Thursday, 17 March 2016

வியப்பு-->விசாரம்-->வியப்பு


                           !?!   

     ஞானி என்பவன் திடீரென ஒரு நாள்
     ஞானியாகிவிடுவதில்லை - அவன்
     தொடக்கத்திலிருந்தே ஞானியாகவே
     தொடங்குகிறான் !
     ஞானியின் அடிப்படை அம்சங்கள் :
     தூய கவனம், தூய வியப்பு, தூய ஐயம்
     இவை யாவும் ஒவ்வொரு குழந்தையிடமும்
     உள்ளன - பள்ளிக்குச் செல்லும் வரை !
     இவற்றைக் காப்பாற்றிக்கொள்பவன்
     முழு-ஞானியாக மலர்கிறான் !
     பிறர்:?

ஒட்டுமொத்த மனித வாழ்க்கையை வியப்பிலிருந்து வியப்பிற்குச்
சென்றடையும் பயணம் என்று சொல்லலாம். அதில் தொடக்க நிலை
வியப்பிற்கும் முடிவு நிலை வியப்பிற்கும் மாபெரும் வித்தியாசம்
உள்ளது. இந்த வித்தியாசம் தொடக்க-நிலை வியப்பைத் தொடர்ந்து
எழுகின்ற விசாரத்தின் விளைவாகும்.

மனித வாழ்க்கையை விளக்கும் மிகச் சுருக்கமான சூத்திரம்,
சமன்பாடு,குறியீடு, வாய்ப்பாடு எல்லாம் இதுதான் : !?!
முதலில், வாழ்க்கை (நாம் குழந்தையாகத் தொடங்கும் போது) வியப்பு
அல்லது ஆச்சரியத்துடன் ஆரம்பிக்கிறது! அடுத்து, " இது என்ன?"
" அது என்ன?" போன்ற கேள்விகளுடன் எழும் விசாரத்தினால் விளையும்
புரிதல் மீண்டும் நம்மை ஆச்சரியத்தில்,வியப்பில் ஆழ்த்துகிறது!
வாழ்க்கை  முழுமையடைகிறது !

தொடக்க-நிலை வியப்பு என்பதை  "தூய-வியப்பு" எனக் குறிப்பிடலாம்.
"தூய", ஏனெனில், ஒரு குழந்தையின் வியப்பில் எதிர்பார்ப்புகள் இல்லை,
முன்-முடிவுகள்இல்லை, அரை-வேக்காட்டுக் கோட்பாடுகளின் குறுக்கீடுகள்
இல்லை,  அறிவுச்சேகரத்தின்   அலைக்கழிப்பு  இல்லை,   யாதொரு
உள்- நோக்கமும் இல்லை , யாதொரு தேர்வும் இல்லை !

அடுத்து மனிதன் குழந்தையாகவே இருந்துவிடுவதில்லை ! குழந்தை
வளரும் போது அதன் வியப்பும் கூடவே வளர்கிறது. வியப்பு வெறும்
வியப்பாக மட்டுமே நில்லாமல் அது கேள்விகளைத் தூண்டுகிறது.

வியப்பு அல்லது ஆச்சரியம் என்பது ஆர்வத்தின் வெளிப்பாடு ஆகும்.
ஆர்வம் என்பது உள்ளார்ந்து எழும் உணர்வின் (பிரக்ஞையின்) சாரம்
ஆகும். மனித உணர்வு என்பது  " பெரு வெடிப்பு " எனப்படும் பிரபஞ்சப்
படைப்பின் ஆரம்பத்திலிருந்து உள்ளார்ந்து செயல்பட்டுவரும் பரிணாம
உந்துசக்தியானது தன்னை கால-வெளி உலகினுள் உருப்பெறச்செய்திடும்
வெற்றிகரமான முதல் பிரவேசம் ஆகும் !

ஆக, குழந்தையின் வியப்பு வெறும் வியப்பாக நிற்காமல் உலகை
நோக்கி  "இது என்ன?",  "அது என்ன?"  எனும் கேள்விகளைத் தூண்டி
புறவுலகின் பொருட்களை, நிகழ்வுகளை, விஷயங்களை தனித்தனியாக,
ஒவ்வொன்றாக   அறிந்து கொள்ளச்செய்கிறது. அடுத்தக் கட்டமாக, தனித்
தனிப் பொருட்களுக்கும், நிகழ்வுகளுக்கும் இடையேயான தொடர்பு
களையும் ; அத்தொடர்புகளினால் அமையும் உலகின் புதிய வளர்ச்சி
நிலைகளையும் அவற்றின் இயக்கங்களையும் அவை எதை இலக்காகக்
கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ளுமாறு செய்கிறது.

