Saturday, 12 March 2016

மனிதன் என்பவன் யார் ?


     மனிதன் என்பவன் யார் ?


மனிதனைச் சமூக மிருகம் என்று ஒருவர் வரையறுத்தார். மனிதனின்
சமூகத்தன்மை இங்கு முதலிடம் பெற்றது.  இன்னொருவர் மனிதனைத்
தெய்வப்பிறவி  இறைத்தன்மை கொண்டவன்  என்றார்.    மூன்றாமவர்
மனிதனை அறிவுப்பூர்வமானவன் என்று வரையறுத்தார். அடுத்து
ஒருவர், மனிதனை பொருளாதார ஜீவி என்று வரையறுத்தார்.
இன்னொருவர் பாலியல் பிரானி என்றார்.
   " இவர்கள் சொன்ன எந்த ஒரு வரையறையும் மனிதனுக்குப் பொருந்தாது.
    மனிதன் வரையறையற்றவன். அவன் சுதந்திரமானவன். அவனது
    வரையறை அவன் ஓர் இன்மை என்பது. அவன் பொருளாதாரமோ,
    தெய்வமோ, பாலுணர்ச்சியோ, அறிவோ, உடலோ, அல்ல. அவன்
    எதுவுமில்லை. அவன் சுதந்திரன் ; அவன் ஒரு இன்மை "
என்பதாக சார்த்தார் கூறுகிறார்.
    "இப்படி மனிதனை எதுவுமில்லை என்பதில் தான் மனித சுதந்திரம்
    அடங்கியுள்ளது. மனிதன் ஏதாவதொன்றாக இருக்கும் வரைஅவன்
    அதனால் தீர்மானிக்கப்படுகிறான் "
என்பதாகவும்,
    "அவனது சுதந்திரம் அந்த வரையறையினால் கட்டுப்படுத்தப்படுகிறது
     ஆனால், மனிதன் என்பவன் இதுவரைக் கூறப்பட்ட வரையறைகளில்
     எதுவுமில்லை. அவன் சுதந்திரமானவன் எனும்போதுஅவன் எதுவாகவும்
     இருக்கும் சுதந்திரத்தை ஈட்டுகிறான். "
என்பதாகவும் சார்த்தர் கூறுகிறார்.
     "மனிதன் ஓர் இன்மை. அவன் தான் எதுவாக இருக்க வேண்டுமென்பதை
      அவன் தானே நிர்ணயித்துக்கொள்ளலாம். அது அவனது சொந்தத் தேர்வு.
      அதற்கான சகல பொறுப்புகளும் அவனையே சார்ந்தவை. அவன் எதுவுமே
      இல்லை என்பதால் அவன் யாராக இருக்கவிரும்புகிறானோ, அதுவாக அவன்
      ஆகிக்கொள்ளலாம். அவனேதான்  அவனை  ஆக்கிக்கொள்ள  வேண்டும்.
      சூழல்களோ, தலைவிதியோ அல்ல."
என்கிறார் சார்த்தர். இவ்வளவையும் சொன்ன சார்த்தர்,
    "மனிதன் அவனை ஆக்கிய சக்திகளினால் கைவிடப்பட்ட மிருகம்"
எனவும் குறிப்பிட்டுள்ளார்!  இவற்றுடன்,
   "மனிதன் உளச்சிக்கல்களில் மீட்பின்றி மாட்டிக்கொண்டுள்ள ஒரு மிருகம்"
எனும் ப்ராடிய கூற்றையும் சேர்த்துக்கொள்வோம்.
யானையைத்  தடவிப்பார்த்த குருடர்களைப்போல ஒவ்வொருவரும் மனிதனை
ஒவ்வொன்றாக; சமூக மிருகமாக, தெய்வீகப்பிறவியாக, அறிவுஜீவியாக,
பொருளாதார விலங்காக, பாலியல் பிராணியாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால்
    "மனிதன் என்பவன் இவையெதுவுமல்ல அவன் ஒரு இன்மை"
என்பதாக சார்த்தர் குறிப்பிடுகிறார்.
