
மரண- தண்டனைக் கைதிகளே கேளுங்கள்!
உங்களது தண்டனையிலிருந்து விடுபடும்
வழியை உங்களுக்குச் சொல்கிறேன் !
மரண-தண்டனைக் கைதிகளே கேளுங்கள்
உங்களது தண்டனையிலிருந்து விடுபடும்
வழியை உங்களுக்குச் சொல்கிறேன்!
உங்களை "மரண-தண்டனைக் கைதிகள்"
என்றழைப்பது குறித்து வியப்படைய
வேண்டாம்!
நீங்கள் கைதிகளுமல்ல -எந்த கொடும்
குற்றமும் நீங்கள் புரிந்திடவில்லை!
எந்த நீதி மன்றச் சட்டமும் உங்களுக்கு
யாதொரு தண்டனையையும்
வழங்கிடவில்லை என எண்ணாதீர்கள்!
ஆனால் உண்மையில் நீங்களும் கைதிகளே!
கைகளில் விலங்கு பூட்டப்படாத கைதிகள்!
உங்கள் குற்றம் கண்டுபிடிக்கப்படவில்லை
என்றாலும் நீங்கள் குற்றவாளிகளே!
எந்த நீதி மன்றமும் உங்களுக்கு
மரண-தண்டனை விதிக்கவில்லை
என்றாலும் - மரணம் தான்
உங்களுக்கும் முடிவு !
குற்றம் நிரூபிக்கப்பட்ட மரண-தண்டனைக்
கைதிகளுக்கும் குற்றம் இனம் காணப்படாத
உங்களுக்கும் உள்ள ஒரு வித்தியாசம்
அவர்களுக்குத் தெரியும்படி அவர்களுக்கு
'மரண நாள்' குறிக்கப்பட்டுவிடுகிறது!
உங்களுக்குத் தெரியும்படி அது
குறிக்கப்படுவதில்லை -அவ்வளவு தான்!
அவர்களுக்கு மரணம் தண்டனையாக
விதிக்கப்படுகிறது!
உங்களுக்கு மரணம் இயற்கையின் நியதியாக
உங்கள் உடலில் எழுதப்பட்டுள்ளது!
எல்லாம் ஒன்றுதான் - பெரிய விதிக்குள்
சிறிய விதி அடக்கம் தான் !
அவர்களுக்கும் உங்களுக்கும் முடிவு
ஒன்றுதான் என்றாலும் உங்களுக்கு
இல்லாத ஒரு அனுகூலம் அவர்களுக்கு
உள்ளது!
அவர்களது மரண-நாள் அவர்களுக்கு
அறிவிக்கப்படுவதால் தத்துவ ஞானிகளைப்
போல அவர்களால் மரணத்திற்கு தங்களைத்
தயார் படுத்திக்கொள்ள முடியும்!
உங்களுக்கோ மரணம் எப்போது வரும்
என்பது தெரியாததால் உங்களை
நீங்கள் தயார் படுத்திக்கொள்ள முடியாது!
எதிர்பாராத நாளில் எதிர்பாராத வேளையில்
எதிர்பாராத இடத்தில் நீங்கள்
நிதானிப்பதற்குள் மரணம் உங்களை
முடித்து விடும் !
தனது அன்றாட தியானத்தில்
மரணத்தையும் சேர்த்துக்கொள்பவன்
ஞானமுள்ளவன் !
மரண-தண்டனைக் கைதிகளுக்கும்
உங்களுக்கும் அநேக வித்தியாசங்கள்
இருப்பதாக நீங்கள் நினைக்கலாம் !
அவ்வித்தியாசங்கள் யாவும்
மேலோட்டமானவை -அவற்றில்
எவ்வொரு வித்தியாசமும் உங்களது
முடிவு-நிலையை மாற்றுவதில்லை!
மரணம் தான் உங்கள் முடிவும்!
ஆனால் நீங்கள் விழித்துக்கொண்டால்
உங்கள் முடிவை மாற்றிவிட முடியும் !
"உண்மையில் நீங்கள் யார்?" என்பதை
உணர்ந்தால் உங்களுக்கு மரணம்
என்பது இல்லை !
ஒரு மரண-தண்டனைக் கைதியைவிட
நீங்கள் அதிக சுதந்திரமாக உலவுவதாக
எண்ணுகிறீர்கள்!
அவர்கள் தனிச் சிறைகளில் அடைக்கப்
படுகிறார்கள் - ஆனால்
உங்கள் உடலே உங்களுக்குச் சிறை !