வியப்பு  கேள்விகளைத்தூண்டி ,  கேள்விகள்  அனைத்தையும்
ஒருங்கிணைத்து , ஒட்டுமொத்த உலகையும் புரிந்து கொள்ளும்
நெடிய விசாரமாக விரிகிறது !

ஒரு அவதானிக்கும் உணர்வு என்கிற வகையில் மனிதனானவன்
முதலில் தனக்கு அருகிலுள்ள சுற்றுப்புறத்திலும், அதையடுத்தக்
கட்டத்தில் பரந்த பிரபஞ்சத்திலும் தன்னுடைய இடத்தையும்,
உலகுடனான தொடர்புறவையும், பணி மற்றும் பாத்திரத்தையும்
புரிந்து கொள்ளும்படி  உந்தப்படுகிறான். இத்தொடரின் முடிவில்,
அதாவது  தனது  இடத்தையும்,  தனக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள
தொடர்புறவையும் புரிந்து கொண்ட பிறகு; அதுவரையிலும் அவனது
தேடலும், ஆய்வும், விசாரமும்  பிற குடும்ப, சமூக, அன்றாட
விவகாரங்களால், மதிப்பீடுகளால் தடைப்படாமல் தக்கவைக்கப்படும்
என்றால், இறுதியானதும், அதி முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஒரு
கட்டத்தை மனிதன் எட்டுகிறான். அதாவது, பரந்த பிரபஞ்சத்தையும்
அதிலுள்ளவற்றையும் அறிகிற இந்த  'தான்'   "யார்?" என தன்னைப்
புரிந்து கொள்ளும் கட்டம் தான் அது.

மனிதன் எல்லாவற்றையும் அறிந்தாலும் தன்னை அறியவில்லையெனில்
அவனது புரிதல் முழுமையடையாது !  இது ஏதோ ஒட்டு மொத்த புதிர்
விளையாட்டில் மனிதன் ஒரு இறுதித்துண்டு என்கிற வகையில் ,
'போனால் போகிறது!' அவனையும் சேர்த்துப் புரிந்து கொள்வோம்
என்கிற  கரிசனத்தினால்  அல்ல.  மனிதன்தான்  ஒட்டு மொத்தப்
புதிரின் மையமாவான். பிரபஞ்சம்  மற்றும்  கடவுள்  உள்பட
யாவும்மனிதனையே சார்ந்துள்ளன. மனிதனின் தலையாய ஒரே
பணி  பிரபஞ்சத்தை முழுமைப்படுத்துவதும் கடவுளைக் கரையேற்றி
விடுவதும் தான்.

இங்கு மனிதன் என்று குறிப்பிடப்படுவது இரத்தமும், சதையும், எலும்புகளும்
சேர்ந்த இயற்கை மனிதனை அல்ல! மாறாக, உணர்வாக எழுந்த மனிதனையே
இங்கு குறிப்பிடுகிறோம். உண்மையில், உணர்வு தான் மனிதன்; உணர்வு
இல்லாத வெறும் உயிருள்ள உடல் என்பது ஒரு விலங்கு தான்.  மனித உடல்
என்பது உணர்வைத் தாங்கிடுவதற்கான ஒரு அமைப்பு அல்லது பாத்திரம்
மட்டுமே. இந்த உணர்வு எனும் அம்சத்தினால் தான் மனிதனுக்கான
முக்கியத்துவம் என்பது எழுகிறது. மேலும், மனித உணர்வானது மேன்மேலும்
பரிணமிக்க(வளர)க் கூடியதாக இருப்பதனால் அவ்வுணர்வுப் பரிணாமத்தின்
உச்சமான "முழு-உணர்வு" அல்லது  "பேருணர்வு"  என்பதை எட்டுவதற்கான
உள்ளுறையாற்றலையும் உட்பொதிவையும் கொண்டிருப்பதினாலேயே
மனித உணர்வானது  அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக மதிக்கப்பட
வேண்டியதாயுள்ளது.