ஆனால், சார்த்தர் குறிப்பிடுகின்ற 'இன்மை' தெளிவற்றதும் உள்ளீடற்றதுமாக
உள்ளது. 'மனிதன் இதுவோ,அதுவோ, எதுவுமல்ல; அவன் சுதந்திரன்; அவன் ஒரு
'இன்மை' என்பதன் அர்த்தம் என்ன?
சார்த்தர் கூறியதற்கு மாறாக, மனிதன் என்பவன் மேற்சொன்னவற்றில்
குறிப்பாக எதுவொன்றாகவும் மட்டும்  இல்லாமல் அல்லது குறுக்கப்படாமல்
ஒரேசமயத்தில் எல்லாவுமாகவே இருக்கிறான்.
அதாவது, மனிதன் ஒரே நேரத்தில் சமூக ஜீவியாகவும், தன்னில் சொந்த
ஜீவியாகவும், பொருளாதார ஜீவியாகவும், பாலியல் ஜீவியாகவும், உடலாகவும்
மனமாகவும், அறிவாகவும் இருக்கிறான்!  இவை யாவும் மனிதனுடைய பல
பக்கங்களைக்காட்டுகின்றன. அதே நேரத்தில், மனிதன் இவற்றுடன் முடிந்து
போவதில்லை. அவனுக்கு இன்னுமொரு முக்கிய பக்கம், பரிமாணம் உள்ளது!
மனிதன் பூரணமானவனல்ல. தன்னை நிறைவு செய்கிற, பூரணப்படுத்துகிற
அந்தப்பக்கத்தை, பரிமாணத்தை மனிதன்,   ஒவ்வொரு மனிதனும்
கண்டடைந்தாக வேண்டும்.   அதை நேரே உணர்ந்தறிவதில் தான் அவனது
சுதந்திரம், விடுதலை, அர்த்தம், முழுமை, யாவும் அடங்கியுள்ளன. அவன்
எதுவாக ஆக விரும்புகிறான் என்கிற தேர்வில் அல்ல!
மனிதன் "தனது அறிவோ, உடலோ அல்ல; அவன் ஒரு இன்மை" எனும் கூற்று
"மனிதன் என்பவன் அவன் எண்ணங்களோ, மனமோ, உடலோ அல்ல; அவன்
ஒரு ஆன்மா !" என்கிற இந்திய ஆன்மீகக்கருத்தை ஒத்திருப்பதாகத் தெரிகிறது!
அதாவது, சார்த்தரின் 'இன்மை' என்பது 'ஆன்மா' என்பதை ஒத்திருப்பதாக
உள்ளது.  'இன்மை', 'ஆன்மா'  இந்த இரண்டுமே பூடகமான விஷயங்களாகவே
உள்ளன. சார்த்தரின் கூற்றுப்படி 'இன்மை' என்பது ஒன்றுமில்லாத வெறுமை
என்பதாக தொனிக்கிறது. மனிதன் ஒரு இன்மை அதாவது ஒரு காலி
இழுப்பறை போன்றவன், அதில் அவனவன் தான் விரும்பியதைக்கொண்டு
இட்டு நிரப்பிக்கொள்ளலாம் என்றாகிறது!
ஆனால், இவ்வழியில் சுதந்திரம் சாத்தியமில்லை. ஏற்கனவே வாழ்க்கையை
நாம் ஒவ்வொருவரும் நாம் விரும்பியதைச்செய்வதற்கும், அடைவதற்குமான
ஒரு  நல்வாய்ப்பு என்பதாக,  தாந்தோன்றித்தனமாக எடுத்துக்கொண்டுள்ளோம்!
அப்படியே நாம் விரும்பியதைச்செய்தாலும் அடைந்தாலும் அவற்றின்
விளைவுகளைக் கொண்டு நாம் நிறைவடைவதுமில்லை, மகிழ்வமைதி
பெறுவதுமில்லை!