உடல் என்பது ஒரு சிறை மாத்திரமல்ல
தானழியும் வேளையில் உங்களையும்
உடன் சேர்த்தழிக்கும் ஒரு வினோதப்பொறி !
ஆம் மரணம் என்பது உடலுக்குத்தான்
உங்களுக்கல்ல!
நீங்கள் வேறு உங்கள் உடல் வேறு எனும்
உண்மையைப் புரிந்துகொள்வதுதான்
மரணத்திலிருந்து விடுபடுவதற்கான முதல்
அடியாகும் !
பாவத்தின் சம்பளம் மரணம் என்று
ஏற்கனவே சொல்லப்பட்டது !
ஆனால் உணர்வுக்குறைவான வாழ்வின்
முடிவும் மரணமே !
ஆம் உணர்வற்ற தன்மையே மூல முதல்
பாவம் - பிற பாவங்கள் யாவும் அதைப்
பின்பற்றி வருபவையே !
நீங்களும் உங்களது உடலும் ஒன்றல்ல
என்றால் - பின் "எது?" நீங்கள் என்று
விசாரம் செய்யுங்கள் - உண்மையில் "எது?"
நீங்கள் என்பதைக் கண்டடையும் போது
மரணத்தை நீங்கள் கடந்துவிட்டிருப்பீர்கள்!
அதன் பிறகு உங்களது உடல் நோயுறும் போதும்
மூப்படையும் போதும் இறப்பைச் சந்திக்கும்
போதும் அவை குறித்து நீங்கள் அஞ்சவோ
கலவரமடையவோ மாட்டீர்கள்!
மரணத்திலிருந்து உங்கள் உடலைக் காப்பாற்ற
முடியாது - ஆனால் உங்களை நீங்கள்
காப்பாற்றிக்கொள்ள முடியும் !
உங்களைப்பற்றிய ஓர் உண்மையை நான்
உங்களுக்குச் சொல்கிறேன் - மிகக்
கவனமாகக் கேளுங்கள் - நீங்கள்
உண்மையில் ஒரு உணர்வே !
நீங்கள் "நான்!" என்று சொல்லும்போது அப்படிச்
சொல்வது 'எது' அல்லது 'யார்' எனக் கூர்ந்து
கேளுங்கள் - ஆம் "நான்" எனச் சொல்வது
உங்கள் உடல் அல்ல - உணர்வாகிய
நீங்கள்தான் !
உங்கள் உடல் என்பது உங்களுடைய
உடல்தானே தவிர அது நீங்கள் அல்ல !
உங்களுடைய வீடு என்பது
உங்களுடையதுதான் - நீங்களும் உங்களுடைய
வீடும் ஒன்றல்ல !
உங்களுடைய உடலும் ஒரு வீடுதான் !
அதில் எந்த வீடும் நிரந்தரமானதல்ல !
சிறகுகள் வளரும் வரைதான் பறவைக்கு
கூடு பாதுகாப்பு !
எந்தப்பறவையும் கூட்டிலேயே தங்கி
வாழ முடியாது !
கூடு சிதைவதற்குள் சிறகுகள் வளர்ந்தாக
வேண்டும் !
ஆகவேதான் தாய்ப் பறவை ஓயாமல் பறந்து
உணவு தேடிக் கொணர்ந்து குஞ்சுகளுக்கு
ஊட்டி வளர்க்கிறது !
ஆகவே உணர்வாகிய நீங்களும் உங்கள்
கூடாகிய உடல் நோயுற்று மூப்படைந்து
சிதைந்து போவதற்குள்
முழு-உணர்வாய் மலர்ந்திடுங்கள் -உங்கள்
உடல் அழிந்தாலும் உணர்வாகிய நீங்கள்
அழிய மாட்டீர்கள் !
ஆகவே நான் ஊட்டும் இந்த ஞான- உணவை
உண்டு உங்கள் உணர்வுச் சிறகுகளை
முழுமையாக வளர்த்துக் கொள்ளுங்கள் !
ஏனென்றால் முழு-உணர்வுக்குக் குறைவான
எந்த நிலையும் மரணமே !
அகந்தை எனும் உணர்வுக் குறைவில்
அரை-உணர்வில் திருப்தியுற்று தேங்கிப்போவதே
நீங்கள் புரியும் கொலைக் குற்றமாகும் !
உங்களை நீங்கள் உணராதிருப்பது
தற்கொலையே !
*****
*இப்பதிவு விசார மார்க்கத்தின் உள்-வட்டப்
பங்கேற்பாளர்களுக்காக விசேடமாக
எழுதப்பட்டது.
மா.கணேசன் / 25.03.2011
******
No comments:
Post a Comment