ஆனால், மனித உணர்வின் இந்த விசேட  முக்கியத்துவத்தை ஒருசில
தத்துவஞானிகளையும், ஆன்மீக அனுபூதியாளர்களையும் தவிர பிறர்-
குறிப்பாக  விஞ்ஞானிகள் இன்னும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை!
வெகு சமீப காலத்தில், குறிப்பாக 'குவாண்டம்' பௌதீகத்தின் அதிரடியான
சில கண்டுபிடிப்புகளின் முடிவுகள் விஞ்ஞானிகளை 'உணர்வு' பற்றிய
ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு செய்துள்ளதாகத்தெரிகிறது.

ஆனால், வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் விஷயத்தில் தனிமனிதர்கள்
விஞ்ஞானிகளையோ, பிற நிபுணர்களையோ சார்ந்திருக்கத் தேவையில்லை.
மாறாக, நாம் ஒவ்வொருவரும் நேரடியாகப் புரிந்துகொள்ள முடியும். அதற்கான
அனைத்து உள்ளுறையாற்றலையும் நாம் ஒவ்வொருவரும் உட்பொதிவாகப்
பெற்றுள்ளோம்.  நாம்  செய்யவேண்டியதெல்லாம்  நமது  மேற்புறச்
சுயத்திலிருந்து மேலோட்டமாக அல்லாமல், நமது சுயத்தின் உள்ளுறை
யாற்றலின் அடியாழத்திலிருந்து இருப்புக்கு(வாழ்க்கைக்கு) பதிலளிப்பது
மட்டுமே.

வியப்பு அல்லது ஆச்சரிய உணர்வு ஏன், எதற்காக மனிதனிடம் உள்ளது?
ஆச்சரியம் கொள்ளுதல்  என்பது மனித உணர்வின் மிக அடிப்படையான
வெளிப்பாடாகும். ஆச்சரியப்படுதல் என்பது அறிதலுக்கான வழியை
ஏற்படுத்தும் முன்புறக்கதவாகும். அக்கதவின் வழியே ஒன்றை அறிந்து
கொள்வதற்கும், புரிந்து கொள்வதற்குமான உணர்வின் முனைப்பு
பிரவேசிக்கிறது. அம்முனைப்பு கேள்விகளின் வழியே வெளிப்படுகிறது.
ஆச்சரியம் ஏற்படாமல் கேள்வி இல்லை; கேள்விகள் இல்லாமல் அறிதலும்
புரிதலும் இராது! அறிதலும், புரிதலும் தான் உணர்வின் ஒரே தாகம் ஆகும்.

அறிதலையும், புரிதலையும் கொண்டு உணர்வு என்ன செய்யப்போகிறது ?
முழுமையான புரிதல் தான் உணர்வின் இலக்கு .  ஏனெனில், முழுமையான
புரிதல் தான் முழுமையான உணர்வு;  முழுமையான இருப்பும் அதுவே!
மனித உணர்வு எனும் சிற்றுணர்வு, அதை ஏன் 'சிற்றுணர்வு' என்கிறோம்
என்றால், உணர்வின் முதல் உதயம் என்பது முதன் முதலில் மனிதனுடன்
தான் (பரிணாமக் களமான இப்பிரபஞ்சத்தில்) தோன்றுகிறது. அதற்கு முன்
அவ்வளவு தெளிவான உணர்வு எதுவும் தோன்றிடவில்லை ! மனிதனுக்கு
முந்தைய ஜீவிகளிடம் வெளிப்பட்டது புறத்தை நோக்கிய வெறும் புலன்
உணர்வு மட்டுமே. மனிதனிடம் தான் புறம் குறித்ததும், தன்னைக்குறித்தது
மான "சுய உணர்வு" என்பது தொடங்கியது. ஆதி மனிதனிடம் முதன்
முதலாக வெளிப்பட்டது உணர்வின் உதயம் மட்டுமே. பிறகு படிப்படியாகத்
தான் மனிதன் சுய உணர்வுக்கு வந்தான்; இன்னும் சொல்லப்போனால்,
நம்மில் ஏராளமானோர் இன்னும் சுய உணர்வுக்கு வந்த பாடில்லை ! ஆக,
மனிதனிடம் வெளிப்பட்டது உணர்வின் சிறியதொரு தொடக்கம் மட்டுமே
(அதுவே உணர்வின் இறுதிச்சொல்லோ, இறுதி நிலையோ அல்ல)என்பதால்
தான் மனித உணர்வைச்  'சிற்றுணர்வு' என்கிறோம்.