சார்த்தர் சொல்கிறபடி,  ஒருவகையில் 'மனிதன் எதுவாகவும் இல்லை'
என்பது உண்மை தான். அதற்காக 'அவன் யாராக இருக்க விரும்புகிறானோ
அதுவாக அவன் ஆகிக்கொள்ளலாம்' என்பது ஏதோ மந்திரதந்திரம் போல
உள்ளது! அவன்' எதுவாகவும் ஆகிக்கொள்ளலாம்' என்பது எவ்வகையில்
அவன் 'எதுவாகவும் இல்லை' என்பதை விட மேலானதாக அல்லது விடுதலைப்
படுத்துவதாக விளங்கும்? இவ்வகையிலெல்லாம் இந்த இருத்தலியல் வாதிகள்
கூறுகிற அபத்தத்திலிருந்து நாம் தப்பவே இயலாது.
மாறாக, மனிதன் செய்யக்கூடியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். தான்
உண்மையில் யார்? என்பதைக் கண்டடைவது மட்டும் தான். மனிதன் என்பவன்
ஒரு கேள்விக்கான பதிலாகவோ, அல்லது ஒரு புதிருக்கான விளக்கமாகவோ
தோன்றியவனல்ல. அவன் புதிரால் பிறப்பிக்கப்பட்ட புதிராவான். மனிதன்
ஒரு புதிர்!  முள்ளை முள்ளால் எடுப்பது போல புதிரைப்புதிரால் விடுவிக்கும்
புதிர்!
மனிதன் எதுவாகவுமில்லாத  'இன்மை' என சார்த்தர் கூறியுள்ளது உண்மையில்
எதைக்குறிக்கிறது?  அவர் மிகச் சரியாகவே மனிதன் ஒரு சமூக விலங்கோ,
பொருளாதார அலகோ, பாலியல் பிராணியோ, அறிவோ, உடலோ அல்ல என்று
சொல்கிறார். இவ்வாறெல்லாம் மனிதனை வரையறுக்க முடியாது; எல்லா
வரையறைகளையும் கடந்தவன் மனிதன் என்கிற முடிவு வரை அவர்
சொல்லியது சரியே!  அதேவேளையில், எந்த வரையறையும் மனிதனுக்குப்
பொருந்தாது என்பதால் அவசரப்பட்டு , அவன் ஓர் 'இன்மை' என்கிற முடிவிற்கு
சார்த்தர்  வந்துவிட்டதாகத் தெரிகிறது. மனிதன் ஓர் 'இன்மை' என்று சொன்னதன்
மூலம் அவன் ஓர் "புதிர்" என்கிற புரிதலுக்கு வெகு அருகாமையில் வருகிறார்.
ஆனால், உண்மையை அவர் தவறவிட்டு விடுகிறார்.  என்ற போதிலும் சார்த்தர்
மூளியாக்கப்பட்ட மனிதனுக்கு தனது 'இன்மை' என்ற கருத்தின் மூலம் அழகு
சேர்த்துள்ளார் என்று தான் சொல்லவேண்டும்.
'மனிதன் எதுவாகவும் இல்லை அவன் ஒரு இன்மை'   என்பது ஒரு அற்புதமான
கண்டுபிடிப்புத்தான். அவர் எட்டிய இந்தப் புரிதல் தரும் உணர்வில் சற்று
நீடித்து நிலை கொண்டிருந்திருப்பாரெனில் 'இன்மை'யை விட இன்னும்
இனிமையான கண்டுபிடிப்பைச்செய்திருப்பார்!
இந்த இடத்தில்,  இக்கட்டுரையை  வாசிப்பவர்களும்  சற்று   நீடித்து நிலை
கொள்ளுதல்  அவசியம். ஆஹா!,  "மனிதன் எதுவாகவுமில்லாத இன்மை!"
அந்த இன்மையை எதைக்கொண்டு நிரப்பி ஈடு செய்ய இயலும் ? எதைத்
தேர்வு செய்தாலும்,  எல்லாத்தேர்வுகளும்   மனிதனை   வரையறுக்கவே
செய்திடும்! ஆகவே, அவன் தனது விருப்பத்தால்,எண்ணத்தால் எதுவாகவும்
ஆகிட முடியாது. மேலும், அவன் எதுவாகவும் இல்லாத நிலையில்தான்
அவனது சுதந்திரம் அடங்கியுள்ளது. அதில் அவன் எதைத் தேர்ந்தாலும்
எதுவாக மாறினாலும் அவனது சுதந்திரம் பறி போய்விடும். ஏற்கனவே அது
பறிபோய்தான் உள்ளது!
