Tuesday, 22 March 2016

அந்நியர்களே வாருங்கள் !*





அந்நியர்களே வாருங்கள்! உங்களை
உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் !
"அந்நியர்கள்" என உங்களை நான்
அழைப்பது குறித்து அதிர்ச்சியடையாதீர்கள் !
நீங்கள் என்னைச்சேர்ந்தவர்கள் அல்ல
என்கிற  அர்த்தத்தில் உங்களை  நான்
அப்படிக் குறிப்பிடவில்லை !

எனக்கு நீங்கள் அந்நியர்களாய்
இருக்கிறீர்கள் என்பதைவிட உங்களுக்கு
நீங்களே அந்நியர்களாய் இருக்கிறீர்கள்
என்பது தான் பேரதிர்ச்சிக்குரிய விஷயம் !
இது குறித்து  நீங்கள் சிறிதும்
அதிர்ச்சியடையவில்லையெனில்
உங்களது உறக்கத்திற்கு ஒரு
முடிவேயில்லை !

உண்மையில் நானும் நீங்களும்
வேறு வேறு அல்ல - எனினும்
உங்களுடைய உண்மையிலிருந்து நீங்கள்
வெகு தொலைவு விலகி இருப்பதால்
நீங்களும் நானும் ஒன்றாயிருப்பதில்லை !

உங்களுக்கு நீங்கள் அந்நியர்களாய்
இருக்கிறீர்கள் என்பதோடு அல்லாமல்
என்னையும் உங்களைப்போலவே கருதுவது
என்னை மேலும் அந்நியப்படுத்துகிறது !

மேலும் உங்களை 'மாதிரி'யாகக் கொண்டே
உங்கள் குழந்தைகளையும்
நீங்கள்  வளர்க்கிறீர்கள்!
'உங்கள் குழந்தை' எனும் உடமையுணர்வு
கடந்து உங்கள் குழந்தைகளை - அவற்றின்
ஒன்றுமறியாத கண்களை  உற்றுப் பாருங்கள்!
அவர்கள் வேற்றுக்கிரகங்களிலிருந்து
வந்தவர்களைப் போலத் தெரிவர் !
அவர்கள் உங்கள் 'சாயலில்' இருக்கின்றனர்
ஆனால் அவர்கள் உங்களைப்போன்றவர்கள்
அல்ல -ஒவ்வொரு மனிதக் குழந்தையும்
வித்தியாசமானது தனித்தன்மையானது !
ஆனால் அவர்களை உங்களைப்போலவே
வளர்த்து முடமாக்கி விடுகிறீகள் !

உங்களது உறவுகள் அக்கறைகள்
பரிவர்த்தனைகள் யாவும் ஆழமற்றவை !
உங்கள் குழந்தைகள் மீது நீங்கள்
காட்டும் பாசம்  வெறும் தளையே
பிணைச் சங்கிலியே தவிர அது அன்பல்ல !
ஏனெனில் அன்பு என்பது பிணைப்பு அல்ல.
அன்பு சுதந்திரமானது ஏனெனில் அது
தெரிவுகளற்றது !

நன்றாகப்பாருங்கள் - அது எப்படி
உங்கள் குழந்தை என்றவுடன் உங்களிடம்
அன்பு பீறிட்டுக்கொண்டு வருகிறது ?
என்ன வினோதமிது !!
சமூகம் முழுவதும் நேசமிக்க பெற்றோர்கள்
தான் இருக்கிறீர்கள் !
பிறகு ஏன் சமூகமானது குரூரமிக்க
போட்டிக்களமாகத் திகழ்கிறது?
வன்முறை நிரம்பியதாயுள்ளது?
நீங்கள் உங்கள் குழந்தைகளை மட்டும்
நேசிப்பதாலா?
'உங்கள் குழந்தை' எனும் உடமையுணர்வு
இல்லாமல் உங்களிடம் அன்பு தோன்றாது
அல்லவா ?!

உங்களால் ஒரு குழந்தையை  அது
உங்களுடையது  அல்லது  பிறருடையது
என்று பாராமல் பார்க்க முடியும் போது
மட்டுமே உங்களிடம் உண்மையான அன்பு
தோன்றும் - ஏனெனில் அன்பு என்பது
"முழுமையான -பார்வை" யாகும்.
முழுமையான-பார்வை முழுமையான
உணர்விலிருந்து பிறக்கின்றது - அன்பும்
முழு-உணர்வும் ஒன்றே !