ஆக, இச்சிற்றுணர்வு தன்னைப் பெருக்கிக் கொண்டு முழு-உணர்வாக
மலர்வதற்காகத்தான் அது வியக்கிறது, ஆச்சரியம் கொள்கிறது, கேள்வி
எழுப்புகிறது,கேள்விகளைக்கொண்டு நெடிய விசாரத்தில் ஈடுபடுகிறது;
விசாரத்தின் வழியே அறிதலையும், புரிதலையும் வளர்த்துக்கொள்கிறது'
புரிதலுடன் இணைந்து உணர்வும் வளர்கிறது,  பெருகுகிறது ;   இறுதியில்
முழு-உணர்வாக மலர்கிறது.

உண்மையில் மனிதன் புரிந்து கொள்ள விழைவது புறத்தேயுள்ள
பிரபஞ்சத்தையோ  அல்லது  வேறு எதையோ அல்ல.  உண்மையைச்
சொன்னால், தான் எதைப்புரிந்துகொள்ளவேண்டும் என்கிற தெளிவு
மனிதனிடம் தொடக்கத்தில் இருப்பதில்லை ! நம் பலரது விஷயத்தில் அது
கடைசிவரையிலும் இருப்பதில்லை ! ஒரு வகையில், புரிந்து கொள்ள
வேண்டும் எனும் மனித விழைவை கண்ணுக்கு முன்னே இருக்கும்
உலகம் தன் பக்கம் ஈர்த்துக்கொள்வதாயுள்ளது எனலாம். ஏனெனில்,
மனிதன் தனது அகத்தைப்பற்றிய உணர்வுக்கு வருவதற்கு முன்
புறவுலகின் மேற்புறம் மனிதனின் மேற்புறச்சுயத்தின் கவனத்தை,
உணர்வை தன் பக்கம் ஈர்த்துக் கொள்கிறது.

புற உலகிற்கு ஒரு உட்புறம்(அகம்) இருக்குமானால் மனிதனே அதன்
அகமாக அமைகிறான் (பரிணமித்துள்ளான்). புறவுலகின் மேற்புறத்தை
மனிதனின் மேற்புறச்சுயம்தான் ஆராய்கிறது. புறவுலகின் உட்புறத்தை
ஆழமாக அறியவும்,ஆராயவும் புகும் மனிதன் தனது அகத்தை, தனது
உட்புறத்தை நோக்கித் திரும்பிடுகிறான். ஆனால், மனிதன் தன்னில்
முடிந்து போனவன் (பூரணமெய்தியவன்) அல்ல என்பதால் அவன்
உண்மையில் புரிந்து கொள்ளவேண்டிய நிஜம் என்பது உருப்பெற்ற,
மட்டுப்பாடான 'தன்னை' அல்ல ! மாறாக, இன்னும் உருப்பெறாத,
வெளிப்படாத , இறுதியாக 'தான்' என்னவாக ஆகக்கூடுமோ அந்த
இறுதி நிஜத்தை, நிலையைத்தான் ஒவ்வொரு மனிதனும் அறிந்திடவும்,
புரிந்திடவும் வேண்டும்.

"தன்னை அறிதல்", "சுயத்தை உணர்தல்" என்பது மனிதன் 'தான் என்னவாக
இருக்கிறான்' என்பதைப்பற்றியதல்ல. அறிதல், புரிதல் எனும் செயல்பாடுகள்
தன்னை ஒருவன் நிலையாக வைத்துக்கொண்டு தனக்கு வெளியே உள்ள
உலகையோ, உலகில் உள்ள பொருளையோ, எதையோ அறிவதில்லை.
மாறாக, எந்த மனிதன், "தான் யார்?" என்ற,  தன்னைப்பற்றிய கேள்வியை,
சாதாரணமாக எல்லோராலும் கேட்கத்தோன்றாத , சுலபமாக சாத்தியப்படாத,
அந்த அசாதாரணமான , அரிய கேள்வியைத் தன்னிடமே  கேட்கிறானோ,
தன்னை அறியத்தலைப்படுகிறானோ, அவன் தனது அசலான முகத்தை,
அடையாளத்தை, தனது இறுதியான நிஜத்தை, தனது முழுமையைத்தான்
குறிவைத்துள்ளான் என்றாகும். ஏனெனில், அறிதல், புரிதல் எனும் வழிமுறை
யானது மாற்றமுறச்செய்யும் ஒன்றாகும்.