இக்கணம் வரையிலும் நாம் எல்லோரும் நாம் எதுவாகவும் இல்லை எனும்
இன்மையை  தவிர்ப்பதையே ,  அதிலிருந்து  தப்பிப்பதையே  செய்து
வந்துள்ளோம்.  எப்போதும்  ஏதோவொன்றாக  ஆகிடுவதையும், ஏதோ
வொன்றை தேர்ந்திடுவதையும் ,அடையாளப்படுத்திக்கொள்வதையும்
தான் செய்து வந்துள்ளோம்!  உண்மையில் சார்த்தர் கூறும்' தேர்வுச்சுதந்திரம்'
சாபக்கேடானது! மனிதன் ஏற்கனவே சுதந்திரமானவனுமல்ல அல்லது
அடிமையுமல்ல! அவன் எதையேனும் தேர்வு செய்திடுவானெனில்
அவ்வழியேதான் அவன் அடிமையாகிப்போகிறான், வரையறுக்கப்பட்டு
சிறைப்படுகிறான்.
மேலும், மனிதன் ஒரு இன்மையுமல்ல!  அவன் எதுவாகவும் இல்லை என்பது
வரை மட்டுமே அவனது இன்மை நீடிக்கிறது; அதாவது மனிதன் சுதந்திரனாக
ஆவதற்கான வாய்ப்பு திறந்திருக்கிறது. அதேவேளையில் அவன் தனது
'இன்மை'யிலேயே நீடிக்கவும் இயலாது! ஏனெனில், 'இன்மை' என்பது
மனிதனின் இறுதி நிஜமல்ல.  ஆகவே அவன் மிக விரைவாக தனது அசலான
நிலையைக் கண்டடைந்தாக வேண்டும். பிற போலியான, கற்பிதமான,
தேர்ந்துகொண்ட நிலைகள் யாவற்றையும் மறுக்கின்ற வகையில் மட்டுமே
இன்மை உணர்வு அவ்வப்போது தோன்றக்கூடும். அதேவேளையில் இன்மை
உணர்வில் ஒருவர் தரிப்பது என்பது பற்றிக்கொள்ள எதுவுமில்லாமல்
அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதைப்போன்று அர்த்தமற்றதாகப்படும்.
ஆகவேதான் மனிதர்கள் தமது விருப்பத்தின்படி எதையாவது தேர்ந்தெடுப்பதன்
மூலம்  இன்மை-உணர்வை  முழுமையாகச் சந்திப்பதிலிருந்து தப்பிச்சென்று
விடுகின்றனர்.
'மனிதன், தான்   எதுவாக  இருக்க  வேண்டுமென்பதை,  அவன் தானே
நிர்ணயித்துக் கொள்ளலாம்'  என்கிற சார்த்தரின் பரிந்துரை தவறானது.
ஏனெனில், ஒரு நதியானது தான் சென்றடையவேண்டிய அடைவிடத்தை
புதிதாக அது நிர்ணயிக்கவோ, தேர்ந்தெடுக்கவோ தேவையில்லை. நதியின்
அடைவிடம் ஏற்கனவே குறிக்கப்பட்ட, நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. சமுத்திரம்
தான்  நதியின் அடைவிடம்.  நதி செய்யவேண்டியதெல்லாம் இடைவழியில்
எவ்விடத்திலும் தங்கித்தேங்கிடாமல் தனது ஒட்டத்தைப்பற்றிப்பாய்ந்து
செல்வது மட்டுமே. புவி ஈர்ப்பு விசை மட்டுமே நதிக்கு உதவி செய்திடும்.