அன்பைப் பற்றிப் பேசுவதால் படிப்பதால்
உடனே உங்களிடம் அன்பு பிறந்திடாது !
"உங்களை நேசிப்பது போல் பிறரையும்
நேசியுங்கள்" என இயேசு சொன்னதைக்
கேட்டதும் அதைப் புரிந்து கொண்டு உடனே
எல்லோரையும் நீங்கல் நேசிக்கத்
தொடங்கிடுவது என்பது சற்றும்
சாத்தியமற்றது - இரண்டாயிரம் ஆண்டு
வரலாறே அதற்குச் சாட்சியம் !
மனிதன் இன்னமும் ஒரு சுய-நல
விலங்காகவே விளங்குகிறான்!

ஆம் நீங்கள் ஒரு அரை-உணார்வுள்ள
இயற்கை ஜீவியாகத் தொடரும் வரை
உங்கள் எண்ணம் சொல் செயல் யாவும்
மட்டுப்பாடாகவே விளங்கும் !
உங்களையே நீங்கள் நேசிப்பது என்பது
உணர்வற்றதொரு அனிச்சை செயல் !
உயிர்கள் தங்களைத் தக்கவைத்துக்
கொள்ளஉதவும் உள்ளமைந்த ஒரு
இயற்கையான உந்துவிசை - அது
ஒரு தானியங்கித்தனமான இயல்பூக்கி !
அதற்கு உங்களைத்தவிர வேறு எவரையும்
தெரியாது - உங்கள் இதயத்தில் தொடங்கி
உங்கள் உடலின் எல்லை வரை மட்டுமே
அதன் அக்கறை பரவிடும் !

ஆம் உங்களை நீங்கள் நேசிக்க வேண்டும்
என எண்ணியோ, விரும்பியோ உங்களை
நீங்கள் நேசிப்பதில்லை !
உங்களை அறியாமலேயே நீங்கள்
உங்களை நேசிக்கிறீர்கள் என்பது தான்
உண்மை !

மேலும் எவரும் தமக்குத்தெரிந்தே
வேண்டுமென்றே  சுய- நலமியாக
இருப்பதில்லை - மாறாக
சுய-நலம் என்பது தன்னையறியாத
சுயத்தின் ஒரே நலம் ஆகும் !
சுய-நலம் அல்ல  இங்கு பிரச்சினை-அது
வெறும் விளைவு மட்டுமே - உங்களை
நீங்கள் அறியாதிருப்பதே அனைத்துப்
பிரச்சினைகளின் மையம் !

ஆக உங்களை நீங்கள் நேசிப்பது என்பது
உங்களது எண்ணத்தையோ விருப்பத்தையோ
சார்ந்ததல்ல எனும் பட்சத்தில் - நீங்கள்
எண்ணினாலும் விரும்பினாலும்
உங்களால் பிறரை நேசிக்க முடியாது !

உண்மையான பிரச்சினை நீங்கள்
உங்களை மட்டுமே நேசிக்கிறீர்கள்
என்பதோ அல்லது பிறரை நீங்கள்
நேசிக்கவில்லை என்பதோ அல்ல !
மாறாக உங்களுக்கும் பிறருக்கும்
ஆதாரமாக விளங்குகின்றதும் - உங்கள்
ஒவ்வொருவரின் வழியாக வெளிப்பட்டு
மலர்ந்திடத் துடிக்கின்றதுமான
வாழ்க்கையை
நீங்கள் உணர்வு கொள்கிறீர்களா
நேசிக்கிறீர்களா என்பது மட்டுமே
முக்கியம் !

உங்களை நீங்கள் நேசிப்பதும் பிறரை
நேசிப்பதும் இரண்டுமே மட்டுப்பாடான
விவகாரமே !
உங்களை நீங்கள் நேசிப்பது என்றால்
என்ன?
உண்டு  உறங்கி  இனம்பெருக்கி
சௌகரியமாக உயிர்-பிழைத்திருப்பதைத்
தவிர வேறெதையும் அறியாத ஒரு
அரையுணர்வுள்ள ஜீவியின் மீது
நீங்கள் கொள்ளும் பிரத்யேக அக்கறை
தானே உங்கள் நேசம் !
அந்த மட்டுப்பாடான ஜீவி நீங்கள் தானே!?

ஆக  மட்டுப்பாடான ஒரு வாழ்க்கையை
வாழ்ந்திடும் ஒரு மட்டுப்பாடான ஜீவி
தன்னைப்போன்ற பிற மட்டுப்பாடான
சக-ஜீவிகளை நேசிப்பதில்
என்ன விசேட அர்த்தம்  இருக்கிறது
அல்லது இருக்க முடியும் ??

     *****

*இப்பதிவு விசார மார்க்கத்தின் உள்-வட்டப்
பங்கேற்பாளர்களுக்காக விசேடமாக
எழுதப்பட்டது.
மா.கணேசன் / 20.03.2011
     *****

No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...