்புது கற்பனை
உலகங்களையும்,கதா பாத்திரங்களையும் படைப்பதை (கதை விடுவதை)
விடுத்து, உள்ள படைப்பான பிரபஞ்சத்தையும், அதில் குழம்பித்தவிக்கும்
மனிதனையும், அவனது அசலான வாழ்க்கையையும் புரிந்து கொள்ளும்
வழிமுறையில் வெளிப்படும் கதையைச் சொல்ல வேண்டும்.
         மனிதக்கற்பனைகள் அனைத்தையும், அனைத்துப் புனைவுகளையும்
திரட்டிச்சேர்த்தாலும் அனைத்தையும் விஞ்சிய பிரபஞ்சப் படைப்பின் கதையை,
அதில் நம் அசலான கதையை, மலினமான நம் கற்பனைகளையும்,
புனைவுகளையும் சேர்க்காமல் பிரபஞ்சத்துடன் ஒன்றிப்பெறும் தரிசனத்தையும்
புரிதலையும் கொண்டு கட்டமைத்தல் வேண்டும். அக்கட்டமைத்தலில்
விஞ்ஞான,தத்துவ, ஆன்மீக அனுபூதியணுகுமுறைகளும்
ஒருங்கிணைந்ததாக அமைதல் வேண்டும். ஒப்புவமையற்ற, உன்னதமான
அந்த ஒரே கதையைத்தான் ஒவ்வொரு காலத்திலும் செம்மைப்படுத்தி
மேன்மேலும்புரிதலைச் சேர்த்து சொல்லிச் செல்லவேண்டும்.
     உள்ளது பிரபஞ்சம் எனும் ஒரே படைப்புத்தான், அந்த ஒரே நெடுங்கதை தான்!
அக்கதையின்  பாத்திரங்களும் பிரதிநிதிகளும் தான் நாம். பிரபஞ்சத்தின்
தொடக்கம் தான் நம்முடைய தொடக்கமும். பிரபஞ்சம் என்பது சொல்லி
முடிக்கப்பட்டுவிட்ட கதையல்ல !  தொடர்ந்து வளர்ந்து செல்லும்
"பரிணாமக் கதை"!  இக்கதையில், என்னுடைய தனிக்கதை என்றும்
இன்னொருவனது  தனிக்கதை அல்லது சொந்தக்கதை என்றும் பிரிவுகள்
ஏதும் கிடையாது. எல்லோருடைய இருப்பின் இலக்கும், அடைவிடமும் ஒன்று
தான். எல்லா நதிகளும் ஒரே சமுத்திரத்தையே சென்றடைந்தாக வேண்டும்.
    ' படைப்பாளி' என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவனும்  பிரபஞ்சக்
கதையிலிருந்து சில கூறுகளைக் களவாடித்தான் கதையை எழுதுகிறான்.
உண்மையில் ஒவ்வொரு படைப்பாளனும் தான் உருவாக்கிடும் கதாபாத்திரத்தின்
கதையை எழுதுவதாகவே எண்ணிக்கொள்கிறான். ஆனால், அவன் தன்
கதையை, விதியைத்தான் தாறுமாறாக  எழுதிச்செல்கிறான்!  கதை
கேட்பவர்களாகிய நாமோ ஒவ்வொரு கதையின்,நாவலின் முடிவும் எப்படிப்
பட்டதாக இருக்கும் என பெரும் ஆவலுடனும் பதற்றத்துடனும் கதையோட்டத்துடன்
செல்கிறோம். ஆனால், தம்தம் கதையின் முடிவு எப்படிப்பட்டதாக இருக்க
வேண்டும் என்பது குறித்து நாம் சிறிதும் அக்கறைப்படுவதில்லை.
இலக்கியப்படைப்பாளிகளும் வாசகர்களும் தாங்கள் சாதாரண மனிதர்களைப்
போலல்லாமல் பெரிதாக இலக்கியத்தில் ஈடுபட்டுள்ளதாக கர்வம் கொள்கிறார்கள்.
ஆனால் அவர்களது இலக்கிய ஈடுபாடுகள் அவர்களை எங்கும் கொண்டு
சேர்ப்பதில்லை.
     ஒவ்வொரு மனிதனும் இப்பிரபஞ்சம் எனும் நெடுங்கதையில் தனது இடம், பங்கு,
பணி, பாத்திரம் என்னவென்று கண்டுபிடித்து நிறைவு செய்வதன் வழியேதான்
ஒவ்வொரு மனிதனின் மற்றும் பிரபஞ்சத்தின் நிறைவும், முழுமையும் எய்தப்படுகிறது.
பிரபஞ்சப்படைப்பின் கடைசி அத்தியாயமாக வெளிப்பட்டுள்ள மனிதன் அதை
முழுமைப்படுத்தி முடித்து வைத்திட வேண்டும்!
    ஆனால், 'படைப்பாளிகள்' என்போர் தங்களது படைப்புகளைக்கொண்டு
வாசகர்களின் சிந்தையைச் சிதறடித்து தவறான திசைகளில் செலுத்தி, தமது
கதைக்களன்களில் சிறைப்படுத்திவிடுகின்றனர். 'படைப்பாளிகளாக' அவதாரம்
எடுக்க விரும்பி தாங்கள் செய்யவேண்டியதை விட்டுவிட்டு பிரமனைப்போல்
படைப்புத்தொழிலில் இறங்குவதன் மூலம் 'படைப்பாளிகள்'  தற்கொலைசெய்து
கொள்பவர்களாகிறார்கள்!  தங்கள் படைப்புகளின் வழியே அவர்கள் வாசகர்களைக்
கொலை செய்பவர்களாக ஆகிறார்கள்!
     ஆம், மெய்ம்மையிலிருந்து தப்பியோடி கற்பனைகளிலும், புனைவுகளிலும்
புகுவது தற்கொலையல்லாமல் வேறென்ன? இத்தகைய தற்கொலைக்குத்
தூண்டுவது என்பது கொலையல்லாமல் வேறென்ன ?
   (9.3.2016)


No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...