மனிதன் தன் உள்ளார்ந்த தன்மையில், உணர்வில் சிறிதும் மாறாமல்
எவ்வொரு கலையையும், தொழில் நுட்பத்தையும், திறமையையும் கற்றுக்
கொள்ள முடியும். இந்தக்கற்றல், அறிதல், புரிதல் என்பது அன்றாட, உடனடித்
தேவைகளினால் தூண்டப்படும் ஒன்றாகும். இவ்வழியே மனிதன் தனது
உடனடிப்பயன்களைப் பெற்று வெறுமனே உயிர் பிழைத்திருக்கலாம்,
அவ்வளவு தான்!  இவ்வழியே மனிதன் தன் இருப்பின், வாழ்க்கையின்
அர்த்தத்தையோ, முழுமையையோ, நிறைவு மற்றும் மகிழ்வமைதியையோ
பெற முடியாது. இவை யாவும் தன்னை மாற்றமுறச்செய்திடுகிற இறுதிப்
புரிதலை அடையும் விதமாக ஒருவன் மேற்கொள்ளும் இடையறாத
விசாரத்தின் வழியாக மட்டுமே பெற முடியும்.

எவன் ஒருவன், தனது உடனடித்தேவைகளையும், பிற அன்றாடத்
தேவைகளையும் கடந்து,  இறுதிப் பயனைக்குறிக்கும்உயர்-தேவையைத்
தேடுகிறானோ அவனே முழுமனிதனாக ஆகிறான். ஆக,  அறிதல், புரிதல்
என்பது முழுமையடைதலையே இலக்காகக் கொண்டுள்ளது. இத்தகைய
உன்னத புரிதலை அடைவதற்கான வழியின் முன் வாசலாக விளங்குவது
தான்  "வியப்பு" எனும் உணர்வு. வியப்பு என்பது வெறுமனே வியந்து
நிற்பதற்காக அல்ல !

குழந்தையின் வியப்பு எவ்வளவு கள்ளங்கபடமற்றதோ, அவ்வாறே
உள்ளீடற்றதும் ஆகும். குழந்தையின் வியப்பில் தொடங்கிய அறிதலுக்கான
பயணம் முடிவில் ஞானியின் வியப்பில் முழுமையடைகிறது. ஞானியின்
வியப்பு நுண்ணறிவினால் நிரம்பி வழியும் முழுமையான புரிதலின்,
ஞானத்தின் வெளிப்பாடு ஆகும்.

அறிதலின் பயணம் புரிதலில் முடிவடைந்தாலும் வியப்பு என்பது என்னவோ
ஒரு போதும் குன்றுவதில்லை, முடிவிற்கு வருவதில்லை என்பதுதான் ஆச்சரியம்!
தொடக்க நிலை வியப்பு உள்ளீடற்றது என்பதன் அர்த்தம் முழு நிறைவான
உள்ளீட்டால் நிரப்பப்படுவதற்கான வெளியாக (காலியிடமாக) உள்ளது
என்பதே !

இறுதி நிலை வியப்பு முழுமையின் வெளிப்பாடு ஆகும். அதில் புகார்கள்
இல்லை, எதிர்பார்ப்புகள் இல்லை, யாதொரு முடிவிற்கும் வரவேண்டுமென்ற
தேவை இல்லை, கொள்கை கோட்பாடுகள் இல்லை, அனுபவம் தேடும் வேட்கை
இல்லை, அறிவுச்சேகரத்தின் சுமை இல்லை, யாதொரு உள்-நோக்கமும் இல்லை,
வெளி-நோக்கமும் இல்லை, யாதொரு தேர்வும் இல்லை, தேடலும் இல்லை !

தொடக்கத்தில் இருப்பு, வாழ்க்கை என்பது என்னவென்று தெரியாத புரியாப்
புதிராக இருந்தது ! முடிவில் இன்னதென இனங்கண்டு கொள்ளப்பட்ட, புரிந்து
கொள்ளப்பட்ட புதிராக விளங்குகிறது !

    விடுவிக்கப்பட்டும் புதிர்
    புதிராகவே விளங்குகிறது
    என்பதுதான் ஆச்சரியம் !

17.03.2016/மா.கணேசன்.



















No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...