நதியின் அடைவிடம் அல்லது முடிவிடம்  முன் தீர்மானிக்கப்பட்ட ஒன்று
என்பதைப்போல், அதன் செல்லும் பாதை முன்-குறிக்கப்படவோ,
தீர்மானிக்கப்படவோ இல்லை. இதன் காரணமாக,  தான் செல்லக்
கூடிய பாதைகளையும், தனது அடைவிடத்தையும் நதியானது தனது
விருப்பப்படி  தீர்மானித்துக்கொள்ளவோ,தேர்வு செய்து கொள்ளவோ
முடியாது. புவி ஈர்ப்பு விசையை பின்பற்றி மட்டுமே நதி தன் முடிவிடத்தை
சென்றடைய இயலும். அது போலவே மனிதனும் முன்-குறிக்கப்பட்ட  தனது
இலக்கை, "மெய்ம்மை-நாட்டம்" எனும் விசையைப்பின் பற்றிச் சென்று
மட்டுமே அடைய இயலும்.
"மனிதன் என்பவன் இதுவரைக்கூறப்பட்ட வரையறைகளில் எதுவுமில்லை
அவன் சுதந்திரமானவன் எனும் போது அவன் எதுவாகவும் இருக்கும்
சுதந்திரத்தை ஈட்டுகிறான்." எனும் சார்த்தரின் கூற்று நம்மை வழி தவறச்
செய்திடும் ஒன்று. 'மனிதன் (உண்மையில் ) சுதந்திரமானவன் என்றால்,
அவன் எதையும் சார்ந்திருக்கவில்லை என்றாகிறது. அதில் அவன்
எதுவாகவும் ஆகிடும், அல்லது இருக்கும் சுதந்திரத்தை ஈட்டுகிறான் என்ற
பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் அத்தகைய தேர்வுக்கான  தேவையே
இல்லை!
நதியின் சுதந்திரம், தனது இலக்கை அடையும் பொருட்டு தொடர்ந்து பாய்ந்து
செல்வதற்கானது மட்டுமே தவிர தனது இலக்கைத் தேர்வுசெய்திடுவதற்கோ,
அல்லது இடைவழியில் தேங்கித்தங்கிடுவதற்கோ ஆனதல்ல! மனிதன் தனது
வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்ந்து சென்றாக வேண்டும். இது கிட்டத்தட்ட
அவனுள் திணிக்கப்பட்ட "கட்டாயம்" எனலாம். அதை அவன் தவிர்க்க
முயல்வது என்பது தற்கொலைக்குச் சமமாகும். அர்த்தமுள்ள வாழ்க்கை
என்பது (அதன்) இலக்கைக்  குறிவைத்த  ஒன்றாகும்.   இடைவழியில்
தேங்கிடுவதும், தொடர்ந்து முடிவேயில்லாமல் பயணித்துக்கொண்டிருப்பதும்
அர்த்தமற்றதாகும். எவ்வொரு இயக்கமும் பயணமும் அதன் அடைவிடத்தைக்
கொண்டே அர்த்தம் பெறுகிறது. இலக்கற்ற இயக்கம் என்று எதுவும் இல்லை.
'மாறாத மாற்றம்' என்பதுமில்லை. மாற்றங்கள் அனைத்தையும் தீர்த்து
முடித்திடும்  நிலை ஒன்றுள்ளது!
மனிதன் சுதந்திரமானவன் என்றால் அவன் எதையும் (தன்னையும்) சார்ந்திருக்க
முடியாது; எதையும் தேர்வு செய்திடவும் முடியாது.   சார்ந்திருப்பதற்கும் தேர்வு
செய்வதற்கும் தேவை இருக்கும் வரை அவன் சுதந்திரமானவன் அல்ல!
அவன் அவனாக  இருக்கின்ற போது இன்மையும் இல்லை! எதையும் சார்ந்திராத,
தேர்வுசெய்திடாதவனே சுதந்திரன்.
12.3.2016.










No comments:

Post a Comment

ஆதியில் ஃபெர்மியான்கள் இருந்தன. . . .

          அணு விரிந்து அண்டமாகியது. அண்டத்துள் உயிராகியது. உயிர் உணர்வுற்று அறிவாகியது. அறிவானது அனைத்தையும் அறியும் பேரறிவுக்கு அடிப்படையான...